Published:Updated:

சொல் அல்ல செயல் - 10

சொல் அல்ல செயல் - 10
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 10

அதிஷா, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

‘`முடிவு பண்ணிட்டேன்டா’’ என்று முத்து சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. ஷாப்பிங் இணையதளம் ஒன்றில் வேலை பார்க்கிற ஐ.டிக்காரன். ‘`உடம்பைக் குறைக்கணும். ஃபிட்னெஸ்தான் முக்கியம்னு உணர்ந்துட்டேன்’ என்றான்.  தன் உடலை உட்கார மட்டுமே பயன்படுத்துகிற ஜீவன். துரித உணவுகளாலேயே வாழ்பவன்.

‘`போன வாரம் ரயில்வே ஸ்டேஷன்ல ரயிலைப் பிடிக்க பத்து நிமிஷம்தான் இருந்தது. காரை பார்க்கிங்ல போட்டுட்டு ப்ளாட்ஃபார்முக்கு ஓடுறேன்... ஓடுறேன்... கரெக்டா பத்து ஸ்டெப்தான் போயிருப்பேன். நெஞ்சை அடைக்குது. அப்படி மூச்சு வாங்குது. ரயிலைத் தவறவிட்டுட்டேன். அப்படியே கோபமா ப்ளாட்ஃபார்ம்ல உட்கார்ந்திருந்தேன். அப்பதான் இந்த யோசனை வந்தது’’ அவனுடைய வயது 30 ப்ளஸ்தான் இருக்கும். பள்ளிக்காலத்தில் கிரிக்கெட் ஆட வந்தாலும் அம்பயராகத்தான் நிற்பான்.

சொல் அல்ல செயல் - 10

‘`ரொம்ப நல்ல முடிவு’’ என வாழ்த்தினேன். அடுத்த நாள் வந்தவன், உலகப் பிரபலமான பிராண்ட்களில் ட்ராக் ஸுட், காலணிகள், வாட்டர் பாட்டில், டைமிங் வாட்ச்  எனப் பல பொருள்களை வாங்கி வந்திருந்தான். ‘`நாளையில் இருந்து வாக்கிங் போறேன். அப்புறம் ரன்னிங் போறேன். டிசம்பர்ல சென்னை மாரத்தான்ல ஓடறேன்’’ என்றான்.

எனக்குப் பெருமையாக இருந்தது. காந்தியடிகளுடைய வாழ்க்கை எப்படி ஒரு ரயில் நிலையத்தில் மாற்றம் அடைந்ததோ, அதுபோல முத்துவின் வாழ்வும் மாறப் போகிறது என நினைத்துக்கொண்டேன். ஆனால், அடுத்து வந்த நாள்கள் அப்படி இருக்கவில்லை. முதல் ஒருவாரம் உற்சாகமாக ஓடியவன், அடுத்த வாரங்களில் ஒவ்வொருமுறைச் சந்திக்கும்போதும் ‘`காலையில தூங்கிட்டேன்; உடம்புக்கு முடியலை; வயித்து வலி; வாந்திபேதி; பாட்டி செத்துடுச்சு’’ எனக் காரணங்களைச் சொல்ல ஆரம்பித்தான். ஆனால், ஓட்டப்பயிற்சியை மீண்டும் தொடங்கவே இல்லை. ``வாக்கிங் போனா, தொப்பை குறையும்கிறதே ஒரு மித். அதெல்லாம் மாயை,  நான் நிறைய ட்ரை பண்ணிட்டேன்’’ என்பான்.

இதோ, இப்போது அவனுடைய அந்த காஸ்ட்லி காலணியும், ட்ராக் ஸுட்டும் மூலையில் கிடக்கின்றன. அவனால் சிகரெட்டையும் விடமுடியவில்லை.
 
சில மாதங்களுக்கு முன்பு ‘`வெளியே ஓடுறதுதான் ப்ராப்ளம். அதான் வீட்லயே ஒரு ட்ரெட்  மில் வாங்கிப்போட்டுக்கலாம்னு இருக்கேன். வாயேன்’’ என்றான். இருவருமாகப் போய் ஒரு நவீன ட்ரெட் மில் ஒன்றை வாங்கினோம். தேடித்தேடி, 48,000 ரூபாயில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, வை-ஃபை தொடங்கிப் பல வசதிகள் கொண்ட ஒரு ட்ரெட் மில்லை வாங்கினான். சமீபத்தில் வீட்டுக்குச் சென்றபோது அந்த ட்ரெட் மில்லில் குழந்தையின் உள்ளாடைகளை உலர்த்தப்போட்டிருந்தார் மனைவி. ‘`என்னம்மா இது’’ என அதிர்ந்துபோய்க் கேட்டேன். ‘`சும்மா கெடக்கேன்னுதான் யூஸ் பண்றேன் அண்ணா’’ என்றார்.
‘`அது குட் ப்ரோடெக்ட்டுடா, ஆனா இயற்கைக் காற்றை சுவாசிச்சுக்கிட்டு ஒடுறது மாதிரி வரலை, என்னமோ குறையுது. அதான் இதை வித்துடலாம்னு இருக்கேன்’’ என்றான். ஆனால் முத்து ஓயவே இல்லை. சில வாரங்களில் திரும்பிவந்தான். ``ரன்னிங்தான் சரியா வரலை. அதான் சைக்ளிங் போகலாம்னு இருக்கேன். நடிகர் ஆர்யாலாம் சைக்ளிங்தானே பண்றார். அஜித்கூட சைக்ளிங் போவாராம். அப்படியே ஸ்விம்மிங்கும் கத்துக்கிட்டு ட்ரையத்லான் ட்ரை பண்ணப்போறேன்’’ என்றபோதே எனக்குத் தெரிந்துவிட்டது, முத்துவின் வீட்டில் ஏதோ ஒரு மூலையில்  காஸ்ட்லி சைக்கிள் ஒன்று துருப்பிடித்து உறங்கப்போகிறது என்று. முத்துவும் ஏமாற்றவில்லை.

முத்துவுக்கு ஃபிட்னெஸ் போலத்தான் நமக்கும் பல சபதங்கள், பல முயற்சிகள், பல சிக்கல்கள். எல்லா விஷயங்களுக்கும் உடனடியாக நமக்குத் தீர்வுகளும், பாராட்டுகளும் தேவைப்படும். அது வரவில்லை என்றால் அதையெல்லாம் கைவிட்டுவிடுவோம். நமக்கு எல்லாமே ஒரே நாளில் மாறிவிடவேண்டும். பாட்டுக் கற்க ஆரம்பித்த மறுநாளே ஜானகி ஆகிவிடவேண்டும். பேட் வாங்கிக்கொடுத்ததும் நம் குழந்தை ஒரே நாளில் சச்சின் ஆகிவிடவேண்டும். அதை நிறைய செலவழிப்பதன் வழி அடைந்துவிட முடியும் என நம்புகிறோம். அதனாலேயே எதைச் செய்வதாக இருந்தாலும், முதலில் அதை ஆர்வத்தோடு பயில்கிறோமோ இல்லையோ, அதற்குரிய பொருள்களை வாங்கிக் குவிக்கத் தொடங்குகிறோம். நிறைய வாங்குவதன் வழியாகவே நாம் அந்த இலக்கை அடைந்துவிட்ட மகிழ்ச்சியை அடைந்துவிடுகிறோம். பிறகு இலக்குகள் மறந்துபோய் பொருள்கள் தேங்கிவிடுகின்றன. 

இந்த  மனநிலைதான் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும்போதும் வந்துவிடுகிறது. நண்பர் ஐய்யப்பன் சென்னைவாசி. தன் பாப்பாவை சென்ற ஆண்டுதான் கிட்டத்தட்ட லட்ச ரூபாய் பணம் கட்டி எல்.கே.ஜி-யில் சேர்த்தார். சமீபத்தில் சந்தித்தபோது வருத்தமாகப் பேசினார். ‘`பாப்பா சரியாவே படிக்க மாட்றா...  எதையுமே ஞாபகம் வெச்சுக்க மாட்டேங்குறா...ரைம்ஸ் சரியா சொல்ல மாட்டேங்குறா... என்ன பண்றதுன்னே தெரியலை. அவ எதிர்காலத்தைப் பற்றி ஒரே கவலையாயிருக்கு’’ என்றார். மூன்று வயதே ஆன குழந்தையால் என்ன பேச முடியும், என்ன நினைவு வைத்துக்கொள்ள முடியும்?

``எல்.கே.ஜி. படிப்புக்கெல்லாம் இவ்வளவு வருத்தப்படத் தேவையில்லையே’’ என்று சமாதானப்படுத்தினேன். ‘`ஏம்ப்பா, ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கட்டி சீட் வாங்கியிருக்கேன், ரிசல்ட் இப்படி இருந்தா என்ன பண்றது. ஏபிசிடி கூடச் சரியா சொல்ல மாட்டேங்கிறா... அதான் கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கோம்’’ என்றவர், ‘`அவளுக்குக் கற்றல் குறைபாடு இருக்கும்னு தோணுது’’ என்றார். உண்மையில் மனநல சிகிச்சை தேவைப்படுவது இப்படிப்பட்ட பெற்றோர்களுக்குத்தான். எல்.கே.ஜி-யிலேயே குழந்தைகளிடம் ரிசல்ட் எதிர்பார்க்கிற மனநிலை எல்லாம் நமக்கு எப்போதிருந்து வந்தது? நிறைய செலவழித்தாலே போதும், குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்; நல்லவர்களாக இருப்பார்கள் என்கிற கற்பிதமெல்லாம் நமக்கு எப்படி வருகிறது?

சொல் அல்ல செயல் - 10

இங்கே எல்லோருக்கும் மகனை விஸ்வநாதன் ஆனந்தாகவும், மகளை சாய்னாவாகவும் மாற்றிவிட வேண்டும். ஆனால் அது அத்தனை சுலபமில்லை. இங்கே எந்த சாம்பியனும் தானாகவே சுயம்புவாக முளைத்து வருவதில்லை. ஒவ்வொரு சாம்பியனுக்குப் பின்னாலும் ஒரு பெற்றோரின், ஆசிரியரின், பயிற்சியாளரின் நீண்ட கால உழைப்பு இருக்கிறது. கைகளில் தண்ணீர் பாட்டிலோடு மணிக்கணக்கில் காத்திருந்த காலங்கள் இருக்கின்றன. பிள்ளை தோற்கும்போதெல்லாம் தோளோடு தோள் நின்று `அடுத்தவாட்டி பிரிச்சி மேஞ்சிடலாம்’ என்று ஊக்கப்படுத்திய சொற்கள் இருக்கின்றன.   ஆனால் நாம் காத்திருக்கத் தயாராக இல்லை. நாம் நம்முடைய நேரத்தை வழங்கத்தயாராக இல்லை. தன்னுடைய பிள்ளையின் சின்னச்சின்ன தோல்விகளைக்கூட தாங்கமுடியாத பெற்றோர்களால் எப்படித் தோற்றுப்போகும் குழந்தைகளுக்கான ஆறுதலாகவும் வினையூக்கியாகவும் இருக்க முடியும். ஆனால் வீட்டிற்கு ஒரு கோஹ்லியை அவசரமாக வளர்க்க ஆசைப்படுகிறோம். குட்டி பாப்பாக்கள் பாடுவதை ரசிக்காமல், இதை சூப்பர் சிங்கருக்கு அனுப்பிவைத்தால், ஜெயிக்குமாவெனத் திட்டமிடுகிறோம்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எந்த நோக்கமாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான, தீர்வுக்கான காலம் மிகவும் அவசியம். அதற்காகக் காத்திருக்க வேண்டியது முக்கியம்.

முன்பெல்லாம் வீதிக்கு வீதி இத்தனை ஃபிட்னெஸ் சென்டர்களைப் பார்க்க முடியாது. ஊருக்கு ஒன்றிரண்டு ஜிம்கள்தான் இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்களில் ட்யூப்லைட் ஒளியில் பெரிய ஸ்பீக்கர் வைத்து ஏதாவது ஆங்கிலப்பாடல்கள் ஒலிக்க, இளைஞர்களும் மத்திய வயதினரும் முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். சுவர்களில் அர்னால்டும், சில்வஸ்டர் ஸ்டாலோனும் சிரித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று ஜிம்கள் மறைந்து, ஏ.சி வசதி செய்யப்பட்ட ஃபிட்னெஸ் சென்டர்கள் நுழைந்துவிட்டன. அங்கே ஏராளமான நவீனக்கருவிகள் வைத்திருக்கிறார்கள். கைகளின் மேல்பகுதியை மட்டும் குறைக்க, மணிக்கட்டுக்கு மேல் மட்டும் பெரிதாக்க, கால்களை மட்டும் இளைக்கவைக்க என இன்ச் இன்ச்சாக நம்மைச் செதுக்கலாம்.

இந்த ஃபிட்னெஸ் சென்டர்களில் ஒன்றைக் கவனித்திருக்கலாம். எங்குமே மாதக் கட்டணம் வாங்குவதில்லை. எல்லா இடங்களிலும் பேக்கேஜ்கள்தான். ஒரு வருடம், ஆறுமாதம், மூன்று மாதம் என மூன்றுவிதமாகப் பணம் வாங்குகிறார்கள். இதில் ஓர் ஆண்டு பேக்கேஜ் மட்டும் மாதக்கணக்கை வைத்துப்பார்த்தால் மிகவும் மலிவானதாகவே இருக்கும். புதிதாக ஜிம்முக்குப் போக நினைக்கிற யாருக்குமே அதுதான் கவர்ச்சிகரமானதாக இருக்கும். எனவே நாம் முதலில் தேர்ந்தெடுப்பது அத்தகைய பேக்கேஜ்தான்.

ஆனால் இந்த ஃபிட்னெஸ் சென்டர்களிடம் ஒரு வியாபார ரகசியம் உண்டு. இப்படி ஓர் ஆண்டு பேக்கேஜ் எடுக்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர், மூன்றுமாதம்கூட ஒழுங்காக வர மாட்டார்கள் என்பதுதான்! அது இந்த ஃபிட்னெஸ் சென்டர்களை நடத்துகிற ஒவ்வொருவருக்கும் தெரியும். பணம் வரும், ஆள் வர மாட்டார் என்றால் பெரிய லாபம்தானே. அதுதான் இன்றைய ஃபிட்னெஸ் வணிகத்தின் சூட்சுமம்.

நமக்கு உடலைக் குறைக்க வேண்டும் என்றாலும்கூட உடல் நோகாமல், ஏதாவது வெளிநாட்டு வெள்ளைப் பொடியை பாலில் கரைத்துக் குடிக்கத்தான் பிடிக்கிறது. உடலை இறுக்கமாகப் பிடித்து ஒல்லியாகக் காட்டுகிற உடை, உட்கார்ந்த இடத்திலேயே மசாஜ் செய்து கொழுப்பைக் கரைக்கும் பெல்ட் என இன்று நம்முடைய அலட்சியங்கள் எல்லாம் வணிகமாகிவிட்டன. பகல் நேரங்களில் டி.வி-யை ஓடவிட்டால் புரியும், நம்முடைய அலட்சியம் எப்படியெல்லாம் பொருள்களாக மாறி சந்தைப்படுத்தப்படுகிறது என்பது. உழைக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே நிறைய செலவழித்தே எதையும் சாதிக்க நினைக்கிறவர்கள்தான் இந்த வணிகர்களின் புதிய வாடிக்கையாளர்கள்.

மருத்துவமனைகள் ஏராளமாகக் காசு வாங்குகின்றன எனப் பதறுகிறோம். ஆனால், அதற்குப் பின்னால் இருப்பது இந்த உடனடி தீர்வுக்காக ஏங்குகிற நம்முடைய அவசர மனநிலைதான். நமக்கு எல்லா வியாதிகளும் ஒரே ஊசியில் சரியாகிவிட வேண்டும். ஒரே மாத்திரையில் குணமாக வேண்டும். இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு காத்திருக்க நாம் தயாராயில்லை. வலியை வேதனையை கொஞ்சமாவது தாங்கிக்கொள்ள உடலைப் பழக்கப்படுத்துவதே இல்லை. நோய் எதிர்ப்புச் சக்தி என்பதே இல்லாமல்போன ஒரு தலைமுறையை நாம் உருவாக்கியது இந்த உடனடித்தீர்வுகளால்தான். நம்முடைய இந்த அவசரம்தான் தனியார் மருத்துவ மனைக்களுக்கான மூலதனம். நிறைய செலவழித்தால்தான் உடனே குணமாகும் என்கிற கருத்தியல் உருவாகுவது அங்கிருந்துதான். மருந்து மாத்திரைகள் வேண்டாம் என்கிற டாக்டர்களை அதனால்தான் நமக்குப் பிடிப்பதேயில்லை. ஹை டோசேஜ் மாத்திரைகளைக் கொடுத்து உடனே  குணப் படுத்துகிற மருத்துவர்களைக் கொண்டாடுகிறோம்.

இதே பாணியைத்தான் நாம் சமூகப் பிரச்னைகளிலும் பயன்படுத்துகிறோம். ஒரே நாளில் ஊழல் ஒழிந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒரே நாளில் வறுமை அகன்றுவிடும் என நம்புகிறோம். ஒரே ஒரு தலைவரால் நாடே சுபிட்சமடைந்துவிடும் என வாக்களிக்கிறோம். எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து எங்குமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது போலியாகத்தான் இருக்க முடியும். இங்கே ஒவ்வொரு பிரச்னைக்குமான தீர்வுகள் என்பது நீண்ட காலப் போராட்டத்தைக் கோருவதாகத்தான் வரலாறு முழுக்கவே இருந்து இருக்கிறது. இங்கே ஒவ்வொரு மாற்றமும் யாரோ ஒரு மனிதக்கூட்டத்தின் தியாகத்தில்தான் விளைந்து இருக்கிறது.

கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பிரியா மாலை நேரங்களில் சேரிக்குழந்தைகளுக்கு  ட்யூஷன் எடுக்கிறார். அங்கே குழந்தைகளுக்கு அவரால் எல்லாப் பாடங்களையும் கற்றுத்தர முடியாது. எனவே, தன் நண்பர்களிடம் மாலை நேரத்தில் வந்து உதவுமாறு கேட்டார். ஆனால், எல்லோருமே பண உதவி செய்யத் தயாராக இருந்தார்கள். யாருமே நேரம் செலவழித்து நேரில் சென்று உதவ முன்வரவில்லை.

‘`நேத்து ஒருத்தர் போன் பண்ணிப் பேசினார். என்னால வர முடியலைனு தப்பா நினைக்காத, நான் எதாவது பண உதவி பண்றேன், நீங்க ஒரு ப்ரொஃபஷனல் டீச்சரை வேலைக்கு வெச்சிக்கலாமேன்னு ஐடியாவும் கொடுத்தார். அது நிச்சயம் நல்ல யோசனைதான். ஆனால், என்னால அந்த அப்ரோச்சை ஏத்துக்கவே முடியலை. நம்மைச் சுற்றி நடக்கிற எல்லா விஷயத்துக்கும் பணம் மூலமாகத் தீர்வு காணலாம்கிற அந்த நினைப்பு ரொம்ப ஆபத்தானதுனு தோணுது. அரசுக்கு எதிரா அதிகாரத்துக்கு எதிரா நம்மைப் போராடவிடாம செய்றது இது மாதிரியான உதவிகள்தான்னுகூட நினைப்பேன்’’ என்றார் கோபமாக.

சொல் அல்ல செயல் - 10

தனி மனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கான மாற்றமோ, நமக்கு  உள்ளேயோ அல்லது நமக்கு வெளியேவோ எதுவாக இருந்தாலும் அதற்கே உரிய விலையைத்  தராமல் எதுவும் சாத்தியமில்லை. அது நம்முடைய தொப்பையைக் குறைப்பதோ, சிகரட்டைக் கைவிடுவதோ, நீர்நிலைகளைச் சீரமைப்பதோ, எளிய மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதோ... எதுவாக இருந்தாலும், முக்கியமானது, பொறுமையும், காத்திருப்பும், போராடத் தயாராக இருக்கிற மனமும்... ஆனால் நாம் உடனடித் தீர்வுகளை நோக்கியே ஓடுகிறோம். உடனடித்தீர்வுகள் கிடைக்காவிட்டால் எல்லா முயற்சிகளையும் துவக்கத்திலேயே கைவிடுகிறோம். உடைந்துபோகிறோம்.

எதிலுமே மாற்றம் வேண்டும், தீர்வுகள் வேண்டும் என்கிற ஆசை மட்டுமே போதாது. ஆசைகள் முனைப்பாக மாற வேண்டும். முனைப்பு மட்டும் போதாது, அது நிகழும் வரைக்கும் வலிகளை, பிரச்னைகளை எதிர்கொள்கிற பொறுமை வேண்டும். பொறுமை மட்டும் போதாது, தொடர்ச்சியான உழைப்பு அவசியம். அதுதான் முழுமையான நிரந்தரமான நல்ல தீர்வுகளைத் தரும். நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா?

சமூகத்திற்கும் சரி, தனி மனிதனுக்கும் சரி உடனடித் தீர்வுகள் தற்காலிக மகிழ்ச்சியைத் தருமே தவிர, எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஒருபோதும் அளிக்காது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பசுமைப் புரட்சியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட உடனடித் தீர்வுகளால்தான் நம்முடைய மண் மலடானது. நம்முடைய பாரம்பர்ய பயிர்களை எல்லாம் இழந்தோம். பசுமைப் புரட்சியின் பலன்களை இப்போது அனுபவித்துக்கொண்டிருப்பது நாம்தான். அப்படித்தான் இன்று நம்முடைய இன்ஸ்டன்ட் தீர்வுகளுக்கான பலன்களை எதிர்காலத்தில் அனுபவிக்கப்போவது நம் பிள்ளைகள்தான்.

- கேள்வி கேட்கலாம்...