பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

எம்மொழி செம்மொழி!

எம்மொழி செம்மொழி!
பிரீமியம் ஸ்டோரி
News
எம்மொழி செம்மொழி!

எம்மொழி செம்மொழி!

``தொண்டு செய்வாய் தமிழுக்கு

எம்மொழி செம்மொழி!துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே!’’ என்பது தமிழ்க்கவியின் கனவு. தொண்டு செய்யாவிட்டாலும் பரவாயில்லை; செய்த தொண்டினைத் தொந்தரவு செய்யாமலாவது இருக்கலாம் மத்திய அரசு. அவர்களால் இருக்க முடியவில்லை.

செம்மொழி ஆய்வு நிறுவனத்தைச் சிதைக்கும் காரியத்தைக் கண்ணும் கருத்துமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் செயல்பட்டுவரும் செம்மொழி ஆய்வு நிறுவனத்தைத் திருவாரூரில் இருக்கும் மத்தியப் பல்கலைக்கழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. சம்ஸ்கிருத மொழியின் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் கணக்குப் பார்க்காமல் கோடி கோடியாய் செலவு செய்ய முன்வரும் மத்திய அரசு, இந்தத் தொகையில் ஒரு சிறு விழுக்காட்டைக்கூடத் தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செலவிடுவதில்லை என்பது துயரத்திலும் துயரமானது.

 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணத்திலும் இலக்கியத்திலும் செழித்து வளர்ந்த மொழி, தமிழ்மொழி. மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்று பல மொழிகளுக்கு மூலமொழியாகவும் வேர்மொழியாக இருந்ததும் தமிழ்மொழிதான். உலகின் தொன்மையும், வளமையும், செழுமையும் மிக்க ஐந்து செம்மொழிகளில் தமிழ்மொழி தலையானது. வெளிநாட்டு கால்டுவெல் தொடங்கி உள்நாட்டு பரிதிமாற் கலைஞர் வரை  பல்வேறு ஆய்வுகளின் மூலமாகத் தமிழைச் செம்மொழி என்றும், அது தனித்து இயங்கக் கூடியது என்றும் நிறுவியிருக்கிறார்கள்.  அவர்கள் இதனை 100 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள். 2004-ம் ஆண்டுதான் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு தமிழ் மொழியைச் செம்மொழியாகப் பிரகடனம் செய்தது.

இதன் தொடர்ச்சியாகத்தான் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில், ‘செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்’ என்னும் பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனம் சென்னைக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, தன்னாட்சி கொண்ட இந்த நிறுவனம் தன் முக்கியமான பணிகளைத் தொடங்கியது. இருப்பினும், தேவையான நிதியும், முழு நேர இயக்குநரும்கூட இல்லாமல்தான் இதுநாள்வரை அது செயல்பட்டுவருகிறது. இந்தக் குறைகளை களைந்து இந்த நிறுவனத்துக்கு ஊட்டம் கொடுக்கவேண்டிய மத்திய அரசோ, முழுவதுமாக அதை முடக்குவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டது. ‘மாநில மொழிகளின் தனித்துவங்களை மத்திய அரசு அழிக்கிறது’ என்ற வாதத்துக்கு வலு சேர்ப்பதாகவே மத்திய அரசின் முயற்சி உள்ளது.

மொழிப்பற்றை உயர்த்திப்பிடிப்பது தமிழர்களின் உயிரோட்டமான பணி. தமிழ் வழிக் கல்வித் தொடங்கி கீழடி அகழாய்வு வரை தமிழ் மற்றும் தமிழர் என்ற அடையாளம் பல சவால்களைச் சந்தித்துவருகிறது. இந்நிலையில், செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல், நமக்கான நெருக்கடிகளை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்குத் தமிழக அரசு தீவிர எதிர்ப்புத் தெரிவித்து, நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இப்போது இருக்கும் சிறு சிறு குறைகள் அனைத்தும் களையப்பட்டு, புத்தெழுச்சியோடு இந்த உயராய்வு மையம் செயல்பட்டு தமிழ்மொழிக்கு வளம் சேர்க்க வகை செய்ய வேண்டும்.

காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காக இந்நிறுவனத்தைப் புறக்கணித்தால், அது தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் செய்யும் கேடாக அமையும்.