
அதிஷா, ஓவியம்: பிரேம் டாவின்ஸி
``நீ கடைசியா எப்போ ஃப்ரீயா இருந்த?'' ஒரு நண்பர் சமீபத்தில் இப்படிக் கேட்டார். ஃப்ரீயா இருப்பது என்பது டி.வி. பார்க்காமல், மொபைல் பார்க்காமல், பைக் ஓட்டாமல், பேசிக்கொண்டி ருக்காமல், எதுவுமே செய்யாமல் வெட்டியாக இருப்பது. நிறைய யோசித்துவிட்டு, ``2015-ல் சென்னையில் மழைபெய்து ஊரே மின்சாரம் இல்லாமல் கிடந்ததே அப்போதுதான்...'' என்றேன். கிட்டத்தட்ட சும்மா இருந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
ராஜராஜன் சார். அதிகாலை செய்திகளோடு விவாதிக்கக் காத்திருக்கும் அன்பான தாத்தா. ``என்னமோ சொன்னியே வைகோ பேக் அடிப்பார்னு சொன்னேன்ல... அடிச்சாரா'' என்று சண்டைக்குக் கூப்பிடுவார்.
அவரும் நானும் எலெக்ட்ரிக் ரயிலில் அரக்கோணம் சென்றுகொண்டிருந்தோம். அவர் எப்போதும் அடம்பிடித்து ஜன்னலோர சீட்டில் அமர்ந்துகொள்வார். அன்றும் அப்படித்தான். தன் வாழ்நாளில் பெரும்பகுதி ரயிலிலேயே கழிந்ததாகச் சொல்லிக்கொண்டு வந்தார்.

``எனக்கு அப்போ 19 வயசு. அப்பா திடீர்னு தவறிட்டார். சொத்து, பத்துன்னு பார்த்தா ஒரே ஒரு வீடுதான், அதுவும் அப்பாவோடது இல்ல, தாத்தாவோடது. நான்தான் வேலைக்குப் போகணும். கல்யாணத்துக்கு ரெடியா 16 வயசுல தங்கை இருந்தா... செங்கல்பட்டு பக்கத்துல அப்பாவோட ஃப்ரெண்டு கடைல வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. ஹார்டுவேர்ஸ் கடை. பத்துக்குப் பத்து சைஸ்ல ரூம் சின்னதா இருக்கும். நான்தான் ஒத்தை ஆளா மொத்தகடையையும் பாத்துப்பேன். வரவுசெலவுக் கணக்கு, ஸ்டாக் எடுக்கறது, பேக்கிங் பண்றது, கஸ்டமர் பாக்கறதுனு... ஆல்ரவுண்டரா இருப்பேன். இப்போ பத்து பிராஞ்ச் இருக்கு அந்தக் கடைக்கு... 150 பேர் வேலை செய்றாங்க...'' என்றவர், மௌனமானார்.
``காலைல அஞ்சு மணிக்கே எழுந்துடுவேன். ஓட்டமா ஓடுவேன் ஆறு மணிக்குப் போய் ட்ரெயினப் புடிச்சாத்தான் எட்டு எட்டரைக்கு கடைல இருக்க முடியும். காலை சாப்பாடு ட்ரெயின்லதான். நான்தான் ஒன்பது மணிக்கெல்லாம் கடையத் தொறக்கணும்...'' என்று சொல்லச் சொல்ல மூச்சு வாங்கினார். ஆஸ்துமா பிரச்னை. நிதானித்து தொடர்ந்தார்.
``கடைய தொறந்தா நைட் ஏழு மணி வரைக்கும் ஓடும்... எப்பப்பாரு கூட்டம்தான். இங்க அங்க திரும்ப முடியாது. மதிய நேரம் சோத்தை அள்ளி அள்ளி வாய்ல நிறைச்சிட்டு ஓடுவோம். மொதலாளி தங்கமான மனுஷன். அன்பா பாத்துப்பாரு, என்ன கேட்டாலும் மறுக்காம பண்ணுவாரு. சாயங்காலம் ஏழு மணிக்கு திரும்பவும் செங்கல்பட்டுல கிளம்புனா மறுபடியும் சேத்பட் வந்து சேர பத்து மணி ஆயிடும்... அப்புறம் வீட்டுக்குப் போய் சாப்டுட்டு படுத்தா விடிஞ்சிரும்... ஞாயித்துக்கிழம லீவ் கிடைக்கும், ஆனா ஒரு வாரத்துக்கும் சேர்த்து ஒண்ணா தூங்கவேண்டியிருக்கும்...'' அவர் சொல்லச் சொல்ல மூச்சு வாங்கி நிறுத்தினார்.
மௌனமாக ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தார். ``இப்படியே போய்டுச்சுப்பா, 40 வருஷம்... இப்போ நினைச்சா 40 வருஷத்துல இதைத் தவிர நான் வேற எதையுமே செய்யலைனு தோணுது'' அவருடைய சொற்கள் நகத்தால் இதயத்தைக் கீறுவதைப்போல் இருந்தது. ஏதேதோ ஃபேன்ஸிப் பொருள்கள் விற்றபடி ஒருவன் எங்களைக் கடக்க, அவரே பேச்சை மாற்றினார்.
``மவுத் ஆர்கன்... அப்பல்லாம் என் வயசு பசங்க, மவுத் ஆர்கன் வாசிப்பாங்க... அதுதான் அப்போ ஃபேஷன். நான் அதுக்காக கொஞ்சங்கொஞ்சமா காசு சேர்த்து ஒரு மவுத் ஆர்கனை மூர் மார்க்கெட்ல வாங்கிட்டு வந்து வச்சிருந்தேன். அப்ப லவ் பண்ணிகிட்டிருந்த விமலாவுக்கு அதை வாசிச்சுக் காட்டணும்னு... ஷோலே படத்துல அமிதாப் வாசிப்பான்ல... அப்புடி. சொன்னா நம்புவியா இப்பவும் அது என் வீட்ல இருக்கு'' ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
``ஓ... நல்லா வாசிப்பீங்களா? சொன்னதே இல்ல?''
``கத்துக்கணும்னு நினைச்சேன். அப்போ ஏரியாவிலயே ஒரு அண்ணன் இருந்தாரு. கத்துத் தர்றேன், வீட்டுக்கு வாம்பாரு... அடுத்த வாரம் வரேன்னு சொல்லுவேன்... வாராவாரம் அவர் கேப்பாரு... போகணும்னு நினைப்பேன். ஆனா, போக மாட்டேன்... வேலை இருக்கும். அந்த அடுத்த வாரம் வரவே இல்ல... இன்னும் அந்த மவுத் ஆர்கன் அப்படியேதான் கிடக்கு... காதலிக்கவும் நேரம் கிடைக்கல, கத்துக்கவும் நேரம் கிடைக்கல... ஹாஹாஹா'' பெருங்குரலெடுத்துச் சிரித்தார். சிரித்து, ஓய்ந்து இறுக்கமாகி மௌனித்திருந்தார். சில நிமிடங்கள் கழித்து அவராகவே மீண்டும் பேசத் தொடங்கினார்.
``எப்பயும் வேலைக்குப் போய்ட்டே இருந்தேன். திடீர்னு ஒருநாள் காலைல ஆறு மணிக்கு ட்ரெயினுக்கு நிக்கும்போதுதான் தோணுச்சு... நாப்பது வருஷம் போய்டுச்சேனு... வட போச்சேம்பாரே வடிவேலு, அது கணக்கா!'' என்று கூறிவிட்டு, மீண்டும் ரயில் பெட்டியைக் குலுக்குவதுபோல குலுங்கிக் குலுங்கி சிரிக்கத் தொடங்கினார்.
``காசு கணக்குப் போடாம, இன்டர்வெல்ல பாப்கார்ன் வாங்கலாமா வேண்டாமானு யோசனை பண்ணாம, நிம்மதியா ஒரு சினிமாகூட நான் பார்த்தது இல்ல. சந்தோஷமா ஒரு ஹோட்டல்ல நானும் என் பொண்டாட்டியும் சாப்பிட்டது இல்ல. பத்து நாள் வெளியூர் போய் இருந்துட்டு வந்தது இல்ல. கொடைக்கானல் போகணும்னு ஆசையா இருக்கும். அடுத்த மாசம் போலாம்னு, ஏற்கனவே போய்ட்டு வந்தவங்ககிட்ட கேட்டு உக்காந்து திட்டம் போடுவேன். ஆனா, போகமாட்டேன். அடுத்த வருஷம் போகலாம்னு மறுபடியும் திட்டம் போடுவேன். போக மாட்டேன்'' அவர் அடுக்கிக்கொண்டே சென்றார்.
``இப்போ யோசிச்சுப் பார்த்தா இத்தனை வருஷமும் யாருக்காக எதுக்காக உழைச்சோம்னு தோணுது. மனசுக்குப் பிடிச்சத எதுவுமே செய்யாம நமக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழாம, இன்னொருத்தர் லாபத்துக்காக, இன்னொருத்தர் சந்தோஷத்துக்காக வாழற வாழ்க்கை சாவுக்குச் சமானம்தான?'' என்றார். அதிர்வின்றி சென்றுக்கொண்டிருந்த எலெக்ட்ரிக் ரயில் எனக்கு மட்டும் தடதடப்பதுபோல் இருந்தது.

``வீட்டுக்கு வந்தாலும் மண்டைக்குள்ள இரண்டு இன்ச் பைப் ஸ்டாக் இல்ல.. வாங்கி வைக்கணும், ஏசியன் பெயின்ட் ஆர்டர் பண்ணினது வந்துருச்சா, முருகன் கடைல பேமென்ட் விசாரிக்கணும்னு... மனசுக்குள்ள ஒரு ரயில் தடதடன்னு ஓடிக்கிட்டே இருக்கும். விடிஞ்சிரும்... அடுத்த நாள் ஆறு மணி ரயிலை அவசர அவசரமா ஓடிப்போய் பிடிப்பேன், இத்தனை வருஷத்துல கஸ்டமர்கிட்ட அன்பா அனுசரணையா பேசின அளவுகூட என் பொண்டாட்டிக்கிட்ட பேசினது இல்ல. அதுக்குள்ள காலம் இவ்ளோ வேகமா ஓடிடும்னு நினைச்சுக்கூட பார்க்கலைடா...''
``உங்களைப் பத்தி நீங்க ஏன் யோசிக்கவே இல்ல?'' அவர் சிரித்தார்.
``வேலை பார்த்துகிட்டே இருந்தேன். யாருக்காக எதுக்காகனு தெரியாத அளவுக்கு அதைப்பத்தி யோசிக்கக்கூட நேரமே இல்லாத அளவுக்கு வேலை செஞ்சுகிட்டே இருந்தேன். அப்படியே யோசிச்சாலும் இந்த வேலையை, வாழ்க்கையை மாத்திக்க பயம். இந்த சம்பளம் இல்லாமப்போனா என்னாகுமோன்ற பயம். அதனாலேயே, என்னோட ஓய்வைப் பத்தியும் நினைக்கலை... வீட்ல எனக்காக உழைச்சவங்க பத்தியும் நினைக்கல... எதுக்காகவெல்லாம் அப்போ அவ்ளோ பிஸியா பைத்தியமா வேலை பார்த்தேனோ அதெல்லாம் இன்னைக்கு நினைச்சா அவசியமே இல்லையோன்னு தோணுது. அன்னைக்கு கோபப்பட்டு எரிச்சலாகி சக மனுஷனை திட்டித் தீர்த்த விஷயத்தையெல்லாம் இன்னைக்கு யோசிச்சா. ..`ச்சீ இதுக்கா அப்படி நாய் மாதிரி நடந்துகிட்டோம்னு' தோணும்.'' ராஜராஜன் சார் மீண்டும் சிரித்தார். அவருடைய சிரிப்பை பங்கிட்டுக்கொள்ள முடியவில்லை. எல்லா சிரிப்புகளும் எப்போதும் சிரிப்பாகவே இருப்பது இல்லை.
இப்போது ராஜராஜன் சார் வேலைக்குச் செல்வதில்லை. ஆஸ்துமாவும், சர்க்கரை நோயும் அவரை உருக்கி எடுத்துக்கொண்டு இருக்கின்றன. ஒரு பக்கப் பார்வை சரியில்லை. நாற்பது ஆண்டுகள் நின்றுகொண்டே இருந்ததால் அதிக நேரம் உட்காரவோ படுக்கவோ முடியாது. கால்கள் குடையத் தொடங்கிவிடும். ஆனாலும், வாழ்வதற்கான ஆர்வம் குறையவே இல்லை அவருக்கு...
``மாரத்தான் ஓடணும்'' என்று ஒருநாள் வந்து நின்றார். மெதுவாக ஓடி ஓடி ஒரு மாரத்தானில் 5 கி.மீ. தூரம் ஓடவும் செய்தார். சமீபத்தில் ஒருமுறை நண்பர்களோடு கோவா போய்விட்டு வந்து சலித்துக்கொண்டார். ``பூரா பாரினர்ஸ்ப்பா'' என்றார். மொபைலில் கேம் ஆடிக்கொண்டே இருப்பார். நிறைய கார்ட்டூன்கள் பார்ப்பார். ஆனாலும், அவருக்கு இப்போதும் இரவுகளில் தூங்க முடிவதில்லை என்று ஒவ்வொரு நாள் காலையிலும் தவறாமல் புலம்புவார். அவருடைய கனவுகளில் எப்போதும் ஒரு ரயில் அவரை நோக்கி வந்துகொண்டே இருப்பதையும் அதைக் கண்டதும் பயந்துபோய் கண்விழித்து விடுவதையும் சொல்வார்.
ஒவ்வொரு நாளும் ராஜராஜன் சார் விரட்டிய எலெக்ட்ரிக் ட்ரெயின் இப்போது அவரை விரட்டிக்கொண்டிருக்கலாம். நமக்கும்கூட அப்படிப்பட்ட ஒரு ட்ரெயின் நிச்சயம் இருக்கும். நம் கனவுகளில் அலுவலகக் குரல்கள் கேட்கத் தொடங்குவதுகூட, அப்படிப்பட்ட ரயில் எஞ்சின் கிளம்பிவிட்டதற்கான அர்த்தமாக இருக்கலாம்.
ஜோனதனை சில ஆண்டுகளுக்கு முன்பு, எர்ணாகுளத்தில்தான் சந்தித்தேன். அரைமணி நேரத்தில் ஆயுளுக்கான நண்பனாக மாறியவர். அப்போது இங்கிலாந்திலிருந்து எர்ணாகுளம் வந்து மூன்று மாதங்களாக `சும்மா' இருந்தார். ஃபோர்ட் கொச்சின் படகுக் குழாமில் டிக்கெட் எடுக்கும் இடம் காட்டி உதவியது அந்த ஆசாமிதான்.
ஐரோப்பாவில் பிரபலமான விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் முப்பத்தைந்து வயது ஜோனதன். அந்த நிறுவனத்தின் க்ரியேட்டிவ் ஹெட்.
திடீரென்று ஒருநாள் சிறுநீரகக் கோளாறு வந்து ஒருமாதம் படுத்த படுக்கையாகிவிடுகிறார். அந்த நாள்களில்தான் அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னைப்பற்றி சிந்திக்கிறார். காலையில் எழுவது, வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது, உண்பது, அலுவலகம் சென்று திரும்புவது, குடும்பத்தோடு கொஞ்ச நேரம் பேசுவது, தூங்குவது என எல்லாமே ஓர் ஒழுங்குக்குள் இருப்பதைக் கவனிக்கிறார். பத்தாண்டுகளாக எல்லாமே ஒரே பாணியில் இயங்கிக்கொண்டிருந்தது. அவருக்கு அந்த ஒழுங்குதான் அச்சத்தைக் கொடுத்திருக்கிறது.
அவருடைய சமீபத்திய விளம்பரங்களையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்திருக்கிறார். எல்லாமே ஒன்றுபோலவே ஒரே பாணியில் புதிதாக எதுவும் படைப்புத்திறன் இல்லாமல் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார். அவரால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் எதையுமே புதிதாகச் சிந்திக்க முடியவில்லை என்பது தெரிய வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் புதிதாகக் கற்றுக்கொண்டது என்ன? புதிதாகச் செய்த விஷயங்கள் என்ன? புதிதாகச் சேர்த்துக்கொண்ட நண்பர்கள் யார் யார்? தன்னுடைய வேலை நேரம் என்ன? தன் படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிற விஷயங்கள் என்ன? வீட்டில் செலவழிக்கிற நேரம்? சமூகத்துக்காகத் தான் செலவழிக்கிற நேரம்? என்பதையெல்லாம் கணக்கிடுகிறார். கூடவே, தன்னுடைய உடல்நிலைக்கு என்ன காரணம் என்பதையும் ஆராய்கிறார். இந்த சுயமதிப்பீடு, அவரை தன் பதினைந்து ஆண்டுகால தொழில் வாழ்க்கையில் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கவைத்தது.

``நம்ம வாழ்க்கைல இருபது வருஷம் ஸ்கூல் போறோம், பாடம் படிக்கறோம், நிறைய கத்துக்கறோம், அடுத்த முப்பது, நாப்பது வருஷம் உழைக்கிறோம்... உழைக்கிறோம்... உழைச்சுக்கிட்டே இருக்கோம். நடுவுல ஏன் நாம ஓய்வே எடுத்துக்கறது இல்ல, ஏன் நடுவுல எதையுமே கத்துக்கறது இல்ல?''
``கல்விங்கறது வாழ்க்கையின் முதல் இருபது வயசுக்கு உள்ளதான் இருக்கணுமா? ஓய்வுன்றது கடைசி இருபது வருஷங்களுக்குள்ளதான் எடுக்கணுமா?'' ஜோனதனின் கேள்விகள் எல்லோருக்குமானவையாக ஒலித்தன.
``உடனே ஒரு வருஷம் லீவ் போடணும்னு முடிவுபண்ணிட்டேன்...'' என்றபோது என் இதயம் சில நொடிகள் நின்று மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. ``ஒரு வருஷம் லீவெல்லாம்கூட உங்க ஊர்ல கொடுக்கறாங்களா ப்ரோ?'' என்று ஆச்சர்யமாக விசாரித்தேன்.
``இங்கிலாந்தில் மட்டும் இல்லை, உலகத்தோட எந்த மூலையிலயும் ஒருவருஷ லீவ் யாருமே தரமாட்டாங்க. நான் லீவ் கேட்டேன். தரமாட்டோம்னு சொன்னாங்க, தற்கொலைதான் பண்ணிக்குவேனு ரிப்ளை போட்டேன். அப்பவும் முடியாதுன்னாங்க.. வேலையை ரிசைன் பண்ணிட்டேன்'' என்றார் கேஷுவலாக...
``அப்போ ஒரு வருஷம் முடிஞ்சதும் சாப்பாட்டுக்கு என்னய்யா பண்ணுவீங்க'' என்றேன். ``ஒரு வருஷம் கழிச்சுப் பசிக்கும்போது பாத்துக்கலாம்'' ஜோனதனின் புன்னகையில் தெளிவு இருந்தது.
ஆன்லைனில் தேடித்தேடி எர்ணாகுளத்தை பிடித்திருக்கிறார். ``காட்ஸ் ஓன் கன்ட்ரினு போட்டுருந்தாங்க... அதை நம்பி கிளம்பி வந்துட்டேன். இது டாக்ஸ் ஓன் கன்ட்ரியா இருக்கு, ஆனா ஐ லவ் டாக்ஸ்'' என்று சிரித்தார்.
எர்ணாகுளத்தில் அவருக்கு வேலையெல்லாம் கிடையாது, ஒரு சிறிய வீடு எடுத்துத் தங்கி இருந்தார். பகலில் தெரு நாய்களோடும் பக்கத்து வீடுகளில் இருக்கிற சேச்சிகள், சேட்டன்களோடும் பேசிக்கொண்டிருப்பார். பிறகு நூலகத்துக்குச் சென்று புத்தகம் படிப்பார். அவருக்கு வைக்கம் முஹம்மது பஷீரின் கதைகள் மிகவும் பிடித்திருப்பதாகவும், அவருடைய நூல்கள் நிறைய வாங்கி வைத்திருப்பதாகவும் சொன்னார். மலையாளப் படங்கள் பார்ப்பார், பார்வதி மேனனின் மிகத் தீவிர ரசிகராக இருந்தார். கம்யூனிஸ்ட் மலையாளிகளோடு நண்பராகி அவர்களுடைய போராட்டங்களில் போய் நின்றிருக்கிறார். ஒருமுறை ரயில் தர்ணாவில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மண்டபம் ஒன்றில் அடைத்து மாலையில் விடுவித்து விட்டார்களாம்.
``எப்படியாச்சும் ஜெயிலுக்குப் போய்டணும்னு நினைச்சேன்... திஸ் சகாக்கள் டோன்ட் கோ ஆப்ரேட் buddy'' என்றார் வருத்தமாக...
மிகச்சரியாக ஒரு வருடம் முடித்து ஊர் திரும்பிவிட்டார். ஆனால், ஊருக்குச் சென்ற பதினைந்து நாளில் வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. அவருடைய சமீபத்திய படைப்புகளை வேலை பார்க்கிற நிறுவனத்தில் கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்றார் சமீபத்திய சாட்டிங்கில். ``என் மண்டைக்குள் அணைந்திருந்த அத்தனை பல்புகளும் ஒரே நேரத்தில் ஒளிரத் தொடங்கிவிட்டன என்கிறார்கள் என் நண்பர்கள். எனக்குமே அப்படித்தான் தோன்றுகிறது சகாவே'' என்றார்.
ஐரோப்பா, அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் இப்படிப்பட்ட தற்காலிக ஓய்வை பலரும் மேற்கொள்கிறார்கள். `Mid Career Sabbatical' எனப்படும் இத்தகைய ஓய்வு எடுக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு வருகிற பெரும்பாலான வெளிநாட்டுக்காரர்கள் ஜோனதனை போன்றவர்களாக இருக்கிறார்கள்.
அறுபது வயதுக்குப் பிறகு எடுக்கிற ஓய்வை வேலை காலத்திலேயே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓராண்டு ஓய்வு என்கிற கணக்கில் மேற்கொள்கிறார்கள். சிலர் ஆறுமாதம் வேலை, ஆறுமாதம் ஓய்வு என்று வாழ்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த ஓய்வில் புதிதாக கற்பது, புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்வது, பயணிப்பது, உடல் நலத்தைக் கவனிப்பது என பல விஷயங்களையும் மேற்கொள்கிறார்கள். அது அவர்களுடைய வேலைசார்ந்த வளர்ச்சிக்கு நிறையவே உதவுகிறது.
ஓய்வாக இருக்கும்போதுதான் நம்மைப் பற்றி நாமே சிந்திக்க, நம் உடலையும் மனதையும் கவனிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. நம் உடலையும் மனதையும் கவனித்தால்தான், அதில் இருக்கிற கோளாறுகள் தெரிய வரும். பிரச்னைகள் தெரிந்தால்தான் அவற்றைச் சீர்செய்ய முடியும். தன் உடலையும் மனதையும் பற்றியே கவலை இல்லாதவர்கள் எப்படி தன்னோடு இருக்கிறவர்கள் பற்றிக் கவலைப்பட முடியும்? தன் அருகில் இருப்பவர்களைப் பற்றியே கவலை இல்லாதவர்களால் எப்படி சமூகத்தின் போக்கை கவனிக்க முடியும்? நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, ஆட்சிக் கலைப்பு என எதைத் திணித்தாலும் அதை எதிர்ப்பே இல்லாமல் ஏற்றுக்கொண்டு, அதைப்பற்றி கவலையே படாமல், மந்தை ஆடுகளைப்போல புற்களில் கண்ணாக இயங்கிக்கொண்டுதான் இருப்போம்.
தன்னைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத ஒருவனுக்கு சமூகத்தைப் பற்றிய விழிப்புஉணர்வு எப்படி உருவாகும்?
இன்று, நாம் ஓய்வு நாளிலும் உழைத்து காசு சேர்க்கிறவர்களாக மாறி இருக்கிறோம். அல்லது ஓய்வு நேரத்திலும் ஃபேஸ்புக் வளர்ச்சிக்கோ, ட்விட்டர் வளர்ச்சிக்கோ அல்லது வேறு யாரோ கண்ணுக்குத் தெரியாத நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ சம்பளம் பெறாத கூலிகளாக உழைக்கிறோம். நம் அலுவலகங்கள் வாட்ஸ்அப் வழியாக வீடுகளுக்குள் நுழைந்து விட்டன.
24 மணி நேரமும் வீடுகளில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. பயன்படுகிறதோ இல்லையோ கூகுளில் தேடிக்கொண்டே இருக்கிறோம். அல்லது சமூகம் நமக்கு எதையாவது காட்டிக்கொண்டே இருக்கிறது.
`விவசாயிகள் நிர்வாண போராட்டம்' என்கிற செய்தியைப் படித்து அதற்கு ரியாக்ட் செய்வதற்கு முன்பே நம்முடைய மூளைக்குள் பாகுபலி வசூல்கள் ஏற்றப்படுகின்றன. நாம் தூங்கும்போது மட்டும் சும்மா இருக்கிறோமா? தூக்கத்திலும்கூட நாம் எதிர்காலக் கவலைகளில் மூழ்கி இருக்கிறோம். மற்ற நேரங்களில் எல்லாம் நம்மைப் பற்றிக்கூட நாமே சிந்திக்க முடியாத அளவுக்கு அத்தனை பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கிறோம். அல்லது இயங்க நிர்பந்திக்கப்படுகிறோம். ஒரு அழுத்தத்தில் இருந்து தப்ப இன்னொரு விஷயத்தில் நம்மை அழுத்திக்கொள்கிறோம். டி.வி. சத்தம் கேட்டால்தான், இங்கே பலருக்கும் தூக்கமே வருகிறது. கண் விழித்ததும் செல்ஃபோனை எடுத்து பார்க்காதவர்கள் நம்மில் எத்தனை பேர்?
இப்படி பிஸியாகவே இருப்பவர்களை எப்போதும் கிண்டல் செய்கிற ராஜேஷ், என்ஜினீயரிங் படித்த ஜாலித் தம்பி. ``எனக்கு இந்த ரெகுலர் லைஃப்ல இஷ்டமில்ல டூட், நான் சுதந்திரமானவன்'' என்று எப்போதும் சொல்கிற ராஜேஷ், அதனாலேயே எந்த வேலைக்கும் போகாமல் பல்லாண்டுகளாக சும்மாவே இருக்கிறார். எப்போதாவது வீட்டில் விசேஷம், சாவு என்றால் களத்தில் இறங்கி முழு மூச்சாக எல்லா வேலைகளையும் எடுத்துச் செய்வார். ஊருக்குள் வெள்ளம், புயல், பூகம்பம் என்றால் சமூக சேவைகள் செய்வார். மற்ற நேரங்களில் எப்போதும் ஓய்வுதான். சிந்தனைதான். ராஜேஷின் பெற்றோர்கள் வேலைக்குப் போகிறார்கள். இதுவரை ராஜேஷ் ஐந்து ரூபாய்கூட சம்பாதித்தது இல்லை. பெற்றோருக்கான ஓய்வைப் பற்றிச் சிந்திக்கவே முடியாத அளவுக்கு சும்மா இருக்கிறார். ஆனால், சமூக சேவைகளில் ஆர்வமாக இருப்பார்.
ஓய்வே இல்லாமல் உழைப்பது எப்படி கிரிமினல் குற்றமோ அதற்கு இணையானது எதைப்பற்றியும் கவலையே படாமல் எந்நேரமும் ஓய்விலேயே இருப்பது...
விஜயவாடா ரயில் நிலையத்தில் பழங்கள் விற்கிற பாபுவுக்கு நாற்பதுக்கு மேல் வயது இருக்கும். ஸ்டேஷனில் ஒரு கூடை பழங்களோடு அந்த வழியாக வருகிற ஒரு ரயிலில் ஏறுவார். அடுத்த ஸ்டேஷனில் அதையெல்லாம் விற்றுவிட்டு இறங்குவார். அதில் வருகிற வருமானத்தில்தான் பல ஆண்டுகளாக வாழ்கிறார். ``ஏன் உங்களுக்குத் தனியா ஒரு பழக்கடை வைக்கணும்னு தோணவே இல்லை?'' என்று கேட்டபோது, பாபு தாமதிக்காமல் பதில் சொன்னார். ``எனக்கு தோணவே இல்லைங்க''.
நாம் எல்லோருமே ஒரு பழக்கூடையோடுதான் திரிந்துகொண்டிருப்போம். நாம் நமக்கான பழக்கடைகளை பற்றிச் சிந்தித்ததே இல்லை. காரணம், நாம் எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கிறோம். `உழைப்பே உயர்வு தரும்' என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். ஓய்வின்றி உழைப்பது என்பது மகத்தான செயலாகக் கருதப்படுகிறது. ஆனால், ஓய்வின்றி உழைப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் நாம் செய்கிற அநீதி இல்லையா?
ஒரு நாளில் நாம் எவ்வளவு நேரம் நமக்காகச் செலவழிக்கிறோம்? கடைசியாக நமக்குத் தெரியவே தெரியாத ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டது எப்போது? கற்றுக்கொள்ள விரும்பும் விஷயங்கள் என்னென்ன? ஏன் அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள நமக்கு தோன்றவே இல்லை? எது தடுக்கிறது? அதை எல்லாம் இன்றே இப்போதே செய்து விடுவதற்கான சாத்தியங்களே இல்லையா? அப்படிச் சாத்தியமே இல்லாத ஆசைகள் என்றால் அதை என்றைக்காவது செய்வதற்கான திட்டங்களாவது நம்மிடம் உண்டா?
இந்த வேலையும் இந்தப் பணமும் இல்லையென்றால், நம் வாழ்வு சூன்யமாகி விடும் என்று மீண்டும் மீண்டும் நம்பவைக்கப்படுகிறோம். நம்முடைய கம்ஃபர்ட் ஸோன்கள் நமக்கான எல்லைகளை உருவாக்குகின்றன. அந்த எல்லைகளை வாழ்வியல் அச்சங்கள் இரும்புச் சுவர்களாக மாறி வலுப்படுத்துகின்றன. ஆனால், அவை நாமாக நம்மை சுற்றிக் கட்டிக்கொண்ட மாயக்கோட்டைகள் என்பது எல்லைகளை கடக்கும்போதுதான் தெரியவரும். மாற்றம் என்பது நிச்சயம் அதற்கே உண்டான சவால்களுடன்தானே இருக்கும்.

உடனே ஒருவருஷம் லீவ் போட்டுவிட்டு இப்பவே கிளம்புகிறேன், அல்லது வேலைய விட்டுவிடுகிறேன் என்று முடிவெடுப்பது அல்ல சரியான தீர்வு. அத்தகைய அவசர முடிவுகள்தான் ஆபத்தானது. கொஞ்சம் சும்மா இருப்போம். நிறைய யோசிப்போம்...
மன அழுத்தத்திலிருந்து விடுதலை அடைய வார இறுதிக்குக் காத்திருக்கிறோம், ஓய்வுக்கான காலம் ரிட்டையர்மென்ட்டில் இருக்கிறது என நம்புகிறோம். அந்தத் தொலைதூர சொர்க்கத்தை நோக்கியே மூச்சு வாங்க ஓடுகிறோம். உண்மையில் சொர்க்கம் எங்கோ தூரத்தில் இல்லை, அது இங்கேதான் இருக்கிறது. நமக்கு மிகமிக அருகில்... கொஞ்சம் நிதானமாக கவனித்தாலே புலப்படுகிற தொலைவில்...
- கேள்வி கேட்கலாம்...