
கார்க்கிபவா
நண்பனின் திருமணத்துக்கு நானும் இன்னும் சிலரும் சென்றிருந்தோம். அதில் ஒருவன், குளித்துவிட்டு

வந்ததும் சரியாக துவட்டக்கூடச் செய்யாமல், டியோ எடுத்து அடித்துக் கொண்டான். ``மண்டபத்துல நம்ம காலேஜ் பொண்ணுங்க வேற வருவாங்கல்ல’’ எனக் கேட்காமலேயே சப்டைட்டில் போட்டான். அவன் கைகள், கால்கள் என ஆங்காங்கே நீர்த்திவளைகள். ஈரம்தான் உடல் துர்நாற்றத்துக்கு ஆரம்பப்புள்ளி. ஆனால், அதைச் சரியாக உலர்த்தாமல், டியோவை ஏன் அடிக்க வேண்டும்?
இந்தக்கால இளைஞர்களிடம் மூட நம்பிக்கைகள் குறைவு. `பாடி ஸ்ப்ரே அடித்தால், பெண்கள் பின்தொடர்ந்து வந்துவிடுவார்கள்’ என்பதுபோல ஒன்றிரண்டு இருக்கலாம். கோலாக்களும், புகையிலைப் பொருள்களும் ஆக்கிரமித்த கிரிக்கெட் நேர விளம்பரங்கள் இப்போது சொல்வது அதைத்தான்.
இந்த விளம்பரங்களுக்குப்ப் பின்னால், ஓர் உண்மை இருக்கிறது. பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் இயற்கையாகவே ஒருவர் உடலிலிருந்து வீசும் மணத்தின் மீது ஈர்ப்பு உண்டு. ஆனால், அது டியோ ஸ்ப்ரே உருவாக்கும் மணம் அல்ல.
முதலில், இந்த டியோக்களுக்கு என்ன தேவை? உடலிலிருந்து துர்நாற்றம் வீசினால், பாடி ஸ்ப்ரே வாசனை அதைச் சமன் செய்யும். ஆனால், ஒவ்வொருவரின் உடலில் இருந்தும் வீசும் துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்படி என்றால், அதோடு சேரும் பாடி ஸ்ப்ரேயின் வாசனை மாறி மாறித்தானே வீசும்? நமக்கென இருக்கும் பிரத்யேக வாசனையே மற்றவருக்குத் தெரியாமல் போகும். துர்நாற்றம் வேண்டாம்தான். ஆனால், அதைச் சரிசெய்யும் வழி இதுவல்ல.
வியர்வை என்பது உடலின் வெப்ப நிலையைச் சமன்படுத்தும் ஒரு பிராசஸ். வியர்வையின் மணமே உடல் துர்நாற்றம். ஆனால், உண்மையில் வியர்வைக்கு வாசனையே கிடையாது. அது பாக்டீ ரியாக்கள் உருவாக்குவது.
பாக்டீரி யாக்களை உருவாக்குவது? அது உங்கள் வேலைதான். நீங்கள் சாப்பிடும் உணவு, அணியும் உடை எல்லாம்தான் காரணம்.
சுத்தமாக இல்லாதவர்கள் மீதுதான் துர்நாற்றம் வீசும் என்பதும் பொய். அது ஒரு காரணம்தான். ஹார்மோன்கள் சமநிலை, ஜீன்களில் தொடரும் பிரச்னைகள் போல இன்னும் சில காரணங்களும் உள்ளன.
அதனால், வியர்வை நாற்றம் அடிக்கிறது என தினம் மூன்று வேளை குளிப்பது பல சமயங்களில் உதவாது.
வியர்வை நாற்றம் என்பது உடல் தொடர்பான பிரச்னை என்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை. அது மனம் சார்ந்த பிரச்னையும் கூடத்தான். சினிமாவில் பார்த்தது இல்லையா? வில்லன் கையில் சிக்கிவிட்டால் ஹீரோயினுக்கு வியர்த்து விடுமே. மனஅழுத்தம், உற்சாகமின்மை என நம்மைச் சோர்வுறச் செய்யும் மனம் சார்ந்த விஷயங்களும் துர்நாற்றத்துக்குத் தீனி போடுவதுண்டு!
ஆதிகாலத்தில், இந்தத் துர்நாற்றம் மனிதர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்றியது உண்டு. அப்போது நேர்மை இருந்தது. ஆனால், சோப் இல்லை. குளிப்பது என்பது மழை வந்தால் மட்டுமே நடந்திருக்க வேண்டும். அதனால், மனிதர்கள் எப்போதும் துர்நாற்றத்துடனேயே திரிந்திருக்கிறார்கள். பல விலங்குகளுக்கு அந்த `வாசனை’ அலர்ஜி. அந்தக் காரணத்தால் மனிதர்களை விட்டுவிட்டு மற்ற விலங்குகளைக் கொல்லப் போய்விடும். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து எகிப்தியர்கள்தான் இது ஒரு பிரச்னை என்பதை முதலில் உணர்ந்தார்கள்.அக்குளுக்குள் அத்தரைப் பூசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். பெண்கள், தலையில் வாசனை மெழுகைத் தடவிக் கொள்வார்கள். அது நாள் முழுக்க லேசாக உருகி, உடல் முழுவதும் படரும். தொல்லைதான். ஆனால், வாசனையான தொல்லை.
நம்ம ஊர் சங்க இலக்கியங்களிலும் இந்த விஷயம் உண்டே. `பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா?’ என்ற சச்சரவை யெல்லாம் பார்த்திருக்கிறோம். கூந்தல் மணம்கூட உடல் துர்நாற்றத்திலா வரும் என்கிறீர்களா? அட... ஆமாம் பாஸ், ஆமாம்.

சரி. உடல் துர்நாற்றத்தைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?
தோல் பகுதியை உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள். உலர்ந்த பகுதிகளில் பாக்டீரியாக்கள் வளர்வது கிடையாது. குளித்து முடித்ததும், உள்ளங்கால் முதல் அனைத்துப் பகுதிகளையும் உலர்த்துங்கள்.
ஜிம்முக்குச் செல்லும் ஆள்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் அடிக்கடி உடைகளை மாற்றுங்கள்.
சிலருக்கு எப்போதும் எங்கேயும் வியர்க்கும், உள்ளங்கைகூட. இது ஹார்மோன் பிரச்னையாகவும் இருக்கலாம். கைகளை ஒருமுறை கழுவிக்கொண்டு உடனே டாக்டரை பார்க்கச் செல்லுங்கள். இது சரி செய்யக்கூடிய விஷயம்தான்.
டயட்டை மாற்றுங்கள். மருத்துவர் ஆலோசனையுடன் எண்ணெய் அதிகமான உணவுகள், பூண்டு, வெங்காயம் போன்ற பொருள்களைத் தவிர்க்கலாம்.
நேற்று வரை நன்றாக இருந்த வாசனை, இன்று துர்நாற்றமானது என்றால், உடலில் ஏதோ ஒரு பாகம் சரியாக வேலை செய்யவில்லையென அர்த்தம். மருத்துவரை விசிட் அடிக்கவேண்டிய நேரம் அது.
ஸ்ட்ரெஸ் இல்லாத நிம்மதியான வாழ்க்கைதான் அனைத்துக்கும் ஒரே தீர்வு. எப்போதும், ஏதோ ஓர் அழுத்தத்துடனேயே இருக்காதீர்கள்.
உங்கள் வீட்டு குப்பைக்கூடையில் இருந்து துர்நாற்றம் வந்தால், முதலில் ரூம் ஸ்ப்ரே அடிப்பீர்களா அல்லது குப்பையை வெளியே கொட்டுவீர்களா?