பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டாப் 10 பிரச்னைகள்!

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டாப் 10 பிரச்னைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டாப் 10 பிரச்னைகள்!

ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ள்ளாடித் தலைகுப்புற விழுந்து கிடக்கிறது தமிழகம்.குடிமகன்களால் மட்டும் அல்ல, குடிமக்களின் அரசால்தான் இந்த நிலைமை!

நினைக்க நினைக்க நெஞ்சு கொதிப்பதைவிட, பயம் தான் அதிகமாக இருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், காப்பாற்ற முடியாத காலகட்டத்தைத் தமிழகம் அடைந்து விடுமோ என்பதே அந்தப் பயத்துக்குக் காரணம். எப்போதாவது ஏதாவது ஒன்று காப்பாற்றுவதற்கு இருக்கும். ஆனால், இப்போதோ எல்லாமே கெட்டுக்கிடக்கிறது. இதைக் கேட்பார் யாருமில்லை.

எல்லாவற்றுக்கும் முன்னோடியாக ஒரு காலத்தில் இருந்த தமிழ்நாடு, இப்போது நாசமாய்ப் போவதற்கும் முன்னோடியாய் ஆகிவிடுமோ என்ற கவலையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டாப் 10 பிரச்னைகள்!

1. நிலையான அரசு இல்லை

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், எடப்பாடி பழனிசாமி அரசு நிலையான அரசு. அந்த மனிதர்களின் எண்ணப்படி பார்த்தால், நிலைகுலைந்த அரசு. இது எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்துபோகலாம். கன்னக்கோல் வைத்துக் குழிதோண்டும் மனிதர்களால் நிரம்பி வழிகிறது அ.தி.மு.க.

பத்துப் பேரைப் பறித்துச்சென்றார் பன்னீர் செல்வம். திகார் சிறையில் இருந்துவந்த தினகரனை 23 எம்.எல்.ஏ-க்கள் சந்தித்தார்கள். தஞ்சாவூர் ‘பாஸ்’ என்கிற திவாகரன் தனது பேச்சை 30 எம்.எல்.ஏ-க்கள் கேட்பார்கள் என்கிறார். ம.நடராசன் தனது ஆதரவாளர் பட்டியலை மனதுக்குள் பூட்டி வைத்துள்ளார். அமைச்சராகத் துடிக்கும் பல பேர் தனித்தனி ஆவர்த்தனம் செய்து எடப்பாடி தூங்கிக்கொண்டு இருக்கும்போது கனவில் மிரட்டுகிறார்கள். கூவத்தூரில் அளித்த வாக்குறுதிப்படி பணம் தரப்படவில்லை என்று சிலர் முறுக்குகிறார்கள். சாதிரீதியாகச் சிலருக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று சிலர் கிளப்புகிறார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வே சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார். ‘இரட்டை இலை’ யில் நின்று வென்றவர்களே, எதிர்க்கட்சித் தலைவரை அடிக்கடி சந்திக்கிறார்கள்.

இவை அனைத்தையும் தெரிந்துகொண்டும் ஆட்சியைக் காப்பாற்ற முயலாமல், ‘`எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கவிழ்த்தால் ஆறு மணி நேரத்தில் என் ஊருக்குப் போய்விடுவேன்” என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் முதலமைச்சர். இப்படிப்பட்ட அரசாங்கம்தான் அனைத்துத் தலைவலிகளுக்கும் உச்சமான தலையாயத் தலைவலி!

2. தொழில் வளர்ச்சி இல்லை

தொழில் வளர்ச்சி என்பது பணம், முதலீடு, லாபம் தொடர்புடையது மட்டுமல்ல; நிலையான நம்பிக்கைக்குரிய, ஆளுமைத்திறன் கொண்ட அரசு இருந்தால், எவரும் முதலீடு செய்ய முன்வருவார்கள். இங்கே அது இல்லாததால்தான் தொழில் வளர்ச்சியும் இல்லை.

இந்திய மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரக் கையேடு ஒன்றை ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும். தமிழகத் தொழில்துறை கடந்த ஆண்டில் 3.97 சதவிகிதம் தான் வளர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் 10.06 சதவிகிதம் வளர்ந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவான தெலுங்கானா மாநிலம் 7.56 சதவிகிதம் வளர்ந்துள்ளது. உற்பத்தித் துறையில் 1.64 சதவிகிதமே வளர்ச்சி கண்டுள்ளது தமிழ்நாடு.

சின்னஞ்சிறிய புதுச்சேரிகூட 2.40 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பொதுவாக உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத மாநிலங்களில்தான் தொழில்துறை, உற்பத்தித் துறையில் வளர்ச்சி குறையும். ஆனால், இவை அனைத்துமே இருக்கும் மாநிலம் தொழில்துறையிலும், உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி அடையவே இல்லை என்றால், என்ன காரணம்?

இவர்களைப் பார்த்துத் தொழில் தொடங்க யாரும் தயாராக இல்லை. வந்தாலும் அவர்களை இவர்களது ‘கமிஷன்’ அளவுகோல் விரட்டிவிடுகிறது. தொழில் வளர்ச்சி என்பது மாநிலத்தின் நிதி முன்னேற்றம், வேலை வாய்ப்பு, கெளரவம் தொடர்புடையது. மூன்றையும் இழந்து நிற்கிறோம்.

3. ‘டப்பு’ இல்லை

லாபகரமான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக்கூட எதிர்பார்க்க வேண்டாம்; பற்றாக்குறையும் இருக்கவே செய்யும். அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தும் திட்டங்கள், முன்னெடுப்புகள் ஏதேனும் உண்டா என்றால் இல்லை.

கடந்த ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 2012-13-ம் நிதியாண்டில் இருந்ததைவிட எட்டு மடங்கு வருவாய்ப் பற்றாக்குறை எகிறி இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பற்றாக்குறை அதிகமாகியிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழகத்தின் கடன் கூடிக்கொண்டே போகிறது. அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் வாங்கிய கடன் தொகை நான்கு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இவை பற்றிய எந்தக் கவலையும் தமிழக அரசுக்கு இல்லை.

நிதித் திட்டமிடுதல்கள் இல்லாத அரசு, அதல பாதாளத்துக்குப் போகும் என்பதற்கு உதாரணமாக மாறிக்கொண்டு இருக்கிறது.

4. மரணப் படுக்கையில் விவசாயம்

விவசாயம் குறைந்துவிட்டது. விவசாய உற்பத்தி குறைந்துவிட்டது. உற்பத்திக்கான நிலப்பரப்பு குறைந்துவிட்டது. விவசாயம் லாபமான தொழில் இல்லை என்று பலரும் இத்தொழிலில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அன்றாட வேலைகள் இல்லாததால், விவசாயக் கூலிகளும் வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள். பெரும்பாலான உணவுப் பொருள்கள் வெளிமாநிலத்தில் இருந்துதான் வர வேண்டும் என்றால், நாடு எப்படி உருப்படும்?

மழை இல்லை, வானம் பொய்த்துவிட்டது என்று இயற்கைமீது பழிபோட்டுத் தப்பிப்பார்கள். இயற்கை, எல்லா மாநிலங்களையும்தான் வஞ்சிக்கிறது. விவசாய உற்பத்தியில் மத்தியப் பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது. தெலுங்கானாவும், ஆந்திராவும் வளர்ந்துள்ளன. விலைக் குறியீடுகளின் அடிப்படையில் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சி 27.04 சதவிகிதம் என்றால், தமிழ்நாடு மைனஸ் எட்டு சதவிகிதம் என்கிறது ரிசர்வ் வங்கி. யானைகட்டிப் போரடித்த பெருமைகொண்ட நாடு, பூனைகட்டிப் போரடிக்கக்கூடத் துப்பு இல்லாமல் போன நிலைமை பற்றிய வெட்கமே அரசுக்கு இல்லை. தமிழக விவசாயி தலைநகரில் முண்டமாக ஓடுகிறான் என்றால், தமிழ்நாடு ஓடுகிறது என்பதே பொருள்.

5. மிரட்டும் மத்திய அரசு

ஆளுமைத்திறன் கொண்ட ஜெயலலிதா இல்லாமல், எல்லாவற்றுக்கும் பயப்படும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பதால், மத்திய அரசு மிரட்டுகிறது. தமிழகத்துக்குச் செய்து தர வேண்டிய நியாயமான கடமைகளில் இருந்து வழுக்குகிறது. இன்னும் சொன்னால் புறக்கணிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் இன்னமும் அமைக்கப்படவில்லை. இதை அமையுங்கள் என்று உச்ச நீதிமன்றம் சொன்னபிறகும் சொரணை இல்லாமல் கிடக்கிறது மத்திய அரசு. அவர்களுக்குத் தமிழ்நாட்டைவிட கர்நாடகா தான் முக்கியம். அங்குதான் கட்சி இருக்கிறது, இங்கு கிடையாது என்பது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தெரிந்துள்ளது. வறட்சி நிவாரணத்திலும் தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை.

தமிழகத்துக்குப் பல்வேறு சலுகைகளைச் செய்து கொடுப்பதன் மூலமாக நல்ல பெயர் வாங்குவது என்று இல்லாமல், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரையும் மிரட்டிப் பணிய வைத்து அ.தி.மு.க. ஓட்டுகளைப் பங்கு பிரிப்பதும், ரஜினிகாந்தைக் கட்சித் தொடங்கவைத்து அவரது சினிமா டிக்கெட்டை வசூல் ஓட்டாக மாற்றிக் கபளீகரம் செய்வதுமே பி.ஜே.பி-யின் பாதையாக மாறிவிட்டது. இந்தக் கொல்லைப்புற வழியே தெய்விகப் பாதையாக நினைக்கப்படும் போது தமிழ்நாட்டின் நலனைப்பற்றி அவர்களுக்கு எங்கே இருக்கும் அக்கறை?

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டாப் 10 பிரச்னைகள்!

6. அச்சுறுத்தும் திட்டங்கள்

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில், கடந்த ஜூன் 30-ம் தேதி ஊரே அதிரும்படி பயங்கரச் சத்தம். எண்ணெய்க் குழாய் வெடித்து விவசாய நிலங்களின்மீது எண்ணெய் படர்ந்தது. லேசாகத் தீப்பிடித்திருந்தால், ஊரே எரிந்திருக்கும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுத்துக்கொண்டு இருக்கிறது. கடந்த பதினைந்து நாள்களாக அம்மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடினார்கள். அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால் தஞ்சை, நாகை மாவட்டம் மீத்தேனை எதிர்த்து நின்றது. அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால் கோவை, ஈரோடு, நாமக்கல் விவசாயிகள் ‘கெயில்’ நிறுவனத்தை எதிர்த்து நின்றார்கள். அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் அணி திரண்டார்கள். அணு உலை 1, 2 பிரிவுக்குத்தானே எதிர்ப்புத் தெரிவித்தீர்கள், இதோ 3, 4, 5 பிரிவுகளையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கொண்டுவரப் போகிறார்கள்.

ஓர் அரசாங்கம் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரலாம். அது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத, மக்களை அச்சுறுத்தாத திட்டமாக இருக்க வேண்டும். ஆனால், எது எல்லாம் உயிருக்கு ஆபத்து தருமோ, அதை எல்லாம் தமிழ்நாட்டுக்குப் பெருந்தன்மை(!)யுடன் தருகிறார்கள். இந்தத் திட்டங்கள் பற்றி முழுமையாக மக்களுக்கு விளக்குவது இல்லை. ரகசியமாகச் செயல்படுத்துகிறார்கள். இயற்கையையும் சுற்றுச்சூழலையும் கெடுத்து, அடுத்த பத்து ஆண்டுகளில் மக்களின் வாழ்வுக்கே அச்சுறுத்தலாகப் பெரும்பாலான திட்டங்கள் அமைந்துவிடும்.

  7.மனச்சிறையில் எடப்பாடி

எடப்பாடி பழனிசாமிக்கு எந்தக் கனவும் இல்லை; நாற்காலி நிலைக்க வேண்டும் என்பதைத் தவிர. நீடிக்கிறதோ, நிலைக்கிறதோ இந்த ஆட்சிக்கு நான்காண்டு ஆயுள் இருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளும் பேசாமலேயே ஓட்ட நினைக்கிறார் அவர். காவிரிப் பிரச்னை, நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, ஜி.எஸ்.டி. என எந்தப் பிரச்னைக்கும் ஆக்‌ஷன் இல்லை. ரியாக்‌ஷனும் இல்லை. என்ன செய்ய வேண்டும், ஏதாவது செய்ய வேண்டுமா என்ற நினைப்பும் இல்லை. நாம் ஏதாவது செய்தால், மத்திய அரசுத் தவறாக நினைத்துக்கொள்ளுமோ, இதைப் பன்னீர் செல்வம் பயன்படுத்திக்கொள்வாரோ என்ற பயமும் இதனுள் இருக்கிறது.

‘சொல் அல்ல, செயல்தான் முக்கியம்’ என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேசியிருக்கிறார். இவர் சொல்வதும் இல்லை; செயல்படுவதும் இல்லை. ‘நாக்குதான் பிரச்னையே’ என்று கதையும் சொல்லியிருக்கிறார். அதற்காகப் பேசவே கூடாதா? கருத்துச் சொல்லவே கூடாதா? சட்டசபையில் ஸ்டாலின் பேசுகிறார். தனது தரப்பு விளக்கத்தை முதல்வர் குறுக்கிட்டு வைத்தால்தானே அது சபை? இவர் முதல்வர்; பேசக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தால் நாக்கு, சாம்பார் தொட்டுத் தோசை சாப்பிட மட்டும்தானா?

  8.மிரட்டும் சசிகலா குடும்பம்

குடும்பத்தில் மூன்று பேர் சிறையில் இருக்கிறார்கள். அதுவும், 2020-ம் ஆண்டுதான் அவர்களால் வெளியில் வர முடியும். அந்தக் கவலை குடும்பத்தில் யாருக்காவது இருக்கிறதா என்றால், இல்லை. இன்னமும் அதே ஆட்டம்; அதே பாட்டம்; அதே கொண்டாட்டம்; அதே அரட்டல்; அதே மிரட்டல்; அதே வசூல்; அதே பண வெறி. அம்மாவாகவே சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். சின்னம்மாவாகவே சிலர் நடிக்கிறார்கள். ‘மேடம் காலில் விழுந்ததைப் போல என் காலிலும் விழு’ என்கிறார்கள். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை போனில் அழைத்து உத்தரவு போடுகிறார்கள். அசிங்கமாகத் திட்டுகிறார்கள். வீட்டுக்கு வரச் சொல்லிக் காத்திருக்க வைக்கிறார்கள். இன்னமும் இவர்கள் தங்கள் ராஜாங்கம் நடப்பதாகவே நினைக்கிறார்கள். ஜமீன்கள் ஒழிக்கப்பட்ட பிறகும், ஜமீன்களாகவே வேஷம் போட்டு பந்தா காட்டுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத காத்து கருப்பாக தமிழ்நாடு நிர்வாகத்தை மிரட்டுகிறார்கள்!

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டாப் 10 பிரச்னைகள்!

9. கட்டுக்கு அடங்காத காவல்துறை

கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் முதலமைச்சராக இருக்கும்போதே காதில் விளக்கெண்ணெய் ஊற்றிவிடுவார்கள் காவல்துறை அதிகாரிகள். எடப்பாடி என்றால் சொல்ல வேண்டுமா? ஆட்டம் அதிகமாக இருக்கிறது. கொலை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காத நாள் இல்லை. நாளுக்கு நாள் அவை பெருகிக்கொண்டே வருகின்றன. கண்டுபிடிக்க முடியாத வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறத். ராமஜெயம் கொலை வழக்கையே ஜெயலலிதா - ராமானுஜம் கூட்டணியால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுவாதியைக் கொன்றது யார், ராம்குமார் தற்கொலை செய்தாரா என்ற மர்மமும் இன்னும் விலகவில்லை. கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்மமான முறையில் இறந்தது ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை. இப்படிப் பல வழக்குகள்.

இந்த நிலையில்தான் குட்கா விவகாரம் வெளியில் வந்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருளை விற்க அமைச்சர் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை மாமூல் வாங்கியுள்ளார்கள். சென்னை கமிஷனருக்கு மாதம் 20 லட்சம், செங்குன்றம் உதவி கமிஷனருக்கு மாதம் 10 லட்சம் என்று புரோக்கர் மாதவராவ் டைரி எழுதி உள்ளார். இதை வருமான வரித்துறை விசாரிக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. இது பற்றிய எந்த வெட்கமும் அரசுக்கு இல்லை. இதில் குற்றம் சாட்டப்பட்டவரை டி.ஜி.பி-யாகப் பதவி நீட்டிப்புத் தந்துள்ளார்கள்.

போராடும் மக்களை லத்தியைக் கொண்டு தாக்குகிறது போலீஸ். ‘மக்கள்தான் தாக்கினார்கள்’ என்று சட்டமன்றத்தில் முதல்வரே நியாயப்படுத்துகிறார் என்றால், போலீஸ் ராஜ்யம்தான் இப்போது நடக்கிறது என்பது தெளிவாகிவிட்டது.


10. ஊழல் மயம்

ஆட்சி, அதிகாரம், நிர்வாகத்தில் ஊழல், லஞ்ச லாவணம், நிதிமுறைகேடுகள் ஏற்படுவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், இப்போது அது நிர்வாகத்தில் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. எல்லா டெண்டர்களுக்கும் சதவிகிதம் பேசுவது சராசரி விஷயம்தான். ஆனால், டெண்டரில் பாதியைப் பேசும் அளவுக்குச் சில துறைகள் வளர்ச்சி அடைந்து விட்டன. இதனால், ஒழுங்கான நிறுவனங்கள் டெண்டர் எடுக்க வருவது இல்லை. போலி நிறுவனங்கள், பினாமி நிறுவனங்கள்தான் போட்டி போட்டு வருகின்றன. டெண்டர் எடுக்கும்முன் இந்தத் தொகை கொடுக்க வேண்டும் என்ற அளவுக்குப் போய்விட்டது.

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டாப் 10 பிரச்னைகள்!

டெண்டரால் சம்பாதிக்க முடியாத துறைகள் டிரான்ஸ்ஃபரால் சம்பாதிக்கின்றன. மொத்த மொத்தமாக அதிகாரிகளை ஊர் மாற்றம் செய்வது. போனவரும், வந்தவரும் இடமாற்றத்துக்காகப் பணத்துடன் அலைவது அதிகமாக நடக்கிறது. சமீபத்தில் காவல்துறையில் செய்யப்பட்ட பல்க் டிரான்ஸ்ஃபரில், பெரிய அளவுக்கு கரன்சி நடமாடி இருக்கிறது என்றால், மற்ற துறைகளைக் கேட்கவே வேண்டாம்.

கூவத்தூர் வாக்குறுதிகளில் ஒன்று, ‘நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்’ என்பது. ‘கம்பங்காட்டுக்குள் எருமை புகுந்ததுபோல’ ஆகிவிட்டது எல்லா துறைகளிலும். ஏதாவது ஒரு புள்ளிக்கு ஏதாவது ஒன்று நடக்கவில்லை என்றால், அது எடப்பாடிக்கு சிக்கல் என்பதால், எதைச் சொன்னாலும் செய்து தருகிறார்கள். பணம் ஒன்றே இன்று `அம்மா’!