Published:Updated:

“எம்.ஜி.ஆர் கட்சி சிதைந்து விடக்கூடாது...”

“எம்.ஜி.ஆர் கட்சி சிதைந்து விடக்கூடாது...”
பிரீமியம் ஸ்டோரி
News
“எம்.ஜி.ஆர் கட்சி சிதைந்து விடக்கூடாது...”

ம.கா.செந்தில்குமார், படம்: மீ.நிவேதன்

“ஸ்கூல், குடும்பம்னு சாதாரண வாழ்க்கை வாழ்ந்துட்டிருந்த என்னை, இந்த வழக்கு அப்படியே புரட்டிப்போட்டுடுச்சு. ஸ்கூல்ல இருந்து என்னை ஒதுக்கி, என் குடும்பத்தைச் சிதைச்சு, பணம், இடம்னு இருந்த கொஞ்சம் சொத்தும் பறிபோய், பொய்ப் புகார்களால் நானும் என் குடும்பமும் ஏகப்பட்ட அவமானங்களைச் சந்திச்சோம். ‘எந்தத் தப்பும் பண்ணாத என்னை, கடவுள் நிச்சயம் காப்பாத்துவார்’ங்கிற ஒற்றை நம்பிக்கையில் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். இன்னைக்கு ‘நிரபராதி’னு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கேன். சந்தோஷம். ஆனா, இதுநாள் வரை நான் பட்ட அவமானங்களுக்கு என்ன பதில்?” - கேள்விகளோடு ஆரம்பிக்கிறார் பானு.

“எம்.ஜி.ஆர் கட்சி சிதைந்து விடக்கூடாது...”

எம்.ஜி.ஆர்-ஜானகி தம்பதியின் உறவினர் பானு. இவரின் அக்காள் கணவர் விஜயனின் கொலை வழக்கில் கைதாகி ஓர் ஆண்டு சிறைவாசம் அனுபவித்தவரை, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் விடுதலைசெய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நடந்த 9 ஆண்டுகளில் பி.எல்., எம்.எல் படித்து முடித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசிப்பவரைச் சந்தித்தேன்.

“இன்றைய தலைமுறையின் புரிதலுக்காக எம்.ஜி.ஆர்-ஜானகி குடும்பம் பற்றிச் சொல்லுங்க?”

“எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. திருமணம் முடிஞ்ச கொஞ்ச நாள்லேயே கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்துட்டாங்க. பிறகு, அவருக்கு `சதானந்தவதி’ங்கிற எங்க பாட்டியைக் கல்யாணம் பண்ணிவெச்சாங்க. சதானந்தவதி பாட்டியை, எம்.ஜி.ஆர் ‘அம்மு’னு செல்லமா கூப்பிடுவார். அதனால, எல்லாரும் அவங்களை ‘அம்மு ஏடத்தி’னு சொல்வாங்க. ‘ஏடத்தி’னா மலையாளத்தில் ‘அக்கா’னு அர்த்தம். அவங்க ரெண்டு முறை கர்ப்பமானாங்க. சில உடல் தொந்தரவுகளால் ரெண்டு முறையும் குழந்தை இறந்துடுச்சு. படுத்தபடுக்கையான அம்மு ஏடத்தியோடு, ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வீட்டுல குடியிருந்தார் எம்.ஜி.ஆர்.

இன்னொரு பக்கம், கும்பகோணத்தில் வசித்தவர் பாபநாசம் சிவனின் உடன்பிறந்த அண்ணன் ராஜகோபாலய்யர். ஜானகியும் சுப்ரமணியமும் இவரின் பிள்ளைகள். இவங்களும் சினிமா ஃபேமிலிதான். சினிமாவுக்காக சென்னைக்குக் குடிபெயர்ந்தது குடும்பம். ஜானகி அம்மாவுக்கு, அவரின் 12 வயதிலேயே பட் என்கிற கன்னட பிராமினுடன் திருமணம்.

13 வயசுலயே மகன் பிறப்பு. சுரேந்திரன் என்கிற அந்த மகன், இப்ப சாலிகிராமத்தில் இருக்கார். பிறகு, பட்டுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. அதனால் ஜானகி அம்மாவுக்கு எந்த ப்ரியமும் கிடைக்கலை. பிறகு, தன் தம்பி சுப்ரமணியம், மகன் சுரேந்திரனுடன் வீட்டைவிட்டு வெளியேறி மயிலாப்பூரில் குடிவந்தாங்க.

“எம்.ஜி.ஆர் கட்சி சிதைந்து விடக்கூடாது...”

படுத்த படுக்கையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவியுடன் எம்.ஜி.ஆர்., கணவரைப் பிரிந்த ஜானகி அம்மா இருவரும் படங்களில் சேர்ந்து நடிக்கும்போது ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பிக்கிறாங்க. ஒருகட்டத்தில் அம்மு ஏடத்தியை, ஜானகி அம்மாவே பக்கத்திலிருந்து கவனித்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகுறாங்க. 18 வருஷங்கள் படுத்தப்படுக்கையா வாழ்ந்த அம்மு ஏடத்திக்கு மதிப்புக் கொடுத்து, எம்.ஜி.ஆரும் ஜானகியம்மாவும் கல்யாணம் பண்ணிக்காம, குழந்தை பெத்துக்காம வாழ்ந்தாங்க.

அதற்குள் எம்.ஜி.ஆர் பெரிய நடிகராகி, தி.மு.க-வில் வளர்ந்து, அ.தி.மு.க-வை ஆரம்பிக்கிறார். ஜானகியம்மா நடிப்பதை விட்டுட்டு எம்.ஜி.ஆருக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாங்க. அவங்களோட வீட்டை அ.தி.மு.க-வின் அலுவலகத்துக்குத் தர்றாங்க. ‘எம்.ஜி.ஆருக்காக நடிக்கிறதை விட்டுட்டோம்; வீட்டையும் கட்சிக்குக் கொடுத்திட்டோம்; கல்யாணமும் பண்ணிக்கலை’னு அம்மா பாதுகாப்பில்லாம உணர்றாங்க. அதுக்காக தன் தம்பி சுப்ரமணியத்தை சதானந்தவதியின் அக்கா மகளான என் அம்மாவுக்குக் கல்யாணம் பண்ணிவெக்கிறாங்க.

இப்ப ஜானகியம்மாவுக்கு எம்.ஜி.ஆர் வெறும் காதலர் மட்டும் இல்லை; பொண்ணு கொடுத்தவரும்கூட. பிறகு, எங்க அம்மாவுக்கு நாங்க பிறக்க ஆரம்பிச்சோம். எங்க எல்லாரையும் ராமாவரம் தோட்டத்துக்கு அழைச்சுட்டுபோய் எம்.ஜி.ஆரும் ஜானகியும் வளர்க்க ஆரம்பிச்சாங்க. எங்க அம்மாவுக்குக் குழந்தைகள் பிறக்க ஆரம்பிச்ச பிறகுதான், எம்.ஜி.ஆர்-ஜானகி பதிவுத் திருமணமே பண்ணிக்கிட்டாங்க.”

“எம்.ஜி.ஆர்-ஜானகி தம்பதியை, பக்கத்துல இருந்து பார்த்திருப்பீங்க. அந்த வாழ்க்கை எப்படி இருந்துச்சு?”

``அழகான, அதே சமயம் மிகச் சிறந்த தம்பதி. உங்க புரிதலுக்காகச் சொல்றேன். எங்க அம்மாவுக்கு எம்.ஜி.ஆர் சித்தப்பா. மலையாளத்தில் ‘அச்சா’ன்னா அப்பா. அதனால அவரை ‘இளைய அச்சா’னு கூப்பிட்டு, பிறகு, அது மருவி ‘சேச்சா’னு ஆகிடுச்சு. நாங்களும் எம்.ஜி.ஆரை ‘சேச்சா’னுதான் கூப்பிடுவோம். ஜானகியம்மாவை ‘தோட்டத்தம்மா’னு சொல்லுவோம். ஜானகியம்மா பெரிய ஹீரோயினா இருந்தப்ப, சேச்சா சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். ‘இவர் ஹீரோன்னா நான் கால்ஷீட் தர்றேன்’ என்கிற அளவுக்கு சேச்சாவுக்கு, தோட்டத்தம்மா நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்காங்க. அப்படி வளர்ந்த அன்பு, பின்னாளில் அவ்வளவு அன்னியோன்னியமாச்சு.

அன்றைய ராமாவரம் தோட்டம் இன்னிக்கும் கண்ல நிழலாடுது. அழகான பெரிய தோட்டத்துக்கு நடுவுல தேவையான அளவுக்கான ரெண்டு அடுக்கு மாடி வீடு. தரை தளத்துல காவல் அதிகாரிகள் தங்கிக்க இடம், டைனிங் ஹால், வெளியில இருந்து யார் வந்தாலும் சமைச்சுப் போட ஒரு பெரிய ஹால். முதல் மாடியில் ஜானகியம்மா ரூம். அங்கேதான் நாங்க இருப்போம். சமையலுக்கான உப்பு, புளி, மிளகாய் எல்லாமே அங்கேதான் இருக்கும். அதை ஜானகியம்மாதான் எடுத்துக் கொடுத்து, இன்டர்காம்ல கூப்பிட்டு இன்னிக்கு என்ன சமையல் செய்யணும்னு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுப்பாங்க. சேச்சாவுக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எங்களுக்கும், வெளியில இருந்து வர்ற எல்லா மக்களுக்கும். ரெண்டாவது மாடியில் சேச்சா-தோட்டத்தம்மாவின் பெட்ரூம். தோட்டத்தம்மா, சேச்சா மேல கோபப்பட்டு அவருக்குத் தர்ற அதிகபட்ச பனிஷ்மென்ட், தலைகாணியை எடுத்து சேச்சாவின் கால்மாட்டில் போட்டுத் திரும்பிப் படுத்துக்கிறதுதான். நாங்க மாடிக்குப் போய்ப் பார்க்கும்போது இப்படி தலைகீழா படுத்திருந்தாங்கன்னா, ‘ஓகே இன்னிக்கு சேச்சாவுக்கும் தோட்டத்தம்மாவுக்கும் சண்டை’னு புரிஞ்சுப்போம்.

தோட்டத்தம்மா சின்ன வயசுலயே எங்களுக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்படி எனக்கு மாப்பிள்ளைப் பார்க்கும்போதெல்லாம் ‘என்னை அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு பாக்குறாங்க சேச்சா’னு எம்.ஜி.ஆர்-கிட்ட ஓடிடுவேன். ‘பானு படிக்கட்டும்’னு அவர்தான் என்னைக் காப்பாத்திவிடுவார். எங்க வீட்ல நான்தான் அவர்கிட்ட தைரியமா பேசுவேன். ‘எங்களுக்கு ப்ரிவியூ போடணும் சேச்சா’னு சொன்னா, ‘ஓகே... மொட்டை, தட்டை எல்லாம் ரெடியாகி வாங்க’னு சந்தோஷமாகிடுவார். உலகம் முழுக்க இன்னைக்கும் தெய்வமா கொண்டாடிட்டு இருக்கிற எம்.ஜி.ஆர் ஒருசமயம் என்னிடம் என்வயதுக்கு இறங்கி வந்து நட்பாகவும் அன்பாகவும் இருந்தார்ங்கிறது எனக்கான பெருமை. தவிர தோட்டத்தம்மா, என் அப்பா, என் மாமனார், மாமியார்னு பெரியவங்க அன்பு எனக்குப் பரிபூரணமா கிடைச்சது. இப்ப என் அம்மா எங்கக்கூடதான் இருக்காங்க. அந்த வகையில் நான் கொடுத்து வெச்சவள்னுதான் சொல்லணும்.

தோட்டத்தம்மா சைவம். சேச்சா அசைவ ப்ரியர். சேச்சாவுக்காக நான்வெஜ் சமைக்கக் கத்துக்கிட்ட தோட்டத்தம்மா, பிறகு ‘நாம சாப்பிடலைன்னா எம்.ஜி.ஆருக்கு கம்பெனி இருக்காதே’னு அவங்களும் அசைவம் சாப்பிட ஆரம்பிச்சாங்க. ஒருகட்டத்தில் உடம்பு முடியாம இருந்த சேச்சாவுக்கு, தோட்டத்தம்மா அசைவத்தை தான் மென்னு ஊட்டிவிடுவாங்க. தன்னை அப்படி பார்த்துக்கிட்ட அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்ததும் சேச்சா பதறித் தவிச்சுட்டார். அந்தச் சமயத்துலதான் எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக் கோயிலுக்குப் போகும்போது ட்ரெயின்லயே உயில் எழுதினார்.”

“இப்போ எப்படி இருக்கு ராமாவரம் தோட்டம். நீங்க சமீபத்துல போனீங்களா?”

“இல்லை. இந்த வழக்குத் தொடங்குறதுக்கு முன்னாடிப் போனது. அதே வீடுதான். அதை இப்போ போர்ஷன் போர்ஷனா பிரிச்சுட்டாங்க. மேலே உள்ள ரெண்டு மாடிகளும் இருவரின் கட்டுப்பாட்டில்; தரை தளம் ஒருவரின் கட்டுப் பாட்டில். ‘மாடிதானே உன்னுது. அப்படின்னா கீழே உள்ள படியைப் பயன்படுத்தாதே’னு தரை தளத்துல இருந்து மாடிக்குப் போற படிகளை ஒருத்தவங்க இடிச்சுட்டாங்க. உடனே மாடி போர்ஷனில் உள்ளவங்க, கார் பார்க்கிங்கல இருந்து மாடிப்படியைக் கட்டி முதல் மற்றும் ரெண்டாவது மாடிக்குப் போயிட்டிருக்காங்க.

“எம்.ஜி.ஆர் உருவாக்கின அ.தி.மு.க இரு அணிகளா பிரிஞ்சு இருக்கிறதை எப்படி பார்க்குறீங்க?”

“அவங்களுக்கு யோசனை சொல்ற அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை. ஆனாலும், எம்.ஜி.ஆர் குடும்பத்துப் பெண்ணா என் விருப்பத்தைச் சொல்றேன். சேச்சா இறந்து, அவரின் உடலை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு போன சமயம். என் மடியில் அழுதபடி படுத்திருந்த தோட்டத்தம்மாவை சந்திச்ச சோனியா காந்தியும் ராஜிவ் காந்தியும், ‘நீங்கதான் சி.எம் ஆகணும்’னு சொன்னது, இன்னும் நல்லா நினைவிருக்கு. பிறகு, தோட்டத்தம்மா சி.எம் ஆனாங்க. ஆனால், கட்சி இரண்டா உடைஞ்சி, இரட்டை இலைச் சின்னம் போயிடுச்சு. அப்ப எம்.ஜி.ஆர் ஆரம்பிச்ச கட்சி சிதைஞ்சிடக்கூடாதேனு தோட்டத்தம்மா ஜெயலலிதாவை சந்திச்சு அதிமுகவை ஒரே அணியாக்கினாங்க. இப்பவும் அதே சூழல்தான். அன்னைக்குமாதிரியே இன்னைக்கும் இரு அணிகளும் ஓரணியாகணும்.”

“எம்.ஜி.ஆர் கட்சி சிதைந்து விடக்கூடாது...”

“பி.எல்., எம்.எல்.னு நீங்க சட்டம் படிக்க உங்க வழக்குதான் காரணமா?”

“இந்த லீகல் சிஸ்டத்துல, சம்பந்தமே இல்லாம யார் வேணும்னாலும் உங்க மேல கேஸ் போடலாம். உங்க சொத்துகளை அபகரிச்சுக் கலாம்னு இருக்கு. அப்படியான சூழலைச் சமாளிக்க, ஒண்ணு... நாம அரசியல்ல சேரணும்; இல்லைன்னா வழக்குரைஞர் ஆகணும்.

எனக்கு அரசியல் தெரியாது. அதனால, இந்த வழக்குரைஞர் வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

என் வழக்கைப் புரிஞ்சுக்க நானே சட்டம் படிக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட என் வழக்குரைஞர்களுக்கு நான் ஜூனியர் மாதிரிதான். அப்பா ஸ்தானத்தில் உள்ள என் வழக்குரைஞர்கள்ல ஒருத்தரான தடா சந்திரசேகரன் சார், சகோதரர் ரூபன் உள்பட பலர்  சட்டம் படிக்க என்னை ஊக்கப்படுத்தினாங்க. நான் சிறையில் இருக்கும்போதும் என் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் குடும்பத்தைக் கவனிச்சுகிட்டாங்க. சந்திரசேரன் சார், ‘சீக்கிரமே வந்து ஜூனியரா சேர்ந்துடு’னு சொல்லியிருக்கார். என் வழக்கை நடத்தின வழக்குரைஞர்களுக்கு இந்த சமயத்துல நான் நன்றி சொல்லிக்கிறேன்.”

“அடுத்து என்ன திட்டம் வெச்சிருக்கீங்க?’’

“இரண்டு விஷயங்கள். எம்.ஜி.ஆர் உயிலைப் பற்றிப் பேசும் அளவுக்கு எனக்கு அருகதை இல்லை. ஆனா, எங்க அப்பா எழுதிய உயிலை மையமா வெச்சு சில விஷயங்களைப் பெற்றோர்களுக்குச் சொல்றேன். நீங்க உயிரோடு இருக்கும்போதே உங்க சொத்துகளை உங்க குழந்தைகளுக்குப் பிரிச்சு கொடுக்குற அளவுக்கு தைரியம் இருந்தா பிரிச்சுக் கொடுங்க. ‘இவங்களுக்குக் கொடுத்தா அவங்க கோவிச்சுப் பாங்களோ, உயிரோடு இருக்கும்போதே எல்லாத்தையும் ஒருத்தர்கிட்ட கொடுத்துட்டா பிறகு, கடைசி காலம் வரை நம்மை வெச்சுக் காப்பாத்த மாட்டாங்களோ’னு உங்களுக்குத் தோணுச்சுன்னா உயிலே எழுதாதீங்க.''