
இது அரசுகளின் துரோகம்!
`சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்' என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உழவின் அவசியத்தை

உலகுக்குச் சொன்னது தமிழ் மண். ஆனால், இந்தத் தமிழ் மண்ணில், மண்ணையும் காப்பாற்ற முடியாமல்; மக்களையும் காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை. முறை செய்து காப்பாற்ற வேண்டிய மத்திய, மாநில அரசுகளோ விவசாயிகளின் வாழ்க்கை பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
பருவ மழை பொய்த்த துயரம் ஒருபுறம்; கர்நாடகாவிலிருந்து, வர வேண்டிய காவிரி நீர் வராத அவலம் இன்னொருபுறம்... கருகிய பயிர்களைப் பார்த்து கண்ணீர்விட்டுப் பல விவசாயிகள் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டனர். இப்படி விவசாயிகளின் தற்கொலைகள் நடப்பது தமிழகத்தில் அனைவருக்குமே தெரிந்த, கண்ணீரில் நனைத்த கசப்பான உண்மை.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நாற்பது நாள்களுக்கும் மேலாக தங்களின் கண்ணியத்தையே பணயமாக வைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். ஆனால், மோடியோ அப்படி ஒரு போராட்டம் நடந்ததாகக் காட்டிக்கொள்ளவேயில்லை. போராட்டத்தின் இறுதி நாள்களில் டெல்லி சென்று விவசாயிகளைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `விவசாயிகளின் பிரச்னைகள் அனைத்தையும் நிறைவேற்றச் சொல்லி பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன்' என்று வாக்குறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து தங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக விவசாயிகள் விலக்கிக்கொண்டனர்.
ஆனால், இது நடைபெற்ற ஓரிரு நாள்களிலேயே எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான தமிழக அரசு, `தமிழகத்தில் வறட்சியால் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்ளவில்லை' என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ``தமிழகத்தில் 82 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதில், வயது முதிர்வு, நீண்டநாள் உடல்நலக் குறைவு, மாரடைப்பு போன்ற காரணங்களால் 52 பேர் மரணம் அடைந்துள்ளனர்; 30 பேர் குடும்பப் பிரச்னைகள் காரணமாகத் தற்கொலை செய்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கும், வறட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை’’ என்று சாதித்திருப்பதுடன் விவசாயிகளைப் பொய்யர்கள் என்று கொஞ்சமும் கூசாமல் சித்திரித்திருக்கிறது.
வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், இதை ஏற்காத மத்திய அரசு அதில் வெறும் 1,748 கோடி ரூபாய் மட்டும்தான் கொடுத்தது. இதற்கு மத்திய அரசு சொன்ன காரணம், `நீங்கள் சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் வறட்சிப் பாதிப்பு இல்லை' என்று. இப்போது தமிழக அரசும் அதை ஆமோதிப்பதுபோல் மனுத்தாக்கல் செய்திருப்பது துரோகம் இல்லையா?
வேளாண்மையின் முக்கியத்துவத்தைச் சொன்ன வள்ளுவர்,
``அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை'' என்றார்.
விவசாயிகளின் கண்ணீர், தங்கள் அழிவுக்கான அறிகுறி என்பதை இரண்டு அரசுகளும் உணர வேண்டும்.