
#MakeNewBondsஉஷா கிருஷ்ணன், படங்கள்: அருண் டைட்டன்
ஒரு பெண்ணுக்கு ஆணைப் பற்றியும் ஆணுக்குப் பெண்ணைப் பற்றியுமான முதல் அபிப்பிராயத்தை அவள் வாழ்வில் சந்திக்கும் முதல் ஆணோ அல்லது பெண்ணோதான் தீர்மானிக்கிறார்கள். மகளுக்கு அப்பாவும், மகனுக்கு அம்மாவும் அப்படித்தானே? அம்மாவின் ஓயாத அணைப்பைவிட அப்பாவின் ஒரு நொடி அணைப்பு மகள்களுக்கு ஆறுதலானது; போதுமானது. அப்பாதான் மகள்களுக்கு பலம். அப்பாவால் எதுவும் முடியும். அப்பாவுடன் இருக்கும்போது எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். என் அப்பாவும் அப்படிப்பட்டவர்தான்.
அப்பாவால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் பெண்களைவிட அதீதமான பாசத்துடன் வளர்க்கப்படும் பெண்கள், சக ஆண்களிடம் எளிதில் ஏமாறுகிறார்கள். அம்மாவைப்போலவே உருவம் உடைய எல்லா அம்மாக்களும் அதே அன்போடும் கரிசனத்தோடும், சிடுசிடுப்போடும் இருக்க, அப்பாவைப் போலவே உருவம் உடைய ஆண்கள் ஏனோ அப்படி இருப்பதில்லை.

அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது, நெஞ்சில் ஏதோ ஊர்வதுபோல் இருக்க, அச்சத்தில் தூக்கம் கலைந்து பார்க்கையில், என் உறவினர் என்னுடைய சட்டையின் இரண்டு பட்டன்களைக் கழற்றிவிட்டு, மூன்றாவது பட்டனில் கை வைத்தபடி அருகில் படுத்திருந்தார். நான் உணர்ந்ததை அறிந்துகொண்டவர், தூக்கத்தில் திரும்புவதுபோல் சாதாரணமாகப் புரண்டு படுத்துக்கொண்டார். ஆனால், அந்த இரவையும் அது தந்த அதிர்ச்சியையும், வாழ்வின் மீதான அச்சத்தையும் மறக்கவே முடியாது.

பள்ளிக்காலத்தில் `படையப்பா' படம் பார்க்க தியேட்டருக்குப் போனதில், யாரென்றே தெரியாத ஒருவன் நெரிசலில் மார்பகத்தைக் கிள்ளிவிட்டு, சுதாரிப்பதற்குள் ஓடி மறைந்தான். அம்மா, பக்கத்தில்தான் இருக்கிறாள். அவளிடம் சொல்ல வாய்வரவில்லை. அச்சம்!
பஸ்சில் கண்டக்டர் சில்லறைகளைக் கைமாற்றும் வேலையில் அடிக்காத குறையாக மார்பகத்தைத் தாண்டி நீட்டும்போதெல்லாம் அந்த ஆரம்பகாலத்து அச்சம் எட்டிப்பார்க்கும்.
சென்னையின் பிரதானமான சாலையில் மாலை ஐந்து மணிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன். டூவீலரில் எதிரே வந்தவன், வேகமாக இடது கையை நீட்டி மார்புகளை அறுத்துவிடுவதுபோல் திருகிவிட்டு வண்டியை முறுக்கி மறைந்தான். பொது இடத்தில் வலிக்கும் மார்பகம் மீது கை வைத்துத் தேய்த்துக் கொள்ளவும் முடியாமல், கதறவும் முடியாமல் பல்லைக் கடித்து அழுததை இன்னும் அவமானமாக உணர்கிறேன்.
இங்கே எந்தப் பெண்ணும் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களைப் பற்றிப் பேசுவதில்லை. அதற்கான காரணம் எளிதானது. எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து, தோழியிடம் சொன்னபோது ``வெளியே சொல்லிராதே, அவமானம். வாயை மூடிக்கிட்டு இரு!'' என்ற சொற்கள்தான் வந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளாத பெண்களே இருக்க முடியாது.
எப்போதிருந்து என் உடலில் நான் வெறுக்கிற உறுப்பாக என் மார்புகள் மாறின என்று நினைவில்லை. ஆனால், இப்போதும் நான் வெறுக்கிற உறுப்பு அதுதான். தன் வீட்டுப் பெண்களைத் தவிர, மற்ற பெண்களைப் பார்க்கையில் பல ஆண்களுடைய கண்கள் முதலில் மேய்வது அவள் மார்புகளைத்தான் என்பதை நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். மார்பகம் எடுப்பாக இருக்கும் பெண்களை அதிக நேரமும், மார்பகம் சிறிதாக இருக்கும் பெண்களைக் குறைந்த நேரமும் என்ற விகிதம்தான் மாறுபடுமே தவிர, பெரும்பாலான ஆண்களுடைய பொதுவான பார்வை ஒன்றுபோலவேதான் இருக்கிறது.
தெரிந்தவர்களால், தெரியாதவர்களால், தெரியாததுபோல அல்லது வெளிப்படையாகவே என எல்லா பெண்களுக்கும் உடல் மீதான பார்வை வன்முறை நிகழ்ந்தே இருக்கும். ஒரு பெண்ணை உடல்ரீதியாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் எந்த வகையிலும் குறைந்தது அல்ல இந்த வகை விஷுவல் வன்முறை. ஒரு பெண்ணின் உடல் உறுப்புகளை இடைவிடாமல் உற்றுப்பார்க்கும் கண்களால் அந்த வலியை உணரவே முடியாது.
அது, கற்பு தொடர்பானது அல்ல; என் மீதான மரியாதை தொடர்பானது. இந்த உடல் என்னுடையது. தன் அனுமதியோ விருப்பமோ இல்லாமல் தன் உடலை எவனோ ஒருவன் நோட்டமிடுவதோ தொடுவதோ எந்தப் பெண்ணுக்கும் மகிழ்ச்சியைத் தருகிற ஒன்றாக இருப்பதில்லை. அது பெண்களுக்கு மாத்திரமேயான வேதனை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்த பிறகு, உதவி இயக்குநர் வாய்ப்புக்காக இரண்டரை வருடங்கள் அலைந்தேன். எத்தனையோ இயக்குநர்களின் அலுவலகங்களுக்குச் சென்றிருக் கிறேன். வாசலிலேயே நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். ``நீ வேணா, நடிப்புக்கு ட்ரை பண்ணு'' என்று அறிவுறுத்தி, திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். ``டைரக்ஷன்லாம் லேடீஸுக்கு செட்டாகாது. உங்களால சமாளிக்க முடியாது, தவிர, உங்களுக்கு எதுவும் தெரியாது'' என்று, சென்ற இடங்களில் எல்லாம் பெண்களின் திறன் குறித்து பாடமெடுத்தார்கள்.
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, ஒரு திரைப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. உதவி இயக்குநராகப் பல கனவுகளோடு சென்ற நான், `ஒரு பெண்ணின் கடமை' என்ன என்பதை அங்குதான் தெரிந்துகொண்டேன். மதிய சமையல் செய்வது, சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் எனத் தேநீர் தருவது, பாத்திரங்களைத் துலக்கி வைப்பது. இதுதான் என்னுடைய முழுநேர வேலை. டிஸ்கஷனில் இயக்குநரும் மற்றவர்களும் பிஸியாக இருக்கும்போது காபி கொடுப்பது மட்டும்தான் என்னுடைய பங்களிப்பு. `உனக்கு என்ன வருமோ, அந்த வேலைதானே குடுக்க முடியும்' என்றனர்.
நல்லவேளையாக, வேறொரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. ஆனால், இங்கே சேர்ந்த ஒரு மாதமாக ஒரு வேலையும் இல்லாமல் அறையில் உட்காரவைக்கப்பட்டிருந்தேன். என்னைத் தவிர, எல்லோருக்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்க, முந்தைய அலுவலகத்தில் நான் பார்த்த சமையல் வேலையையும் வேறு ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்துதான் இயக்குநர் முதன்முறையாக என்னை அழைத்துப் பேசினார்.
சில க்ளாசிக் படங்களைப் பற்றிச் சொல்லி, பார்க்கச் சொன்னார். அதை எல்லாம் ஏற்கெனவே பார்த்துவிட்டதாகச் சொன்னேன். அந்தப் படங்களிலிருந்து என்ன புரிந்து கொண்டேன் என்பது போன்ற கேள்விகள் கேட்டுவிட்டு, நான் பார்க்காத சிறப்பான படங்களைப் பற்றிச் சொல்லி, டிவிடியும் தந்தார். அவருடைய அந்த அக்கறை மிகவும் பிடித்தது. தினமும் அரை மணி நேரம் என்னோடு பேசுவார்.
ஒருநாள் நான் வீட்டுக்குக் கிளம்பும் சமயத்தில் ஒரு படத்தைக் கொடுத்து, அப்போதே பார்த்து கருத்து சொல்லும்படி பணித்தார். படம் இரண்டு மணி நேரம். எல்லா உதவி இயக்குநர்களும் கிளம்பியிருக்க, நான் மட்டும் தனியாக உட்கார்ந்து படம் பார்க்கத் தொடங்கினேன். ஒரு மாதமாக வேலையில்லாமல் நிராகரிக்கப்பட்டதில், இன்று திறமையாகப் பேசி தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குறிப்புகள் எடுத்துக்கொண்டே படம் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் படம் பார்த்துக்கொண்டிருந்த அறைக்கு இயக்குநர் வந்தார். உள்கதவை மூடிவிட்டு வந்து பக்கத்தில் அமர்ந்தார். அருகில் அமர்ந்து பேசத் தொடங்கியவர் இயல்பாகத் தொட்டுப் பேச ஆரம்பித்தார். இந்த இயல்பான தொடுதல்கள்தான் ஆபத்தானவை. நானும் அதை இயல்பான தொடுதலாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என இயக்குநர் எதிர்பார்த்தார். நான் சிறிதும் தாமதிக்காமல் என்னுடைய எதிர்ப்பை உடனே பதிவுசெய்தேன். கோபமாக வெளியே போகச் சொன்னார். ``இனி வேலையில்லை'' என்றார்.
இந்த அனுபவம், இது மாதிரியான ஏராளமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள, என்னைத் தயார்செய்தது. `இங்கே இப்படித்தான், இதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்' என முடிவெடுத்தது அப்போதுதான். இன்று வரை ஏதேதோ சூழ்நிலைகளில் `இயல்பாக'த் தொடுகிறவர் களை கடக்கிறேன். அப்போதெல்லாம் இன்னும் அதிக உறுதியோடு அவர்களை எதிர் கொள்கிறேன்.
நம் திரைப்படங்களில் பெண்களுக்கான பங்கு என்ன? நாயகியின் தேடல், கனவு, லட்சியம் எல்லாமே நாயகனை எப்படியாவது திருமணம் செய்துகொள்வது மட்டும்தானே... ஒருவன் தொடர்ந்து துரத்திக்கொண்டிருப்பதாலேயே உலகில் எந்த ஒரு பெண்ணுக்கும் காதல் வருவதில்லை. விபத்தாகத் தன் மேல் விழுந்தவனைப் பற்றி எந்தப் பெண்ணும் கட்டிலில் படுத்துக்கொண்டு கனவு காண்பதில்லை. இங்கே சினிமாவில் காட்டப்படும் பெண்கள், முழுக்க முழுக்க ஆண்களால் ஆண்களுக்காகக் கட்டமைக்கப்படும் பெண்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஆண்களை மகிழ்விக்கிறார்கள். தமிழ் சினிமாப் பெண்ணின் நோக்கம் ஆண் ரசிகர்களைக் கவர்வது மட்டும்தான். என்றால், பெண்களுக்கான சினிமா எது? இந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் பார்வையாளனின் மனதில் பதியும் செய்தி என்ன?
பெண், தான் பார்க்கும் ஆண்களை நேருக்குநேர் எதிர்கொள்கிறாள். பேன்ட்டுக்குக் கீழ் பார்ப்பதில்லை. ஒருவனின் பார்வையில், பேச்சில், சிரிப்பில், தன்னுடனான அவனின் பழகும் விதத்தை வைத்துதான் அவனை அடுத்த முறை பார்ப்பதைப் பற்றித் தீர்மானிக்கிறாள். உடல் கவர்ச்சி அவளை ஈர்ப்பதில்லை. பார்க்கும் ஆண்களின் மீதெல்லாம் அவளுக்குக் காதலும் காமமும் தோன்றுவதில்லை. பிறந்ததிலிருந்து தன்னைக் கட்டுப்படுத்தி, சுய ஒழுக்கத்துடன் வளர்க்கப்படுவதால், தன் உணர்ச்சி களை அடக்கிக்கொண்டு, தேவைப்படும்போது வெளிப் படுத்தும் ஆற்றல் பெண்களுக்கே இருக்கிறது.
இரு ஆண்கள் சந்தித்துக்கொள்வதுபோல, இரு பெண்கள் சந்தித்துக்கொள்வதுபோல ஓர் ஆண்-பெண் சந்திப்பு நிகழ்வதில்லை. நெருங்கிய நண்பர் அவர். ஓர் இரவு, ஒரே அறையில் அவருடன் தங்கநேர்ந்தது. அந்த இரவில் அவர் திடீரென வேறு யாரோவாக மாறியிருந்தார். ``நான் ஒரு பெண்ணுடன் இருந்ததில்லை. தனியா, ராத்திரியில், ஒரே அறையில்...'' என்று ஜெபித்துக்கொண்டே இருந்தார்.
தன்னுடைய பாலியல் இச்சைகளை வெளிப்படுத்துகிற மாதிரியான ஏதேதோ நாடகங்களை நிகழ்த்திக்காட்ட ஆரம்பித்தார். சிறிய எதிர்ப்பு உணர்வை நான் வெளிப்படுத்த, அவராகவே பயந்து வெளியேறினார். ஒரு பெண்ணுடன் ஒரே அறையில் தங்குவது ஏன் ஆண்களுக்கு அவ்வளவு பதற்றத்தைக் கொடுக்கிறது? அதுவும் தனக்கு நன்றாக அறிமுகமான இத்தனை நாள்களாகப் பழகிய ஒருத்தியுடன் தங்கும்போது எப்படி வருகிறது பாலியல் சிந்தனை? சினிமாவின் தாக்கத்திலிருந்து தோன்றுவது இது. இரவு நேரம், ஒரே அறை, ஹீரோ-ஹீரோயின் என்றாலே படுக்கையறைக் காட்சிகள்தான் நம் நினைவில் வருகின்றன.

எல்லா ஆண்களையும் ஒட்டுமொத்தமாகக் காமத்தின் சட்டகத்துக்குள் அடைக்க முடியாது. அருகில் இருக்கும் பெண்ணை இயல்பாக எதிர்கொள்ளும் தோழமையோடு பழகும் ஆண்களையும் நிறையவே கடக்கிறேன் எப்போதும்.
எனக்கு இரண்டு அண்ணன்கள். ஆண் பிள்ளைதான் எதிர்காலத்தில் உதவும் என்ற பொதுவான கருத்துதான் என் சுற்றத்திலும் இருந்தது. ஆனால், தினமும் 100 ரூபாய் மட்டுமே சம்பாதித்துக்கொண்டிருந்த என் அப்பா, என்னை வெளியூருக்கு அனுப்பி ஆயிரங்களில் செலவு செய்து படிக்கவைத்தார். நானே என் மேல் நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து முதுகலை வரை படிக்கவைத்தார். ``பொட்டப்புள்ளய எதுக்குப் படிக்கவைக்கிற... எவனையாவது இழுத்துக்கிட்டுத்தான் ஓடப்போவுது!'' என்ற என் உறவினர்களின் எந்த வார்த்தைக்கும் அவர் காதுகொடுத்ததே இல்லை.
தனியாளாக சென்னையில் எந்த உறவும் துணைக்கு இல்லாமல் சினிமா கனவோடு சுற்றித் திரிந்த எனக்கு, யாரை, எப்படி அணுகுவது எனத் தெரியாமல் தவித்த நாள்களில், எழுத்தாளர் பாஸ்கர்சக்தி
மாதிரியான ஓர் ஆண்தான் சரியான ஆள்களை அறிமுகம் செய்துவைத்து எனக்கான வேலைகளையும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் உருவாக்கினார்.
ஒரு திரைப்படம் செய்வதற்கு முன்பான ஆறு வருடங்களில் பலமுறை நம்பிக்கை இழந்து, தோல்வியாலும் விரக்தியாலும் அனைத்திலுமிருந்தும் பாதியிலேயே விலகிவிட நினைத்திருக்கிறேன். அப்போதெல்லாம் நண்பர் முருகேஷ்பாபு, ``இன்னும் கொஞ்ச தூரம்தான்'' என்று ஒவ்வொரு முறையும் என்னை மீட்டுக்கொண்டுவந்தார்.
இதுபோல இன்னும் பல ஆண் நண்பர்கள்தான் என்னை என் இயல்போடு அரவணைத்துக் கொள்கிறார்கள். சென்னை மாதிரியான ஓர் ஊரை என்னுடைய சொந்த ஊராக மாற்றியது அந்த ஆண்கள்தான்.
ஒரு பெண்ணுக்குத் தன்னை ஆராதிக்கும் ஆண்களைவிட, தன்னிடம் இயல்பாகப் பழகும் ஆண்களைத்தான் பிடிக்கும். எப்போதும் எஜமானனாக, எதற்கும் கலங்காத இதயம் உடையவர்களைவிட, யதார்த்தமாக, ஆறுதலாக, சகபயணியாக இருக்கும் ஆண்களையே பெண் தேர்வுசெய்கிறாள். அத்தகைய ஆண்களே அவளின் வானத்தை வண்ணமயமாக மாற்றுகின்றனர்.
தற்போது, தைரியமாகத் தனித்து முடிவெடுக்கும் பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெண்கள், ஆண்களைப் பயமுறுத்துகின்றனர். அத்தகைய பெண்களைத் திமிர்பிடித்தவர்கள், அடங்காப்பிடாரிகள், பஜாரிகள் எனப் பலவிதங்களில் பட்டங்கள் சூட்டி நிராகரிக்கின்றனர். உயரம், வயது, படிப்பு, திறமை என எதிலும் தன்னைவிட அதிகமானவள், ஓர் ஆணுக்குத் தகுதியற்றவளாக மாறிப்போகிறாள். ஆனால், ஆணுக்குப் பெண்ணிடம் தேவையான அழகில் மட்டும் ஓர் ஆண் விதிவிலக்கு அளிக்கிறான். அதனாலேயே பெண்கள் இல்லாததை இருப்பதாகக் காட்டிக்கொள்ள பேட்டட் ப்ரா, ஸ்ட்ரைட்டனிங், கர்லிங், பிளீச்சிங், வேக்ஸிங் என உடல் அழகில் அதிகக் கவனம் செலுத்த நிர்பந்திக்கப்படுகிறாள். அழகும் இளமையுமே அவளது தகுதி என்பதாக ஒரு கருத்தியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பிறந்ததிலிருந்தே ஆண் வீரனாகவும் பாதுகாவல னாகவும் வளர்க்கப்படுவதால், தன் பலவீனங்களை வெளிப்படுத்துவதில்லை; அதைப் பற்றிப் பேசுவதில்லை; அழுவதில்லை. தன் ஆண் பிம்பத் தைக் காப்பதற்காக, அதிக மெனக்கெடுகிறான். தோல்வியையோ கோபத்தையோ, அவமரியாதை யையோ நிராகரிப்பையோ அவனால், இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்ணோ, பிறந்ததிலிருந்தே அழகியாக, அடக்கமும் அன்பும் உள்ளவளாக, அமைதி வடிவாக, கருணைத் தாயாகவே வளர்க்கப்படுவதால் அந்தப் புனிதச் சிறைக்குள் சிக்கிக்கொள்கிறாள். இருபாலருமே எப்போதும் தங்களுடைய இயல்பில் இருப்பதே இல்லை.
ஆண், தன் ஆண் பிம்பத்தைக் காப்பாற்ற தன் மென் உணர்வுகளை மறைத்துத் தன்னை எப்போதும் வலிமை வாய்ந்தவனாக நிலைநிறுத்திக்கொள்வதும்... பெண், சமூகத்தின் நற்பெயருக்காகத் தன் உணர்வுகளை மறைத்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதும் இருவருக்குமே பயனளிக்காது. அவரவர் இயல்பில் அவரவர் வாழ்வதில்தான் இருக்கிறது வளமையான எதிர் காலத்துக்கான சூட்சுமம். நமக்கான வெளிச்சம் இருப்பது அங்கேதான்!
- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

வன்மம் என்னும் கற்கள்
உங்களிடம் வன்மங்கள் இருக்கின்றன
என்னிடம் ஒரு வாழ்க்கை இருக்கிறது
நீங்கள் அந்தக் கற்களை எறியுங்கள்
வாழ்ந்துபார்க்கிறேன் நான்.
- குட்டிரேவதி

எதிர்ப்பதம்
விழிகளோ நேருக்கு நேர்
செவிகளோ பக்கவாட்டில் எதிரெதிர்
எப்படி உரையாடிக்கொள்வது?
- குட்டிரேவதி

ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்
வேட்டி மட்டுமே உடுத்தும் மாமனுக்கு
வாக்கப்பட்ட அத்தையொருத்தி
தன் மனசுக்குள் மடித்துவைத்திருக்கிறாள்
பெல்பாட்டம் பேன்ட் ஒன்றை.
யாருமற்ற பொழுதுகளில்
அதை வெளியே எடுத்து
உதறி
நீவிவிட்டு
மீண்டும் மடித்து வைத்துக்கொள்கிறாள்.
அப்போது மட்டும்
மிகச் சன்னமாக ஒலிக்கவிடுவாள்
யெஸ் ஐ லவ் திஸ் இடியட்
ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்
பாடலை.
மற்றபடி
மாமனுக்கு மூன்று பிள்ளைகள் பெற்றிருக்கிறாள்
அதிலொன்று இரட்டைப் பிரசவம்.
- கதிர்பாரதி
(ஆனந்தியின் பொருட்டு
தாழப் பறக்கும் தட்டான்கள்)

சற்று முன்பு இறந்தவனின் சட்டைப் பையில்
செல்ஃபோன் ஒலித்துக்கொண்டிருக்கிறது
கையில் எடுத்த காவலர்
`சார், யாரோ
அம்முன்னு கால் பண்றாங்க சார்'
ஒரு நொடி
இறந்தவனின் கண்கள்
திறந்து மூடுகின்றன
- வே.பாபு
(மதுக்குவளை மலர்)