Published:Updated:

உயிர் மெய் - 7

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன், படங்கள்: அருண் டைட்டன், உ.பாண்டி

நிலங்கள் வறண்டு வெடித்திருந்தபோதும், குளங்கள் வற்றிப்போய், தண்ணீருக்குப் போக குறுக்குப் பாதையான பின்னரும், கிராமங்கள் இன்னும் அழகாகவே இருக்கின்றன. இன்றும் ரயில் தண்டவாளத்தை அறுத்துத் தொங்கவிட்டுக்கட்டி, மணி அடித்து, குதூகலப்படுத்தும் அந்தக் கிராமத்து மேல் நிலைப்பள்ளி கூடுதல் அழகாகவே இருந்தது.

உயிர் மெய் - 7

பரிசு வாங்க வரிசையாக, மேலாடையாக அண்ணனின் லூஸான சட்டையையும், கீழே கத்தரிப்பூ பாவாடையும் போட்ட பெண் குழந்தைகள்தான் அதிகம் நின்றனர். பையன்கள் ஆங்காங்கே கொஞ்சூண்டு மட்டுமே. அநேகமாக முதலிடங்கள் துளசிகளுக்கும் கோமதிகளுக்கும்தான். வழக்கமாகச் சென்னையில் தென்படும் பெண் குழந்தைகளையும் வரிசையாக வந்த கிராமத்துப் பெண் குழந்தைகளையும் மருத்துவனாக மனம் ஒப்பிட்டது. அநேகம் பேர் மெலிந்து, வற்றலாக, ஒட்டிய கன்னத்தோடும் வெளுத்த  கண்களோடும் நின்றுகொண்டிருந்தனர். நிறத்தில் கறுத்தும் உயரத்தில் சிறுத்தும் நின்ற அந்தப் பல குமரிகள் ஏன் இவ்வளவு மெலிவாக...? அந்தக் கண்களில், முகத்தில் ஏன் கொஞ்சம் கூடுதல் வெளுப்பு?

``4:30 மணிக்கெல்லாம் லாரி வரும் சார். அவங்க அப்பா, அம்மா கூலிக்கு அதில் ஏறணும் சார். இதுகளுக்கு பெரும்பாலும் காலை சாப்பாடு கிடையாது. நேரடியா மத்தியான சத்துணவுதான். சில நேரம் ஸ்கூலுக்குப் பக்கமா இருக்கிற அங்கன்வாடியில குடுக்கிற சத்து உருண்டையை தம்பி, தங்கச்சிக்கு வாங்கும்போது ஆளுக்கு ஒரு உருண்டை இவங்களுக்கும் கிடைக்கும் சார். அதுதான் இவங்க காலை சாப்பாடு. எப்பனாச்சும் கிடைக்கும் அந்த உருண்டையால எப்படி சார் எப்பவுமே சத்து கிடைக்கும்? சோகையையும், மாசவலி வர்றப்ப சுருண்டு படுத்து அழுவுறதையும் எங்க பிள்ளைங்ககிட்ட அடிக்கடி பார்க்கலாம்’’ என அக்கறையாகச் சொன்ன அந்த அரசுப் பள்ளியின் கனகா டீச்சரும் கொஞ்சம் கண்ணில் குழிவிழுந்து, மெலிந்துதான் இருந்தார்கள்.

விழா முடிந்து கிளம்புகையில், அந்த டீச்சர் கேட்ட கேள்வி இன்னமும் மனசுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ``காலை உணவாக பிள்ளைக்கு இட்லி, தோசைல்லாம் செஞ்சுதர முடியாது சார். ராத்திரி சமைக்கிறதுல காலையில சாப்பிடற மாதிரி எங்க பிள்ளைகளுக்கு என்னல்லாம் குடுக்கலாம்? கொஞ்சம் சொல்லுங்க...’’ என அந்த டீச்சர் கேட்ட கேள்வி  நான் சந்தித்த மிகக் கடினமான கேள்வி. `சாண்ட்விச் வேண்டாம், பர்கர், பீட்சா வேண்டாம்' என ஒருபக்கம் சொல்லித்திரியும் எனக்கு, கஞ்சியோ, கூழோகூட சரியாகக் கிடைக்காமல், `எல்லாம் மதியம் சத்துணவுல சேர்த்து சாப்பிட்டுக்கலாம்’ என்று இருக்கிற கணிசமான ஒரு குழந்தைகள் உலகம் (கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேல்) இருப்பது வலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ரத்தச்சோகையில் இருப்பவர்கள். இன்னமும் இந்தியக் கிராமங்களில் மிக அதிகமாக அலட்சியப்படுத்தும் நோய்க் கூட்டத்தில் முதலானது ரத்தச்சோகை.

இரும்புச்சத்து குறைவு என்பது, ரத்தச்சோகை முதல் உயிரையும் மெய்யையும் உருக்குலைக்க வைக்கும் நோய்கள் வரை நிறைய நோய்க் கூட்டங்களுக்கு அடித்தளம். இன்றைக்கும் இந்தியக் கிராமங்களில்,  கருத்தரிப்பு தாமதத்துக்கு மிக அடிப்படையான காரணம் காதல் குறைவோ, காமக் குறைவோ அல்ல. இரும்புச்சத்து குறைவும் ஊட்டச்சத்து குறைவும்தான்.

உயிர் மெய் - 7

`தன் வயிறு பருக்காதா?' எனக் கண்ணீருடன் குழந்தைவரம் வேண்டி, எழிலைப்பாலை மரத்தில் தொட்டில் கட்டி, கல்லாய் இருக்கும் அந்த மரத்தடிச் சாமிக்கு, ஈரச் சேலையுடன் அங்கப் பிரதட்சணம் செய்து, மண்சோறு சாப்பிடுவதற்கு, அந்நாளில் வயிறாற  நித்தம் ஒரு வாய் சாப்பிடாமல் போனதுதான் முக்கியக் காரணம். நகர்ப்புறத்தில் உயிரை உருக்கும் Mall-nutrition (பீட்சா, பர்கர் சாப்பிடும் குண்டுக் குழந்தைகளுக்கு ஏற்படுவது) என்றால், இன்னமும் பல தமிழகக் கிராமங்களில் மெய்யை உருக்கும் Malnutrition (கஞ்சிக்கும் வழியில்லாமல் மெலிந்த குழந்தைகளின் நிலை) முக்கியக் காரணம். வலியின் ஒலி ஒன்றுதான்; மொழிதான் வேறு வேறு.

யூனிசெஃப்பின் அறிக்கையின்படி, இந்தியக் குழந்தைகளில் 45 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் ரத்தச்சோகையிலும் ஊட்டச்சத்துக் குறைவிலும் இன்னும் இருக்கிறார்கள். ரத்தச்சோகை தீர்க்கப் படாமல்  நீடித்து இருக்க இருக்க,  சினைப்பையில் சினைமுட்டையின் வளர்ச்சி (Ovulation) குறைவதும், கருப்பையின் உட்சுவர் (Endometrium) தடிப்பு குறைவதும் அதிகரிக்கும். சில நேரங்களில் உதிரப்போக்கை அதிகரிக்கவைக்கும். பல நேரங்களில் உதிரமே போகாமல், உடலை வீங்கவும் வைக்கும். கூடவே, இளமையில் தவறாமல் மாதவிடாய் வரும்போதெல்லாம் பிறக்கும் குத்துவலியையும் (Dysmenorrhea), திருமணமான பின்னர் குழந்தைக்காகக் காத்திருக்கையில், `சனியன் சரியாவே வந்துக்கிட்டு இருக்கு' எனக் கடும் மனவலியையும் தரக்கூடும் இந்தச் சோகை.

இதே ரத்தச்சோகை ஆணுக்கு வருகையில், விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.  அதன் தரத்தையும் சிதைக்கும் (Oligo-astheno-terato-zoospermia); உயிரணுக்களோடு உறவாடிவரும் பல சுரப்புகள் வற்றிப்போதல், உயிரணு நோஞ்சானாக, உடைந்து நொறுங்கி இருத்தல்... எனப் பல காரணங்களுக்கு சாதாரண ரத்தச்சோகை சதிசெய்யும்.

 சோகையினால் அதிக ரத்தப்போக்கு, பின்னர் அதிக ரத்தப்போக்கினால் தொடரும் சோகை... தமிழகக் கிராமத்துப் பெண்களில் பலருக்கும் தொடர் பிரச்னை. `எளிய கம்பங்கூழில் இரும்புச்சத்தை ஏராளம் பெற முடியும். அரிசியை விட கம்பில் எட்டு மடங்கு இரும்புச்சத்து உண்டு. சோளத்தில் இல்லாத புரதச்சத்தா? மாட்டுக்கு மட்டும் அதைப் போடணுமா? சோளப் பணியாரத்தையோ, புட்டையோ, தோசையையோ சாப்பிட்டுவிட்டு இந்தச் சோகையையும் புரதச் சத்துக் குறைவையும் தீர்க்க முடியாதா?' என்றெல்லாம் சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கையில், இடையிடையே விளிம்புநிலை மனிதனின் குரல், இதை மறுத்து ஒலிக்கிறது.

``சார்! சோளம், கம்பு, தினை எல்லாம் சரி! எவன் வாங்கித் திங்க முடியும்? என்ன விலை தெரியுமா சார் உங்களுக்கு? ரேஷன் கடையிலயா போடுறாங்க? பாலீஷ் செய்யப்பட்ட 20 கிலோ அரிசிதானே அங்கே இலவசமாகக் கிடைக்குது. அதைத்தான் திங்க முடியும்...’’ என்ற அந்தக் குரலில் உள்ள வலியை,  பெர்முடாஸ் போட்டுக் கொண்டு அண்ணா நகர் ஆர்கானிக் கடையில் ஏறிவந்து, ``இந்த மில்லட்ஸுக்கெல்லாம் ஆர்கானிக் சர்டிஃபிகேட் இருக்கா? ஆக்சுவலாவே இது ஆர்கானிக்கா என்ன... எப்படி நம்புறது?’’ எனக் கேட்கும் கணினிக் கணியன்களுக்கு சத்தியமாகத் தெரியாது. நைந்துபோய் நிற்கும் உழவன் மகனுக்கு ஏனோ தினையும் சாமையும் இப்பவும் கைக்கெட்டிய தூரத்தில் இல்லை. அதனால் மெய்யில் இப்போது இல்லாத ஊட்டம், பின்னாளில் உயிரணுவில் ஊட்டமில்லாமல் போக வழிவகுக்கிறது.

சோகையை அடுத்து நம் கிராமத்து ஏழைப் பெண்ணின் கருத்தரிப்புக்கு மிக முக்கியத் தடையாக இருப்பது, சிறுவயதில் ஏற்பட்ட, சரியாக மருத்துவம் செய்யப்படாத காசநோயும், அதனால் வரும் கருக்குழாய் அடைப்பும்தான்.

``உங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்காமல் இருப்பதற்குக் காரணம், சினைப்பைக் குழாய் அடைப்பு (Cornual block - bilateral); நீங்க சின்னப் புள்ளையில பிரைமரி காம்ப்ளெக்ஸுக்காக மருத்துவம் செய்திருக்கிறீர்களா?’’ போன்ற கேள்விகள் இப்போது கருத்தரிப்பு தாமதத்தில் மிக முக்கியமான பங்குவகிப்பவை.

உயிர் மெய் - 7

பொதுவாகவே, இப்போது மிகத் துல்லியமாகத் தீர்க்கக்கூடிய மருத்துவமாக காசநோய் மருத்துவம் மாறிவிட்டாலும்கூட, இன்றைக்கும் இந்த நோய் சமூக அவமானமாகவே கருதப்படுகிறது. பெரும்பாலான டாக்டர்களும் ``அதெல்லாம் உங்களுக்கு இல்லை’’ என்பதும், ``எனக்கா இருக்கவே இருக்காது?’’ என நோயாளியும் வலிந்து சொல்வதும் இந்த நோய்த் தாக்கத்தில் அதிகம் நடக்கும். விளைவு? இன்னமும் இந்தியாவில் தலைவிரித்தாடும் நோயாகவே காசநோய் இருந்து சாதனை படைத்துவருகிறது. சரியாகத் தீர்க்கப்படாத காசநோயின் பல்வேறு பிரச்னைகளில், மிக முக்கியமானதுதான் காசநோயால் ஏற்படும் கருக்குழாய் அடைப்பு. உலகச் சுகாதார நிறுவன ஆய்வின்படி, கென்யா, செனகல் முதலிய நாடுகளின் பெண்களுக்கான கருக்குழாய் அடைப்புக்கு, திருமணத்துக்கு முந்தைய உடலுறவில் அந்தப் பெண்கள் பெறும் `கோனோகாக்கல்` (Gonococcal) பாலியல் நோய் காரணமாயிருக்க, நம் ஊரில் பெரும்பாலும் வறுமையில் ஊட்டச்சத்து குறைவில் பெறும் காசநோய்த்தொற்று காரணமாக இருக்கிறது.

நகரத்து மக்களின் கருத்தரிப்பு தாமதத்துக்கான காரணம், அவர்களின் அணுகுமுறை. அதன் வணிகம், அதன் அரசியல், அதன் கண்ணீர், அதன் வலி ஒருவிதம். அதுவே நம் கிராமத்தின் முகமற்ற கோடானுகோடிக் கூட்டத்தின் குழந்தைப்பேறு இன்மையின் வலி வேறுவிதம். முன்னதைக் காட்டிலும் மிகக் கொடூரமானது, ஆணாதிக்கத்தின் உச்சமும், அரளிவிதையின் மிச்சமும் நிறைந்தது. வீதியில் நிற்றலில் இருந்து, விளக்கேற்றுவது வரை அத்தனை சாதாரண நகர்வுகளில் இருந்தும் திருமணம், வளைகாப்பு முதலான அத்தனை சமூகச் சடங்குகளிலிருந்தும் ஒதுக்குவது வரையிலான காட்டுமிராண்டித்தனம் இன்னமும் இந்த நானோ யுகத்திலும் புரையோடிக்கொண்டுதான் இருக்கிறது. அரை மானிப்பிடி கம்பும், ஒரு கைப்பிடி எள்ளும், இரண்டு கட்டுக் கீரையும், இரு துண்டு மீனும் இளமையில் கிடைக்காத வறுமை, சில நேரங்களில் ஆணுக்கு வயிற்றுப் பிரச்னை மட்டுமே; பெண்ணுக்கு வாழ்நாள் பிரச்னை.

உயிர் மெய் - 7

ஆம்! சோகை, காசநோய் இந்த இரண்டும் நம் ஊரில் தலைவிரித்தாட மிக முக்கியக் காரணம், வறுமையும் ஊட்டச்சத்துக் குறைவும்தான். எடைக்கு எடை துலாபாரத்தில் கோயிலுக்குப் புதுப்பத்து ரூபாய்க் காசு போடுபவர்கள், திருப்பதி உண்டியலுக்கு படியில் ஏறி புது இரண்டாயிரம் ரூபாய் கட்டைப் போடுபவர்கள், 60 அடி ஆஞ்சநேயருக்கு பசு வெண்ணெய் சார்த்தலாம் என நேர்ந்திருப்பவர்கள், நேர்த்திக்கடனை முடித்துவிட்டு, நேரே ஓர் எட்டு உங்கள் ஊர் அருகாமை கிராமத்து அங்கன்வாடிக்கு வாருங்கள். அந்த அங்கன்வாடியில், `தம்பிக்கு மட்டும் தரப்படும் சத்து உருண்டை... இன்றைக்கு எனக்கும் ஒன்று சேர்த்துத் தர மாட்டார்களா?' எனப் பசியோடு காத்திருக்கும் வரிசையை ஒரே ஒரு முறை பார்த்து வாருங்கள். `ஏன் இப்படி... இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என உங்களுக்குள் எழும் ஒரு சின்னக் கேள்வியில் எல்லா சாமிகளின் வயிறும் நிச்சயம் நிறையும். அந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலில், அந்த வரிசையில் நிற்கும் ஏழைக் குழந்தையின் வயிறு நிறையும்; வருங்காலத்தில் அதன் திருமணத்துக்குப் பின்னர், அதே வயிறு எந்தச் சிரமமும் இன்றி வாரிசைச் சுமக்கும்.

- பிறப்போம்...

கருக்குழாய் அடைப்பு

கருக்குழாய் அடைத்துள்ளதா என அறிய Tube test (HSG Test) செய்வது இன்றைய கருத்தரிப்புக்கு உதவும் சிகிச்சையில் மிக முக்கிய சோதனை. அதில் ஒருவேளை அடைப்பு உள்ளது என முடிவு வந்தால், பதற வேண்டியதில்லை. வெளியிலிருந்து செலுத்தப்படும் சோதனைத் திரவத்தை ஏற்க மறுத்து, இறுகிக்கொள்ளும் இயல்பாகக்கூட அது இருக்கலாம். இயல்பான உடலுறவில் விந்து உள்ளே செல்கையில் அப்படி தசை இறுக்கம் ஏற்பட்டு அடைபடாமல் இருக்க நிறையவே வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் காசநோய்க்கான, பிற நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் முழுமையாக அடைப்பு விலக நிச்சயம் வாய்ப்பு உண்டு. `Bilateral Tubal Block’ என சிகிச்சை முடிவு வந்த பின்னர், இயல்பாகக் குழந்தைப்பேறு அடைந்த மகளிர் நம்மிடையே நிறையப் பேர் உண்டு. கருக்குழாயை விரித்துவிட அறுவை சிகிச்சை மட்டுமல்ல, அன்புச் சிகிச்சையும்கூட உதவக்கூடும்.