
அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான், படம்: அருண் டைட்டன்
எல்லா விஷயங்களிலும் நமக்கான பார்வைகளும் கோணங்களும் தனித்தனியாக உண்டு. ஆனால், எளிய மனிதர்களைக் கையாள்வதில் மட்டும் எப்போதும் நமக்குள் துல்லியமான ஒற்றுமைகள் உண்டு. வசதியும் அதிகாரமும் படைத்தவர்களிடம் ஒருவிதமாகவும், கீழான நிலையில் வாழ்கிறவர்களிடம் ஒருவிதமாகவும் நடந்துகொள்வதில் நாம் ஒரே இனம், ஒரே குலம்தான். செண்பகராஜ் இதைப்பற்றி என்னிடம் ஒருமுறை சொன்னார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. ``மத்தவங்க எப்படியோ, நான் அப்படியெல்லாம் இல்லைங்க. நான் எப்பவும் மனிதர்களை சரிசமமாதான் நடத்துவேன்'' என மறுத்திருக்கிறேன்.

``அடுத்தவனுக்குச் செய்துகொண்டிருக்கிற அவமானங்களை நீயே நேருக்கு நேர் எதிர்கொள்ளும்வரை அவை அன்றாட வழக்கங்கள்தான்'' என்று சொல்லிவிட்டுச்சிரிப்பார். எளிய மனிதர்களைப் பற்றிய பெரிய வெளிச்சத்தை வீசி எறிந்தவர் செண்பகராஜ். போலியோவுக்கு இரண்டுகால்களையும் இழந்தவர். எப்போதும் பலூன்கள் கட்டிய தன் மூன்று சக்கர வாகனத்தில் ஏராளமான ரஜினி படங்களை ஒட்டிக்கொண்டு சென்னை முழுக்க வலம்வருகிற பிச்சைக்காரர். அந்த வண்டிதான் அவருடைய வீடு, ஆபீஸ், கெஸ்ட் ஹவுஸ் எல்லாமே!
தெருத்தெருவாகப் பிச்சை எடுப்பதும், மார்க்கெட்டிங் வேலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இரண்டு வேலைகளிலும் ஒரே மாதிரியான தனிமனித அவமானங்களும், உளவியல் தாக்குதல்களும் உண்டு. இரண்டு தொழில்கள் செய்கிறவர்களுக்கும் நண்பகல் என்பது ஓய்வுக்கான நேரம். வெயில் கொடுமை தாளாமல் நிழல் தேடி பார்க்குகள் பக்கம் ஒதுங்கிவிடுவோம். வீடுவீடாக வாக்குவம் க்ளீனர் விற்கிற வேலைகளில் இருந்த நாங்களும் செண்பகராஜும் நட்பானது அப்படி ஒரு பூங்காவில்தான்.
செண்பகராஜ் மதுரைக்காரர். சமூக அவமானம் தாங்காமல் ஊரைவிட்டு பிழைப்புத் தேடி ஓடிவந்தவர். நிறைய நூல்கள் வாசிப்பவர். ஜி.நாகராஜனைப்பற்றியும் ஞானக்கூத்தனைப்பற்றியும் கூட மணிக்கணக்கில் பேசுவார். பூங்காவின் மத்தியில் இருக்கிற ஆலமரத்தடியில், நானும் இன்னும் சில நண்பர்களும் மாதக்கடைசி ஒன்றில், ஒரு சாண்ட்விச்சை வாங்கிப் பாதிப்பாதியாகப் பிரித்துத் தின்றுகொண்டிருந்தோம். தன்னுடைய பிரியாணியைத் தயங்கித் தயங்கி நீட்டினார். உதவும்போது இயல்பாக நம்மிடம் வந்துவிடுகிற பெருமித உணர்வு ஏனோ எளியோரிடம் இருப்பதில்லை. அதில் தயக்கமும் தாழ்வுணர்வும்தான் நிறைந்திருக்கும்.
வாக்குவம் க்ளீனர் விற்க வீடுவீடாக வாடிக்கையாளர்களைச் சந்திக்கச் செல்லும்போது வாடிக்கையாளர்கள் அருவருப்போடுதான் எங்களை நடத்துவார்கள். வாசலிலேயே நிற்கவைத்து வெளியேற்றுவார்கள்.
வாட்ச்மேன்களை விட்டுத் துரத்துவார்கள். நாயை அவிழ்த்து விடுவார்கள். சுள்ளென்று எரிந்துவிழுவார்கள். யாருமே புன்னகைக்க மாட்டார்கள். நம் வீட்டு வாசலில் ஒரு மனிதன் நிற்கிறான், அவனுக்கு சுயமரியாதை என்று ஒன்று இருக்கும், அவன் பிழைப்புக்காகத்தான் இந்த வேலையைச் செய்கிறான் என்பதெல்லாம் மனதில் எழாது.
நம் எல்லோருக்குமே இத்தகைய விற்பனையாளன் என்பவன் இன்னொருவகை பிச்சைக்காரன்தான். போலவே, பிச்சைக்காரன் என்பவன் புண்ணியம் விற்கும் விற்பனையாளன் தான். அன்று நான் மிக வருத்தமாக அமர்ந்திருந்தேன். அப்படி ஓர் அவமானம். விற்பனைக்குச் சென்ற இடத்தில் வாடிக்கை யாளரிடமிருந்து தகாத வார்த்தை ஒன்றை எதிர்கொண்டு பூங்காவில் அமர்ந்திருந்தேன். ``யார் உங்களையெல்லாம் உள்ள விட்றது'' என்கிற வாக்கியம் செருப்படி போல மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ``சேல்ஸ்மேன்னா என்ன அப்படி ஒரு எளக்காரம், பிச்சைக்காரன்னு நினைச்சிட்டாங்களா?'' புகைந்து பொருமிக் கொண்டிருந்தேன்.
``பிச்சைக்காரன்னா என்ன எளக்காரம்... டை கட்டின சேல்ஸ்மேனுக்கே இதான்னா, பிச்சைக்காரன் நிலைமைய யோசிச்சுப் பார்த்திருக்கியா நீயி?'' தன் இரண்டு கால்களையும் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு இடுப்பில் கைவைத்தபடி ஒரு யோகியைப்போல்தான் செண்பகராஜ் அண்ணன் பேசுவார். சொற்களால் அவர் எங்களை நனைக்கும்போது, உயர்ந்து நிற்கும் ஆலமரம் போதிமரமாகும்.
``உனக்குத் தெரியுமா... நானும் இதை தினமும் ஃபேஸ்பண்ணுவேன். ஒருத்தர்கிட்ட பிச்சை எடுக்கப் போனா, அவரு உடனே பிச்சை போடமாட்டார். முதல்ல என்னை முழுசா அளவெடுப்பார். நான் நல்லா தலை சீவியிருக்கேனா, சட்டை பேன்ட் ஒழுங்கா போட்ருக்கேனா, எனக்குக் கை கால் நல்லாருக்கா, எனக்கு வயசு என்ன, நான் எப்படிப் பிச்சை கேட்கிறேன்... இப்படிப் பார்வையாலே அளவெடுக்குற அந்த விநாடிகள் உயிரையே திங்கும். சூம்பிப்போன என் காலைப் பார்த்ததும்தான் மனுஷனுக்குக் கருணை பொங்கி வரும். அதுவரைக்கும் நான் முகத்தைப் பாவமா வெச்சுக்கிட்டு ஏக்கமா காத்திருக்கணும், பொறைக்கு காத்திருக்கிற தெருநாய் மாதிரி.
இரண்டு ரூபாதான் போடுவான். ஆனா, அதுக்கு அவனுக்கு நான் அழுக்கா இருக்கணும், கைகால் இல்லாதவனா இருக்கணும், வயசானவனா இருக்கணும், கண்ணாடி போட்டிருக்கக் கூடாது, படிப்பறிவில்லாதவனா இருக்கணும், தலைகுனிஞ்சு தாழ்ந்து அய்யா தர்மப்பிரபுன்னு கேக்கணும்... இப்படி ஒரு பெரிய செக்லிஸ்ட் வெச்சிருப்பான். இதுல எது இல்லாட்டியும் அவன் காசுபோட மாட்டான்.
வண்டில உக்காந்து பிச்சை கேக்க முடியாது. தரைலதான் இருக்கணும். நான் தரைல உட்கார்ந்துகிட்டு நிமிர்ந்து ஒருத்தனைப் பார்த்து கையை நீட்டிக்கிட்டே இருப்பேன். சூரியன் கண்ணைக்கூசும், வெயில் மண்டையப் பொளக்கும். தோள் வலிக்கும். அஞ்சு நிமிஷம் பாக்கெட்ல கைவிட்டுத் தேடுவான், மேல் பாக்கெட்டைப் பார்ப்பான், பேக்ல துழாவுவான், பர்ஸை எடுத்து நோண்டிட்டு கடைசியில சில்லறை இல்லப்பாம்பான்... ஏன் பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபா போட்டாதான் என்னவாம்? சில்லறையேதான் போடணும்னு சாஸ்திரத்துல எழுதிவெச்சிருக்கா... அப்படி சில்லறை இல்லை; குடுக்க இஷ்டமில்லைனா மொதல்லயே சொல்றதுதானே... ஏன் ஒருத்தனை அநாவசியமா காக்கவைக்கணும்?
நாலுபேர் நிப்பானுங்க, நான் போய்க் கேட்டதும் ஒருத்தன் மட்டும் காசு எடுத்துக் குடுப்பான், மீதி பேர்கிட்டவும் கேட்பேன். அதான் குடுத்தாச்சுல்லனு காசு கொடுத்த ஆளு ஈனத்தனமா நம்மளைப் பாப்பான் பாரு, அப்படியே செத்துப்போயிரலாம்னு தோணும்...''
நம்முடைய வானம்போல் இல்லை செண்பகராஜின் வானம். தாழ அமர்ந்து அண்ணாந்து பார்த்தால் மட்டும்தான் அவருடையது எத்தனை இருள் அடர்ந்தது என்பதை உணரமுடியும். பிச்சைக்காரர்களை ஏன் நாம் எப்போதும் வெவ்வேறு விதங்களில் எதிர்கொள்கிறோம்? அல்லது பிச்சைக்காரர்கள்மீது கருணையை வரவழைத்துக்கொள்ள ஏன் தகுதிகளை வரையறுக்கிறோம்? ஒருமனிதன் இப்படி இப்படி இருந்தால்தான் அன்பு காட்டுவோம், இல்லையென்றால் வெறுப்பைக் காட்டுவோம் என்கிற அந்த செக்லிஸ்ட் எங்கிருந்து, எப்போது உருவாகிறது?
உண்மையில், பிச்சைக்காரர்கள் மீது மட்டும் அல்ல, அந்த செக்லிஸ்ட்டை சேல்ஸ்மேன்கள் தொடங்கி சர்வர்கள் வரை நம்மைச் சுற்றி இருக்கிற எளிய மனிதர்கள் அத்தனை பேர் மீதும் பயன்படுத்துகிறோம். சேல்மேன்களைப் போலவே வீடுவீடாக ஏதாவது சிறிய பொருள்களை விற்கிற பெண்களின் நிலையும் மிகமிக மோசமானது. டை கட்டின சேல்ஸ்மேன்களுக்குக் கிடைக்கிற மிச்சம் மீதிக் கருணையில் அரைசதவிகிதம்கூட ஊதுபத்தி விற்கிற, சோப்பு விற்கிற பெண்களுக்குக் கிடைக்காது.
வேலூரில் இலவசக் கட்டணக் கழிவறையைச் சுத்தம் செய்கிற பொன்னி எப்போதும் குறைப்பட்டுக்கொள்வார்.
``இது ஃப்ரீ கக்கூஸுங்கிறதால ரொம்ப மோசமா யூஸ் பண்ணு வாங்கப்பா. க்ளீன் பண்றதுக்குள்ள செத்துடுவோம். ஒருத்தனும் யூரினல்ல போகமாட்டானுங்க, தரைல பூரா அடிச்சிவிட்டுருவானுங்க... லேடீஸ்லாம் இன்னும் மோசம். இதுக்கு மாசம் எவ்ளோ சம்பளம் குடுப்பான்ற... அஞ்சாயிரம் ரூவா. ஒண்ணுத்துக்கும் தேறாது. அத வெச்சுக்கினு மசுரகூட புடுங்க முடியாது. வர்றவன்ட்ட ரெண்டு ரூபாதான் கேப்பேன்...
அப்படியே எகுறுவான், தொகுறுவான், ரூல்ஸ்லாம் பேசுவான். இலவசம்தானே? யாரு நீ, இன்னாத்துக்குக் காசு கேக்குற... போலீஸாண்ட புட்ச்சுக் குட்த்துரு வேன்னு சீன் போடுவானுங்க'' புலம்பித்தீர்ப்பார்.
நமக்கு அந்தக் கிழவிக்குத் தருகிற இரண்டு ரூபாயில்தான் அறச்சீற்ற முறச்சீற்றமெல்லாம் பொங்கி வரும். மால்களில் ஒருமணி நேரத்துக்கு ஐம்பது ரூபாய் என பார்க்கிங் டிக்கெட் வாங்கினாலும், தியேட்டரில் டிக்கெட் விலை நான்கு மடங்கு உயர்த்தி விற்றாலும் கேள்வியே கேட்காமல் காசுகொடுப்போம். பொதுக் கழிப்பறையைச் சுத்தம் பண்ணுகிற கிழவியிடம்தான் அகம் புறம் எல்லாம் எரிமலை வெடிக்கும். அவர்களை மரியாதைக் குறைவாக நினைப்போம். ஊழல்வாதிகளாகக் கருதுவோம்.
நம் கண்களுக்கே தெரியாமல் நம்மிடமிருந்து காசு கறக்கிற மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், மணல் கொள்ளையர்கள், இயற்கையைச் சூறையாடும் மத நிறுவனங்கள், சுற்றுச்சூழலை விழுங்கும் சாமியார்கள் மீதெல்லாம் கோபம் வந்தாலும், சத்தமில்லாமல் கிடக்கும் நம் நாக்குகள். ஆனால், எளிய மனிதர்கள் கிடைத்துவிட்டால், எல்லா நியாயங்களையும் பேசுவோம். நாம் மலிவாகக் கையாளும் இந்த எளிய மக்கள், பிணவறைக் காப்பாளர்களாகவும், கழிவறைகளைச் சுத்தப் படுத்துகிறவர்களாகவும் மட்டும் இருப்பதில்லை. அவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
ஆட்டோ ஒட்டுநர்கள், வண்டியில் காய்கறி விற்கிறவர்கள், ப்ளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், கொரியர் பையன்கள், கேபிள் டி.வி-க்காரர்கள் என அந்தப் பட்டியல் மிகப்பெரியது. நமக்காக சேவை செய்கிறவர்கள்தான் என்றாலும், அவர்களுடைய வேலைக்காக நாம் எப்போதும் ஒரு நன்றியைக்கூடச் சொல்கிறவர்களாக இருப்பதில்லை. வீட்டிற்கு நம்முடைய வேலைகளுக்காக வருகிறவர்களுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்கக்கூட ஏனோ நமக்குத் தோணாது. காரணம், அவர்கள் எல்லாம் நம்மைத் தேடிவருகிறார்கள். அவர்களுக்கு நாம் கூலிதான் கொடுக்கிறோமே என்கிற மமதை. ``அவர்களிடம் சிரிச்சுப் பேசக்கூடாதுப்பா, அப்புறம் அமவுன்ட்டைக் கூட்டிக் கேப்பாங்க'' என்று சாணக்கியத்தனமாகப் பேசுவார் பக்கத்துத் தெரு ராமச்சந்திரன். ``அவனுககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். அப்படியே வீட்லருந்து எதையாவது லவட்டிட்டு ஓடிருவானுங்க'' என்று கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே சொல்வார்.
அரசு மருத்துவமனைகளில் இயங்கும் பிணவறைகளில்கூடக் காசு கேட்கிறார்கள் என எப்போதும் ஊழல் பற்றிப் பேசும்போதெல்லாம் புலம்புவதை சகஜமாக வைத்திருக்கிறோம். இந்தப் பிணவறைகளில் வேலை பார்க்கிற மனிதர்களையும் அவர்களுடைய வாழ்வையும் அறிந்தவர்களால் அப்படிப் பேசவே முடியாது. சினிமாவில் காட்டுகிற பச்சை ஒளிப் பகட்டான பிணவறைகள் அல்ல நம்முடையவை. ஒரே ஒருமுறை ஒரே ஒருநாள் பிணவறைக்கு உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்தால், அடுத்த மூன்றுநாட்களுக்கு நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நம்மோடு பிண நாற்றமும் ஒட்டிக்கொள்ளும். உண்ணுகிற உணவில் தொடங்கிக் குளிக்கிற சோப்பு வரை அந்த நாற்றத்தின் உதிரிகளை உணரமுடியும். நிலைமை அப்படி இருக்க, அங்கேயே பணியாற்றுகிற ஒரு மனிதனின் நிலையை நாம் நினைத்தே பார்ப்பதில்லை. ஆனால், பிணவறையில்கூட ஊழல் எனக் கொந்தளிப்போம். பிணவறைக் காப்பாளர்களின் சம்பளம் என்னவென்று நமக்குத் தெரியுமா?
`வீட்டுக்கு ஐந்து ரூபாய் கொடுங்க' எனக் கேட்கும், அடைத்துக்கொண்ட தெருச்சாக்கடையைக் கைகளால் அள்ளி எடுத்து சுத்தம் பண்ணுகிற மாநகராட்சிப் பணியாளரிடம் எல்லா விதிகளையும் பேசுவோம். ஆனால் அவருடைய பெயராவது நமக்குத்தெரியுமா? எப்போதாவது அவருக்கு ஒரு வாய் தண்ணீராவது கொடுத்திருப்போமா?

சாதாரண வேலைகள் செய்பவர்களை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை சாம்பிள் பார்க்க ஏற்ற இடம் ஹோட்டல்தான். ஹோட்டல்களில் டிப்ஸ் கொடுக்கும்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றால் ஒரு லெவலிலும், முனியாண்டி விலாஸுக்குச் சென்றால் ஒரு லெவலிலும் டிப்ஸ் கொடுக்கிற மனநிலை எப்படி உருவாகிறது? சிறிய கடைகளில் டிப்ஸ் வைக்கும்போது தானாகவே சில்லறைகளாக மனது தேடும். சில்லறை இல்லையென்றால் அப்படியே எழுந்து வருவோம். அதுவே பெரிய உணவங்கள் என்றாலே `காய்ன்லாம் வைக்காத; பணமாக வை' என்று பதறித் துடிப்போம். ஹோட்டல் பார்க்கிங்குகளில் நம்முடைய பைக்கையோ காரையோ எடுக்க உதவுகிற செக்யூரிட்டிகளை எவ்விதம் நாம் எதிர்கொள்கிறோம். அவருடைய சல்யூட்களை கண்டும் காணாமல் ஒதுக்குவது. அந்த மனிதனின் புன்னகையை மறுப்பது; எங்கே அவருடைய கண்களைப் பார்த்துவிட்டால் காசு கொடுக்க வேண்டியிருக்குமோ எனத் தவிர்ப்பது... அதையும் மீறிப் பார்த்துவிட்டால் இவன் என்ன பண்ணானு இவனுக்குக் காசு கொடுக்கணும் என யோசிப்பது. அப்படியே அவர் காரையோ பைக்கையோ பத்திரமாக வெளியே எடுக்கவோ பார்க் செய்யவோ உதவியேவிட்டார் என்றால், பிச்சைக்காரர்களுக்குக் காசு கொடுக்கத் தேடுவதுபோலவே சில்லறையைத் தேடத் தொடங்குவோம்.
பெட்ரோல் பங்குகளில் காற்றடிக்கிற ஆட்களுக்கு டிப்ஸ் கொடுக்கும்போதும் சில்லறைதான் நம்முடைய முதல் சாய்ஸாக இருக்கும். காற்றடித்துவிட்டு சில்லறையைத் தேடித் தேடிப் பொறுக்கிக் காத்திருக்க வைப்போம். எப்படி உருவாகிறது இந்த மனநிலை? இன்ன இன்ன ஆட்களுக்கு இவ்வளவுதான் காசு தரவேண்டும் என்கிற இந்த அளவீடுகளை யார் உருவாக்குகிறார்கள்?
கல்யாண வீடுகளில் கவனித்திருக்கலாம். வளைத்து வளைத்து போட்டோவும் வீடியோவும் எடுத்துக்கொண்டே இருக்கிற வீடியோ கிராஃபர்களையும் போட்டோ கிராஃபர்களையும் சாப்பிட்டார்களா எனக் கேட்க ஒரு நாதியும் இருக்காது. கடைசிப்பந்தியில் அவர்களாகவே போய் மிச்சம் மீதியைச் சாப்பிட்டுவிட்டுத்தான் வீட்டுக்குக் கிளம்புவார்கள். சில குடும்பங்களில் நிம்மதியாக போட்டோகிராஃபர்களைச் சாப்பிடவும் அனுமதிக்க மாட்டார்கள். திருமணத்திற்கு வருகிற மற்ற எல்லோரைப் போலவும் அந்த மனிதர்களும் முக்கிய மானவர்கள்தான் இல்லையா..? இருந்தும் ஏன் அவர்களைத் தள்ளியே வைக்கிறோம்?
மனிதர்களைப் புறந்தள்ளுகிற இந்த மனநிலையின் தொடர்ச்சிதான் சமூகத்திலும் செயல்படுகிறது. தன்னுடைய உரிமைகளுக்காகக் காடுகளில் போராடுகிற ஆதிவாசிகளைப் பற்றி நமக்குக் கவலையே வருவதில்லை. தன் உயிருக்காகப் போராடுகிற மீனவர்களைப் பற்றி நாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. கூவம் நெடுக வாழ்ந்துகொண்டிருந்த மக்களையெல்லாம் ஒரே உத்தரவில் அடித்து விரட்டி கண்ணகி நகரில் குடியமர்த்தியபோது யாருக்கோ நடக்கிற பிரச்னைதானே என நாம் நகர்ந்திருக்கிறோம். ஆனால், அந்த மக்கள் எல்லாம் உழைத்துக் கொண்டிருந்தது நமக்காகத்தான். டெல்லியில் விவசாயிகள் எல்லாம் அம்மணமாகப் போராடிக்கொண்டிருந்தபோதும் நாம் ஐ.பி.எல்-லில் மூழ்கியிருந்தோம். ஆனால், அவர்கள் போராடியது நம் சோற்றுக்குத்தான்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களுக் காகக் கைதாகிற எளிய மனிதர்கள், நம் அதிகாரத்தால், காவல் துறையால் மிக மோசமாகக் கையாளப்படும்போதும், அவர்கள் மீதெல்லாம் மனித உரிமைகள் மீறப்படும்போதும் நாம் மௌனித்திருக்கிறோம்.
வீடுதேடி வருகிற மனிதர்களை, கருணையை மட்டுமே இரந்து நிற்கும் சக உயிரை, சிறிய வேலைகளைச் செய்கிறவர்களைக் காக்கவைப்பதும் மானக்கேடாக நடத்துவதும் நிச்சயம் குற்றம்தான்.
உண்மையில் நம்மைச் சுற்றி இருக்கிற இந்த எளிய மனிதர்கள் எப்போதும் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு சிறிய புன்னகையைத் தான். காரணம், புன்னகை என்பது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையின் ஒளிக்கீற்று.
- கேள்வி கேட்கலாம்...