Published:Updated:

ஊழலில்தான் முதல் இடமா?

ஊழலில்தான் முதல் இடமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஊழலில்தான் முதல் இடமா?

ஊழலில்தான் முதல் இடமா?

வ்வொருமுறை தேர்தலின்போதும், `அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக

ஊழலில்தான் முதல் இடமா?

மாற்றுவோம்' என்று வாக்குறுதி அளித்துத்தான் எல்லா கட்சிகளும் வாக்குகள் சேகரிக்கின்றன. ஆனால், தமிழகத்தை எதில் எல்லாம் முதன்மை மாநிலமாக இந்த ஆட்சியாளர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்கமும் வேதனையும் நிறைந்த உண்மை.

இந்த அவலத்தின் உச்சமாக, இப்போது அசிங்கம் ஒன்று அம்பலமாகியிருக்கிறது. தமிழகத்தில் தன் தொழிற்சாலையை அமைக்க இருந்த தென் கொரியா நாட்டின் கியா மோட்டார்ஸ், தன் முடிவை மாற்றிக்கொண்டு, பக்கத்து மாநிலமான ஆந்திராவுக்குப் போய்விட்டது. தமிழகத்துக்கு வரவேண்டிய 12,800 கோடி ரூபாய் முதலீடு ஆந்திராவுக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டது.

ஆண்டுக்கு மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யப்போகிற இந்தத் தொழிற்சாலை கைவிட்டுப் போனதால், பத்தாயிரம் இளைஞர்களுக்குக் கிடைக்க இருந்த வேலைவாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன. இந்தத் தொழிற்சாலை இங்கு அமைந்திருந்தால், அதற்கு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்க, அதைச் சுற்றி பல நூறு துணைத் தொழிற்சாலைகள் ஏற்பட்டிருக்கும். அதன்மூலம் மேலும், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். இப்போது எல்லா வாய்ப்புகளையும் இழந்திருக்கிறோம்.

இத்தனைக்கும் கார் தொழிற்சாலையை நடத்துவதற்கான எந்த அத்தியாவசியமான வசதிகளும் கியா தொழிற்சாலை அமையவிருக்கும் அனந்தப்பூரில் இல்லை. துறைமுகம், உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளர்கள், சாலை வசதிகள்... என்று எந்த வகையிலும் சென்னையோடு ஒப்பிட முடியாத அளவுக்குப் பின்தங்கிய பிரதேசம் அது. மேலும், தன் தாய் கம்பெனியான ஹூண்டாய் அமைந்திருக்கும் சென்னையை வேண்டாம் என்று உதறிவிட்டுப் போக வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், கியா மோட்டார்ஸ் அனந்தப்பூர் போய்விட்டது என்றால் அதற்கு என்ன காரணம்?

தமிழக அரசுக்கும் கியா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் முடிவில், கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைக்க 390 ஏக்கர் நிலம் வழங்குவதற்குத் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து 2016, ஆகஸ்ட் 11 அன்று சட்டப்பேரவையிலும் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு என்ன நடந்தது என்பதில்தான் கியா மோட்டார்ஸ் சென்னையைவிட்டு ஏன் ஆந்திராவுக்குச் சென்றது என்பதற்கான பதில் புதைந்திருக்கிறது.

`50% கூடுதல் கமிஷன் மற்றும் இதர சலுகைகள் தரப்பட வேண்டும்' என்று ஆட்சியாளர்கள் கியா மோட்டார்ஸிடம் கோரினார்கள் எனச் செய்திகள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன. ஆனால், பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சரோ அமைச்சர்களோ மௌனம் காக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு முதலீடாக வரப்போகிறது என்று தமிழக அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டது. அந்த அறிவிப்புகள் அத்தனையும் என்னவாயின? சென்னை மெட்ரோ ரயிலுக்குத் தேவையான மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை,  இசுஸூ மோட்டார்ஸ், காட்பரீஸ் சாக்லேட் தயாரிப்பு நிறுவனம், கெலாக்ஸ் நிறுவனம் எனத் தமிழகத்துக்கு வராமல் ஆந்திர எல்லையில் இருக்கும் ஸ்ரீசிட்டிக்குப் போகக் காரணம் என்ன? இப்படி ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் அலை அலையாக எழுகின்றன. ஆனால், பதில் சொல்லத்தான் கோட்டையில் யாரும் இல்லை.