Published:Updated:

உயிர் மெய் - 8

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

``சளி பிடிச்சிருக்கு... நிமோனியாவானு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணும்; முதுகு எலும்பு இடைத்தட்டு நகர்ந்திருக்கானு தெரிஞ்சுக்க எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கணும்; தீராத தலைவலிக்குப் பின்னால மூளையில் பிழை இருக்கானு பார்க்கறதுக்கு சி.டி ஸ்கேன் எடுக்கணும்; இதயத்துல வலி, ரத்த ஓட்டம் ஒழுங்கா இருக்குதானு பார்க்க ஆஞ்சியோ எடுக்கணும்...’’ என நோயைக் கணிக்கச் செய்யப் படும் ஒவ்வொரு சோதனைக்குப் பின்னரும் சின்ன பயம், வலி வரும். அதற்கும், கருத்தரிப்புத் தாமதத்தில், தம்பதியர் செய்யும் சோதனைகளின் பயத்துக்கும் வலிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முன்னது உயிர் பிழைக்க; பின்னது, உயிரை உருவாக்க. இதில் நடத்தப்படும் ஒவ்வொரு சோதனையின் முடிவிலும், ஒருவித சமூக ஒதுக்கல் ஒட்டியிருக்கும். ஆதலால், சோதனையில் உடல் வலியைக் காட்டிலும் உள்ளத்தில் ஏற்படும் வலி கொஞ்சம் கூடுதல்.

உயிர் மெய் - 8

இருபது வருடங்களுக்கு முன்னர், ``மாப்ளை... நீ கூட வாடா. ஏதோ டெஸ்ட் எடுக்கணும்னு சொல்றாங்க’’ என நண்பன் ஒருவன் அழைக்க, அவனோடு  சோதனைச்சாலைக்குச் சென்றது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. `இரண்டாண்டு களாகக் குழந்தை இல்லை; அதை ஒட்டி நிறைய மனக்கசப்பு’ எனச் சொல்லி, நகரின் பெரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அந்தச் சோதனை அவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவனுக்குச் செய்யச் சொன்ன சோதனை `Penile Doppler testing’. சரியான, இயல்பான உடலுறவுக்கு, ஆணுறுப்பு இயல்புநிலையில் இருந்து குறிப்பிட்ட அளவுக்காவது விறைப்படைய வேண்டும். 12, 13 வயதுக்குப் பின்னர், மனதில் ஏற்படும் பாலியல் கிளர்ச்சியில் தொடங்கும் இந்த மாறுபாடுதான் இயல்பான உடலுறவில் மிக அடிப்படையான விஷயம். வியர்த்து, விறுவிறுத்து மிகுந்த மன வேதனையுடன் அவன் அந்தச் சோதனைக்கு வந்திருந்தான்.

சோதனை முடிவில், `போதிய ரத்த ஓட்டம் இல்லை’ என்று சான்றிதழ் பெற்று, அதனால் மணமுறிவும், அதன் பின்னர் நிறைய மனஅழுத்தமும் பெற்ற அவனுக்கு, தற்போது அடுத்த திருமணத்தில், ஆரோக்கியமான அழகான இரு குழந்தைகள். நெருக்கடியான அந்த ரத்த நாடியில் சரியாக ஓடாத ரத்தம் என்று அறிவியல் சொன்ன காரணத்தை அவனது பிந்தைய வாழ்வு பொய்யாக்கியது. பிரச்னை ரத்தத்தில் அல்ல; முத்தத்தில்தான். நெருக்கடியான வாழ்வில் சரியாக ஓடாத காதலும், அதில் பரிமாறப்படாத எதிர்பாராத முத்தங்களும்தான் காரணம் என்பது புரிய பல சமூக அவமானங்களைத் தாண்டி வரவேண்டியிருந்தது.

இன்று படித்த இளைஞர்கள் பலரும் இந்தச் சோதனைக்குத் தாமாக வருகின்றனர். குறிப்பாக கனிணித் துறையினர். சிலர் கருத்தரிப்புக்கான சிகிச்சையின் ஒரு கட்டமாக, மருத்துவரின் அறிவுறுத்தலில் வருகின்றனர். 100-க்கு 80 சதவிகிதம் பேருக்கு முடிவு, `இயல்பு’ என வருகிறது. ஆனால், சோதனைக்கு வரும் பலருக்கும் முடிவில் மனம் ஒப்புவதில்லை. ``இல்லை சார்! என்னால முடியலை. இந்த ரிசல்ட் சரியாக இருக்குமா?’’ என்று சந்தேகத்தோடும், ``போர்னோ பார்க்கும்போதும், சாலையில் கடக்கும் சில பெண்களைப் பார்க்கும்போதும் ஏற்படும் ஈர்ப்பும் எழுச்சியும் மனைவியிடம் இல்லை’’ என்று குற்ற உணர்வோடும் சொல்வது இன்று அதிகரித்து வருகிறது. மொத்தத்தில், இந்தச் சோதனை அளவிடுவது காதலையோ, அவன் மனம் லயிக்கும் ஈர்ப்பையோ, இவை இரண்டும் தூண்டும் எழுச்சியையோ அல்ல.

இயல்புநிலையில் அந்த உறுப்பினுள் எந்த அளவுக்கு ரத்தம் பாய்கிறது என்பதை முதலில் ஸ்கேனில் தெரிந்துகொள்வார்கள். பின்னர், `பப்பாவரின் அல்லது சிடல்ஃபின்’ மருந்தை, நுண்ணிய அளவில் விறைப்பை ஏற்படுத்தும் தசைப்பகுதியில் செலுத்தி, அந்த உறுப்பு இயல்பாக விறைப்படைகிறதா, அதனுள் ரத்தம் போதிய அளவில் உட்செல்கிறதா என்பதைச் சில நொடிகளில் அளவிட்டு, அந்த ஆணின் விறைப்புத் தன்மைக்குச் சான்றிதழ் கொடுப்பார்கள். (சமீபத்தில், விவாகரத்து வழக்குகளில்,  `தன் கணவனுக்கு ஆண்மைக்குறைவு’ என வாதிடும்போது, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவர்களும், கும்மி அடித்துக் குதூகலமாகக் காதலித்தவர்களும் இந்தச் சோதனைச் சான்றிதழைத்தான் வழக்காடு மன்றங்களில் முக்கிய ஆவணமாகப் பயன்படுத்துகின்றனர்).

25 சி.சி-க்கும் குறைவாக அளவு வருகையில், ஆண்மைக்குறைவு அடையாளப்படுத்தப் படுகிறது. ``எதனால் உறுப்பு விறைக்கவில்லை? ஹார்மோன் குறைவா, சதையில், ரத்த நாளத்தில் தடையா, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரைநோயா, உயர் ரத்த அழுத்தத்தின் விளைவா, பிற நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகளின் விளைவா, இல்லை... மனத்தடை, மனஅழுத்தமா?’’ எனக் கேள்விகளை எழுப்பி, மருத்துவரை யோசிக்கச் செய்யத்தான் இந்த ஆய்வு முடிவே தவிர, சோதனைக்குட்பட்ட ஆண் `தகப்பனாக முடியாது; அல்லது தாம்பத்தியத்துக்குத் தகுதியானவன் அல்ல’ எனத் தீர்மானமாகச் சொல்ல அல்ல. அப்படிச் சொல்லவும் முடியாது.

இன்னும் சொல்லப்போனால், இந்தச் சோதனை காதலைக் கழற்றிக், கட்டிலுக்கடியில் வைத்துவிட்டு, காமத்தை மட்டும் கரன்ட் வோல்ட்டேஜில் அளக்கும் அறிவியல். அந்தத் தசைக்குள் செலுத்தப்படும் `பாப்பாவரின் இன்ஜெக்‌ஷன்',  `எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்; உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்’ என்று மூளைக்குள் எப்போதும் பாடாது. `அற்றைத் திங்கள் அந்நிலவில், நெற்றித்தரள நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா?’ என விசாரிக்காது. காதலில்லா குருதியை மட்டும் அந்தச் சதைக்குள் அவசரமாகக் கக்கும். கவியும் இசையும் இல்லாத வார்த்தைகளில் இலக்கணம் தேடும் தட்டையான ஆய்வு அது.

டாப்ளரில் அளக்க முடியாத குருதியை, ஆணுறுப்புக்குள் குதூகலித்துக் கொப்பளிக்க வைக்கத் தேவை, வைரமுத்துவின் பேனாவில் வழியும் அந்தக் காதலும், கரிசனமும்தான். இவை இரண்டும் கலந்து கிடைக்கிற கணப்பொழுதிலே, தன்னவளைப் பின்னிருந்து திடீரென அணைத்து, பின்னங்கழுத்தில் கொடுக்கும் முத்தத்துக்கு இணையான மருந்தும் சோதனையும் உலகில் இன்னும் பிறக்கவில்லை. அங்கு மட்டுமே காதலோடு குருதியும் உறுப்புக்குள் கணிசமாகப் பரிமாறப்படும். அதையும் தாண்டி அவதியுறும் சில நேரங்களில் மட்டுமே, கொஞ்சம் அறம் சார்ந்த மருத்துவம் அதற்கும் அவசியப்படலாம்.

ஆணுறுப்பு விறைப்பு குறைவாக இருக்கும்போது, மறைந்திருக்கும் இன்னொரு விஷயம் கருத்தரிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அதையும் தாண்டி முக்கியமானது. இங்கே ரத்தம் சரியாகப் போகாதபோது, இதய நாடிகளிலும் அதன் சீரான ஓட்டம் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக 45 வயதினைத் தாண்டி, சர்க்கரைநோயிலோ அல்லது உயர் ரத்த அழுத்தத்திலோ இருந்துகொண்டு, இரு நோயும் சற்றும் கட்டுப்பாடில்லாமல் இருக்கும் பட்சத்தில், இதயத்துக்குள் ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்பதை இந்தக் குறை உள்ளவர்கள் ஒருமுறை பார்த்துக்கொள்வது நல்லது.

``கொஞ்சம் வலிக்கும். பயப்படக் கூடாது. கர்பப்பையின் வாய் வழியே அயோடின் திரவத்தை உள்ளே அனுப்பித்தான் இந்தச் சோதனை செய்வோம். கர்பப்பைக்குள்ளேயோ, அதோடு ஒட்டி, சினைப்பையில் இருந்து சினை முட்டையை அழைத்துவரும் பாதையிலோ தடை ஏதும் இருக்குதானு பார்க்கத்தான் இந்தச் சோதனை. வயிற்றுப்புண் இருக்கானு அந்தக் காலத்தில் பேரியம் மீல் எக்ஸ்ரே (Barium Meal  X-ray) எடுத்தது மாதிரி இதுவும் எக்ஸ் ரே சோதனைதான். பீரியட் முடிஞ்சு ரெண்டு, மூணு தினங்கள்ல எடுக்கலாம்.’’ – இந்த அறிவுறுத்தலை கருத்தரிப்புச் சிகிச்சைக்குச் செல்லும் அநேகமான பெண்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

``ஏங்க நமக்கு மட்டும் இத்தனை சோதனை, வேதனை எல்லாம்? அதுதான் ஸ்கேன் பார்த்தாங்கல்ல... அதுல தெரியாதா? எனக்கு பயமாயிருக்குங்க’’ எனத் தலைகுனிந்து, வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் மருத்துவமனையின் வழுக்கும் தரையில் விழுந்து கண்ணீர் தெறிக்கும்போது, கணவனின் கரம் மட்டும்தான் ஆதரவாகப் பிடித்திருக்கும். உண்மையில், இந்தச் சோதனை மிகப்பெரிய தெளிவை நெடுநாளாக கருத்தரிப்புக்குக் காத்திருக்கும் அந்தப் பெண்ணுக்குத் தரும் வாய்ப்பு மட்டுமல்ல. மற்ற சோதனையில் எல்லாம் கிடைக்காத ஒரு சந்தோஷத்தை இந்தச் சோதனை சில நேரங்களில் தரக்கூடும். இந்தச் சோதனைக்குப் பின்னர், வேறு எந்த மருத்துவமும் இல்லாமல் கருத்தரிக்கும் வாய்ப்பு இதில் உண்டு. சோதனையில் அயோடின் திரவத்தை அனுப்பி அடைபாடுகளைக் கண்டறியும் முயற்சியில், ஒட்டியிருக்கும் குழல் பகுதி விரிவடையும் வாய்ப்பும் உண்டாம். எப்படி?

உயிர் மெய் - 8

கிட்டத்தட்ட, குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலோ, ஏர்-லாக் எனப்படும் காற்றடைப்பு இருந்தாலோ, தொட்டியைச் சுத்தம் செய்து, அழுத்தமாகத் தண்ணீரைப் பாய்ச்சினால் அடைப்பு எப்படி நீங்கி நீர் ஓட்டம் சீர்படுகிறதோ அதேபோல், சினைமுட்டை வரும் பாதை இந்தச் சோதனையில் சீராகுமாம். திடீரென பாலம் திறந்துவைக்க வரும் முதல்வரின் பாதையில், அக்கம்பக்கத்துக் கடையை எல்லாம் அகற்றி அன்றைக்கு மட்டும் பளபளவென புதுசாக்கும் கார்ப்பரேஷன் மாதிரி சினைக்குழல் பாதையும் இந்தச் சோதனையில், சிறு சிறு அடைபாடுகள் நீக்கிப் புதுப் பொலிவாகுமாம். அதற்குப் பின்னர் அடுத்தடுத்த நாள்களில் நடக்கும் உடலுறவில் அன்னநடை நடந்துவரும் சினைமுட்டையை, ஓட்டமாக முந்திவரும் உயிரணு ஒன்று, `அழகியே... ஏ அழகியே மேரி மீ! மேரி மீ!’ என அழகாக அரவணைத்துக் கொடுக்கும் ஓர் இறுக்கமான ஹக்-கில் ஒன்றாக இணையுமாம்.

ஏதேனும் தொற்றில் சினைக்குழலில் அடைப்பு உள்ளதா, சின்ன வயதில் வந்த அல்லது இப்போது சத்தமில்லாமல் இருந்துகொண்டிருக்கும் காசநோய்க் கிருமியில் ஒட்டிப் போய்விட்டதா, அல்லது தொற்றுக்கிருமியால் பாதையினுள் கரடு முரடாகக் காயங்கள் இருக்கின்றனவா என அறிய இந்தச் சோதனை உதவும். கர்ப்பப்பைக்குள் உட்சுவர் ஒன்று இருந்து கர்ப்பப்பை இரண்டு போர்ஷனாக உள்ளதா அல்லது கர்ப்பப்பைக்குள் நார்க்கட்டி, பாலிப் (Polyp) போன்ற வளர்ச்சிகள் இருக்கின்றனவா என அறியவும் இந்தச் சோதனை உதவும்.

சில நேரங்களில் வெளி அந்நியப் பொருளான திரவம் என்பதை, உடல் உணர்ந்து, அதை உள்ளே விடாமல், சினைப்பாதைக் குழல், தசைகளை இறுக்கிக்கொண்டு தற்காலிக அடைப்பை உருவாக்கும் தன்மையும் ஏற்படும். எப்படி, ஒரு தூசியை முகர்ந்தால், உடல் அனிச்சையாகத் தும்மி, அதை வெளியேற்ற முயல்கிறதோ, அதேபோல, அந்த அயோடின் கரைசலை வெளியேற்ற ஏதுவாக சினைக்குழல் பாதை மூடிக்கொள்வதை நோயாக நினைத்து `ஐயோ, எனக்கு டியூப் பிளாக்’ எனப் பதறிவிடக் கூடாது. அயோடினை அடித்துவிரட்டும் அந்தச் சதை, உயிரணுவை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்று, அழகாகக் கருத்தரிக்க உதவிடவும் வாய்ப்பு உண்டு. சினைக்குழல் அடைப்புக்குக் காரணமாக காசநோய் இருக்கும் பட்சத்தில் மட்டும், நவீன மருத்துவம் பரிந்துரைக்கும் மருந்துகளை ஆறு மாதம் வரை மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வது சினைப்பைக் குழல் அடைப்பைச் சரிசெய்யும். பிற தொற்று களுக்கு ஓரிரு மாத சிகிச்சையே போதுமானதாக இருக்கும்.

கர்ப்பப்பைக்குள் மருந்தை அனுப்பிச் சோதிப்பது என்பது இன்று நேற்றல்ல... சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளிலும், கர்ப்பப்பைக்குள் மருத்துவ எண்ணெய் மருத்துவ நெய்களை `பீச்சு’, `பஸ்தி’ என்ற சிகிச்சைகளின் வழி அதற்கென உள்ள சிறு சலாகை மூலம் உள்ளே அனுப்பி, கருத்தரிப்புக்கான மருத்துவம் செய்யும் முறை நெடுங்காலமாக நம்மிடம் இருந்துள்ளது. வெகு சமீபத்தில்கூட இப்படியான சிகிச்சைகளில் ஏற்பட்ட கருத்தரிப்பை ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

அநேகமாக எல்லா நவீன மருத்துவச் சோதனை முடிவுகளுக்கும் ஓர் எல்லை உண்டு.  `நெகட்டிவ்’ என வரும் முடிவுக்குப் பின்னே பல பாசிட்டிவான விஷயங்கள் பரிமாறப்படாமலோ, புரியப்படாமலோ ஒளிந்திருக்கும். அப்படியான விசாலமான புரிதலோடு மட்டுமே எந்த முடிவையும் அணுக வேண்டும். இதய ரத்த நாள அடைப்பாக இருந்தாலும் சரி, சினைப்பைக் குழல் அடைப்பாக இருந்தாலும் சரி அல்லது ஆணுறுப்பு ரத்த நாடிச் சுருக்கமாக இருந்தாலும் சரி... தீவிர மருந்துகளைத் தாண்டி, தித்திக்கும் மனசால் சரியாகும் சாத்தியம் நிறையவே உண்டு.

- பிறப்போம்...

உயிர் மெய் - 8

டலுறவின்போது ஆணுக்கு ஏற்படும் இயலாமைக்கு தடாலடி சிகிச்சை எப்போதும் கூடாது. இதற்கான மருந்துகள் கொஞ்சம் அடிமைப்படுத்தும்; மனசை நிறைய காயப்படுத்தும். முதல் தேவை, உங்களைத் தினம் துரத்தும் பணிச்சுமை, பயணச்சுமைகளில் இருந்து விலகி தூரமாக இருவரும் ஓடி, `மூங்கில் தோட்டம், மூலிகை வாசம், நிறைஞ்ச மௌனம் நீ பாடும் நேரம்...’ எனப் பாடி ஐந்தாறு நாள்கள் இருந்துவிட்டு வாருங்கள். அங்கே போய், ஆபீஸ் புரொமோஷன், அல்சேஷன் நாயின் லூஸ்மோஷன் பற்றியெல்லாம் பேசாதீர்கள். பிரேசிலியன் பாவ்லா கதை படியுங்கள்; ஹாலந்து வான்காவின் ஓவியம் ரசியுங்கள்; பண்ணைப்புரம் ராஜா இசையில் வடுகப்பட்டி வைரமுத்து வரிகளில் மூழ்குங்கள். முடிந்தால், அது உங்கள் இல்லத்தரசியின் மாதவிடாய் முடிந்து 12 நாட்களுக்குப் பிந்தைய ஐந்து-ஆறு நாளாக இருக்கட்டும். மருத்துவச் சோதனை, சமூக வேதனை, உறவுக்காரச் சிரிப்பு, டி.வி வில்லன்களின் போதனைகள் இல்லாத அந்த நாட்கள் அநேகமாக உங்கள் ஆளுமையை எந்த மருத்துவமும் இல்லாமல் அதிகரிக்கும். சத்தமில்லாமல் உள்ளே கருத்தரிக்கும்.

உயிர் மெய் - 8

பூனைக்காலி பருப்பு

பெயர்தான் பூனையே தவிர, செய்கிற வேலை என்னவோ யானை மாதிரி. கிட்டத்தட்ட 13 வகையான பூனைக்காலி வித்துக்கள் இந்தியாவில் உள்ளன. `வெல்வெட் பீன்’ என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட இந்தப் பருப்பை வைத்து, சில ஆப்பிரிக்க நாடுகளில் சாம்பார், பருப்பு பூவா எல்லாம் செய்து சாப்பிடுகிறார்களாம். இந்த பூனைக்காலி நம் ஊர் பாரம்பர்ய வயாகரா பருப்பு. `அப்படியா... அப்போ உடனே அரை கிலோ வாங்கி பெசரட் தோசை பண்ணிடலாமா?’ என இறங்கிவிட வேண்டாம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள், `வாலிப, வயோதிக அன்பர்களே...’ எனும் அறைகூவலில் சிக்காமல், அருகில் அரசாங்கத்து பிரைமரி ஹெல்த் சென்டரில் உள்ள சித்த மருத்துவரிடம் ஆலோசித்து, அதனை மருந்தாகப் பெறலாம்.