மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 35

male-female-relationship
பிரீமியம் ஸ்டோரி
News
male-female-relationship ( விகடன் டீம் )

#MakeNewBondsபூவுலகு சுந்தர்ராஜன், படங்கள்: அருண் டைட்டன்

ரு மார்கழி நாளில்தான் கோமு அப்பா எங்களை விட்டுச் சென்றார். மருத்துவமனையில் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு, அவர் இறந்தபோது அதை அவருக்கான விடுதலையாகத்தான் எடுத்துக்கொள்ளத் தோன்றியது. அதுவரை அப்பா கோமதிநாயகத்தின் நிழலைத் தாண்டி வெளியேறாதவர் என் அம்மா சுந்தரம்.

அப்பா காலமாகிச் சரியாக ஒரு வாரமிருக்கும். ஒரு நாள் அதிகாலையில் என்னை அழைத்து குடும்ப

ஆண்பால் பெண்பால் அன்பால் - 35

விவகாரங்களைச் சொல்லி நான் கவனித்துக்கொள்ள வேண்டிய விஷயங்களின் பட்டியலைத் தந்தாள். இதெல்லாம் இப்போது எதற்கு என்கிற என் கேள்வியைத் தண்ணீர் வேண்டும் என்று சம்பந்தமில்லாத ஒரு பதில் மூலம் புறந்தள்ளினாள். தண்ணீர் எடுத்து வந்து குடிக்கத் தரும்போது அம்மா உயிரை விட்டிருந்தாள். என்னுடன் பேசிக்கொண்டி ருக்கும்போதே அவளுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அந்த நேரத்திலான வலியைக்கூட அவள் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. எப்போதும், சுந்தரம்மாவுக்கு அது பழக்கமும் இல்லை. அப்பாவின் நிழல்தான் அவளின் உலகம். அதைத்தாண்டி அவள் எதையும் யோசித்ததில்லை.

அப்படிப்பட்டவளிடமிருந்து அப்பாவுக்கே தெரியாமல் அவரின் விருப்பத்தை மீறிய குரல் ஒன்று, ஒரே ஒரு முறை வெளிப்பட்டது. அப்போது நானும் தீபாவும் காதலித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல சாதி
ஒரு பிரச்னையாக இருந்தது. தீபாவின் வீட்டில் அவளின் தங்கைக்குத் திருமணம் நடந்தும் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, சுந்தரம்மா மிக ரகசியமாக என் கையைப் பிடித்துக்கொண்டுச் சொன்ன வார்த்தைகள் இவை: “ஒரு பெண் தன் தங்கைக்குத் திருமணம் நடந்தாலும் பரவாயில்லை என்று உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் கைவிடாதே.”

ஆண்பால் பெண்பால் அன்பால் - 35

அதுவரை என் வலிகளையும் குழப்பங் களையும் அந்த வார்த்தைகள் கலைத்துப் போட்டன. ஆனால், நிச்சயம் சுந்தரம்மா விடமிருந்து அந்த வார்த்தைகளை எதிர்பார்த் திருக்கவில்லை.

 முள்ளிக்குளத்து (நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள எனது சொந்த ஊர்) பெண்களிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் ஏராளம்.  சுந்தரம் அம்மாவிடமிருந்து அசாதரணமான மனவுறுதியைக் கற்றுக் கொண்டேன். என்னைத் தூக்கி வளர்த்த என் காந்தி அம்மாவிடமிருந்து அன்பின் மகத் துவத்தைக் கற்றுக்கொண்டேன்.
 
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும்போது என் வகுப்பில் நூற்றுச் சொச்சம் மாணவர்கள் கூடப் படித்தார்கள். அனேகம் பேரை காந்தியம்மாவுக்கு நேரடியாகத் தெரியும். நாங்கள் இருந்த சென்னை டி.வி.எஸ் காலனி  வீடு எல்லா நண்பர்களுக்கும் ஆலமரம்போல. எப்போது போனாலும் ஒருவாய் சோறு சாப்பிடாமல் விடமாட்டாள். ``அப்பாவுக்கு உடம்பு பரவாயில்லையா” போன்ற எனக்குத் தெரியாத உரையாடல்களும் அப்போது நடக்கும். காந்தியம்மாவிடமிருந்துதான் சக மனிதர் மீது அன்பு செலுத்துவதன் மகத்துவத்தை உணர்ந்தேன். இப்போதும் அவளின் வாஞ்சை யான கைகளைப் பற்றிக்கொண்டுதான் போராட்டக் களங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.

முள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் எளிய பெண்கள். ஆனால், அவர்களின் நிழலில்தான் நான் செதுக்கப்பட்டிருக்கிறேன். அவர்களிட மிருந்துதான் போராட்டக் குணத்தைக் கைகொண்டிருக்கிறேன்.
ஒரு முறை ஒரேயொரு முறை என் பேச்சை எங்கோ கேட்டு மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில், வீட்டுக்குச் சென்று அழுது அரற்றிக்கொண்டிருந்த என் தங்கை உமாவைப் போல எதிர்பார்ப்புகளற்ற அன்பை என் மீது யார் செலுத்த முடியும்?

ஒட்டுமொத்தமாகக் குடும்பமும் கிராமமும் என் சாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்தாலும், குடும்பமே பகையானாலும் பரவாயில்லை என்று நடத்திக்கொடுத்தவர்கள் பூவம்மாவும் தேவியக்காவும். குடும்பத்திலிருந்த அவர்களும் நட்பின் மூலமாகக் குடும்பமான நண்பன் சிவாவின் மனைவி சுஜாதாவும் அப்போது காட்டிய மன உறுதியை என்னால் நம்பவே முடியவில்லை.

ஒரு குடும்பமே கிராமமாகவும் கிராமமே குடும்பமாகவும் இருந்த சூழ்நிலையில்தான் நான் வளர்ந்தேன். கணவருக்கு இணையாக நடக்காமல் பின்னால் நடக்கும் பெண்களைக்கொண்டிருந்த கிராமம்தான் முள்ளிக்குளம். அந்தப் பெண்களிடம்தான் வளர்ந்தேன். அவர்களிடம் சில தனித்துவமான அம்சங்கள் இருந்தன.

என் ஆளுமை அவர்களாலேயே செழுமைப் படுத்தப்பட்டது. அமைதியான, அதிர்ந்து பேசாதவர்களாகவே வளைய வரும் அவர்கள், ஒரு பிரச்னை என்றால் காட்டும் பரிமாணங்கள் பிரமிக்க வைப்பவை. ``எங்கள் அமைதிக்குக் காரணம் அச்சம் இல்லை, அது குடும்பத்தில் குழப்பம் எதுவும் வந்துவிடக் கூடாது என்கிற நல்லெண்ணம்” என்பதை அவர்கள் பல முறை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

மிகுந்த நெருக்கடியான காலகட்டங்களில் பெண்களைப்போல நெஞ்சுரத்துடன் முடிவு எடுக்க கூடியவர்கள் யாருமில்லை என்பதற்கு, சுந்தரம்மா தொடங்கி பூவம்மா வரை பல உதாரணங்களை என்னால்  முள்ளிக்குளத்திலிருந்தே எடுக்க முடியும். அதைத் தாண்டியும். தங்கைக்குத் திருமணமானாலும் பரவாயில்லை என்று எனக்காகக் காத்துக்கொண்டிருந்த தீபா முள்ளிக்குளத்தைச் சேர்ந்தவள் இல்லை. ஆனால், முள்ளிக்குளத்துப் பெண்களுக்கான இயல்பு என்று நான் நினைத்துக்கொண்டிருந்த விஷயங்களைப் பொதுவாகவே பெண்களுக்கான இயல்பு என்று புரிய வைத்தவள்.

என் தவறுகளை சகித்துக்கொண்டும் திருத்தித் தந்தும் வாழ்க்கையை வாழத்தகுந்த ஒன்றாக மாற்றிக்கொண்டிருப்பவள் தீபா. திசை தெரியாமல் நான் திண்டாடும் நாள்களில் எனக்கான வழிகாட்டியாக அவள்தான் இருக்கிறாள். முள்ளிக்குளத்துக்கென்று உள்ள குணநலங்களில் எதுவும் தீபாவிடம் இல்லைதான். நகர்ப்புறத்தில் வளர்ந்த பொறியியல் பட்டதாரி அவள். ஆனால், முள்ளிக்குளத்துக்கேற்றார் போல் தன்னை வார்த்துக்கொண்டது என் மீது அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடு. அதே நேரம் தன் அடிப்படை இயல்புகளில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் இருப்பதாலேயே எனக்கு அவள் மீதான மரியாதை உண்டாகிறது.

ஒருபோதும் என்னைச் சுற்றியிருக்கும், என்னை இயக்கும் இந்தப் பெண்களுள் ஒருவரிடமும் நான் செய்யும் பணிகள் குறித்து எந்தப் புகாரும் இருந்ததில்லை. பெருமிதமே இருந்திருக்கிறது. வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாதபோது கண்ணீராக அந்தப் பெருமிதம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

சுந்தரம்மாவின் விரலணைப்பும் காந்தியம்மாவின் மடியும் இருந்திருக்காவிட்டால் நான் இப்போது என்னவாக இருப்பேன் என்கிற கேள்வி, எப்போதும் என்னிடமிருக்கிறது. நரைக்கூடி கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரையென மாய்ந்திருப்பேன். அவர்கள் இருவரும் மிகுந்த அமைதியானவர்கள். எளிமையானவர்கள். ஆனால், என்னுள் மிக முக்கியமான சில விழுமியங்களை விதைத்தவர்கள்.

ஒரு நெருக்கடி ஏற்பட்டால், பெண்களால் தங்களது ஆளுமையை அசாதாரணமாக வெளிப் படுத்த முடியும் என்பதை முள்ளிக்குளத்து பெண்கள்போலவே இடிந்தகரைப் பெண் களிடமும் நான் உணர்ந்திருக்கிறேன். இடிந்தகரைக்குப் போனால், மீன் வடை சுட்டு குழம்பு வைத்து கொடுக்கும் சாதாரணமான அன்புக்குரியவர்கள்தான் மில்ரெட் அக்காவும் சுந்தரி அக்காவும். அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் என்று வரும்போது அவர்களின் ஆளுமை வேறு மாதிரி இருக்கும். இது எனக்கான பிரச்னை இல்லை, என் சந்ததியினருக்கான பிரச்னை, தேசத்தின் பிரச்னை என்கிற சத்திய ஆவேசம் வெளிப்படும் அவர்களிடம்.

ஒரு முறை இடிந்தகரை பெண்கள் சில தலைவர்களைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்னை வந்திருந்தார்கள். போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம் அது. அவர்களுக்கு அதுவே முதல் சென்னைப் பயணம். தலைமைச் செயலகம் செல்லும் பாதையில் இருந்த நினைவகங்களைப் பிரமிப்போடு பார்த்தப்படி பயணித்துக்கொண்டிருந்தோம். மனுவெல்லாம் கொடுத்து முடித்த பிறகு, நேரமிருந்தால் கடற்கரைக்கும் நினைவகங்களுக்கும் போகலாம் என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் மகிழ்வார்கள் என்று நினைத்தேன். “ஊர் காசுல போராட்ட வேலைக்கு வந்திருக்கோமப்பா. இதெல்லாம் செய்யக்கூடாது” என்ற பதில் வந்தது அவர்களிடம். எவ்வளவோ சொல்லியும் மிகத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். “போராட்டம் முடியட்டும். சென்னைய பார்க்கன்னு ஒரு முறை வர்றோம். அப்போ போகலாம்” என்றார்கள். இன்னும் அந்தப் பயணம் வாய்க்கவில்லை.

வாழ்க்கையில் பெரும்பாலான பகுதியைக் குடும்பத்துக்காகவே கழித்துவிட்டு இப்போது போராட்டம், வெளியூர் பயணங்கள் என்று தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கும் சுந்தரி அக்காவிடம்,  ஒருமுறை அது பற்றிக் கேட்டேன்.

``இதுவும் அன்புக்காகதானேப்பா” என்று மிக இயல்பாக சொன்னார்.
 
சிறையில் பெற்ற அடிகள்கூட அவர் காட்டிய அந்த அன்பில் ஒரு துளியைக்கூட குறைக்கவில்லை. இடிந்தகரைப் பெண்கள் இல்லாமல் போயிருந்தால் அந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் கிடைக்காமல் போயிருக்கும் என்பதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என்னளவில் அந்த பெண்கள் வெளியே வந்து தலைமையேற்றதே மிகப்பெரிய வெற்றி. மிகப்பெரிய நம்பிக்கையின் வித்து. சுந்தரி அக்கா மில்ரெட் அக்காவின் போராட்ட மனவுறுதிக்குச் சற்றும் குறைவில்லாதது மீரா உதயகுமாரின் மன உறுதியும்.

தினம் தினம் போராட்டக்களங்களுக்கு செல்பவனல்ல நான். ஆனால், ஒரு போராட்டத்துக்குக்காகத் தன் கணவரை மூன்று வருட காலம் ஒரு கிராமத்துக்கு ஒரு பெண்ணால் அனுப்பமுடிகிறது என்றால், அதை அதிசயம் என்றே சொல்ல முடியும். மீரா அக்கா அப்படியொரு அதிசயம்தான்.

ஒருபுறம் மகத்தான ஒரு போராட்டத்தின் முன்னணியில் இருந்துகொண்டே இன்னொரு புறம், `பெண்-வாழ்க்கை-நவரசம்' என்று வாழ்பவன் நான், என்று உதயகுமாரால் தைரியமாக எழுதமுடிகிறது என்றால், அதற்கு முழுமுதற்காரணம் மீரா அக்காதான்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 35

என் வாழ்க்கையின் மகத்தான கணங்களில் ஒன்று, எனக்கு ஜப்பான் பயணத்தின்போது வாய்த்தது. ஃபுகுஷிமா விபத்துக்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு கிரீன் பீஸ் அமைப்பின் பேரில் ஜப்பான் சென்றிருந்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜப்பானின் நாடாளுமன்றத்துக்கு எதிரில் அணுசக்திக்கு எதிரான பெரிய ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஃபுகுஷிமா விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதை நடத்துகிறார்கள். நான் போனபோது நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓர் ஆர்ப்பாட்டக்காரர் ஏந்தியிருந்த பதாகையில் சுந்தரி அக்கா கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்.  கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இடிந்தகரை பற்றி சென்னையில் இருப்பவர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள். ஜப்பான் வரை இன்று அந்தப் பேர் தெரிந்திருப்பதற்கும், இந்திய அணுவுலை எதிர்ப்பு போராட்டத்தின் மையமாக இருப்பதற்கும் அந்த பெண்கள் இல்லாமல் வேறு யார் காரணமாக இருக்க முடியும்?

இடிந்தகரை சுந்தரி அக்காவைப்போலத்தான் ஃபுகுஷிமாவின் டாட்சுகோ ஒகாவராவும். அணு உலை விபத்து அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுவதற்கு முன்பு விவசாயியாக சாதாரணமான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், விபத்து அசாதாரணமானது. அந்த விபத்திலிருந்து அவர் மீண்ட பிறகு, இனி சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ முடியாது என்று அவருக்குத் தெரியும். காய்கறிகளின் மீது கதிர்வீச்சு அளவின் எண்ணிகையை ஒட்டி வைத்து விற்கும் நிலைமை சாதாரணமானதா என்ன?

அப்போதுதான் விபத்தின் பல பரிணாமங்களை தன் அனுபவங்களுடன் இணைத்து மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார் ஒகாவரா. ஒவ்வொரு மாதமும் பொம்மலாட்ட கதைபோல ஒன்றை நிகழ்த்தி ஃபுகுஷிமா விபத்தின் கோர முகத்தை மக்களுக்கு காட்டுகிறார். அந்த விபத்துக்குப் பிறகு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு டன் கணக்கில் தூக்கியெறியப்பட வேண்டிய காளான்களின் கதையையும் அதன் இழப்பு எளிய விவசாயிகளுக்கு ஏற்படுத்திய வலியையும் சொல்கிறார். அந்தக் கதையாடலை அவர் நிகழ்த்தும் ஒவ்வொரு முறையும் ஒகாவரா அழுகிறார். ``எத்தனை முறை ஒரே கதையை நிகழ்த்தினாலும் ஒவ்வொரு முறையும் அழுகிறேன்.. என் அழுகை நடந்ததைப் பற்றி அல்ல, நடக்க கூடியதைப் பற்றி. எனது கவலையெல்லாம் என் மக்கள் இந்த விபத்தை மறந்துவிட கூடாது என்பதுதான். மறந்துவிட்டால் அது மீண்டுமொரு முறை நிகழும். அது இன்னொரு சந்ததியை கடுமையாகப் பாதிக்கும், எனது நிலத்தையும் இந்த உலகத்தையும்.” என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒகாவராவுக்கு துயரம் தொண்டையில் சிக்கிக்கொள்வதை உணர முடிகிறது.

சில வருடங்களுக்கு முன்பு, தோழர் வ. கீதா பூவுலகு இதழுக்குத் தந்த ஒரு பேட்டிதான் அப்போது நினைவுக்கு வந்தது. தாய்மையின் கூறுகளை முன்வைத்து பெண்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைச் சுட்டிக்காட்டி தாய்மையைப் பற்றி பெண்கள் பேசும்போது அது மிக வலிமையான அரசியல் கூற்று என்று சொன்னார் கீதா. 1980-களில் இங்கிலாந்தில் நடந்த கிரீன்ஹாம் பெண்கள் அமைதி முகாம் இயக்கத்துக்கும் கூடங்குளம் பெண்கள் போராட்டத்துக்கும் இருந்த ஒற்றுமைகளை சுட்டிக்காட்டி கீதா சொன்னது:

இரண்டு போராட்டங்களும் சொல்லும் சேதி ஒன்றுதான்: வாழ்க்கைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம் என்பதுதான். இந்தப் போராட்டங்களின் முக்கியமான முழக்கம் இதுதான். ‘நீங்கள் மரணத்தின் பக்கம்; நாங்கள் வாழ்க்கையின் பக்கம்’.

ஒகாவராவிடமும் நான் இந்தக் குரலைத்தான் பார்த்தேன்.

மரங்களை வெட்டக்கூடாது என்பதற்காக அதைக் கட்டியணைத்து காப்பாற்றிய சிப்கோ இயக்கத்து பெண்களிடமும் இந்தக் குரல்தான் ஒலித்திருக்கும்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்திருக்கும் அந்த நிலக்கரி சுரங்கத் தொழிற்சாலை...

 மத்தியப் பிரதேசத்தின் மஹான் காடுகளில் அமையவிருந்த அந்த நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த பிரியா பிள்ளை முன்னெடுத்த போராட்டம் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரானது. மஹான் வனங்களின் வளத்தை அழிக்கக்கூடியது. நீண்ட நெடிய, மிகுந்த அவமானகரமான போராட்டத்துக்குப் பிறகு, திட்டத்தைக் கைவிட்டது அரசு. ஒரு கருத்தரங்கில் பிரியா பிள்ளையை முதன்முதலாக பார்த்த போது மிக சாதாரணமாக இருந்தார். முள்ளிக்குளத்து பெண்ணைப்போல... ஆனால், மஹான் பற்றி பேசத் தொடங்கிய போது அவரிடமிருந்து வெளிப்பட்ட அறச்சீற்றம் வலிமையானது. இரண்டு வருடங்களாக பிரியா பிள்ளையுடன் இணைந்து அணுஉலை எதிர்ப்புப் பணிகள் சிலவற்றை முன்னெடுத்து கொண்டிருக்கிறேன். இரண்டு வருடங்களில் அவரைப் பார்த்து ஆச்சரியப்படாத நாள்கள் குறைவு. அத்தனை தெளிவு, அத்தனை உறுதி.

ஒரு பெண் முன்னெடுக்கும் போராட்டம் எப்படி வலிமையான ஒன்றாக மாறுகிறது என்பதை அவரிடமிருந்தே தெரிந்து கொண்டிருக்கிறேன். ஒரு போராட்டத்தை அவர்கள் முழுமையாகத் தங்களுடையதாக மாற்றிக்கொள்கிறார்கள். சிப்கோ பெண்களைப் போல அதை அணைத்துக்கொள்கிறார்கள். கூடங்குளம் பெண்களைப்போல தத்தெடுத்துக் கொள்கிறார்கள். க்ரீன்ஹாம் முகாம் பெண்களைப்போல அதைத் தங்களது எதிர்கால வாழ்க்கைக்கான பாதையாக பார்க்கிறார்கள்.

அந்த இயல்பே அனிதா குஷ்காவை போராட்டத்தின் எதிரி என்கிற நிலையிலிருந்து போராட்டத்தின் அதி தீவிர ஆதரவாளர் என்ற நிலைக்கு உந்தித் தள்ளுகிறது.

மஹான் காடுகளை காக்க நடந்த போராட்டத்தில் இன்னொரு முக்கியமான குரல் அனிதா குஷ்வகாவினுடையது. போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் விழாவில்தான் அவரைச் சந்தித்தேன். ஆனால் போராட்டத்தின் தொடக்கத்தில் அவரின் அப்பா கலந்து கொண்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தவர் அனிதா. பிறகு, போராட்டத்தில் தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டு மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் இணைவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார். அவர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் மத்திய அரசு மகான் காடுகளை `நிலக்கரி ஏலத்தில்' இருந்து வெளியெடுத்தது.

பெண்கள், பலரும் சொல்வதுபோல விடுவிக்க வேண்டிய புதிர் எல்லாம் இல்லை என்பதை, இவர்கள் எல்லோரிடமிருந்துமே கற்றுக் கொண்டிருக்கிறேன். சமூகம் பல அழுத்தங்களை அவர்கள் மீது திணிக்கும்போது அந்த அழுத்தங்களைத் தங்களது ஆளுமைகளை வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளாக மாற்றும் வல்லமை கொண்டவர்கள் அவர்கள். அந்த வலிமையும் உறுதியும் நிச்சயம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அதுவும் மரபான குடும்பங்களிலிருந்து வரும் ஆண்களுக்கு இந்த அதிர்ச்சி அதிகம் இருக்கும். அம்மாவிடமிருந்து மிக அரிதான ஒரு தருணத்தில் வெளிப்படும் ஆளுமையைக் கொண்டாடும் எத்தனை பேர் மனைவியிடமிருந்து அது வெளிப்பட்டால் சகித்துக்கொள்கிறோம் என்கிற கேள்வியை நான் எப்போதும் எதிர்கொள்கிறேன்.

பூவுலகின் நண்பர்களிலும் பிற சமூக வெளிகளிலும் உடன் வேலை செய்யும் பெண்கள்தான் இந்தக் கேள்விகளை தூண்டுகிறார்கள். அதற்கான பதில்களை தேடும் போது என் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அவற்றை திருத்திக்கொள்ளும் வெளிகளை ஏற்படுத்தித் தருகிறார்கள். அந்த வெளிகளில் பயணிக்கும்போது, எங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்காக காத்திருக்கும் உலகம் பற்றிய என் எதிர்பார்ப்பு  மிகுந்த ஆரோக்யமாகவும் ஆசுவாசமளிப்பதாகவும் இருக்கிறது. சமூகப் பொறுப்புள்ள ஓர் அப்பாவாக எனக்கு வேறு என்ன வேண்டும்?

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளிலும் அதிசயங்களிலும் நாம் இன்னும் தெளிவாகக் கவனம் செலுத்தும்போது, அழிவின் மீது நமக்கிருக்கும் ரசனைக் குறையும்

 - ரேச்சல் கார்சன்,

மௌன வசந்தம் நூலின் ஆசிரியர்.

சூழலைக் கெடுக்கும் தலைமுறை வேறு, அதற்கான விலையைத் தரும் தலைமுறை வேறு. பிரச்னை அதுதான்.

- வாங்காரி மாத்தாய்,

நோபல் பரிசு பெற்ற சூழலியல் செயற்பாட்டாளர்.

``பருவநிலை மாற்றம் என்பது பெண்களின் பிரச்னை. காரணம், இன்றைய உலக பொருளாதார சூழல் பெண்களுக்கு எதிரான ஒன்றாக இருக்கிறது. வளரும் நாடுகளைச் சேர்ந்த மற்றும்  ஒரு தேசத்தின் பூர்வகுடி பெண்களுக்கு இயற்கையின் மீது நேரடியான சார்பு இருக்கிறது. அதனால் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் உலகில் உள்ள எல்லா பெண்கள் மீதும் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதற்கு பெரும்பாலும் பெண்களுக்கென்று வகுக்கப்பட்ட பணிகள் காரணம். குடும்பங்களுக்கு உணவு, நீர் போன்ற தேவைகளை பெண்களே பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது” – ஆஸ்பிரே ஓரியல் லேக், நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர்,  Women’s Earth and Climate Action Network (WECAN)