
அதிஷா, படம்: கே.ராஜசேகரன்
தினமும் அதிகாலையிலேயே அந்த உயரமான மனிதர் இறுகிய முகத்தோடு எமதர்மனைப்போல எங்கள் அறைக்கு வெளியே வந்து காத்திருப்பார். ஐந்து பேச்சிலர்கள் தங்கியிருந்த அறை அது. எங்களோடு தங்கியிருந்த ரவியைத் தேடித்தான் தினமும் வருவார். வாசலில் வந்து நின்றுகொள்வார், யார் கதவைத் திறந்தாலும் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு “ரவி இருக்கானா?” என்று அதிகாரத் தோரணையோடு கேட்பார். ரவி அந்த நபரை அறைக்குள் அழைத்து வராமல் வாசலில் இருந்தே அழைத்துக்கொண்டு எங்கோ செல்வான். அரைமணி நேரத்திற்குப் பிறகு திரும்புவான். ‘`யார்டா அவன்... ஓவரா முறைக்கிறான்.’’ என விசாரிப்போம். “சொந்தக்காரர்டா, ஊர்லருந்து வந்திருக்கார்’’ என்று மட்டும் சொல்வான் ரவி.
அந்த மர்மதேசத்து மனிதர் அடுத்துவந்த பத்துநாட்களும் தினமும் எங்கள் அறைக்கு வரத் தொடங்கினார். அவர் அதிகாலையில் மட்டுமே வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அடுத்தடுத்த நாள்களில் அவர் வருவதும் அவரை ரவி வழியனுப்பிவிட்டு வருவதும் வழக்கமாகி இருந்தது. அவனுடைய நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் இருந்தன. அவன் அதிகம் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கினான். என்ன பிரச்னை என்று விசாரித்தால் எதுவும் பேசாமல் நகர்ந்து செல்வான். ‘`ஓவரா சீன் போட்றான்டா, ரூம் காலிபண்ணுவானா இருக்கும்’’ என அவனுடைய புதிய மாற்றத்தைக் கடந்தோம்.

அதிகாலையில் குழுவாக டீக்கடைக்குச் சென்று ஊர்க்கதைகளைப் பேசிச்சிரிப்பது எங்களுடைய அன்றாட வழக்கம். அன்று ரவி அதிகமாகப் பேசினான். அதிகமாகச் சிரித்தான். ரவியின் கண்கள் எப்போதையும்விட அதிகம் ஒளிர்ந்தன. இரண்டு டீ குடித்தான். அதிகமாகவே புகைத்தான். அவனிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்துக்கான காரணம் குறித்து எங்களுக்கு எந்தவிதக் குழப்பமும் எழவில்லை. நல்ல மாற்றங்கள் குறித்து நமக்கு சந்தேகங்கள் தோன்றுவதில்லை. மாலை நாங்களெல்லாம் அலுவலகத்தில் இருந்து திரும்பிவிட்டோம். ஆனால், ரவி மட்டும் அறைக்குத் திரும்பவேயில்லை. பேச்சிலர் ரூம்களில், அறைக்குத் திரும்பாத நண்பர்கள் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை.
அடுத்த நாள் அதிகாலையில் அந்த நபர் வந்து நின்றுகொண்டிருந்தார். “ரவி எங்கே?” என்று மிரட்டல் தொனியில் விசாரித்தார். வீட்டின் உள்ளே புகுந்து தேட ஆரம்பித்தார். நாங்கள் அவரைத் தடுக்க முயன்றோம். ஆனால், அவர் எங்களைத் தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்து தேடினார். அந்த நபரின் முகம் கோபமானது. ``ஓடிப்போய்ட்டானா...’’ என்றார். எங்களுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘`உன் ஃப்ரெண்ட் இன்னைக்குக் காலைல ஃபுல் செட்டில்மென்ட் பண்றேனு சொல்லிருக் கான்... அதை நம்பித்தான் வந்தேன். சும்மா எகிறாதீங்க’’ என்றார். அதற்குப் பிறகுதான் விஷயம் புரிந்தது. 75 ஆயிரம் ரூபாய் பர்சனல் லோன் வாங்கியிருந்தான் ரவி. அதைத் திருப்பிக் கட்டாமல் இருக்க, அதை வசூலிக்கத்தான் தினமும் அந்த கலெக்ஷன் ஏஜென்ட் வந்திருக்கிறார். அவரிடம் ரவி வந்தால் நாங்களே அனுப்பி வைப்பதாகச் சொன்னோம்.
எங்களுக்குக் கவலையாக இருந்தது. ரவி இப்படி ஏமாற்றுகிற ஆள் எல்லாம் இல்லை. ரவியைத் தேட ஆரம்பித்தோம். அவனுடைய அலுவலகம், நண்பர்கள் எனச் சிலரிடம் விசாரித்தோம். யாருக்கும் தெரியவில்லை. அவனுடைய வீட்டுக்கு அழைத்து விசாரித்தோம். அவனுடைய அம்மாவுக்கும் எதுவுமே தெரியவில்லை. ஊரில் வீடு கட்டுவதற்காக அவன் அந்தப் பணத்தைச் செலவழித் திருக்கிறான் என்பதை மட்டும் தெரிந்துகொண்டோம்.
அடுத்த சில மணிநேரங்களில் எங்களுக்குச் செய்தி வந்துசேர்ந்தது. ரவி தற்கொலை செய்துகொண்டான். அவனுடைய உடலை அடையாளங்காட்ட எங்களைக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். ரவியின் அம்மாவிற்குத் தகவல் சொன்னோம். அம்மாவுக்கான ஆறுதலை எப்படித் தருவது என்பது புரியாமல் தவித்தோம். ஊரிலிருந்து வந்த அம்மா எங்களிடம் எதுவுமே பேசவில்லை. அவனுடைய உடலை ஊருக்கு எடுத்துச்செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்து, நாங்களும் உடன் கிளம்பினோம்.

ரவியினுடைய ஊரில் எல்லா சடங்குகளையும் முடித்துவிட்டுக் கிளம்பும்போது அவன் அம்மா ‘‘ஏன்ப்பா நீங்களாச்சும் அவன்ட்ட ஒருவார்த்தை பேசிருக்கலாம்ல’’ எனக் கேட்டார். ரவியின் உடலைப் பெற்றுக்கொண்டதில் தொடங்கி ஊருக்குச் சென்று எல்லா சடங்குகளிலும் உடன் நின்றபோதெல்லாம் வராத ஓர் அழுகை எங்களுக்கு வந்தது அந்த நொடியில்தான். அம்மாவிடம் எங்களால் எதையுமே சொல்ல இயலவில்லை. ஏன் அந்த ஒருவார்த்தையை நாங்கள் பேசவேயில்லை என்பது புரியாமல் அந்த ஊரிலிருந்து கிளம்பினோம்.
சக உயிரைக் காப்பாற்றுகிற சொற்கள் எப்போதும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால், நாம் ஏன் அதைச் சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதில்லை. வரும் வழியெல்லாம் நால்வரும் எங்களுக்குள் ஒருசொல்கூட பேசவில்லை. எங்களை நாங்களே திட்டிக் கொண்டு வந்தோம். குற்றவுணர்ச்சியில் சிக்கிக்கொண்டோம். அது வாழ்நாளுக்குமான குற்றவுணர்வு.
75 ஆயிரம் ரூபாய் என்பது மிகவும் சிறிய தொகைதான். முன்பே தெரிந்திருந்தால் நாங்களே எப்பாடுபட்டாவது அந்தத் தொகையைப் புரட்டித்தந்திருப்போம், அல்லது கடனை அடைப்பதற்கான காலத்தை நீட்டித்துத் தருவதற்கு உதவி இருப்போம். எப்படியாவது எங்காவது பணம் வாங்கி ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம். நண்பர்கள் நால்வருமே அப்படித்தான் நினைத்தோம். நாம் எல்லோருமே அப்படித்தான் நினைத்திருப்போம். முன்பே தெரிந்திருந்தால் அவனிடம் பேசி வேண்டியதைச் செய்து கொடுத்திருக்கலாம் என்றுதான் நினைப்போம்.
இங்கே நிகழும் ஒவ்வொரு தற்கொலைக்குப் பிறகும் ‘முன்னாடியே தெரிஞ்சிருந்தா எப்படியாவது காப்பாத்தியிருப்பேன்’ என்று கட்டாயம் சொல்கிறோம். ஆனால், ஏன் நமக்குத் தற்கொலைகளுக்கான காரணங்களும் அறிகுறிகளும் முன்பே தெரிவதில்லை? நம்மால் ஏன் தற்கொலைகளை முன்பே அறிய முடிவதில்லை?
அந்தப் பத்து நாட்களும் எங்கள் அருகிலேயே தான் ரவி இருந்தான். எங்களுடைய ஆறுதலான சொற்கள் அவனுக்கு மிகத்தேவையாக இருந்திருக்கிறது. அவனைக் காப்பாற்றுகிற ஒரு வார்த்தைக்காக அவன் காத்திருந்திருந் திருக்கிறான். தன்னுடைய பிரச்னையை எங்களோடு பகிர்ந்துகொண்டால் கௌரவக் குறைச்சல் உண்டாகும் எனப் பயந்திருக்கிறான். அவனுக்கான நம்பிக்கையை எங்களில் யாராவது ஒருவர் கொடுத்திருக்கலாம். அவன் உயிரோடு இருந்திருப்பான். அவன் வாழ்வதற்கான நம்பிக்கையை எங்களுடைய ‘விட்றா பாத்துக்கலாம்’ என்கிற இரண்டே இரண்டு சொற்கள்கூட கொடுத்திருக்கும்.
இங்கே சக மனிதர்கள் குறித்த அச்சம்தான் தற்கொலைகளைத் தீர்மானிக்கின்றன. மத்தவங்க என்ன நினைப்பார்களோ? என்ன சொல் வார்களோ? அவர்களை எப்படி எதிர்கொள்வேன் என்கிற அச்சம்தான் 90 சதவீத தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன. எல்லா தற்கொலைகளுக்குப் பின்னாலும் ஒரு சகமனிதனோ மனுஷியோ எப்போதும் இருக்கிறார். அந்த ஆசாமி, எந்நேரமும் மதிப்பெண்ணுக்காக விரட்டுகிற தந்தையாக இருக்கலாம். காதலனைப் பிரிந்த காதலியாக இருக்கலாம். யாருக்கும் தெரியாமல் இன்னொரு பெண்ணோடு தொடர்பில் இருக்கிற கணவனாக இருக்கலாம். ஆனால், இத்தகைய எல்லா மரணங்களிலும் யாரோ ஒரு சகமனிதனின் துரோகம் இருக்கிறது. யாரோ ஒரு மனிதனின் கீழ்மை இருக்கிறது. யாரோ ஒரு மனிதன் உருவாக்கிய அவநம்பிக்கை இருக்கிறது. இந்த உலகின் கடைசி மூலைவரை தான் பற்றிக்கொண்டு ஆறுதலடைய ஒரு தோள்கூட இல்லையே என்கிற வேதனை இருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு செத்துப்போன ரம்யாவுக்கு வயது வெறும் 12தான். தன் பக்கத்துவீட்டு மிருகத்தால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி அவள். அடிக்கடி தொடர்ந்த பாலியல் தொல்லைகளைத் தாங்கிக் கொள்ளவும் முடியாமல், அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் இயலாமல், அந்த விஷயத்தை வீட்டில் சொன்னால் திட்டுவார்களோ எனப் பயந்துபோய் ஒரு நாள் சாணிபவுடரைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாள். யாரோ செய்த தவறுக்குத் தன்னைத் தண்டிப் பார்களோ என்கிற எண்ணத்தை அவளிடம் உருவாக்கியவர்கள் யார்? இங்கே குழந்தைகள் வீடுகளில் மனம் விட்டுப் பேசுவதற்கான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறோமோ? அதிலும் இதுமாதிரியான விஷயங்களை வீட்டில் எந்தக் குழந்தையாவது தைரியமாகப் பெற்றோரிடம் உரையாடவும் இயலுமா? சகமனிதர்களுக்கு மத்தியில் உரையாடல்கள் சாத்தியமற்ற சமூகத்தில் தற்கொலைகள் அதிகரிப்பது இயல்பானதுதானே.
திருமணமாகிப் பத்தாண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த உஷா, டெஸ்ட் ட்யூப் பேபி மூலமாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார். அந்தப் பணத்தைப் பிறந்தவீட்டிலிருந்துதான் ஏற்பாடு செய்ய வேண்டும் என உஷாவின் கணவர் சொல்லிவிட்டார். ஆனால் பிறந்தவீட்டில் கேட்க உஷாவுக்கு விருப்பமில்லை. எனவே உஷாவே சிலரிடம் கடன்வாங்கி சிகிச்சையை ஆரம்பித்துவிட்டார். குழந்தை பிறந்துவிட்டால் கணவரிடம் சொல்லிக்கொள்ளலாம், அவர் கோபப்படமாட்டார் என்பது அவருடைய திட்டம். மூன்று லட்சம் கட்டிச் சிகிச்சையைத் தொடங்கிவிட்டார். ஆனால் கருத்தரிக்கவில்லை. காசும் திரும்பக்கிடைக்காது. அடுத்துவந்த நாட்கள் உஷாவுக்கு நரகமாக மாறின.
கணவனோடு உரையாடுவதற்கும் தயக்கம். உஷா தனக்குள் ஒரு சிறையை உருவாக்கிக்கொண்டு பித்துப்பிடித்தவர்போல வீட்டில் இருந்திருக்கிறார். அடுத்துவந்த நாட்களில் கணவனிடம் தினமும் உஷா ஏராளமாகப் புலம்பி இருக்கிறார். அச்சத்தோடு பேசி இருக்கிறார். தற்கொலை செய்துகொள்ள வேண்டும்போல இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் கணவனுக்கு அது புரியவில்லை.
திடீரென்று ஒருநாள் உஷா தூக்கில் தொங்கி விட்டார். கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கொலுசுகள் மாட்டிய அவருடைய கால்கள் இப்போதும் கனவுகளில் ஆடிக்கொண்டிருக்கும். ஒரே ஒரு முறை “விடும்மா பாத்துக்கலாம்’’ என்று கணவர் சொல்லியிருந்தால், உஷா உயிரோடு இருந்திருப்பார்.
நமக்குத் தற்கொலைகள் குறித்தும் மன அழுத்தம் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகள் உண்டு. தற்கொலை செய்துகொள்வேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்கள், அட்டென்ஷன் சீக்கிங்கிற்காக அப்படிப் பேசுகிறார்கள் என்று நாமாகவே புரிந்து கொள்கிறோம். கோபமாக இருக்கிறவர்கள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்று கருதுகிறோம். ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள் மீண்டும் அப்படி ஒரு முயற்சியைச் செய்யமாட்டார்கள் என்று நினைத்துக்கொள்கிறோம். ஒருவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் அவருடைய முடிவை மாற்றவே முடியாது என முடிவுசெய்துவிடுகிறோம்.
தற்கொலை என்பது பரம்பரைப் பழக்கம். மனச்சிக்கல்கள் உள்ளவர்கள்தான் தற்கொலை செய்துகொள்வார்கள். தற்கொலை செய்துகொள்கிறவர்கள் சோகமாக இருப்பார்கள். யாரிடமும் பேசமாட்டார்கள். குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்வார்கள், பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் தோல்வி அடைந்துவிடும் என்றெல்லாம் ஏதேதோ நாமாகவே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம்மிடம் தினமும் சிரித்துச் சிரித்துப் பேசுகிற ஒரு நண்பனுக்கு மரணத்தை நோக்கி உந்துகிற அளவுக்கு ஒரு கடுமையான பிரச்சனை இருக்கலாம். திடீரென்று ஆமைபோல தனக்குள் ஓடுங்கிக்கொள்கிற ஓர் ஆன்மாவிற்கு மரணத்தைத் தேடிக்கொள்வதற்கான காரணங்கள் இருக்கலாம். நம்மிடம் உரையாடுவதற்கே அஞ்சுகிற மகளுக்கும் மகனுக்கும் மனைவிக்கும் நம்மால் தீர்த்துவிடக்கூடிய மிகச்சிறிய பிரச்சனை ஒன்று இருக்கலாம். அதைப் பேசித்தான் தெரிந்துகொள்ள முடியும். நெருக்கமான உரையாடல்களின் வழிதான் அதைக் கண்டடைய முடியும். உரையாடல் ஒன்றுதான் தீர்வு. ஆனால் எந்நேரமும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வாட்ஸப்பிலும் உரையாடிக்கொண்டே இருக்கிற நாம் ஏன் நமக்கு அருகில் இருப்பவர்களோடு ஆழ்ந்து உரையாடுவதில்லை. அவர்களுடைய செயல்களைக் கவனிப்பதில்லை!
இங்கே தோற்று விழும் மனிதனைக் கண்டாலே நாம் அறிவுரை சொல்லக்கிளம்பிவிடுகிறோம். தோல்வி அடைந்தவனுக்கு வெற்றிக்கான புதிய வழிகளைப் போதிக்கத் துவங்குகிறோம். ஆனால் தோற்றுப்போகிற ஒருவனுக்குத் தேவையானது வெற்றிக்கான நம் சூத்திரங்கள் இல்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிற பக்குவமுள்ள இன்னொரு இதயம்தான். இங்கே தோல்வியுற்ற மனிதர்களுக்குத் தேவை சாய்ந்துகொள்ள ஒரு தோளும், ஆறுதலான சில சொற்களும்தான்.
உடனடி மரணம் மட்டுமே தற்கொலைகள் அல்ல. தன்னுடைய வாழ்வை, சூழலைச் சிறுகச்சிறுக அழித்துக்கொள்வதும்கூடத் தற்கொலைகள்தான். எந்நேரமும் குடித்துக் குடித்தே செத்துப்போன ஒரு நண்பனைப்பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் ``அவன் சின்னச் சின்னதாகத் தற்கொலைகள் செய்தவன்’’ என்பார் அவனுடைய தந்தை. எப்படியாவது தனக்குப் பைத்தியம் பிடித்துவிட வேண்டும் என்று விரும்புகிற ஒருவரை நேரடியாக அறிவேன். காரணம் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து அகன்றுவிடுவதுதான்.
இன்று மனிதர்களுக்கிடையே இருந்த தொலைவுகள் அகன்றுவிட்டன. விரல் நுனியில் உங்களால் ஒரு மனிதனை எட்டிவிட முடியும். ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸோ, வாட்ஸ் அப் தகவலோ நூறு நல்ல இதயங்களைத் திரட்டிவிடும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் வரைதான் அது நம்மை அலைக்கழிக்கிற தவிக்கவைக்கிற அச்சத்தில் அடைக்கிற சிக்கலாக இருக்கும். பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்கிற தலைமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. மரணம் என்பது விடுதலை அல்ல என்று திரும்பத்திரும்ப கற்றுத்தரவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இங்கே வாய்ப்புக் கிடைத்தால் சாதி, மத, வர்க்க பேதமின்றி முக்கால்வாசிப் பேர் தற்கொலை செய்துகொள்ளக்கூடியவர்கள்தான். ஆனால் அந்த எல்லைகளைத் தாண்டிவிடாமல் நம்மைக் காக்கிற நல் மேய்ப்பர்கள் இங்கே ஏராளமாக உண்டு. அவர்களால்தான் நாம் நம் இலக்குகளை நோக்கி நகர்கிறோம். நாம் சோர்வுறும்போது ஊக்கம் பெறுகிறோம். அவர்களுடைய சொற்களைதான் நாம் வீழும்போதெல்லாம் தாங்கிப்பிடிக்கிறோம். இந்த மனிதர்களும் அவர்களுடைய சொற்களும் இல்லையென்றால் நம்முடைய வாழ்வு தூக்குக்கயிறுகளிலும் தண்டவாளங்களிலும் என்றோ முடிந்திருக்கும். எப்படிச் சகமனிதர்கள் மீதான அச்சம் தற்கொலைகளை நோக்கி நகர்த்துகிறதோ, அப்படித்தான் இந்த நல்மேய்ப்பர்களின் மீதான நம்பிக்கையே நம்மை எப்போதும் மகிழ்ச்சியோடு வாழவும் வைக்கிறது.
அப்படி எப்போதும் சகமனிதர்களின் நிழலை அள்ளி அள்ளி பெற்றுக்கொள்கிற நாம்... நம்மைச் சுற்றி இருக்கிற எளிய மனிதர்களுக்கு அதே நிழலைப் பகிர்ந்துகொள்கிறோமா? அவர்களுடைய ஆன்மாவைப் புரிந்துகொண்டு அவர்களுக்கேயான சொற்களைத் தருகிறோமா?
தற்கொலைக்கு முயன்று அதிலிருந்து மீண்ட யாரிடம் பேசினாலும், தற்கொலைகளில் இருந்து மீளக் காரணமாக இருந்த ஒரு மனிதரை நினைவு கூருவார்கள். அந்த நினைவில் சில சொற்கள் எப்போதும் இருக்கும். `விடுயா பார்த்துக்கலாம்’ என்கிற அந்தச் சொற்கள்... எத்தனை எத்தனை பேரைச் சாவின் விளிம்புகளில் இருந்து மீட்டிருக்கும். தோல்வியுற்ற மனிதனை மீட்கிற மந்திரம் அதுதான். அவ்வளவுதான்.
அலுவலகத்தில் நம் அருகில் எந்நேரமும் இடைவிடாமல் பணியாற்றுகிற ஒரு மனிதனுக்கு நம்முடைய ஆறுதல் ஒரு மீட்சியை அளிக்கலாம். பள்ளியில் நாம் பயிற்றுவிக்கிற ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ நம் சொற்கள் வாழ்வின் திசையை மாற்றி அமைக்கலாம். கல்லூரியில் நம்மோடு படிக்கிற சக நண்பனுக்கோ தோழிக்கோ ஒரு தேற்றுதல் அவசியமாக இருக்கலாம். நாம் அன்றாடம் கடந்துபோகிற தெருவில் எப்போதும் நமக்கு டாட்டா காட்டுகிற ஒரு குழந்தைக்குக்கூட அது தேவையாக இருக்கலாம். நாம் எங்கும் பரப்பவும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டியது அந்தச் சொற்களைத்தான்.
- கேள்வி கேட்கலாம்...