
மருத்துவர் கு.சிவராமன்
கருத்தரிப்புக்காக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் முக்கால்வாசி தம்பதியருக்கு அனைத்துமே எண்களைச் சுற்றிய உலகம்! `டி5-ல் (மாதவிடாய் தொடங்கியதிலிருந்து ஐந்தாம் நாள்) ஹார்மோன் அளவு தெரியணும். டி6-ல், உயிரணுவை எண்ணிப் பார்க்கணும். டி8-ல், சினைப்பைக் குழல் சரியா இருக்குதானு சினைமுட்டை வரும் பாதையை ரேடியோ ஆக்டிவ் திரவம் செலுத்தி வலியோடு சோதிக்கணும். டி14-ல் உடலுறவுகொள்ள வேண்டும்...' என எல்லாமே எண்கள். எண்களைப் பார்த்துப் பார்த்து செய்யும் காதல் மட்டுமேதான் கருத்தரிக்கும் என்ற அறிவியல்/வணிகக் கணக்கில், கண்கள் சொல்லும் காதல் கணக்கு, காணாமல் போய்விட்டது.

45 வயதில்கூட நகர நெரிசலில் நசுங்கிப்போய் வீட்டுக்கு வரும்போதும், ஜன்னலோரத்தில் தனிமையில் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, தூரத்தில் தாயோடு விளையாடும் குழந்தைகளைத் தவிப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியின் முகத்தைத் திருப்பி, அவள் விழியோரக் கண்ணீரை விலக்கி, கண் பார்த்து கண்ணால் எழுதும் மௌனக் கவிதையின் சிலாகிப்பில், அது தரும் சிலிர்ப்பில் மிச்சம் மீதி இருக்கும் முட்டையும் உயிரணுவும் ஓடிவந்து கட்டிக்கொள்ளும். கண்கள் சொல்லும் பரவசத்தின் அறிவியல், எண்கள் சொல்லும் அறிவியலைவிட ஆழமானது.
``ஹேய்... இந்தப் பூ அமேஸான் காட்டில் மட்டுமே பூக்கும். போன வாரம், அங்க பூத்துச்சாம்; கஷ்டப்பட்டு வரவெச்சேன். இந்தா...’’ என அவள் கண்பார்த்துச் சொன்ன பரவசமூட்டிய பொய், கல்யாணத்துக்குப் பின்னர், கணிசமாகக் காணோம். மாறாக, ``இன்னிக்கு உனக்கு பர்த்டே இல்லை... அமேஸான்ல ஆர்டர் பண்ணணும்னு நெனைச்சிட்டிருந்தேன்... ஸாரிப்பா. கிளையன்ட் மீட்டிங்ல மறந்துட்டேன்...’’ எனும் நிதர்சனமான உண்மை எக்கச்சக்கமாகக் கூடிக்கொண்டே செல்கிறது. புனைவான அமேஸான் பூக்களில் இருந்த கவித்துவமான காதலும் கற்பனையும் மட்டுமே காமத்தின் ஊற்றுக்கண் என்பது
மாறி, நிதர்சனமான வெற்று எண்களில் மட்டுமே விதவிதமாக எண்ணப்படுவதுதான் இன்றைக்குப் பெருகும் கருத்தரிப்பு மையங்களின் அடிக்கல்.
கவித்துவப் பார்வையும், அதை ஒட்டிப் பொங்கும் காமமும் கணிசமாகக் காணாமல் போவதில் எக்குத்தப்பாகப் பெருகும் இன்னொரு விஷயமும் ஒரு முக்கியக் காரணம். ``என்னால் முடியாது; எனக்குக் குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பில்லை. என் தவறான பழக்கங்கள் என்னை முற்றிலும் ஆண்மையற்றவனாக மாற்றிவிட்டன. அதற்கான தகுதியை இழந்துவிட்டேன்’’ எனக் கூனிக்குறுகி, கைகள் வியர்த்து, படபடப்புடன் சொல்லும் ஆண்கள் இன்று அதிகம். ``அப்படி எந்தக் குறையும் உனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. உன் அத்தனை மருத்துவ சோதனை முடிவுகளும் மிகச் சரியாகவே உள்ளன. எதற்கு இந்தப் பதற்றம்?’’ என்று சொன்னப் பின்னரும் எந்தவிதச் சமாதானமும் அடையாமல் மீண்டும், ``என்னால் ஒரு நிறைவான தாம்பத்திய உறவைத் தர இயலாது. நான் அந்த விஷயத்தில் சற்று ஊனமானவன். என்னுடைய தீயப் பழக்கம் அதற்கான காரணம்’’ எனத் தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில், உள்ளங்கை வியர்க்கச் சொல்லும் அந்த ஆண்மகனின் தவறான புரிதலுக்குப் பின்னால், இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற பாலியல் குறித்த முற்றிலும் தவறான செய்திகள் மிக முக்கியக் காரணம். வெளிப்படையாகப் பாலியல் குறித்துப் பேச முன்வராத நம் சமூகத்தில், சிக்கும் ஆண்மகனைப் புரட்டி எடுத்து, அடித்து, தின்றுத் துப்பும் அறமற்ற வணிகக் கும்பல், மருத்துவர் வேடம் தரித்து, ``நீ திருமணத்துக்கு லாயக்கற்றவன், இளம் வயதில் உன் சுய இன்பப் பழக்கத்தில் உன் ஆணுறுப்பு சிறுத்துவிட்டது; தளர்ந்து விட்டது. ஒரு பெண்ணையும் உன்னால் திருப்தியடையச் செய்ய முடியாது; குழந்தையும் பெற்றெடுக்க முடியாது’’ என்ற தீய விஷத்தைத் தொடர்ந்து அடிமனதில் புகுத்திவருகிறது.
இது ஆரம்பித்தது, இன்றைக்கு இப்போது நள்ளிரவில் நாம் தொலைக்காட்சி ஊடகங்களில் அடித்தொண்டையில் ஐஸ்க்ரீம் தடவிப் பேசும் விளம்பரங்களில் மட்டுமல்ல... பிரபல இதழ்களில், பொடி எழுத்துகளில் பொய்களைப் பொறுக்கிப் போட்டு வரும் விளம்பரங்களில் மட்டுமல்ல... ரொம்ப நாளாக நடக்கும் பித்தலாட்டம்.
1400-களில் இந்தியாவில் முதன்முதலில் இந்திய மருத்துவ முறைகளைப் பற்றி, மூலிகைகளைப் பற்றி ஆவணப்படுத்திய கார்சியா டி ஆர்த்தா (Garcia de Orta) எனும் போர்ச்சுக்கீசிய பாதிரியார் தென் இந்திய மருத்துவ முறைகளைப் பற்றி ஆவணப்படுத்துகையில், `சென்னை மாகாணத்தில் பிரபுக்களும் பெரும் செல்வந்தர் களும் மூலிகைகளைக்கொண்டு அவர்களின் ஆண்மைக்குறைவுக்கு வைத்தியம் செய்து கொள்கின்றனர்’ எனப் பதிவிடுகிறார். இந்தச் செய்தியைப் பார்த்தால், இதே வேலையில் காலகாலமாக ஒரு பெரும் அறமற்ற கூட்டம், ஆணுக்கு பாலியல் குறித்தத் தவறானப் புரிதலை உண்டாக்கி, அடிமனதில் அழுத்தம் வரவழைத்து, காசு பண்ணிக்கொண்டிருந்தது என்பது புரிகிறது.
இந்தப் போலிகள் கொடுக்கும் மனஅழுத்தத்தின் தொடக்கப் புள்ளி, போர்னோ (நீலப்படங்கள்) பக்கங்கள் கொடுப்பது. அறியாத வயது கொடுக்கும் ஈர்ப்பிலும் கட்டுக்கடங்காத ஆர்வத்திலும், அம்மாவின் செல்போனை வாங்கி, நேற்று வரை `கேண்டி கிரஷ்' விளையாடியவன், இன்று பாத்ரூமுக்குள் போனைத் தூக்கிச் சென்று பெரும்பாலும் நோண்டுவது போர்னோ பக்கங்களை. தான் பார்த்த விஷயங்களைப் பரவசத்தோடு நட்பு வட்டாரத்தில் பகிர்வதில் அவனுக்கு ஏற்படும் முதலும் முற்றிலுமான தவறான கற்பிதம், `ஆண்மை என்பது உறுப்பின் நீள அகலமே' என்பதுதான். போர்னோவில் பார்த்தவற்றை நேரடியாக ஒப்புநோக்கி, `என் அளவு அப்படி இல்லையே; இது பெரும் குறைபாடு. இதைச் சரிசெய்யாவிட்டால், காலம் முழுக்க அவமானத்தில் கூனிக் குறுகி வாழ வேண்டியதுதான்’ என்ற முற்றிலும் பிழையான முடிவுக்கு அவன் வருகிறான். `நீட்' எழுத பயந்து நிற்கும் ப்ளஸ் டூ பையன்களும் சரி, ஏற்கெனவே பி.டெக்., பி.இ., படித்துவிட்டு, `கேட்’ எழுத வியர்த்து நிற்கும் அறிவு ஜீவியும் சரி, இந்த விஷயத்தில் படு மக்காக நிற்பது இன்றும் அவர்களுக்குத் தெளிவாக நடத்தாத பாலியல் பாடத்தால்தான்.
`ஒரு பெண்ணுக்கு பாலுறவின்போது சரியான மகிழ்வையும் தூண்டுதலையும் தரக்கூடிய வாயில்பகுதி வெறும் இரண்டு இன்ச் அளவுதான். உடல் சேர்க்கையில், இந்தப் பகுதி தூண்டப்பட்டாலே ஒரு நிறைவான கலவி இன்பத்தை இருபாலரும் அனுபவிக்க இயலும். குழந்தைப்பேற்றுக்கோ அந்த வாயில் பகுதியில் செலுத்தப்படும் உயிரணுக்கள், முழுத் திறனுடன் மேல்நோக்கிச் சென்று கருத்தரிப்பை நிகழ்த்த இயலும். ஆணுறுப்பின் அளவு என்பது மங்கோலியர், ஆசிய மரபினர், ஆப்பிரிக்க மரபினர், ஐரோப்பியர் என்ற மரபின்படியம், அவரவர் உயரம் எடைக்கு ஏற்றபடியும் மாறுபட்டிருக்கும். தடகளத்தில் பறக்கும் உசேன் போல்ட்டின் நீண்ட தொடை எலும்புக்கும், நீச்சல்குளத்தில் மோட்டார் படகுபோல் விரையும் பில்ப்ஸின் (Phelps) நீண்ட கைகளுக்கும், எப்படி ஒரு நீண்ட மரபுப் பின்னணி உள்ளதோ, அதேபோல்தான் `எல்லா நீட்சி'க்கும்... என அறிவியல் தெளிவாக மீண்டும் மீண்டும் இந்தக் கருத்தின் தவறை பல்வேறுவிதமாக வலியுறுத்திச் சொல்கிறது.
வயதோடு மெள்ள மெள்ள வளரும் தவறான பாலியல் புரிதலில், `என்னால் முடியாது’ என வளரும் தாழ்வு மனப்பான்மை, ஒருகட்டத்தில் முற்றிலுமாக அவனை உளவியல் நோயாளியாக்கி, இந்த உளவியல் நோயிலேயே ஆண்மைக் குறைவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறும் அவலத்துக்குச் செல்கிறான். அவனுள் 15, 16 வயதில் தொடங்கும் இந்த மாற்றம், 26 முதல் 27 வயதில் அவனை முழு உளவியல் நோயாளியாக மாற்றுகிறது. நூற்றுக்கு 75 சதவிகிதம் உளவியல்ரீதியான சிக்கல்கள்தான் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது. ஹார்மோன்கள் குறைவு, ஒருசில உளவியல் நோய்க்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்துக்கு எனக் கொடுக்கப்படும் மருந்துகள் தற்காலிகமாக ஆண்மைக்குறைவை ஏற்படுத்தக்கூடும். அதைச் சீர்செய்ய, சரியான மருத்துவத்தால் நூறு சதவிகிதம் முடியும். விளம்பரம் வைத்து நடக்கும் உணவுச் சந்தையையே உற்றுப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உயிரணுச் சந்தையில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?! குடும்பத்திலும் குடும்ப மருத்துவரிடமும் பெறும் ஆலோசனை தராத உயரத்தை, எந்த விளம்பரமும் தராது.

உறுப்பின் நீள, அகலம் குறித்த தப்பான புரிதலுக்கு அடுத்து மிகத் தவறாக பெரும்பாலான ஆண்கள் புரிந்துகொண்டு, தாழ்வு மனப் பான்மையில் புதையும் மற்றொரு விஷயம், சுய இன்பம் குறித்தது. `சே... இதைப் பத்தி எல்லாம் ஒரு குடும்ப நாளிதழில் எழுதணுமா?' என்கிற சிந்தனைதான் தாறுமாறாகப் பெருகும் தாழ்வு மனப்பான்மைக்கு மிக முக்கியமான காரணம். இலைமறைவு காய்மறைவாக பேசியது போதும்; குடும்பத்தில், கல்விக்கூடத்தில், சற்று வெளிப்படைத்தன்மையுடன், அறிவியல் உண்மையுடன் இதைப் பகிரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாலியல் அறிவியல் சொல்கிறது... `நூற்றுக்கு 95 சதவிகித ஆண்கள் பருவமடைந்தப் பின்னர், சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள்; 5 சதவிகிதம் பேர் பொய் சொல்கிறார்கள்.' இது ஈர்ப்பில் நிகழ்கிற, இயற்கையின் தூண்டுதலே ஒழிய இழிசெயலல்ல. `பணி குறித்தோ வேலை குறித்தோ ஈடுபாடு வராதபடி, என்றென்றும் இந்தத் தூண்டுதலில் முழுமையாக இருக்கிறேன்' என்போருக்கு உளவியல் ஆலோசனையும், சில வாழ்வியல் மாற்றங்களும் அவசியமே ஒழிய, மருந்துகள் எதுவும் எப்போதும் தேவையில்லை என்றே மருத்துவக் கணிப்பு கூறுகிறது,
பின்னாளில், ஆணின் கருத்தரிப்புக்கான தாமதத்துக்கு ஆண்மைக்குறைவு, உயிரணுக் குறைவைத் தாண்டி இன்னும் சில காரணங்கள் இளமையில் ஏற்படுவதுண்டு. அதில் மிக முக்கியமானது, அம்மை நோயில், பொன்னுக்கு வீங்கி நோயில் அந்த வைரஸ்கள் விதைப்பையைத் தாக்கி அழிப்பது. `அம்மையா? மருத்துவமே வேண்டாம்; சாமிக்குத்தம்’ என்போருக்கும், `அம்மைக்கு தடுப்பூசி மருந்தா? வேண்டவே வேண்டாம்; அது வணிகப் பித்தலாட்டம்`, என்போருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. நோய்க்கான காரணியை, அதன் அறிவியலை முற்றிலும் மறந்து, மறுத்து, அறத்தைத் தொலைக்கும் அறிவியலை எதிர்க்கவேண்டிய கூட்டம், கூச்சலாக `அறிவியலே வேண்டாம்’ என எதிர்ப்பதில், விதைப்பையின் செர்டோலி செல்கள் சிதைக்கப்படும் வாய்ப்பு உண்டு. அம்மைக்கான தடுப்பும், ஒருவேளை வைரஸின் தீவிரத்தில் விதைப்பையில் வலியுடன் வீக்கமும் இருந்தால், உடனடி மருத்துவமும் மிக மிக அவசியம்.

சறுக்கு மரத்தில் சறுக்கி விளையாடும் குழந்தையின் ஆர்வம், மாடிப்படியின் கைப்பிடியில் சறுக்கி வருவதிலும் தொடரும். அப்படிச் சறுக்கும்போது ஏற்படும் வழுக்கலில், ஆணின் விதைப்பையில் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. Torsion tes tes’ எனும் நிலையில், எசகு பிசகாக விந்துக்குழல் திருகி, விதையை உடனடியாக அகற்றவேண்டிய சூழல் வரலாம். இப்படித் திருகலிலோ, வேறு காரணத்தாலோ ஒரு testes அகற்றப்படுவதில் `அய்யய்யோ ஒரு விதை இல்லையா... அப்புறம்?' எனப் பயப்பட வேண்டியதில்லை. முழு வேலையை அடுத்த விதை எடுத்துச்செய்யும் அபாரசக்தியை இயற்கை அளித்திருக்கிறது. பெண்ணின் சினைப்பையிலும் இதேதான். ஆண் குழந்தை பிறந்து அவனைக் குளிப்பாட்டுகையில், டயாப்பர் போடுகையில், தாயோ தந்தையோ குழந்தையின் விதைப்பைக்குள் விதை இருக்கிறதா எனத் தடவிப் பார்க்க வேண்டும். சில நேரத்தில் பிறப்பின்போது வயிற்றினுள் அந்த உறுப்பு விதைப்பைக்குள் இறங்காமல் போயிருக்கக்கூடும். ஒரு வயதுக்குள் அதனைக் கண்டறிந்து, அறுவைசிகிச்சையில் சரிசெய்வதால் மட்டுமே விதையைக் காப்பாற்ற முடியும். தவறவிட்டாலும், அது பின்னாளில் பல தொல்லைகளைத் தரக்கூடும்.

`எல்லாம் சரியாக இருந்தும், ஏனோ நிகழவில்லை' என்போர்தான் இன்றைக்கு அதிகம். அவர்களில், `அது குத்தம்... இது குத்தம்' என ஆய்வில் தென்படும் நுண்ணிய விஷயங்களுக்குள் உடனடியாக நொறுங்கிப் போகாமல் இருக்க, ஒவ்வொருவரும் உலகினைப் புரிந்துகொள்வதற்கு எடுக்கும் முனைப்புபோல், உடலினை விசாலமாக அறிதலுக்கும் அவசியம் முனைப்பு எடுக்க வேண்டும். அரை மண்டையாக சலூனில் இருந்து வரும் பையனைக் கொலைவெறியுடன், ``ஏன்டா இப்படி?’’ என விவாதிக்கையில், ``விராட் கோஹ்லி வெட்டியிருப்பதுபோல, இது `மொஹாக் ஸ்டைல்’ உங்களுக்கு என்ன தெரியும்?’` எனும் விடலைப் பையனிடம், உங்களுக்குத் தெரிந்த பாலியல் விளக்கங்களையும் வெளிப்படையாகப் பகிர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கருத்தரிப்பைக் கணக்கிடும் எண்களைக் காட்டிலும், காதலைக் கசியவிடும் கண்கள் அவசியம் என்பதையும் உணர்த்திட வேண்டும்.
- பிறப்போம்...