Published:Updated:

சொல் அல்ல செயல் - 7

சொல் அல்ல செயல் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 7

அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான்

க மனிதன் குறித்த நம்முடைய பார்வைதான் அவனுக்கான நீதியையும் உருவாக்குகிறது. அதுதான் அவன் மீதான அன்பையும், நேசத்தையும் உயர்த்தவோ தாழ்த்தவோ செய்கிறது. மலம் அள்ளுபவன் தாழ்ந்தவன், மதுபான ஆலை வைத்திருப்பவன் உயர்ந்தவன் என்கிற எண்ணம் எல்லாம் உருவாவது நம் பார்வையைப் பொறுத்துதான் இல்லையா?

கூகுளுக்கு ட்யூஷன் எடுக்கிற அறிவுக் களஞ்சியன் சதீஷ். எகனாமிக்ஸ் தொடங்கி இன்ஜினீயரிங்வரை எல்லாமே அத்துப்படி. சுஜாதாவைப்போல கற்றதையும் பெற்றதையும் எந்நேரமும் கடத்தி வாழும் கலகலப்பு கண்டக்டர். கையில் ஐந்து ரூபாய் இல்லையென்றாலும்கூட கவலையேபடாமல் வெள்ளந்தியாகத் திரிகிற ஏழை ஓவியன். `லாஸ்ட் சப்பர்னாலே டாவின்ஸிதான் என்று எல்லாரும் சொல்வாங்க... நீ டின்டோரெட்டோனு ஒருத்தரப் பத்தி கேள்விப்பட்டிருக்கியா...' என்று ஆரம்பித்து, சடசடவென சுயநலமே இல்லாமல் பெய்கிற மழை மாதிரி விஷயங்களைப் பகிர்ந்துகொள்வான். பகிர்ந்துகொள்வதற்காகவே வளர்த்துக்கொண்ட அறிவு, காட்டுமரத்தின் பழங்களைப்போல பரிசுத்தமானது.

சதீஷூம் நானும் உற்சாகமாக `நார்கோஸ்' தொலைக்காட்சித் தொடர் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் அவனுக்கு அழைப்பு வந்தது. பேசத்தொடங்கிய சில நிமிடங்களில் சதீஷுக்கு முகம் மாறத் தொடங்கிவிட்டது. அவன் முகம் அப்படிச் சிவந்து, கோபமாகி எரிச்சலை வெளிப்படுத்திப் பார்த்ததே இல்லை. அவன் ஆவேசமாகித் திட்டிவிட்டு போனை வைத்துவிட்டான். இரண்டு டீ-க்குப் பிறகுதான் ஆசுவாசமடைந்தான். ``நம்ம சிமென்ட் கடை சரவணன்டா. வீடு க்ளீன் பண்றானாம். வீட்ல ஒரு நைக்கி ஷூ இருக்காம்... அவன் இரண்டுவாட்டிதான் யூஸ் பண்ணானாம். நீதான் அது மாதிரி ஷூவெல்லாம் போடுவியே... வந்து எடுத்துட்டுப்போங்கிறான்'', சொல்லும்போதே அவனுடைய உதடுகள் துடித்தன.

சொல் அல்ல செயல் - 7

``இதுக்கு ஏன் கோபம்? வேணும்னா வாங்கிக்கோ, வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிட வேண்டியதுதானே?'' என்றேன்.

``என் வீட்லகூடத்தான் எனக்குப் பத்தாத பழைய சட்டை, பேன்ட்லாம் நிறைய இருக்கு. அவன் வந்து எடுத்துக்குவானா? எனக்குன்னு ஒரு மானம் மரியாதை இல்லையா'' கோபமாகப் பேசினான்.

``ஏன்டா, நட்பாத்தானே அவர் கேட்டாரு...'' எனச் சமாதானம் பண்ண முயற்சி செய்தேன். ஆனாலும், சதீஷின் கோபம் தீரவில்லை.

``உனக்குத் தெரியும்ல... எங்கம்மா வீட்டுவேலை செஞ்சுதான் என்னை வளர்த்து ஆளாக்கினாங்க. நான் அம்மா வேலை பார்த்த வீட்டுக்கெல்லாம் எப்பவும் போவேன். எல்லா வீட்லயும் எனக்கு ஏதாவது பழைய பொம்மை, பழைய துணி, மிச்சம்மீதி கேக், பிஸ்கட்னு எதையாவது எடுத்துக் கொடுப்பாங்க. நான் ஆசையா வாங்கக் கைநீட்டுவேன். சுள்ளுனு அம்மா ஒரு அடி அடிப்பாங்க. அதை எப்பவும் வாங்கவே விடமாட்டாங்க. நான் அழுவேன். அந்தப் பொம்மைக்காக, ஒரு ஜீன்ஸ் பேன்ட்டுக்காக நிறைய ஏங்கியிருக்கேன். ஆனா, அம்மாவோ `நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குடா பையா... அதை எப்பவுமே விட்றக் கூடாது. உன்னோட பழைய ட்ரெஸ்ஸைக் கொண்டுபோய் அவங்களுக்குக் கொடுத்தா, அவங்க வாங்கிப் பாங்களா'னு கேட்பாங்க. என்னை அப்படித்தான் கெத்தா வளர்த்தாங்க... அதனாலேயே, யாராவது எனக்கு இந்தப் பழசு, கழிச்சு கட்டினதைக் கொடுத்தா, சுர்ர்னு கோபம் வந்துடும்.

நான் ஏழைதான். பிஞ்ச செருப்புதான் போட்டிருக்கேன். ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படறேன்தான். என்கிட்ட காசு இல்லதான். ஆனா, மரியாதை இருக்கு மச்சான். அதை எப்படிடா விட்டுத்தர முடியும்?
நீயே யோசிச்சுப் பாரு,  யாராச்சும் பயன்படுத்தின எதையாவது குடுத்தா, நீ வாங்கிப்பியா? இல்லை, அந்த சிமென்ட் கடை சரவணன்தான் வாங்கிப்பானா? அப்புறம் எப்படி இன்னொருத்தனுக்குப் பழையதைத் தூக்கிக் கொடுக்க முடியுது? ஏன்னா, நான் தாழ்ந்தவன், காசில்லாதவன், ஏழை, பிச்சைக்காரன். அவனைவிடக் கீழானவன்கிற எண்ணம். எதைக்கொடுத்தாலும் வாங்கிக்குவான் அப்படிங்கிற நினைப்பு. மரியாதை, மண்ணாங்கட்டியெல்லாம் பணம் உள்ளவனுக்கு மட்டும்தான் இருக்குங்கிற திமிரு. நான் பிச்சைகூட எடுப்பேன். ஆனா, அது என்னோட சாய்ஸ். ஆனா, நான் கேட்காம ஒருத்தன் எனக்குப் பிச்சை போடுறதை என்னால அனுமதிக்கவே முடியாது'' வெடித்தான் சதீஷ்.

அவனுடைய கோபத்தை உணரமுடிந்தது. நானும்கூட சிமென்ட் கடை சரவணன் செய்ததைப்போல்  நிறையமுறை செய்திருக்கிறேன். நாம் எல்லோருமே செய்கிறோம். நாம் பயன்படுத்திய துணிகளை, பொருட்களைக் கழித்துக்கட்ட நல்ல சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கிறோம். தீபாவளியோ, பூகம்பமோ, வெள்ளமோ, சுனாமியோ வந்தால் மொத்தமாகப் பழையதை  அள்ளி வழங்கிவிட்டுப் புண்ணியவான் ஆகிவிடுவது நம்முடைய வழக்கம்தானே. ஆனால், அப்படி நம்மால் யாரிடமும் எதையும் யாசகமாகப் பெற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய இந்த நினைப்புதான் பல நேரங்களில் நம்மை சக மனிதர்கள் குறித்த எண்ணங்களை உருவாக்குகிறது. ஏழைகள் என்றாலே இப்படித்தான்; அவர்கள் பழையதை எல்லாம் வாங்கிக்கொள்வார்கள் என்கிற எண்ணமெல்லாம் இந்த நினைப்பின் தொடர்ச்சிதான் இல்லையா? யாருக்கு ஆதரவு தருவது, யாரை எதிர்ப்பது, யாருக்காகப் போராடலாம், யாருக்காகப் போராடக் கூடாது என்பனவற்றில் எல்லாம் இந்த எண்ணங்களே பின்னணியில் இயங்குவது ஏன்?

ஒரு மனிதனை ரத்தம் சொட்டச்சொட்ட பாதி ஜீவனோடு முதன்முதலாகச் சந்திப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அந்த நபரின் நெற்றியில் வழிகிற ரத்தத்தில் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்பது இன்னும் மோசம் இல்லையா? பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரஷாந்தை அப்படித்தான் சந்தித்தேன். பிரஷாந்தின் சட்டையாலேயே அவனுடைய பின்னங்கைகளைக் கட்டியிருந்தோம். அவனுடைய கிழிந்த பனியனில் ரத்தம் உறைந்திருந்தது. காவலர்கள் வருவதற்காக அன்றைய தினம் நாங்கள் காத்திருந்தோம். ஆனால், இதையெல்லாம் எதற்காகச் செய்துகொண்டிருக்கிறோம் என்பதையெல்லாம் நாங்கள் ஆராயவேயில்லை. கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்,  அவன் திருடன், வடமாநிலத்தவன் என்று... நாங்கள் அவனை அடிக்க அதுவே போதுமான காரணமாக இருந்தது.

காவலர்கள் வரும்வரை நாங்கள் பிரஷாந்தை அடித்து உதைத்துக்கொண்டிருந்தோம். மக்களெல்லாம் ஒரு குத்துச்சண்டைப் போட்டியைப் பார்க்கும் ஆர்வத்தோடு அதைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் உற்சாகக் குரல் கொடுத்து எங்களைத் தூண்டியபடி இருந்தனர். `இன்னும் இரண்டு போடு', `அவன் காதுலயே ஒண்ணு வை', `வாய்ல குத்து' என விதவிதமான பரிந்துரைகள் காதுகளில் ஒலித்தன. வாட்ஸ் அப் இல்லாத காலம்... இல்லையென்றால் வைரல்  ஆகியிருக்கும். பெண்களும்கூட அடித்தனர். நாங்கள் பிரஷாந்தை வதைப்பதில் மகிழ்ச்சியாக இருந்தோம். நாம் எப்போதும் வன்முறையை நேசிப்பவர்களாக இருக்கிறோம். அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்குக் காத்திருக்கிறோம். அது வாய்க்கும்போது, அதுவரைக்குமான மொத்த வக்கிரத்தையும் கொட்டித்தீர்த்துவிடுகிறோம். அன்றைக்கு எங்கள் வக்கிரத்தால் பிரஷாந்த் வேட்டையாடப் பட்டான். காவல்துறை வந்து பிரஷாந்தை அள்ளிச்சென்று ஐ.சி.யூ-வில் போட்டது.

நேபாளத்தில் இருந்து தன் நண்பனைத்தேடி வந்த பிரஷாந்த்,  பாலம் அமைக்கும் வேலைக்காக பிழைப்புத் தேடி வந்த கூலித்தொழிலாளி. நண்பன் கொடுத்த முகவரிக்குச் சென்று பார்த்திருக்கிறான். அங்கே வேறு யாரோ இருந்திருக்கிறார்கள். அது தவறான முகவரி. அது தெரியாமல் விசாரித்திருக்கிறான். மொழிப் பிரச்னையால் பிரஷாந்த் வாசலிலேயே நின்றிருக்கிறான். வீட்டில் இருந்த பெண் `யாரோ வீட்டை நோட்டம் விடுறாங்க, ஆபத்து' என்று போனில் சொல்லிவிட, அதற்குப் பிறகு பிரஷாந்தை எல்லோருமாகப் போட்டு அடித்தோம். நேபாளி என்றாலே மங்கோலிய முகம் கொண்டவர்கள், சப்பை மூக்கு கொண்டவர்கள் என்கிற கற்பிதத்தால், அவர்களிடம் தான் ஒரு நேபாளி என்று பிரஷாந்த் சொன்னதைக்கூட யாருமே நம்பவில்லை. ``ஏன்டா, நீ நேபாள்காரனா...மூஞ்சப்பாரு'' முகத்திலேயே குத்துகள் விழுந்தன. 

கண்ணீருக்கும், கருணைக்கும் மொழிகிடையாது. ஆனால், அன்றைக்கு பிரஷாந்த் எங்களுக்குப் புரியாத மொழியில் அழுதான். எங்களுக்குப் புரியாத மொழியில் கருணைக்காக மன்றாடினான். எங்களால் அதை புரிந்துகொள்ள இயலவில்லை. காரணம், நாங்கள் பிரஷாந்தோடு வன்முறையின் மொழியில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம்.

பின்னொரு நாளில், பிரஷாந்த் எங்கள் பகுதியிலேயேதான் வசித்தார். அவர் நாங்கள் பயன்படுத்துவதற்காக ஒரு பாலத்தைக் கட்டிமுடித்துவிட்டு ஊருக்குத் திரும்பினார். ஆனால், யாருமே பிரஷாந்திடம் அன்றைக்கு நடந்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவில்லை. அதற்காக குற்றவுணர்ச்சியும் கொள்ளவில்லை. இப்போது பிரஷாந்த் ஊரில் இல்லை. ஆனால், அவர் வேலைபார்த்த பாலம் கண்முன்னே நிமிர்ந்து நிற்கிறது.

சொல் அல்ல செயல் - 7

ஒவ்வொருமுறை அந்தப் பாலத்தைத் தாண்டும்போதும் பிரஷாந்துக்கு ஏற்பட்ட வேதனை என்னை உலுக்கியெடுக்கும். கைகூப்பி, கருணைவேண்டி, முட்டிபோட்டு மன்றாடிய பிரஷாந்தின் முகம் குற்றவுணர்ச்சியைக் கீறி,  இதயத்தை நிரப்பிவிடும். தமிழ்நாடு முழுக்க, கடந்த சில ஆண்டுகளாக எங்கும் இத்தகைய மொழி தெரியாத வடமாநில மனிதர்களைச் சந்திக்கிறோம்.

எங்கெல்லாம் ஏழைகள் குறைகிறார்களோ, அல்லது குறைந்த கூலிகளுக்கு மாடாக உழைக்கிற ஏழைகள் அவசியப்படுகிறார்களோ, அங்கெல்லாம் ஏழைகளை இறக்குமதிசெய்ய நாம் தயங்குவதே இல்லை. நாமும்கூட குறைந்தவிலைக் கூலிகளாக துபாய்க்கும், அமெரிக்காவுக்கும், மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் போவது அப்படித்தான். அங்கெல்லாம் எளிய வேலைகளுக்குச் செல்கிற நமக்கும் இதே அடையாளங்கள் உண்டு.

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, சென்னையில் வந்து குவிந்திருக்கிற வடநாட்டுக் கூலித்தொழிலாளர்களோடு சில நாட்களைக் கழித்தால் புரியும்... சிமென்ட் ஷீட் கொட்டகைகளில் வசித்து, அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், மிகக்குறைந்த கூலியில், அவர்கள் எத்தனை பெரிய உழைப்பை நமக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சென்னையில் மட்டுமல்ல, கோவையில், திருச்சியில், மதுரையில் எனத் தமிழ்நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டில், வடநாட்டைச் சேர்ந்த ஏராளமானோரின் உழைப்பு நிச்சயம் கலந்திருக்கிறது. 

பொதுவாக, வடநாட்டுக்காரர்களைக் கண்டாலே `குற்றவாளிகள்'. `டிக்கெட் இல்லாமல் ட்ரெயினில் பயணிக்கிறவர்கள்', `பெண்களைப் பாலியல் தொல்லைக்கு ஆளாக்குகிறவர்கள்', `போதையில் சிக்கித் திளைப்பவர்கள்', `ஆபத்தானவர்கள்' என்பன போன்ற அனுமானங்கள் நம்மிடம் விஷம்போல் பரவி உள்ளன. அந்த அனுமானங்களால்தான், கட்டுமானப்பணிகளின்போது ஏற்படும் விபத்துகளில் அந்தக் கூலிகள் உயிரிழக்க நேரிட்டாலும், செய்யாத குற்றங்களுக்காக அவர்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டாலும் நம்மில் யாரும் அதுபற்றி ஒருசொல்கூட உதிர்ப்பதில்லை. லாரியில் சிக்கிச் செத்துப்போகிற தெருநாயைப்போல கண்டுங்காணாமல் மூக்கைப் பொத்திக்கொண்டு கடக்கிறோம். காரணம், அவர்கள் கீழானவர்கள் என்கிற எண்ணம்தான்.

அடையாளங்களின் வழி அடக்குமுறைகளுக்கு ஆளாவது வடநாட்டுக் கூலிகள் மட்டும் அல்ல, இஸ்லாமியர்கள், தலித்துகள், சேரி மக்கள், திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், திருமணம் செய்யாமல் வாழ்கிறவர்கள், விவாகரத்தான பெண்கள், விதவைகள் என இந்தப் பட்டியல் மிகவும் பெரியது. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை திரைப்படங்களில் வெறும் டெய்லர்களாக மட்டுமே இருந்த இஸ்லாமியர்கள், எப்போதிருந்து முழுநேரத் தீவிரவாதிகளாக மாறினார்கள் என்பது ஆராயப் பட வேண்டியது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்கிற கருத்தியலும்கூட இத்தகையதுதான்.

திருநங்கைகளைக் கண்டாலே கல்லால் அடிக்கப் பாய்வார் ஒரு நண்பர். காரணம், அவர்கள் அவரை மிரட்டி எப்போதோ பிச்சை எடுத்தார்கள் என்பதே. திருநங்கைகள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள், ஏன் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என ஒருபோதும் நாம் சிந்திப்பதில்லை. நம்முடைய தொடர்ச்சியான புறக்கணிப்புகள்தான் அவர்களை அதைநோக்கித் தள்ளுகின்றன என்பதில் இருக்கிறது இந்தச் சமூகநோயின் ஆணிவேர்.  அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் என்ன என்பதில் நமக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால், அவர்கள் பிச்சை எடுப்பதும் பாலியல் தொழில் செய்வதும் கேவலமானது என்று அவர்களை வெறுக்கிறோம். இன்று திருநங்கைகள், காவல்துறை பணி வரை முன்னேறி இருக்கிறார்கள். இன்ஜினீயரிங் படிக்கிறார்கள். நாடகக்கலைஞர்களாக பரிணமிக்கிறார்கள். ஆனால், நாம் இன்னமும் திருநங்கைகள் என்றாலே பிச்சைக்காரர்கள் என்ற எண்ணத்தையே நம் அடுத்த தலைமுறைக்கும் கடத்துகிறோம்.

பெண்களும்கூட இந்தப் புரிதல் பிசகில்தான் எப்போதும் சிக்கியிருக்கிறார்கள். அலுவலகத்தில் தொடங்கி எங்கும் `ஐயோ அந்தப் பொண்ணால எப்படி அந்த வேலையைச் செய்யமுடியும்' என்பதில் தொடங்கி, `அந்தப் பொண்ணா, அவ அந்த மாதிரி' என்பது வரை நீளும் வசனங்களை நாம் எப்போதும் கடக்கிறோம். வீட்டுப்பெண்களையும் `உனக்கெல்லாம் அதைப்பற்றி ஒண்ணும் தெரியாது' என்கிற ஒற்றை வரியில் எத்தனைமுறை அடக்கி உட்கார வைத்திருப்போம். ஒண்ணும் தெரியாத வீட்டுப்பெண்கள்தான் நம்மை எல்லாம் வளர்த்து ஆளாக்கினார்கள். நமக்கான வாழ்வியலைக் கற்றுத்தந்திருக்கிறார்கள்.

இன்று தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகிற பெரும்பாலான கார்ட்டூன்களில் ஒன்றைக் கவனித்திருக்கலாம். கெட்டவர்கள் என்றாலே கறுப்பர்கள் என்கிற எண்ணம் தொடர்ச்சியாக விதைக்கப்படுகிறது. கறுப்பு என்பது தீயது, அது அழிக்கப்படவேண்டியது என்பதிலிருந்து தொடங்குகிறது உலகின் அத்தனை பாகுபாடுகளும்! கீழானதைக் குறிக்க கறுப்பையும், மேலானதைக் குறிக்க வெளுப்பையும் உருவாக்கியவர்கள் யார்?

`வடசென்னை என்றாலே தாதாக்கள், திருநெல்வேலி என்றாலே வீச்சரிவாள்' என்கிற எண்ணமெல்லாம் உருவாவது அப்படித்தான். `என்னது... நீங்க கோயம்புத்தூரா, அங்க கள்ளநோட்டெல்லாம் நிறைய அடிப்பாங்களே' என்கிற கேள்வியை எதிர்கொள்ளாத கோவை வாசிகள் குறைவு. உண்மையில் கள்ளநோட்டுக்கும் கோவைக்குமான தொடர்பு என்ன என்றே அறியாத தலைமுறை என்னுடையது. `மலையாளிகளா, ஐயோ அவங்க சுயநலமானவங்க'. `தெலுங்குக்காரங்களா, அவங்க காரமா திம்பாங்களே'. `அவன் கீழ்சாதிக்காரன், அப்படித் தான் இருப்பான். ரிசர்வேஷன்ல படிச்சவன் சார், அப்படித்தான் இருப்பான்' என்பது மாதிரியான `அப்படித்தான் இருப்பான்' வகை எண்ணங்கள் எத்தனை ஆபத்தானவை என்பதை உணர்ந்திருக்கிறோமா நாம்?

ஒரு மனிதனுக்கான மதிப்பீடு என்பது கூட்டு அடையாளங்களின் வழியே உருவாகக் கூடாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான அடையாளங்களும், அதன்வழி உருவான பலம், பலவீனங்களும் உண்டு. அதுதான் அவன் குறித்த நம் பார்வைகளை உருவாக்க வேண்டுமேயல்லாமல், அவனுடைய பிறப்பும், சாதியும், உணவுப் பழக்கமும், உடையும் அல்ல.

நாம்தான் உலகிலேயே முன்னேறிய, நாகரிக மானவர்கள் என்கிற உயர் மனோபாவத்திலிருந்து தொடங்குவது இது. ஆண் என்கிற திமிர்தான் பெண்ணைக் கீழாக நினைக்க வைக்கிறது. உயர்சாதியில் பிறந்துவிட்டோம் என்கிற எண்ணம்தான் கீழ்சாதிக்காரனைத் தன் தெருவில் இறங்கி நடக்கவிடாமல் தடுக்கிறது. கட்டுக் கட்டாகப் பணம் இருக்கிறது என்கிற திமிர்தான், ஏழைதானே எதிர்த்துப் பேச மாட்டான் என்கிற எண்ணத்தை உருவாக்குகிறது. இந்தப் படிநிலைகளை உடைத்து ஒருவன் முன்னால் வந்தால், அவனுடைய வளர்ச்சியைச் சந்தேகிக்கிறோம். அல்லது, திருட்டுமுத்திரை குத்துகிறோம். சாதியப் பாகுபாடுகளின் வர்க்கப் பாகுபாடுகளின் தோற்றுவாய் இதுதான். இதுதான் சகமனிதனை இழிவானவனாக கருதவைப்பது.

பொருளாதார ரீதியிலும், அறிவுசார் ரீதியிலும் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் என ஒருவரை நினைத்துவிட்டால், அவர்களுக்கான குணங்களை வரையறுக்கத் தொடங்குகிறோம். அவர்களை வன்முறையாளர்களாக மாற்றிவிடுகிறோம். திருடர்களாக அடையாளப்படுத்துகிறோம். மோசமான பழக்கவழக்கங்கள் கொண்டவர், அசுத்தமானவர் என்று ஒதுக்கிவைக்கிறோம். இன்னும் ஒருபடி மேலேபோய் 'அவர்களுக்கு அறிவே கிடையாது; எல்லோரும் முட்டாள்கள், அவர்களுக்குச் சுயமரியாதையே இல்லை' என்று மிகக் கீழ்த்தரமாக எண்ணுகிறோம். ஆனால், நாமும்கூட நமக்கு மேல் இருப்பதாக நினைக்கிறவர்களால் அப்படித்தான் பார்க்கப்படுகிறோம்... பார்க்கப்படுவோம்... இல்லையா?

இங்கே ஒவ்வோர் ஆன்மாவும் அதற்கே உரிய தனித்துவத்தோடு இயங்கக்கூடியது. ஒவ்வோர் ஆன்மாவும் அதனதன் அளவில் உரிய மரியாதைக்கும் அன்புக்கும் உரியவை. நாம் சகமனிதர்களின் மீதான அன்பையும் மரியாதையையும் உருவாக்க வேண்டியது, அந்த ஆன்மாக்களின் வழிதானே தவிர, அடையாளங்களின் வழி அல்ல.
 
- கேள்வி கேட்கலாம்.