Published:Updated:

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 14

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 14

கார்க்கிபவா

சுற்றுச்சூழல் மீது அக்கறைகொண்ட ஒருவர், கழிப்பறைக்குச் செல்கிறார். அங்கே அவர், தண்ணீரை மிச்சப்படுத்த நினைப்பாரா அல்லது டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்தாமல், காகிதப் பயன்பாட்டைக் குறைக்க நினைப்பாரா?

சிக்கலான கேள்விதான். ஆனால், பதில் எளிமையானது. நம் சிக்கனத்தைக் காட்டவேண்டிய இடம் கழிப்பறை அல்ல. வேண்டிய அளவு பயன்படுத்தியே ஆக வேண்டும். அவரும் பயன்படுத்தியிருப்பார். ஏனெனில், சுகாதாரமற்ற கழிப்பறை தனி மனிதனுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் கேடு என்பது அவருக்குத் தெரிந்திருக்கும்.

இந்தத் தொடர் ஆரம்பித்த நாள் முதலே, `கழிப்பறைப் பயன்பாட்டைப் பற்றி எழுத வேண்டும்’ எனப் பலர் கேட்டதுண்டு. காரணம், எல்லா வேலைகளையும் எப்படிச் செய்ய வேண்டும் என நம் வாழ்நாளில் யாராவது ஒருவராவது பயிற்சி தந்திருப்பார்கள். ஆனால், கழிப்பறையின் உள்ளே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என யாருமே சொல்வதில்லை. கிணற்றுக்குள் தூக்கிப்போட்டு ``இப்ப நீச்சல் அடிப்பான் பாரு...’’ என அதிர்ச்சி தருவதுபோலத்தான், திடீர் என ஒருநாள் ``பப்பு இனி அவனே டாய்லெட் போவான்... இல்லை பப்பு?’’எனத் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 14

வீடு வாடகைக்குப் பார்த்தால்கூட முதலில் கழிப்பறையைத்தான் எட்டிப் பார்க்கிறோம். அது அவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், எப்படிப் பயன்படுத்துகிறோம், பராமரிக்கிறோம் எனக் கேட்டால்தான் தலையைச் சொறியவேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் மட்டும் வர்க்கப் பாகுபாடு என்பதே கிடையாது. `பிக்பாஸ்’ நிகழ்ச்சியில்கூட நமீதாவுக்கு மிகப் பெரிய பிரச்னையே சுத்தமில்லாத கழிப்பறைதானே!?

ஆங்கிலேயர்கள் நமக்கு அறிமுகப்படுத்திய விஷயங்கள் ஏராளம்... அவர்களின் மொழி முதல் கிரிக்கெட் வரை! அவற்றில் பலவற்றில் நாம் `கில்லி’ ஆகிவிட்டோம். அவர்களையே போட்டுத் துவம்சம் செய்கிறோம். ஆனால், இன்னமும் வெஸ்டர்ன் டாய்லெட்டை ராக்கெட் லாஞ்சரைப் பார்ப்பதுபோலத்தான் பார்க்கிறோம். எப்படிச் சரியாக பயன்படுத்துவது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. நம் ஸ்டைல்படி, `குதிகால் இட்டு அமர்ந்து `போவது’தான் உடலுக்கு நல்லது’ என உலக அளவில் பல மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், அதற்காக வெஸ்டர்ன் டாய்லெட்டில் குதிகால் இட்டு அமர்வது, பேருந்தில் ஃபுட்போர்டு அடிப்பதுபோல. அது நமக்கு மட்டுமல்ல, நம் பின்னால் வருபவர்களுக்கும் அசெளகர்யம்தான்.

கழிப்பறையைப் பயன்படுத்துவதற்குச் சில விதிகள் உள்ளன.

முக்கியமான விதி, நாம் உள்ளே செல்லும்போது எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ, நாம் வெளியே வரும்போதும் அப்படி இருக்க வேண்டும். இல்லையென்றால், அப்படிச் சுத்தப்படுத்திவிட்டு வர வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

சிறுநீர் கழிக்கச் சென்றால், நம் வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். கடவுளே வந்தாலும், அங்கே, `ஹாய்’ சொல்லத் தேவையில்லை.

யூரின் க்ளோசெட்டுக்கு (Urine Closet) எவ்வளவு நெருங்கிச் செல்ல முடியுமோ, அவ்வளவு நெருக்கமாக நின்றுகொள்ளுங்கள். தண்ணீர் லாரிபோல சிந்திக்கொண்டிருப்பது நல்லதல்ல.

கழிப்பறையில் வாசிப்பது பலரது வழக்கம். ஆனால், அது தவிர்க்கவேண்டிய விஷயம். நாம் கழிப்பறையைப் பயன்படுத்தும் நேரத்தை அது அதிகப்படுத்தும்.

ஹேண்ட்பேக் மற்றும் இதர பொருள்களைக் கழிப்பறைக்குள் எடுத்துச்செல்ல வேண்டாம். திரும்பி வரும்போது தன்னால் முடிந்த அளவுக்குக் கிருமிகளை அவை எடுத்துக்கொண்டு வந்துவிடும்.

முக்கியமாக மொபைலை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுக்கவே கூடாது. இந்தப் பழக்கத்தை வைத்துக்கொண்டால், யாருடைய அழைப்பையாவது எடுக்காமல் விட்டாலும், ``ரெஸ்ட்ரூம்ல இருந்தேன்’’ எனக் காரணம் சொல்லித், தப்பித்துக்கொள்ளலாம்.

சுற்றியிருக்கும் சுவர்களும் தரையும் ஈரமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காதில் மொபைலை வைத்துக்கொண்டு சிறுநீர் கழிப்பவர்கள் கவனம் சிதறுவது நிச்சயம்.

சில அலுவலகங்களில் கதவுகள் முழுமையாக இல்லாமல், தரையில் இருந்து கொஞ்சம் உயர்ந்து இருக்கும். அது வழியாக குனிந்துபார்ப்பதும் நடப்பதுண்டு. உள்ளே ஆள் இருக்கிறார்களா என அறிய, தட்டலாம்; எட்டிப்பார்க்கக் கூடாது.

எல்லாம் முடித்துவிட்டு, கழிப்பறையின் கதவைத் திறப்பதற்கு முன்னர், ஃப்ளஷ் செய்துவிட்டீர்களா என்பதைப் பார்த்துவிடுங்கள். அப்படி மறந்தால், மறதி நமக்கு வாங்கித்தரும் மிகப் பெரிய அவமானமாக அதுதான் இருக்கும்.

- பெர்சனல் பேசுவோம்...