
மருத்துவர் கு.சிவராமன், படம்: மக்கா ஸ்டூடியோஸ், மாடல்: பவித்ரா, வெக்கி
மூளைக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கணும்; மனசுக்குள்ளே மாடப்புறா றெக்கையைப் படபடனு அடிச்சுக்கணும்; கண்களை அகல விரிச்சு, மூக்கு சிவக்கப் பெருமூச்சு விடணும்; சொல்லவந்த வார்த்தை தொண்டைக்குள் தொலைஞ்சு போகணும்... இவையெல்லாம் காதல் வளர்ச்சியில் மட்டுமல்ல, கருமுட்டை வளர்ச்சியிலும் நடக்கும் விஷயம்!
பெண் சிசுவாகத் தாயின் வயிற்றில் ஜனித்தபோதே, 70 லட்சம் முட்டைகளை அவள் கொண்டிருந் தாலும், பருவ வயதை எட்டி, மாதவிடாய் தொடங்கும் 12-13 வயதில் அவை பத்தில் ஒன்றாகக் குறைந்துவிடும். அதிலும், 10-12 முட்டைகள் மட்டுமே மாதம்தோறும் வளர எத்தனிக்கும். அந்தப் பத்து பன்னிரண்டிலும் ஒன்றோ, இரண்டோதான் முழு வளர்ச்சிக்குக் கிட்டத்தட்ட எட்டும். அந்த இரண்டில் முழுதாக முந்தும் ஒன்றுதான், முழு கருமுட்டையாகி, கர்ப்பப்பைக் குழலுக்குள் காத்திருக்கும் தன் காதலனைத் தேடும் பயணத்தைத் தொடங்குகிறது.

தான் இருக்கும் சினைப்பையைத் தாண்டி, முட்டையின் வளர்ச்சிக்கு மூளையின் மெனக்கெடல்கள் நிறைய வேண்டும். மூளைக்குள்ளிருந்தும் துல்லியமான வழிகாட்டுதலும், அதனால் துளிர்க்கும் சிலிர்ப்பும், கூடவே சின்னதாகச் சில சொட்டு ஹார்மோன்களும் முட்டையைச் சரியாக வளர்க்க வந்து சேர வேண்டும். அந்தச் சிலிர்ப்பைத் தரவேண்டிய சுரப்புகள் ஏதோ சில காரணங்களால் பிழைபடும்போது, முட்டை வளர்வதுமில்லை; வெடிப்பதுமில்லை.
இது எவ்வளவு நுணுக்கமான செயலாக இருந்தாலும், இந்த முட்டை தன்னுள் வளர்வதை, வளர்ந்து வெடித்துக் கருக்குழல் பாதையில் கவ்வப்படுவதைப் பெண்களால் உணர இயலும். சின்னதாக ஒரு வலி (Mittelschmerz), தன்னுள் பரவும் ஒருவிதக் கிளர்ச்சி மணம், கூடவே கொஞ்சம் கூடுதலான காம உணர்வு இவற்றைக் கருமுட்டை வெடிப்பில் பெண்ணால் உணர முடியுமாம். இப்போது கருத்தரிக்க வேண்டுமா, தவிர்க்க வேண்டுமா என்பதை இந்த உடல்மொழியைக் கொண்டு முடிவுசெய்ய சிலரால் முடியும். ஆனால், பலரால் இந்த மொழியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கருமுட்டை வெடிப்பில் மட்டுமல்ல, பல நோய்களில், இப்படியான உடலின் மொழியை நாம் ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டோம். இருமல், தும்மல், தூக்கம், வலி, வாசனை, வெப்பம், குளிர்ச்சி, வாய்வு... எனப் பல மொழிகளில் நமது உடல் தினம் தினம் நம்மிடம் பேசுவது உண்டு. நம்மைச் சுற்றி நடக்கும் ஆன்லைன் கூச்சலிலும், ஆஃப்லைன் பாய்ச்சலிலும் உடலின் மிக மென்மையான இந்தக் குரல் நமக்குக் கேட்பதில்லை. கேட்டாலும் ஒதுக்கி, உதாசீனப்படுத்தி விட்டு ஓடுகிறோம், லாப வெறியுடன். வணிகத்தில் மட்டுமல்ல... வாழ்விலும்.
குறிப்புச்சீட்டு எழுதிப்போய் மருத்துவமனைகளில் தவமாய் தவமிருக்கும் நாம், பல குறிப்புகளை நமக்குச் சொல்லும் நம் உடம்புடன், தினமும் சில மணித்துளிகளேனும் பேச வேண்டும். நம் உடலோடு பேசுவது ஆவிகளோடு பேசுவதுபோல மாய, மந்திரமில்லை. கொஞ்சம் மணித்துளிகள், கொஞ்சம் தனிமை, கொஞ்சம் மௌனம், கொஞ்சம் காற்று, கொஞ்சம் உள்நோக்கிய சிந்தனை, கொஞ்சம் உடலை உற்றுக் கவனிக்கும் கூரான மனம் இத்தனையும் இருந்தால், உங்கள் உடல் உங்களோடு பேசும். அந்தப் பேச்சு, கட்டளையாகவோ, காதலாகவோ, காமமாகவோ, கண்ணீராகவோ, கிளர்ச்சியாகவோ இருக்கும்.
கருத்தரிக்க முயல்வோர் மாதவிடாய்த் தொடங்கிய 12 அல்லது 13-ம் நாள் இப்படி உடலுடன் பேச முயலுங்கள். அப்போது `ம்மா... நான் ரெடி’ என முறுக்கிக்கொண்டு, சற்றே லேசான வலியைக் கொடுத்து, உங்கள் கருமுட்டை உங்களோடு பேசும். கண்களில் காதலைக் கொப்பளிக்கும். போனஸாக, கன்னத்தில் அழகையும் கொட்டும். இது புனைவு அல்ல, உண்மைச் செய்தி. நவீன அறிவியல், `கருமுட்டை’ வெடிக்கும் சமயம், பெண்கள் கூடுதல் அழகாக இருப்பார்கள்’ என `Proceedings: Biological sciences’ நூலில் ஆய்ந்து அறிவிக்கிறது.
கோழிமுட்டையில் உள்ள மஞ்சள் கருவை அடர் மஞ்சள் நிறத்தில் கொண்டுவர, பொன் மஞ்சள் நிறமுள்ள மக்காச் சோளத்தையோ, மஞ்சள் கொன்றையையோ, மேரிகோல்டு மலரிதழையோ கொஞ்சம் கூடுதலாக அதன் உணவில் சேர்ப்பார் களாம். `கோழி, குரங்கெல்லாம் ஏதோ ஒரு யுகத்தில் நம் ஓர்ப்படி, கொழுந்தியாவாக இருந்தவங்கதானே... அதனால், அதேபோல, பெண்ணின் கருமுட்டையை வலுவாக்கவும், வளர்த்துவிடவும் உணவில் எதையாவது சேர்க்க முடியாதா?’ எனும் தேடல் இன்றைக்கும் உலகின் பல மூலைகளில் நடந்துகொண்டிருக்கிறது. உணவு ஆய்வில் இன்னும் அந்த வெற்றி எட்டப்படவில்லை என்றாலும், 1960-களிலேயே `க்ளோமிஃபென்’ (Clomifene) எனும் வேதிப்பொருளை இதற்கெனப் படைத்துவிட்டனர் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள். இன்றைக்கும் கருமுட்டையை வளர்க்கும் மருந்துகளில் கோலோச்சிக்கொண்டிருப்பது இந்த க்ளோமிஃபென் மருந்துதான். பல பில்லியன் டாலர் வர்த்தகத்தில் நடக்கும் இந்த மருந்தை இப்போது பெருமளவில் வணிகப்படுத்துவது சனோஃபி எனும் பிரெஞ்ச் பன்னாட்டு கம்பெனி. உலகின் முதல் ஐந்து பணக்கார மருந்து கம்பெனிகளில் சனோஃபி இருப்பதற்கு, இந்த முட்டை வளர்ச்சி மருந்தும் ஒரு முக்கியக் காரணம்.
``நல்லாத்தான் பீரியட் வருது... ஆனா கருத்தரிக்கலை” என்போருக்கும், ``எனக்கு `அது’ எப்போ வரும்னு சத்தியமா தெரியாது; அப்படியே வந்தாலும், எந்தப் பயனும் தராம, என்னைப் படுத்தி எடுக்குது’’ என ரொம்ப நாளாக மாதவிடாய்க்காகக் காத்திருந்து நொந்தவருக்கும், ``சினைப்பையில் நிறைய நீர்க்கட்டிகள். பாலிசிஸ்டிக் ஓவரி’’ எனக் கவலையோடும், கொஞ்சம் புஷ்டி உடம்போடும் காத்திருப் போருக்கும், அநேகமாக மகளிர் மருத்துவர் பரிந்துரைப்பது இந்த க்ளோமிஃபென்னைத்தான். ``பீரியட் முடிஞ்சவுடன், அதாவது உங்களோட நாலாம், ஐந்தாம் நாள் ஆரம்பிங்க... அஞ்சு நாளைக்குச் சாப்பிடுங்க’’ என இந்த மருந்து அத்தனை கருத்தரிப்புச் சிகிச்சையிலும் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும். ஆண்மைக்குறைவுக்காக சில நேரங்களில் ஆண்களுக்குக்கூட இது பரிந்துரைக்கப் படுவதுண்டு.
இந்த மருந்தைச் சாப்பிட்டவுடன், இது நேரே ஸ்பாட்டுக்குப் போய் கருமுட்டையைச் சோறூட்டி, பாலூட்டி, ஹார்லிக்ஸ் கொடுத்து புஷ்டியாக்காது. மாறாக, இந்த முட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோனை பிட்யூட்டரியிலிருந்து சுரக்கவைக்க, ஹைப்போதாலமஸைத் (Hypothalamus) தூண்டும். அது பிட்யூட்டரி சுரப்பியைப் போய் ``டேய்... ஒழுங்கா சுரந்து தொலைடா!’’ என அதன் தொடையில் கிள்ள, அது தேவையான ஹார்மோனைக் கொப்பளித்து, கருமுட்டையை வளர்க்கும். ``பாஸு... பிட்யூட்டரி, ஹைப்போதாலமஸ் இதுமாதிரி பயங்கரமான வார்த்தையைப் பார்த்தாலே பயமாயிருக்கு’’ எனப் பதற வேண்டாம். எல்லாமே மூளையில் உள்ள சுரப்பி சமாசாரங்கள்தாம். சுருக்கமாகச் சொன்னால், சினைப்பையின் முட்டை வளர, மூளை கொஞ்சம் சிலாகித்துச் சில துளி ஹார்மோன்களைச் சுரக்க வேண்டும். அந்தச் சுரப்புக்கு எனக் கொடுக்கப்படுவதுதான் க்ளோமிஃபென்.
உலகெங்கும், அதிகம் பயன்படுத்தப்படுவதால், க்ளோமிஃபென் ரொம்ப சமர்த்து மருந்து என்றெல்லாம் சொல்ல முடியாது. `ஏழெட்டு சுழற்சிக்கு மேல் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது ஆபத்து’ என இதைப் படைத்த அந்த நிறுவனமே எச்சரிக்கிறது. அதிகமாகப் பயன்படுத்தி, ஒருவேளை கருத்தரிக்காமலேயே இருந்தால், அது சினைப்பை புற்றை உண்டாக்கிவிடுமோ எனும் அச்சம் சில ஆய்வுகளில் உண்டாகியிருக்கிறது. கூடவே இந்த மருந்து, உள்ளே இரண்டு மூன்று முட்டையை ஒரே சமயத்தில் வளர்த்து அனுப்பிவிட்டால், இரட்டைக் குழந்தை, மூன்று குழந்தை ஒரே பிரசவத்தில் பிறக்கும் வாய்ப்பும் மிக அதிகம்.
``ஒரு வாரமா உங்க முட்டையை ஸ்கேனில் ஃபாலோ பண்ணியாச்சு. கருமுட்டை கொஞ்சம் சின்னதா இருக்கு. இன்னும் பெரிசாகணும். அப்போதான் சரியா 14-ம் நாள் வெடிச்சு வாசலுக்கு வரும். அதனாலதான் கருத்தரிப்பு தாமதமாகுது’’ என மருத்துவர் சொல்வது மனதில் முள்ளாகத் தைக்கும். `முள்ளை முள்ளால் எடுப்பது’தானே நம் முன்னோர்கள் சொன்ன ஃபார்முலா. அந்த முள் குத்திய வலி போக, நெருஞ்சில் முள் வழிகாட்டும். `சாதாரணமாகக் கல்லடைப்புக்கும் மேகச்சூட்டுக்கும் சிறப்பான மருந்தாக இருந்த நெருஞ்சில் முள், கருமுட்டை வளர்ச்சிக்கும் பயன்படுகிறது’ என மிக நுணுக்கமான ஆய்வில் கண்டறிந்து அசத்திவிட்டனர் சீன விஞ்ஞானிகள்.
பெண்களுக்கு FSH (Follicle-stimulating hormone) சீராக்குவது, ஹைப்போதாலமஸில் இருந்து அவசியமான சுரப்பை அளவாகச் சுரக்கவைப்பது எனக் கருமுட்டை வளர்ச்சிக்கான அத்தனை தூண்டுதல்களையும் நெருஞ்சில் முள்ளும் அதன் இலையும் கொடுக்கின்றனவாம். இந்தக் கருத்தைப் படித்துக்கொண்டிருக்கையில் எப்போதோ நெருஞ்சில் குறித்துப் படித்த இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. வயல் வெளியில் எலித்தொல்லை அதிகரிப்புக்கு அந்த வரப்பில் பெருகியிருக்கும் நெருஞ்சில்தான் காரணம். அந்த முள்ளையும் இலையையும் பந்தியில் கட்டும் இந்தப் பிள்ளையார் வாகனம், கட்டுக்கடங்காமல் குட்டி போடுகிறது. ``அந்த முள்ளில் என்ன இருக்கிறது என ஆய்ந்து சொல்லுங்கள்’’ என ஓர் ஆய்வு அறைகூவல்விட்டிருந்தது. ஆய்வு முடிவில், எலி அந்த விஷயத்தில் புலியாக இருப்பது நெருஞ்சிலால்தான் எனத் தெரிந்தது.
நெருஞ்சில் தவிர, கருமுட்டை வளர்ச்சிக்கு அதிகம் உதவும் இன்னொரு மூலிகை, நொச்சி. கொசுவை விரட்ட தோட்டத்திலும், மூக்கில் இருந்து சளியை விரட்ட ஆவி பிடிப்பதற்கும், மூட்டில் இருந்து வலியை விரட்ட ஒத்தட மருந்திலும் உபயோகிப்படும் நொச்சி, கருமுட்டையின் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களை மூளையில் இருந்து சினைமுட்டைக்கு விரட்டவும் உதவிடுமாம். சுருங்கிய கண் உள்ள சப்பை மூக்கு தேசத்தார், அவர்களின் பாரம்பர்ய சீன மருத்துவத்தில் இருந்து இதுபோல ஏராளமாக ஆராய்ச்சிகள் செய்து, சீன பாரம்பர்ய மருந்துகளை உலகெங்கிலும் கோலோச்சி, கொண்டாட வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமோ, பெரிய திரை நகைச்சுவைக்கும், சின்னத்திரை அழுவாச்சி நாடகங்களுக்கும், நடுராத்திரி பொய் போதனைகளுக்கும் மூலிகைகளின் முகவரிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ``அய்யோ... இரண்டு வருஷம் ஆச்சா? நீங்க இன்னும் அவங்களைப் பார்க்கலையா? முட்டையை வளர்க்க மருந்து வந்தாச்சு; பதமாக அது வெடிக்க ஊசி இருக்கு; உயிரணுவை ஓட்டமா ஓடவைக்க ஒரு கோர்ஸ் மருந்தே போதும். உயிரணுவைப் பிடிச்சு முட்டைக்குப் பக்கத்து ஸீட்டுல உட்கார வைக்கலாம். ஒண்ணும் இல்லாட்டி, முட்டையை உறிஞ்சி வெளியே எடுத்து, சோதனைக்குழாயில் உயிரணுவோடு ஒன்றாகப் போட்டு, அங்கேயே வயாகரா வஸ்துகளைத் தெளிச்சு தேனிலவு நடத்தி, கருவை உருவாக்கி, கடைசியில் கர்ப்பப்பைக்குள் கொண்டு சொருகிடலாம்’’ என ஊரெங்கும் கூச்சல் அதிகமாகிவிட்டது. ஆட்டா மாவுக்கு வரும் விளம்பரத்துக்கு முன்னரும் பின்னரும் ``ஈ.எம்.ஐ வசதியுடன், உங்க பாப்பாவை இப்படி சுளுவா பெத்துக்கலாம். வாங்க எங்க மையத்துக்கு’’ என எஃப்.எம் விளம்பரங்கள் ஓயாது கூவிக்கொண்டே இருக்கின்றன.

சிலருக்கு மட்டும் இவற்றில் ஏதோ ஒன்று தேவைப்படலாம். ஆனால், நிச்சயம் இது பலருக்குமானது அல்ல. பலருக்குமானதாக ஆகிவிடக் கூடாது என்றால், சில காதல் கரிசனங்கள் இனி கட்டாயமாக்கப்பட வேண்டும். ``வாஷிங் முடிஞ்சாச்சா..? கொஞ்சம் மெலிஞ்சு, இன்னும் இந்த நாளில் படு அழகாயிட்டே போ!’’ என மாதவிடாயின் முடிவில் கணவனின் கண்சிமிட்டலுடன்கூடிய கரம்பற்றுதல், அவளுள் அடுத்த சினைமுட்டையை முன்வரிசைக்குத் தள்ளும். ``டைனிங் டேபிளில் மாதுளை ஜூஸ் இருக்கு. ஒழுங்கா ரெண்டு அத்திப்பழத்தை கடிச்சிக்கிட்டு, கடகடனு ஜூஸைக் குடிச்சுட்டு ஆபீஸுக்குப் போ!’’ என்கிற அன்பு அதிகாரம், அந்த முட்டைக்கு மூளையில் இருந்து, ஹார்மோன் ஊட்டம் கொடுக்கும். ``அப்புறம் அவ்வளவுதானா... வேற எதுவும் கிடையாதா?’’ எனக் கன்னத்தைத் திருப்பிக்காட்டி அவள் கேட்கும் கேள்விக்குப் பதிலாக பரிமாறப்படும் முத்தத்தில் முட்டை வெடிக்கும்!
- பிறப்போம்...

`சீரான உடற்பயிற்சி, கருமுட்டை வளர்ச்சி வெடிப்பை (ஓவுலேஷனை) சீர்படுத்தப் பெரிதும் உதவும்’ எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதே சமயம், `ஒல்லி பெல்லியாகணும்’ என அநியாயத்துக்குக் கம்பு, கட்டை சுற்றி, ஒரே இடத்தில் ஓடும் மகளிருக்கு (கிட்டத்தட்ட தினமும் நான்கு மணி நேரத்துக்கு ஜிம்மில் பயிற்சி எடுப்பவர்கள்) ஓவுலேஷன் பாதிக்குமாம்.

``ஒவ்வொரு நாளும் நேர நெருக்கடியிலும் பணிச்சுமை அழுத்தத்திலும் பயணிக்கும் என்னால், என்னுள் ஏற்படும் உடல் வெம்மை, சின்ன வலி, சுரப்பு, கூடுதல் தேடல் எதையும் உணர இயலவில்லை. நான் கருமுட்டையைத் தயார்நிலையில் வளர்க்கிறேனா என்பதை எப்படி அறிய முடியும்?’’
``கருமுட்டை வெடிப்பை பாலிக்கிள் வளர்ச்சி சோதனை செய்துதான் கண்டறிய வேண்டும் என்பதில்லை. மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் தெர்மாமீட்டரில் உடல் வெப்பத்தை அளவிட்டுக் குறித்துவைத்து, பிறப்புறுப்பின் கசிவு, உலர்வுத் தன்மையையும் காலண்டரில் குறித்துவைத்து வாருங்கள். என்றைக்கு உடல் வெப்பம் 0.5 முதல் 1 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதலாக இருந்து, அன்றைக்கு கசிவு உணரப்பட்டிருந்தால் ஓவுலேஷன் (Ovulation) நடந்திருப்பதை உணரலாம். அன்றைக்கு நடக்கும் உடலுறவு, கருத்தரிப்புக்கான அதிக சாத்தியம் தரும்.’’