
மருத்துவர் கு.சிவராமன்
``இந்த கப்லதான் புடிச்சுட்டு வரணும்; மாடியில் ஆண்கள் டாய்லெட் இருக்கு. அங்கே போய் எடுத்துட்டு வாங்க’’ என்று அந்தப் பெண் தட்டச்சு செய்துகொண்டே, பிளாஸ்டிக் புட்டி ஒன்றை நீட்டும்போது, அதை வாங்கிக்கொண்டு கழிப்பறைக்கு நடக்கும் ஆண்மகனின் மனதுக்குள் வரும் வலி, உலகின் உச்சகட்ட வலி. பல்வேறு நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையில், பினாயில் வாடைக்குள் நின்றுகொண்டு, உயிரணுக்களை சேகரித்துத் தர நிற்கும் கணத்தில் ஆணின் மனம், `மலரினும் மெல்லியது காமம்... தேனிலவில், கசிந்துருகாத உயிரணுவை இப்படி மூத்திரச்சந்தில் நின்றுகொண்டு, நினைவில் புணர்ந்து சேகரிப்பது மாதிரியான மருத்துவ வன்முறை உலகில் வேறெதுவும் இல்லை’ என அங்கேயே உரக்கக் கத்தத் தோன்றும். அதே சமயம், முந்தைய இரவில் அவளோடு நடந்த உரையாடல் நினைவுக்கு வரும். ``ம்ஹும்... வேண்டாம். இன்னிக்கிக் கூடாது. டாக்டர், நாலு நாளைக்கு சேராம இருந்து, அஞ்சாவது நாள் காலைல உயிரணுக்களைச் சேகரிச்சுத் தரச் சொல்லியிருக்கார். இப்போ சமர்த்தா போய் தூங்குங்க’’ என அவள் முத்தமிட்டு விலகிச் செல்கையில், அவள் இமையோரத்து கண்ணீர்த்துளி நெற்றியில் விழுந்து, சுளீர் எனச் சுட்டது இப்போதும் கொதிக்கும். மொத்தத்தில், `உயிரணு எண்ணிக்கையை அளந்து வரச் சொல்லும் சோதனை, உளவியலாக அதிகபட்ச வலிதரும் ஒன்று’ என்கிறது மருத்துவ உலகம்.

``சரியா புட்டியில சேகரிச்சீங்களா... போன தடவை மாதிரி கீழே சிந்திடலையே?’’ என வரவேற்பறையில் காத்திருக்கும் மனைவி கேட்கும்போது முணுக்கென கோபம் பற்றிக்கொள்ளும். கணவன் கண்ணில் தெரியும் கோபத்தை அவசரமாக அடையாளம் கண்ட மனைவி, ``சாரிங்க... ரொம்ப நெர்வஸா இருக்கு, அதான்...’’ எனக் காதலோடு கைகளை இறுகப் பற்றி விசும்பிக்கொள்வதும், ``ச்சேய்... எதனாச்சும் ஸ்கேனு, எம்.ஆர்.ஐ-னு செஞ்சு இந்த விந்தணுவை எண்ணிப் பார்க்க முடியாதா?’’ எனப் புலம்புவதும், ``இதுதான் கடைசி. இனிமே சத்தியமா இப்படி ஒரு சோதனைக்கு வரவே மாட்டேன்’’ என வியர்த்து, வெறுத்து, சோதனைச் சாலையைவிட்டு அவர்கள் வெளியேறுவதும் இப்போது நகர்ப்புறங்களில் அதிகம்.
`கருத்தரிப்புக்குத் தேவையான அளவு உயிரணுக்கள் உள்ளனவா?' என்பதை அறிந்துகொள்ள எடுக்கும் சோதனை, கருத்தரிப்பு தாமதத்துக்கான சிகிச்சையில் தலையாயது. ஆனால், `எப்போது சோதனைக்குச் செல்ல வேண்டும்?’ என்பது முன் நிற்கும் முதல் கேள்வி. `எந்த அளவுக்கு இந்த விந்தணு சோதனை துல்லியமானது?’ என்பது அடுத்த கேள்வி. `திருமணமாகி குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகளாக, தொடர்ச்சியான உடலுறவு இருந்த பின்னரும் கருத்தரிக்கவில்லை என்றால் மட்டுமே மருத்துவரை ஒரு தம்பதியர் அணுக வேண்டும். அதுதான் நெறி' என்கிறது மருத்துவ அறம்.
அப்படியான குடும்ப உறவில் இருந்தும், கருத்தரித்திராத தம்பதியர் முதலில் தங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசிக்கலாம். `எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. ஏன் இன்னும் நிகழவில்லை?' எனும்போது, முதலில் சோதிக்கவேண்டியது, ஆணின் விந்தணு சோதனைதான். எடுத்தவுடன் பேக்கேஜ் டீலாக, எல்லாச் சோதனைகளையும் இருவருக்கும் ஒரே தடவையில் செய்து முடிப்பது அவசியமற்றது. ஒருவேளை கருத்தரிப்பு தாமதம் எனத் திருமணமாகி 8-10 ஆண்டுகள் ஆன பிறகு, வரும் தம்பதியரிடம் வேண்டுமானால் இப்படியான மொத்தச் சோதனைகள்... அதுவும் சில நேரத்தில் மட்டும் அவசியப்படலாம். ``அந்த கம்பெனி பேப்பரையெல்லாம் நாங்க பார்க்கவே மாட்டோம். புதுசா முதல்ல இருந்து மறுபடியும்...’’ என பரோட்டா சூரி மாதிரி சோதனை செய்யச் சொல்லும் வேதனைகள் நம் ஊரில்தான்
மிக அதிகம்.
உலகெங்கும் உள்ள கருத்தரிப்பு தாமதத்தில் ஏறத்தாழ 60% குறைபாடு ஆணில்தான் உள்ளது. ஆதலால், முதலில் அறியப்பட வேண்டியது ஆணின் உயிரணு, விந்து. ``எனக்கு எல்லாமே நல்லாத்தான் இருக்கு. அவளுக்குத்தான் மாதவிடாய் சரியான நாளுக்கு வர்றதில்லை. முதலில் அவளைச் சரி பண்ணுங்க’' எனச் சொல்லும் ஆணாதிக்க அரைவேக்காடுகள் இன்னும் இங்கே அதிகம். அவர்களில் பெரும்பாலோருக்கு விந்து பற்றியத் தவறான புரிதலோடு, உளவியல் சிக்கல் ஒட்டியிருப்பதுதான் சோதனைக்கு முன்வராமல் ஒளிவதன் காரணம். ``80 துளி ரத்தம் ஒரு துளி விந்தாமே’’ எனத் தொடங்கி, உயிரணுக்கள்
குறித்த சாமானியனின் புரிதல் அலாதியானது. `விந்துவிட்டவன் நொந்து கெட்டான்’ என்ற எதுகை மோனையுடன் எக்கச்சக்கமான பழமொழி மிரட்டல் வேறு, நம் ஊரில் காலகாலமாகச் சுற்றித் திரிகிறது. இந்தப் பழமொழிகளுக்குப் பின்னணியில் வெகுஜனம் தவறாகப் புரிந்துகொண்ட ஒரு மரபு அறிவியல் இருக்கிறது.
`விந்து’ எனும் உயிரணுவும், `சுரோணிதம்’ எனும் சினைமுட்டையும் பாரம்பர்ய சித்த ஆயுர்வேத அறிவியலில் மிகமிக முக்கியமான தாதுக்கள்.
`7-ம் அறிவு’ மாதிரி அது ஏழாம் தாது. நாம் தினம் தினம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவும் முதல் நாள் அதன் சாரமாகவும், பின்னர், அடுத்தடுத்த நாள்களில் ரத்தம், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை எனக் கடந்து ஏழாம் நாள் சுக்கிலம் (ஆண் உயிரணு) / சுரோணிதம் (சினைமுட்டை)-யில் வந்தடையும் என்பது அந்தக்காலக் கணக்கு. விந்தை வலுப்படுத்த வேண்டிய அக்கறை ஒவ்வொரு வேளை உணவிலும் இருக்க
வேண்டும் என்பதுதான் அதன் முக்கியக் கருத்து. காண்டாமிருகக் கொம்பிலிருந்தோ, `காண்டம்' வாசத்திலிருந்தோ விந்துவுக்குத் தடாலடி பலம் வருவதில்லை. ஒவ்வொரு வேளை உணவும் சீராக உட்கிரகிக்கப்பட்டு, உடலின் ஒவ்வொரு திசுவின் மூலைக்குள்ளும் சீராகப் பயணப்பட்டு பயணப் பட்டு, கடைசியாக அது விதைப்பையின் உள்ளே உயிராற்றல் மிக்க அணுவாக உருவாக்கப்படும் என்பதுதான் அந்தக்காலப் புரிதல். சுற்றி வளைத்துப் பார்த்தால், `உயிரணு செர்டோலி செல்லுக்குள் உருவாகும்' என இதனைச் சுருக்கமாகச் சொன்ன நவீன அறிவியல் கருத்தோடு ஒத்துப்போகும்
நம் ஊர் அறிவியல்.
உயிரணு, இயற்கையின் படைப்பில் ரொம்பவே தனித்துவமானது. `உடலின் மற்ற கோடானுகோடி அணுக்கள் இருந்த இடத்தில் அப்படியே தேமே என இருந்துகொண்டு, தங்களுக்கு இடப்பட்ட பணியை ஆயுள்காலம் வரை செய்துகொண்டி ருக்கும். ஆனால், இந்த ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினை முட்டையும் தனக்கென அபரிமித இயக்க ஆற்றலைப் (Kinetic energy) பெற்று, தன்னோடு படைக்கப்பட்டுக் குத்தவைத்திருக்கும் சக பயணிகள் ஒவ்வொன்றோடும் போட்டி போட்டுக்கொண்டு, முந்தியடித்து இலக்கை நோக்கிப் பொங்கி எழ, நீந்த, உருண்டோட எப்படிக் கற்றது?' என்பது இயற்கையின் இன்னும் சரிவரப் புரியாத விந்தை.
ஒவ்வொரு முறை உடலுறவின்போதும், `காதல் மன்னர்கள்’ காலத்தில், அவர்கள் 60 முதல் 120 மில்லியன் உயிரணுக்களை (ஒரு மி.லி அளவில்) சினைமுட்டையை நோக்கி அனுப்பினார்கள். `காதல் இளவரசர்கள்’, `காதல் பேராண்டிகள்’ காலத்தில் இவை 15-20 மில்லியன்களாக நலிந்துபோய்விட்டன. நவீன மருத்துவ அறிவியல், `ஒரு மி.லி விந்தில் 20-39 மில்லியன் அணுக்களாவது இருந்தால்தான் கருத்தரிப்பது சாத்தியம்’ எனச் சொல்கிறது. ஆனால், உலகெங்கும் உள்ள கருத்தரிப்பு ஆய்வாளர்கள் `இந்தக் கணக்கெல்லாம் ரொம்பத் தப்பு. இது சமீபத்தில் டேம் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்ட `செல்லூர்' சயின்ஸ் மாதிரி செல்லாது செல்லாது. முறையான புள்ளிவிவர ஆய்வுகள் இல்லை. கொஞ்சூண்டு விந்துள்ளவர் குழந்தை பெறுவதும், கோடிக்கணக்கில் அணுக்களை வைத்துக்கொண்டு குழந்தைக்காகக் காத்திருப்பதும் நிறைய குழப்பங்களை விளைவிக்கிறது' என்கிறார்கள். பெருவாரியானோர் ஏற்றுக்கொண்ட கணக்கில், ஒரு புணர்ச்சியில் 2.5 முதல் 3 மி.லி அளவேனும் விந்து இருக்க வேண்டும். அதில், ஒரு மி.லிட்டரில் 39 மில்லியன் உயிரணுக்கள் இருந்தால், கருப்பைக்குள்ளான ஓட்டப்பந்தயத்துக்கு அவை தயாராம். அப்படி மொத்தமாக ஓடும் உயிரணுக் கூட்டத்தில் ஏற்கெனவே செத்துப்போன, நோஞ்சானாயிருக்கிற மற்றும் உடல்திறனற்ற உயிரணுக்கள் எல்லாமே கலந்து இருக்கும். அவை அனைத்தும், காஷ்மீர் பனிச்சருக்கு போலிருக்கும் கருப்பையின் வழுக்குப் பாறையின் உச்சியில் `வான்.. வருவான்...' என இசைத்துக்கொண்டு மணிரத்னம் படத்தின் ஹீரோயின் மாதிரி காத்திருக்கும் சினை முட்டையை நோக்கி மூச்சிரைக்க சரேலென முன்னேறும். முதலில் வந்துசேரும் விந்தணு, தன் உச்சி மண்டையின் கூரான கன்னத்தை அவளின் (சினைமுட்டையின்) கன்னத்தோடு உரசும். கூடவே அதனோடு அனுப்பும் அக்ரோசோம் (Acrosome) ரசாயன சமிக்ஞையில், அவள் கோட்டைச் சுவர் உடைந்து, செம்புலப் பெயனீர்போலக் கலக்க... அடுத்த விநாடியில் புது ஆதார் கார்டு புறப்படுகிறது!

பெண்ணுறுப்பில் இருந்து கருப்பையை நோக்கி கீழிருந்து மேலாகத் தொடங்கும் ஓட்டப்பந்தயத்தில் முன்னேற முதலில் போதிய கூட்டம் வேண்டும்; அபரிமித இயக்க ஆற்றல் வேண்டும்; ஓட்டப் பந்தயத்தில் களைத்திடாமல் இருக்க உணவு வேண்டும்; மேல் நோக்கி ஓட அதற்கேற்ற உடல்வாகு வேண்டும்.
இதையெல்லாம் கணக்கிடத்தான் விந்தணுச் சோதனை. இந்தச் சோதனை எப்படி நடக்க வேண்டும், எப்படி இந்தக் கணக்கை எண்ண வேண்டும் என்றெல்லாம் உலக சுகாதார நிறுவனம் பல வழிகாட்டுதல்களைச் சொல்கிறது.
உயிரணுக்கள் சோதனை என்பது ஒரு சிறிய வழிகாட்டுதல் மட்டுமே. சோதனையில் பெறும் விந்துவுக்கும், `ஒரு கண்ணில் வலி வந்தபோது மறுகண்ணும் தூங்கிடுமா?' என வைரமுத்து வரிகளோடு காதல்செய்து பெறும் உயிரணுக் களுக்கும் வித்தியாசம் ஏராளம் உண்டு. உடல் உறவின்போது, முதலில் கசியும் புராஸ்டேட் கோள திரவம் கருப்பையின் வாசலை ஊடுருவ, அதன் வாயில் பகுதியை ஒட்டி சில சமிக்ஞை தருமாம். பின்னால் பெண்ணுறுப்பில் மொத்தமாகக் காத்திருக்கும் உயிரணுக் கூட்டமும், மேலிருந்து சமிக்ஞை கிடைத்தவுடன், அதன் பின்னர் மொத்தமாக மேல் நோக்கி ஓடுமாம். உறவின் உச்சத்தில் இப்படியெல்லாம் நடக்கும் திட்டமிடுதலை, புட்டியில் பிடித்துத்தரும் உயிரணுக்களில் மொத்தமாக அளந்திட முடியாது. விழியோரத்தில் தெரியும் காதல், இதழோரத்தில் அரவணைக்க அழைக்கும் புன்னகை, மூச்சுமுட்டக் கொடுக்கும் முத்தம், பரவசமூட்டவைக்கும் பள்ளிக்காலத்தில் அவனுக்குப் பிடித்த கல்கோனா மிட்டாய் பரிசு, ஓய்ந்துவரும் பொழுதில் `நானிருக்கேன்டா!' என கரிசனத்தோடு கழுத்தைச் சுற்றும் கரங்கள்... இன்னும் எத்தனையோ, உயிரணுக்களை உருவாக்கித்தள்ளும்; திறம் படைக்கும்; இலக்கை நோக்கி ஓடவைக்கும்; கருத்தரிக்கவைக்கும்.
- பிறப்போம்...
விந்தணு சோதனை... கவனத்தில் கொள்ளவேண்டியவை!
இரண்டு முதல் ஏழு நாள்கள் உடலுறவுகொள்ளாமல் இருந்து சோதனைக்குச் செல்ல வேண்டும். `போன மாசம் புணர்ந்தது... அதுக்கப்புறம் இல்லை. அப்படின்னா, அளவு நிறைய இருக்கும்’ என இன்ஜினீயரிங் கணக்குப் போட்டு நீங்கள் சென்றால், அது அப்பட்டமான தவறு. அணுக்கள் உடைந்தும் இறந்தும் அதில் இருக்கும். உங்கள் மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்.

சோதனையகத்தில் சேகரித்துத் தருவது சிறந்தது. அதற்கான மனநிலை முற்றிலும் இல்லாதபோது, வீட்டிலிருந்து 20-30 நிமிடங்களில் சாம்பிளைத் தர இயலுமென்றால், உங்கள் மருத்துவரிடம் ஒப்புதல் பெற்று, உடலுறவில் காண்டம் உதவியுடனோ, விந்து வெளியேறுவதற்கு முன்னதாக (Coitus interruptus) அதனைச் சேகரித்தோ தரலாம். வீட்டில் இருந்தே பழைய பெருங்காய டப்பாவில் பிடித்துவருவது, சாதாரணக் கடையில் கிடைக்கும் ஆணுறை அணிந்து புணர்ந்து, அதை புட்டியில் மாற்றி எடுத்து வருவதெல்லாம் தவறான விஷயம். அதற்கென பிரத்யேக காண்டம், சோதனைச் சாலையில் பெறப்பட்ட கிருமி நீக்கம் செய்யப்பட்ட புட்டி தேவை.
முந்தைய இரவில் புகை, மதுப் பழக்கங்கள் இருப்பது உயிரணுவின் தரத்தைக் குறைக்கும். சோதனைக்கு முன்னர், அதிக காபி அருந்துவதும் தவறு. சிறுநீர் கழித்துவிட்டு, கைகளையும் ஆணுறுப்பையும் சோப்பு நீரில் தூய்மை செய்துவிட்டு, முழுமையாக உலர வைத்துவிட்டு, உயிரணுக்களைச் சேகரிக்க வேண்டும். கழிப்பறையில் சேகரிப்பது கூடாது. சோதனைச்சாலையில் இதற்கென பிரத்யேக அறை வேண்டும்.
கொஞ்சம் குறைவாக முடிவுகள் இருந்தால், அதற்காகப் பதறவேண்டியதில்லை. ஒரு முறை பெறப்பட்ட முடிவு ஒருபோதும் சரியாக இருக்காது. 4-6 வார இடைவெளியில் இரண்டு, மூன்று முறை சோதிக்க வேண்டும். அதன் சராசரிதான் கிட்டத்தட்ட சரியான அளவாக இருக்கும். இன்றைக்கு எடுத்துவிட்டு, நான்கு நாள்கள் கழித்து இன்னொரு சாம்பிள் கொடுப்பது தவறு.