
மருத்துவர் கு.சிவராமன் - படம்: மஹிதங்கம்
அதீத இன்பமும் நிறைவும் எப்போதுமே சின்னதாக ஒரு பயத்துடன் சேர்ந்து நிற்கும். களவின் நெருக்கத்தில் பெறும் முத்தத்தில் இருந்து, காமக்கூடலில் வரும் சத்தம் வரை இன்பமும் பயமும் இணைந்துதான் இருக்கும். கருத்தரித்த முதல் கணத்திலும்கூட அப்படித்தான். அவனோ, அவளோ இன்னும் 10 மாதங்கள் உள்ளிருந்து தன் பிஞ்சுக்கால்களால் கொடுக்கப்போகும் உதையும், மேல் வயிற்றில் முட்டி, மெள்ள வயிற்றினுள் தான் கட்டி வைத்திருக்கும் குளத்தில் நீந்தப்போகும் அனுபவத்தையும் நினைக்கும் ஒவ்வொரு கணமும் மகிழ்வாக, கொஞ்சம் பயமாக ஒவ்வோர் இளம் தாய்க்கும் இருக்கும்.
நாள் தள்ளிப்போய், சிறுநீர் சோதனையில் பளிச் நிறம் கிடைத்து, ``அய்யோ! பாப்பாவேதான்’’ எனக் குதூகலித்து, பரபரப்பாக மகளிர் மருத்துவரிடம் நிற்கும்போது, அவர் அல்ட்ராசவுண்ட் பார்த்து, ``கங்கிராட்ஸ். Sac தெரியுது. கண்டிப்பாகக் குழந்தைதான். ஆனாலும், ஹார்ட் பீட் இன்னும் சரியா கேட்கலை. எதுக்கும் இன்னும் ஒரு வாரம் போகட்டுமே’’ எனச் சொல்லும்போது, அடுத்த ஏழு நாள்கள் வலியோடும் பரபரப்போடும், கொஞ்சம் அடிவயிற்றைத் தடவிப் பயந்தும், உள்ளூற மகிழ்ந்தும் கடக்கும் பொழுதுகள் சொல்லி மாளாதவை.
கருத்தரிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர், முதல் 12 வாரங்கள் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியமே. அதுவும் `Precious baby’ என மருத்துவத் துறை செல்லமாகச் சொல்லும் அதிக மெனக்கெடலில் உருவான குழந்தையாக இருக்கும்பட்சத்தில், இந்தக் கூடுதல் பாதுகாப்பு கட்டாயம். `அதுக்காக ஒரு நல்ல ஆஸ்பத்திரியாகப் போய் அட்மிட் பண்ணிடணுமா?’ எனக் கேட்க வேண்டாம். வயிற்றுக்குள் வந்திருப்பது புது வியாதி அல்ல. புத்துயிர், புதுத் தளிர் என்ற புரிதல் முதலில் வேண்டும். எப்பவும் இந்தச் சமயத்தில் மரபு சொல்லும் சொல்லுக்கும் மருத்துவரின் பரிந்துரைப்புக்கும் கொஞ்சம் உரசல் உண்டாகும். ``அம்மா! நீ பேசாம இரு. டாக்டர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்னு சொல்லிட்டாரு’’ என மனைவியை, இப்போது கூடுதலாக அவளுள் வளரும் தன் ஆண் எனும் அங்கீகாரத்தையும் ஏற்றிக்கொண்டு, பைக்கில் பின்னால் வைத்துக்கொண்டு சுற்றுவதைக் குறைத்துத்தான் ஆக வேண்டும்.

கருத்தரித்துள்ள காலத்தில், முதல் மூன்று மாதங்களும் கடைசி மூன்று மாதங்களும்தான் கொஞ்சம் கூடுதல் அக்கறை தேவை. முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவைத் தடுக்க, கடைசி மூன்று மாதங்களில் குறைப்பிரசவத்தைத் தடுக்கவே இக்கரிசனம்.
பெரும்பாலான கருச்சிதைவுகள் முதல் மூன்று மாதத்தில்தான் நடைபெறுகின்றன. 12-13 வாரம் தாண்டிய பின்னர், சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள இயலும். 10-வது வாரம் அல்லது 11-வது வாரம் எதிர்பாராதவிதமாகக் கருச்சிதைவு நிகழ்ந்து, பெரும் மனவலியைக் கொடுக்கும்போது, ``Sac தெரியுதுனு சொன்னாங்களே... நான் எவ்வளவு அக்கறையாக இருந்தேன். பின் ஏன் இப்படி?’’ என்ற கதறல் இயல்புதான். இன்றைக்கு நடக்கும் கருச்சிதைவுகளில் 40 சதவிகிதத்துக்கும் மேல் ஏன் என்று காரணம் தெரியாமல் நிகழ்பவையே. `Unexplained abortion’ எனச் சொல்வர். தாயின் கர்ப்பப்பை, குழந்தை தங்கி வளர இடம் கொடுக்கும் ’ஹவுஸ் ஓனர்’ மட்டும் கிடையாது. குழந்தை வயிற்றுக்கு வெளியே வந்து, தன் முதல் அழுகையில் மூச்சை உள் இழுத்துத் தானாக சுவாசிக்கும்வரை அத்தனையும் வளர்ப்பது தாயின் ரத்தமும் மூச்சின் மூலமும்தான். இந்த அக்கறைப் பரிமாறலில், `ஏன் இப்படி அசம்பாவிதம்?’ என ஆராயும்போது, பல சிந்தனைகள் இன்றைய அறிவியலுக்குப் பிறக்கின்றன. வேகமாக செல்கள் வளர்ந்து வருகையில், ஏதோ ஒரு காரணத்தால் முதல் ஒரு சில வாரங்களில் பிழை ஏற்படுவதை உணர்ந்த கர்ப்பப்பையும், தாய்சேய் இணைப்புத் திசுவுமேகூட, இன்னும் இக்கரு வளர்வதில் தாய்க்கும் அந்தச் சிசுவுக்கும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து, இந்தச் சிதைவை ஏற்படுத்தலாம் என்னும் கருதுகோளும் ஆய்வாளர்களிடம் உண்டு.
பல அக்கறைகளுக்குப் பின்னரும் சிதைவு ஏற்படும்போது வரும் சொல்லொணா துயரத்தை, ஒரு கணம், ``ஒருவேளை இந்தக் கரு, பெருத்த நோய்க் கூட்டத்தோடு குழந்தையாக உருவாகி இருந்தால், எத்தனை சிரமம் அதற்கு ஏற்படும்? உண்மையில் அதற்குக் கூடுதல் வலியைக் கொடுக்காமல் காப்பாற்றியிருக்கிறோம். அடுத்த குழந்தை அப்படி இல்லாமல் இன்னும் ஆரோக்கியமாகப் பிறக்கட்டும்’’ என்ற நம்பிக்கையை விதைப்பதும் அந்தச் சூழலில் அவசியம்.

`இன்றைக்கு மிகச் சாதாரணமாக கருச்சிதைவுக்குக் காரணமாக இருப்பது, புரோஜெஸ்டிரான் (Progesterone) ஹார்மோன் கொஞ்சம் குறைவாக இருப்பது’ என்கிறார்கள் நவீன மருத்துவர்கள். 30 வயதைத் தாண்டிய கருத்தரிப்பு என்றாலோ, அல்லது முன்னர் கருச்சிதைவுகள் ஏற்பட்ட வரலாறு இருந்தாலோ, முதலில் அவர்கள் பரிந்துரைப்பது இந்த ஹார்மோனைத்தான். கருத்தரிப்பு உறுதியான முதல்நாள் முதலே இந்த ஹார்மோனைப் பரிந்துரைப்பது கூடுதல் பாதுகாப்பு என்பது அவர்கள் அனுமானம். `ஆனால், அந்த ஹார்மோனைப் பரிந்துரைக்கையில் சற்று நிதானம் தேவை. அவசியமில்லாமல் அது இன்றைக்கு அதிகம் பேருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது’ என்ற குற்றச்சாட்டும் நிறையவே உண்டு.
கருவளர்ச்சி என்பது, மிக மிக இயல்பான உடலின் இயக்கம். உடலின் பல்வேறு திசுக்களும் அணுக்களும் தினம் தினம் வளர்வதுபோல, தினம் தினம் எலும்புகள் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதுபோல, தினம் தினம் தோலின் கோடானு கோடி செல்கள் உதிர்ந்தும் மலர்ந்தும் வருவதுபோல கருவும் தானாக வளரும். அதற்கேற்ற தேவைகளை அழகாகத் தன் அன்னையின் ரத்தக்குழல் மூலம் பெற்றுக்கொள்ளும். `இதற்கு எதற்கு இந்த ஹார்மோன் மருந்துகள்?’ என வாதிடுவோரும் உண்டு. இந்த ஹார்மோன் தேவையா, வேண்டாமா என்பதை மருத்துவர் மட்டுமே முடிவுசெய்யலாம். மிக மிக எமோஷனலான நேரத்தில், அறிவியல் தரும் அன்பான அரவணைப்பும், அறமற்ற வணிகத்தின் இரும்புப்பிடியும் ஒன்றாக வருகையில், ஏராளமான கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் அப்பாவித் தம்பதிகள் எந்த முடிவும் எடுக்க இயலாது.
`இது உனக்கு வேணாம்பா’ என்பதையோ `இது கட்டாயம் வேணும்பா’ என்பதையோ மருத்துவர் முகம் சுளிக்காமல், கூடுதல் பொறுமையுடன், `ஏன், எதற்காக உனக்குப் பரிந்துரைக்கிறேன்’ என விளக்கியாக வேண்டும். ``நீ டாக்டரா, நான் டாக்டரா? உனக்குக் குழந்தை நிக்கணுமா, வேண்டாமா?’’ என்ற கோபக் குரல்கள் நிறையவே இப்போது இந்த மருந்துகளைக் குறித்துச் சற்று அச்சத்தோடும் அக்கறையோடும் கேட்கும் பெண்ணிடம் வந்து விழுகின்றன. ஏழெட்டு வருடங்களாகத் தவமாய்த் தவமிருந்து, மூலிகைச் சாறோ, மிகத் துல்லியமான நவீன மருத்துவ முனைப்புகளோ ஏதேனும் ஒன்றில், ``குழந்தை நின்னுடுச்சு டாக்டர். நன்றி சொல்ல வார்த்தையில்லை’’ எனக் கைகூப்பி, கண்களில் நீர் மல்க முன் நிற்கும் அவர்களுக்கு அடுத்த 39 வாரங்களுக்குக் காவல்தெய்வமும் எல்லைச்சாமியும் மருத்துவரே. ஒவ்வொரு நகர்விலும் கர்ப்பிணித்தாய் தடுமாறிவிடாமல் இருக்க, கேள்விகளை ஊன்றிக்கொண்டு சந்தேகங்களைக் கேட்கும்போது, மருத்துவரின் அன்பான, தெளிவான பதிலும் வழிகாட்டு தலும்தான் அன்னைக்கு அடுத்தபடியாக அவளுக்கான அரவணைப்பு.
அடிக்கடி நிகழும் கருச்சிதைவுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக இன்றைக்குப் பார்க்கப்படுகிறது தன் எதிர்ப்பு நோய்களுள் (Auto immune disorder) ஒன்றான `Antiphospholipid syndrome’ எனும் நோய் நிலை. இங்கே ரத்தம் உறைதல் நிகழ்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. கருவையும் தாயையும் இணைக்கும் குழலில் ரத்தப் பரிமாற்றம் உறைவதால் கருச்சிதைவு ஏற்படும். இப்போது ஆஸ்பிரின் மருந்துகளால் இதைக் கட்டுப்படுத்துகின்றனர். ஆஸ்பிரின் நவீன மருந்துகளில் மிகப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ``அப்போ எல்லாம் குழந்தைப் பிறப்பு இப்படியா நடந்துச்சு? சமைஞ்சோமா, சங்கதி நடந்துச்சா, மசக்கை வந்துச்சா, அப்புறம் மடியில குழந்தையானு எப்படி சுளுவா இருந்துச்சு. உனக்கு என்னாத்துக்கு இத்தனை டெஸ்டு, இவ்ளோ மாத்திரை...’’ எனப் பக்கத்து வீட்டுப் பாட்டியோ, தொன்மையை மட்டுமே தோளில் தொங்கப்போட்டுக் கொண்டிருப்போரோ கருத்தாகக் கேட்கக்கூடும். அவர்களுக்கான பதில், ``அன்றைக்கு இருந்த கருச்சிதைவில், சிசு மரணத்தில் இன்றைக்கு ஆயிரத்தில் ஒன்று இரண்டுதான் நடக்கிறது’’ என்பது மட்டும்தான். அப்படியானால், `மரபின் மெனக்கெடல்களில் இந்தக் கருச்சிதைவிலிருந்து காப்பாற்ற வழியில்லையா?’ என்போருக்கான பதில், `ஏன் இல்லை?’ என்பதுதான். ஆனால், மரபு சொல்லும் வழிமுறைகளை வலது கண்ணிலும், நவீனம் சொல்லும் அறிவியலை இடது கண்ணிலும் இருத்திக்கொண்டு வாழ்வை நகர்த்தவேண்டிய சூழலில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.

`பரராஜசேகரம்’ என்பது மிகப் பழைமையான ஒரு சித்த மருத்துவ நூல். `இலங்கையில் வெளியான தமிழ் மருத்துவ நூல்’ என்று இதைச் சொல்வார்கள். இந்த நூலில், பத்து மாதங்களும் கருச்சிதைவு ஏற்படாமல் இருப்பதற்காகவே எளிய மூலிகைகளைக் கொண்டும், உணவைக் கொண்டும் ஒவ்வொரு மாதமும் எதை, எப்படிச் சாப்பிட வேண்டும் என ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். (பார்க்க பெட்டிச் செய்தி). அதேபோல், `அகத்தியர் பிண்டோற்பத்தி’ நூலில் கர்ப்பம் தரித்துள்ள பத்து மாதங்களும் `பாவன பஞ்சாங்குலத் தைலத்தை’ காலையில் 10 கிராம் அளவும், இரவில் ஐந்து கிராம் அளவும் கொடுத்துவர, பிறக்கும் குழந்தை கர்ப்பச்சூடும், நோயும் இன்றி, திடமாகவும், அழகாகவும், புத்திக் கூர்மையுடையதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். தற்போது அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இந்தத் தைலம் கர்ப்பிணிப் பெண் பாதுகாப்புக்காக இலவசமாக வழங்கப்படுகிறது. நவீன மருத்துவம் பரிந்துரைக்கும் இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலச் சத்துபோல இந்தச் சத்து மருந்தையும் பெற்று உண்பது தாய்க்கும் குழந்தைக்கும் நலம்.
கருச்சிதைவுக்கு, சில நேரங்களில் கர்ப்பப்பையின் நடுவே பிறப்பிலேயே இருக்கும் தடுப்புச்சுவர் (Septum) காரணமாக இருக்கக்கூடும். சில நேரங்களில் கர்ப்பப்பையின் கழுத்துப்பகுதி பலவீனமாக இருக்க, குழந்தை வளரும்போது ரத்தப்போக்குடன் சிதைவு ஏற்படலாம். அதற்கெல்லாம் இப்போது கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியில் ஒரு தையல் போடும் சிகிச்சை மிகப் பயனுள்ளதாக ஆகிவருகிறது. இவையில்லாமல், மரபணு காரணத்தால் வரும் கருச்சிதைவுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். தாய், தந்தை இருவரில் யாராவது ஒருவர் மரபணுவில் உள்ள சின்ன சிக்கலால், தொடர்ச்சியான கருச்சிதைவு ஏற்படுவது உண்டு. இருவருடைய ரத்தத்தையும் சோதித்துப் பார்த்து, என்ன காரணம் எனக் கண்டறிந்தாலும், சிகிச்சைக்கு மருத்துவ உலகம் கையைப் பிசைந்துகொண்டுதான் விழிக்கிறது.
இயற்கையின் சூட்சுமத்தில் எல்லாவற்றையும் சில நேரங்களில் அறிந்துகொள்ளவும் முடியாது; புரிந்துகொள்ளவும் முடியாது. பிழையுடன் கருவை உருவாக்கிய கடவுள், `சிப்பியிருக்குது, முத்துமிருக்குது, திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி’ என அவர் வீட்டம்மாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கையில், இங்கே முத்துகள் அழகாக சிப்பிக்குள் வளர்க்கப்படும்; பிழையின்றி. ஆம்! சில நேரங்களில், கரு உருவாக்க மரபணுவில் சில பிழைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நபரும்கூட இயல்பாகக் கருத்தரித்து, ஆரோக்கியமாகக் கரு நின்று, மிக அழகான குழந்தை பெறுவதும் உண்டு.
கருத்தரித்த சில வாரங்களுக்குப் பின்னர் லேசான ரத்தக்கசிவைக் கண்டால், அந்தக் கர்ப்பிணிப்பெண் பதறிப்போய் மருத்துவ மனைக்குப் பாய்வதுண்டு. பல நேரங்களில் அது இயல்பான ஒன்றுதான். தாய் சேய் இணைப்புத் திசு கீழிறங்கி இருந்தால், அல்லது வேறு சில காரணங்களால் எப்போதாவது ஒரு சில துளிகள் ரத்தம் வரலாம். அதைக்கண்டு துளியும் அஞ்சத் தேவையில்லை. தொடர்ச்சியான கசிவு, அது ரத்தப்போக்காக மாறும் இயல்பு இருந்தால் மட்டுமே சிதைவு குறித்த எச்சரிக்கையும் பயமும் வேண்டும்.
கருச்சிதைவுக்கு உடல் காரணத்தைத் தாண்டி, நமக்கே உரிய ஸ்பெஷல் தமிழ்க் காரணங்கள் இங்கே கொஞ்சம் உள்ளன. ``வளைகாப்புக்கு புது பட்டுப்புடவை உண்டுல்ல... மாப்பிள்ளை சீர் செய்வாங்களா... பிரசவச் செலவு அம்மா வீட்லதானே... அப்புறம் உங்க அக்காவுக்கு இன்னும் குழந்தையில்லை, அவங்க வந்து வளையல் போடுவாங்களா, கண்டிப்பா கூப்பிடணுமா?’’ எனச் சொல்லும் கூட்டத்தை, நீதிபதி குன்காவிடம் சொல்லி, மொத்தமாக அந்தமான் ஜெயிலுக்கு அனுப்பிவிடுங்கள். கருச்சிதைவு நிகழாமல் பாதுகாக்க மட்டுமல்ல.... வயிற்றுக்குள் வளரும் அந்தச் சிசுவுக்காவது இந்தக் கூட்டம் வாழும் சமூகம் இல்லாதிருக்கட்டும்.
- பிறப்போம்...

கருச்சிதைவைத் தடுக்கும் மூலிகை மருந்து!
முதல் மாதம் - தாமரைப் பூவின் காயும், நல்ல சந்தனமும் அரைத்து, பசும்பாலில் கலக்கி, காலை 15 – 30 மி.லி தர வேண்டும். தாமரைப்பூ காய் ஃபோலிக் அமிலம்கொண்டது
2-ம் மாதம் - நெய்தற்கிழங்கு, முத்தக்காசு, அதிமதுரம், இஞ்சி இவற்றை அரைத்து, பாலில் கலந்து தரவேண்டும். (ஒரு காலத்தில் கஞ்சாவையும் இதில் சேர்த்திருக்கிறார்கள்). இந்தக் காலத்தில் வரும் வாந்தியைப் போக்க இதிலுள்ள இஞ்சியும், Dehyration-க்கு அதிமதுரமும் உதவும்.
3-ம் மாதம் - சந்தனம், தகரம், கோஷ்டம், தாமரை, அல்லி, சீந்தில் தண்டு இவற்றைக் குளிர்ந்த நீரில் அரைத்துத் தர வேண்டும்.
4-ம் மாதம் - வயிற்றுவலி, குருதிப்போக்கு ஏற்பட்டால், நெய்தல் கிழங்கு, சீந்தில்தண்டு, நிலப்பனைக் கிழங்கு, நெருஞ்சிவேர் இவற்றைப் பாலில் அரைத்துத் தரலாம்.
5-ம் மாதம் - சாரணைக்கிழங்கு, இலுப்பைப்பூ, அழிஞ்சில் விதை, தகரம், எள், நெய்தற்கிழங்கு இவற்றைப் பாலில் அரைத்துத் தர வேண்டும்.
6-ம் மாதம் - நீர்ச்சுருக்கு, வயிற்று வலி ஏற்பட்டால் ஆரைக்கீரை, நெருஞ்சில் கஷாயம் தர வேண்டும்.
7ம் மாதம் - கச்சோலம், ஆமணக்கு வேர், நெய்தற்கிழங்கு ஆகியவற்றை அரைத்து, நீரில் கலக்கி தேன் சேர்த்துத் தர வேண்டும்.
8ம் மாதம் - உடல் சோர்வு, கை கால் வலி, பசியின்மை போன்றவற்றுக்கு அதிமதுரம், தாமரை வித்து, முத்தக்காசு, விளாம்பிஞ்சு, யானைத்திப்பிலி, நெய்தற்கிழங்கு இவற்றை அரைத்துப் பாலில் கலக்கித் தரலாம்.
9ம் மாதம் - வட்டு விதையைப் பொடித்துத் தேனில் குழைத்துத் தரலாம்.
10-ம் மாதம் - கர்ப்பப்பை சுருங்கி இறுகும் வலிக்கு முத்தக்காசு, திராட்சை, நெய்தற்தண்டு, சர்க்கரை இவற்றை அரைத்துத் தேனில் குழைத்துத் தர வேண்டும்.
அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது நீண்ட அனுபவக் குறிப்பு. பல ஆயிரம் ஆண்டுகாலம் பழக்கப்பட்டு பதிவிடப்பட்டது. அதே சமயம் எல்லா கர்ப்பிணிப் பெண்ணுக்கும் பொதுவானதோ ஒரே அளவிலானதோ கிடையாது. மாறுபடக்கூடும். அருகில் உள்ள அரசு சித்த மருத்துவரை அணுகி ஆலோசித்துப் பயன்படுத்தவேண்டும்