
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
என்னுடன் பணியாற்றிய பல கலைஞர்களின் அர்ப்பணிப்பை நினைத்து பல சமயம் நான் நெகிழ்ந்துபோவேன். அதில், நான் இயக்கிய ‘நீதானா அந்தக் குயில்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் திறமையையும் ஈடுபாட்டையும் சொல்ல நினைக்கிறேன்.
ஒரு கிராமம். அந்த ஊருக்கு ஹீரோ ராஜா வருகிறார். வழியில் சில கோவணாண்டி பையன்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு அட்ரஸ் கேட்கிறார். பையன்கள், ‘‘நாங்களே கவாஸ்கர் அவுட் ஆகிட்டார்னு கவலையா இருக்கோம். நீங்க வேற...’’ என்கிறார்கள். அப்போதுதான் தெரிகிறது, அவர்கள் சின்ன டிரான்சிஸ்டரை காதோடு வைத்துக் கிரிக்கெட் கமென்ட்ரி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது.
இன்னும் சிறிது தூரம் வருகிறார் ஹீரோ. அங்கே ஒரு கிழவி வரட்டி தட்டிக் கொண்டிருக்கிறாள். ‘‘ஏய் கிழவி’’ என அழைக்கிறார். அந்தக் கிழவி அவரை அருகே வரச்சொல்கிறாள். வந்ததும், ‘‘இந்திரா காந்திக்கு என்னைவிட ரெண்டு வயசு அதிகம்... அவரைப் போய் ‘ஏய் கிழவி’ன்னு கூப்பிடுவியா... இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சருக்கு என்னைவிட பத்து வயது அதிகம்... அவரைப் போய் ‘கிழவி’ன்னு கூப்பிடுவியா?’’ என சரமாரியாகக் கேட்கிறார். இப்படி அந்த ஊரே ஒரு இன்டலெக்சுவல் கிராமமாக இருக்கிறது. அதற்கெல்லாம் காரணம், அந்த ஊரில் இருக்கும் டீச்சர் ரஞ்சனி. இப்படி ஆரம்பிக்கிறது கதை. ஸ்ரீராமுக்கு, கதை மிகவும் பிடித்துவிட்டது.

காரைக்கால் அருகேயுள்ள தரங்கம்பாடி கோட்டையில் படப்பிடிப்பு. சூரியன் வருவதற்கு முன் அதிகாலையில் ஓர் ஒளிக்கிரணம், பூமி மீது படர்ந்திருக்கும். அந்த ஒளியில்தான் பல நாட்கள் படம் பிடித்தார் பி.சி. அதற்காகத் தினமும் நள்ளிரவு 2 மணிக்கு ஷூட்டிங் கிளம்பிவிடுவோம். ‘என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது...’ என்ற பாடலையும் கிளைமாக்ஸ் காட்சிகளையும் அந்தக் கோட்டையில் படமாக்கினோம். அந்தப் படத்துக்கு என் தம்பி வீரராகவன் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார். அவருடைய உழைப்பு இல்லை என்றால் அந்தப் படம் இல்லை. தினமும் 2 மணிக்கு யூனிட்டை ரெடி செய்வது சாதாரணம் அல்ல.
‘கடலோரக் கவிதைகள்’ ராஜா, ரஞ்சனி நடித்த படம். லட்சுமி மிக அருமையான ரோல் செய்திருந்தார். கோட்டையைப் பல்வேறு கோணங்களில் படம்பிடித்த ஸ்ரீராமிடம், ‘‘கடலில் இருந்தபடி படம் பிடிக்கலாமா’’ எனக் கேட்டேன். ‘‘தாராளமா செய்யலாம்’’ என்றார்.
அதற்காகக் கோட்டையை மிக அற்புதமாக லைட்டிங் செய்தார். நானும், ஸ்ரீராமும், அவருடைய உதவியாளர்கள் சிலருமாகப் படகில் ஏறினோம். அன்று, கடல் ஆக்ரோஷமாக இருந்தது. படகு படு மோசமாகத் தள்ளாடியது. படகில் ஏறி அமர்வதே சிரமமாக இருந்தது. ஸ்ரீராம் படகை ஒரு கையிலும், கேமராவை ஒரு கையிலும் பிடித்தபடி சமாளித்துக் கொண்டிருந்தார். எனக்கு ‘இவ்வளவு சிரமப்பட்டு காட்சியை எடுக்க வேண்டாம்’ எனத் தோன்றியது. முக்கியமான காரணம், அடுத்த சில நாட்களிலேயே ஸ்ரீராமுக்குத் திருமணம் நடக்க இருந்தது.
‘‘வேண்டாம் ஸ்ரீராம், விட்டுவிடுங்கள்’’ என்றேன். ‘‘தப்பா நினைக்காதீர்கள் சார்... நீங்கள் இறங்கிக்கொள்ளுங்கள். என்ன ஆனாலும் சரி. நான் இந்தக் காட்சியை எடுக்காமல் திரும்ப மாட்டேன். கடலில் கொஞ்ச தூரம் போய் படம்பிடிக்கிறேன்’’ என்றார். துணைக்கு நான்கு மீனவர்களையும் அனுப்பிவைத்தேன். அவருக்கு ஏதாவது நடந்தால் தமிழ் சினிமாவின் ஒரு அத்தியாயமே காணாமல் போய்விடுமே என்று பதைக்கிறேன். இரவு பத்து மணிக்குக் கடலுக்குள் போனவர் அதிகாலை மூன்று மணிவரை பனியிலும் அலையிலும் இருந்து படம்பிடித்தார்.

கரையில் இருந்து என் உதவியாளர்கள் விசில் மூலமாகவும், மைக் மூலமாகவும், அவருக்கு சிக்னல் கொடுப்பார்கள். அதாவது ‘ரெடி... டேக்’ என்பதற்கான அடையாளம். அவர் நல்லபடியாகக் கரைக்கு வந்து சேர்ந்ததும்தான் எனக்கு உயிரே வந்தது. ஃபிலிமை டெவலப் செய்து பார்த்தபோது பூரித்துப்போனேன். அந்தக் கோட்டையே ஒரு பொம்மை மாதிரி நீரில் மூழ்கி எழும்புவது போல் இருந்தது.
அடுத்த நாள் ஊட்டிப் பயணம். ‘பூஜைக்கேற்ற பூவிது’ பாடலை எடுத்தோம். சரியான குளிர். வாகனங்கள் எல்லாமே ஃப்ரீஸ் ஆகிவிடும். காலையில் கார் ஸ்டார்ட் ஆகாது. டயரைக் கொளுத்தி சூடாக்கி காரை ஸ்டார்ட் செய்வோம். காலையில் குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது. உறைந்து போய் இருக்கும். அவருடைய திருமண நாளுக்குள் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் படத்தை எடுத்து முடித்தேன். அடுத்த இரண்டாவது நாளில் ஸ்ரீராமுக்குத் திருப்பதியில் கல்யாணம். கோவைக்குக் கூட்டிச் சென்று, ஃப்ளைட் பிடித்து அவருடைய வீட்டில் கூட்டிப் போய் இறக்கியபோதுதான் எனக்கு நிம்மதி. ராஜா, ரஞ்சனி, என்னுடைய உதவியாளர்கள் என எல்லோரும் நான்கு கார் எடுத்துக்கொண்டு ஸ்ரீராம் கல்யாணத்துக்குப் போய் வந்தோம்.
படகில் இருந்தபடி ஸ்ரீராம் எடுத்த காட்சியை பாரதிராஜாவுக்குப் போட்டுக் காட்டினேன். அசந்து போய்விட்டான். அந்தக் காட்சியை ரசித்தவன். அதை அழகாக எடிட் செய்ய ஆரம்பித்து, அப்படியே முழுப் படத்தையும் எனக்காக எடிட் செய்துகொடுத்தான். ‘நீதானா அந்தக் குயில்’ படத்தின் எடிட்டர் பாரதிராஜா என்றால் எத்தனை பேர் நம்புவார்கள்?
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)
ஆசை முகம்!
‘கானல் நீர்’ என்று ஒரு படம். நாகேஸ்வர ராவ் - பானுமதி நடித்தது. ஒரு ஜமீன்தாரின் மகன், மேற்படிப்பு படிக்க அப்பா விடாததால், வீட்டில் கோபித்துக்கொண்டு சென்னை வருகிறார். பிழைப்புக்காக பகுதிநேர வாத்தியார் ஆகிறார். தினமும் பாடம் நடத்த ஒரு பணக்கார வீட்டுக்கு வருகிறார். இவரிடம் படிக்கும் பெண்ணுக்கு ஒரு அக்கா. அவர் பாடம் நடத்தும்போது, தினமும் காபி கொண்டுவந்து வைத்துவிட்டு, போய் தூண் ஓரம் நிற்கிறாள். அந்தப் பெண்ணின் முகம் அவருக்குத் தெரியவில்லை. அவருக்குப் பார்வை சற்றே குறைவு என அந்தப் பெண்ணுக்குத் தெரிகிறது.

அடுத்த நாள் காபி வைத்துவிட்டுப் போகும்போது அவருக்கு ஒரு கண்ணாடியும் வைத்துவிட்டுப் போகிறாள். கண்ணாடியைப் போட்டுக்கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கிறார். முழு நிலவு அவள் முகம். அவள் ஒரு இளம் விதவை. மெல்ல அவர்களுடைய மனதில் ஒரு ஈர்ப்பு வளர்கிறது. அந்த நாளில் விதவையை மணம் முடிப்பது சாதாரண விஷயமில்லை. பெண்ணின் உறவுகள் சூழ்ச்சி செய்ய, பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது. ‘காதல் ஈடேறாது’ என்ற நிலை. கடைசி நாள் வகுப்பு எடுக்கும் அந்த ஆசிரியர், அன்று கிளம்பும்போது கண்ணாடியைக் கழற்றிவைத்துவிட்டுக் கிளம்புவார். ஆசை முகத்தைத் தவிர்க்க விரும்பும் ஓர் இயலாமை நம் நெஞ்சை அடைக்கும். எனக்குப் பிடித்த கவித்துமான காதல் கதை அது!