
மருத்துவர் கு.சிவராமன்
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வீதிக்கு வீதி அந்த விளம்பரம் கண்ணில் தென்படும். அது, சிவப்பு முக்கோண அடையாளச் சின்னத்துடன் காட்சியளிக்கும் `நிரோத் உபயோகியுங்கள்’ என்கிற அரசாங்கத்தின் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம். ``அது என்னதுப்பா?’’ எனக் கேட்டு பிடறியில் அடிவாங்கிய வலி இன்னும்கூட என் நினைவில் உண்டு. ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழ். பல மாநிலங்களில் மரண விகிதத்துக்கு இணையாகப் பிறப்பு விகிதம் இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. ``அதுவும் 50-60 வயதுகளில் நிகழும் வாழ்வியல் நோய் மரணங்களில் உலகில் நாம்தான் முதலிடம். 2015-ம் ஆண்டில் உலகில் நடந்த வாழ்வியல் நோய் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு நம் தேசத்தில்தாம்’’ என நம் விக்கெட் மளமளவெனச் சரியத் தொடங்கியதில், இருக்கிற இன்னிங்ஸைக் காப்பாற்றவும் களமிறங்கவும் புதிய பேட்ஸ்மேன்கள் குறைந்துகொண்டே வருகின்றனர்.
குழந்தைப் பிறப்பு தள்ளிப்போவதற்கு இன்று மிக அதிகமாகச் சொல்லப்படும் காரணம் பிசிஓடி. அதாவது, `பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்’ (Polycystic ovarian disease or syndrome). தமிழில் சினைப்பை நீர்க்கட்டிகள். ``கல்யாணத்துக்கு முன்னாடி டாண்ணு மணியடிச்ச மாதிரி வரும் சார். இப்போ முழுசா ஒழுங்கீனமாப் போயிடுச்சு. எப்ப வரும், எப்படி வரும்னே தெரியலை’’ என்போரிடம் மண்டியிருக்கும் குழப்பம், தமிழ்நாட்டு அரசியலின் `அம்மாவுக்கு முன், அம்மாவுக்குப் பின்’னான குழப்பத்தைவிட அதிகமானது. `நீர்க்கட்டி பிரச்னையால் வரலையா... அன்னைக்கு நீர்த்தொட்டியில் எடக்கு மடக்காக ஆகிப்போச்சே... அதனால வரலையா?’ என்ற குழப்பத்தில் ‘அந்நியன்’ பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிக்கவா, அழவா எனக் கலவரத்தை உண்டாக்குபவை இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள். ‘`அதுதான், 56 நாளாயிடுச்சே... மாதவிடாய் வரலை. நிச்சயம் கரு தங்கியிருக்கும் எனப் பயங்கர ஆர்வமாக, அலாதியான படபடப்போடு யூரின் டெஸ்ட்டை அதற்காகவே உள்ள கிட்டை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்துபார்த்தால், நெகட்டிவ் ரிசல்ட் வருகிறது’’ என வலியோடு வருத்தமாகச் சொல்லும் மகளிர் இப்போது இங்கு அதிகம்.

இன்னும் சிலரோ, ஒவ்வொரு முறையும் மாதவிடாய் சரியான நாளில் வராமல் தள்ளிப்போகும்போது, அடிக்கடி சிறுநீர் சோதனையை உற்றுப் பார்த்துப் பார்த்து, மனசெல்லாம், `அந்தச் சோதனைப் பெட்டியில் ரோஸ் கோடு, திக்கா இருக்காதா?’ என்கிற நினைப்பிலேயே தேடும்போது, உண்மையாகவே அந்தக் கோடு இருப்பது மாதிரியே அதில் தெரியவரும். கோடு தெரிவதுடன் கூடவே, அடிவயிற்றில் அவள் `மம்மி...’ எனச் சன்னமாகச் சொல்லி சின்னதாக ஒரு செல்லக்குத்து தரும் உணர்வும் கிடைக்கும், `அய்யோ! அதுதானா?’ எனக் குபீர் மகிழ்ச்சிக் கலவரம் பிறக்கும். இன்னும் சிலநாள் அடிவயிற்றைத் தடவிக்கொண்டே, `ஆமாம். நிச்சயம் இது கருதான். வயிறுகூட கொஞ்சம் விம்மியுள்ளது; மார்பு கனக்கிறது’ எனக் கூறத் தொடங்குவதும் உண்டு. கொஞ்சநாள் காத்திருந்து ரத்தச் சோதனை எடுத்துப் பார்க்கையில், `குழந்தை இல்லை; நீர்க்கட்டியாய் இருக்கும்’ என முடிவுவர, மளமளவென கண்ணீர் வருவதை ஆங்கிலத்தில் `Pseudocyesis’, அதாவது, `பொய்யான உளவியல் மாற்றத்தில் வரும் போலிப் பிரசவ உணர்வு’ என அழைக்கின்றனர். சினைப்பை நீர்க்கட்டியோடு, பிரசவித்திருக்கிறோமா, இல்லையா என்ற மனக்குமுறலுடன் மாதத்தைப் பார்க்கும் பல மகளிருக்கு இந்தப் போலிப் பிரசவ உணர்வும் ஏற்படுவது இப்போது அதிகம்.
ஆம். தலைமுடி கொட்டுவதற்கும், உடல் எடைக்கும் அடுத்ததாக இன்று இளம் பெண்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் இந்தச் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னைதான். ``அய்யோ, பிசிஓடியா... அப்போ பாப்பா பிறக்குறதுல சிக்கலா?’’ எனப் பதறுவோருக்கான முதல் செய்தி, இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள் கொஞ்சம் கருத்தரிப்பைத் தாமதிக்கவைக்கக் கூடுமே தவிர, எப்போதும் நிரந்தரத் தடையாக இருக்காது. ஆனால், இன்று மிக அதிகமாகத் தவறாகவும் தாறுமாறாகவும் மருத்துவம் எடுக்கப்படுவதும், தாமதிக்கும் கருத்தரிப்புக்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் படுவேகமாகக் குற்றம் சுமத்தப்பட்டு கருத்தரிப்புக்கான உதவிச் சிகிச்சைகளுக்கு (Assisted reproductive techniques) முக்கியக் காரணிப் பொருளாக ஆக்குவதும் சினைப்பை நீர்க்கட்டிகளைத்தான். நிறைய நேரங்களில், உணவுக்கட்டுப்பாடு, வாழ்வியல் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமே இந்த பிசிஓடியைச் சரிசெய்ய முடியும். தேவை கொஞ்சம் மெனக்கெடலும் அக்கறையும் மட்டுமே.
குழந்தைப் பிறப்பு தாமதம், சமூக அவமானம் தரும் அவசரம், ஆணாதிக்கம் கொடுக்கும் அழுத்தம் என ஏராளமான காரணங்களால் உருவான சினைப்பை நீர்க்கட்டிகளை உணவுத் தேர்வின் மூலமாகவும் வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவும் நீக்கப் பலர் முயல்வதில்லை. தடாலடியாக ஹார்மோன் சிகிச்சை, ஐயூஐ (IUI - Intrauterine Insemination), ஐவிஎஃப் (IVF - In vitro fertilisation) எனப் பல சிகிச்சைகளுக்கு அந்தப் பெண் தள்ளப்படுகிறாள்.
கிட்டத்தட்ட 30 சதவிகித கருத்தரிப்புத் தாமதத்துக்கு, சினைப்பை நீர்க்கட்டி காரணமாகச் சொல்லப்படுகிறது. முதலில், `எப்படி எனக்கு சினைப்பை நீர்க்கட்டி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது?’ என்பதே பலர் மனதில் இருக்கும் கேள்வி. எல்லோருக்கும் மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கும் என்றில்லை. முகத்தில் கிருதா, தாடி, மீசை, கன்னாபின்னாவென முகப்பரு, `லைட்டா கொஞ்சூண்டுதாம்பா சாப்பிடுவேன்’ எனச் சொல்லிவிட்டு, வஞ்சகம் இல்லாமல் வளர்ந்(த்)த, போஷாக்கான, புஷ்டியான உடம்பு எனப் பல சமிக்ஞைகளை இந்த நீர்க்கட்டிகள் காட்டும். பரு-தாடி-மீசை எல்லாம் இருந்தும், மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கிறதெனில், அந்த நீர்க்கட்டிகளைப் பார்த்து அலறவேண்டியதில்லை. நீர்க்கட்டி தேமே என ஓர் ஓரமாக இருக்கும். தொடர்ச்சியான காதலுறவில் விளைந்த முட்டை ஹீரோயின், கருக்குழாயில் காத்திருக்கும் தன் காதலனைத் தேடி ஓடிவந்து `கருவாய் உருவாய்’ மாறிவிடும்.
ஆனால், மாதவிடாய் சீரற்று இருக்கும் மகளிர், தம் முகத்தில் பருவைப் பார்த்ததும், `அய்யோ முகத்தில் பருவா... நீ எப்படி பார்ட்டிக்கு வருவே? இந்தா! இந்தக் களிம்பைப் பூசு’ என வரும் விளம்பரங்களைப் பார்த்து முகப்பருவுக்கு வண்டி வண்டியாகக் களிம்பை வாங்கிப் பூசுவது, அதேபோல தாடி மீசைக்கெல்லாம் பார்லரில் போய் வலிக்க வலிக்க முடியைப் பிடுங்குவது, கை கால் உரோமங்களையெல்லாம் ரசாயனம் வைத்து வழித்து எடுப்பது... என அத்தனையும் தற்காலிகமானது தான். சினைப்பை நீர்க்கட்டியை நீக்க முயற்சி எடுத்தால் மட்டுமே அத்தனையும் நிரந்தரமாக மாறும். என்ன செய்யலாம்?
பிசிஓடியை விரட்ட ரத்தத்தில் கட்டற்றுத் திரியும் இன்சுலினை செல்லுக்குள் செதுக்கி அனுப்ப வேண்டும். அந்த வேலையை உடற்பயிற்சியும் யோகாசனமும் அழகாகச் செய்யும். அதனால் தான் அடி பம்ப்பில் தண்ணியடித்து, குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்து, ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து வந்து, வீட்டுத் தண்ணீர்த் தவலையில் ஊற்றிவைத்து வாழும் கிராமத்து அக்காவுக்கு இன்னும் பிசிஓடி பிரச்னை வரவில்லை.
உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை; யோகாவுக்கு மனம் இல்லை என பவுசாகத் திரிவோருக்கு சர்க்கரை நோய்க்காரருக்குக் கொடுக்கும் மெட்ஃபார்மின் பரிந்துரைக்கப் படுகிறது. அதே குண்டுப் பெண்ணுக்கு இந்த மாதவிடாய்ப் பிரச்னையைத் தொடர்ந்து கருத்தரிப்பு தாமதமாகும்போது, கடந்த வாரம் பேசிய `க்ளோமிஃபென்’ (Clomifene) எனும் ஹார்மோன் ஊக்குவிப்பான் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
உடல் எடையைக் குறைக்க தினம் ஒரு மணி நேரம் நடை, 10 நிமிட மூச்சுப்பயிற்சி, 20 நிமிட ஆசனப்பயிற்சி போதும். இவற்றுக்கு அநேகமாக பெரும்பாலான சினைப்பை நீர்க்கட்டிகளை அடித்துச் சரியாக்கும் சாத்தியம் உண்டு. அவசரப்பட்டு மருந்துகளுக்குப் போவதற்கு முன்னர், சோம்பலின்றி உடலை வளைத்து மெனக்கெடுவது பின்னாளில் கருத்தரிப்புக்கு மிக மிக உதவியாக இருக்கும். ‘லோ கிளைசெமிக்’ உணவுகள் பிசிஓடிக்கான பிரத்யேக மெனு. ரத்தத்தில் சர்க்கரையை வேகமாகச் சேர்க்காத உணவுகளை ‘லோ கிளைசெமிக்’ உணவு என்கிறது நவீன உணவியல் உலகம்.
நிறைய நார்ச்சத்துள்ள காய்கறி, புரதம் அதிகமுள்ள மீன், வண்ண வண்ணமான பழங்கள் என உணவுத் திட்டம் இருக்க வேண்டும். சில்க்கி பாலீஷ் போட்ட வெள்ளை விஷ அரிசிகளை விலக்கிவிட்டு, கறுப்பு கவுனி காட்டுயானம், சிவப்பு மாப்பிள்ளைச் சம்பா எனப் பாரம்பர்ய அரிசியில் பருப்பு பூவாவோ, ஊன் சோறோ ஊட்ட வேண்டும். சிறுதானியங்களை மாவாக்காமல், கூழாக்காமல், சோறாக்கி, அடையாக்கிச் சாப்பிட்டாலும் ‘லோகிளைசெமிக்’ உணவாக அது கிடைக்கும். கசப்பு-துவர்ப்புச் சுவையுள்ள கறிவேப்பிலைத் துவையல், வெந்தயக் குழம்பு, ஆவாரைத் தேநீர் போன்றவை சினைப்பை நீர்க்கட்டிகளை விரட்டியனுப்பும்.

சினைப்பை நீர்க்கட்டியுடன் இருக்கும் பல மகளிர் மன உளைச்சலுடன் இருப்பது உண்டு. கிட்டத்தட்ட சாதாரண நபர் மன உளைச்சலுக்கு ஆளாவதைவிட, இரு மடங்கு தாக்கம் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ள மகளிருக்கு உள்ளது. தாடி, மீசையால் பெறும் சமூக அவமானமும், கருத்தரிப்பு தாமதித்ததால், வரும் மனஅழுத்தமும் சேர்ந்து நிறைய பேரை மனச்சோர்வில் தள்ளுகிறது. பெருகும் மனஅழுத்தம், ரத்தத்தில் கார்டிசான்கள் அளவை அதிகரிக்க, பிரச்னை மேலும் அதிகரிக்கிறது.
திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ இந்த நீர்க்கட்டி அதிகமிருந்து மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கிறதா? முதல் தேர்வாகக் கால்களுக்குப் பொருத்தமான ஒரு கேன்வாஸ் ஷூ, வியர்வைக்கு ஏதுவான ஆடை வாங்கி அணிந்து, சூரியன் உதிக்கும் முன்னர் உள்ள வானத்தை ஓர் எட்டுப் பார்த்துவிட்டு, ஓடுங்கள். வெட்கித்து, முகம் சிவந்துவரும் கதிரவனும், அவன் முகம் கண்டு ஓடி ஒளியும் காதல் நிலவும் கண்ணில்படும்படி வியர்க்க வியர்க்க நடந்துவிட்டு வாருங்கள். `அட! எனக்கு முன்னாடி வாக்கிங் போயிட்டு வந்துட்டியா?’ எனப் பதறும் மிஸ்டர் புருஷ், வரும் மனைவிக்கு, இளஞ்சூட்டில் கறுப்புத் தேநீரும், இனிப்புக்குப் பதிலாக உங்கள் புன்னகையையும் பரிமாறுங்கள். அவள் வியர்வையில், சினைப்பையின் அடாவடி நீர்த்திவலைகளும் வெளியேறியிருக்கும். உங்கள் குசும்புப் புன்னகையில் `தள்ளிப் போகாதே... ஏனோ வானிலை மாறுதே...’ எனப் பாடல் வரும். `அய்ய... இப்பவா? ஆபீஸுக்கு நேரமாச்சு’ என அவள் தள்ளி(ட்டு)ப் போகக்கூடும். அடுத்த மாதத்தில் `அதுவும்’ தள்ளிப்போகும்... மகிழ்வாக!
- பிறப்போம்...