பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

விஷமாகும் பள்ளிக்கரணை!

விஷமாகும் பள்ளிக்கரணை!
பிரீமியம் ஸ்டோரி
News
விஷமாகும் பள்ளிக்கரணை!

இரா.கலைசெல்வன், துரை.நாகராஜன், படங்கள்: க.பாலாஜி, பா.காளிமுத்து

21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய சூழலியல் சீர்கேட்டை நம் கண்முன்னே நடத்திக்கொண்டிருக்கிறோம். சென்னை மாநகரின் பாதுகாப்பு அரணாகவும், நிலத்தடி நீருக்கான உயிர் ஆதாரமாகவும் இருந்த அந்த நீர்நிலையின்மீது, கற்களை எறிந்தும், விஷம்  கலந்தும் கொன்றுவிட்டு, அதற்குக் குப்பைகளால் கட்டப்பட்ட மாலையை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறோம். மரணத்தின் தருவாயில், தாங்கிடவே முடிந்திடாத ஒரு பெரும் வலியில் இன்று தன்னுடைய இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 

விஷமாகும் பள்ளிக்கரணை!

சதுப்பு நிலம்?

கடலிலிருந்து வரும் உவர் நீரும், ஆறுகளிலிருந்து வரும் நன்னீரும் சந்திக்கும் இடமே சதுப்பு நிலம். ஓர் ஏரியின் உபரி நீரோ, ஓர் ஆற்றின் உபரி நீரோ நீண்டகாலமாக ஒரே இடத்தில் சேருவதால்கூட சதுப்பு நிலம் உருவாகும். சதுப்பு நிலங்கள் அடிப்படையில் ஒரு ஸ்பாஞ்ச் போன்று செயல்படும் தன்மையுடையவை. அதாவது, தன்னிடம் நீர் பாயும் நேரங்களில், அதை நிலத்தடியில் சேமித்து வைத்து, வறட்சிக் காலங்களில் அந்தத் தண்ணீரை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இப்படி எப்போதும் நீர் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதால், உறுதியான பல்லுயிர்ச்சூழலைக் கொண்டதாகச் சதுப்பு நிலங்கள் இருக்கும். மழைக்காடுகளை எப்படி உலகின் நுரையீரல் என்று சொல்கிறோமோ, அதைப்போல் சதுப்பு நிலங்களை `பூமியின் சிறுநீரகம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இன்று சென்னையின் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் இருக்கிறது. அதற்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய அரசும் அழியட்டும் என வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

‘கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சதுப்பு நிலப்பகுதி; பல கிளைகள், பல கால்வாய்கள். சுத்தமான நன்னீர், மீன்களில் தொடங்கி, பல நூறு பறவையினங்கள்வரை துள்ளிக் குதித்து ஓடும் பல்லுயிர்த்தன்மை. நீர்ப்படுகையை ஒட்டிய பகுதிகளில் விவசாயம். கால்வாய்களில் சிறுசிறு படகுகள். பத்தடி தோண்டினால், சுத்தமான குடிநீர் கிடைத்துவிடும்’ இது ஏதோ ஆதாம் - ஏவாள் காலத்துக் கதை அல்ல. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னர்வரை பள்ளிக்கரணை மற்றும் சுற்று வட்டார சதுப்பு நிலக்காடுகளின் நிலை இதுவாகத்தானிருந்தது. ஆனால், இன்று எல்லாம் தலைகீழ்.

அழித்த ஆக்கிரமிப்புகள்

பள்ளிக்கரணையின் ஆக்கிரமிப்பு வரலாற்றை 1806-ம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும். காரணம், அப்போதுதான் அந்தச் சதுப்பு நிலப் பகுதிகளில், போக்குவரத்திற்காகச் செயற்கையாக பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்டது. அதன் பின்னர், அதையொட்டிய பகுதிகளில் மக்கள் விவசாயம் செய்து வந்தனர். அந்தக் காலங்களில் பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் ஏற்படவில்லை. ஆனால், சென்னை நகரம் விரிவடைய விரிவடைய பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சுருங்கத் தொடங்கியது. பழைய மகாபலிபுரம் சாலை, ஐ.டி நிறுவனங்களின் கூடாரமாக மாறியதும் கணக்கிடமுடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் நடந்தேறின.

விஷமாகும் பள்ளிக்கரணை!

கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் பலங் களையும், அரசாங்கத்தின் பலவீனங்களையும் கொண்டு சதுப்பு நிலங்களைப் பட்டா நிலங்களாக மாற்றி சூறையாடத் தொடங்கின. ஐ.டி கம்பெனிகள் அதிகமாக,  குடியிருப்புகள் உயர்ந்தன. ஹோட்டல்கள் தொடங்கி மால்கள்வரை தாங்கள் ஆக்கிரமித்திருப்பது சதுப்பு நிலத்தை என்பதையே கவனிக்க மறுத்து, `கவனிக்க’ வேண்டியவர்களைக் கவனித்து அந்த நிலங்களை ஆக்கிரமித்தன. தனியார் கட்டடங்கள் மட்டுமல்ல, சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து பல அரசாங்கக் கட்டடங்களேகூட எழுப்பப் பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காட்டின் மிக முக்கியப் பகுதியில் அரசின் தேசியக் காற்றாலை நிறுவனம், தேசியக் கடற்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய கட்டடங்கள் எப்படிக் கட்டப்பட்டன என்ற கேள்விக்கான விடை இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.

``மக்களுக்கு சதுப்பு நிலங்களால், நேரடிப் பலன் கிடையாது. அதனால், மக்களுக்கு அது குறித்த சரியான விழிப்புஉணர்வு இல்லை. உலகம் முழுக்கவே தொழிற்புரட்சியின் இலக்காக இருந்தது சதுப்பு நிலக்காடுகள்தான். அதை மீட்கத்தான் உலகநாடுகள் ஒன்று சேர்ந்து ராம்சார் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டன. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. சதுப்பு நிலக்காடுகள் நீரிலிருக்கும் கசடுகளை வடிகட்டி, சுத்தமான நிலத்தடி நீரை உருவாக்கும் திறன் கொண்டவை. ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயம் இயற்கையான கசடுகளைத்தான் அதனால் வடிகட்ட முடியுமே தவிர, மனிதர்கள் உருவாக்கும் ரசாயனங்களை வடிகட்டும் திறன் அதற்குக் கிடையாது. இதனால், பல சமயங்களில் அந்த ரசாயனங்களை நிலத்தடி நீருக்குள் அவை அனுமதித்துவிடுகின்றன. இதன் காரணமாக, அதைச் சுற்றியுள்ள வேளச்சேரி, திருவான்மியூர் போன்ற பகுதிகளின் நிலத்தடி நீரில் விஷத்தன்மை பரவக்கூடிய அபாயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு நுண் அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு காலகட்டத்தில் சென்னைக் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ‘விவந்தே’ என்ற ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் ஆலோசனைகளைக் கேட்டது தமிழக அரசு. பல லட்ச ரூபாய்களைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம் தன்னுடைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இறுதியாக சென்னையின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்களை மீட்பதுதான் என்று சொல்லிப் போனது. அடுத்து, ஸ்டாலின் மேயராக இருந்த போது சென்னை மாநகராட்சி, குப்பைகளைக் கையாள ‘ஓனிக்ஸ்’ என்ற நிறுவனத்திற்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்படுகிறது. அப்போது, அவர்களிடத்தில் சதுப்பு நிலத்தில் குப்பைகளை  ஏன் கொட்டுகிறீர்கள் என்று கேட்டபோது, சென்னை மாநகராட்சி எங்களுக்கு இந்த இடத்தைத்தான் காட்டியது என்றது. இதில், சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்ன நிறுவனமும், சதுப்பு நிலத்தில் குப்பைகளைக் கொட்டிய நிறுவனமும் ஒரே தலைமையின் கீழ் இயங்கிய நிறுவனங்கள்தான். மக்களுக்குப் பயன்படும் நீராதாரங்களை அழித்தால்தான், அது `தனியார் தண்ணீர் மயத்திற்கு’ இட்டுச் செல்லும். இன்று தண்ணீர் மிகப் பெரிய வியாபாரம். அது உங்களுக்கு எளிதாகக் கிடைக்காமல் இருக்கும்வரைதான் அந்தத் தொழில் வளரும். அரசியல்வாதிகளுக்கான வருமானமும் அந்த நிறுவனங்களிடம் இருந்துதான் கிடைக்கும். இப்படியான சூழலில் இங்கு நீங்கள் என்ன செய்திட முடியும்?” என்று கேள்வியெழுப்புகிறார் சூழலியலாளர் நக்கீரன்.

ஒருநாளில் சென்னைப் பெருநகரில் 5 ஆயிரம் டன் குப்பைகள் எடுக்கப் படுகின்றன. அவை வடசென்னையின் கொடுங்கையூரிலும், தென்சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைந்திருக்கும் கிடங்கிலும் பிரித்துக் கொட்டப்படுகின்றன. சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி பள்ளிக் கரணையில் ஒரு நாளைக்கு 2,600 டன்  குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவை தவிர, ஒரு நாளைக்கு 380 டன் கட்டட இடிமானக் குப்பைகளும் இங்கு கொட்டப் படுகின்றன. மேலும், ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் கழிவு நீரும் பள்ளிக்கரணையில் விடப்படுகிறது. 2002-ல் 140 ஏக்கர் பரப்பளவிலிருந்த குப்பைக்கிடங்கு, 2007-ல் 340 ஏக்கர் பரப்பளவாக உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் 10 ஏக்கர் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

விஷமாகும் பள்ளிக்கரணை!

மருத்துவக் கழிவுகளின் ஆபத்து

ஆசிய அளவில் சென்னையை ஒரு முக்கிய மருத்துவத் தலைநகரமாகச் சொல்லலாம். அத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றன. பல நாடுகளிலிருந்தும் வந்து பலரும் சிகிச்சை எடுத்துச் செல்கின்றனர். இதனால், சென்னையில் அதிகளவிலான மருத்துவக் கழிவுகள் தினமும் சேரும். வீட்டிலிருந்து கொட்டப்படும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காதவை என்று நாம் பிரித்துப் போடுவதில்லை. சாதாரணக் குப்பைகளையே சரியான வகையில் கையாளத் தெரியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது நம் அரசாங்கம். இதில், மிகவும் ஆபத்துகளை விளைவிக்கக்கூடிய மருத்துவக் கழிவுகள் குறித்து யோசிப்பதேயில்லை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் குப்பைகளை இப்படியாக வகைப்படுத்தியுள்ளது மாநகராட்சி. வீடுகளிலிருந்து கொட்டப்படும் குப்பைகள் 68 சதவிகிதம், வணிக நிறுவங்களிலிருந்து கொட்டப்படும் குப்பைகள் 16 சதவிகிதம், பள்ளி மற்றும் கல்லூரிகள் 14 சதவிகிதம், தொழிற்சாலைக் கழிவுகள் 2 சதவிகிதம் என 100 சதவிகிதத்திற்கான  கணக்கைக் காட்டுகிறது. ஆனால், கடைசியாக, மருத்துவக் கழிவுகளை மருத்துவ நிறுவனங்களே வெளியேற்றிக்கொள்கின்றன எனவும் குறிப்பிடுகிறது சென்னை மாநகராட்சி.

குப்பைகள் கொட்டப்படுவதால், பள்ளிக்கரணையின் நிலத்தடி நீர் எந்த அளவிற்கு மாசடைந்திருக்கிறது என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘நீர் ஆதார அமைப்பு’ ஓர் ஆய்வறிக்கை 2010-ம் ஆண்டிலேயே சமர்ப்பித்தது. அதில் ‘நீரில் டி.டி.எஸ், குளோரைட், சல்ஃபைட், பைகார்பனேட் போன்றவைகளின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. இது பள்ளிக்கரணையைச் சுற்றியிருக்கும் பகுதிகளின் நிலத்தடி நீரையும் சேர்த்து மாசுப்படுத்துகிறது. உடனடியாக, இங்கு குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட வேண்டும்’ என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.

சென்னையின் சதுப்பு நிலம் பள்ளிக்கரணை மட்டுமே அல்ல. ஈஞ்சம்பாக்கத்திலும், சோழிங்க நல்லூரிலும் இன்னும் பல இடங்களிலும் அது இருந்தது. ஒவ்வொரு சதுப்பு நிலமும் வாய்க்கால்களால் இணைக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று அவையெல்லாம்அழித்தொழிக்கப்பட்டுவிட்டன.

“காரப்பாக்கத்தில் 174, 176, 239 என்ற சர்வே எண்களிலும், ஈஞ்சம்பாக்கத்தில் 282, அக்கரையில் 707-ம் சர்வே எண்களிலும் சதுப்பு நிலங்கள் உள்ளன. அதேபோல பள்ளிக்கரணையில் 602-ம் சர்வே எண்ணிலும் சதுப்பு நிலம் இருக்கு. ஆனா, இங்க யாருக்கும் பயம் இல்லை. எல்லாருமே தெரிஞ்சுதான் விற்கவும், வாங்கவும் செய்றாங்க. சோழிங்கநல்லூர்ல 176 சர்வே எண்ல ஆர்.டி.ஓ அலுவலகத்துக்காக வேலைகள் தொடங்கியிருந்தன. ஆனால், அது சதுப்பு நிலம். நீதிமன்றத்துல வழக்குத் தொடர்ந்து அதை நிறுத்தி வெச்சிருக்கோம்” என்கிறார் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஐ.வி.சேகர்.

பள்ளிக்கரணைக் குப்பைக்கிடங்கிற்குள் சென்று பார்த்திட வேண்டும் என்ற முயற்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. குப்பைக்கிடங்கை நெருக்கத்தில் பார்க்க மாற்று வழி இருப்பதைக் கண்டுபிடித்து, ஒரு விடியற்காலை நேரம் அங்கு சென்றோம். தாங்க முடியாத துர்நாற்றத்தில், விடியும்வரை ஒளிந்திருந்து குப்பைகளை நெருக்கத்தில் படமெடுத்தோம். இன்னும் நெருங்க முயற்சித்து வழியைத் தேடினோம். வறண்டு கிடந்த அந்தச் சதுப்பு நிலத்தின்மீது சில நாய்கள் வேகமாக ஓடின. அந்த வழியைத் தொடரலாம் என்றெண்ணி, வறண்டு காணப்பட்ட அதில் காலை வைத்த ஒரு நொடி தான், சடாரென்று இடுப்புவரை சேற்றுக்குள் சென்றுவிட்டது. அங்கிருந்த கோரைப்புல்லை பிடித்து இன்னும் உள் போகாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அதற்குள் அதிலிருந்து அதிகப்படியான துர்நாற்றமும், ஒரு விதமான வாயுவும் வெளியேறத் தொடங்கின. அந்த வாயுதான் பள்ளிக்கரணையின் மூச்சு. அதன் மூச்சில் விஷம் படிந்திருந்தது. நிலத்தின் மேற்பகுதி வறண்டிருந்தாலும், கீழே ஈரப்பதத்தைக் கொண்டிருந்தது அந்த நிலம். ஆனால், அந்த ஈரத்தை ஈவிரக்கம் இல்லாமல் நாம் விஷமாக்கியிருக்கிறோம் என்பதை அனுபவப்பூர்வமாக உணரமுடிந்தது.

பள்ளிக்கரணையை மீட்க மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டுத னிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கமும், அதிகார வர்க்கமும், தனியார் நிறுவனங்களும் இரும்புப்பிடியோடு நசுக்கும் போது அந்தச் சிலரும் எத்தனை நாள்களுக்குத் தான் போராட முடியும்?

பள்ளிக்கரணையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வனத்துறையின் மண்டல வன அதிகாரி, அசோகன்

“2002-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பள்ளிக்கரணை நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். ஆனால், எங்களுடைய துறைக்கு பள்ளிக்கரணை வந்து சேர்ந்தது 2007-ம் ஆண்டுதான். அப்போதைய பள்ளிக்கரணை நிலம் 317 ஹெக்டேர் மட்டும்தான். வனத்துறை கட்டுப்பாட்டில் வந்த நிலம் போக மீதம் ஆக்கிரமிப்பிலோ, அரசிடமோ உள்ள நிலங்களை மீட்க நடவடிக்கையில் இறங்கினோம். அதன் பலனாக 2011-ம் ஆண்டு 15.7 கோடி செலவில் பள்ளிக்கரணையை சீரமைக்க நிதி ஒதுக்கிச் சீரமைத்தோம். 2012-ம் ஆண்டு 170.40 ஹெக்டேர் நிலத்தையும், 2013-ம் ஆண்டு131.55 ஹெக்டேர் நிலத்தையும், 2014-ம் ஆண்டு 75.93 ஹெக்டேர் நிலத்தை வருவாய்த்துறையிடம் இருந்தும் வாங்கினோம். இப்போது 694.88 ஹெக்டேர் நிலப்பகுதி எங்களிடம் இருக்கிறது. சதுப்பு நிலங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் அரசாங்கத்தால் அரசு ஆணைப் பெறப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் மனது வைத்தால் மட்டுமே அதை அகற்றுவது சாத்தியம்.

பள்ளிக்கரணையிலுள்ள மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனையுடன் ‘சதுப்பு நில பாதுகாப்பு வாரியம்’ எனும் தனி குழு அமைக்கப்பட்டு நிலக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதற்கான ஆவணங்களைப் பெற்று நிலத்தைக் கையகப்படுத்த காத்திருக்கிறோம். முறையான அனுமதி கிடைத்தவுடன் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.’’

விஷமாகும் பள்ளிக்கரணை!

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

“ கடந்த ஆண்டு வெள்ளம் வந்தபோது, வேளச்சேரி மூழ்கியதற்குக் காரணம் பள்ளிக்கரணையில் தண்ணீர் வெளியேறும் கால்வாய்கள், ஆக்கிரமிப்புகளால் அடைக்கப் பட்டிருந்தது தான். இயற்கையும் ஓரளவிற்குத்தான் சீரழிவைக் காக்கும். கடந்த சுனாமியின்போது அலையாத்தி காடுகள் இருந்த பகுதியில் சேதம் ஓரளவு தடுக்கப்பட்டது. அதேபோல இந்த சதுப்பு நிலங்கள் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் தன்மை உடையது. சென்னையை பெரும் ஆபத்திலிருந்து காக்க வேண்டுமென்றால் அரசாங்கம் விரைந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும்.”

விஷமாகும் பள்ளிக்கரணை!

சமூக ஆர்வலர், ஹாரீஸ் இஸ்மாயில்

``பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் கடல் மட்டமும் ஒரே சமநிலையில்தான் இருக்கின்றன. ஆனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், பக்கிங்ஹாம் கால்வாயில் ஒக்கியம் மடு என்ற இடத்தில் கலக்கிறது. அந்த ஒக்கியம் மடுவின் கடல் மட்ட உயரம் 4 மீட்டர் என்பதால் பள்ளிக்கரணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மெதுவாகத்தான் வெளியேறும். அதனால்தான் பள்ளிக்கரணை அதிகமான தண்ணீரை சேமித்துக் கொள்கிறது. இதனால் எப்போதும் நீர் இருந்து கொண்டே இருக்கும். அந்த நிலம் மொத்தமாக உயிர்ச்சூழல் மண்டலமாக மாறும். 1980-களில் வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினர் செய்த ஆராய்ச்சியின் முடிவு இன்று யார் கேட்டாலும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அந்த ஆராய்ச்சியின் முடிவு ‘எவ்வளவு வறட்சி வந்தாலும் சென்னைக்கு தேவையான தண்ணீரை பள்ளிக்கரணை கொடுக்கும்’ என்பதுதான். உலகிலேயே இயற்கையாக அமைந்த 4 சதுப்பு நிலங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று. ஆனால், இன்று அரசாங்கமே கங்கணம் கட்டிக்கொண்டு சீரழித்துக் கொண்டிருக்கிறது.”

பாண்டனால் - பிரேசில்

ஒகவாங்கோ - பொட்ஸ்வானா

கக்காடு - ஆஸ்திரேலியா

மெகாங் - வியட்நாம்

கேமார்க்யூ - பிரான்ஸ்

உலகின் மிக முக்கிய சதுப்பு நிலங்கள் இவை. இதன் வரிசையில் பள்ளிக்கரணைக்கும் முக்கிய இடமுண்டு. ஆனால், பள்ளிக்கரணை அளவிற்கு வேறெந்த சதுப்பு நிலமும் பேரழிவைக் காணவில்லை.

விஷமாகும் பள்ளிக்கரணை!

சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம்
 
``என்னைப் பொறுத்தவரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க முடியாது. அது மரணித்துவிட்டது. குறைந்தபட்சம் மிச்சமிருக்கும் ஈரநிலங்களையாவது காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.”