Published:Updated:

சொல் அல்ல செயல் - 6

சொல் அல்ல செயல் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 6

அதிஷா

ம்மைச் சுற்றி என்னென்னவோ நடக்கிறது. ஆனால், நாம் எல்லா விஷயங்களுக்கும் கோபம்கொள்வதில்லை; எல்லாப் பிரச்னைகளுக்கும் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஏன், நாம் சில அத்துமீறல்களுக்கு மட்டும் கொதிக்கிறோம்; மற்ற விஷயங்களில் மௌனமாகக் கடக்கிறோம்.

மார்க்கெட்டிங் ரெப்பாக இருக்கிற ராஜேஷின் முகத்தில் நிலையான புன்னகை எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும். சில தினங்களாக எப்போதும் தயக்கமும் சோகமும் மௌனமுமாக இருந்தார்; கூட்டத்திலும் தனித்திருந்தார். இது, மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கான அறிகுறிகளில் ஒன்று. ‘`தம்மடிக்கறதா இருந்தா என்னைக் கிஸ் பண்ணக் கூடாது’’ என அவருடைய காதலி கண்டிஷன் போட்டபோது, சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு... ‘காதலியை விட்டுவிட்டேன்’ எனப் பெருமையாகப் பேசுபவர், தன்னுடைய புகைபிடிக்கும் பழக்கத்தையும் விட்டிருந்தார்.

ராஜேஷுக்கு பைக் ஓட்டும்போதும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அப்படித்தான் ஒருநாள் புகைபிடித்ததபடி தன் பைக்கில் சென்றுகொண்டு இருந்திருக்கிறார். கோயம்பேடு அருகே பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது புகைத்து முடித்த சிகரெட்டைத் தீக்கங்குகளோடு விட்டெறிந்திருக்கிறார். அது காற்றின் சுழற்சியில் வேகமாகத் திரும்பிப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு பைக் ஓட்டியின் ஹெல்மெட்டுக்குள் சென்றுவிட அந்த நபர் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே இறந்துபோய்விட்டார்.

சொல் அல்ல செயல் - 6

இதைச் சொல்லச்சொல்ல ராஜேஷ் அழத்தொடங்கிவிட்டார். ‘`நான் பண்ணினது ஒரு கொலை... ஒரு மனுஷனை என் கையால கொன்னுருக்கேன். எனக்கு சிகரெட்டைப் பார்த்தாலே பயமா இருக்கு...’’ என்று தவித்தார். என்றைக்குமே சிகரெட் ஒரு கொலைக்கருவியாக மாறி அவரை அச்சுறுத்தும் என எங்களில் யாருமே நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அதனாலேயே, ‘இனி எப்போதும் சிகரெட் பிடிப்பதில்லை’ என முடிவெடுத்திருப்பதாகச் சொன்னார்.

ஆளுயரச் சிகரெட்டாகவே வாழ்ந்துகொண்டிருந்தான் பிரபாகர். எந்நேரமும் அவன் தலை புகைந்துகொண்டே இருக்கும். அவன், சமீபத்தில் சிகரெட்டை விட்டுவிட்டான். அந்தப் பழக்கத்தைக் கைவிட்டதோடு அவன் நீண்ட தாடியையும் வளர்க்கத் தொடங்கியிருந்தான். ஆன்மிக நாட்டமெல்லாம் இல்லாத அவன், ஏதாவது சாமியாரின் பிடியில் சிக்கியிருப்பானோ என நாங்கள் சந்தேகித்தோம். அவனுடைய இந்தத் திடீர் மாற்றம் என்னை ரொம்பவே துணுக்குறச் செய்தது.

‘`நான் என்னுடைய நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்’’ என்றான் அமைதியாக.  நாம் கேட்க விரும்பாத சொற்களைக் கேட்க நேர்கையில் அது நமக்குப் புரிந்தாலும், புரியாமல் போய்விடவே எத்தனிப்போம். நானும் அதையே முயன்றேன். ‘`என்னடா சொல்ற’’ என்றேன். ‘`டாக்டர் எனக்கு கேன்சர்னு சொன்னார்டா...’’ என இறுக்கத்தோடு வந்தன வார்த்தைகள். அவனுடைய மாற்றத்துக்கான காரணம் அதுதான். இன்னும் சில நாள்களில், தான் இறந்துவிடுவேன் என்று உறுதியாக நம்பினான். வாழ்க்கையில் சேமிப்பைப் பற்றி எப்போதும் சிந்திக்கவே செய்திடாதவன், இப்போது எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிற பணத்தையெல்லாம் குடும்பத்துக்காகச் சேமிக்கத் தொடங்கி யிருந்தான். பத்தாண்டு வருமானத்துக்கான வழிகளை உருவாக்கத் தொடங்கியிருந்தான்.

அவனுக்கு சிகிச்சைகளில் நம்பிக்கையே இல்லை. ‘`நான் சாகப்போறேன். வீணா என்மேல காசு கட்டி வீணாக்காதீங்க. அந்தக் காசு என் குடும்பத்துக்கு வேணும்’’ என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான். ‘`எனக்காகச் செலவழிக்கிற காசைச் சேர்த்து வெச்சுக்கிட்டு, நான் செத்தப்பறம் என் குடும்பத்துக்கு ஏதாவது வேணும்னா கூட இருந்து பண்ணிக் குடுங்கடா’’ என்று திரும்பத்திரும்பச் சொன்னான். உண்மையில் அவனுடைய சொற்கள் எங்களுக்கான அச்சுறுத்தலாக இருந்தது.

நவீன இளைஞர்கள் மத்தியில், ஆணோ பெண்ணோ ஒவ்வொருவருக்கும் இருக்கிற விபரீத எண்ணங்களில் ஒன்றுதான் இது. தன்னையே மறக்கடிக்கிற எதிர்காலம் குறித்த அக்கறை. செத்துப்போனாலும் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்கிற நல்லெண்ணம். அந்த எண்ணம் அச்சமாக மாறி பிரபாகரை மரணத்திலும் கவ்விப் பிடித்திருந்தது.  நாமும்கூடப் பிரபாகருடைய நிலையில் இருந்தால் அப்படித்தான் சிந்திப்போம்...

அவனுக்கான சிகிச்சைகளைத் தொடங்கத் தீர்மானித்தோம். ஆனால், முதல் சில பரிசோதனைகளிலேயே அவனுக்கு கேன்சர் எல்லாம் இல்லை என்பது தெரியவந்தது. சாதாரண தொண்டைவலிதான். முதலில் சந்தித்த டாக்டர், பிரபாகரிடம் காசு பிடுங்க, எதையோ சொல்லிப் பயமுறுத்தி இருக்கிறார் என்பது தெரியவந்தது. அடுத்த நாளே பிரபாகர் தாடியை எல்லாம் மழித்துவிட்டு, ‘பளீச்’ எனத் திரும்பி வந்தான். பழைய உற்சாகம் அவனுக்குத் திரும்பிவிட்டது. எங்களுக்கெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சி. அவனே நினைத்துநினைத்து சிரித்துக்கொண்டே இருந்தான். பழையபடி மாறத்தொடங்கினான். ஆனால், சில வாரங்களிலேயே அத்தனை மாதங்களும் விட்டுவைத்திருந்த சிகரெட்டை மீண்டும் புகைக்கத் தொடங்கிவிட்டான். எல்லோர் முகத்திலும் நிகோடின் அபிஷேகம் செய்யத்தொடங்கினான்.

இங்கே, ‘சிகரெட் பிடித்தால் கேன்சர் வரும்’ என்று அதன் பாக்கெட்டிலேயே போட்டுவைத்திருக்கிறோம்; இருந்தாலும் நாம் காத்திருக்கிறோம். ‘`கேன்சர் வந்தா பாத்துக்கலாம்’’ என்கிற அலட்சியம் வெறும் சிகரெட் விஷயத்தில் மட்டுமல்ல... சமூகத்தின் ஆதி முதல் அந்தம்வரை விரவிக்கிடக்கிறது.

அதனால்தான் ராஜேஷ், சிகரெட் பழக்கத்தைவிட யாரோ ஒரு மனிதன் உயிரைவிட வேண்டியிருக்கிறது. சிகரெட் பிடித்தால் பேஸிவ் ஸ்மோக்கிங்கால் நமக்கு அருகில் இருப்பவர்கள் செத்துப்போவார்கள் என சிகரெட் பிடிக்கிற எல்லோருக்குமே தெரியும். இருந்தும், ஏன் அந்தப் பழக்கத்தைக் கைவிட மறுக்கிறோம். நாம், ஒரு பழக்கத்தைக் கைவிடவே நமக்கு வேண்டிய யாராவது சாகவேண்டும் அல்லது நாமாவது சாகவேண்டும்.

தோழி ராதிகா சில நாட்களுக்கு முன்பு போனில் அழைத்து, ‘`எனக்கு திடீர்னு தொப்பை பெருசாகிட்டே போகுது; வெயிட் கூடிட்டே போகுது. என்ன பண்ணலாம்’’ என்று அறிவுரை கேட்டார். அவருக்குச் சில உடற்பயிற்சிகளைச் சொல்லி எடை குறைப்புக்கான டயட் முதலானவற்றையும் அதற்குரிய நூல்கள், ஆன்லைன் தகவல் அனைத்தையும் பகிர்ந்துகொண்டேன். சில மாதங்களிலேயே அவருக்கு நல்ல ரிசல்ட் வந்துவிட்டது; ஓரளவு எடை குறைந்துவிட்டது. ரொம்பவே குஷியாகி விட்டார். ஏராளமாக நன்றி சொன்னார். சமீபத்தில் அவரை மீண்டும் சந்தித்தபோது அவருக்குத் தொப்பை வந்துவிட்டிருந்தது... நன்றாகவே குண்டாகி இருந்தார். விசாரித்தால், ‘`வெயிட்தான் குறைஞ்சிடுச்சேனு, எதுவுமே பண்றதில்லப்பா, டைம் வேற இல்ல... மறுபடியும் ஸ்டார்ட் பண்ணணும்’’ என்றார். மீண்டும் ஒருமுறை நன்றாகக் குண்டாகி நான்கு பேர் விசாரித்தால்தான் ராதிகா பழைய உடற்பயிற்சிகளுக்குள் செல்வார். நமக்கு எப்போது அவசரமோ, அப்போது எப்படியோ நமக்கான நேரமும் கிடைத்துவிடுகிறது. ராதிகா மட்டும் அல்ல... நாம் எல்லோருமே அப்படித்தான்.

சொல் அல்ல செயல் - 6

தன்னுடைய வாழ்வின் 50 ஆண்டுகளில் நடைப்பயிற்சியே செய்திராத ராகவன் ஒருநாள் திடீரென்று நடைப்பயிற்சிக்கு வர ஆரம்பித்தார். அதிர்ச்சியாகி விசாரித்தபோது, ‘`சர்க்கரை நோய்’’ என்றார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த நடைப்பயிற்சி செய்கிற இடங்களுக்குச் சென்று கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலும், ஓர் உண்மை தெரியும். குண்டாக இருப்பவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் என நம்முடைய நடைப்பயிற்சிப் பகுதிகள் இவ்வகை நோயாளிகளால் நிறைந்து இருக்கும். தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்கிற ஆரோக்கியமான மனிதர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ‘`ஏன் பாஸ், டெய்லி வாக்கிங் போறீங்க... சுகரா, பீபியா’’ என்று சகஜமாகக் கேட்கிற மனிதர்களை எப்போதும் கடக்கிறேன்.

ஏன் நாம் எப்போதும் ஆபத்து, வாசலுக்கு வந்து கதவைத் தட்டும்வரை காத்திருக்கிறோம்? அது, செ.மீ கேப்பில் வரும்போதுதான் தீர்வுகளை நோக்கி அவசரமாக ஓடுகிறோம். ஏன்?

பத்து வாரங்களாகப் பல்வலி இருந்தாலும் பதினொன்றாவது வாரம் அது மூளைவரை தாக்க ஆரம்பிக்கும்போதுதான் போய்க் காட்டுவோம். பல் வலி தொடங்கி கேன்சர் வரைக்குமே நம்முடைய சிகிச்சைகள் எல்லாமே அப்படித்தான். ஆனால், பள்ளிகளில் `ப்ரிகாஷன் இஸ் பெட்டர் தேன் க்யூர்' என்பதை மட்டையடி அடித்து மனப்பாடம் செய்துவைத்திருக்கிறோம். கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறோம். ஆனால், தன்னளவில் மட்டுமல்ல... குடும்பத்திலும் சமூகத்திலும்கூட இதே `வரும்போது பாத்துக்கலாம்' பாணியைத்தான் கடைப்பிடிக்கிறோம்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து எப்போதும் நமக்குக் கவலைகள் உண்டுதான். இரவுப் பணிக்கு மகளை அனுப்பிவிட்டு இரவெல்லாம் தூங்காமல் விழித்திருக்கும் பெற்றோர்களை எங்கும் காணலாம். பத்து நிமிடம் வீட்டுக்கு வரத் தாமதமானாலும் நம் வீட்டுப் பெண்களை நினைத்து அஞ்சி நடுங்காதவர்கள் நம்மில் யார்? பெண்கள் மட்டுமல்ல... குழந்தைகள் விஷயத்திலும் அது பொருந்தும். ஆனால், அதற்காக ஒரு துரும்பையும்கூட அசைக்க மாட்டோம்.

சுவாதி மாதிரியான ஒரு பெண் பட்டப்பகலில் நாம் தினமும் பயணப்படுகிற ஒரு ரயில் நிலையத்தில் வைத்து வெட்டிச் சாய்க்கப்படும்போதுதான் அலறித் துடிப்போம்; நிர்பயா மாதிரி ஒரு பெண் இறந்துபோகும்போதுதான் பெண்களின் பாதுகாப்புக் குறித்து சிந்திக்கவே தொடங்குகிறோம்; ஆளாளுக்கு ஆண்ட்ராய்டில் ஆப்ஸ் தொடங்கி, சி.சி.டி.வி கேமராவரை சகல பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியும் விவாதிப்போம்; பள்ளிகளில் பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும் எனப் புயலாக புறப்படுகிறோம். மற்ற நேரங்களில் எல்லாம் அதைப்பற்றி ஏன் நாம் சிந்திப்பதே இல்லை? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்பயாக்களும் சுவாதிகளும் நகரங்களில் மடியவேண்டுமா? ஒவ்வொரு நாளும் தினச்செய்திகளில் எத்தனையோ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மடிந்தாலும், நகரத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற ஓர் இடத்தில் அந்தக் கொலை நிகழவேண்டும்; நம்மைப்போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் மடியவேண்டும். அப்போதுதான், நமக்குக் கொஞ்சமாவது சுரணைவந்து எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்துவோம். எங்கோ மதுரை - தேனிப் பக்கம் முட்புதர்களுக்கு நடுவே கொல்லப்பட்டு மரித்துப்போகும் மாரியம்மாள்களைப் பற்றி பிரக்ஞையே இன்றிக் கடந்துசெல்வோம்... இல்லையா?

நம் குழந்தைகள் படிக்கிற பள்ளிகள் பாதுகாப்பானவையா, அங்கே எந்த இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொள்கிற வசதிகள் உண்டா, அங்கே மைதானம் இருக்கிறதா, பள்ளிக்கு அருகே டாஸ்மாக்குகள் இயங்குகின்றனவா, அந்த டாஸ்மாக்குகளில் பள்ளிச் சிறுவர்கள் குடிக்கிறார்களா என எப்போதாவது நேரில் சென்று ஆய்வுசெய்ய நமக்குத் தோன்றியிருக்கிறதா, அல்லது நம்மை ஆளும் அரசுகளுக்காவது? நமக்கெல்லாம் அப்படி ஒரு மனநிலை வர கும்பகோணத்தில் 94 குழந்தைகள் தீயில் மடிந்து சாகவேண்டும். அப்போதுதான் அய்யோ... நம் பிள்ளைகள் படிக்கிற பள்ளிகள் எல்லாம் எப்படி இயங்குகின்றன, நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்று பதறுவோம்.

அரசும்கூட மீண்டும் ஒருமுறை இத்தகைய விபத்து நிகழாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என அறிக்கை மட்டும் விடுவார்கள். ஆனால், இன்றுவரை பள்ளிகளின் பாதுகாப்பின்மை அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன? வீட்டுக்கோ... வகுப்பறைக்கோ ஒரு மாணவன் குடித்துவிட்டுப் போதையில் வந்து புரளும்வரை நாம், பள்ளிகளுக்கு அருகில் இருக்கிற டாஸ்மாக்குகள் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம். நமக்கு அதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதில்லையே, ஏன்? நாம் எதற்காகக் காத்திருக்கிறோம்?

நம் பிள்ளைகள் பயணிக்கும் பேருந்துகள் நல்ல நிலையில்தான் இருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்ள பேருந்தில் இருந்த துளை வழியாக விழுந்து ஒரு குழந்தையாவது மடிந்து போகவேண்டும். ஒவ்வொரு நாளும் ஆட்டோக்களில் குழந்தைகளை மந்தை ஆடுகளைப்போல அமுக்கிப் பிதுக்கிப் பள்ளிக்கு அனுப்புகிற பெற்றோர்கள், அதில் இருக்கிற ஆபத்தை ஏன் உணர்வதேயில்லை? காரணம் நாம் காத்திருக்கிறோம்... பெரிதாக ஏதாவது நிகழட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற அலட்சியம்.

சென்னையே வெள்ளத்தில் சிக்கிச் சீரழிந்தது. இளைஞர்கள் எல்லாம் வீதிக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குப் பிறகு என்ன செய்தோம்? இதுமாதிரியான வெள்ளம் வரும்போது கடலில் கலக்கும் நீரைச் சேமிக்கிற திட்டங்கள் நம்மிடம் உருவாகி இருக்கவேண்டும் இல்லையா? குப்பைமேடாகும் நீர்நிலைகளைத் தூர்வாரி மீட்கிற நடவடிக்கைகளில் இறங்கி இருக்க வேண்டும் இல்லையா... நாம் என்ன செய்தோம்? காத்திருந்தோம். இதோ, இப்போது சென்னைப் புறநகர் எங்கும் நிலத்தடிநீர் வற்றிவிட்டது. எங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.

குவாரிகளில் தேங்கி இருக்கிற நீரையெல்லாம் எடுத்து மக்களுக்கு விநியோகிக்கிறோம். பல கோடி ரூபாய் செலவழித்து கடல் நீரைக் குடிநீராக மாற்றச் செயல்படுகிறோம். கையில் குடத்தோடு தண்ணீருக்காக நாலு தெரு அலையும்வரை நமக்குத் தண்ணீர் குறித்த அக்கறையே வராது. அதுவரை நாம் ஏரிகளை ஆக்கிரமித்து ஃப்ளாட் போட்டு விற்றால், ஆவலோடு ஆம்னி பஸ்ஸில் போய் அட்வான்ஸ் புக்கிங்தான் பண்ணிக்கொண்டிருப்போம். ஏரிகளைக் குப்பைத்தொட்டிகளாக மாற்றினால் நாமும் நம் பங்குக்கு இரண்டு மூட்டை குப்பைகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்போம்.இதையெல்லாம் எதிர்த்து எப்போது குரல் கொடுக்கப்போகிறோம்? கடைசித் துளி நீரும் வற்றியபிறகா?

காசு இருக்கு... தண்ணீரை வாங்கிக் கொள்ள லாம். பணம் இருக்கு... பார்த்துக்கொள்ளலாம் என்கிற அலட்சியம்தான் நம்மை எதுவுமே பெரிதாக நடக்கும்வரை காத்திருக்கவைக்கிறதா?

சொல் அல்ல செயல் - 6

நமக்கு நடக்கட்டும், நாம் பாதிக்கப்பட்டபின் பார்த்துக்கொள்ளலாம் என்கிற அலட்சியம்தான், நம்மைச் சுற்றி நிகழும் எல்லா அநியாயங்களையும் ஊழல்களையும் அத்துமீறல்களையும் கண்டும்காணாமல் நம்மைக் கடக்கவைப்பதன் வேர்க்குணம்.

நாம் இயல்பிலேயே எது வசதியானதோ, எது நமக்குப் பாதுகாப்பானதோ, எது நம்மைத் தொந்தரவு செய்யாதோ, எதற்காக நாம் கொஞ்சம்கூட மெனக்கெடத் தேவையில்லையோ அதற்குள்ளேயே வாழப் பழகியிருக்கிறோம். அதனாலேயே ஒரு சின்ன மாற்றம் நிகழவேண்டும் என்றாலும், அது நேரடியாக நம் வீட்டு வரவேற்பறையில் ரத்தமும் சதையுமாக நிகழும் வரைக்கும் காத்திருக்கிறோம். தன்னளவில் தொடங்குகிற இந்த அலட்சிய மனோபாவம்தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது. நம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி நாம் எதற்கெல்லாம் போராடவேண்டும் என்பதுவரை அது நீள்கிறது.

- கேள்வி கேட்கலாம்...