Published:Updated:

சொல் அல்ல செயல் - 11

சொல் அல்ல செயல் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 11

அதிஷா

டற்கரைக் காற்றின் அதே அடர்த்தி மகேஸ்வரியின் மௌனத்திலும் இருந்தது. வந்ததில் இருந்தே  கண்ணீரால் நிறைந்திருந்தாள். குற்றவுணர்வைவிடவும் வலிமிகுந்த நோய் கிடையாது. மகேஸ்வரி அதில்தான் சிக்கியிருந்தாள். அவள் மௌனம் கலைந்தபோதெல்லாம், ‘`கண்ணெதிரே ஒருத்தரைக் கொலை செஞ்சப்ப, நான் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன்’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். மகேஸ்வரிக்குத் தற்கொலை எண்ணங்கள் இருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம். அதனாலேயே எப்போதும் அவளுக்கு ஆறுதலாக அருகிலேயே இருப்பது என முடிவெடுத்திருந்தோம். மெரினாவுக்கு அழைத்துச்சென்று பேசினோம்.

மகேஸ்வரி நர்ஸாகப் பணியாற்றிய மருத்துவமனையில் ஒரு நோயாளி இறந்துவிட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சைதான் அதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தனர். அந்த நோயாளிக்கான  சிகிச்சைகளை அருகிலிருந்து பார்த்துக்கொண்டவர் மகேஸ்வரிதான். ‘`இதெல்லாம் சகஜம்தானேம்மா, எல்லா நேரங்களிலும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியுமா? இது ரேர் கேஸ்தானே’’ என்று என்னென்னவோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றோம். ஆனால், மகேஸ்வரியின் குற்றவுணர்ச்சிக்கு வேறு காரணங்கள் இருந்தன.

‘`அந்த டாக்டர் இன்னைக்கு நேத்துல்ல... பல காலமாவே இப்படித்தான் ட்ரீட்மென்ட் கொடுக்குறார். ஆனா, இப்படி ஓர் அசம்பாவிதம் நடக்குறது இதுதான் முதல்முறை. அவர் இதுபோல தப்பான மருந்துகள் கொடுக்குறதும் சிகிச்சைகள் தர்றதும் எனக்கு எப்பவோ தெரியும். அவர் சில மருந்து கம்பெனிகளோட சேர்ந்து பண்ணின அத்துமீறலையெல்லாம் பக்கத்துலயே நின்னு பார்த்திருக்கேன். நிர்வாகத்துல சொல்லலாம்னு தோணும். ஆனா, அவர் ஒரு டாக்டர். அவர் ஒரு தப்பு செய்யும்போது அதைப்பற்றி நிர்வாகத்துக்கிட்ட எப்படிப் புகார் கொடுக்குறதுன்னு பயம்.

சொல் அல்ல செயல் - 11

அவர்கிட்டயே நேரடியாக்கூட நீங்க செய்றது தப்புன்னு சொல்ல முடியாது. ரொம்பக் கோபப்படுவார், வேற விஷயத்துல கார்னர் பண்ணி டார்ச்சர் கொடுப்பார்னு பயம். மற்ற நர்ஸ்கள்கிட்ட சொன்னப்போ, வாய மூடிட்டு சும்மா இரு, அவர் நம்ம சேர்மனோட சொந்தக்காரர், உன்னோட வேலையே போய்டும்’னு மிரட்டி மிரட்டியே சும்மா இருக்க வெச்சிட்டாங்க. கண்ணெதிர்ல ஒரு தப்பு நடக்கும்போது, அதைப் பார்த்துட்டு ஏன் நான் சும்மா இருந்தேன்? அது வெறும் பயம் மட்டும் இல்ல, என் சுயநலம். நான் மட்டும் நல்லா இருந்தாப் போதும்ங்கற சுயநலம். ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அந்த பேஷன்ட் பொழைச்சிருப்பார்ல’’ என்று சொல்லிவிட்டுக் கதறி அழுதபோது, அவருக்கான ஆறுதலை எங்களால் தரவே முடியவில்லை. 

இங்கே சுயநலம்தான் நம்மை எப்போதும் நம் கண் முன்னே நடக்கிற அத்தனை தவறுகளில் இருந்தும் விலக்கி வைக்கிறதா? எப்போதும் நம்முடைய எதிர்காலம் குறித்த அச்சமும், நம்முடைய பாதுகாப்புணர்வும்தான் சகமனிதன் மீதான அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்கிறதா? நமக்கும் வந்துவிடுமோ என்கிற எண்ணமும், நமக்கு வரும்போது பார்த்துக்கலாம் என்கிற மனநிலையும்தான் எல்லா இடங்களிலும் இயங்குகிறதா?

``எந்த அலுவலகமாக இருந்தாலும் சரி, அங்கே எது இருக்கிறதோ இல்லையோ சைக்கலாஜிக்கல் ஸேஃப்டி எப்போதுமே அவசியம்’’ என்பார் நண்பர் பாண்டியன். ஓர் அலுவலகம் என்பது குழுவாக இயங்குகிற இடம். அந்தக் குழுவில் யார் எந்தத் தவறு செய்தாலும் அதை உயர்வு தாழ்வற்று, பதவி பயங்கள் இன்றி இன்னொரு சக ஊழியர் உரையாடுவதற்கான, அதைப்பற்றி நிர்வாகத்தோடு பகிர்ந்துகொள்வதற்கான பாதுகாப்பு உணர்வை உருவாக்குவதுதான் உளவியல் பாதுகாப்பு. மற்றவருடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால் சுட்டிக்காட்டியவருக்கு எவ்விதத் தொந்தரவுகளும், மிரட்டல்களும், கட்டம் கட்டுதல்களும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம். அதனாலேயே, ஒவ்வொரு அலுவலகத்திலும் இத்தகைய சூழலை அவசியம் உருவாக்க வேண்டும் என்பார் பாண்டியன்.  தன் உயர் அதிகாரியை எடுத்தெறிந்து பேசுவது அல்ல அது. அறமுள்ள ஊழியனாகச் செயல்படுவதுதான் அதன் அடிப்படை. 

நம்முடைய அலுவலகங்களிலும் பணி இடங்களிலும் மட்டும் அல்ல, நம் வீட்டிலும், சமூகத்திலும், பள்ளிகளிலும்கூட இந்த சைக்கலாஜிக்கல் ஸேஃப்டி எப்போதுமே இருப்பதில்லை. இங்கே நமக்கு மேலே இருக்கிறவரை எதிர்த்து யாருமே மூச்சுக்கூட விடமுடியாது.  மூச்சுவிடவும் மாட்டோம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக உண்மைகளைக்  கொண்டுவருகிற   விசில் ப்ளோவர்ஸ் எத்தனை பேரைக் கொன்று தீர்த்திருக்கிறது நம் சமூகம். விசில் ப்ளோவர்கள் மீது எத்தனை எத்தனை மிரட்டல்கள், பொய்வழக்குகள்!

காரணம்,  இங்கே   எந்த   அடக்குமுறைகளையும் ஏற்றுக்கொள்வதைப் பயிற்றுவிக்கிற முதல் பயிற்சிக்கூடமாக இருப்பவை நம் வீடுகள்தான். தவறுகள் நடக்கும்போது கணவனை எதிர்த்து, மாமியாரை எதிர்த்து, மனைவியை எதிர்த்து, அப்பாவை எதிர்த்து எனப் பெரியவர்களை எதிர்த்துப் பேசக் கூடாது என்பதைத்தான் நம் வீடுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன.

தன்னார்வத் தொண்டுநிறுவனம் ஒன்றில் ஒருவரைச் சந்திப்பதற்காகச் சென்று இருந்தேன். அங்கே பள்ளிக்காலத்தில் எங்களுக்கெல்லாம் பினுவாக அறிமுகமானவள், அலுவல் முறையில் பிரியா பெனடிக்டாக இருந்தாள்.  அறிமுகங்களுக்குப் பிறகு, ஏன் அவள் இங்கே இந்த வேலையில் என்று பேச ஆரம்பித்தேன்.

‘`உனக்கு நினைவிருக்கா நம்ம ட்யூஷன் சார் பற்றி...’’ என்று தொடங்கினாள். ‘`ஆமா அவர் பேர்கூட...’’ என்று நான் தடுமாறினேன். அவளே அந்தப் பெயரைச் சொன்னாள். ‘`அவராலதான் நான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன் தெரியுமா’’ என்றாள். ‘`ஓ... அவர்தான் உன்னை இந்த அமைப்புல சேர்த்துவிட்டாரா, அவர் அப்பவே தனியா அலையற பசங்களுக்கு எல்லாம் வீட்ல இடம் கொடுத்து ஹோம்ல சேர்த்துவிடுவாரே...’’ என்றேன். அவள் என்னுடைய பேச்சைக் கேட்டு சத்தமாகச் சிரித்தாள்.  ‘`நீ வேற... அவர் ஒரு பீடோஃபைல்ப்பா, குழந்தைகளைக்கூட பாலியல் பொருளாத்தான் அவர் பார்ப்பார். சைல்ட் செக்ஸ் அப்யூஸர்’’ என்றபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

சொல் அல்ல செயல் - 11

‘`அடப்பாவி, அந்த ஆளு உன்னை...’’ என்று நான் தொடங்க, ‘`நீ வேற, என்கிட்ட இல்ல, அவருக்கு நல்லவேளையா பெண் குழந்தைகள் பிடிக்காதுபோல. ட்யூஷன் வந்துட்டிருந்த பையன்கள்கிட்டதான்...’’ என்றாள். ‘`ஏன் அப்பவே நீ சொல்லலை. பொதுவா தனக்கு நேர்ந்தாதானே குழந்தைகள் சொல்ல மாட்டாங்க, நீ ஏன் சைலன்ட்டா இருந்த?’’ என்று கேட்டேன். 

‘`அந்த வயசுல எனக்கு அதை யார்கிட்ட எப்படிச் சொல்றதுனு தெரியவே இல்ல. ஏன்னா, ஒரு டீச்சர் தப்பு செய்யும்போது அதைப்பற்றி புகார் கொடுக்கிற உரிமை ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ இருக்குனு இங்கே நாம கற்றுத்தர்றதே இல்லை. அந்தப் பழக்கம்தான் என்னை அன்னிக்கு அந்த ஆளைப்பற்றிப் புகார் சொல்லவிடாம செஞ்சிடுச்சு.’’ என்றாள். பின்னாளில் அந்த ஆசிரியர் ஊரை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டதால், அவரைப் பிடித்துக்கொடுக்க முடியவில்லை என்று வருத்தமாகப் பேசினாள். ஆனால், இப்போதும்  அந்தப் பெயர்கூட அச்சத்தை உருவாக்குகிறது என்றாள்.
 
முதல்முறை கிருஷ்ணனை ஜார்க்கண்டில் சந்தித்தபோது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். ‘`சஸ்பென்ஷன் எந்த நேரத்துலயும் டிஸ்மிஸ்ஸா மாறலாம்; காத்திருக்கேன்’’ என்றார் அலட்டலே இல்லாமல்.  சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் ஒரு சாதாரண ஊழியராக விசாகப்பட்டினத்தின் அரசு அலுவலகம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். புரோக்கர்கள் கைகளில்தான் மொத்த அலுவலகத்தின் பிடியும் இருந்தது. அவர்கள் சொல்படிதான் அங்கே ஒவ்வொருவரும் வேலை பார்க்க வேண்டியதாக இருந்தது. காரணம், புரோக்கர்கள், அலுவலகத்தின் தலைமை அதிகாரிக்கு நெருக்கமானவர்கள்.

‘`நாம் எல்லோருமே தன்னளவில் நேர்மையாக இருப்பதையே சாதனையாக நினைக்கிறோம். நீங்க எவ்வளவோ நேர்மையா  இருக்கலாம். ரொம்ப நல்லவராகூட  இருக்கலாம். ஆனா, நீங்க இருக்கிற இடம் அசுத்தமா குப்பைக்கூளமா இருக்குன்னா அதுக்கு நீங்களும்தான் பொறுப்பு. அதைச் சுத்தப்படுத்த முடியலைனா, நீங்களும் அசுத்தமா இருக்கீங்கன்னுதான் அர்த்தம்’’ என்றார் கிருஷ்ணன். அந்த அலுவலகத்தில்  அவர் வேலைகளையும்கூட ஊழல் இன்றிச் செய்ய முடியவில்லை. அதனால் வேலைகளே செய்யமுடியாமல் சும்மாவே அமர்ந்திருக்க வேண்டியதாக இருந்தது.

‘`ஊழல் மலிந்த இடத்தில் மௌனம் காப்பதுகூட ஊழலின் ஒரு பகுதிதான். அந்த உணர்வு என்னைத் தாங்கமுடியாத வேதனைக்கு ஆளாக்கியது. எந்த நேரமும் என் கைகளைக் கழுவிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் இதைத் தடுக்க நினைத்து லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கடிதம் எழுதினேன்’’ என்றார். ஆனால், அதற்கடுத்த நாட்கள் அவர் நினைத்ததுபோல இல்லை.

புரோக்கர்களும் உயர் அதிகாரிகளும் குழு அமைத்துக்கொண்டு கிருஷ்ணனைப் பணியவைக்கும் முயற்சிகளில் இறங்கினர். அவரை முதலில் மிரட்டினர். ரவுடிகள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவருடைய வீட்டு வாசலில் நாய்களின் வெட்டப்பட்ட தலைகள் கிடக்கும். அவருடைய குழந்தை பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் யார் யாரோ பேச்சுக்கொடுப்பார்கள். மறைமுகமான அழுத்தங்கள் அதிகரித்தன. ஆனால், கிருஷ்ணன் விடவேயில்லை. தன்னுடைய புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார். அவரோடு பேரம் பேசினர். அவர் தனித்துவிடப்பட்டார். அவர் தவறுகள் செய்வாரா என எல்லோருமே காத்திருந்தனர்.

‘`நீங்க அநீதிக்கு எதிராக, தீமைக்கு எதிராக போராடத்தொடங்கும்போதே உங்களை முழுமையாக நூறு சதவிகிதம் சுத்தமானவராக மாற்றிக்கொள்ளவேண்டி இருக்கும். உங்களுடைய கால் சதவிகிதத் தவறுகூட ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் சூறையாடிவிடும்’’ என்றார் கிருஷ்ணன். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அந்த நேரத்தில்தான் மனநிம்மதிக்காக அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். 

ஓர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் செய்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருந்தால், அந்த நிர்வாகம் சீர்குலைவைச் சந்திக்கும். அப்படித்தான் ஒரு சமூகத்தில்  நடக்கிற அநீதிகளைச் சுட்டிக்காட்டத் தவறுகிறவர்களால்தான் அது மோசமான நிலையை எட்டுகிறது.

எதிர்ப்பு உணர்வு என்பதுதான் ஒரு சமூகத்தை மேம்பட்ட ஒன்றாக மாற்றும். அவரைப் பகைச்சுக்கிட்டு வாழ்ந்திட முடியுமா, இவரை எதிர்த்துப் பொழைக்க முடியுமா என்கிற கேள்விகள் இங்கே அதிகாரத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிற ஒவ்வொருவர் மீதும் எறியப்படுகின்றன. அவை ஆறுதலுக்கான சொற்களே அல்ல, நம் கோபங்களை நீர்த்துப்போகவைப்பதற்கான; முடக்குவதற்கான வார்த்தைகள். நாம் நமக்கு மேலே இருக்கிறவர்களின் தவறுகளைப் பேசாதவரை மாற்றம் என்பது வெறும் சொல்லாக மட்டும்தான் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாத உடல் எப்படி எப்போதும் மருந்துகளை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ, அப்படித்தான் எதிர்ப்பு உணர்வே இல்லாத சமூகம் எப்போதும் தனக்கான நீதியை யாரோ பெற்றுத்தருவார்கள் எனக் காத்திருக்கும்.

- கேள்வி கேட்கலாம்..