
கார்க்கிபவா
இது நடந்து சில ஆண்டுகள் இருக்கும். இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் அதுவும் ஒன்று. படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள். மைக் முன் பேச வந்த இயக்குநர் நிறைய சுவாரஸ்யத் தகவல்களைச் சொன்னார். கிட்டத்தட்ட அனைத்து மீடியாவும் அதை எழுதின. ஆனால், அடுத்த நாள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற கட்டுரையின் தலைப்பு “____ இயக்குநர் ஏன் மைக் முன்னால் மூக்கை நோண்டினார் தெரியுமா?”
கிசுகிசுபோல இதை எழுத வேண்டியிருப்பதன் பின்னால், ஒரு ‘மெட்டா’ காரணம் உண்டு. உங்களுக்கு மூக்கு நோண்டும் பழக்கும் இருந்தால், உலகம் அதை கிசுகிசுக்கத்தான்செய்யும். மீட்டிங்கில், நண்பர் களுடன் காபி குடிக்கையில், புதிதாய் ஒருவர் நமக்கு அறிமுகமாகும் சமயத்தில், மொட்டைமாடி சாட்டிங்கில் எனப் பல சமயங்களில் நம்மை அறியாமல் விரலும் மூக்கும் காதல் செய்யத் தொடங்கிவிடும். இந்தியாவின் பிரபலமான அந்த இயக்குநரில் ஆரம்பித்து, அலுவலகத்தில் பக்கத்து சீட் நண்பர் வரை ( சமயங்களில் நாமே) வரை உலகின் 91 சதவிகிதம் பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறதாம். மெஜாரிட்டி இருப்பதால், ஆட்சி அமைக்கவா அழைக்க முடியும்? திருத்த வேண்டிய பழக்கம் என்றால், 91% பேரும் திருத்திக்கொள்ளத்தான் வேண்டும்.

உலகம் முழுவதும் பல ஆய்வுகளை மூக்குக்குள் நடத்தியிருக்கிறார்கள். அதில் 60% பேர்தான் தங்களுக்கு இந்தப் பழக்கம் இருப்பதை ஏற்கிறார்கள். 40% பேர் மற்றவர்களுக்குத் தெரியாமல் நோண்டுவதாகச் சொல்கிறார்கள். 9% பேர் அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் ரகசியங்களை வாயில் போட்டு மூடி மறைப்பதாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் இந்த 9% என்பதுதான் மெஜாரிட்டியாக இருக்க முடியும் என நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் மருத்துவர்கள். இதைப் படித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய ‘ஹாய்’. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு இந்தப் பழக்கம் குறைவு. உளவியல் ரீதியாகவும் பெண்களுக்கு மூக்கில் முத்தெடுப்பது கெட்டப்பழக்கம் என்ற எண்ணமே அதிகம். ஆண்கள் இதில் “ஸோ வாட்?” கேட்டகிரி.
விரல்தான் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஆயுதம். ஆனால், அதைத் தவிர இன்னும் நிறைய ஐட்டங்கள் உண்டு. பென்சில், பேனா, பைக் சாவி, மடிக்கப்பட்ட விசிட்டிங் கார்டு என நீளும் பட்டியலை எழுதும்போதே பதறுகிறது. மூக்கை ஒரு பேனா ஸ்டாண்டு போலவே நினைக்கிறார்கள்.
இன்னும் சிலர், மூக்கில் இருக்கும் முடியைக்கூடப் பிடுங்குவது உண்டு. நோண்டுவது கெட்டப்பழக்கம் என்றால், இது மகா கெட்டப்பழக்கம். ஏனெனில், முடியைப் பிடுங்குவதால் ரத்தம் கசிந்து, உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மூக்கை கிராஸ் செய்துதான் மூளைக்குச் செல்லும் ரத்த நாளம் போகிறது. முடியைப் பிடுங்குகிறேன் என ரத்தக்காயத்தை ஏற்படுத்தி, அதில் இன்ஃபெக்ஷன் ஆனால், அது நேரிடையாக மூளையைப் பாதிக்கிறது. இது பயமுறுத்தல் இல்லை. உண்மையிலே இதனால் பாதிப்படைந்தவர்களின் கேஸ் ஹிஸ்டரியைக் காட்டுகிறது மருத்துவ உலகம்.
எப்படி நிறுத்துவது?
1. முதலில் இந்தப் பழக்கம் உங்களுக்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். அதுதான் இதை நிறுத்துவதற்கான முதல் படி. ஏனெனில், பெரும்பாலான சமயம் நோண்டிக்கொண்டிருக்கிறோம் என்பதையே நாம் உணர்வதில்லை. கண் இமைப்பதுபோல இதுவும் ஓர் அனிச்சை செயலே.
2. தினமும் காலையில் குளிக்கும்போது மூக்கைச் சுத்தம் செய்யுங்கள். இரண்டு நிமிடங்கள் அதிகமானாலும், நேரம் ஒதுக்கி ஆசை தீர மூக்குடன் சரசம் செய்யுங்கள். குளியலின்போதே சுத்தம் செய்வது சரியானது. நாள் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம். சுத்தமான மூக்கினை நோண்டுபவர்கள் குறைவு.
3. எது உங்களை இப்படிச் செய்யத் தூண்டுகிறது என்பதை யோசியுங்கள். சிலருக்கு அது பழக்கமாக இருக்கலாம். சிலருக்கு மூக்கில் உறுத்தல் இருக்கலாம். பழக்கம் என்றால் அடுத்த பாயின்ட்டுக்கு சென்று காத்திருங்கள். உறுத்தல், வலி போன்றவை இருந்தால் உடனே ENT ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குங்கள்.
4. 21 நாள் ப்ரேக் என்ற உத்தி உங்களுக்குத் தெரியுமா? எந்தப் பழக்கமாக இருந்தாலும், 21 நாள்கள் நிறுத்திவைக்க முடிந்தால், அது நிரந்தரமான ஒரு முடிவு தரும்.
உங்கள் வீடு, அலுவலக டெஸ்க் போன்ற இடங்களில் சிறிய பேப்பரில் உங்களுக்கு மட்டும் புரியும் வகையில் மூக்கை நோண்டாதே என எழுதி வைத்துக்கொள்ளுங்கள். முதல் பத்தியில் சொன்ன இயக்குநர் யார் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அவர் படத்தைக்கூட மாட்டிவைக்கலாம். 21 நாள்கள் மந்திரம் முக்கியம்.
இன்றே தொடங்குங்கள். ஏழாவது அத்தியாயத்தின்போது 21 நாள்கள் முடிந்திருக்கும். அப்போது பார்ப்போம்.
- பெர்சனல் பேசுவோம்