Published:Updated:

சொல் அல்ல செயல் - 13

சொல் அல்ல செயல் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 13

அதிஷா

ன் டீம் லீடரை அடித்து மண்டையை உடைத்துவிட்ட ஃபாத்திமாவைக் காவல் நிலையத்திலிருந்து அழைத்துவந்திருந்தோம். ‘`ஏன்யா, டார்கெட் பிரஷரா? அதுக்காக யாராச்சும் டீம் லீடரை அடிப்பாங்களா?’’ ஒரு மாலை நேரம் நண்பர்களோடு வீட்டில் பேச ஆரம்பித்தோம். அந்தச் சிறிய வீட்டில் எங்களுடைய மூச்சுக்காற்றும் தயங்கித் தயங்கி ஓடும் ஃபேனின் ஒலியும்தான் கேட்டுக்கொண்டிருந்தன.

‘`மனுஷங்கமேலே நம்பிக்கை இல்லாம போகும்போது, மரிச்சுதானே போகணும். ஆனா, எனக்குக் குடும்பம் இருக்கு, என்னால எப்படிச் சாக முடியும்?’’ பாத்திமா சொற்களை தேர்ந்தெடுத்துப் பேசினாள்.

``கிரெடிட் கார்ட் விக்கிறது என்ன அவ்வளவு கேவலமான வேலையா? போன்ல பேசினாலும் சரி, நேர்ல போனாலும் சரி ஏன் சாணி மாதிரி கேவலமா நடத்துறாங்க? எவ்வளவு கடுமையான வார்த்தைகளை ஒவ்வொருநாளும் கேட்க வேண்டியிருக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும்; நிச்சயமா தொந்தரவுதான் பண்றோம். ஆனா, அதுக்காக எதிர்முனையில பேசுறது தன்னைப்போலவே இன்னொரு மனுஷின்னு தோணாதா? ஒவ்வொரு கஸ்டமருக்கு கால் பண்ணும்போதும் அல்லாவை நினைச்சிப்பேன், இவன் நம்மள கேவலமா பேசிடக்கூடாது, மட்டமா நடத்திடக்கூடாதுன்னு.’’

‘`அதுக்கு ஏன் டீம் லீடரை அடிச்ச?’’

சொல் அல்ல செயல் - 13

``நான் பார்க்கிற வேலைக்கு ஏற்ற கூலியை அந்த ஆபீஸ்ல ஒருபோதும் கொடுத்தது இல்ல.இன்சென்டிவ் சரியா கொடுக்கிறது இல்ல. வேலைநேரம் அதிகம். அப்ரைஸல் நியாயமா போட்டது இல்ல. அதையெல்லாம் நான் ஒருநாளும் கேட்டதே இல்ல. எனக்கு கொடுக்க வேண்டிய ப்ரமோஷன் கூட குடுக்கல. வேற ஒருத்தருக்குக் கொடுத்தாங்க, நான் அமைதியா ஏத்துக்கிட்டேன்.

ஏன்னா, நான் எப்பவும் என் குடும்பத்துக்காக எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டுதான் வேலை பார்க்கிறேன். ஆனா, இந்த வேலையில தினம் தினம் சந்திக்கிற அவமானங்களையும் வலியையும் தாங்கவே முடியலை. எல்லோருக்கும் ஆகிற மாதிரி எனக்கும் இதெல்லாம் மரத்துப்போய்டும்னு நினைச்சிருக்கேன். ஆனா, எனக்கு இந்த வலி அதிகமாத்தான் ஆகிருக்கு.

நேத்து ஒரு கஸ்டமர் கிரெடிட் கார்டெல்லாம் வேண்டாம்; உன் வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு, நேர்ல பார்க்கணும்னு சொன்னான். அப்புறம் இன்னும் அசிங்கமா பேசினான். இது ஒண்ணும் புதுசில்லைதான். எப்பவும் எவனாச்சும் கேட்கிறதுதான். ஆனா, ஏன்னு தெரியல, எதுக்கான கோபம்னு புரியல, ஆபீஸே திரும்பிப் பார்க்கிற மாதிரி அவன்கிட்ட கத்தினேன். அது பலநாள் அடக்கி வெச்ச வலி. எப்பவோ பத்த வெச்ச நெருப்பு.

டீம் லீடர் கூப்பிட்டு `கஸ்டமர்கிட்ட இப்படி பிஹேவ் பண்ணக்கூடாதுன்னு ட்ரெயினிங்ல சொல்லிக்கொடுக்கலையா... அவங்க அப்படித்தான் பேசுவாங்க; நீதான் கொஞ்சம் பார்த்துப் பேசி சேல் க்ளோஸ் பண்ணணும்’னு லெக்சர் கொடுக்கிறான். `ஜென்டிலா இருந்து பழகு, ரெளடித்தனம் பண்ணாத’ங்கிறான். நான் திரும்பத் திரும்பச் சொல்றேன், `சார், அவன் என்கிட்ட அறுவறுப்பான வார்த்தைகளைச் சொன்னான்’னு. டீம் லீடர் திரும்பத் திரும்ப அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்கிறான். சகிச்சிக்கோங்கிறான்...  ராஸ்கல், நான் இங்கே கிரெடிட் கார்ட் விக்கத்தான்டா வந்தேன்னு கத்திட்டே கைல இருந்த செல்போனை வீசினேன், அது அவன் தலையில பட்டு கொடகொடனு ரத்தம் கொட்டிடுச்சு... இதுல என்னோட தப்பு என்ன இருக்கு?’’ ஃபாத்திமாவின் கேள்விக்கு வீட்டின் ஃபேன் மட்டும்தான் டர்ர்ர்ரக் டர்ர்ரக் என பதில் சொல்லிக்கொண்டிருந்தது.

நம் எல்லோருக்குமே பணியிட அவமானங்களும், வீட்டு அவமானங்களும் ஏராளமாக உண்டு. ஆனால், நாம் வருங்காலம் தருகிற அச்சத்தால், அவற்றை எப்போதும் சகித்துக்கொள்கிறவர்களாக இருக்கிறோம். மிகச்சிலர் வேலைகளை மாற்றிக்கொள்கிறார்கள். சிலர் செத்துப்போகிறார்கள். ஆனால், எல்லோராலும் வேலைகளை இஷ்டம்போல மாற்றிக்கொள்ளவோ செத்துப்போகவோ முடிவதில்லை. ஃபாத்திமா அவர்களில் ஒருத்தி. 

இங்கே ஃபாத்திமாவின் அலுவலகத்தில் மட்டும் அல்ல, ஒவ்வொரு அலுவலகத்திலும் இத்தகைய மனிதர்களை எப்போதும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொர் ஆண்டும் நம் ரத்தம் சுண்ட வேலை பார்த்தாலும், சம்பள உயர்வின்போது மட்டும், குற்றம் கண்டுபிடித்து ஊதிய உயர்வில் முட்டுக்கட்டை போடும் முதலாளிகளை மேலதிகாரிகளைச் சகித்துக்கொள்கிறோம். தனக்கு வேண்டியவருக்கு அதிக சலுகைகளைக் கொடுத்துவிட்டு நமக்கு எப்போதும் பாதகம் விளைவிக்கும் டீம் லீடர்களை ஏற்றுக்கொள்கிறோம். இடங்கள்தான் மாறும், சின்ன பஞ்சர்க்கடையில் தொடங்கி பெரிய தொழிற்சாலை வரை கதை ஒன்றுதான்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எல்லா அலுவலகங்களிலும் உண்டு. ஆனால், பெரும்பாலான பெண்கள் ஏன் மௌனம் காக்கிறவர்களாக இருக்கிறார்கள்? காரணம் அவர்களுடைய ஊதியத்தை நம்பிக் காத்திருக்கும் உயிர்கள்! இந்த உயிர்களுக்காகவே நாம் எதையும் சகித்துக்கொள்கிறவர்களாக இருக்கிறோம்.

சகிப்புத்தன்மையின் உச்சங்களை தெரிந்துகொள்ள நினைக்கிறவர்கள் ஒருமுறை தீபாவளி நேரத்து ரயில்களில் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்களில் பயணிக்கவேண்டும்.

ஊருக்குச் செல்ல மூன்றுமாதம் முன்பே டிக்கட் ரிசர்வ் பண்ணவேண்டி இருக்கும். அந்த ரிசர்வேஷனும்கூட, தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்துவிடும். தட்கலுக்கும்கூட வாய்ப்புகள் குறைவு.

ரிசர்வேஷனுக்கெல்லாம் உங்களுக்கு இணையம் தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் பணம் அதிகமாக தேவைப்படும். ஆனால், இதெல்லாம் அறியாதவர்களும் வாய்க்காதவர்களும்தான் நம்மில் பெரும்பான்மை. அவர்களுடைய இறுதி நம்பிக்கை அன்ரிசர்வ்ட் பெட்டிகள்தான்.

விழாக்காலங்களில் இந்த அன்ரிசர்வ்ட் பெட்டிகள் அடால்ஃப் ஹிட்லரின் ஹோலகாஸ்ட் கிடங்குகளாக உருமாறிவிடும். இந்த கோச்களில் அடைத்துவைக்கப்பட்ட மனிதர்கள் ரத்தம் குடிக்கும் அரக்கர்களாக உருமாறுவார்கள். எந்த நேரத்திலும் அங்கே ஒரு கொலை நிகழலாம் என்கிற உஷ்ணம் சூழ்ந்திருக்கும். அன்பு, சிநேகம் என்கிற சொற்களெல்லாம் அர்த்தமிழந்து போயிருக்கும். எத்தனை பெரிய தியாகிகளும் கூட தங்களுக்கான இடங்களைத் தக்கவைக்கிற அதி சுயநலர்களாக மாறிவிடுவார்கள்.

அரை இன்ச் இடத்தில் எட்டுமணி நேரம் ஒற்றைக்காலில், ஒற்றை விரலில் யோகியைப்போல நிற்க நிர்பந்திக்கப்படுவோம். மலமோ, சிறுநீரோ அடக்கிக்கொள்! எல்லாமே ஊர்வந்தபின்புதான்! நான்குமணி நேரம் முன்னாலேயே க்யூவில் நின்று இடம் பிடித்தால், நான்கு பேர் உட்காரக்கூடிய இடத்தில் எட்டு பேர் நெருக்கி அடித்து அமர வைக்கப்பட்டிருப்போம். அதிலும் உட்கார்ந்த பிறகு, கால்களையோ கைகளையோ அசைக்கமுடியாமல் அப்படியே சிலைபோல அமர்ந்திருக்கவேண்டும். கழுவப்படாத கழிப்பறைகளின் வாசல்களில் உட்கார வாய்ப்புக்கிடைத்தால் தயங்கவே கூடாது.  குடலைப் பிடுங்குகிற துர்நாற்றம் அடித்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.  கழிப்பறைகளுக்குள்ளேயும்கூட அமர போட்டிகள் நடக்கும்.

கழிப்பறை வாசல்களில், நடக்கும் வழியில் அமர்ந்திருக்கும்போது, நம் மீது செருப்புகள் உராயத் தாவித்தாவி உள்ளே கழிப்பறைக்குச் செல்கிற ஒருவனோ ஒருத்தியோ திரும்பும்போது ஈரக்கால்களோடு முகத்தை தேய்த்துவிட்டுப் போவார்கள். பெட்டிகள் வைக்கிற இடங்களில்கூட, ஏறி முதுகை வளைத்துக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டியதாயிருக்கும். ஊர் வந்து இறங்கும்போது முதுகெலும்புகளிலிருந்து ஒருவலி மூளையைத் தாக்கும்போது உயிர்போகும்.

கூட்டத்தோடு நின்றுகொண்டிருக்கும்போது அருகில் இருப்பவருடைய ஷூக்களால், மிதிபட்டு பெயர்ந்துவரும் கால்விரல் நகங்களில் ரத்தம் கசிகிறதா என்பதைக்கூட குனிந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் யாராவது இறங்குவார்களா என ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருப்போம். ஊர் வரும்வரை கூட்டம் குறையவே குறையாது. இந்த அடிமாட்டு வண்டியிலும் ஏதாவது இடம் கிடைக்குமாவென கையில் பிள்ளையோடு பக்கத்தில் மனைவியோடு யாரோ ஒரு குடும்பஸ்தன் ஏதோ ஒரு ஸ்டேஷனில் வந்து நம்பிக்கையோடு காத்திருந்து கதவைத் தட்டுவான். யாருக்குமே அவர்களுக்கு இடம்தர  மனம் வராது.  திறக்காதீங்க என்கிற கூச்சல் கோராஸாக ஒலிக்கும். 

இத்தனை இன்னல்கள் இருந்தும் நாம் ஆண்டுதோறும் ஏராளமாக இன்னும் இன்னும் அதிகமாக அன்ரிசர்வ்ட் பெட்டிகளில் பயணிக்கிறோம். ஒவ்வொரு தீபாவளியின் போதும், ஊருக்குக் கிளம்புவோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட அதிகரிக்கிறது. ரயில்கள் மட்டுமல்ல; விழாக்கால நாட்களில் பேருந்துகளிலும்கூட இதே கதைதான்.

ஒரே ரயில்தான். ஆனால், அதில் பயணிக்கிற எல்லோருக்குமான பயணங்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. அப்படித்தான் இந்த நகரமும்.  ஒரே நகரம்தான்... எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஜீவிதமா வாய்த்திருக்கிறது?

‘‘சென்னை மாதிரியான நகரத்திற்கு குடியேற வருகிற ஒவ்வொருவரையும் தயார் செய்கிற பாசறை இந்த அன்ரிசர்வ்ட் பெட்டிகள். இங்கே வைக்கப்படுகிற தேர்வில் ஜெயிக்கிறவன், இந்த நகரத்தில் எப்படியும் பிழைத்துக்கொள்வான். தோற்றுப்போகிறவனால், இங்கே ஒருமாதம்கூட தாக்குப்பிடிக்க முடியாது.’’ என்பார் நண்பர் தனபால். தன் குடும்பத்தை ஊரிலேயே விட்டுவிட்டு கார் தொழிற்சாலை ஒன்றில் உழைக்கிறவர். எந்த விழாவாக இருந்தாலும் எப்படியாவது ஊருக்குப் போய்விடுவார். ‘‘ஏன்ண்ணே இந்தப்பாடு? ரெஸ்ட் எடுங்கண்ணே’’ என்று எப்போதும் கேட்பேன்.

``அன்ரிசர்வ்ட் பெட்டில, அந்தக்கூட்டத்துல ஜன்னலை பிடிச்சிகிட்டு உடம்பை வளைச்சி நிக்கும்போது, ஜன்னல்வழியா காத்தடிக்கும். அப்போ ஒரு சிலுப்பு வரும் தெரியுமா... அவ்வளவு சொகமா இருக்கும்... அப்படித்தான் இதுவும். இந்த ஊர்ல கெடந்து சோத்துக்கும் சாத்துக்கும் எவ்வளவு சீரழியுறோம். அதுக்கு நடுவுல கிடைக்கிற காத்து மாதிரிதான் ஊருக்கு போறது. ஏன்னா இங்க இப்படி கெடந்து அல்லல் படறது யாருக்கொசரம்? பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும்தான். ஒரு நோம்பி நாள்ல கூட அவங்களோட இருக்க முடியாட்டி என்ன இதுக்கு இங்க இப்படி பாடுபடணும்?’’ என்பார். ‘‘ஆனாலும் இந்த வேதனை ரொம்ப மோசம்ண்ணே’’ என்று பதிலுக்குச்சொன்னால் ஆனந்தமாக சிரிப்பார்.

‘‘நீ ஊர் போய் சேர்ற வரைதான் எல்லாமே, போய் எறங்கிட்டா எல்லாமே மறந்துடும். அடுத்த ரெண்டுநாளும் குழந்தைகளும், கறிசோறும், ஆட்டமும் பாட்டும்னு பொழுது போறதே தெரியாது. ஆனா திரும்பவும் கிளம்பி ஊருக்கு வரும்போது அதே ரயில், அதே கூட்டம் வரும் பாரு ஒரு வேதனை, அந்த நேரத்துல எவன் கிடைச்சாலும் வெட்டி சாச்சிரலாம்னு இருக்கும். ஆனாலும் பொழைக்கணும், அடுத்த மாசம் ஊருக்கு காசனுப்பனும்... சகிச்சிக்குவேன்’’ என்பார்.

சொல் அல்ல செயல் - 13

நாம் அனுப்புகிற சொற்ப பணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கரங்களுக்காக எல்லா தண்டனைகளையும் மகிழ்ச்சியோடு ஏற்கவே நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். அந்தச் சிலருக்காக நம் வாழ்வின் அத்தனை இன்பங்களையும்கூட துறக்கக் காத்திருக்கிறோம். அந்தச் சிலர்தான் நம் சகிப்புத்தன்மையின் அளவுகளை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், இந்தச் சகிப்புத்தன்மையால்தான் `ஏன் அன்ரிசர்வ்ட் பெட்டிகள் இத்தனை நெரிசலாக இருக்கின்றன?’ என்று கேட்பதேயில்லை. `இருபது ரிசர்வ்ட் பெட்டிகள் வைத்திருக்கிற ரயிலில் ஏன் இரண்டே இரண்டு அன்ரிசர்வ்ட் பெட்டிகள் வைத்திருக்கிறார்கள்?’ என்று யோசிப்பதே இல்லை. எல்லாவற்றையும் சகித்துக்கொள்; இன்னும் கொஞ்ச நேரம்தான், இன்னும் கொஞ்ச தூரம்தான், அதற்குப்பிறகு, வசந்தம் வந்துவிடும் என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்படுகிறோம்.

இப்படிப்பட்ட கடுமையான சகிப்புத் தன்மைதான் இங்கே நம்மைச் சுரண்டி வாழ்கிற எல்லோருக்குமான முதலீடு. அதுவே நம் பலவீனம். சகித்துக்கொள்ளாதே என யாருமே நமக்குக் கற்றுத்தருவதில்லையே... ஏன்? சகித்துக்கொள்ளாதவனுக்குக் கோபம் வரும், எதிர்த்து நிற்பான். தன்னுடைய சுயமரியாதைக் கென போராடுவான். தன் உரிமைகளை கேட்டுப்பெறுவான்.

ரயில்களில், பணியிடங்களில் மட்டும் அல்ல, வீடுகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆண்களை சகித்துக்கொண்டு அடங்கி வாழ்வதை பல நூறு ஆண்டுகளாக கற்றுத்தேர்ந்தவர்கள் நம் வீட்டுப் பெண்கள். வீட்டுப் பெண்களால் அல்லல்படும் ஆண்களும் ஏராளமாக உண்டு. பெண்களைப்போல ஆண்கள் அதிகமும் வெளியே காட்டிக்கொள்வதில்லை.குழந்தைகளின் வாழ்வுக்காக அவர்கள் மனைவிகளை சகித்துக்கொள்பவர்களாக இருப்பார்கள். தன்னுடைய மனைவிக்காக பெற்றொர்களை சகித்துக்கொள்கிறவர்களாக இருப்பார்கள். சமூகத்தின் கண்களுக்குப் பயந்து மௌனித்திருப்பார்கள். வீடுகளின் சகிப்புத் தன்மை எல்லை தாண்டுகையில் அவை சமூகக் குற்றங்களாக பரிணமிக்கின்றன.

இங்கே சகித்துக்கொள்கிறவர்கள் முதலில் குற்ற உணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உனக்குக் கிடைப்பது எல்லாமே இலவசம், நீ அனுபவிக்கிற சேவை நான் உனக்கு அளிக்கிற கொடை, இங்கே நீ பணியாற்றுவதால், எனக்கு எந்த லாபமும் இல்லை, நீ வாழ்வது என்னுடைய உழைப்பில், நீ சம்பாதிப்பதில்லை, எனத் திரும்பத்திரும்ப சொல்லி நம்பவைக்கப் படுகிறோம். இந்த குற்றவுணர்வுகளின் மீதுதான் எல்லா விதிமீறல்களும் நிகழ்த்தப்படுகின்றன.

அதனால்தான், அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட் ஏன் குறைவாக இருக்கிறது என யாருமே கேள்வி எழுப்புவதில்லை. காரணம், உனக்கு மலிவு விலையில் ஒரு சேவையை அளிக்கிறோம், அது அப்படித்தான் இருக்கும், அதை ஏற்றுக்கொள் எனத் திரும்பத் திரும்ப நம் மூளைகள் நம்பவைக்கப்படுகின்றன. இலவச அரிசி ஏன் அத்தனை தரக்குறைவாக இருக்கிறது, அரசுப் பள்ளிகள் ஏன் இந்தக் கதியில் கிடக்கின்றன, ஒரே வேலையையே செய்தாலும் ஒரு பெண்ணைவிட ஆணுக்கு அதிக ஊதியம் கொடுக்கிறீர்கள்? என எல்லா கேள்விகளுக்கும் `அப்படித்தான் இருக்கும்; நீ ஏற்றுக்கொள்’ என்று மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுகிறது.
 
உன்னுடைய பிறப்பு இப்படி, உன்னுடைய பாலினம் இது, உன்னுடைய சாதி இது, உன்னுடைய உணவுப்பழக்கம் இது, உன்னுடைய பொருளாதார நிலை இப்படி, உன்னுடைய அறிவு இப்படி, உன்னுடைய வளர்ப்பு இப்படி, நீ இந்த மதத்தைச் சேர்ந்தவன். எனவே, நீ இதை  எல்லாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்கிற சட்டதிட்டங்களை இங்கே உருவாக்கியவர்கள் யார்? யாருக்குமே தெரியாது. ஆனால், தொடர்ந்து அதை எல்லாம் சக மனிதர்களிடம் அடுத்த தலைமுறையிடம் வலியுறுத்துகிறவர்களாக, அதை ஏற்கச் சொல்கிறவர்களாக, அதை திணிப்பவர்களாக நாம்தானே இருக்கிறோம்.

பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுவது வாடிக்கையாக இருந்த இடத்தில், `நம் வாழ்வு இப்படித்தான்’ என பாகிஸ்தானின் மலாலாவும் சகித்துக்கொண்டு அமர்ந்திருந்தால், இன்று அங்கே அந்தப் பெண் குழந்தைகளுக்கான கல்வி கிடைத்திருக்குமா? தன்மீது திணிக்கப்படுவது அடக்குமுறை, தனக்கு நடப்பது அநீதி அதை சகித்துக்கொண்டிருக்கக் கூடாது, எதிர்த்து நிற்கவேண்டும் என்கிற புரிதல்தான் மாற்றத்திற்கான முதல் அடியாக இருக்கும்.

சகிப்புத்தன்மை பல நேரங்களில் சண்டைகளை, வெறுப்புகளை, கோபங்களை, புறக்கணிப்புகளைத் தடுக்கும் என நினைக்கிறோம். அது உண்மைதான்.  ஆனால் அது தடுக்குமே தவிர ஒருபோதும் தவிர்க்காது.

- கேள்வி கேட்கலாம்...