Published:Updated:

உயிர் மெய் - 6

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

முகப்பேர் ஏரி பூங்காவில் ஐந்தாவது சுற்றை முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் மூங்கில் காற்றைச் சுவாசிக்கலாம் என சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தேன். பக்கத்து பெஞ்சில் அந்தத் தாய்க்கும் மகளுக்கும் நடந்த சத்தமான உரையாடல் எட்டிப் பார்க்கவைத்தது. குண்டாக வியர்த்துப் போய் அமர்ந்திருந்தவளுக்கு அதிகபட்சம் 20-ல் இருந்து 21 வயது இருக்கலாம். இளங்காலையில் ஓடிவிட்டு, வேகமாக நடந்துவிட்டு உட்கார்ந்தால் கிடைக்கும் ஒரு பளிச் முகம் அந்தப் பெண்ணுக்கு இருந்தது. கையில் செல்போனுடன் இடுப்பில் வீட்டுச் சாவியைச் சொருகிக்கொண்டு பென்குவின்போல நடந்து வந்து அவள் அருகில் அமர்ந்தவர் அநேகமாக அவள் அம்மாவாக இருக்கக்கூடும். ``அந்தா பாரு... பின்னாடி, 8 போட்டுருக்காங்க. போய் அதுல பத்து சுத்து சுத்திட்டு வா... வெயிட் குறையும்; இடுப்பு தசை குறையும்; தைராய்டுக்கும் நல்லதாம். குரூப்ல ஷேர் பண்ணியிருந்தாங்க’’ என்ற அம்மாவுக்கு, மகளிடமிருந்து ஒரு முறைப்பு பதிலாக வந்தது. ``எனக்கு வாட்ஸ்அப்பில் உன்னைப்போல பெருசுங்க 11 போடச் சொல்லி வந்திருக்கு; நீ இந்தப் பக்கம் - அந்தப் பக்கம் திங்கு திங்குனு 11 போட்டுக் குதிக்கிறியா? வெயிட் குறையும்; மூட்டுவலியும் குறையும்’’ எனக் கோபமும் நக்கலுமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணின் கோபமான பேச்சில், ``இது தைராய்டைத் துரத்தும் ஓட்டம்’’ என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. காலை நடைப்பயிற்சி செய்கையில் நம்மில் பலர் இப்படி அழகான, கொஞ்சம் குண்டான, கூடவே முகத்தில் சிறிது பூனை மீசையுடன் ஓடிக்கொண்டிருப்போரைக் கடக்க முடியும். அவர்களில் ஒரு சிலரை கொஞ்சம் உற்றுப் பார்க்கையில், முகத்தோடு கண்களும் வியர்த்திருப்பதைக் காண முடியும். ஆம்! அந்தக் கண்ணீரின் பின்னணியில், `என்று ஒழியும் இந்த தைராய்டு சுரப்புக் குறைவு?’ எனும் கோபமும் கொப்பளிக்கும்.

உயிர் மெய் - 6

``எதுக்கு தைராய்டுக்கு மாத்திரை?’’

``கொஞ்சம் சுரப்பு குறைவு. உங்க TSH (Thyroid-Stimulating Hormone) அளவு கூடுதலாயிருக்கிறது. கருத்தரிக்க இந்தச் சுரப்பு ரொம்ப ரொம்ப அவசியம். நீங்க கண்டிப்பாக இந்த மாத்திரை எடுத்தாகணும்.’’
 
மேற்கூறிய இந்த உரையாடல்கள் இன்றைய கருத்தரிப்புக்கான மெனக்கெடலில் அதிகமாக மருத்துவருக்கும் கருத்தரிப்புத் தாமதமாகும் பெண்ணுக்கும் இடையே நடக்கும்.

``டாக்டர்! ஒண்ணு, `எனக்கு இன்னைக்கு உடம்புக்கு முடியலை’ங்கிறா. இல்லைன்னா, `இன்னைக்கு வேண்டாமே!’ங்கிறா. ஒருவேளை அவளுக்கு என்னைப் பிடிக்கலையோன்னு தோணுது’’ எனச் சொல்லும்போது, அநேகமாக இருவரின் முகமும் கவிழ்ந்துதான் இருக்கும். `ஆணுக்குத் தேவைப்படும்போதெல்லாம், விருப்பமும்  பிடிப்பும் கொஞ்சமும் இல்லாமல்கூட, புருஷன் என்பதால் உடலுறவுகொண்டு, வியர்த்துப் பழக்கப்பட்ட ஆணாதிக்க உலகில் இப்படியாகச் சொல்லி விலகி இருக்கவும் வாய்ப்புண்டா என்ன?’ என ஆச்சர்யமாயிருக்கலாம். ஆனால், இப்படியான விலகல் இன்று பெருகிவரும் நிதர்சனம். அவனைப் பிடிக்காதது அதற்குக் காரணம் அல்ல. அந்தச் சமயத்தில் மூளைக்குள் காதல் பூக்க மறுக்கும், தைராய்டு சுரப்பின் சீரற்ற அபஸ்வரங்களால்!

 ``இப்படியே தள்ளிப் போனேன்னா பின்னே எப்படி புள்ளை பிறக்கும்?’’ எனக் கோபத்தோடு குமுறும் ஆணுக்கும், ``இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ஜாலியா?’’ எனக் குதறும் சமூகத்துக்காகவும் அந்த `இருட்டுப் பொறியியல் தொழில்நுட்பத்தில்’,  உணர்வின்றி, உடன்படுகையில் பிறப்புறுப்பில் வலியும் இறுக்கமும் உயிரைப் பிடுங்கும். அந்த வலிக்கு Dyspareunia என்று பெயர். அந்த நேரத்தில் ஏற்படும் பிறப்புறுப்புத் தசைகளின் இறுக்கத்துக்கு vaginismus என்று பெயர். இரண்டுமே கருத்தரிப்புக்குத் தடையாக இருக்கும்.

உதட்டைக் கடித்துக்கொண்டும், அழுகையை அடக்கிக்கொண்டும் அம்மாவிடம் மட்டும் அந்த வலியை விசும்பிச் சொல்கையில், அவள் ``அதெப்படி இன்னமும்... மூணு வருஷம் ஆச்சு... அதெல்லாம் வலிக்காது. உனக்கு மனப்பயம். மாப்பிள்ளை எவ்ளோ தங்கமான குணம். கோபமா பேசும்போதே வலிக்காது. அது எப்படி?’’ எனப் பதிலளித்து நகரும்போது இன்னும் கூடுதலாக வலிக்கும். இந்த வலிக்கும், பிறப்புறுப்பின் அந்த நேர இறுக்கத்துக்கும் தைராய்டு கோளச் சுரப்புக் குறைவுக்கும் மிக முக்கியக் காரணம் என்பது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. அன்பால், ஆசையால் நெருங்கும் கணவனை `அதற்கு மட்டும் வேண்டாம்’ என விலக்குவதற்கு, பாசமோ நேசமோ குறைவதாக இருக்காது; தைராய்டு சுரப்புக் குறைவுகூட காரணமாயிருக்கக் கூடும். இருபாலருக்கும் அந்த உறவின் நாட்டத்தை அதிகரித்து மகிழ்வைக் கூட்டுவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது தைராய்டு சுரப்புதான். உடலுறவின்போது, நிகழவேண்டிய பெண்ணுறுப்பின் சுரப்பு, சரியாகச் சுரக்காமல் போவதற்கும் இந்த தைராய்டு சுரப்புக் குறைவு காரணமாக இருக்கலாம். இந்தச் சுரப்பு குறைகையில், இருவருக்குமே வரும் வலி, இந்த நிகழ்வில் காமத்தின் உச்சத்தை நோக்கி நகராமல், பாதியில் உயிர்த்தொழில் தடைபடும். இத்தனைக்கும் காரணமான தைராய்டு குறைவைச் சீராக்குவது, `குவா... குவா’ அவாவின் முதல் மைல்கல்.

தைராய்டு சுரப்புக் குறைவுக்கான மருத்துவத்தில் மிக அதிகமாகப் பேசப்படும் சொல், அயோடின். `அயோடின் பற்றாக் குறையால்தான் தைராய்டு சுரப்புக் குறைபாடு ஏற்படுகிறது’ எனச் சொல்லித்தான் தேசிய அயோடின் கொள்கையே அரசால் வகுக்கப் பட்டது. அயோடினைத் தண்ணீரில் கலந்துத் தரலாமா... பாலில் கலக்கலாமா? எனப் பலகட்ட ஆய்வில் கடைசியாக உப்புதான் சரியான ஊடகம் என முடிவு செய்யப்பட்டது. `உப்பு... உப்பேய்...’  என அது வரை வீதியில் வந்து விற்று, நாழியில் அளந்து தந்து, கௌரவமாக வணிகம் செய்த பல்லாயிரம் பேரை யூனிஃபார்ம் மாட்டி, உப்பு கம்பெனி வாசலில் காவலாளியாக்கினர். பத்து பதினைந்து கம்பெனிகள் மட்டும் இன்று பல ஆயிரம் கோடி உப்பு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். `அயோடைஸ்டு உப்பு மூலமா அயோடின் உடம்புக்கு வந்தா நல்லதுதானே?’ என்போரை உணவரசியலும் உலக அரசியலும் தெரியாத அம்மாஞ்சிகள் எனலாம். ``இன்று நாம் வாங்குவது உப்பு அல்ல. `அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனம்; இரண்டும் வேற வேற’’ என குய்யோ முய்யோ எனப் பல முறை கதறினாலும், இதுவரைக்கும் நம் நாட்டில் 10,000 கோடிக்கும் மேலான இந்த உப்பு ரசாயன வணிகத்தில் இருந்து பின்வாங்க யாரும் தயாராக இல்லை. உள்நாட்டு குருமார்கள் கம்பெனி, நாட்டு உப்பு விற்று காசுபார்க்க வரும்போது வேண்டுமானால், நம் ராஷ்ட்ரிய குருவுக்கு இந்த உப்புத் தப்புத் தாளங்கள் தெரிய வரக்கூடும். அது வரை நாம் யோகா, தவமெல்லாம் செய்வோம்.

``என்றைக்கு தைராய்டைக் கட்டுப்படுத்த அயோடின் உப்பு வந்ததோ, அதற்குப் பின்னர்தான் தைராய்டு கோள பிரச்னை இன்னும் அதிகமாகக் கும்மியடித்து கோலோச்சுகிறது’’ என்கிறார்கள் அறம்சார் சிந்தனையில் இன்னும் உள்ள பல மூத்த மருத்துவர்கள். ``அதுதான் கிடைக்க மாட்டேங்குதே... அயோடின் இல்லாத உப்புக்கு எங்கே போறது?’’ என்போருக்கு ஒரு சுளுவான ஐடியா. ஒரு தாம்பாளத்தில் நீங்கள் வாங்கிய அயோடின் சால்ட்டை விரவிவைத்து ஆறு மணி நேரம் வெயிலில்வைத்து எடுங்கள். அதிகபட்ச அயோடின், ஆவியாகிக் காணாமல் போய்விடும். இப்படி எளிய ஓர் உத்தியை சமீபத்தில் பகிர்ந்துகொண்டது, இந்த பிரச்னையை நெடுங்காலம் பேசிக்கொண்டிருக்கும் சென்னையின் மூத்த எண்டோகிரைனாலஜிஸ்ட் மருத்துவப் பேராசிரியர் சந்திரசேகர். ``இந்த அயோடின் கலந்த உப்பு சந்தைக்கு வந்த பிறகுதான், அதிக அளவில் தைராய்டு சுரப்புக் குறைவு நோயும், உடல் எடை அதிகரிப்பும், அதனால் பெருகும் கருத்தரிப்புத் தாமதமும், ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைக்கிறது’’ என்கிறார் அவர்.

``அய்யோ... அப்படீன்னா எல்லாமே டுபாக்கூரா?’’ என உடனே இதுவரை சாப்பிட்டு வந்த தைராக்சின் மாத்திரையைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம். உங்கள் மருத்துவரோடு பேசி, படிப்படியாகக் குறைக்க வேண்டும். நானோகிராம் துளியில் சுரக்கும் மிக நுட்பமான சுரப்புகள், சினைமுட்டையைக் காலத்தே கனியவைக்க, உடலுறவில் ஈடுபாடு வர, மிகமிக அவசியம். தைராய்டு சுரப்பு குறைந்திருக்கும் பட்சத்தில், சினைப்பைக்குள் சரியாக 14-ம் நாளில் சினைமுட்டை வெடிக்கும் நிகழ்வு நடக்காமல் போகக்கூடும். மாதவிடாய் வருவது மூன்று, நான்கு மாதத்துக்கு ஒரு முறை எனத் தாமதம் ஆகக்கூடும்.

தைராய்டு சுரப்பு, தமிழ் மருத்துவப் புரிதலில், `தீ தீ தித்திக்கும் தீ’யாக்கும். ஆம் `தீ’ எனும் தமிழ்ச்சொல்லுக்கு இன்னொரு பெயர் பித்தம். வாதம், பித்தம், கபம் எனும் மூன்று உயிர்த் தாதுக்களில் பித்தம் சீராக இருந்தால்தான் கருத்தரிப்பின் மொத்தமும் சரியாக நடக்கும். உடலுறவின் மகிழ்வுக்கும், சினைமுட்டை வெடிப்புக்கும், உயிரணுக்கள் ஓவ்வொன்றும் உசேன் போல்ட்டாக ஓடுவதற்கும், காதலில் காத்திருக்கும் பெண்ணின் பசலைக்கும், அரியரில் மூழ்கிய, `ஞே’ பேர்வழியும்கூட, அடுத்த சீனில் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் டிஸ்டிங்‌ஷன் வாங்கி பாகுபலியாவதற்கும், உடலின் பித்தம் தனிச் சிறப்போடு இருக்க வேண்டும். கொஞ்சம் அது ஓவராகப் போகும்போது, `அவனுக்குப் பித்தம் தலைக்கேறிடுச்சு’ எனும் வழக்குச் சொல்லாடல், இன்றும் நம் ஊரில் நடமாடுவது உண்டு. அன்று தமிழன் சொன்னவை அர்த்தமுள்ளவை.

இப்படித் தொன்மை சொன்ன பித்தம் சரியாக இருக்கவும், நவீனத்தின் தைராய்டு சுரப்பு சரியாக இருக்க வேண்டும். அதற்கு அதிகாலை மாத்திரை மட்டுமே போதாது. தொடர்ச்சியான நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், விபரீதகரணி முதலான சில யோகப் பயிற்சிகளை, காலையில் எழுந்தவுடன் பல் விளக்குவதற்கு முன்னதாக, வாட்ஸ்அப் விளக்கும் வழக்கத்தை நிறுத்திவிட்டு, செய்து வர வேண்டும். வேக நடையும், விபரீதகரணி ஆசனமும் வீதன (தைராய்டு) கோளத்தைத் தூண்டி சுரப்பைச் சீராக்கும் எனப் பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொஞ்சம் சுரப்புக் குறைவு உள்ளவர்கள் உணவைச் சமைத்து தாளிக்கையில், கடுகைப் போடக் கூடாது. கடுகுக் குடும்ப அட்டை உறுப்பினர்களான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் சமாசாரங்களையும் கொஞ்சம் விலக்கி வைக்க வேண்டும். கடுகு குடும்பம், சுரந்த தைராக்சினைச் சிதைக்கும்.

தைராய்டு சுரப்புக் குறைவில், இன்னொரு தலையாய பிரச்னை அதில் வரும் குண்டு உடம்பை இளைக்க வைப்பது. இன்று ``சுரப்பு அளவு ரத்தத்தில் சரியாக வந்துடுச்சு.

ஆனா, பருத்த உடம்பு குறையலையே...’’ என ஏக்கம்கொள்வோர் பலர். குண்டாக இருக்கும் அநேகம் பேர் உளவியல்ரீதியாக சிக்கலில் இருக்கிறார்களாம் அல்லது உளவியல்ரீதியாக சிக்கல் உள்ளவர்களில் அதிகம் பேர் குண்டாக இருக்கிறார்களாம். அதுவும் தைராய்டு நோயில் கொஞ்சம் மாதவிடாய் சீர்கெட்டு இருக்கும் மகளிருக்கு, குண்டு பிரச்னையும் தாழ்வு மனப்பான்மையும் ஒன்றாக ஒட்டியே இருக்கிறது. முதலில் குண்டாக இருப்பதைக் கொலைக் குற்றமாகப் பார்க்கும் மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். குதூகலமாக இருக்கும் குண்டுப் பெண்களுக்குக் குழந்தைப்பேறில் அதிகமாகச் சிக்கல் வருவதில்லை.

உயிர் மெய் - 6

கூனிக்குறுகி, குமுறி அழும் குண்டுப் பெண்களுக்குத்தான் ஹார்மோன் வதையும் பின்னி எடுக்கிறது.

எடைக் குறைப்பை மகிழ்வாகச் செய்ய எத்தனிக்கும் பெண்களுக்கு, அதை ஒட்டிய ஹார்மோனும் ஒரே சமயத்தில் சீராகும்.  `டொக்... டொக்... டொக்... பருவமே புதிய பாடல் பாடு... இளமையின்...’’ எனக் காலை இளங்குளிரில் கூடவே வழிந்து வழிந்து ஓடிவர, காதலன் வேண்டுமானால் வரக்கூடும். கணவர்கள் கண்டிப்பாக வருவதில்லை. எப்போதுமே எதிர்த் திசை எண்ணத்தில் பயணிக்கும் அவரை எழுப்பி, பழைய ட்ராக் ஷூட்டை உதறி மாட்டிவிட்டு, எரிச்சலோடு கிளப்பிவிட வேண்டாம். ஒவ்வொரு ரவுண்டிலும் வீட்டு இஎம்ஐ-யில் ஆரம்பித்து, வீட்டிலுள்ள அவர் அம்மாவுக்கு நீங்கள் டிக்‌காஷன் குறைவாகக் கலந்து தந்த காபியையும் கொலைக்குற்றமாகப் பேசிக்கொண்டே வரும் அவர்களோடு நடப்பதைவிட, தனியே மௌனமாக நடப்பது உடல் பாரத்தையும் மன பாரத்தையும் சேர்த்துக் குறைக்கும்.

``தைராய்டுக்கு நீங்க என்ன மாத்திரை சாப்பிடுறீங்க?’’ எனக் கேட்கும்போது, பலரும் பர்ஸில் மடித்துவைத்திருக்கும் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதிய பழைய நைந்துபோன பிரிஸ்கிரிப்ஷனை உதறிக் காட்டுவார்கள். அநேகமாக அந்தப் பனை ஓலையைப் படிக்க, கீழடி கமிஷனரைப் போய்ப் பார்க்கவேண்டி வரும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை சோதித்து, சரியான தேவைக்கு ஏற்றாற்போல் மருந்தை உட்கொள்வது மிகமிக அவசியம். இதன் தேவை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.

உயிர் மெய் - 6

தைராய்டு சுரப்புக் குறைவாக உள்ள குழந்தைகள் கணக்குப் பரீட்சையில் ரொம்ப வீக்காயிருப்பார்களாம். அதேபோல் இந்தச் சுரப்பு குறைவாக உள்ள தம்பதியர் காதல் கணக்கிலும் அசமந்தமாயிருப்பார்கள். பரீட்சையிலோ படுக்கையிலோ கொஞ்சம் அசமந்தமாயிருந்தால், தைராய்டு சுரப்பை சீர்படுத்தியே ஆக வேண்டும்... கொஞ்சம் மாத்திரைகளோடு, நிறைய பயிற்சிகளோடு, நிரம்பி வழியும் காதலோடு!

- பிறப்போம்...