
ஆ.பழனியப்பன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி, வீ.சிவக்குமார்
கடந்த ஜனவரி மாதம்; ஒரு செவ்வாய்க் கிழமை…
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மாட்டுச்சந்தை, பொள்ளாச்சி மாட்டுச் சந்தைதான். அதிகாலை ஐந்து மணிக்கே களைகட்ட ஆரம்பிக்கிறது. டாடா ஏஸ் ‘குட்டியானை’கள், ‘407’ வேன்கள் என வாகனங்களின் படையெடுப்பால், அந்தப் பகுதியே பரபரக்கிறது. காளைகள், பசுக்கள், எருமைமாடுகள் எனக் காலை ஆறு மணிக்கெல்லாம் திணற ஆரம்பிக்கிறது பொள்ளாச்சி மாட்டுச்சந்தை. தரகர்கள், துண்டுபோட்டு விரல்களால் விலைபேசுவதில் பிஸியாகிறார்கள். அங்குள்ள டீக்கடைகள், சிற்றுண்டி உணவகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சிலர், மாடுகளின் கொம்புகளைச் சீவி அழகுபடுத்தும் வேலையில் மூழ்கியிருக்கிறார்கள். ‘கயிறு கயிறு’ என்று ஒருவர் கத்திக்கொண்டு போகிறார். சிலர், மாடுகளுக்கு லாடம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பகுதி, மிகப் பிரமாண்டமான ஒரு திருவிழாவைப்போல காட்சியளிக்கிறது. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பாகக் கண்ட காட்சிகளை இப்போது காணமுடியவில்லை.

மத்திய அரசின் தடை அறிவிப்புக்குப் பிறகு வந்த செவ்வாய்க்கிழமை கூடிய பொள்ளாச்சி மாட்டுச்சந்தை எப்படி இருந்தது? ``இது, எப்பேர்பட்ட சந்தை தெரியுமா? பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த சந்தைங்க. ஒரு காலத்துல யானை, குதிரை எல்லாம் வித்திருக்காங்க. வழக்கமா, மூவாயிரத்துக்கும் அதிகமான மாடுகள் வர்ற இந்தச் சந்தைக்கு, போன வாரம் ஐம்பது மாடுகள்தான் வந்துச்சு. விவசாயிகள்தான் மாடு விற்கணும், மாடு வாங்கணும்னா எப்படிங்க? எதுக்காக மாடுகளை விப்பாங்க? கல்யாணம் பண்ணணும், பள்ளிக்கூட ஃபீஸ் கட்டணும்னு அவசரத் தேவைகளுக்காக விப்பாங்க. பெரும்பாலும், பால் வத்திப்போன ‘வத்தக்கறவை’களைத்தான் விப்பாங்க. அதை விற்கக் கூடாதுன்னு சொன்னா, அந்த மாடுகளை வெச்சுக்கிட்டு விவசாயி என்ன செய்வான்? மாடுகள்மேல மோடி அரசாங்கத்துக்கு ரொம்ப அக்கறை இருக்குதுன்னா, வத்தக்கறவைகள் எல்லாத்தையும் அரசாங்கமே பணம் கொடுத்து வாங்கிக்கட்டும். அதுக்காக ஒரு சட்டம் போட்டு அறிவிக்கட்டும்” என்கிறார் தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ்.
பொள்ளாச்சி மாட்டுச்சந்தையின் ஒருநாள் வர்த்தகம் சுமார் ஐந்து கோடி ரூபாய். அதனால், இந்தச் சந்தை வாரத்துக்கு 91 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போகிறது. ஆண்டுக்கு, ஐம்பது லட்சம் ரூபாய். பொள்ளாச்சி மாநகராட்சிக்கு இது மிகப் பெரிய வருவாய். மத்திய அரசின் தடையை நீக்காவிட்டால், ஐம்பது லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதுடன், பல்லாண்டு கால பாரம்பர்யமிக்க பொள்ளாச்சி மாட்டுச்சந்தையே காலியாகிவிடும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் பொள்ளாச்சிக்காரர்கள்.
பொள்ளாச்சி சந்தை மட்டுமல்ல... ஈரோடு, ஒட்டன்சத்திரம், மணப்பாறை எனத் தமிழகத்தின் புகழ்பெற்ற மாட்டுச்சந்தைகள் உட்பட அனைத்து மாட்டுச்சந்தைகளும் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.
``வேலூர் மாட்டுச்சந்தை, இந்த ஏரியாவுலேயே பெரிய சந்தை. இப்போ, வெறிச்சோடிக் கிடக்கு. ஒவ்வொரு சந்தைக்கும் ஆயிரத்துல இருந்து ஆயிரத்து ஐந்நூறு மாடுகள் வரும். மாடுகள்னா… காளை மாடு, பசு மாடு, எருமை மாடு எல்லாம்தான். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவுல இருந்தெல்லாம் வியாபாரிகளும் விவசாயிகளும் வருவாங்க. வடமாவட்டங்கள்ல இருந்து நிறைய பேர் வருவாங்க. வயசான மாடுங்க, பால் கறக்காத மாடுங்கள வாங்குறதுக்குக் கேரளாவுல இருந்து நிறைய பேர் வருவாங்க. வேலூர் மாவட்டத்துல இருக்கிற எல்லா இறைச்சிக் கூடங்களுக்கும் இங்கிருந்துதான் மாடு வாங்கிட்டுப்போவாங்க. அந்த மாட்டுக்கறிதான் வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு உட்பட எல்லா இடங்கள்லேயும் இருக்கிற ஹோட்டல் களுக்குப் போகும். வேலூர் மாட்டுச்சந்தையில் வாரத்துக்கு ஒரு கோடிக்கு வர்த்தகம் நடக்கும். ஆனா, போன வாரம் கொஞ்சம் மாடுகள்தான் வந்திருந்துச்சுங்க. வியாபாரிகளும் கொஞ்சமாதான் வந்திருந்தாங்க” என்கிறார் மாட்டு வியாபாரி சீனிவாசன்.
தமிழ்நாட்டில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட மாட்டுச்சந்தைகள் உள்ளன. ஒரு வாரத்தில்,ஒட்டுமொத்தமாக இந்தச் சந்தைகளில் சுமார் ரூ. 200 கோடி முதல் ரூ. 300 கோடி வரை வர்த்தகம் நடக்கும் என்கிறார்கள் மாட்டு வியாபாரிகள். இந்த வர்த்தகம் தற்போது முடங்கியிருக்கிறது.
மாட்டுச்சந்தை என்பது மாட்டு வியாபாரிகள், தரகர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள், லாரியில் மாடுகளை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள், வைக்கோல் வியாபாரிகள், கயிறு வியாபாரிகள், டீக்கடைக்காரர்கள், உணவகங்கள் நடத்துபவர்கள், மாட்டுக்கு லாடம் அடிப்பவர்கள், கொம்பு சீவுபவர்கள், கொம்புக்கு பாலீஷ் போடுபவர்கள், பெயின்ட் அடிப்பவர்கள் எனப் பலதரப்பட்ட வர்களும் மாட்டுச்சந்தையை நம்பியிருக்கிறார்கள். இவர்கள் தவிர, ஆந்திராவிலிருந்து மாடுகளைக் கொண்டுவரும் வழியில் ஆங்காங்கே இவர்கள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் உணவு விடுதிகளை நடத்துபவர்கள் உள்ளனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 15 லட்சம் பேர் மாட்டுச்சந்தைகளை நம்பியுள்ளனர். இந்தப் பட்டியலில், இறைச்சிக்கடைக்காரரர்கள் மற்றும் அந்தத் தொழிலைச் சார்ந்தவர்களைச் சேர்த்தால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
“1965-ல இருந்து மாட்டு வியாபாரம் செய்றேன். வீட்டுல ஆடு மாடு வெச்சிருக்கிறது, பேங்க்குல பணம் போட்டு வெச்சிருக்கிற மாதிரிங்க. அவசரத்தேவைன்னா, உடனே வித்துக் காசாக்கலாம். தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை மாட்டுச்சந்தைகளுக்கும் போய் வந்திருக்கேன். பெரிய சந்தைனா, ரெண்டாயிரம் மூவாயிரம் மாடுகள் வரும். சின்னச் சந்தைனா, முந்நூறு நானூறு மாடுகள் வரும். பெரிய சந்தைகளுக்கு வியாபாரிகள் உட்பட 15 ஆயிரம் பேர் வருவாங்க. ஒரு தொழிற்சாலையிலகூட இத்தனை பேர் வேலை செய்ய மாட்டாங்க. சந்தை ஆயிரக்கணக்கான பேருக்கு வாழ்வாதாரமா இருக்கு. ஒரு ஜோடி காளை மாடு 50 ஆயிரத்துல இருந்து ஒரு லட்சம் வரைக்கும்கூட போகும். ஒரு எருமை மாடு, எடையைப் பொறுத்து 10 ஆயிரத்துல இருந்து 40 ஆயிரம் வரைக்கும் போகும். மாட்டு வியாபாரத்துல இருக்கிற நாங்க அத்தனை பேரும் படிப்பறிவு இல்லாதவங்கதான். எல்லாமே பட்டறிவுதாங்க. கண் மதிப்பிலேயே மாட்டு விலையைச் சொல்லிருவேன். எங்களுக்கு இதை விட்டா, வேற தொழில் தெரியாது. மத்திய அரசோட சட்டத்தால, ஆயிரக்கணக்கான பேரு தொழிலை இழக்கப்போறாங்க’’ என்கிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ராமசாமி. தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் தலைவரான இவர், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலில் இருக்கிறார்.
``மாடுகளைச் சார்ந்து பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கை இருக்கிறது. பால், இறைச்சி, உழவுப்பணி, பாரம் சுமத்தல் போன்றவற்றுக்காக மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரங்கள் வராத காலத்தில், விவசாயத்தில் காளை மாடுகள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டன. இயந்திரங்கள் வந்த பிறகு, அவற்றுக்கான தேவை குறைந்து விட்டது. பசு மாடு, சீமைப்பசு, எருமை மாடு ஆகியவை பால் கொடுக்கின்றன. பால் வற்றிவிட்ட ஒரு மாட்டை விவசாயிகளால் வைத்துக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், எந்தப் பயனும் இல்லாத அந்த மாட்டுக்கு, அது சாகும்வரை தீனி போடவேண்டும். அது, பயன்பாட்டில் உள்ள மாட்டின் தீனியைக் குறைத்துவிடும்.

பசு, பால் தருவதால் மனிதனுக்கும் பசுவுக்குமான உறவு இறுக்கமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒரு சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற எல்லா மாநில அரசுகளும், பசுவதையைச் சட்டரீதியாகத் தடைசெய்துள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்கப் பொருளாதாரம் சார்ந்த விஷயம். குறிப்பிட்ட காலத்துக்குமேல் பசுவை வைத்திருப்பது சிரமமான விஷயம். இப்போது, பெரு விவசாயிகள்தான் மாடுகள் வைத்துள்ளனர் என்றும், கிராமங்களில் உள்ள 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் கால்நடைகளே இல்லை என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஓரளவு வசதியான குடும்பங்களால்தான் கால்நடைகளைப் பராமரிக்க முடியும். ஒன்றிரண்டு மாடுகள் வைத்துள்ள ஓர் ஏழை விவசாயிக்கு, அந்த மாடுகள் பால் கறக்கவில்லை என்றால், அவை மிகப்பெரிய சுமைகளாகிவிடும். அதனால்தான், பால் வற்றிய பசுக்கள் இறைச்சிக்காக விற்கப்படுகின்றன. எதற்கும் பயன்படாத அந்த மாடுகள் கொல்லப்படுகின்றன. அதை நம்பித்தான், தோல் பதனிடுதல் மற்றும் அது சார்ந்த தொழில்கள் உள்ளன. மாடு செத்து 10 மணி நேரத்துக்குள் தோலை எடுத்தால்தான், அதைப் பயன்படுத்த முடியும். 10 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால், அந்தத் தோலை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. மாடுகளைக் கொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
பயன்பாடற்ற மாடுகள் கொல்லப்படுவது நின்றுவிடும் என்றால், தோல் பதனிடும் தொழிலுக்கு, முழுமையாகத் தோல் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இறக்குமதி செலவுகள், போக்குவரத்துக் கூலி எனத் தோலின் விலை அதிகமாக இருக்கும். இறக்குமதி செய்யப்படும் தோலின் விலை அதிகமாக இருந்தால், அது ஒரு பொருளாக உருவாக்கப்பட்டு ஏற்றுமதியாகும் போது, அந்தப் பொருளின் விலையும் அதிகமாக இருக்கும். அதனால், ஏற்றுமதி பாதிக்கப்படும். மொத்தத்தில், இந்தப் பாதிப்புகள் ஒரு சங்கிலித்தொடர்போல சென்றுகொண்டே இருக்கும்” என்கிறார் சென்னைப் பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் சீனுவாசன்.
மாட்டரசியலால் ஆட்டம் கண்டிருக்கிறது சாமான்யர்களின் வாழ்க்கை!