Published:Updated:

சொல் அல்ல செயல் - 15

சொல் அல்ல செயல் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 15

அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான்

கரத்தில் மழையை ரசிக்கிறவர்களை விடவும் ரசிப்பதாகப் பாவனை செய்கிறவர்களே அதிகம். இங்கே மிகச்சிறிய மழைகூட மிகப்பெரிய அவஸ்தைகளைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும். அப்படி ஒரு மரண அவஸ்தை தருகிற மழைநாளில்தான் பூமிநாதனைச் சந்தித்தேன்.

வேலை முடிந்து பைக்கில் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மழை வலுக்க, ஏ.டி.எம் ஒன்றில் ஒதுங்கினேன். ``சாமி இப்படி வாப்பா’’ என்று கையைக் காட்டி மழைச்சாரல் அடிக்காத இடத்தில் நிற்கவைத்துக்கொண்டார் ஏ.டி.எம் செக்யூரிட்டி பூமிநாதன். அந்த அடாத மழையிலும் கையில் குடையோடு சிலர் பணமெடுக்க வருவதும் போவதுமாக இருந்தனர். ஆர்டர் ஒன்றை டெலிவரி செய்துவிட்டு மழையிலிருந்து தப்பி என்னோடு ஒட்டி நின்றான் பீட்சா டெலிவரிப் பையன் ஒருவன்.

சொல் அல்ல செயல் - 15

எல்லா ஏ.டி.எம் செக்யூரிட்டிகளும் ஒரே நபர்தானோ எனச் சில நேரங்களில் நினைப்பேன். எல்லோருமே முதியவர்களாக இருப்பார்கள். எல்லோருமே பெரிய மீசை வைத்தவர்கள். யாராவது கொள்ளையடிக்க வந்தால், அதிக சத்தத்தோடு விசிலடிக்கவும்கூட முடியாத அளவுக்குப் பலமின்றி இருப்பார்கள். கூர்ந்து கவனித்தால், எல்லோருமே தனிமையின் துயரைக் கண்களில் தேக்கிவைத்து இருப்பார்கள். ஆனால், எப்போதும் கோபம் நிறைந்தவர்போல் போலியாகவேணும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.   எல்லோரிடமும் `இந்த வயதிலும் உழைக்கிறேன் பார்’ என்கிற பெருமை இருக்கும். பூமிநாதனுக்கு சர்வ குணங்களும் சரியாக இருந்தன.

பூமிநாதன், ஏ.டி.எம்-முக்குள் நுழைகிறவர்களிடம், ``சார் செருப்பைக் கழட்டிட்டுப் போங்க, குடையை வெளியே வெச்சிடுங்க’’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் அவரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் பள்ளியொன்றின் ஆசிரியராக இருந்திருப்பார் என்று நினைத்தேன். பூமிநாதன் யார் உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்தாலும், உள்ளே சென்று ஒரு மாப்பால் ஈரத்தைத் துடைத்துவிட்டு, வெளியே வந்து நின்றுகொண்டார். தான் பணியாற்றுகிற இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்கிற ஆதிகாலத்து வழக்கம் அவருக்கு இருந்திருக்க வேண்டும். அல்லது, அதுதான் அவர் உறங்கும் இடமாகக்கூட இருக்கலாம்.

இரண்டுமூன்றுபேர் ஏ.டி.எம்-முக்கு வந்துவிட, ஒவ்வொருவரிடமும் `செருப்பைக் கழட்டி வெளியே வெச்சிட்டுப் போங்க, குடையை மடக்கி வெளியே வைங்க’ என சொல்லிக்கொண்டிருந்தார். ஒருவர் மட்டும் அவரை முறைத்துக்கொண்டேயிருந்தார். அவரிடம் பூமிநாதன் செருப்பை வெளியே விடச் சொன்னதுதான் தாமதம், காத்திருந்தவர்போல அந்த மனிதருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘`நான் ஏன் கழட்டணும். அதெல்லாம் முடியாது’’ என்றார்.  பூமிநாதன் அப்படியே விட்டிருக்கலாம். ‘`இல்லைங்க, மழையால உள்ளே சேறும் சகதியுமா ஆகிடும்ல... அதான், கழட்டிடுங்க’’ என்றார் அழுத்தமாக. அது புனைந்துகொண்ட வீரமாகத் தெரியவில்லை. பூமிநாதனின் குரல் ஒரு ராணுவ வீரனுடையதைப்போல் இருந்தது.

‘`நீ என்ன எனக்கு ஆர்டர் போடுற, பேங்க் மேனேஜரா நீயி... செக்யூரிட்டிதானே, போய் ஒரமா நில்லு. இந்த ஆர்டர் போடுற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காத’’ என்றார். பூமிநாதன் ஆரம்பத்திலிருந்தே பொறுமையாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், ஒருமையில் பேச ஆரம்பித்ததும், அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘`அப்படில்லாம் மரியாத கொறவாப் பேசாதீங்க... தப்பாகிடும்’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டார். அது உயரதிகாரியின் உத்தரவைப்போல இருந்தது.

ஆனால், அது அந்தக் கோபமனிதரை இன்னும் எரிச்சலாக்கிவிட்டது. ‘`உன் மயித்துக்குக் கோபம் வேற வருதா, என்னடா புடுங்கிடுவ... சொல்டா... நீ எந்த செக்யூரிட்டி ஏஜென்ஸி? உன் பேர் என்ன? நீ கெட்டகேட்டுக்கு உனக்கு மரியாதை வேற புடுங்கணுமா? சாவடிச்சிடுறேன் உன்ன’’ என்று படபடவெனக் கேட்டுவிட்டு யாருக்கோ போனைப்போட்டார். அந்த வங்கியின் மேலாளர் எண்ணை வாங்க ஆரம்பித்தார். அதுவரை சாதாரணமாக நின்ற பூமிநாதன் சரேலென பதற்றமானார்.

பூமிநாதன் மன்னிப்புக் கேட்க ஆரம்பித்தார். ``உள்ளே சேறாகிடும் சார், சுத்தம் செய்யச் சிரமமா  இருக்கு சார், அதனால்தான் சார், மன்னிச்சிடுங்க சார். இனி யார்கிட்டவும் அப்படி கேட்கலை. தயவுசெஞ்சு கம்ப்ளைன்ட் பண்ணாதீங்க, கோபப்பட்டது தப்புதான், மன்னிச்சிடுங்க’’என்று பலவிதங்களில் சொல்லிப்பார்த்துவிட்டார். அந்த மனிதனோ ஆயுதங்கள் ஏதுமின்றி ஒரு முதியவரின் தொண்டை நரம்புகளைச் சரசரவென அறுத்துக்கொண்டிருந்தான்.

‘`உனக்கும் இந்த பேங்குக்கும் என்ன சம்பந்தம்? செக்யூரிட்டின்னா வெளியே நிக்கணும். கஸ்டமர்கிட்ட ஆர்டர் போடுற. உனக்கெல்லாம் கோபம் வருது, ம்ம்...கோபம்...’’ அந்த ஆள் பேசிக்கொண்டே இருந்தார்.
பீட்சா கடைப் பையன் கோபமனிதரைச் சமாதானப்படுத்த முயன்றான். ஆனால், அந்த ஆள் விடுவதாக இல்லை. அவர் எங்கள் மீதும் கோபமாகப் பேசினார். முதியவர் நடுநடுங்கிப்போய் ``சார்... சார்’’ என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். அந்த மனிதனோ, போனில் மீண்டும் மீண்டும் பட்டன்களை  அழுத்திக்கொண்டே இருந்தார். பூமிநாதன் அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு ``சார் ப்ளீஸ் சார், நான் சொன்னது தப்புதான்.
வேணும்னா, ரெண்டு அடி வேணும்னாலும் அடிச்சுக்குங்க, கம்ப்ளைன்ட் மட்டும் பண்ணிடாதீங்க, ரொம்பப் பிரச்னை ஆகிடும். ப்ளீஸ் சார்’’ எனக் கெஞ்சியது என்னவோபோல் இருந்தது. பூமிநாதனின் குரல் ஈனத்தொனியில்  பசிக்கு அழும் குட்டிப்பூனையைப்போல ஒலித்தது.

‘`டேய் கையை விட்றா... விட்றா கைய... போடா... அப்படிப் போடா...’’ என்று விரட்ட, முதியவர் தள்ளிப்போய் நின்று, ‘`சார் ப்ளீஸ் கம்ப்ளைன்ட் பண்ணாதீங்க’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்.  முதியவருக்கு உதவ முடியாமல் அதிர்ந்துபோய் இரண்டு பேரும்  நின்றுகொண்டிருந்தோம்.

ஆனால், அந்த ஆள் நேரம் ஆக ஆக இன்னும் இன்னும் திட்ட ஆரம்பித்தார்.  செக்யூரிட்டியிடம் ‘`ஐயா, அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டாங்க. பயப்படாதீங்க...’’ என்று  ஆறுதல்படுத்த முயன்றோம்.  ஆனால், அவர் அந்த மனிதனிடம் கருணைக்காக மன்றாடிக் கொண்டிருந்தார். முந்தைய தண்டனைகளின் பதற்றம் அவருடைய உடலெங்கும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. வெளியே மழை மேலும் வலுத்திருந்தது. அந்த கோபமனிதருடைய இந்த ஆவேசம் அவசியமற்றதாக இருந்தது. ஆனால், அந்த மனிதர் இந்தச் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தவரைப்போலத் தெரிந்தார். பழைய பகையொன்றைத் தீர்த்துக்கொள்கிற ஆவேசம் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஒருவழியாக அந்த மனிதர் அழைத்த எண் கிடைத்துவிட, ``ஹலோ சார், நான் உங்க ஏ.டி.எம்-ல இருந்து பேசறேன்...’’ என்று சொல்லிக்கொண்டிருக்க,  பூமிநாதன் சடாரென அவருடைய கால்களைப் பிடித்துக்கொண்டார். கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அங்கிருந்த யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. தன் கைகளைக் கூப்பி அண்ணாந்து பார்த்துக்கொண்டு ‘`சார்...’’ என்றார்.

 அந்தக் கோப மனிதர் முதன்முறையாக அந்த இரவில் பதறி வெலவெலத்துப்போனார்.

``ஹலோ... ஹலோ...’’ எனப் பின்னோக்கி நகர்ந்தார். போனை அணைத்துவிட்டார். அரை நொடியில் அவனுடைய கோபமெல்லாம் தணிந்துவிட்டிருந்தது. ``ஹலோ எழுந்திருங்க, எழுந்திருங்க’’ என்று அவரைத் தூக்கினார். அவர் எழவும், ``ச்சே...’’ என்றுமட்டும் சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து விறுவிறுவெனக் கிளம்பிவிட்டார்.

சொல் அல்ல செயல் - 15

ஏ.டி.எம்-முக்கு வெளியே பூமிநாதன் அப்படியே அமர்ந்துவிட்டார். மழை தன் வேகத்தைக் குறைத்திருந்தது. அவர் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். ஏ.டி.எம்-முக்குள் இருந்த சிலர் எட்டி எட்டிப்பார்த்தனர்.

பூமிநாதனின் கண்கள் கலங்கியிருந்தன. மழை நின்றிருக்க, ஒதுங்கியிருந்த பலரும் அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வண்டிகளில் ஏறி வீடுகளை நோக்கிக் கிளம்ப ஆரம்பித்தனர். நானும் பீட்சா பையனும் மட்டும் அவரோடு அமர்ந்திருந்தோம். 

அவர் பெருங்குரலெடுத்து அந்த இரவில் அழத்தொடங்கினார். அது அவருடைய முகத்துக்கும் உடலுக்கும் கொஞ்சம்கூட பொருந்தாத அழுகையாக இருந்தது. அவர் நிச்சயமாக அந்த மனிதனின் கால்களில் விழுந்திருக்கத் தேவையில்லை. ஆனால், அவர் விழுந்துவிட்டார்.  ஆனால் அவருடைய அழுகை அந்த அவமானத்திற்கான அழுகை இல்லை என்று தோன்றியது. பீட்சா பையன் அவசரமாகத் தண்ணீர் கொடுத்தான். கண்களைத் துடைத்துக்கொண்டார். முகத்தைக் கழுவிக்கொண்டார். உள்ளே ஏ.டி.எம்-மை மாப்பால் சுத்தம் செய்தார். வெளியே வந்தவரை, ``வாங்க... ஒரு டீ சாப்பிடுவோம்’’ என அருகில் இருந்த டீக்கடைக்கு அழைத்துச்சென்றோம்.

எப்படிப்பட்ட மன அழுத்தத்தையும் ஒரு டீயும் ஆறுதலான சில சொற்களும் கரைத்துவிடும். ‘`விடுங்கண்ணே... உங்க கஷ்டம் அவங்களுக்கு என்ன தெரியும்?’’ அந்த இரவில் அவரைச் சமாதானப்படுத்த ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தேன்.

‘`ஏற்கெனவே ஒருத்தர் கம்ப்ளைன்ட் குடுத்துட்டுப் போய்ட்டாரு. அந்த ஆள் நுழையும்போது நான் அங்க இல்ல, அவர் பணம் எடுக்கும்போது வேற யாரோ உள்ள வந்து நின்னுட்டாங்கனு ஒரே சண்டை.

ஏ.டி.எம்-ல செக்யூரிட்டி வேலை பார்க்கிறவனுக்கு மூத்திரம் வந்தா, எங்கே போவானு யாரும் யோசிக்கிறதில்ல, அதுக்காகத்தான் வெளியே போயிருந்தேன். அதுக்குள்ள கஸ்டமர் கோபப்பட்டு  கம்ப்ளைன்ட் பண்ணிட்டார். அந்த மாசம் ஏஜென்ஸிக்கு பேமென்ட்டை நிப்பாட்டிட்டாங்க பேங்க்ல. எல்லாருக்கும் சம்பளம் லேட்டாகிடுச்சு, பெரிய பிரச்னை ஆச்சு... அதான் கொஞ்சம் பதறிட்டேன்’’ அவர் பேசிப் பேசி தன்னை அந்த  அசம்பாவித நிகழ்விலிருந்து விடுவித்துக்கொள்வதை உணர்ந்து நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

``இந்த ஏஜென்ஸியில வேலை பார்க்கிற ஒவ்வொருத்தனுக்கும் சம்பளம் எவ்ளோ முக்கியம்னு எனக்குத் தெரியும். எல்லாம் பூட்ட கேஸுங்க, வீட்ல வெரட்டிவிட்டது, வேலை பார்த்தே ஆகணும்னு நிர்பந்திக்கப்பட்டது, என்னை மாதிரி வீட்ல வெளிய கொஞ்சநஞ்ச மரியாதையையாவது காப்பாத்திக்கணும்னு வேலை பார்க்க வந்ததுக... நான் கறிக்கடை வெச்சிருந்தேன். வாதம் வந்து ஒரு கை தூக்க முடியாம போய்டுச்சு. அதான், இந்தப் பொழப்பு...

அந்த ஆள் கோபப்பட்டது என் மேலயே இல்லப்பா, யாரோ செக்யூரிட்டி எப்பவோ பண்ணின ஏதோ ஒரு காரியத்துக்காக... நாம எல்லோருமே அப்படிப் பண்றவங்கதான், யாரோ கான்ஸ்டபிள் எப்பவோ என்னை மிரட்டினான்னு எல்லா போலீஸ்காரன் மேலேயும் ஒரு கோபத்தோடவே வாழ்நாள் பூரா இருந்திருக்கேன். ஒருக்கா சில அலிங்க சேர்ந்து என்னை நடுரோட்ல வெச்சு மிரட்டிக் காசு புடுங்கிட்டாங்க, அதுல இருந்து அலிகளைப் பாத்தாலே கோபம் கோபமா வரும், அடிச்சு உதைக்கணும்னு மனசு துடிக்கும், சில முறை அவங்களை திட்டி விரட்டிருக்கேன். ஆனா, யாரோ ஒருத்தர் பண்ணதுக்கு அவங்க என்ன செய்வாங்க? இருந்தாலும் கோபம் வரும். ஏன்னு சொல்லத்தெரியல.

நம்ம கோபம் இருக்கே... அது ஒரு முட்டாள் பிராணி, அது எப்பவும் இப்படித்தான். எப்பவோ நடந்ததுக்கெல்லாம் இப்போ துடிக்கும்; யாரோ பண்ணின தப்புக்கு இன்னொருத்தர் மேல சீறும்; அர்த்தமில்லாம ஆடி அடங்கும்’’ பக்குவப்பட்ட மனிதரின் சொற்கள் அவை.

‘`இங்க எல்லோராலேயும் சட்டுனு கோபப்பட்டுட முடியாது சாமி. தனக்குக் கீழ இருக்கிறவன் கோபப்படுறதை இங்கே யாராலேயும் அவ்வளவு சுலபமா ஏத்துக்கவே முடியாது. அவ்வளவுதான் விஷயம். என்னை மாதிரி கையாலாகாதவன் இதையெல்லாம் சகஜமா ஏத்துக்கணும்’’ வலி நிறைந்த சொற்களை டீயை குடித்துக்கொண்டே சொன்னார். அந்த இரவு முழுக்க அவர் பேசிக்கொண்டேயிருந்தார்; மணிக்கணக்கில். நாங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தோம். ஆறுதல் என்பது சொல்வது மட்டும் அல்ல, கேட்பதும்தான்!

இங்கே இன்னார்தான் கோபப்பட வேண்டும். இவ்வளவுதான் கோபப்பட வேண்டும் என்று நம் கண்களுக்கு புலப்படாத ஒரு கணக்கிருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட சமயங்களில் மட்டும்தான் என்கிற அளவுகோல்கள் உள்ளன. அதை மீறிவிடக்கூடாது. இதே செக்யூரிட்டி என் மீது கோபப்பட்டிருந்தாலும், நான் அந்த கோபமனிதரை விடவும் மோசமாக ரியாக்ட் செய்திருப்பேன்!

நமக்குக் கீழே இருக்கிறான என நாம் நினைக்கிறவனுக்கு சுரணையே இருக்கக் கூடாது. அவன் நம்மை எதிர்த்து ஒரு சொல்லும் உதிர்த்து விடக் கூடாது. அப்படி மீறி எதிர்ப்பவனை எப்பாடுபட்டாவது அடக்கி ஒடுக்குவோம். தனக்குக் கீழிருப்பவனின் கோபங்களை ஏற்றுக்கொள்ள முடியாத மனங்களிலிருந்துதான் சண்டைகள் உருவாகின்றன. அதனால்தான் சமூகம் நம் மீது செலுத்துகிற அழுத்தங்களுக்கான எதிர்வினைகளைக்கூட எளிய மனிதர்கள் மேல் கொட்டுகிறவர்களாகவே இருக்கிறோம்.

அதிகாரக் கணவன்மேல் இருக்கிற வன்மத்தை எல்லாம் குழந்தைகளின் முதுகுகளில் அடித்துத் தீர்க்கிற மனைவிகள், தமிழ்நாட்டில் மட்டுமே சில கோடிகளாவது இருப்பார்கள். ஹோட்டல் சர்வர் களிடம் சொந்தக் கோபங்களைக் வெளிப்படுத்தி ஆறுதல் அடைவோம். எந்தெந்தக் கோபத்தையோ மாணவர்கள் மேல் வெளிப்படுத்துகிற ஆசிரியர்கள் உண்டு.அப்பிராணி டிரைவர்களிடம், வாட்ச்மேன்களிடம், வேலைக்காரப் பெண்களிடம், உதவிக்கேட்டு வருகிறவர்களிடம் எல்லாம் நமக்கு வருகிற கோபங்கள் எப்போதுமே மிகையாகவும், மனிதாபிமானமற்றதாகவும் இருப்பது தற்செயலானதல்ல.

ஆனால், நாம் தாழ்ந்தவர்களாக நினைக்கிற அவர்கள் நம்மைக் கொஞ்சமாகக் கோபமாகப் பார்த்தாலும் அதை ஏற்றுக்கொள்கிற, அதைப் புரிந்துகொள்கிற மனது ஏன் நமக்கு வாய்ப்பதில்லை? நாம் அதிகாரம் செலுக்கிறவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் கோபம் எப்போதும் நம் சமூகத்தின் கண்களுக்குக் காட்டுமிராண்டித் தனமாகவும் தீவிரவாதமாகவும் தெரிவதெல்லாம் அப்படித்தான் இல்லையா? 

அலுவலகம் ஒன்றில், பதினைந்து ஆண்டுகளாகப் பணியாற்றும் தனலட்சுமி,  எப்போதும் நடக்கும்போது தனியாகவே பேசிக்கொண்டே நடப்பார். தன் கணவர்மீது, பிள்ளைகள்மீது, தன் பெற்றோர்கள்மீது, தன் அலுவலக சகாக்கள்மீது என ஏராளமான விமர்சனங்கள் அவருக்கு உண்டு. எதையுமே யாரிடமும் வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். காரணம், அவர் உடலளவிலும் மனதளவிலும் பலவீனமானவர். எதிராளிகளின் கோபத்தைத் தாக்குப்பிடிக்க முடியாதவர். எப்போதும் அடுத்தவர் கோபங்களை வாங்கிக்கொள்கிற வாழ்க்கையே வாய்த்திருப்பதாக நினைப்பவர்.

அதனால், தனக்குத்தானே பேசிக்கொண்டே இருப்பார். தன்னைத்தானே திட்டிக்கொள்வார். தன்னிடமே அந்தக் கோபம் அத்தனையையும் காட்டிக்கொள்வார். சமைக்கும்போது தன் கைகளில் தானே சூடுபோட்டுக்கொள்வார். நடக்கும்போது ரத்தம் வர, கற்களில் விரலை மோதிக்கொள்வார். ஆனால், அவர் மனநோயாளி அல்ல.

இங்கே தனக்குத்தானே பேசிக்கொண்டு, அழுதுகொண்டு, கோபமாகத் திட்டிக்கொண்டும் சாலைகளில் நம்மைக் கடக்கிற பல ஆயிரம் நபர்களில் அவரும் ஒருவர். பலவீனமான மனிதர்களின் கோபங்கள் தங்களுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. அவை உள்ளுக்குள்ளேயே வெடித்துத் தன்னைத்தானே அழித்துக் கொள்கின்றன. அல்லது பித்துநிலையை எட்டித் தன்னை உலகத்திலிருந்து விடுவித்துக்கொள்கின்றன. பல நேரங்களில் நம் சமூகக்கோபங்களையும் அப்படித்தான் நமக்குநாமே தீர்த்துக்கொள்கிறோம். 

அச்சமும் ஆணவமும் நிரம்பிய கோப்பையாகவே, நம் கோபம் என்னும் உணர்வு நம்மில் நிறைந்து இருக்கிறது. அச்சம்தான் யார்மீது கோபம் கொள்ள வேண்டும், எந்த அளவில் கோபம் கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கிறது. அதன் உள்ளே அடர்ந்திருக்கும் ஆணவம்தான் யார் நம்மீது கோபம் கொள்ள வேண்டும், எந்த அளவிற்குக் கோபம் கொள்ளலாம், அனுமதிக்கப் பட்ட அளவு என்ன என்பதையெல்லாம் நிர்ணயிக்கிறது.

கோபம்தான்,  சமூக மாற்றங்கள் அனைத்துக்கு மான ஆணிவேர். இங்கே மாற்றத்தை உருவாக்கிய ஒவ்வொரு கலகக்குரல்களுக்குப் பின்னாலும் சுயக்கட்டுப்பாடுள்ள கோபம்தான் இருந்திருக்கிறது. அத்தகைய கோபம் எப்போதும் அதிகாரத்துக்கு எதிராக மட்டும்தான் தன் குரலை உயர்த்துவதாக இருந்திருக்கிறது. அது தனக்குக் கீழிருப்பவனிடம் எப்போதும் குரலை உயர்த்தி மிரட்டியதில்லை. நம் கோபமான குரல்கள் யாரை நோக்கி எழுகின்றன?

- கேள்வி கேட்கலாம்...