மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 44

male-female-relationship
பிரீமியம் ஸ்டோரி
News
male-female-relationship ( விகடன் டீம் )

#MakeNewBondsவிஜி பழனிசாமி ஊடகவியலாளர், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

`பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பது கஷ்டம்’, ‘முஸ்லிம்களுக்கு வீடு கிடைப்பது கஷ்டம்’ என்றெல்லாம் பல இடங்களில் படித்திருப்போம். பேசப்படாத இன்னொரு வகையினர் உண்டு. சிங்கிள் மதர்ஸ்! நான்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 44

சென்னிமலையில் இருந்து, தனியாக என் இரு குழந்தைகளுடன் சென்னைக்குவந்து வீடு தேடி அலைந்தபோது ஒவ்வொரு இடத்திலும் பல பொய்களைச் சொல்லவேண்டியிருந்தது. என் இரு மகள்கள், நொய்யல், முல்லையை என் அக்காவின் மகள்கள் என்று சொல்லிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டேன். என் கணவர் வெளியூரில் வேலைபார்க்கிறார் என்று சொல்ல வேண்டியிருந்தது. பொய்களைச்சொல்லி  கிடைத்த வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடியாது. வீட்டிற்கு யார் வந்தாலும், விதவிதமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எப்போதும் நம் வீட்டை யாரோ கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். எந்த நேரத்திலும் இன்னொரு வாடகை வீடு தேடி அலையவேண்டிய சூழல் இருந்துகொண்டே இருக்கும். நிம்மதியான வாழ்க்கைக்கு வாய்ப்பே இல்லை! ஆண் இல்லாமல் வாழத்துணிகிற எல்லா பெண்களுக்கும் அந்த வீடுகளைப் போல்தான் வாய்த்திருக்கிறது வாழ்வு. இருந்தும், பெண்கள் தொடர்ந்து தனியாகக் குழந்தைகளோடு வாழத்துணிகிறார்கள்... அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏன்?

அப்போது நான் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தேன். விடுமுறையில் அம்மாவுடன்  பவர்லூம் பட்டறையில் நூல் போட்டுக் கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு நெருங்கிய உறவினர்  ஒருவர் வந்திருந்தார். அவர் அதற்குமுன்பு பல முறை என் வீட்டிற்கு வந்தவர். ஆனால், இந்த முறை என்னைப் பார்த்த பார்வை வேறு மாதிரி இருந்தது. அவர் வந்துபோன சில நாள்களிலேயே அம்மா என்னிடம் பேசினாள். ‘விஜி.. ஒன்னையப் படிக்கவைக்க காசில்ல தாயி. அப்படிச் செலவு பண்ற காசுக்கு ஒனக்கு நகை நட்டுப்போட்டு நல்லபடியா கலியாணம் முடிச்சா போதும்னு இருக்கு. நீயும் ஒன்ர அக்கா மாதிரி ஓடிப்போயி கலியாணம் பண்ணப்போறியா, நாங்க சொல்றத கேட்கறியா?’ என்று தொடங்கினாள். எனக்கு அம்மாவின் பேச்சு எரிச்சலையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அம்மாவின் கண்களில் கண்ணீர். எனக்கு அதை மட்டும் பார்க்கப்பிடிக்காது.  ‘நீ சொன்னா நான் கேட்கறேன்மா’ என்று திருமணத்திற்குச் சம்மதித்தேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 44

அம்மா அடுத்தடுத்து விவரங்களைப் பேசும்போதுதான் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் ஏற்கெனவே முடிந்தது தெரிந்தது. சுற்றிச் சுற்றி இருவீட்டாரும் என்னென்னவோ பேசிக் கொண்டனர்; ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். இந்தக் களேபரத்தில் எனக்கும் என்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவருக்குமான வயது வித்தியாசம் யாருக்கும் பெரிதாகப் படவில்லை. எனக்கு மட்டும்தான் அது பெரிய விஷயமாக இருந்தது. காரணம் எனக்கு 16; அவருக்கு  37!

அப்போதெல்லாம் அப்பாவின்மேல் சின்ன வெறுப்பு இருக்கும். எப்போதும் வீட்டிற்குக் குடித்தபடிதான் அப்பா வருவார். வீட்டில் யார் என்ன பேசினாலும் சண்டை வரும் என்பதால்,  அனைவரும் அமைதியாகவே இருப்போம். இருந்தாலும், சண்டை வரும்.சண்டை பெரிதாகும்போது பக்கத்து வீட்டுக்காரர்களில் யாரோ ஒருவர் வந்து என்னையும் அக்காவையும் தூக்கிச்சென்று அவர்கள் வீட்டில் தூங்கவைப்பார்கள். அம்மா அடிவாங்குவார்! அதனாலேயே அப்பா மீதான நெருக்கம் வந்ததே இல்லை. ஆனால், அப்பாதான் திருமணத்திற்குப் பிறகு என்னை எல்லா ஏற்பாடுகளும் செய்து சென்னைக்கு அனுப்பிவைத்தார். தன் மகளுடைய வாழ்வைத் தானே அழித்துவிட்டதாக எண்ணி துடியாய்த் துடித்தார்.

நகரங்களில் கிடைப்பதைப்போல விதவிதமான நாப்கின்கள் எல்லாம் எங்கள் ஊரில் அப்போது இல்லை. அப்படியே விற்கப்பட்டாலும் அவற்றை வாங்கிக்கொடுக்கும் சூழலில் வீடு இல்லை. துணிதான். அப்படித் துணி வைத்துக் கொள்வதால்,  தொடைகளில் உரசிக் காயம் ஆகும். வசதியான அந்த வீட்டுக்குத் திருமணமாகிப் போனால், நல்ல நாப்கின் கிடைக்குமே என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.
 
ஆனால், திருமணத்திற்குப் பிறகு, பெரிய காட்டின் நடுவே  உள்ள ஒரு வீட்டில் சிறைவாசிபோல மாறினேன். புகுந்த வீட்டினருக்கு ஒரு வாரிசு பெற்றுத்தரும் வேலை மட்டுமே எனக்குரிய கடமை என்பது தெரியவந்தது. கணவன் பகலில் வீட்டில் இருக்கிறார் என்றால், தொடர்ச்சியாக அவருக்கு என் உடல் வேண்டும். எந்த ரசனையும் இல்லாமல் புணர்தல் நடைபெறும்.

பத்தாவதில் 436 மார்க் எடுத்த நான்,  திருமணத்திற்குப்பின் படிப்பைத் தொடர முடியாமல் ஆடு மேய்க்கவும், மாடு மேய்க்கவுமே பயன்படுத்தப்பட்டேன். அப்படியும் ப்ளஸ்-2 முடித்துவிட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. நான் படித்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ப்ளஸ்-2 புத்தகங்களைக் கொடுக்க, வீட்டில் இருந்தே படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால்,  அதையும்  கணவரும்  குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. புத்தகங்களை மறைத்துவைத்துப் படித்ததற்காகக் கணவரால் கடுமையாகத் தண்டிக்கப்படுவேன்.

புகையிலைக்காட்டுக்குத் தண்ணி வெட்டுவது முதல், எருமைமாட்டில் பால் கறப்பதுவரை எல்லாம் செய்யவேண்டியிருக்கும். அதற்கு நடுவே படித்துக் கொண்டிருப்பேன். அப்படி வேலை முடித்து வந்தால்,  எழுத வைத்திருக்கும் பேனாமுனை உடைந்திருக்கும். அப்படிப் பல பேனாமுனைகள் ஒடிக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் தேர்வு எழுத எல்லா ஏற்பாடுகளையும் செய்வேன். ஆனால், கணவர் அனுமதிக்க மாட்டார்.
முதல் குழந்தை பெண். இரண்டாவதும் பெண் என்றதும் அவளைத் தொடக்கூட புகுந்தவீட்டினர் தயாராக இல்லை. அவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தேன். வேலை செய்ய முடியாது. வேலை செய்யாத நாட்களில் எனக்குச் சோறு போடமாட்டார்கள்!  

வாழ்க்கையே சூனியமாகத் தெரிந்தபோது, என்ன செய்வது எனத் தெரியவில்லை… ஆனால்,  என்னை ஏமாற்றி  இன்று நடுத்தெருவில் விட்ட என் கணவன் மீது அப்போதைய காலகட்டத்தில் தீரா வெறுப்பும், மன்னிக்க முடியாத  மனநிலையும் அதிகமாக இருந்தது. யாருடைய துணையும் இல்லை.  இரண்டு பெண்குழந்தைகள். சின்னவள் முல்லை ஆறுமாதக் கைக்குழந்தை. அப்போது எனக்கு வயது 23. எனக்கு என்  அக்கா அனிதாவைத் தவிர, ஆறுதல் எதுவும் இல்லை.

என்மீது நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், நான்  மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், எனது கணவர் குடும்பம் முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் செய்து முன்னெச்சரிக்கையாக இருந்தனர். அவர்கள் 1980-களிலிருந்து குடோன் போட்டு  சாராயம் காய்ச்சிய குடும்பம்.  அவர்களுக்கு  காவல் நிலையம் புதிது அல்ல. வழக்கு, நீதிமன்றம் என  எல்லாமே அத்துபடி.

தனி ஒரு பெண்ணாக நான் என் கணவன்மீது புகார் கொடுத்ததை, அவரது சுயமரியாதையை அவமதிப்பதாக உணர்ந்தார்.  எனக்கு  விவாகரத்து கொடுப்பதாகச் சொல்லி  காவல் நிலையத்தில் ஒரு வாரம்  அவகாசம் வேண்டும் எனக் கேட்டார். நான் அழுதபடி, ‘வேண்டாம் மேடம், அவன்  ஏதோ திட்டம் போடத்தான் இந்த அவகாசம் கேட்கிறான்’ என்றேன். ஆனால், அந்தப் பெண் காவல் அதிகாரி  அவகாசத்தைக் கொடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பினார். பின்னர் ஒரு வாரம் பெங்களூரூவில் என் அக்கா வீட்டில் குழந்தைகளுடன் மறைந்து இருந்தேன். 

ஒரு வாரம்  கழித்து ஊருக்கு வந்தபோது, காவல் நிலையத்தில் இருக்கிற ரைட்டர், ‘ஏம்மா வந்தே? எஸ்கேப் ஆகியிருக்கலாமே... கோர்ட்ல ஆஜராகி ஜாமீன் வாங்கி ருக்கலாமே’ என்றார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அங்கிருந்த காவல் ஆய்வாளர் ‘அந்தத் தே...... உள்ள கூட்டிட்டுப் போய் உட்காரவைங்க’ என்றார். உடம்பெல்லாம் கூச, நிலம் பிளந்து உள்ளே விழுவதைப் போல உணர்ந்தேன். அம்மா, பாட்டி, குழந்தைகள் எல்லோருமே ஸ்டேஷனில் இரண்டு நாள் இருந்தோம். இரண்டு நாள் நரகத்திற்குப் பின்தான், என் மீதும், அக்கா மீதும் கொலைமுயற்சி வழக்குப் பதியப்பட்டிருந்தது தெரிந்தது. நானும் அக்காவும் என் கணவனைக் கொலைசெய்ய முயற்சிப்பதாக வழக்குப் பதிவானது! 

கோவைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம்.  எனக்கு உதவவந்த என் அக்காவின்  வாழ்க்கையைக் காப்பாற்ற எல்லா காவல் ஆய்வாளர்களின் காலில் விழுந்து கெஞ்சியும், அவர்கள் கிஞ்சித்தும் மனம் இறங்கவில்லை. கோவைச் சிறையில் எங்களை  நடத்தியவிதம் என்னை  ஒரு  மனநோயாளியாகத்தான் மாற்றியது.

பின்னர் என் கணவனே  எங்களை  ஜாமீனில் எடுத்தான். அவன்கூடவே வாழவேண்டும்;வழக்கைப் பார்த்துக் கொள்ளலாம் என்றான். என்னால் என் அக்கா படும்பாட்டை ஜீரணிக்க முடியாமல் அவனுடன் குடும்பம் நடத்தத்   திணிக்கப்பட்டேன். அதன்பிறகு, முன்னைக்கும் அதிகமான வசவுகள், சுடு சொற்கள், டார்ச்சர்கள். ஒவ்வொரு இரவும் ஒரு யுகமாகக் கழியும் எனக்கு.  மீண்டும் அந்த வழக்குக்காக 10 மாதம் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அப்படியான நேரத்தில்  வழக்கறிஞருக்கு நான் பணம் கொடுக்க வேண்டும். எந்த வருமானமும் இல்லை. எப்படிக் கொடுப்பது? எப்படியாவது என் அக்காவின் வாழ்க்கையைக் காப்பாற்றியாக வேண்டும். 

அப்போதுதான் எனக்கான திறமைகளை வெளிக்கொண்டுவர, செல்வி என்ற பெண் உதவினாள். பால் , அழகு சாதனப் பொருட்கள், துணிகள் விற்பது என என்னை நானே  மாற்றிக்கொண்டேன். அதில் கிடைத்த வருவாயை வைத்து  குடும்பச் செலவுகள், குழந்தைப் பராமரிப்பு, வழக்கறிஞர் ஃபீஸ் எனக் கட்டினேன். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடமுயன்றான் கணவன். சண்டை போட்டேன். மாட்டை அடிப்பதுபோல அடிக்க ஆரம்பித்தான். வயிற்றில் எட்டி உதைத்ததில் ரத்தப்போக்காக இருந்தது.

அந்த நொடியில் இனியும் இவனுடன் வாழக் கூடாது என நினைத்தேன். அம்மா வீட்டைத் தவிர எங்கு செல்வது? தைரியமாக இடுப்பில் சின்னவளுடன், பெரியவளை நடக்கவைத்தும் சல்லிக்காசு இல்லாமல் அம்மாவீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடந்தே 25 கிலோமீட்டர் தூரமுள்ள அம்மா வீட்டின் முன் நின்றேன்!   நான்போன கோலத்தைப் பார்த்ததும், அம்மா செய்வதறியாது தலையில் அடித்துக்கொண்டு  அழுதாள். அதன்பின்னர் பல நாள்கள் மனநோயாளியைப்போலவே பித்துப்பிடித்து இருந்தேன்.
 
முருகானாந்தம் சார் என்னை மீட்டெடுத் தார். எங்கள் ஊரில் இருந்த தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். எனக்கு நடனம் தெரியும் என்பதால், குழந்தைகளுக்கு டான்ஸ் டீச்சராக இருக்க என்னை ஊக்குவித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் என் வாழ்வு   வெகுநாள்களுக்குப் பிறகு சுதந்திரத்தை சுவாசித்தது. சம்பளத்தோடு, என் இரு குழந்தைகளுக்கும் இலவசக் கல்வியும் கிடைத்தது. நடன ஆசிரியை வேலையோடு, வெள்ளகோவிலில் இருந்த ஒரு துணிக்கடையில் பகுதி நேரப்பணியாளாக வேலைக்குச் சேர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்த நண்பர்களில் பலரும் ஆண்கள்தான்! 

இந்த மாதிரியான வாழ்வில் ஆண்களைப் பார்க்கும்போது எனக்கு எந்த அன்பும் இராது. ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் முடிவைச் சாதகமாக்கும் கருவிதான் பெண்கள் என்று தோன்றும். எல்லா ஆண்களின் பார்வையும் என் உடலில் எங்கே படர்கிறது என்பதை அனுதினமும் கண்டவள் நான். யாரையும் நம்பும்  தன்மையை இழந்திருந்தேன். நான் அன்றைய காலகட்டங்களில் சந்தித்த ஆண்கள் அப்படித்தான் இருந்தார்கள்.

2010-ல் சென்னைக்கு வந்தேன். நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதுவரை நான் பார்த்த  ஆண்கள் எல்லோரும் ஒருவித பயத்தை மட்டுமே உருவாக்கியவர்கள். ஆனால், பாரதி அப்படி இருக்கவில்லை. எந்த ஒரு தவறான எண்ணமும் இல்லாமல், அரசியலாக, வாழ்வியலாகப் பேசும் முதல் தோழராக அறிமுகமானவர் பாரதிதான்.  சாதிக் கொடுமை,  பெண்ணியம், மார்க்ஸியம், தலித்தியம், பெரியார், அம்பேத்கர் என எனக்கு இன்னொரு உலகை அறிமுகப்படுத்தியவர் அவரே.

பெண்ணை சக மனிதராகப் பார்க்கிற ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை உணரவைத்த நண்பர்களை சென்னைதான் எனக்குத் தந்தது. பாரதியோடு தொடர்ச்சியாகப் போராட்டங்களிலும், தெருமுனைப் பிரசாரங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். புதிதாக நிறையத் தோழர்கள் அறிமுகமானார்கள். பாலின பேதங்கள் இல்லாத போராட்டக்களங்கள் எனக்கான புதிய உலகை அறிமுகப்படுத்தியது. வாழ்தலுக்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான பலத்தையும் கொடுத்தது.  சென்னையில் என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்த நாட்களில், ‘நான் இருக்கேன் வா. என் மகளுக்கு இணையா உன்னைப் பார்த்துக்குவேன்’ என்று சொல்லி, வழிகாட்டினார் தோழர் வெற்றி. ஆண்களால்தான் நான் வீழ்ந்தேன்... ஆனால், அதே ஆண்களால்தான் பின்னாளில் நிமிர்ந்து நிற்கவும் செய்தேன். இன்று ஆண்களே என் வாழ்க்கையை முழுமையாக்கு கிறவர்களாக இருக்கிறார்கள்.

 என்னால் பொது இடங்களிலோ, வீட்டிலோ எங்கும் தோளோடு தோளுரசி சக மனிதனாய்ப் பேசமுடிகிற நட்பைப் பெரிதும் நேசிக்கிறேன். அது வரம். உடல், மனம் என்பதைத்தாண்டி ரசனைகள் ஒத்துப்போகிற தோழர்கள் வரம். நேற்றுப்பார்த்த சினிமாவைப் பற்றிப் பேசுவதுபோல், நேற்றுப்படித்த புத்தகத்தை ரசிப்பதுபோல், செக்ஸையும் சகஜமாகப் பேசிக்கடக்க எந்த ஆணால் முடியுமோ, அப்படி ஓர் ஆண் நட்பு வாய்த்தல் வரம். அப்படிப்பட்ட நண்பர்களே என் மகள்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

இரவைப் பகிர்ந்துகொள்ளல் என்பது தனித்திருக்கும் பெண்ணுக்கு ஒரு வரம். பலர் இந்த வரியைப் படிக்கையில், `இரவை’ என்பதை, உடலை என்று புரிந்துகொள்ளக்கூடும்! இரவு அழகானது. எந்த இரைச்சலுமற்றது. உங்கள் மனதுக்குப் பிடித்த நண்பனோ, நண்பியோ உரையாட ஒன்றாய் ஒரு பைக்கில் சுற்ற, இரவைவிட சிறந்த தருணம் இல்லை. ஆனால், அப்படிச் செய்ய இந்தச் சமூகச்சூழலில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? அதைத்தான் செய்வார்கள் என்று நினைக்கிற மூளையாவது நமக்கு வாய்த்திருக்கிறதா? காரணம் ஆண்-பெண் உறவு என்பதே பாலியலுக்கானது என்கிற நம்முடைய புரிதல்தான் இல்லையா?

எல்லா அப்பாக்களுக்கும் மகள் என்றால் கொள்ளைப் பிரியம்.  மகள்களுக்கும் அப்பாதான் ரொம்பப்  பிடிக்கும்.  ஆனால், என் மகள்களுக்கு அப்பா என்றால் கொடூரமானவன், மற்ற அப்பாக்களைப் போன்று இல்லை என்ற சிந்தனை இருக்கிறது. எல்லோருக்கும் அப்பா இருக்கிறார்கள், எங்களுக்கு இல்லை என்ற மனநிலை உள்ளது.  ஆனால், வரும் காலங்களில் நான் எடுத்த இந்த முடிவு அவர்களுக்குத் தவறாகத் தெரியலாம். அப்பா இல்லாமல் வளரும் பெண்களுக்கு  இந்தச்  சமூகம் கொடுக்கும் அந்தஸ்து, பின் கழிவிரக்கம் எனக் காயப்படும்போது  நல்லவனோ, கெட்டவனோ... அப்பாகூடவே அம்மா இருந்திருக்கலாம் என்ற மனச்சிந்தனையை உருவாக்கலாம்!  ஆனால்,  அவர்களுக்கு அந்த எண்ணம் வராமலிருக்க அவர்களுக்கு நான் அளிக்கிற கல்வி துணைபுரியும் என்று திடமாக நம்புகிறேன். இன்னும் பெரியவர்களாகி அவர்களின் கேள்விகள் என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து, அவற்றுக்கான பதில்களுடன், பக்குவத்துடன் பயணிக்க எண்ணுகிறேன். அவர்களுக்கு  இந்த உலகத்தில் கொடுக்க விரும்புவது   சுயமரியாதையுடன், ஆணோ பெண்ணோ யார் துணையும் இல்லாமலும் அவர்கள் இயங்க முடியும் என்கிற மனதைரியம்தான். எல்லா பெண்களுக்குமான முதல் தேவை அதுதான்!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 44

மணியாத்தா என்றுதான் அவளை எனக்குத் தெரியும். அதைத்தான் அவளது பெயர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அப்படி இல்லை. மணிகண்டன் என்னும் மணியைப் பெற்றதனால் அவளை அவ்வாறு அழைக்கிறார்கள் என்று பின்னர் தெரியவந்தது. அதில் ஆச்சர்யம் இல்லை. பெண்ணை, தனித்த ஒரு ஆளுமையாக அடையாளம் காணப் பழகாத ஒரு கோணலான சமூக அமைப்பு இது. எனவே, கணவனை இழந்த அவள், மகனின் பெயரால் அறியப்பட்டாள்.

-பாஸ்கர் சக்தி

மணியாத்தா  சிறுகதையிலிருந்து

ஆண்பால் பெண்பால் அன்பால் - 44

அரசனும் அரசியும் உல்லாசமாகப் பீடத்தில் அமர்ந்திருக்க, வெயிலில், சதுரங்களுக்குள் அசையாமல் நிற்கும் அடிமைகள்... அவனுக்கு அக்பர் மேல் கோபம் கோபமாக வந்தது. தன்னுடைய பொழுதுபோக்குக்காக ஒரு சில அடிமைப்பெண்களைத் தகிக்கும் வெயிலில் மணிக்கணக்காக நிறுத்திவைத்தவரை, சரித்திர ஆசிரியர்கள் வர்ணிப்பதுபோல், ‘தயையும் நீதியும் நிறைந்த’வராக எப்படி ஏற்றுக்கொள்வது?

-ஆதவன்

`தாஜ்மகாலில் பௌர்ணமி இரவு’ சிறுகதையிலிருந்து

ஆண்பால் பெண்பால் அன்பால் - 44

நமக்கு வாய்த்திருப்பதெல்லாம் அருமையான மனுஷிகள். பூமி உருண்டையைப் புரட்டிவிடுகிற நெம்புகோல்களுக்கு அடியில் அவர்கள்தான் செங்காமட்டை மாதிரி நசுங்கிக்கொண்டு கிடக்கிறார்கள். என்னையும் உங்களையும் அப்படியெல்லாம் அனுசரணையாகவும் பத்திரமாகவும் வைத்திருக்கிற பெண்களுக்கு நாம் அப்படியொன்றும் அதிகம் செய்துவிடவில்லை.

-வண்ணதாசன்

‘எல்லோர்க்கும் அன்புடன்’ சிறுகதையிலிருந்து