Published:Updated:

உயிர்மெய் - 16

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

ருத்தரிப்புக்காக ஆண்டுக்கணக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் நாள்களில் பெண்ணுக்கு எப்போதும் குழப்பத்தையும், வலியையும், பயத்தையும் ஒரே நேரத்தில் தரும் விஷயம், அதற்காக மேற்கொள்ளவேண்டிய சோதனைகள். ஆணின் வலி, பெரும்பாலும் விந்தணுக்களைச் சோதிக்க எடுக்கும் சோதனையோடு அநேகமாக முடிந்துவிடுகிறது.

சீரான மாதவிடாய், மகிழ்வான உடலுறவு என இருந்தும்,  இன்னும் புது உயிர் பிறக்கவில்லை என்னும்போது, மறுபடி மறுபடி ஆய்வுக்குள்ளாக்கப்படுவது அநேகமாகப் பெண்களே!. இன்னும் சொல்லப்போனால், கர்ப்பப்பையை எதிர்த்தரப்புக்குத் தள்ளிவிட்டுவிட்டதாலேயே நிறைய வலிகளைப் பெண்ணுக்குப் பிரத்யேகமாக ஆக்கிவிட்டது ஆணினம். இன்றைக்குக் கருத்தரிப்புக்கு உதவிசெய்யும் பல மருத்துவமனைகளுக்குள் நுழைந்தவுடன் கொடுக்கப்படும் முதல் வலி, ``மறுபடி முதல்லேர்ந்து அத்தனை சோதனையையும் பார்த்தாக வேண்டும்’’ என்கிற வணிகக் கண்ணிதான். 

உயிர்மெய் - 16

``இவ்வளவு பெரிய ஃபைல் வெச்சிருக்கோம். இரண்டு வருஷமா செஞ்ச அத்தனை டெஸ்ட்டும் இருக்குதுங்க... இப்ப ஏன் புதுசா டெஸ்ட்?’’ எனக் கேட்டதும், ``இப்ப எப்படின்னு தெரியணும். மேல் (Male) பேக்கேஜ் இவ்வளவு... ஃபீமேல் பேக்கேஜ் இவ்வளவு... மொத்தமா கேஷ் கவுன்ட்டர்ல கட்டிடுங்க’’ என அழுத்தமாகச் சொல்லும் வரவேற்பாளினிகளைக் கொண்டவைதான் அநேக மருத்துவமனைகள். `ஒழுங்கா அன்னிக்கே காஷ்மீர் பேக்கேஜ், காங்க்டாக் பேக்கேஜ்னு எதுக்காச்சும் போயிருந்தாகூட இவ்வளவு செலவாகியிருக்காது. போனஸா பிள்ளைகூட இந்நேரம் பிறந்து, எல்.கே.ஜி. போயிருக்கும். ம்...’ என அவனுக்குத் தோன்றும். அந்த மைண்ட்வாய்ஸைக் கேட்ட அவனின் அம்மணி, திரும்பி லேசாக முறைத்து, ``ஏன் யோசிக்கிறீங்க... அத்தைதானே அனுப்பிச்சாங்க...அவங்க நாத்தனார் பேத்திக்கு இங்கேதானே கன்சீவ் ஆச்சாம். பே பண்ணுங்க’’ எனச் சொல்லி நகர, பேய் முழியுடன் பணத்தைக் கட்டியதும், சோதனைச்சாலை வேதனைகள் தொடங்கும்.

 ``இன்னைக்கு என்ன டேட்?’’ - இது அநேகமாக எல்லா மகளிடமும் கேட்கக்கூடிய முதல் கேள்வி. ஒரு பெண்ணுக்குப் பிரச்னைக்குரிய வலி தரக்கூடிய கேள்வி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். எல்லோரையும்போல, `வருடத்துக்கு 12 மாதங்கள்; மாதத்துக்கு 30-31 நாள்கள்’ என்றுதான் அவளும் சொல்லியிருக்கக்கூடும்... ஒருவேளை, கருத்தரிப்பு மட்டும் கொஞ்ச வருடங்கள் தாமதிக்காது இருந்திருந்தால். என்றைக்கு இப்படிக் குழந்தை வரம் வேண்டி, அரசமரம் முதல் ஆஸ்பத்திரி உரம் வரை தேடித் திரிய ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து, ``இன்னைக்கு எத்தனையாவது நாள்?’’ என்றவுடன், ``போன மாசம் எப்போ வந்துச்சு?’’ என சில படித்த பெண்கள் புருவத்தை உயர்த்தி யோசிப்பார்கள். ஸ்மார்ட்போனிலேயே கம்பெனி, குடும்பம், குதூகலம் அத்தனையும் நடத்துவோர் மாதவிடாய்க் கணக்கீட்டு ஆப்-ஐ போனில் அவசரமாக நோண்டி, விரித்துப் பார்ப்பார்கள். கிராமத்துப் பெண், விரலை மடக்கி எண்ணி, ``இந்த மாசம் நிக்கலை. அப்படின்னா, தலைக்கு குளிச்சதிலிருந்து இன்னைக்கு எட்டாவது நாள்’’ என்பாள்.

இந்தக் கேள்வியை மருத்துவ உலகம் கேட்பதற்குக் காரணம், தற்போது எந்த ஹார்மோன் அவளின் கருத்தரிப்பு நிகழ்வுக்கென மெனக்கெட்டு வருகிறது என்பதைத் தோராயமாக அறியத்தான்.

உயிர்மெய் - 16

பெண்ணின் ஹார்மோனைக் கணக்கிடுவதும், பெண்ணின் மனதைக் கணக்கிடுவது மாதிரி கடினமானதுதான். `எல்லாம் சரியாத்தானே நடக்குது...கருத்தரிப்பு தடைபட என்ன காரணம்?’ என தங்கமெடல் வாங்கிப் படித்த மருத்துவருக்குக்கூடத் தலைகால் புரியாமல் இருப்பது உண்டு. சினைமுட்டையின் அளவு, வளர்ச்சி, எண்ணிக்கை, அதன் நகர்வு என ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒவ்வொரு ஹார்மோன் உட்கார்ந்திருக்கும். அதை மிகச் சரியாகக் கணக்கிடுவதில் இன்றுவரை சில நுணுக்கங்கள் பிடிபடுவதில்லை. ``அதுக்குத்தான் நான் சொன்னேன்... இதெல்லாம் அரைவேக்காடு சயின்ஸ்; அந்த அமேஸான் காட்டுப்பழத்தையும், ஆண் கரடியின் வலது கால் நகத்தையும் எடுத்து வரணும். அதுக்கு ரெண்டரை லட்ச ரூபாயாகும்’’ எனச் சொல்லும் முழுவேக்காடுகளை முடிந்த வரை தள்ளிவைத்துவிட்டு, அறிவியலின் உண்மையையும் மரபின் அனுபவத்தையும் துளியும் குறைவுபடாத அறத்தோடு அணுகித்தான் ஆக வேண்டும்.

`ஆன்டி முல்லேரியன்’ (Anti-Mullerian) எனும் ஹார்மோன், கருத்தரிப்புக்கான சிகிச்சையில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு. சினைப்பையில் ஆயிரக்கணக்காக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் உயிர் உருண்டைகள் கணிசமாக இருக்கின்றனவா, கருத்தரிக்க வாய்ப்புள்ளதா என்பதைச் சொல்லும் நவீன மருத்துவச் சோதனையில் மிக முக்கியமான ஆய்வு இது. நீண்ட நாள்களாகக் கருத்தரிப்புக்குக் காத்திருக்கும் 34-36 வயதுக்கு மேற்பட்ட மகளிரில் இந்தச் சோதனை சரியான வழிகாட்டுதலைக் கொடுக்கும். ரத்தத்தில் அளவிடப்படும் இந்தச் சோதனையில் `வங்கி இருப்பு எவ்வளவு?’ எனத் தெரிந்துகொள்வதுபோல, முட்டை இருப்பைக் கிட்டத்தட்ட அனுமானிக்கலாம்.

உயிர்மெய் - 16

இந்தச் சோதனையிலும் சின்ன சிக்கல் உண்டு. சிறுவயதுப் பெண்களுக்கு இந்தச் சோதனை அவ்வளவாக அவசியமில்லை. 25-27 வயதில் எதுக்கும் இருக்கட்டும் என அதிகப்பிரசங்கியாக இதைச் சோதித்துப் பார்த்துவிட்டு, `ஹய்யா... முட்டை கையிருப்பு நிறைய’ எனச் சில நேரம் குதித்துவிட முடியாது. அதிகம் வளர்ச்சி பெறாத குட்டியூண்டு சினைமுட்டையின் கிரானுலோஸா செல்கள் மூலமாகத்தான் இந்த ஹார்மோன் சுரக்கும். நிறைய வளர்ச்சி பெறாத குட்டியூண்டு செல்கள் இருக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி எனும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையில் இந்த ஹார்மோன் அளவு நிறைய இருக்கும். அங்கும் கருத்தரிப்பு தாமதிக்கும். அதனால், அங்கே அமைதியாக நாம் இருந்துவிட முடியாது. அந்த முட்டை வளரவிடாத இடையூறுகளான, உடல் எடை அதிகமாக இருப்பது, பசிக்கும்போதெல்லாம் பீட்சா தின்பது, சந்தோஷ் சுப்ரமணியத்தோடு நடு இரவில் ஐஸ்க்ரீம், குல்ஃபி என அடித்து முழக்குவது போன்ற களேபரங்களை விலக்கிவிட்டு, கருமுட்டைகளை முழுதாக வளரவிட வேண்டும்.

வயது அதிகமாக அதிகமாக, முட்டை இருப்புக் குறைவதை இந்த ஆன்டி முல்லேரியன் ஹார்மோன் சோதனை கொஞ்சம் சரியாகக் கொடுத்துவிடும். வயது 44-45ஐ எட்டுகிறது, இந்த ஹார்மோன் மிகக் குறைவாக (0.5-க்கும் கீழாக) இருக்கிறதென்றால், தேவையில்லாமல், மருந்தைக் கொடுத்து கர்ப்பப்பை சினைப்பையைப் பிழிந்து காயப்படுத்தக் கூடாது. முட்டையில்லாத அந்தப் பைகளில் முட்டி மோதும் ஹார்மோன் மருந்துகள் வேறு பக்கவிளைவுகளைக் கொடுத்துவிடக்கூடும்.

உயிர்மெய் - 16

  ``எதுக்குத் தாமதிக்கிறீங்க? வாங்க, இக்சி பண்ணலாம். ஈ.எம்.ஐ. வசதி உண்டு’’ எனச் சொன்னாலும், ``அதெல்லாம் சுத்த வியாபாரம், முட்டையே இல்லாட்டி என்ன? என் 48 நாள் மருந்து சாப்பிடுங்க. குட்டிப் பாப்பாவை உண்டாக்கும் பாருங்க. என்ன... கொஞ்சம் செலவாகும்’’ எனும் வியாபாரமும் எட்ட நின்று எச்சரிக்கையாகப் பார்க்கப்படவேண்டியவை.

ஆன்டி முல்லேரியன் ஹார்மோன் உள்ளிட்ட சில ஹார்மோன்களை வைத்துக் கொஞ்சம் மேலே சொன்னவற்றில், `எந்த வழி என் வழி?’ எனக் கணக்கிட முடியும். ஆன்டி முல்லேரியன் ஹார்மோனை மாதத்தில் எந்த நாளும் கணக்கிடலாம். ஆனால்,வேறு சில ஹார்மோன்களை அப்படிக் கணக்கிட முடியாது. குறிப்பாக, சினைப்பையின் முட்டைகளைத் தூண்டும் ஹார்மோன் (Follicle stimulate hormone). மாதவிடாய் தொடங்கி, மூன்றில் இருந்து ஐந்தாவது நாளில் இதைக் கணக்கிடுகையில், இந்த ஹார்மோன் அளவு மிக அதிகமாக இருந்தாலும், நாம் மாதவிடாய் முடிவை நோக்கிச் செல்கிறோம் அல்லது, Premature ovarian failure என்றும் எடுத்துக்கொள்ளலாம். மிகக் குறைவாக இருப்பது, நீர்க்கட்டிகள் முதலான சில பிரச்னைகளை அடிக்காட்டும். `FSH கூடிருச்சா... அப்போ இனி எனக்குக் கருத்தரிக்க வாய்ப்பில்லையா? AMH குறைஞ்சிருச்சா... அப்படின்னா முட்டையில்லையா?’ என உடைந்துபோய்விட வேண்டியதில்லை. தடாலடியாக ஹார்மோன்கள் ஊசியைத் தூக்கவும் வேண்டியதில்லை.   

உயிர்மெய் - 16

``பித்தக் குறைவு மேலோங்கி இருக்கிறது. கபம் சூழ்ந்துபோய் முட்டை வெடிக்கத் தேவையான பித்தம் கொழுந்துவிடாமல் தடுக்கிறது. தடையாக உள்ள வாயுவைச் சற்று விலக்கி, கூடியுள்ள கபத்தைக் குறைக்க கொஞ்சநாள் நெருஞ்சிலோ, நொச்சியோ, மலைவேம்போ, விஷ்ணு கிரந்தியோ, அசோகப்பட்டையோ பயன்படுத்திப் பார்க்கலாம். முட்டை வளரும். மறைந்துகிடக்கும் நுண்ணிய ஃபாலிக்கிள் உசுப்பேறி உற்சாகமாக மேலே வரும்’’ என மரபு சித்த மருத்துவன் சொல்லும்போது... ``என்ன இது? பட்டை, வேரு, தழைன்னு சொல்லிக்கிட்டு...’’ என நவீனம், பல நேரங்களில் மரபைத் துச்சமாக உதாசீனப்படுத்துகிறது. `அந்தப் பட்டைக்குள் ஈஸ்ட்ரோஜனை உசுப்பும் பீனால்கள் உள்ளன. அந்த முள்ளுக்குள் புரோஜெஸ்டிரானைப் புரட்டிப்போடும் ஹார்மோன்கள் பொதிந்துள்ளன. அந்த இலையிலும் தழையிலும் இன்னும் பெயரிடப்படாத  ஆனால், முட்டையை வளர்த்து நகர்த்தும் வேதிச்சரக்குகள் மிக நுண்ணிய அளவில் உள்ளன’ என நவீன மருத்துவ விஞ்ஞானியின் சித்தப்பனும் மாமனும்தான் அங்கிருந்து இந்தச் செய்தியையும் அறிந்து சொல்லிவருகிறார்கள். பல நேரங்களில் இந்தச் செய்திகளைத் துளியும் உள்வாங்காமல் நவீனம் உதாசீனப்படுத்துவது நம் நாட்டின் வேதனையின் உச்சம். சாதி ஒருமைப்பாடு, மத ஒருமைப்பாடு மாதிரி மருத்துவ ஒருமைப்பாடும் இங்கே இப்போது மிக அவசியம்.

உயிர்மெய் - 16

உணவால் எந்த அளவு சரி செய்யலாம், உடற்பயிற்சியால் என்ன மாற்றம் கொண்டுவர முடியும், எளிய மூலிகை மருந்தால் என்ன நிகழும், எப்போது ஹார்மோன்களின் நேரடி உதவி தேவை, எப்போது மரபு மருத்துவமும் நவீன ரசாயனமும் இணைந்து செயலாற்ற வேண்டும், எப்போது மருந்துகளால் மட்டும் முடியாமல் உயிரணுவை நேரடியாக உட்செலுத்த வேண்டும், என்றிலிருந்து சோதனைக்குழாயில் மட்டுமே சாத்தியம் அல்லது பிறனிடமிருந்து பெற்ற முட்டை, உதவியாக வாங்கிய உயிரணு, வாடகைக்குக் கர்ப்பப்பையும் அன்னையும் வேண்டும்...என அத்தனை முடிவுக்கும் ஒருங்கிணைந்த மருத்துவப் பார்வைகள் அவசியம்.

ஹிப்போகிரேட்ஸின் கிரேக்க மகள் வீட்டுப் பேரனின் சொல்லுக்கும், புலிப்பாணியின் தமிழ் மகன் வீட்டுப் பேத்தியின் சொல்லுக்கும் மொழிதான் வேறுபாடே தவிர, இருவரின் புரிதலும், அறமும், பயனும் ஏறத்தாழ ஒன்றுதான். புலிப்பாணியும் ஹிப்போகிரேட்ஸும் அன்றைக்கு மோதிக்கொண்டதாகச் சரித்திரமே இல்லை. புலிப்பாணியிடம் இருந்து ஹிப்போகிரேட்ஸ் புரிந்துகொண்டது ஏராளம். போகரிடம் இருந்து புலிப்பாணி வரித்துக்கொண்டதும் ஏராளம். அன்று, கிரேக்கத்துக்கு முத்தும் பவளமும் மட்டும் இங்கிருந்து ஏற்றுமதியாகவில்லை. ஏராளமாகத் தத்துவமும் மருத்துவத் தரவுகளும் ஏற்றுமதியாயின. வெந்தயமும் குதிரையும் மட்டும் கிரேக்கத்திலிருந்து இங்கு இறக்குமதியாகவில்லை. கூடவே, பல கிரேக்கத்து மருத்துவப் புரிதலும் மருந்தும்கூட இந்தியத் தத்துவத்துக்குள் இறங்கியது. இன்றும் முல்லேரியன் ஹார்மோனையும், முட்டை தூண்டும் ஹார்மோனையும் மிக நுண்ணியச் சோதனைக்குழாயில் கணக்கிடும் ஒரு நவீன மருத்துவர், முள்ளுச்செடியில் முட்டை வளர்ச்சியை உற்றுப்பார்க்க ஆரம்பித்தால், நிறைய நேரம் ஈ.எம்.ஐ. மருத்துவம் தேவைப்படாது; `ஈவது விலக்கேலோடு’ இருக்கலாம்.

- பிறப்போம்...