பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இந்தியா - சீனா - பலம் யாருக்கு?

இந்தியா - சீனா - பலம் யாருக்கு?
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா - சீனா - பலம் யாருக்கு?

மருதன், ஓவியம்: ஹாசிப்கான்

மோடியும் ஜின்பிங்கும் ஜெர்மனியில் சந்தித்துப் பேசிக்கொண்டாலும், எல்லையில் இன்னும் பதற்றம் தீர்ந்தபாடில்லை. போருக்கான எல்லா சாத்தியங்களும், எல்லா காரணங்களும் அப்படியே நீடிக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர பகையுணர்வு சிறிதும் குறைந்தபாடில்லை. இந்தப் பகையுணர்வுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது; விரிவான அரசியல், பொருளாதார நோக்கங்கள் இருக்கின்றன. அதனால்தான், எல்லையில் பிரச்னை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரு நாட்டு ராணுவங்களும் தொடர்ச்சியாக ஒன்றையொன்று அவநம்பிக்கையுடன் கண்காணித்து வருகின்றன.

இந்தியா - சீனா - பலம் யாருக்கு?

அவநம்பிக்கையும் பகையுணர்ச்சியும் ஒருசேரத் தோன்றுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். புரிதலின்மை. இந்தப் பெரும்குறை நீடிக்கும்வரை போர் அபாயம் என்றென்றும் உயிர்த்திருக்கும் என்பதால், சீனாவைப் புரிந்துகொண்டே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. சீனாவுடனான பகைக்கு உண்மையான காரணம் என்ன? சீனாவின் நோக்கம் என்ன? அதன் ராணுவ பலம் எப்படிப்பட்டது? ஒருவேளை, இன்னொரு போர் மூண்டால், சீனாவை நம்மால் வெல்லமுடியுமா?

விழித்தெழுந்த சிங்கம்

`சீனா என்பது உறங்கும் சிங்கம்; அதை எழுப்பவேண்டாம்’ என்றார் நெப்போலியன். `எழுந்துவிட்டால் உலகத்தையே அது புரட்டிவிடும்’ என்றும் அவர் எச்சரித்தார். சீனாவின் உறக்கம் கலைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இது உலகுக்கும் தெரியும் என்பதால், தன்னுடைய ஒரு கண்ணை அமெரிக்கா நிரந்தரமாக சீனாவின்மீது பதித்துள்ளது. இந்தியாவுக்கோ இரண்டு கண்கள் போதவில்லை. சீனா சற்றே வேகமாக மூச்சுவிட்டால்கூட, அதை உடனடியாகத் தெரிந்துகொண்டாக வேண்டிய அவசியத்தில் இருக்கிறது இந்தியா.

சீனா  முதலில்  சாதுவாக  உறங்கிக்கொண்டுதான் இருந்தது. 19, 20-ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகள் சீனாவைச் சீண்டவும், ஆக்கிரமிக்கவும் ஆரம்பித்தன. பிறகு ஜப்பானும் தன் பங்குக்கு சீனாவை ஆக்கிரமிக்கத் துடித்தது. சீனாவால் ஒருவரையும் ஒருமுறைகூட வெல்லமுடியவில்லை. தோல்வி அல்லது கடும்தோல்வி அல்லது பரிதாபகரமான தோல்வியே கிடைத்தது. சீனாவின் குழப்பமான அரசியல் சூழல், பலவீனமான பொருளாதாரக் கட்டமைப்பு, திறமையற்ற ஆட்சியாளர்கள் என்று பல காரணங்கள் இருந்தாலும், சீனாவின் ராணுவம் மோசமாக இருந்ததே, இந்தத் தொடர் தோல்விக்கு முதன்மையான காரணம்.

இந்தியா - சீனா - பலம் யாருக்கு?

அந்நியர்களை மட்டுமல்ல; உள்நாட்டுக் கிளர்ச்சிகளையும் அவ்வப்போது வெடித்த ஆயுதப் போராட்டங்களையும்கூடச் சமாளிக்கத் திராணியற்றுக் கிடந்தது சீன ராணுவம். 1949-ம் ஆண்டு மாவோ தலைமையில் நிகழ்ந்த சீனப் புரட்சி எல்லாவற்றையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. உள்நாட்டு எதிரிகளும் அந்நியர்களும் ஒரே சமயத்தில் தோற்கடிக்கப்பட்டனர். மக்கள் சீனக் குடியரசு மலர்ந்தபிறகு, நிகழ்ந்த புரட்சிகர மாற்றங்களில் ஒன்று, அதற்கு முன்புவரை அமலில் இருந்த அந்நிய அரசாங்கங்களுடனான அத்தனை ஒப்பந்தங்களையும் ரத்துசெய்ததுதான். மக்களின் ஒப்புதலின்றிப் போடப்பட்ட இவையனைத்தும்  சீனாவை  அவமானப்படுத்தும், சீனாவைப் பிணைத்துவைக்கும் சங்கிலிகள் என்று கருதப்பட்டன. எங்களுடைய அரசை நாங்களே நிறுவிக்கொள்வோம் என்ற அறிவிப்புடன் நவீன சீனா புது பலத்துடன்  விழித்தெழுந்தது. அதற்குப்பிறகு உலகத்துக்கே உறக்கம் தொலைந்துவிட்டது.

மக்கள் சீனக் குடியரசு ரத்து செய்த கணக்கற்ற ஒப்பந்தங்களில் ஒன்று, பிரிட்டிஷ் இந்தியாவுடன் அது மேற்கொண்டிருந்த எல்லை தொடர்பான ஒப்பந்தம். தன்னுடைய தேச எல்லைகளைப்  பரிசீலித்து புதிய ஒப்பந்தங்களை உருவாக்கிக்கொள்ள சீனா விரும்பியது. அந்தப் பட்டியலில் திபெத், அருணாசலப் பிரதேசம் இரண்டும் இடம்பெற்றிருந்தன. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பகையின் தொடக்கப்புள்ளி சீனாவின் இந்தப் புதிய அணுகுமுறையில் இருந்தே தொடங்குகிறது. 1962-ம் ஆண்டு இந்த இரு நாடுகளும் முதல்முதலாகப் போர்முனையில் சந்தித்துக்கொண்டது இதனால்தான். சீனா உரிமைகோரும் அருணாசலப் பிரதேசத்தை விட்டுக்கொடுக்க இந்தியா விரும்பவில்லை. இந்தியா உரிமைகோரும் அக்சாய் சின் பகுதியை சீனா விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. 1962-ம் ஆண்டு போரில் இந்தியா தோற்றுவிட்டாலும், இரு நாடுகளுக்கு இடையிலான நிழல் யுத்தம் முனைப்புடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியா - சீனா - பலம் யாருக்கு?

சீனாவின் பலம் என்ன?

சீன ராணுவம் குறித்து மிகையான மற்றும்  குறைவான மதிப்பீடுகளும் அடிக்கடி செய்யப்படுவது வழக்கம். இதனால், இரண்டுவிதமான தவறுகள் நிகழ்கின்றன என்கிறார்கள் ராணுவ ஆய்வாளர்கள். சீனாவிடம் வானளாவிய ராணுவபலம் இருப்பதாக நினைத்துக்கொண்டு தங்கள் நாட்டிலும் அதே போன்ற வலிமையை உருவாக்கும் முயற்சியில் இறங்குவது; நாம் நினைப்பதைப்போல் சீனா ஓர் அச்சுறுத்தல் இல்லை என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருப்பது. இந்தத் தவற்றை இந்தியா 1962-ம் ஆண்டு செய்தது.

தற்சமயம், மிகையோ குறையோ இன்றி, கிடைத்திருக்கும் ஆதாரபூர்வமான தகவல்களைக் கொண்டு சீனாவின் ராணுவ பலத்தைத் தொகுத்துக்கொள்ளலாம்.

ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது வெற்றிகரமாக தாக்குதலை மேற்கொள்ள அதன் ‘சி4ஐஎஸ்ஆர்’ ஆற்றல் உதவும். சி4 என்றால் கமாண்ட், கன்ட்ரோல், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் திறன். ஐஆஸ்ஆர் என்பது புலனாய்வு, கண்காணிப்பு, உளவு ஆகிய மூன்று அம்சங்களைக் குறிக்கும். சீனா, இத்திறன்களைத் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. அதற்கேற்ற தளவாடங்களை, தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்துவருகிறது.
பிரச்னைக்குரிய பிரதேசத்தில் ஏற்படும் அசைவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்திக்கொள்கிறது சீனா. ஆளில்லா கண்காணிப்பு வாகனங்களும் உதவுகின்றன.

நிலம், ஆகாயம், கடல் என்று தொடங்கி அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைத்து வியூகம் அமைக்கும் ஆற்றலைச் சீனா பெற்றிருக்கிறது. பிரச்னைக்குரிய இடத்தில் மிகக் குறுகிய காலத்துக்குள் தகுதிவாய்ந்த துருப்புகளைச் சீனாவால் களமிறக்கமுடியும். நீண்ட காலம் நிலைத்து நின்று போரிடும் வல்லமையும் அதற்கு இருக்கிறது.  இந்த இரண்டையும் சாத்தியப்படுத்தும் வகையில் எல்லையை ஒட்டிப் பல்வேறு முகாம்களை அத்தனை வசதிகளோடும் சீனா உருவாக்கி வைத்துள்ளது. தளவாடங்களை மின்னல் வேகத்தில் கொண்டுவந்து சேர்க்கும் வகையில், தன்னுடைய தரப்பில் சாலைகள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளைச் சீனா செய்துவைத்துள்ளது. சேமிப்பு வசதிகளுக்காக நிலத்துக்கடியில் பாதாள அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

எல்லைக்கு அருகில் 27 விமான ஓடுதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவைபோக, லாசா கோங்கார், நியிங்ச்சி, காம்டோ, ஹோப்பிங், காரி குன்சா, ஷிகாட்சே ஆகிய ஆறு இடங்களில் இந்தியாவை எதிர்நோக்கி முழுமையான, திறன்பெற்ற விமானத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜே 10, ஜே 11 வகை போர் விமானங்கள் தயார் நிலையில் நிரந்தரமாகக் காத்திருக்கின்றன. தன் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மேலும் பல முகாம்களும் உருவாக்கப்பட்டுவருகின்றன.

இந்தியா - சீனா - பலம் யாருக்கு?

குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் (டிஎஃப் 15), ஓரளவு அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் (டிஎஃப் 21) உள்ளிட்ட ஏவுகணைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

இந்தியாவின் பலம் என்ன?

உலகிலேயே அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஆயுதங்கள், தளவாடங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டாலும் இந்தியா, சீனாவைவிடக் குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றில் சோவியத் தயாரிப்புகளின் எண்ணிக்கை அதிகம். சமீப காலமாகத்தான் பிற நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களும் தளவாடங்களும் தருவிக்கப்பட்டுவருகின்றன.
 
சீனத் தளவாடங்களின் தரத்துடன் ஒப்பிட்டால், நம்மிடம் உள்ளவற்றின் தரம் குறைவு. உணவு, குளிராடைகள், குண்டு துளைக்காத ஆடைகளின் தரம், ஆயுதங்களின் தரம் என்று தொடங்கி பலவற்றைக் குறித்து எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள், பல்வேறு சமயங்களில் புகார் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது எல்லைப் பகுதிகளில் சாலைகளை அமைத்து முடிக்கும் பணிகளை இன்னமும் இந்தியா முடிக்கவில்லை. எல்லையை ஒட்டி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 73 சாலைகளை இந்தியா அமைத்தாகவேண்டும். இந்தச் சாலைகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்தால்தான், மோதல் நிகழும்போது வீரர்களையும் தளவாடங்களையும் கொண்டுசெல்வது சாத்தியப்படும்.

வடகிழக்குப் பகுதிகளில் விமானபலத்தைப் பெருக்கும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. கிழக்கு லடாக் பகுதியின் எல்லைக்கருகில் உள்ள தேப்சாங் சமவெளிப்பகுதியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. சியாச்சின் சிகரத்துக்கு அருகிலுள்ள இந்த இடத்தில் ஏற்கெனவே 2013-ம் ஆண்டு சீன ஊடுருவல் நிகழ்ந்துள்ளது. பெரும் முயற்சிகளுக்குப் பிறகே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்தும் இன்னமும் தேப்சாங் பகுதி போதுமான அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் பலப்படுத்தப்படவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எல்லைக்கருகில் 31 இந்திய விமான ஓடுதளங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் 22 கிழக்கிலும் ஒன்பது மேற்கிலும் அமைந்துள்ளன. திபெத் பகுதியில் எப்போது மோதல் நிகழ்ந்தாலும் அதை எதிர்கொள்ள இந்தக் கட்டமைப்பு உதவும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா - சீனா - பலம் யாருக்கு?

எதிர்காலம்

இந்தியாவைப் போலன்றி சீனா, தன் ராணுவ பலத்தைத் தீவிரமாகக் கூட்டிக்கொண்டே செல்கிறது. ஆயுதத் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளிலும் ஆர்வம் செலுத்திவருகிறது. இந்தியா, சீனாவோடு போட்டியிடுகிறது என்றால், சீனா, அமெரிக்காவையே தனது நிஜப் போட்டியாளராகக் கருதுகிறது. அமெரிக்காவைவிட அதிக ராணுவப் பலத்தைப் பெருக்கிக்கொள்வதில்தான் சீனா அக்கறை செலுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கோ சீனாவை எட்டிப் பிடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். ஆனால், அதற்குள் சீனா இன்னொரு பாய்ச்சலை நிகழ்த்திவிட்டிருக்கும்.

ராணுவப்போட்டியை விட்டுவிட்டு இன்னொன்றைச் செய்யலாம் இந்தியா. வாழ்க்கைத் தரம், அடிப்படைக் கட்டுமானம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் என்று மக்களுக்குப் பயன்படும் பல்வேறு துறைகளில் சீனாவோடு நேரடியாகப் போரிட்டு வெல்ல முயற்சிக்கலாம்.