Published:Updated:

உயிர்மெய் - 13

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

`உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ எனும் நன்னூல் நூற்பா நம் மொழிக்குப் புணர்ச்சி இலக்கணமாகச் சொன்னது, உயிர் மெய்ப் புணர்ச்சி இலக்கணத்துக்கும் பொருந்தும். ``ச்சீய்... இதையெல்லாம் இலக்கணமாகச் சொல்லித் தரணுமா? அது அது வயசு வந்தா, தெரியப் போகுது...’’ எனப் பாலியல் கல்வியைப் பாரபட்சமின்றிக் கற்றுத்தராமல், விலக்கிவைக்கத்ததாலேயே பாலியல் ஒழுக்கமும், அதை மலரவைக்கும் காதல் களவு ஒழுக்கங்களும் காணாமல்போய், பாலியல் விகாரங்களும், அவை தரும் வாழ்வியல் வலிகளும் பெருகிக்கொண்டே வருகின்றன. `ஆதி நீடல்; அடியகரம் ஐஆதல்; தன்னொற்று இரட்டல்; முன்னின்ற மெய் திரிதல்’ எனும் புணர்ச்சி இலக்கணப் படிப்பு செம்மொழிக்கு மட்டுமல்ல, உடல்மொழிக்கும் இனி அவசியமே.

``என்னோடு கூடி இருக்கையில்கூட, `வேறு பெண்ணோடு இருப்பதாகக் கற்பனை செய்யவேண்டியிருக்கிறது’ என்கிற அவனோடு எப்படி வாழ முடியும்?’’ என நெஞ்சம் குமுறும் வலியோடு கேட்கும் பெண்கள் பலர் நம் சக மனுஷிகளாக அருகில் இருக்கிறார்கள். ``நெஞ்சம் முட்டும் அன்பும் காதலும் நிறையவே உள்ளன. அவற்றைக் கூடிக்களிக்கையில், துளியும் உள்வாங்காத அவளோடு எப்படி முடியும்?’’ என நொறுங்கிப்போய் வேதனையில் நிற்கும் ஆண்களும் அவதிப்படுகிறார்கள். இந்த வலியும் வேதனையும் தீராமல், இயல்பாகக் கருத்தரிப்பு எப்படிச் சாத்தியம்?

உயிர்மெய் - 13

பின்னாளில் இந்தக் கேள்விகள் பிறக்காத சமூகத்தைப் பிரசவிக்க வேண்டும் என்பதாலேயே, இங்கு கஜுராஹோ சிற்பங்களும், காமசூத்திரா கவிதைகளும் இந்தியச் சமூகத்தில் பிறந்தனபோலும் கூடல் வடிவங்களை கஜுராஹோ கோயில்களின் சிற்பங்களில் வடித்ததற்கும், `எப்படியெல்லாம் கூடலாம்?’ என விளக்கி, வாத்ஸாயனர் காம சாஸ்திரம் நூல் எழுதியதற்கும் பின்னணியில் இருந்தது நிச்சயம் காம விகாரங்களோ, முகம் சுளிக்கவைக்கும் விஷயங்களோ அல்ல. இந்தக் கோயிலும், நூலும் வெறும் `இதை’ மட்டும்கூடப் பேசவில்லை. கஜுராஹோ கோயிலில் 10 சதவிகிதச் சிற்பங்கள் மட்டுமே காமக்களிப்பின் வடிவங்களைக் கொண்டுள்ளன. வாத்ஸாயனர் வரிகளில் புணர்ச்சி வடிவங்களும் 20 - 30 சதவிகிதம் மட்டுமே.

இன்பம் குறித்த இலக்கணத்தை அதன் இயல்பை இளமையிலேயே சொல்ல வேண்டும் என்பதால்தான், இறைவனையும் இசையையும் பேசும் இடத்தில் இதற்கும் இடம் கொடுத்திருத்திருக்கிறார்கள். அழகாகக் கோக்கப்பட்டிருந்த இந்த வாழ்வியல் கலையை, இடைக்காலத்தில் மேற்கத்திய அவசர உலகு, புணர்ச்சி இன்பத்தின் வடிவமாக மட்டுமே, `பிட்டுப் படம் மாதிரி’ பிரித்து, பொறுக்கிச் சொன்னதன் விளைவுதான், `அய்யே... அசிங்கம். இதைப்போயி... இங்க வெச்சிக்கிட்டு...’ என நம் சமூகம் போலியாக அதிலிருந்து விலகி வந்தது.

புணர்ச்சி இலக்கணத்தின் முதல் சூத்திரம் முகமொழி. `குட்டிக்கூரா’ பௌடரிலோ, `லோரியல்’ லிப்ஸ்டிக்கிலோ, மெல்லிய மஸ்காராவிலோ பொலிவாகாத முகத்தை, இதழோர மெல்லியப் புன்னகையில், அந்தப் புன்னகைக்கு முகம் மெனக்கெடுகையில், இமைப்பொழுதில் குவிந்து மறையும் கன்னக்குழியில் கொடுக்க முடியும். அந்தப் புன்னகையைக் கவனிக்கத் தவறி அவசரமாகக் கடந்து சென்றுவிடாமல், கருத்தாகக் கவர்ந்து சொல்லும் பதில் புன்னகை மட்டுமே, பனிமலைச் சருக்கில் நீங்கள் வழுக்கிப் பாடப்போகும் தேசத்துக்குத் தரப்படும் அனுமதி விசா.

`பருவமழைக் காலங்களில், காட்டாற்று வெள்ளம்போல் காமம் கரைபுரண்டோடும் அவசர நேரங்கள் தவிர, கருத்தரிப்புக்கான மெனக்கெடல்களில், உடலுறவுக்கு முன்னதான குளியல் கொஞ்சம் அவசியமானதுதான்’ என்கின்றனர் நவீன மருத்துவ வாத்ஸாயனர்கள். கூடவே, சிலவகைத் தொற்றுநோய்களையும் தவிர்க்கச் செய்யும் வாய்ப்பும் இந்தக் குளியலில் உண்டாம். `உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ இதற்கும் பொருந்தும். ஆதலால், குளித்து முடித்து ஆலயம் செல்வீர்!

``சராசரியாக 3-7 நிமிடம் மட்டுமே உடலுறவு நிகழும். 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் அதிகபட்சம் இரண்டு நிமிடங்களில் இதை முடித்துக்கொள்கிறார்கள். சராசரியாக 5.4 நிமிடங்கள்தாம் அதற்கு’’ என்றெல்லாம் இது குறித்த பல தரவுகள் மருத்துவ உலகில் உலாவுவது உண்டு. ஆனால், இவை சந்திப்பிழை, உடம்படுமெய் போன்ற இலக்கணங்கள் எல்லாம் பார்த்த ஆய்வறிக்கை அல்ல. குத்துமதிப்பான தகவல்கள். ஒலிம்பிக்கில் ஓடுவதுபோல், ட்ராக்கில் நிற்கும்போது கடிகாரத்தைப் பார்க்கும் குசும்பெல்லாம் வேண்டாம். இங்கே ஓடுவது இலக்கை எட்ட அல்ல; இருவரும் இன்பத்தை எட்ட.

எந்த மருத்துவத் துறையும், `நீடித்த இன்பம் பெற, 20-30 நிமிடங்கள்’ என்றெல்லாம் சொன்னதே இல்லை. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற அப்படியான முயற்சியில் ஈடுபட்ட ஒரு நபருக்குக் கடைசியில் அறுவைசிகிச்சையில் `அதை’ நீக்கவேண்டி நேர்ந்த வரலாறு ஒன்றும் உண்டு என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஆதலால், `ரொம்ப நேரம் தேவையோ, இன்னும் அஞ்சாறு ஓவர் இருக்கும்போதே ஆல் அவுட்டா’ எனத் தீவிரவாத சிந்தனைக்குள் சிக்க வேண்டாம். ஐயன் வள்ளுவன் சொன்ன `மலரினும் மெல்லியது காமம்’ என்பதைக் கருத்தில் வைத்திருந்தால் போதும்.

   சரியான உறவின் முடிவில், உள் நுழையும் விந்துக் கூட்டம் சரேலென வழுக்கிக்கொண்டு முன்னேறும்படியான விமான நிலைய ரன்வே மாதிரிதான் கருப்பையின் உட்சுவர் அமைக்கப்பட்டிருக்கும். மாதவிடாய்க்கு ஒருமுறை,  மாதமொருமுறை புதுப்பிக்கப்படும் அந்த ஓடுகளம். `சற்று முன்சாய்ந்து இருக்கும் கருப்பையினுள் (Antiverted uterus) விந்துக் கூட்டம் கணிசமாக முன்னேற, உடலுறவுக்குப் பின்னர் பெண் Left lateral leg raise position-ல் சில மணித்துளிகள் காத்திருக்கவேண்டியது கட்டாயம்’ என்கின்றனர் கருத்தரிப்புக்கு உதவும் மருத்துவர்கள்.

 Intrauterine insemination (IUI) - உயிரணுக்களைச் சேகரித்து, அதைக் கழுவி, சுறுசுறுப்பான உயிரணுக்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பெண்ணுறுப்பு வழியே கருப்பைக்குள் செலுத்தும் உத்தி. மிகக் குறைவான உயிரணுக்கள்தாம் உள்ளன, அல்லது ஆணுறுப்பின் மூலம் நேர்த்தியாகச் செலுத்தும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கிறது என்ற நிலையை இரண்டு மூன்று சோதனைகளுக்குப்பின் தெளிவாகத் தெரிந்துகொண்ட பின்னர், பல மருத்துவ முறைகள் பலனளிக்காதபோது மட்டுமே கடைப்பிடிக்கவேண்டிய உத்தி இது.

ஆனால், இன்று பல நேரங்களில் அறமற்ற மருத்துவம் கொடுக்கும் அறிவியல் நெருக்கடியாலும், புரிதலில்லாத சமூக அவசரம் தரும் அவமானங்களாலும் இந்த உத்தியைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்துவது பெருகிவருகிறது. இந்த உத்தியில் பல சமயங்களில் கருமுட்டை வெடிப்பு இயல்பாக நிகழ்வதற்காகக் காத்திருக்காமல், ஹார்மோன்களை 13,14-ம் நாள் பெண்ணுக்குச் செலுத்தி வெடிக்கவைத்து, உயிரணுவை அன்றே ஊசிமூலம் அனுப்பி, கருத்தரிப்பை நிகழ்த்திவிட ஆசைப்படுகின்றனர்.

உயிர்மெய் - 13

இயல்பான புணர்ச்சியில் நடக்கும் கருத்தரிப்பைவிட இந்தச் செயற்கை உத்திக்கு 2-4 சதவிகிதம் மட்டுமே சாத்தியங்கள் உண்டு. `குறைந்தபட்சம் 4-5 தடவைக்கு இந்த உத்தியைச் செய்ய நீங்க  தயராயிருக்கணும்’ என முதலிலேயே சொல்வது இங்கு வாடிக்கை. சரியான மருத்துவச் சிகிச்சையிலோ, தேர்ந்தெடுத்த உணவிலோ கணிசமாக உயிரணுக்கள் உயர்ந்து வருகையில், சினைமுட்டை வெடித்துவரும் நாள்களில் தொடர்ச்சியான உடலுறவிலேயே, பல நேரத்தில் ஐயூஐ (Intrauterine insemination - IUI) இல்லாமல் குழந்தைப்பேற்றை அடைய முடியும். தேவை இங்கு தொழில் நுட்பம் அல்ல, உறவு நுட்பம் மட்டும்தான்.

   `இதுதான்... இப்படித்தான்’ உறவின் உச்சபட்ச  மகிழ்வுக்கு  அல்லது  குழந்தைப்பேற்றுக்கு எனச் சத்தியமாக இலக்கணங்கள் எதுவும் கிடையாது. வாத்ஸ்யாயனர் 64 வகைகளாக அவர் ப்ரிஸ்கிரிப்ஷனில் பேசியுள்ளதாகச் சொல்கிறார்கள். ``அது என்ன வட நாட்டினருக்கு மட்டும்தான் அந்தக் காலத்தில் இந்த வித்தை தெரியுமா?’’ எனத் தமிழ் உள்ளங்கள் சங்கடப்பட்டு, வருத்தப்பட வேண்டியதில்லை. தமிழில் அழகாக இதற்கென `கொக்கோக சாஸ்திரம்’ எனும் நூல் உள்ளது. காம சாஸ்திரத்திலும் சரி, கொக்கோக சாஸ்திரத்திலும் சரி... எல்லாமே கவிகளாகத்தான் இருந்திருக்கின்றன. `நூல் எழுதப்பட்டு சில காலம் கழித்துதான், யாரோ குசும்பு எடிட்டர்கள் பட விளக்கம், லே அவுட்டெல்லாம் போட்டு, கூடுதல் உசுப்பேத்தியுள்ளனர்’ என நூல் வரலாறுகள் சொல்கின்றன.

  `எந்தப் புணர்ச்சி கவிதை படைக்கும், எது  இலக்கியம் எழுதும்?’ என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. சில கவிதைகளில் வரலாறு பிறக்கும்; சில இலக்கியங்கள் ஆசுவாசப்படுத்தும், அவ்வளவுதான். இளமையில் பலருக்கும் புதுக்கவிதை பிடிக்கும், முதுமையில் மரபுக்கவிதை பிடிக்கும் என்பது மாதிரி வயசுக்கேற்ற கவிதையை வாசிக்கலாம். மகிழ்விக்கும் எல்லா புதுக் கவிதைகளையும்விட, மரபுக்கவிதை ஏதோ ஓர் இடத்தில் விஞ்சி நிற்பதுபோல, `பிற நிலைகள் இல்லாமல் ஆண், பெண் மேலிருந்து உறவில் செலுத்தும் உயிரணுக் கூட்டம் கொஞ்சம் வேகமாகச் சென்று கருத்தரிக்கும் வாய்ப்பைக் கணிசமாக அதிகரிக்கும்’ என்கின்றன மருத்துவ அனுபவத் தரவுகள்.

 உறவின்போது முழு உயிரணுக் கூட்டமும் உள்ளே செல்லும் என எதிர்பார்ப்பது மடமை. புராஸ்டேட் கோள திரவம், ஃப்ரக்டோஸ் சத்துகள், இன்னும் சில சத்துகளுடன் ஒன்றாக வரும் விந்தணு, உடலுக்கு வெளியே வந்தவுடன் 15-20 நிமிடங்களில் முழுமையாக நீர்த்து, கர்ப்பப்பை கழுத்து வழி கர்ப்பப்பைக்குள் பிரவேசிக்கும். அந்தச் சமயம் 40-50 சதவிகிதம் திரவம் வெளியேறுவதில் தவறில்லை. `அப்படியானால், உயிரணுக்கள் போகாதே... அய்யய்யோ’ எனப் பதற்றமடையத் தேவையில்லை. அந்தச் சட்டசபைக்குள் 1/3 பங்கு கோரம் இருந்தாலே, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, `குவா குவா’ பிறக்கும்.

உயிர்மெய் - 13

`தேனாம்பேட்டை வந்தாச்சு... இறங்கு!’ என ஏதோ கண்டக்டர் அவசரம் காட்டுவதுபோல் ‘அது’ முடிந்தவுடன், இறங்கிப்போய் வாட்ஸ்அப்பில் என்ன வந்திருக்கு எனப் பார்க்கப்போவதும்கூட குழந்தைப்பேறின்மையைக் கொண்டுவரும். ``எங்கள் சமூக வழக்கத்தில் அதற்கப்புறம் கண்டிப்பாக உடனே குளிக்க வேண்டும்’’ என நகர்வது களிப்புக்குச் சரியாயிருக்கக்கூடும்; நிச்சயமாகக் கரு துளிர்ப்புக்குச் சரியானது அல்ல. உடலுறவுக்குப் பிந்தைய கணங்கள் முக்கியமானவை. காத்திருக்கும் கருமுட்டையை நோக்கி விந்து நகர்வதானாலும் சரி, நாளைக்கு வரவிருக்கும் வழியிலேயே வாரி அரவணைக்கக் காத்திருக்க வழுக்கிச்செல்லும் விந்துப் பேரணிக்கும் சரி, மனம் நிறைவாக, அமைதியாக மலர்ந்திருத்தல் அவசியம்.

 `அவரின் உயிரணுக் கூட்டம் முழுவதும் உள்ளே சென்றிருக்குமா, இது கண்டிப்பாகக் கருத்தரிக்குமா, முட்டை வெடிச்சுச்சோ இல்லையோ?’ என பாகிஸ்தான் மேட்ச் பார்க்கும் பரபரப்போடு இருக்கத் தேவையில்லை. `மேட்ச்-கேட்ச் எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும்’ என்ற நம்பிக்கையில், ``ம்ம்ம்... வயசு 40 மாதிரியா தெரியுது?’’ என ஒருவரை ஒருவர் எள்ளி இணைந்து, உயிர்ப்புடன் எழுதும் வரிகளில் மட்டும்தான் கவிதை பிறக்கும்... உயிருடன்!

- பிறப்போம்...

உயிர்மெய் - 13

சின்ன டெக்னிக்!

`யப்பா அது என்ன Left lateral leg raise position?’ என யாரும் பயப்பட வேண்டாம். அது சர்க்கஸில் மங்கோலிய அழகிகள் காட்டும் வித்தை மாதிரியெல்லாம் கஷ்டம் ஒன்றும் அல்ல. படுக்கையில், உறவின் முடிவுக்குப் பின்னர் பெண் தன் இடப்பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொள்ள வேண்டும். தன் தொடைப்பகுதிக்குக் கீழ், படுக்கையில் சற்றுப் பருத்த தலையணையை வைத்திருந்தால், கால்கள் படுக்கையைவிட உயரே இருக்கும். இந்த பொசிஷன், விந்துக் கூட்டம் வழுக்கி உள்ளே செல்ல, இன்னும் சுளுவாக இருக்குமாம். உறவுக்குப் பின்னர், அத்தனை உயிரணுவும் வெளியேறியது போன்ற உணர்விருக்கும் தம்பதியர், இந்தச் சின்னத் தொழில்நுட்பத்தை முயலலாம்!