
எம்.குமரேசன், படம்: மீ.நிவேதன்
சபாஷ் சரியான போட்டி... என பி.எஸ்.வீரப்பாபோல சென்னையே வியந்து பார்த்தது அந்த மோதலை... போட்டியிட்டவர்கள் ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்தியாவின் தங்க மங்கைகளான ஜோஷ்னாவும் - தீபிகாவும்... மோதிக்கொண்டது ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக...
35 ஆண்டு கால ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர் எவரும் பட்டம் வென்றதில்லை என்கிற சூழலில்தான் இரண்டு இந்தியர்களுமே இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டனர். எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த இந்தப் போட்டியைக் காண ஏகப்பட்ட கூட்டம்!

தீபிகாவா... ஜோஷ்னாவா பட்டம் யாருக்கு? என்கிற கிளைமாக்ஸில் இருவரின் முகங்களுமே கடுமையான மோதலுக்கு நாங்கள் தயார் என்பதை உணர்த்தியது. சீனியரான ஜோஷ்னாவைவிட, ஜூனியரான தீபிகாவுக்கே அரங்கத்தில் கைத்தட்டல்கள் அதிகம் கேட்டது. அதற்கு ஏற்றாற்போலவே முதல் செட்டை தீபிகா கைப்பற்ற, ஜோஷ்னா ``அவ்ளோதான்பா'' என்கிற `உச்' கொட்டல்களைக் கேட்க முடிந்தது.
ஆனால், இரண்டாவது செட்டில் எழுந்தார் ஜோஷ்னா. மூன்றாவது செட்டை மீண்டும் தீபிகா வெல்ல, நான்காவது செட்டுக்கு கேம் பிளானையே மாற்றிவிட்டு வந்தார் ஜோஷ்னா. கண்ணாடிப் பெட்டிக்குள் அங்கும் இங்கும் தீபிகாவை ஓட விட்டு, ஒரே இடத்தில் இருந்து ஆடி கெத்துக் காட்டிய ஜோஷ்னா, தீபிகாவை டயர்ட் ஆக்கினார். இதனால், நான்காவது செட் ஜோஷ்னா வசமானது.
கிளைமாக்ஸுக்கு ஆட்டம் தயாரானது. ஜோஷ்னாவின் திடீர் எழுச்சியால் அரண்டு போன தீபிகா கொஞ்சம் பதற்றத்துடனேயே ஆடத் துவங்கினார். அவராகவே பல பாயின்ட்டுகளை வீணடிக்க, தீபிகாவின் டென்ஷன் இன்னும் எகிறியது.
ஒரு கட்டத்தில் கோர்ட்டுக்குள் தடுமாறி விழுந்த தீபிகா மெடிக்கல் ஓய்வு எடுக்கும் நிலைக்கும் ஆளானார். ஆனால், எதிர் முனையில் செம கூலாக ஆடிக்கொண்டிருந்த ஜோஷ்னா, இறுதி செட்டில் அதிக போட்டியே இல்லாமல் ஈஸியாக வென்றார். ஸ்குவாஷ் விளையாட்டின் சமீபத்திய வரலாற்றில் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நீடித்த மிகப்பெரிய போட்டி இதுதான்.
``கடைசியாக நடந்த சில போட்டிகளில் தீபிகாவிடம் நான் தொடர்ந்து தோல்வியடைந்தேன். அதனால், இந்தப் போட்டிக்கென நான் பல புதிய வியூகங்களுடன் வந்தேன். ஆனால், தீபிகா கடுமை யானப் போராளி. என்னுடைய பிளானை செயல்படுத்தவிடாமல் அதிரடி ஆட்டம் ஆடினார். இதனால், நான் டிஃபென்சிவ் ஆக ஆடவேண்டியிருந்தது. முதல் மூன்று செட்டுகளுமே எந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் வெல்ல முடியும் என்கிற சூழல் இருந்ததால் நான்காவது செட்டில் தீபிகா கொஞ்சம் பொறுமையை இழந்தார். இதை நான் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டேன். அதனால், கடைசி இரண்டு செட்டுகளை என்னால் ஈஸியாக வெல்ல முடிந்தது.
தீபிகாவை வீழ்த்தியதை நான் மிகப்பெரிய வெற்றியாக நினைக்கிறேன். தொடர்ந்து நானும் தீபிகாவும் சேர்ந்து விளையாடுவோம். அதேபோல நேருக்கு நேரான மோதல்களும் தொடரும்'' என வெற்றிப் புன்னையுடனேயே பேசினார் ஜோஷ்னா.
கலக்குங்க கேர்ள்ஸ்!