Published:Updated:

சொல் அல்ல செயல் - 12

சொல் அல்ல செயல் - 12
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 12

அதிஷா, மாடல்: ப்ரியா, படம்: ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம்

முதன்முதலாக விமானத்தில் பறக்கிறவர் களுடைய முகம் கலவையான உணர்வுகளால் நிறைந்திருக்கும். நம்மைப் பார்த்து ஒரே மாதிரி புன்னகைக்கும் அழகிய சிப்பந்திகளிடம் நாமும் புன்னகைக்க வேண்டுமா, நாம் புன்னகைத்தாலும் முகத்தை விரைப்பாக வைத்துக்கொண்டு முன்னால் நகரும் ஜென்டில்மேன்களைப் போலவே அட்டென்ஷனில் இருந்துவிட வேண்டுமா? என்பதில் நமக்கு ஏராளமான குழப்பங்கள் இருக்கும். அன்றைக்கு நானும் அப்படித்தான் இருந்தேன்.

முதல் விமானப்பயணத்திலேயே ஜன்னல் ஓர சீட்டுதான் கிடைத்தது. கண்களுக்கும் வானுக்கும் மத்தியில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிடுகிற அழுத்தத்தில் எட்டிஎட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். விமானம் கிளம்பக் காத்திருந்தது. என் அருகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். அவரும் என்னைப்பார்த்து புன்னகைப்பதா, வேண்டாமா எனத் தடுமாறியபடி இருந்ததுபோல இருந்தது.
அவருக்கு என் ஜன்னலோர சீட்டின் மேல் பொறாமை இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

‘`ஃபர்ஸ்ட் டைம்?’’ என்றார் அந்த அம்மா. ‘`ஓ நீங்களும் மொத தடவையா’’ என்று பதறினேன். ‘`இல்லப்பா உனக்கு முதல்தடவையா?’’ என்றார் நிதானமாக. நான் தலையை அவசரமாக அசைத்தேன். அவர் எனக்கு சீட் பெல்ட்டை அணியச் சொல்லித்தந்தார். ‘பதட்டப்பட வேண்டாம்’ என்றார். ``டேக் ஆஃப் ஆகும்போது ஒரு சின்ன ஜெர்க் இருக்கும். ராட்டினம் கிளம்புவதுபோல’’ என்றார். வயதில் மூத்த பெண்களுக்கு எல்லா பையன்களும் மகன்களாகிவிடுகின்றனர். ‘`டெல்லிக்கா போறீங்க’’ என்றார். ‘`ஆமாம்மா , இந்த ஃப்ளைட் வழியில் எங்கயும் நிற்காது’’ என்றேன். சில விநாடிகளுக்குப் பிறகு சிரித்தார். தன் பெயர் பிரேமாவதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

சொல் அல்ல செயல் - 12

பிரேமாவதி அம்மா சென்னையைச் சேர்ந்தவர். அவருடைய முழுநேரத்தொழிலே பயணம்தான் என்பதை அவர் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டேன். பாகிஸ்தான் எல்லையில் தொடங்கி சீன எல்லை வரையும், இந்தப் பக்கம் இலங்கை எல்லை தொடங்கி நேபாள எல்லை வரை எனத் தன்னந்தனியாகச் சுற்றித் திரிகிறார். ``டெல்லி போய்தான் அடுத்து எங்கே செல்வது எனத் திட்டமிடவேண்டும்’’ என்றார். ``பொறாமையா இருக்கும்மா, எனக்கும் இப்படி நல்லா ஊர் சுத்துறதுனா ரொம்ப இஷ்டம்’’ என்றேன்.

‘`அட நீ வேறப்பா, இது எல்லாமே இரண்டு வருஷமாதான்ப்பா. அதுக்கு முன்னால எனக்கு வீடுதான் உலகமா இருந்தது’’ என்றார். வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். வானமும் மேகங்களும் மட்டும்தான் தெரிந்தன.

‘`என்னோட ஹஸ்பெண்ட் ஒரு ஆர்னித்தாலஜிஸ்ட். புக்கெல்லாம் எழுதிருக்கார். பறவைகளைத் தேடித்தேடி சுத்திக்கிட்டிருப்பார். எப்பவும் அவர் வானத்தையேதான் பார்த்துக்கிட்டிருப்பார். எந்தப் பறவையைப் பார்த்தாலும் அதோட குணங்களை எல்லாம் அச்சு அசலா சொல்லுவார். அதுக்காக ஊர் ஊரா, காடுகாடா, மலைமலையா நீளநீளமான கேமராவோட திரிவார். வீட்ல தங்கவே மாட்டார்...’’ என்று தன் கணவரைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.  ‘`உங்களுக்கும் பறவைகள் பிடிக்குமாம்மா?’’ என்றேன். ‘`ஓ ரொம்ப ரொம்ப...’’ என்றார்.  

‘`கல்யாணம் ஆன புதுசுல அவர்கிட்ட எப்பவும் சொல்லுவேன். பறவை பார்க்கப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போங்கன்னு. அவர் நிச்சயமா கூட்டிட்டுப் போறேன்னு சொல்லுவார். ஆனா மறந்துடுவார். ஒவ்வொரு முறையும் அவரோட கேமரா, பைனாகுலர் கருவிகளை எல்லாம் அள்ளிப்போட்டுட்டுக் கிளம்பும்போதும் ஏக்கமா நின்னுக்கிட்டு வெயிட் பண்ணுவேன்; அவர் என்னையும் கூப்பிடுவாருன்னு. ஆனா, அவருக்கு எப்பவும் போலவே மறந்துடும். நான் இன்னொரு வாட்டி சொல்லுவேன். அப்பவும் அவர் நிச்சயமா, உறுதியா, கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன்னு சொல்லுவார். எப்பவுமே அவர் கூட்டிட்டுப் போக மாட்டேன்னு சொன்னதே இல்ல. கூட்டிட்டுப் போனதும் இல்ல. ஆனா, ஆல்வேஸ் ஊருக்குப் போய்ட்டுவந்து `நான் அங்கே புலியைப் பார்த்தேன், எலியைப் பார்த்தேன், காட்டெருமையைக் கட்டிப்பிடிச்சேன்’னு கதையா சொல்லும்போதுதான் கடுப்பாயிருக்கும்.

உண்மையில் எனக்குப் பறவைகளைவிட, பயணம்தான் இஷ்டம். நான் பிறந்த வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட். ட்ராவலிங்னா, சாமி கும்பிடக் கோயிலுக்குப் போறதுதான். இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நிறைய ட்ராவல் பண்ணுவார், நாமளும் ஜாலியா ஊர் சுத்தலாம்னுதான் உடனே சம்மதிச்சுக் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்’’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

‘`ஆனா, அவருக்கு ஆயிரக்கணக்கான பறவைகள், அதோட லட்சக்கணக்கான குணங்கள், அதுங்களோட ரகசியமான வாழ்க்கை எல்லாம் தெரிஞ்சிருந்தது...’’ என்று சொல்லிவிட்டு ஜன்னலைப் பார்க்க ஆரம்பித்தார். நானும் பார்த்தேன். வெளியே ஆரஞ்சும் மஞ்சளுமாக வண்ணப் பஞ்சுமிட்டாய்களை வாரி இறைத்தது போல மேகங்கள் மினுமினுத்தன. தியானத்தில் பறக்கிற பறவையைப்போல விமானம் ஆடாமல் அசையாமல் மிதந்துகொண்டிருந்தது.

‘`அவருக்கு வயசானப்பறம் பயணங்களை எல்லாம் நிறுத்திட்டார். அவருக்கு முதுகுவலி, மூட்டுவலி, பி.பி, சுகர், அது இதுனு ட்ராவல் பண்ணக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால வீட்லயே இருப்பார். எந்நேரமும் அவருக்குப் பேச்சுத்துணைக்கு நான் இருக்கணும். என் பையனுக்கு என்னோட பயணங்கள் பற்றின ஆசைகள் எல்லாம் சின்ன வயசுல இருந்தே தெரியும். அவன் எப்பவும் சொல்லுவான். `அம்மா நான் பெரியவன் ஆனதும் உன்னை உலகம் முழுக்கச் சுத்திக்காட்டுவேன்’னு...’’ என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைச் சொல்லும்போது பையனைப்போலவே கைகளை விமானம்போல வைத்துக்கொண்டு அசைத்தபடி சொன்னார்.

‘`ஆனா, அவனுமே எதையும் பண்ணிடல, அவன் இப்போ இத்தாலியில இருக்கான். ரிசர்ச் பண்ணிட்டு இருக்கான். போன் பண்ணினா, `அம்மா நெக்ஸ்ட் டைம் இந்தியா வரும்போது நிச்சயமா லாங் ட்ராவல் போகலாம்’னு ஒவ்வொரு வாட்டியும் சொல்லுவான். நிச்சயமா போகலாம், கண்டிப்பா போகலாம், டெஃபனெட்டா போகலாம்னு சொல்லிட்டே இருப்பான்’’ என்றார். இப்போது அவருக்கும் எனக்கும் ஜன்னலை எட்டிப்பார்க்கும் ஆர்வமின்றி அமர்ந்திருந்தோம். ஆனால், ஜன்னல் வழியே ஏதோ ஒரு பறவை ஆர்வமாக எட்டிப்பார்ப்பதுபோல இருந்தது. வானத்திற்கும் எனக்கும் இடையில் இருந்த கண்ணாடிபோல ஒன்று எங்களுக்கு நடுவில் மௌனமாக அடர்ந்திருந்தது. அவராகவே அந்தக் கண்ணாடிச் சுவரை உடைத்துப் பேசினார்.

சொல் அல்ல செயல் - 12

‘`நான் ஒரு யூ-டியூப் சேனல் வெச்சுருக்கேன் கண்ணா. நீ பார்த்திருக்க சான்ஸ் கம்மிதான். அது லேடீஸுக்கானது. அதுல கூடை பின்றது.ஃபேன்ஸி கம்மல் வளையல் பண்றதுனு... டூ இட் யுவர்செல்ஃப் மாதிரி. ஊறுகாய் போடறதுகூட சொல்லிக்குடுப்பேன். இப்போ நல்லா போகுது. வருமானம்கூட வருது. அதை வெச்சுதான் இந்த ஊர்சுத்தல் எல்லாமே...’’ என்றார். பிரேமாவதி அம்மா யூ-டியூபில் பிரபலமான மனுஷியாக இருந்தார்.

‘`பல ஊர்களுக்கும் போயிருக்கேன். ட்ரெக்கிங் போவேன். கோவா போய் சர்ஃபிங் கத்துக்கிட்டேன். பங்கி ஜம்பிங் பண்ணிருக்கேன். பாரா கிளைடிங்கூட ஒருவாட்டி பண்ணினேன். ஆனா பேர்ட் வாட்சிங் மட்டும் என்னமோ செட் ஆகலை’’ என்று சொல்லிவிட்டு விழிகளை உருட்டிக் கண்ணடித்தார். ஒரு சின்ன வில்லத்தனம் வெளிப்பட, அழகாயிருந்தது. 

``நம்ம எல்லோருக்குமே சின்னதும் பெரிசுமா நிறைய ஆசைகள் இருக்கும். அதை நிறைவேத்திக்க எப்பவுமே விரும்புவோம். சில நேரங்கள்ல நம்ம ஆசைகளை நிறைவேத்திக்க அடுத்தவங்க கைகளையே எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கும். நான் அப்படித்தான் 27 வருஷம் காத்திருந்தேன். `பிரேமா உன் வாழ்க்கை இப்படியே முடிஞ்சிடுமோ, அமிஞ்சிக்கரைகூட தாண்டாமச் செத்துடுவியா’னுகூட நினைச்சுருக்கேன். நல்லவேளையா அவர் இறந்துட்டார்’’ என்று மீண்டும் கண்களை உருட்டினார். எனக்குப் பின்மண்டையில் யாரோ அறைந்ததுபோல இருந்தது. என் கண்களைப் பார்த்து புரிந்துகொண்டவர் போலத்தொடர்ந்தார்.

``தப்புதான்... அப்படில்லாம் நினைக்கக் கூடாதுதான். ஆனால், என் கணவர் உயிரோட இருந்திருந்தா, இதெல்லாம் சாத்தியமே ஆகிருக்காதுன்னு தோணும்...’’ என்று  சொல்லிவிட்டு மீண்டும் கண்ணடித்தார். தன் கணவருடைய மரணத்தாலேயே தனக்கான விடுதலை கிடைத்ததாகச் சொல்வதை ஏற்றுக்கொள்கிற மனநிலை எல்லாம் ஏனோ எனக்கு வாய்த்திருக்கவில்லை. பிரேமாவதி அம்மா பேசிக்கொண்டேயிருந்தார்.

``அவங்களைச் சொல்லியும் தப்பில்ல. எல்லாரும் அவங்கவங்க ஆசைகளை, கனவுகளை, இலட்சியங்களைப் பற்றித்தான் எப்பவும் யோசிப்பாங்க... தன்னோட இருக்கிறவங்க பற்றி யோசிக்கிற அளவுக்கோ, அதை மதிச்சு நிறைவேற்றி வைக்கணும்னோ இங்கே யாருக்கும் நேரமும் இல்ல, அவகாசமும் இல்ல. நம்ம விருப்பங்களை நாமேதான் நிறைவேற்றிக்கணும். ரைட்டா?’’ கொஞ்சம் விரக்தி கலந்து ஒலித்தன பிரேமாவதி அம்மாவின் சொற்கள். ஆனாலும், முகம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. டெல்லி ஏர்போர்ட்டில் ஒரு பெரிய  டப்பாவில் கால்கிலோ ஐஸ்கிரீம் வாங்கி ஒற்றை ஆளாகத் தின்றுகொண்டே ``மதிய சாப்பாடே இதான்டா கண்ணா...’’ என்று புன்னகையோடு விடைபெற்ற அந்த மகிழ்ச்சி முகம் மறக்கவே மறக்காது. 

அந்தப் பயணம் முழுக்க  இதே நினைவுகள்தான். நான் என் அம்மாவின், தங்கையின், மனைவியின், நண்பனின், சகோதரனின், என்னைச் சார்ந்திருக்கிறவர்களுடைய சின்னச்சின்ன ஆசைகளைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறேனா? அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றித்தருவதில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது, நம்மைச்சுற்றி இருக்கிறவர்களின் விருப்பங்களை நாம் ஏன்  கவனிப்பதே இல்லை? குறிப்பாக நமக்காக உழைக்கிறவர்கள், நமக்காகப் போராடுகிறவர்கள், நமக்காக வாழ்கிறவர்கள் என நம்மைச் சார்ந்து வாழ்கிறவர்களின் ஏக்கமான குரல்கள் ஏன் நம் காதுகளை எட்டினாலும் உள்ளங்களைத் தொடுவதில்லை?

அவர்களுக்காகவே தியாக வாழ்வை வாழ்வதாக எப்போதும் புலம்புகிற நமக்கு ஏன், அவர்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை அறிந்துவைக்கிற எண்ணம் வருவதில்லை?

ஆனால் நம்மை சார்ந்து வாழ்கிறவர்களிடம் நமக்கு ஏதாவது தேவையாக இருக்கும்போது, அவரிடம் நமக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டும் அவருடைய ஆசைகளும் விருப்பங்களும் நமக்கு நினைவுக்கு வந்துவிடும். உடனே அதை நிறைவேற்றக் கிளம்புவது மோசமான செயல்தானோ?

ஒரு மாலைநேரத்தில் அரசுப் பள்ளிக் குழந்தைகளோடு கும்பலாகப் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதுதான் மாணவி திவ்யா சொன்னாள். ‘`அண்ணா எனக்கு பிரியாணின்னா பிடிக்காமப் போய்டுச்சு’’ என்று. மூன்றாம் வகுப்புதான் படிக்கிறாள். ‘`எனக்கு முன்னாடி பிரியாணின்னா ரொம்பப் பிடிக்கும். எங்கப்பாவுக்கு அது நல்லாத்தெரியும். ஆனா, அவர் பிரியாணி வாங்கிட்டு வந்தார்னா, குடிச்சிருக்கார்னு அர்த்தம். அவர் குடிக்கிறது எனக்குப் பிடிக்காது. அதனால, பிரியாணி வாங்கிக்குடுத்து அதை ஊட்டிஊட்டித் திங்க வெச்சு சமாதானம் பண்ணுவாரு... இப்பல்லாம் பிரியாணியைப் பார்த்தாலே கோபமா வருதுண்ணா’’ என்றாள். இங்கே குடிகார அப்பாக்களின் பிரியாணிகளுக்குப் பின்னால் இருப்பது இந்த மனநிலைதான் இல்லையா?

தரையில் படுத்தால், முதுகுக்கு நல்லது என யாரோ ஹீலர்கள் சொல்லிவிட்டார்கள் என்று எப்போதும் தரையிலேயேதான் படுக்கையைப் போடுவார் உறவினரான கதிரேசன். அதனாலேயே அவருடைய மனைவியும் குழந்தைகளும்கூட தரையிலேயே படுத்திருக்க வேண்டிய நிர்பந்தம். அவருடைய மனைவிக்கோ கட்டிலில் படுத்து உறங்கவே விருப்பம். பிறந்தவீட்டுப்பழக்கம். அதைக் கதிரேசனிடம் சொன்னால், கதிரேசன் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார். மனைவியிடம் தரையில் படுப்பதால், விளையும் பத்து நன்மைகள் எனப் பிரசங்கம் பண்ணத் தொடங்குவார். மனைவி எரிச்சலடைந்து கட்டிலில் படுத்து உறங்குகிற ஆசையை மூட்டைகட்டி பரணில் எறிந்துவிட்டார். தூக்கமின்மையில் சிக்கிக்கொண்டார். பின்னொரு நாளில் தனக்குத் தரையில் படுக்கப் பிடிக்காமல், கட்டிலையும் மெத்தையையும் வாங்கிவந்தார் கதிரேசன். மனைவியிடம் உனக்காகத்தான் என்றபோது, மனைவியால் அதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் கட்டில் வாங்கியபின்னும் தரையில்தான் படுக்கிறவராக இருந்தார். வைராக்கியமாக அதையே தொடர்ந்தார். 

நமக்கு எது பிடிக்கிறதோ... அதையே ஏன் நம்மைச் சார்ந்திருக்கிறவர்களுக்கும் புகட்டுகிறோம். அதுவே அவர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். நம்மைச் சார்ந்து வாழ்வதாலேயே அவர்களுக்கான விருப்பங்களையும் நாமே கட்டுப்படுத்துகிறோம். பிள்ளைகளுக்கான கல்வியை, அவர்களுக்கான பொழுதுபோக்குகளை, அவர்களுக்கான எதிர்காலத்தை நிர்ணயிக்கும்போது பெரும்பாலான நேரங்களில் இயங்குவது இதே எண்ணங்கள்தான் இல்லையா?

வாழ்வில் ஒருமுறையாவது விமானப்பயணம் என்ற ஆசை இருக்கிறவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் இருப்பார்கள். இன்று விமானப்பயணத்திற்கான  டிக்கெட் விலை மிகமிக சல்லிசாகிவிட்டது. இரண்டாயிரம் ரூபாயில் ஒருவர் விமானத்தில் பறக்கலாம். நமக்குக்கூட அப்பாவை, பாட்டியை, அக்காவை விமானத்தில் அழைத்துச் செல்லும் ஆசை இருக்கும். ஆனால் செய்யமாட்டோம்.  குலதெய்வம் கோயிலுக்குக் குடும்பத்தோட போகணும் எனப் புலம்பாத பெரியவர்கள் எந்த வீட்டில்தான் இல்லை? ஏன் நம்மால் அதை நிறைவேற்ற முடிவதில்லை.

ஆனால்,  நம்  எல்லோருக்குமே  பெற்றோர்களின், பிள்ளைகளின், பாட்டி, தாத்தாக்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற வேட்கை எப்போதும் நிறையவே இருக்கிறது. . இங்கே யாருக்கும் தன்னைச் சார்ந்து வாழ்கிறவர் களின் விருப்பங்களைத் தட்டிக்கழிக்கிற குணமெல்லாம் நிச்சயமாகக் கிடையாது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் பேசத்தான் நேரம் இருப்பதில்லை? எப்போதும் பிஸியாகவே இருக்கிற நாம் ஆண்டுக்கு ஒருமுறை மதர்ஸ் டேவில் அம்மாக்களைப் புகழ்ந்தும், ஃபாதர்ஸ் டேயில் அப்பாக்களை வியந்தும் அவர்களோடு ஒரு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கடமையை முடித்துக்கொள்கிறோம். மனைவிகளுக்கு அப்படி ஒரு டே கூட கிடையாது! செல்போனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவழிப்போம், ஊரில் இருக்கிற அம்மா ஏக்கமாக ‘எனக்கு எதுவும் வேண்டாஞ்சாமி, தினமும் அஞ்சு நிமிஷம் போன் பண்ணிப் பேசு தங்கம்...’ என ஏக்கமாகச் சொல்லியிருப்பார்கள். நமக்கு அதற்கு மட்டும்தான் நேரமிருக்காது

இங்கே பிரேமாவதி அம்மாவுக்கு அமைந்ததுபோல வாய்ப்புகள் ஆசைகள் நிராகரிக்கப்படுகிற  எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பலருக்குமான சின்னச்சின்ன எளிய விருப்பங்களையும் நிறைவேற்றுகிற பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது. ஒருவேளை, நம்மைச் சார்ந்து வாழ்கிறவர்களுடைய  சின்னச்சின்ன ஆசைகளைப் பற்றியும் விருப்பங்களைப் பற்றியும் நமக்கு நினைவுக்குவர சம்பந்தப்பட்டவர்கள் செத்துப்போக வேண்டுமா?

சொல் அல்ல செயல் - 12

ஒருபக்கம் நம்மை சார்ந்து வாழ்கிறவர்களுக்கான மருத்துவத்திற்கும், கல்விக்கும், வசதிக்கும் என லட்சலட்சமாகக் கடன் வாங்கியும்கூட செலவழிக்கத் தயாராக இருக்கிற நாமேதான் அவர்களுடைய சின்னச்சின்ன விருப்பங்கள் குறித்துக் கண்டுகொள்ளாமல் தவிர்க்கிறோம். எதனால்? 

இங்கே நம்மைச் சுற்றி இருக்கிற  எல்லோருக்குமே தன் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அதை நிறைவேற்ற முனைகிற ஆறுதலான உள்ளங்கள் எப்போதுமே தேவையாக இருக்கின்றன. தன் வீட்டில் இருக்கிறவர்கள் மீதும் தன்னைச்சுற்றி இருக்கிறவர்கள் மீதும் உண்மையான அக்கறையும், அவர்களுடைய விருப்பங்களின் மீது மரியாதையும் அன்பும் கொண்ட ஒருவரால்தான் சமூகத்தில் தன்னைச் சுற்றி வாழ்கிற எளிய மனிதர்களின் வாழ்வியலைப் புரிந்து உணர்ந்துகொள்ள இயலும். நாம் எப்படி இருக்கிறோம்?

- கேள்வி கேட்கலாம்...