Published:Updated:

சொல் அல்ல செயல் - 4

சொல் அல்ல செயல் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 4

அதிஷா, ஓவியங்கள்: பாலமுருகன்

ளையராஜாவின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி. நின்றுகொண்டே ஹார்மோனியத்தை வாசித்தபடி இளையராஜா மெள்ளப் பாடத் தொடங்குகிறார். அரங்கமே அமைதியாகக் காத்திருக்கிறது... ராஜாவின் குரல் அரங்கை நிரப்ப ஆரம்பிக்க... எனக்குப் பின்னாலிருந்து ஒருவர் இளையராஜாவை மிகமோசமான வசைச்சொல்லால் திட்டிக் கத்துகிறார். அதிர்ச்சியில் எல்லோரும் அவரைத் திரும்பிப்பார்க்கிறோம். திட்டிவிட்டு அந்த நபர் கண் கலங்கி அமர்ந்திருந்தார். அவருக்கு ராஜாவின் மீது கோபமெல்லாம் இல்லை... அவர் பாராட்டத்தான் செய்திருக்கிறார்!

கிரிக்கெட் போட்டிகளை மைதானத்தில் ரசிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு முறையும் அடிக்கப்படும் சிக்ஸரும், விழுகிற விக்கெட்களும் எத்தனை ஆயிரம் கெட்டவார்த்தைகளை ரசிகர்களிடமிருந்து கிளப்பும் என்று. ஆனால், யாரும் அங்கே அந்த வசைச்சொற்களுக்காக எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. நம் மிகு உணர்வுகளை வெளிப்படுத்த நாம் எப்போதும் கெட்டவார்த்தைகளையேதான் சார்ந்திருக்கிறோம். அதிகக் கோபமும் அதிக மகிழ்ச்சியும் அதிகத் துக்கமும் நம்மிடமிருந்து கெட்ட வார்த்தைகளாகவேதான் வெளிப்படுகின்றன.

சொல் அல்ல செயல் - 4

`...த்தா' சென்னையின் மிகப்பிரபலமான சொல். சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இரண்டு சொற்றொடர்களுக்கு மத்தியில் இது எப்போதும் இணைப்புச் சொல்லாகிவிடும். சில நேரங்களில் தனித்த சொல்லாக, ஆரம்பச் சொல்லாக, கேலியாக, ஜாலியாக, கோபமாக, வெறுப்பின் வெளிப் பாடாக, ஆணவத்தின் கூச்சலாக, ஆச்சர்யக்குறியாக எனப் பல நூறுவிதமான பயன்பாடுகளைக் கொண்ட ஒற்றைச்சொல். இதில் வர்க்க வேறுபாடு களோ, கற்றோர் - கல்லாதோர் ஏற்றத்தாழ்வுகளோ எதுவுமே கிடையாது. மற்ற ஊர்க்காரர் களுக்குத்தான் அது தாயைப் பழிக்கிற இழிசொல். ஆனால், சென்னைக்காரர்களுக்கு வட்டார வழக்கு.

சென்னைக்கு வந்து ஓர் அறை எடுத்து குடியேறிய முதல் நாள். முதல் நாளிலேயே பிரச்னை. அறையில் குளிக்கப் போனால், சொட்டுத் தண்ணீர் இல்லை. பைப்பில் தண்ணீர் வருமா எனத் தேடினால், அந்த வீட்டில் பைப்பே இல்லை. வெளியே சாலையில் என் அறையை ஒட்டி ஒரு குடிசைப் பகுதி இருந்தது. அங்கே ஓர் அடிபம்ப்பும் இருந்தது.

அடிபம்ப்பில் பக்கெட்வைத்து முதல் அடி அடிப்பதற்கு முன்னால், என் பின்னந்தலையில் ஒரு கை ஓங்கி அடித்தது. ``...த்தா யார்றா நீ... இங்க வந்து கொடத்த வெக்ற..?'' முதல்முறையாக அந்தச் சொல்லை சென்னையில் எதிர்கொண்டது அப்போதுதான். உள்ளுக்குள் அத்தனை கோபம். அந்தச் சொல் கொடுத்த அழுத்தம். முதுகுத்தண்டு சிலிர்த்தெழுந்தது. அந்த நபரை ஓங்கி அடித்து விட்டேன். அவர் என்னைத் திருப்பி அடிக்கத் தொடங்க... அந்தக் கைகலப்பைத் தடுக்க ஆள்கள் கூடிவிட்டனர். இருவரையும் பிரித்துவிட்டனர். விசாரணை நடந்தது. நான் என் தரப்பு நியாயத்தை விளக்க முயன்றேன். நான்  யார், எந்த ஊர் என்று விசாரித்தார்கள். ``அவர் எப்படிங்க எங்க அம்மாவைப்பத்தி தப்பாப் பேசலாம்... அதனாலதான் அடிச்சேன்'' என்றேன் திரும்பத் திரும்ப...

கூட்டத்துக்கு என் மேல் அது அனுதாபத்தைப் பெற்றுத்தந்தது. அந்த நபரை, ``நீ ஏன்ப்பா அவன் அம்மாவ பத்தி தப்பாப் பேசின'' என்று விசாரிக்கத் தொடங்கினர். ஆனா, அந்த நபரோ திரும்பத் திரும்ப, ``...த்தா நான், எப்படா உங்க அம்மாவ பத்திப் பேசினேன்?'' என்றார். ``ஏன்ப்பா அவன்தான் சொல்றான்ல... நீ என்ன அதையே சொல்ற.. விடுங்கப்பா'' என்றனர். ``ஏங்க இப்பக்கூடச் சொன்னாரே ...த்தானு அதுக்குத்தான் அடிச்சேன்'' என்றேன். அங்கிருந்து பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். என்னோடு சண்டையிட்ட ஆளும்கூடப் புன்னகைத்தார். ``சரி சரி. போ...'' என்று என்னைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

நான்கு நாள்கள் விடாமல் பெய்த ஒரு பெரு மழைக்காலம். அதே தண்ணீர் பைப் இல்லாத அறைக்குள் நானும் நண்பனும் முடங்கிக் கிடந்தோம். வெளியே உணவுக்காக இறங்க முடியாது. இடுப்புக்கு மேல் சாலைகளில் தண்ணீர் பாய்கிறது. அறையில் நானும் நண்பனும் பட்டினியிலேயே இருந்தோம். சமைக்கவும் வழியின்றி இரண்டு நாள்களைப் பேசிப் பேசியே கடந்தோம். மூன்றாவது நாளும் மழை விடவில்லை. இதற்கு மேல் தாங்காது எனத் தெருவில் தண்ணீருக்குள் இறங்கிக் கடைகளைத் தேடுகிறோம். அந்தப் பகுதி முழுக்கக் கடைகள் மூடப்பட் டிருந்தன. உணவகங்கள் இயங்கவில்லை. ஏதாவது, வீட்டுக்கதவைத் தட்டி ஒரு வாய்ச் சோறு கேட்க முடிவெடுத்தோம். ஆனால், தயக்கம். தேடித் தேடி அலைகையில்... எங்கிருந்தோ உணவின் மணம் வருகிறது. அந்த மணம் வந்த திசையில் தண்ணீருக்குள் தத்தித்தத்திப் பாய்கிறோம். அது ஒரு கோயில் மண்டபம். உள்ளே அந்தக் குடிசைப் பகுதி மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

எல்லோருக்குமான உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அங்கே சென்று உணவு கேட்பதா வேண்டாமா என வாசலிலேயே கொட்டும் மழையில் இருவரும் ஏக்கமாக நிற்கிறோம்.

சொல் அல்ல செயல் - 4

உள்ளேயிருந்து ஒரு பெண் குரல், ``ஏய் ஏன் வாசல்லயே நிக்குற?'' என்றார்.  பதில் பேசாமல் நின்றோம். உள்ளே கூப்பிட்டு, இரண்டு தட்டுகளில் சாம்பார் சாதம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பசியோடிருக்கிற மனிதர்களைப் பசியோடிருந்த மனிதர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுகிறார்கள். உணவை வாங்கியதும், என் அறைத்தோழன் ஒரு கவளத்தை அள்ளி வாயில் போட... அது கொதிக்கக் கொதிக்க... அப்படியே அவசரமாக விழுங்கினான். ``...த்தா டேய்... ஸ்லோவாத் துன்றா... விக்கினு செத்துறப்போற...'' என்றார். அவர் கேட்கக் கேட்க, அறைத்தோழன் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான். அந்த அக்காவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். பிழைப்புக்காக அகதியான ஓர் இளைஞனுக்குக் கிடைத்த அரிய அன்பு. ``...த்தா மொதல்ல சாப்ட்டு முடி... அப்றம் அழுவலாம்'' என்று அந்த அக்கா அன்பாக அதட்டினார். அக்கா பயன்படுத்திய கெட்டவார்த்தை எதுவும் செய்யவில்லை. அது எங்களை அழச்செய்தது. ஒரே சொல்தான்; ஒரே பொருள்தான்; ஒரே விதமான உச்சரிப்புதான். ஆனால், அதைக் கருணையின் வெளிச்சமாக உணரச் செய்தது என்றால், கெட்டவார்த்தை என்பதன் பொருள்தான் என்ன?

சென்னை மட்டும்தான் கெட்டவார்த்தைகளைக் குத்தகை எடுத்த ஊர் எல்லாம் இல்லை. இதுபோன்ற இணைப்புச் சொற்கள் எல்லா ஊர்களிலும் உண்டு. எதைச் சொன்னாலும் கூடவே `தா...ளி'
என்பது தென் மாவட்டங்களில் சகஜமாகப் பயன்படுத்தப்படும் கெட்டவார்த்தை. ...த்தாவுக்கு இணையாகத் தா...ளியும் அதே உணர்வுகளைப் பந்திவைக்கக் கூடியதே.

வாட்ஸ்அப் சாமியார் ஆடியோவைக் கேட்காதவர் நம்மில் எத்தனை பேர்? பெண்கள்கூட அந்த ஆடியோவைக் கேட்டாலே, நிறைய சிரிக்கிறார்கள். முதன்முதலாக அந்த ஆடியோ புகழ்பெறத் தொடங்கிய நாள்களில் எனக்கு அதை அனுப்பியவர் ஒரு தோழிதான். ஆனால், அதே தோழி சமீபத்தில் ஒரு வீடியோவை அனுப்பி இருந்தார். அதில், கல்லூரிப் பெண்கள் சிலர் ஏராளமான கெட்டவார்த்தைகளைப் பேசுகிறார்கள். அதை அனுப்பிய தோழி, ``பாரு எப்படிலாம் இருக்குதுங்க புள்ளைங்க, இதெல்லாம் எங்க உருப்படப்போகுது. கண்றாவி'' என்றார். 

சொல் அல்ல செயல் - 4

ஒரு கெட்டவார்த்தை... ஆணால் சொல்லப்படும்போது அது நகைச்சுவையாகவும், அதே கெட்டவார்த்தை பெண்களால் பேசப்படும்போது ஆபாசமாகவும் எப்படி மாறுகிறது? கெட்டவார்த்தை  யாரால் எந்தச் சமயத்தில் எவ்விதம் உச்சரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் பயன்பாடும், அதற்கான அதிகாரமும், அதன் அவசியமும் முடிவாகிறது என்றால்... எது கெட்ட வார்த்தை?

இந்தியாவின் வெவ்வேறு மூலைகளில் இருந்து திரண்டுவந்திருந்த தொழிலாளர்கள் கூடி ஒரு சிமென்ட் தொழிற்சாலையைக் கட்டிக்கொண்டிருந்தோம். காலை உணவாக இரண்டு லிட்டர் பாலை மட்டுமே குடித்துவிட்டு டன் கணக்கில் கேபிள்களைச் சுமக்கிற பஞ்சாபிகளை அங்குதான் முதன்முதலாகச் சந்தித்தேன். எந்நேரமும் பீடி புகைத்தபடி ஆலோலம் பாடிக்கொண்டே வேலைபார்க்கிற சேட்டன்களும், எப்போதும் சினிமா பற்றியே உரையாடுகிற ஆந்திர தேசத்து அண்ணாக்களும் அங்கேதான் அறிமுகமாயினர். மனோஜ் கிஷன் அவர்களில் ஒருவர். போஜ்பூரி மொழி பேசுகிற பீகார்காரர். முதல் நாளே தோளில் கைபோட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியவர்.

சொல் அல்ல செயல் - 4

இந்திக்காரர்களிடமும் போஜ்பூரிகாரர்களிடமும் பேச ஆரம்பித்தால்... முதலில், ``தமிழ் தெரியுமா'' என்றுதான் கேட்பேன். ஒருமுறை அப்படிக் கேட்டபோது ஒருவர் என்னிடம் கோபப்பட்டார். அதற்கான காரணத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை. மனோஜிடம் சொன்னபோது சிரித்தார். ``தெரியுமானு நீ கேட்டதை அவர் `தேரி மா'னு புரிஞ்சிகிட்டாருடா... அது கெட்டவார்த்தை, அம்மாவைச் சொல்லித் திட்டுறது'' என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

``ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் அதில் இருக்கிற கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அந்த மொழியைப் பயன்படுத்துகிற மக்களை, அவர்களுடைய வாழ்க்கை முறையை, அவர்களிடையே எது மிக இழிவானது, எது மிக உயர்வானது, சாதிப்பாகுபாடு, மதவேறுபாடு, அதிகார ஏற்றத்தாழ்வுகள் என்னென்ன என்பதை எல்லாம் அறிய உதவும்'' என்பார் மனோஜ். அவர் தமிழில் என்னிடம் இருந்து கற்றுக்கொண்ட முதல் சொல்கூட ஒரு கெட்டவார்த்தைதான்.

சொல் அல்ல செயல் - 4

தமிழில், நாம் உச்சரிக்கிற 90 சதவிகிதக் கெட்டவார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளே. ஒரு தனிமனிதனின் தாயை, சகோதரியை, மனைவியை, மகளை இழிவாகப் பேசும் வகையில் உருவாக்கப்பட்டவை. ஆண்களுடைய அந்தரங்க உறுப்புகளைக் குறிக்கிற ஒன்றிரண்டு சொற்களைத் தவிர்த்து மற்ற எல்லாமே பெண்களையும் அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளையும் அவர்களுடைய நடத்தையையும் வசைபாடக் கூடியவையே. ஓர் ஆணைத் திட்டுவதாக இருந்தாலும் அவனுடைய தாயின் நடத்தையின் வழி திட்டுவதுதான் பழக்கம். அது, எவ்வளவு வலிக்கும், கோபம் கிளப்பும் என எல்லோருக்குமே தெரியும், இருந்தும் எப்படிச் சக மனிதன் மீது ஜஸ்ட் லைக் தட் அந்தச் சொல்லைப் பிரயோகிக்கிறோம்?

பெண்கள் மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் தொடர்ச்சியாக நம் கெட்ட வார்த்தைகளில் நிறைந்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி அடையாளங்கள் எல்லாமே கெட்டவார்த்தைகளாக ஆகி இருக்கின்றன. பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் எனக் கெட்டவார்த்தைகளில் தொடர்ச்சியாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். அடுத்து, சமூகத்தால் எதுவெல்லாம் அங்கீகரிக்கப் படவில்லையோ அதுவெல்லாம் கெட்ட வார்த்தைகளாக மாறுகின்றன. இன்றைய தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும் பின்னணியையும் புரிந்துகொள்ள நம் கெட்டவார்த்தைகளே போதும். 

ஆண்களைப் பற்றிய வசைகளைக் கவனித்தால் தெரியும். பெரும்பாலும் அவை, ஆண்மைக்குறைவை பற்றியதாகவே இருக்கும். அதுவும் பெரும்பாலும் அலி, பொட்டை மாதிரியான திருநங்கையரை இழிவாக்குகிற வகையில் அமைந்தவை. இச்சொற்கள் உருவாக்கும் சமூக அதிர்வை எதிர்கொள்வது அப்பாவி திருநங்கைகள் சமூகம்தான். வசைச்சொல்லின் வழியாக கீழ்மைப்படுத்தப் படுகிற யாரோ சில மனிதர்களைப்பற்றி நாம் ஏன் சிந்திப்பதே இல்லை? 

சொல் அல்ல செயல் - 4

சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படத்தில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி `முட்டாப் புன்னகை' என்கிற புதிய விளியைப் பயன்படுத்தி இருப்பார். அது அதற்கு இணையான வேறொரு வசையை நினைவூட்டும் வகையில் கோட்வேர்டுபோல உருவாக்கப்பட்டது.

ஜி.வி.பிரகாஷின் இன்னொரு திரைப்படத்தில் `டேவிட் புள்ளை' என அடிக்கடி திட்டுவார்கள். இதெல்லாம் என்ன? முட்டாள் குரங்கு, கேனப்புண்ணாக்கு என எவ்வளவு நேக்காகக் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறோம். ஏன் இத்தகைய குறுக்குவழிகளைக் கையாள்கிறோம்? 

சமூகம் எதையெல்லாம் விலக்கி நேர்மறையாக மாற்றிவைத்திருக்கிறதோ, அதற்கு எதிரான ஒன்றை, கெட்டவார்த்தைகள் உருவாக்குகின்றன. நம் கண்களுக்குப் புலப்படாத ஓர் எல்லைக் கோட்டை அந்த வார்த்தைகள் உருவாக்குகின்றன. இதையெல்லாம் கடப்பது ஆபத்தானது என்று வரையறுக்கின்றன. அதனாலேயே நாம் அவ்வப்போது கெட்டவார்த்தைகளை உச்சரிப்பதன் வழி, அந்த எல்லைக்கோடுகளை மீறிக்கொள்கிறோம். சிறுவர்களாக இருந்தபோது... அவற்றைச் சொல்லிப்பார்ப்பது சாகசமாக இருந்திருக்கிறது.

நம் உடலில் இருந்து வெளியேறுகிற கழிவுகளையும்கூடக் கெட்டவார்த்தைகளாக மாற்றிவைத்திருக்கிறோம். குசு, மூத்திரம், பீ என அவற்றை விலக்கிவைக்கிறோம். உலகிலேயே கழிவுகளையும் அதைச் சுத்தம் செய்கிறவர்களையும் கெட்டவார்த்தைகளாகப் பயன்படுத்துகிற ஒன்றிரண்டு இனங்களில் தமிழினமும் ஒன்று.

ஒரு பெண் வயதுக்கு வருவதையும், அவளுடைய மாதவிடாயும்கூட எவ்விதம் கெட்டவார்த்தைகளாக மாறின என்பது ஆய்வுக்குரியது. `தூமை' என்கிற கெட்டவார்த்தை எங்கள் மத்தியில் மிகப்பிரபலம். அது ஓர் இழிசொல் என்கிற அளவில்தான் பயன் படுத்திக்கொண்டிருந்தோம். ஆனால், பின்னாளில்தான் அது மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு வெளியேறுகிற ரத்தத்தைக் குறிக்கும் சொல் என்பது தெரியவந்தது. தன்னியல்பில் நடக்கிற ஓர் உடல் செயல் பாட்டையும்கூடக் கெட்டவார்த்தையாக ஏன் மாற்றினோம்? 

தமிழில் பல்வேறு விதமான வசைச்சொற்களை சகஜமாக்கியதில் நடிகர்களுக்குப் பெரிய பங்கு உண்டு. குழந்தைகள்கூட ``நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்'' என்கின்றனர். நாதாரி என்பது, மதுரைப் பகுதிகளில் பன்றிமேய்க்கும் வேலைகளில் ஈடுபடுகிற போயர் இனமக்களைக் குறிக்கிற சொல். கேப்மாரி என்கிற வசைச்சொல் செங்கல்பட்டு பகுதியில் வாழ்கிற குறிப்பிட்ட இன மக்களைக் குறிக்கும் சொல்.

சொல் அல்ல செயல் - 4

பிரிட்டிஷ் காலத்தில் சில குறிப்பிட்ட சாதியினரை அல்லது பகுதி மக்களை, தங்களை எதிர்ப்பவர்களை Known Depredators (KD) என்ற பெயரில் கட்டம்கட்டி வைத்திருப்பார்கள், அதிலிருந்து தோன்றியதுதான் ‘கேடி’. நாம் சகஜமாகப் பயன்படுத்துகிற ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும், ஒரு கதை இருக்கிறது. சகஜமாகப் பயன்படுத்தப் படுவதாலேயே அந்தச் சொற்கள் தன் வீரியத்தை இழந்துவிடுவதில்லை.

வாட்ஸ்அப் சாமியார் ஆடியோவை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது? காரணம் அது முழுக்கப் பெண்களை மட்டுமே ஆபாசமாகச் சித்தரிக்கிற, அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளைப் பற்றிப் பகடி பண்ணுகிற, பெண்களின் நடத்தை குறித்து விமர்சிக்கிற ஒன்றாக இருக்கிறது. சாமியார் ஆடியோவைக் கொண்டாடும் அதே சமூகத்தில்தான், இன்னமும் ஆண் - பெண் உடல் உறுப்புகள் பற்றிப் பள்ளிகளில் வகுப்பெடுக்கும்போது, ``இந்தப் பாடத்தை நீங்களே படிச்சிக்கோங்க'' என மர்மப் புன்னகையோடு ஸ்கிப் செய்து கொண்டிருக்கிறோம். வீட்டில் குழந்தை, தன் உடலில் இருக்கிற ஓர் உறுப்பின் பெயரை உச்சரிப்பதைக் கண்டிக்கிறோம். நம் அந்தரங்க உறுப்புகளின் பெயர்களையும் உச்சரிக்கவிடாமல் அல்லது அதை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பதையும் விளக்குவதுகூட இல்லை. அதனாலேயே அந்தச் சொற்களின் வழி பாலியல் குறித்த மர்ம உலகம் ஒன்றைக் குழந்தைகள் உருவாக்கிக்கொள்கின்றனர்.

பெருமாள் முருகன் எழுதிய,   `கெட்டவார்த்தை பேசுவோம்' நூல், முதல் பாகம் மட்டுமே வந்த முக்கியமான படைப்பு. தமிழ் இலக்கியத்தில் சகஜமாகப் புழங்கிய உடல் உறுப்பு தொடர்பான சொற்கள் எப்படி நம் தமிழறிஞர்களால் லாகவமாகச் சொல்லே மாற்றப்பட்டு, பொருளே மாற்றப்பட்டு ஊழல் நடந்தது என்பதை ஆதாரங்களோடு விளக்கி இருப்பார்.

சுவடிகள் எல்லாம் அச்சுக்கு மாறிய கால கட்டத்தில் தமிழ் இலக்கிய நூல்களில் இருந்த அல்குல் என்கிற சொல் வருகிற இடங்களில் எல்லாம் அவை நீக்கப்பட்டுள்ளன அல்லது அதற்குப் பதிலாக வேறு சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அல்குல் என்பது பெண்ணின் பாலியல் உறுப்பை குறிக்கிற சொல். தமிழ் இலக்கியங்களில் இத்தகைய சொற்கள் மட்டும் அல்ல, பாலியல் விஷயங்கள் வருகிற பகுதிகளையும்கூட நீக்கிவிட்டுத்தான் பதிப்பித்து இருக்கிறார்கள் நம் சமகாலப் புலவர் பெருந்தகைகள்.

நம் இலக்கியங்கள், பழந்தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் என எதை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தாலும், அவை கெட்டவார்த்தைகள் என்று இன்று நாம் புறந்தள்ளி வைத்திருக்கிற பல சொற்களின் குவியலாகவே இருப்பதைப் பார்க்கலாம். ``குளத்து மேல கோச்சுகிட்டு குண்டி கழுவ மறந்த கதையால்ல இருக்கு'' என சகஜமாக நம் பாட்டிகள் பேசுகிறார்கள். ஆனால், நாம் குண்டி என்கிற சொல்லைப் பயன்படுத்துவது நாகரிமற்ற ஒன்றாக, இழிவாகக் கருதுகிறோம்.

தன் உடல் உறுப்புகளைக்கூடச் சொல்லக்கூசி, அதை மறைத்துக்கொண்டு அதற்கு வேறு சொற்களைத் தேடி அலைகிறோம். குண்டி என்பது தமிழ்ச் சொல். ஆனால், அதைக் கேட்டதும் அருவருப்பு அடைகிறோம்; ஆபாசமாக நினைக்கிறோம். எனவே, அதற்கு இணையான பிருஷ்டம் என்கிற சமஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்துகிறோம் அல்லது பட்டக்ஸ் என்கிறோம். உண்மையில் குண்டி என்று சொல்லும்போது முகஞ்சுழிக்கிற நாம், ஏன் பட்டக்ஸ் என்று சொல்லும்போதும்; பிருஷ்டம் என்று சொல்லும்போதும் நாகரிகமாக ஏற்றுக்கொள்கிறோம். தமிழ்ச் சொற்களை விடவும் மற்ற மொழிச் சொற்கள் உயர்ந்தவையா அல்லது அவை வேறு பொருள் தருகின்றனவா? நமக்குத் தமிழ்க் கெட்ட வார்த்தைகளின் மீதுதான் எரிச்சல். அதுவே ஆங்கிலத்திலோ இந்தியிலோ பேசினால், அர்த்தம் தெரிந்தாலும் அதை நாம் கண்டுகொள்வதில்லை.

ஷிட்... பிட்ச்... பாஸ்டர்ட்... ஃபக்...இவை எல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்ள முடிகிறது; காரணம் எளிமையானது. ஆங்கிலம் உயர்ந்தது. அதன் சொற்கள் உயர்ந்தவை. அதைப் பேசுபவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற நம் அடிமை மனநிலை. தமிழில் கெட்டவார்த்தைகள் பேசுகிறவர்கள் தாழ்ந்தவர்கள், சேரிமக்கள், தலித்கள் என்கிற இழிமனநிலை. ஆனால், சேரிமக்களை விடவும் அதிக வன்மத்தோடும் பயன் பாட்டோடும் ஆத்திரத்தோடும் நாகரிகமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்து கிறவர்கள் உயரங்களில் வசிக்கிறவர்கள்தான் இல்லையா? சமூக ஊடகங்களில் போய்ப் பாருங்கள்... கெட்ட வார்த்தைகளின் கும்பமேளா தினம்தினம் நடக்கிறது.

சொல் அல்ல செயல் - 4

கெட்டவார்த்தைகள் பேசுவது என்பது ஒரு மனிதனின் ஒழுக்கம் தொடர்பானதா? இங்கே ஒழுக்கம் என்பது தரையில் வசிக்கிறவனுக்கு ஒரு லெவலிலும் பத்தாவது மாடியில் வசிக்கிறவனுக்கு வேறு லெவலிலும் அல்லவா இயங்குகிறது. அப்படி இருக்க கெட்டவார்த்தை பேசுவதை எப்படி ஒழுக்கத்துக்கான அளவுகோலாகக் கொள்வது. கெட்டவார்த்தை பேசுகிறவர்கள் தீயவர்கள். கெட்டவார்த்தைகளே பேசாதவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்கிற கருத்துதான் மிக மிக ஆபத்தானது.

ஒரு சொல், ஒரு மனிதனின் வாழ்நாளுக்கான தண்டனையாக மாறக்கூடும். அது, வாழ் நாளுக்கான விடுதலையை அளிக்கலாம்; அது, ஒரு மாபெரும் புரட்சிக்கான முதல் ஓசையாக ஒலிக்கலாம்; அது, நிரபராதியைக் குற்றவாளியாக மாற்றி அவனை வாழ்நாளெல்லாம் சிறைக்குள் அடைக்கலாம்; போராட்டக் காரர்களைச் சுட்டுத்தள்ளலாம்; ஒரு சாம்ராஜ்ஜியத்தில் மாபெரும் வீழ்ச்சிக்குப் பிறகான சிறிய ஆற்றுப் படுத்துதலாக இருக்கலாம்; நீண்ட தோல்விக்குப் பிறகான அங்கீகாரமாக இருக்கலாம். கருணையின் சிறுதுளியாகவோ, அதிகாரத் துப்பாக்கி ஒன்றை இயக்குகிற விசையாக எதுவாகவும் ஒரு சொல் இருக்கக்கூடும்.

சகமனிதனை நோகடிக்கிற, அவனை சரிநிகராக நடத்தாத எப்படிப்பட்ட நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தைதான்.

எந்தச் சொல் நம்மை காயப் படுத்துகிறதோ, எந்தச் சொல் நம்மை இழிவுக்குள்ளாக்குகிறதோ... எந்தச்சொல் நம்மை கோபப்படுத்துகிறதோ அந்தச்சொல்லை அடுத்தவர் மீது பிரயோகிக்கும் முன் நாம்  சற்றேனும் யோசிக்கிறோமா? தயங்குகிறோமா?

- கேள்வி கேட்கலாம்...