Published:Updated:

உயிர் மெய் - 9

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி, படங்கள்: அ.குரூஸ்தனம்

``அவ உட்கார்ந்து எந்திரிச்சுப் போனாலே அந்த இடம் கொதிக்குது. கையைப் பிடிச்சா, அடுப்புல போட்ட கரண்டி மாதிரி சுடுது. ஆனா காய்ச்சல் இல்லை...’’ என அந்த ஒல்லிப் பெண்ணின் அம்மா கரிசனத்துடன் பேசுகையில், அவள் தன் அம்மாவிடம் சைகையாக `அதைச் சொல்லும்மா’ எனச் சொல்வதுண்டு. இந்த விஷயத்தைப் பேச வெட்கப்படும் அந்த இளம் பெண்ணின் அம்மா, ``மாசம் பூராவும் வெள்ளைபடுதுங்குறா டாக்டர். கூடவே மாதவிடாய் நேரத்துல சுருண்டு படுத்து வலிக்கிதுங்குறா. பின்னாடி இதெல்லாம் ஏதாவது பிரச்னையாகுமா? வரன் வேற பார்த்துக்கிட்டு இருக்கோம். ரொம்ப பயமாயிருக்கு’’ என்பதுண்டு. ஒல்லி பெல்லியோடு ரொம்பவே சூடாகத் திரியும் கல்லூரிப் பெண்கள் பலருக்கு, இதே அம்மாக்களும், இதே கண்ணீரும், இதே பயமும் இருக்கின்றன.

இந்தக் கொடுமை இன்றைக்குநேற்று நடந்ததல்ல. ஜீரோ சைஸ் இடுப்புக்குக் கரிஷ்மா கபூர், காத்ரினா கைஃப் மட்டுமல்ல, ஔவையார் வரிந்துகட்டிக்கொண்டு பேசியிருக்கும் `உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு’ - எனும் வரியைப் படிக்கும்போதெல்லாம், `அது அழகு மெனக்கிடலா, ஆணாதிக்க உச்சமா?’ என எனக்குத் தோன்றும். ``ஹலோ! லேடீஸுக்கு இடுப்புச்சதை குறைவாக இருக்கணும். `பெல்விக்’ எலும்பு கர்ப்பத்தில் விரிய, அது வழிகுடுக்கும்னுதான் எங்க மூதாதையர் அப்படி அறிவியல்பூர்வமாகச் சொன்னாங்க’’ என்பது ‘அறிவியலா... ஆணாதிக்கமா?’ இன்னும் தெரியவில்லை. ஆனால், கல்லூரிப் பெண்களிடம் இந்த ஒல்லிபெல்லி வியாதி, கணிசமாக அதிகம்.

உயிர் மெய் - 9

கன்னாபின்னாவென மெலிவதை காலேஜின் கர்மச் சிரத்தையாக்கி, மெல்லிடை அழகுக்காக மெனக்கிடும் பெண்கள் கூடவே கொஞ்சம் தம் கர்ப்பப்பையையும் காயப்படுவதை அறிந்திருப்பதில்லை. மெலிந்திருக்கும் பெண்கள் பலருக்கும் எகிறும் உடல் சூடும், அதில் தொடரும் வெள்ளைப்படுதலும் எப்போதுமே அலட்சியமாகக் கடக்கக் கூடியதில்லை. மாதவிடாய்க்கு முன்னரும் பின்னரும் ஏற்படும் சாதாரணத் திரவம் போன்ற வெளியேற்றம் நோய் அல்லதான். ஆனால், எல்லா நேரமும் அப்படியல்ல. பழுத்த சீழ்போலவோ, மஞ்சள் நிறத்துடனோ, துர்நாற்றத்துடனோ வரும் வெள்ளைப்படுதல் நோயாக இருக்கக்கூடும். சில நேரங்களில், பிறப்புறுப்பில் கொஞ்சம் அரிப்பையும் தந்து, மாதம் முழுமையுமோ அடிக்கடியோ வெள்ளைப்படுதல் நிகழ்வதுண்டு. இது கர்ப்பப்பையின் கழுத்து, உள்சுவர்ப் பகுதி அல்லது சினைக்குழலின் உள்பகுதியில் வரும் புண்ணாலோ, தொற்றுக்கிருமியாலோ ஏற்பட்டிருக்கக்கூடும். தொடர்ச்சியாக இப்படி ஏற்படும் சிரமம், சினைக்குழலில் அடைப்பை ஏற்படுத்தி, கருமுட்டை வரும் பாதையை அடைக்கலாம்; தடுக்கலாம். கரு உருவாகும்போது, கர்ப்பப்பையில் உட்காராமல், சினைக்குழல் பாதையில் சிக்கி, `Ectopic pregnancy’ எனும் தீவிரச் சிக்கலை உருவாக்கிவிடவும் காரணமாக அமையலாம். `போதும்...’ எனத் தோசையில் ஒன்றைக் குறைக்கும் விஷயம், வருங்காலத்தில் குழந்தையில் ஒன்றைக் குறைப்பதாக வந்து சேரலாம்.

ஆணோ, பெண்ணோ அதீத உடல் சூட்டோடு இருப்பது ஆரோக்கியத்தின் அடையாளம் அல்ல. சித்த மருத்துவம் அதைப் பித்தத்தின் உச்சமாகப் பார்க்கின்றது. பெண்ணுக்கு வெள்ளைப்படுதலைத் தரும் இந்த உடல்ச்சூடு, ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைக்கவும் செய்யும். அதோடு உயிரணுக்களின் ஓட்டத்தையும் மந்தப்படுத்தும். உயிரணுக்களின் உற்பத்தி நடப்பது ஆணின் விதைப்பையில். அடுத்த தலைமுறையை உருவாக்கும் உடலியக்கத்தின் மிக முக்கியமான பகுதி, ஏன் இப்படிக் காலுக்கிடையே இசகுபிசகாகத் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும் `மூளையைப் படு உறுதியான எலும்புக்குள்ளே பத்திரமாக வைத்த ஆண்டவன், இந்தப் பகுதிக்கு `சிறுநீரக வில்லா’விலோ, `கல்லீரல் காலனி’யிலோ இடம் ஒதுக்கியிருக்கலாம் அல்லவா... ஏன் இந்த ஓரவஞ்சனை’ எனச் சிலருக்குத் தோன்றலாம். இதற்கு ஒரே காரணம், உடலின் சூட்டில் உயிரணு உற்பத்தி குறைந்துவிடக் கூடாது என்பதுதான். கூடவே, சுற்றுப்புறத்தின் வெப்பம் தாக்கிவிடாதபடி விதைகளைச் சுற்றி மெல்லிய தசைகளையும் அதனிடையே மிக மெல்லிய நீரையும் இயற்கை படைத்திருக்கிறது. ஆணுக்கு எப்படி விதைப்பை அமைக்கப்பட்டதோ, கிட்டத்தட்ட அதேமாதிரிப் பெண்ணுறுப்பின் தசையின் லேபியம் (Labium) இதழ்களும் உருவாக்கப்பட்டன. பிறந்து 14 - 15 வயதுக்குப் பின்னர்தான் விதையின் வேலை முழுமைபெற்றாலும்கூடக் கரு உருவாகிய ஐந்தாம், ஆறாம் வாரத்தில் இந்த விதைப்பை அல்லது பெண்ணின் உறுப்பின் இதழ்கள் உருவாக ஆரம்பித்துவிடும்.

``சார்! விதைப்பை ரொம்பத் தளர்வாக இருக்கிறது. உள்ளே இருக்கும் இடது பக்க விதை கொஞ்சம் கீழிறங்கியும், மற்றொன்று கொஞ்சம் மேலேயும் இருப்பதுபோல் உள்ளன. ஏதாவது மேனுஃபேக்சரிங் டிஃபெக்டா?’’ எனப் பதற்றத்துடன் சில ஆண்மகன்கள் மருத்துவரிடம் போவதுண்டு. இயற்கையின் ஆச்சர்யமிக்க மிகமிக நுணுக்கமான வடிவமைப்பு அது. தூரத்தில் போகும் அழகியை சைக்கிளில் விரட்டிச் சென்று பார்க்கப் போகும்போதோ அங்கே அவளிடம் எக்குத்தப்பாக எங்காவது சில்மிஷம் பண்ணி, அவளது கிக் பாக்ஸிங்கில், `ணங்...’ என `அந்த இடத்தில்’ குத்துப்பட்டாலோ ஏதேனும் ஒரு விதை மட்டுமே அடிபடும்படி `இயற்கை பீனல் கோட்’ அதைக் குறைந்தபட்ச தண்டனையாக இன்னொரு விதை தப்பித்து, அவன் அப்பாவாகும் வாய்ப்பை விட்டுவைக்கத்தான் விதைகள் ஏற்ற இறக்கத்துடன் உருவாகியுள்ளதாம்.

 உடலுறவின்போதும், குளிர்ச்சியான தட்பவெப்பத்தின்போதும் விதைப்பை தளர்வுநிலையில் இருந்து சுருங்கி, தடித்து இருக்கும். பிற எல்லா நிலையிலும் தளர்ச்சியாக இருப்பதுதான் விதைக்கு நல்லது. சைக்கிள் ஓட்டுவது முதல் ஜிம்னாசியம் செய்வது வரை ஆண் செய்யும் அத்தனை அட்டகாசங்களிலும் உடலின் வயிற்றுத்தசையின் உள்ளுறுப்புகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகூட விதைகளுக்கு ஏற்படாதாம். ஆனால், இதே மாதிரி, பிரபுதேவா, கலா மாஸ்டர் டான்ஸ் கிளாஸுக்கெல்லாம் போகாத, திமிங்கலம், யானை போன்ற உயிரினங்களுக்கெல்லாம், விதைகள் பத்திரமாக வயிற்றுக்குள்ளேதான் வைக்கப்பட்டிருக்கும். `அப்படியானால், அதன் வயிற்றில் உள்ள சூடு யானைக்கு அதன் உயிரணு உற்பத்தியைக் குறைக்காதா?’ எனக் கேள்வி எழலாம். யானையின் விதையைச் சுற்றிச் சின்னதாக ஒரு பிரிட்ஜே அமைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பாதுகாப்பாக உடலின் சூடு உயிரணுவின் உற்பத்தியைக் குறைத்துவிடக் கூடாது என அப்படி மெனக்கிடுகிறது இயற்கை. ஆனால்... நம்மிடம்?

குழந்தையை இடுப்பில் வைத்துத் தூக்கிக்கொண்டு போகும்போதே, டயப்பரை மாட்டி, அதற்கு வெளியே சூப்பர்மேன் மாதிரி இறுக்கமாக ஜட்டியைப் போட்டு, அதற்கும் வெளியே டெனிம் துணியில் ஜீன்ஸ் போட்டு, தூக்கிக்கொண்டு செல்லும் வழக்கம் எக்குத்தப்பாக இன்று பெருகிவருகிறது. குழந்தைகளுக்கு அப்படி என்றால், இளைஞர் கூட்டத்துக்கு எப்போதாவது ஜீன்ஸை பாம்பு, சட்டையை உரிப்பதுபோல உரித்து எறியும் பழக்கம் இருக்கிறது. இயற்கை காற்றோட்டமாக உடல் வெப்பத்தில் இரண்டு, மூன்று டிகிரி குறைவாக (உள்ளே உடலில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் என்றால், விதைப்பைக்குள் 95 டிகிரிதான் இருக்குமாம்) விதைகளை வைத்திருக்க, மழலையில் டயாப்பரும், இளமையில் ஜீன்ஸும் சேர்ந்து ஆணின் விதையை `பார்பிக்யூ’ பண்ணும் அட்டகாசத்தில், உள்ளே உசேன் போல்ட்டாக ஓடும் உயிரணு ஸ்ரீவில்லிபுத்தூர்த் தேராக நகரத் தொடங்கும். ஆம்! இன்று உயிரணுக்கள் ஓட்டத்தின் குறைவுக்கும், உற்பத்திக் குறைவுக்கும் விதைப்பைக்கு நாம் வைக்கும் சூடு ஒரு முக்கியக்காரணம்.

மடிக்கணினி நிறைய கணினியன்களின் சட்டை, பேன்ட் மாதிரி ஆகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து காலையில் டாய்லெட் போகும்வரை, இதை மடியில் வைத்துத் திரியும் புத்திசாலிகள் பலருக்கு மடியில் வைத்திருக்கும் மடிக்கணினி அடியில் சூட்டை அதிகரித்து, உயிரணுவைக் குறைக்கும் எனத் தெரியாது. அதேபோல் சட்டைப்பையில் செல்போன் இருந்தால் கிளாஸில் மாட்டிக்கொள்வோம் எனப் பேன்ட் பாக்கெட்டில் செல்போனைப் போட்டுக்கொண்டு திருட்டுத்தனமாக வறுக்கும் இளைஞருக்குப் புரிவதில்லை, தான் பதமாகக் கருகாமல் வறுத்துக் கொண்டிருப்பது `விதை’யையும் சேர்த்து என்று.

நமக்கு நாமே சொந்தச் செலவில் சூனியம் வைப்பது, சூடு வைப்பது தாண்டிப் பூமியே சூடாகிக் கொண்டிருப்பதும் இந்த அணுக்கள் உற்பத்தி இயக்கம் குறைய முக்கியக் காரணம். சளி பிடிக்கக்கூடாது என நாம் எப்போதும் சாம்பாரில் அமாக்ஸிசிலின் போடுவதில்லை. வெண்டைக்காய்தான் போடுகிறோம். ஆனால், பிராய்லர் கோழிக்கு மூன்று வேளையும் ஆன்ட்டிபயாட்டிக் பரிமாறல். அரையிடுக்கில் பூஞ்சையால் அரிப்புவரக் கூடாது என நாம் அங்கே கொஞ்சம் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவதில்லை; அதே பூஞ்சை, கத்திரிக்காய்க்கு வரக்கூடாதென்றால் மட்டும் கொடும் ரசாயனங்களைத் தெளித்து அந்தப் பூஞ்சையை அங்கே எரிக்கிறோம். வீட்டில், இரண்டு நிமிடத்தில் செய்து, நாலு நிமிடத்தில் நூடுல்ஸைத் தின்று தீர்க்கிறோம். அதே நூடுல்ஸின், வெளி உறையைப் பூமி தின்று தீர்க்க இருபத்தைந்தாயிரம் வருடங்கள் ஆகும். இப்படி நாம் இயற்கையில் செய்யும் அத்தனை அட்டூழியமும் `போதுமடா சாமி! இவன் கணக்கைக் கொஞ்சம் பூமியில் இருந்து குறைக்கலாம்’ எனப் பூமி கோபமாகப் போடும் சூடு, மொத்தமாக உலகெங்கும் ஆணின் உயிரணுக் குறைவை உருவாக்குகிறது. நம் சூட்டை மட்டுமல்ல; பூமியின் சூட்டையும் தணித்தே ஆக வேண்டும். பூமிக்கு, `ஐ.யூ.ஐ, ஐ.வி.எ.ஃப்’ பண்ண முடியாது. செவ்வாய் கிரகத்தில் `செரோகேட்’ பண்ணச் சில யுகங்கள் பிடிக்கும்.

- பிறப்போம்...

உடற்சூட்டைத்தணிக்கும் எண்ணெய்க் குளியல்!

அநேகமாக இப்போது பெருகிவரும் பல நோய்களுக்கும் மிக முக்கியக் காரணம், நாம் மொத்தமாக எண்ணெய்க் குளியலை மறந்ததுதான்! இடைக்காலத்தில் இங்கிலீஷ் மருத்துவர்கள் மொத்தமாக இதை எதிர்த்ததன் விளைவு, அத்தனை படித்த கூட்டமும் `வெளியில் தேய்க்கும் எண்ணெய் என்னங்க செய்யப்போகுது... தோலுக்கு உள்ளே எப்படிங்க போகும்?’ என முட்டாள்தனமாகக் கேள்வி கேட்டு அதை மறந்தும் மறுத்தும்விட்டனர்.

உயிர் மெய் - 9

போதாக் குறைக்குத் தமிழ்ப்பட வில்லன்கள், காமெடி பீஸ்கள் மட்டுமே எண்ணெய் மசாஜ் செய்வதாகக் காண்பிக்கப்பட்டதும், `ஓ! இது காமெடியானது அல்லது வில்லத்தனம்’ எனத் தமிழ் அம்மாஞ்சிகள் புரிந்துகொண்டனர். விளைவு, எண்ணெய்க் குளியல் இட்லி மிளகாய்ப் பொடியோடு நின்றுவிட்டது.

வாரம் குறைந்தபட்சம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் சூட்டைத் தணித்து, ஆணுக்கு உயிரணுக்களை உயர்த்தவும் பெண்ணுக்குக் கர்ப்பச் சூட்டைத் தணிக்கவும் மிகமிக அவசியம். சித்த மருத்துவப் புரிதல்படி, `வியானன்’ எனும் உடல் முற்றும் பரவி இருக்கவேண்டிய வாயு ஆங்காங்கே தடைபடுவது பல நோய்களுக்கும் மிக முக்கியக் காரணம். எண்ணெய்க் குளியல் அதைச் சீர்செய்யும்.

உலகெங்கும் உள்ள மருத்துவ ஆய்வுத் துறைகள், எப்படி எண்ணெய்க் குளியல் ரத்தத்தில் பல நல்ல சுரப்புகளை ஊக்குவிக்கிறது எனப் பல மருத்துவக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. பிறந்த குழந்தைக்கு எண்ணெய்க் குளியல் செய்ய இங்கிலாந்து நர்ஸுகளுக்கு இப்போது சிறப்புப் பயிற்சியும் கொடுக்கப் படுகிறது.

உயிர் மெய் - 9

`சைனசைடிஸ் இருக்கிறது; தோல் நோய் இருக்கிறது: நான் எந்த எண்ணெயை எப்படித் தேய்க்கணும்?’ என கூகுளில் தேடாமல், அருகாமையில் உள்ள மருத்துவரைத் தேடி ஆலோசனை பெற்றால், மூலிகைத் தைலங்களால் உடல் சூட்டையும் தணித்து, நோயையும் வெல்லலாம். மற்ற எல்லோருக்கும் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே எண்ணெய்க் குளியலுக்கு ஏற்றது. உடம்பெங்கும் எண்ணெய் தேய்த்துப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்துப் பாசிப்பயறு தேய்த்துக் குளிக்க வேண்டும். அன்றைக்கு வெளியில் அலைந்து திரியக் கூடாது. அன்று மட்டும் உடலுறவும் கூடாது. அன்று மட்டும் ஸ்பெஷல் மெனுவாக உளுந்தஞ்சோறும் எள்ளுத் துவையலும் இருந்தால் இன்னும் நல்லது!

உயிர் மெய் - 9

மேகச்சூட்டைத் தணிக்க...

வெள்ளைப் பூசணியை நிறையப் பேர் பூச்சாண்டிப் படம் வரைந்து கட்டட வாசலில் தொங்கவிடவும், சாலையில் போட்டுடைத்துப் போகிற வருகிற வாகன ஓட்டிகளைச் சறுக்கிவிழ வைக்கவுமே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெண்ணின் மேகச்சூட்டுக்கு வெள்ளைப் பூசணி தரும் பயனை வேறெந்தத் தாவரமும் தராது. உடல் சூட்டைக் குறைத்து, வெள்ளைப்படுதலைக் குறைக்க, நேரடியாக ஜூஸாகவோ பாசிப்பயறு சேர்த்துக் கூட்டாகவோ, மோர்க்குழம்பில் மிதக்கும் காயாகவோ போட்டு வெள்ளைப்பூசணியைப் பயன்படுத்தலாம். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் இது அத்தனை அலாதி பயன்தரக்கூடியது. ஆண்களின் புராஸ்டேட் கோள வீக்கம், சிறுநீர்ப்பாதைத் தொற்று இவற்றுக்கும் நல்ல மருந்து. கூடுதல் சைடு எஃபெக்டாக அந்த விஷயத்தில் ஆர்வமும் ஆதிக்கமும் அதிகரிக்கும்!