
அதிஷா, ஓவியங்கள்: ஹாசிப்கான்
‘`நீ ஒண்ணும் குடுக்க வேண்டாம், நாங்க பாத்துக்குறோம், நீ வந்தாப்போதும்’’ என்று அப்பா சலிப்பாகச் சொன்னதுதான் அன்புவைத் துன்புறுத்தியது. வீடுகளில் `இதைச்செய் அதைச்செய்’ என்று வற்புறுத்துவதை விடவும், ‘`நீ செய்ய வேண்டாம். நாங்க பாத்துக்குறோம்’’ என்றுதான் காயப்படுத்துவார்கள். அதை இயலாமையோடு எதிர்கொள்பவர் மீது உண்டாக்கும் வேதனையை யாரும் இங்கே பொருட்படுத்துவதில்லை.
தன் தங்கையின் திருமணத்துக்கு அப்படித்தான் அன்பு தன் அப்பாவால் அழைக்கப்பட்டான். மூத்த பையனாக முன்நின்று நடத்தித் தர வேண்டிய திருமணம் அது என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான். அதனாலேயே அவன் தன் பங்குக்குத் திருமணத்துக்கு ஏதாவது செய்ய நினைத்தான். ‘`அம்பதாயிரம் குடுத்துடறேன்னு சொல்லியிருக்கேன். ஆனா, அப்பா `அதெல்லாம் வேண்டாம், நீ மூடிட்டு வா’ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றார்டா’’ என்றான்.

ஐந்தாயிரம் என்பதே எங்களுக்கெல்லாம் பெரிய தொகை என்று நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. மாதச் சம்பளமே இரண்டாயிரம்தான் வந்துகொண்டிருந்தது. ஐம்பதாயிரம் என்பதை எழுத்தில் மட்டும்தான் பார்த்திருக்கிறோம். இருபது வயதேயான பையன்களான எங்களுக்கு அது மலைப்பை உண்டாக்கியது. எப்படிப் புரட்டுவது என ஒவ்வொருநாளும் மொட்டைமாடியில் அமர்ந்துகொண்டு திட்டம்போடுவோம். கிட்னியை விற்பது, ஆள்கடத்தல், வழிப்பறி செய்து ஏமாற்றிக் காசு பறிப்பதில் தொடங்கி பேங்க் கொள்ளை வரைக்கும்கூட அங்கே விவாதிக்கப்படும். கடைசியில் வழியேதும் இல்லாமல் தூங்கச்செல்வோம்.
`யாரிடமெல்லாம் பணம் கேட்கலாம்’ என ஒரு பட்டியல் போடுவோம். அலுவலக நண்பர்களில் தொடங்கி, தூரத்து உறவினர்கள் வரை இதில் இடம்பெறுவார்கள். `ஒரே ஆளிடம் ஒட்டுமொத்தமாக வாங்கினால், கிடைக்காது. பத்து பேரிடம் ஐந்தாயிரமாக வாங்கலாம்’ என முடிவெடுப்போம். கடைசியில் எங்களை நம்பி நூறு ரூபாய் கொடுக்கிற நான்குபேர்கூட இந்த மாநகரத்தின் மூலைகளில் இல்லை என்கிற உண்மை புரியவரும்.
அந்த நேரத்தில் அறை நண்பர்கள் சேர்ந்து தங்களுடைய வண்டிகளின் ஆர்.சி புக்கை அடமானமாக வைத்துப் பாதித் தொகையைப் பெற்றுத்தர முடிவெடுத்தோம். இருபதாயிரம் கிடைத்தது. மீதி முப்பதுக்கு என்ன செய்வது? திருமணம் நெருங்கிக்கொண்டிருந்தது. பத்து நாட்களே மிச்சமிருந்தது. அந்த நேரத்தில்தான் எங்களுக்கு உதவ சந்தானம் சார் முன்வந்தார்.
சந்தானம் சார் மிகப்பெரிய பணக்காரர். ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெசன்ட் நகர் கடற்கரையில் எங்களுக்கு நண்பரானவர். அவருக்கு ஏராளமான சொத்துகள் இருந்தன. மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். ‘`என்ட்ட ஏன்டா கேக்கல, நட்புக்காக என்ன வேணா செய்வேண்டா...’’ என்று பன்ச் டயலாக்கெல்லாம் சொல்லித் திட்டினார். அவரது கோபமே பணம் கிடைத்துவிட்ட திருப்தியைக் கொடுத்தது.
ஆன்லைன் பேங்கிங்கெல்லாம் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த நேரம். அக்கவுன்ட் நம்பரை அனுப்பி வைக்கச்சொன்னார். அக்கவுன்ட் எண் அனுப்பியதும், அடுத்த நாளே பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிவிடுகிறேன் என்றார். ஆனால், அடுத்த இரண்டு நாள்களும் பணம் வந்துசேரவில்லை.
திருமணம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு மலைப்பாம்பு அன்புவின் உடலைப் பொறுமையாக விழுங்கிக் கொண்டிருப்பதுபோல இருந்தது. அவன் அதன் அழுத்தத்தில் சிக்கி ஏற்கெனவே பாதியாக இளைத்திருந்தான்.
‘`இதோ இப்போ போட்டுடறேன். ஏதோ நெட்வொர்க் ப்ராப்ளமாம், பேங்க்ல விசாரிச்சிட்டேன்’’ என்றார். ‘`பேங்க்ல பேசிட்டேன். இன்னும் ஒன் அவர்ல ஆகிடும்’’ என்றார். ‘`அக்கவுன்ட் மாறிப் பணம் போயிடுச்சாம், நெக்ஸ்ட் டே கிளியர் பண்ணிடறேன்னு பேங்க்ல சொல்லிருக்காங்க.’’ என்றார்.
‘`சார் பேசாம கேஷாவே குடுத்துடுங்க’’ என்றோம். சந்தானம் சாரைப் பார்க்க அவரது அலுவலகத்திற்கே வரச்சொன்னார். கிளம்பி வாசலுக்குப் போய் கூப்பிட்டால், ‘`அடடா இப்பதான் கிளம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்துட்டேன், முக்கியமான மீட்டிங். நீங்க நாளைக்கு வாங்க, கட்டாயம் குடுத்துடறேன்’’ என்றார். அடுத்த நாள் சென்றால், ``ஒரு முக்கியமான செக் இன்னைக்கு வருது, நாளைக்கு உனக்குப் பணம் போட்டுடறேன்’’ என்றார். அடுத்த நாளும் பணம் வரவில்லை. ‘`அந்தாளு வேணும்னே அலைய விட்றாரு... வேற எங்கயாச்சும் ட்ரை பண்ணலாம்’’ என்று சொன்னோம். அன்பு, சந்தானம் தருவார் என நம்பிக்கொண்டிருந்தான். அவனுக்கும் எங்களுக்கும் நம்புவதற்கு வேறு ஆள்களும் இல்லை! எட்டு நாட்களும் 80விதமான காரணங்களைச் சொன்னார். பணம் தரவில்லை.

திருமணத்திற்கு மூன்று நாள்களே இருந்த நிலையில், ‘`நாளைக்கு காலையில ஆகிடும். ஓகேவா’’ என்றார். எங்கள் யாருக்கும் அதில் நம்பிக்கையே இல்லை. அன்பு காத்திருந்தான். காத்திருந்துவிட்டு, இருந்த பணத்தோடு ஊருக்குச் சென்றான். எங்களுக்கெல்லாம் கோபம். `அந்தாளு வரட்டும். அவனை வெச்சுக் கொளுத்திடலாம்’ என்று அறை நண்பர்கள் எல்லாம் வெறியோடு காத்திருந்தனர். ஆனால், சந்தானம் அதற்குபிறகு எங்களிடமிருந்து காணாமல் போனார். அன்பு, தங்கையின் திருமணத்துக்கு எங்களை வர வேண்டாம் எனச் சொல்லி விட்டான். அப்பா தரக்குறைவாகப் பேச வாய்ப்பிருப்பதாக அஞ்சினான்.
கல்யாணத்திலிருந்து பாதியிலேயே சென்னைக்கு வந்துவிட்டிருந்தான் அன்பு. ‘`அப்பா சும்மா சொல்லிச் சொல்லிக் காட்டிகிட்டிருந்தார்டா, தாலி கட்டினதும் கிளம்பி வந்துட்டேன். தங்கச்சி அழுதா, அம்மாகூட திட்டுச்சு, நகையை வெச்சுக் காசு குடுன்னுச்சு. எனக்கு இஷ்டமில்லை.’’ எனச் சொல்லிவிட்டு அடிபட்ட அட்டையைப்போல சுருங்கிப்படுத்துக்கொண்டான். இனி எப்போதும் ஊருக்குச் செல்வதில்லை எனத் தீர்மானித்தவன் அதற்குப்பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஊருக்குச் சென்றான்.
சந்தானம் சாரை அதற்குப்பிறகு ஒரே ஒருமுறைச் சந்தித்தேன். ‘`ஏன் சார் முடியாதுன்னா முடியாதுன்னு சொல்றதுதானே. எதுக்கு அப்படி அன்புவை அலையவிட்டீங்க?’’ என்று கோபமாகப் பேசினேன். சந்தானம் தடுமாறினார். அவர் குற்றவுணர்வில்தான் இருந்தார்.
‘`அந்தச் சமயத்துல ஒரு பெரிய பிரச்னையில மாட்டிக் கிட்டேன். கடைசிவரைக்கும் குடுத்துடலாம்னுதான் ட்ரை பண்ணேன். முடியலை’’ என்றார். ‘`ஏன் சார்... அதான் சிக்கல்னு தெரியுதுல்ல, அதைச் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே. அதை விட்டுட்டு ஏன் இப்படி அலையவிட்டு அவமானப்படுத்திக் கஷ்டப்படுத்துனீங்க?’’ என்றபோது, சந்தானம் கைகளைக் கூப்பிக்கொண்டார்.
‘`முதல்ல அவன்கிட்ட காசு குடுத்தா, எப்படித் திருப்பிக்குடுப்பான்னு ஒரு கால்குலேஷன்தான் மனசுக்குள்ள ஓடுச்சுப்பா, அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டேனோன்னு யோசனை. ஒரே குழப்பம். அப்புறமா குடுக்கறேன்னு சொல்லிட்டு அது எப்படி முடியாதுன்னு சொல்ல முடியும்னு தோணுச்சு. எப்படியாவது குடுத்துடணும்னுதான் நெனச்சேன். ஆனா, முடியலை, அலையவிட்டா நீங்களா புரிஞ்சுக்கிட்டுப் போய்டுவீங்கன்னு நினைச்சேன்...’’ என்றபோது அந்த ஆளுக்கு நாலு அறை விடவேண்டும்போல இருந்தது. ஆனால், அறைந்தாலும் ஏற்றுக்கொள்கிற மனநிலையோடுதான் அவர் நின்றார்.
ஒருவருக்கு உதவி செய்வதற்கு முன்னால் இயல்பாகவே கணக்குப் போட்டுப் பார்க்கிற நம்முடைய மனம்தான் சந்தானம் சாருக்கும் இருந்தது. அது மட்டுமல்ல, எல்லோராலும் எப்போதும் எந்நேரமும் உதவிகள் செய்துகொண்டே இருக்க முடியாது. சில சமயம் உதவிகள் செய்ய முடியாமல் போவது சகஜம்தான். ஆனால், அப்படி உதவி செய்ய முடியாமல் போகும்போது அதைச் செய்ய முடியாது என்று மறுப்பதை ஏனோ நாம் அறிந்திருப்பதே இல்லை. ‘‘ட்ரை பண்றேன்’’ என்று போலி யான நம்பிக்கையை கொடுத்துவிடுகிறோம்.
முடியாது என்பதை முடியாது என்று சொல்வதில் நமக்குத் தயக்கங்கள் இருக்கின்றன. அதனாலேயே உதவி கேட்டு வருபவரைக் காக்க வைப்பது, அவரிடம் சாக்குபோக்குகள் சொல்லித் தள்ளிப்போடுவது, அவரை மேலும் மேலும் அலையவைப்பது எனத் தொடர்ச்சியாக ஏதேதோ செய்கிறோம். தாமதப்படுத்தும் உதவிகளின் வலிகளை நாம் ஏன் அறிவதில்லை? பிச்சைக்காரர் களைக் காக்கவைப்பதும், அவர்களை நிற்கவைத்துக்கொண்டே சில்லரைகளைத் தேடிவிட்டு இல்லை என்று அனுப்பிவைப்பதும் இப்படித்தான் இல்லையா? நம்முடைய கருணைக்காக ஒருவனைக் காக்கவைப்பது என்பதுகூட குற்றம்தான்.
நேரடியாக முடியாது என்று மறுக்கும்போது நம் மேல் உதவி கேட்பவருக்குக் கோபம் வரலாம். நம்மைப்பற்றித் தவறாகக்கூட நினைக்கலாம். ஆனால், பின்னாளில் அவர் அதைப் புரிந்துகொள்ளக்கூடும். காக்கவைத்து அவமானப்படுத்துவதைவிட இது மேல்தான் இல்லையா?
பூங்காவை எந்நேரமும் கூட்டிப்பெருக்கிக் கொண்டே இருப்பார் ராஜம்மா. சித்தூர் பக்கத்தில் இருக்கிற கிராமம் ஒன்றைச்சேர்ந்த வயதான பெண்மணி. அவர்தான் பூங்காவைக் கூட்டிப் பெருக்குவதில் தொடங்கிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து வைப்பதுவரைக் கவனித்துக் கொண்டார். எந்நேரமும் பூனைகளைக் கொஞ்சிக்கொண்டும், நாய்களோடு பேசிக்கொண்டும் இருக்கிற உற்சாகமான ஆந்திரதேசத்துப் பாட்டி. பூங்காவில் யார் யாரோ திடீர் திடீர் என்று வந்து மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டுப் போவார்கள். அதை எல்லாம் ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து வளர்ப்பது பாட்டிதான். யாரிடமும் எப்போதும் எதற்கும் காசு கேட்காத அவர், தீபாவளிக்கு மட்டும் எல்லோரிடமும் உதவி கேட்பார்.
தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் பூங்காவில் நடைபாதையை ஒட்டியிருக்கும் கழிப்பறைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பார். வாக்கிங் போகிறவர்களிடம் மெதுவான குரலில் ‘`சார்... தீபாவளி... ஏதாச்சும் பண்ணுங்க’’ என்று தயங்கித்தயங்கிக் கேட்பார். தலையைச் சொறிவார். தாழ்ந்து கை நீட்டி யாசகம் போல் கேட்பார். இந்தச் சமயங்களில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமாக ராஜம்மாளை எதிர்கொள்வதைக் கவனித்திருக்கிறேன்.
ஒரு சிலர்தான் அவரிடம் நின்று பொறுமையாக விசாரித்துவிட்டுக் கையில் இருக்கிற பத்து ரூபாயையும் ஐந்து ரூபாயையும் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். சிலர் ``உனக்கெதுக்குக் காசு குடுக்கணும், அதான் சம்பளம் வாங்குறல்ல, இப்படி வசூல் பண்றது சட்டப்படிக் குற்றம்’’ என்று பாடம் நடத்துவார்கள். சண்டை போடுவார்கள். ஆனால் ஒரு சிலர் அவரை நெருங்கும்போது அப்படியே கண்டுங்காணாமல் நகர்ந்துசெல்வதையும், ராஜம்மா அவர்களை அழைத்தாலும் காது கேட்காததுபோல செல்வதையும் பார்த்திருக்கிறேன். ஒரு மனிதனுக்குச் செய்கிற மிகப்பெரிய அவமானம், அவன் உதவி என்று கூப்பிடும்போது கண்டுங்காணாமல் நகர்ந்து செல்வது. அங்கே நடக்கிற அத்தனைபேருக்கும் பாட்டி பழக்கமானவர்தான்!
‘`ஒவ்வொருத்தரும் ஒருவிதம். சண்டைக்கு வரவங்ககிட்ட சமாதானமா பேசிக்குவேன். காசு கொடுத்தா சந்தோஷமா வாங்கிக்குவேன். `அம்மா கைல காசில்லைம்மா’னு சிலர் சொல்வாங்க. தினமும் பாக்குற பொம்பளை ஒருத்தி கையேந்தி நிக்குறா, ஆனா, அவளை பார்த்தும் பாக்காத மாதிரி அருவருப்பா நினைச்சு விலகித் தப்பிச்சு ஓடும்போதுதான் மனசுக்கு துடியாதுடிக்கும். நான் உதவிதானே கேட்கிறேன். அதுக்கேன் என்னைப் பார்த்து பயந்து ஓடணும்.’’ என்பார்.
நமக்கு உதவிகளை மறுக்கத்தெரியாததுபோலவே, உதவி கேட்டு வருபவர்களை எதிர்கொள்ளவும் தெரிந்திருப்பதில்லை. உதவி கேட்டு வருகிறவர்களிடம் நாம் வெளிப்படுத்துகிற சின்ன அசைவுகள்கூட பெரிய அவமரியாதைகளை, காயங்களை உருவாக்கிவிடும் என்பதை ஏன் நாம் அறிவதில்லை?
எல்லோரையும் மகிழ்வித்துக்கொண்டே இருக்கிறவர்களின் வாழ்வு ஏனோ எப்போதும் அத்தனை மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ராம்குமார். ஐ.டி நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்தவர். எப்போதும் எல்லோரையும் சிரிக்கவைத்துக்கொண்டேயிருப்பார். யார் காசு கேட்டாலும் தூக்கிக்கொடுத்துவிடுவார். எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார். திருப்பிக்கூட கேட்கமாட்டார். இந்த ஆள் பரோபகாரியா, ஊதாரியா, லூஸா என்று புரியாமல் பழகிக்கொண்டிருந்தேன்.
நன்றாக வாழ்ந்துகொண்டிருந்தவர் ஒரு விபத்தில் சிக்கினார். மனைவியும் மகளும் இறந்துவிட்டனர். முதுகெலும்பில் அடிபட, இரண்டு ஆண்டுகள் ஓய்வில் இருக்க வேண்டியதானது. கையிலிருந்த பணத்தை யெல்லாம் சிகிச்சைக்கே செலவளித்துவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேலை தேடத் தொடங்கியபோது, அவருக்கேற்ற வேலைகள் சரியாக அமையவில்லை. அவருக்கு இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் கடனும் ஆகிவிட்டது. ஆனால், அதைப்பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். நண்பர்களிடம் எல்லாம் கேட்டுப்பார்த்தார். ஒரு சிலர் தவிர யாரும் உதவ முன்வரவில்லை. கவலையே படாமல் வங்கிகளில் லோன் போட்டு அடுத்தடுத்த முயற்சிகளுக்குப் போய்விட்டார்.
ஒருமுறை மெரினா கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தோம். ‘`இந்த இரண்டு வருஷமா ஒரு விஷயம் கவனிச்சேன்டா, நான் போன் பண்ணாக்கூட என் ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரன்னு ஒருத்தனும் அட்டெண்ட் பண்ணமாட்டேங்கிறானுங்க. நேர்ல பார்த்தாக்கூட `எப்படி இருக்க?’, `கடனையெல்லாம் அடைச்சிட்டியா?’ங்கிற கேள்வியை மட்டும் தவிர்த்திடுவாங்க, என்னமோ அதைச் சொன்னா, நான் காசு கேட்டுருவேன்னு பயம்போல.
போன வாரம் ஸ்கூல்மேட் ஒருத்தனுக்கு போன் பண்ணேன். நம்பர் போகலை. சின்ன வயசுலேர்ந்து அவன் பழக்கம். ஃபேஸ்புக்ல போய் என்னடா நம்பர் போகலைனு கேட்டா, பதில் இல்லை. என்னாச்சோன்னு பயந்துபோய் வேறு ஒருத்தனுக்கு போன் போட்டுக் கேட்டேன். அவன் நம்பர் மாத்திட்டான்டாங்கிறான். `எல்லாருக்கும் மெசேஜ் பண்ணானே... உனக்குப் பண்ணலையா’ன்னு கேட்டான். எனக்கு அதிர்ச்சியாயிருந்துச்சு. உடனே புது நம்பருக்கு போன் பண்ணினேன். `ஐயோ... ஸாரி மச்சான். மறந்துட்டேன். மீட்டிங்ல இருக்கேன் அப்புறமா நானே கூப்பிடறேன்’னு கட் பண்ணான். அதுக்குப்பிறகு பயபுள்ள பேசவே இல்ல. வாட்ஸ் அப்ல போன வாரம் மெசேஜ் போட்டேன் `உன்னைப் பார்க்கணும்டா, எப்போ ஃப்ரீ’னு. ப்ளூ டிக் காட்டுது. ஆனா, ரிப்ளை இல்லை!
ஒருத்தன் கடன்காரன் ஆகிட்டான்னா, வாழ்க்கையில் போராடிக்கிட்டிருந்தான்னா ஏன் அவனைச் சுற்றி இருக்கிறவங்களே அவனைப் பார்த்து பயந்து ஓடுறாங்க. உதவியோ காசோ கேட்டுடுவான்னா? அப்படியே கேட்டாதான் என்ன? அதுக்குத்தானே நண்பர்கள் உறவுகள்னு இருக்காங்க?
வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்து நொந்து போயிருக்கிறவனுக்கு எந்நேரமும் காசு மட்டுமே தேவைப்படாதுடா, மனுஷங்களும் அவங்களோட இணக்கமும் நிறையவே தேவையா இருக்கும். எனக்கு அதுதான் தேவைப்படுது. அதுக்காகத்தான் நான் மனுஷங்களை நோக்கி நெருங்கி நெருங்கிப் போறேன். என்னமோ எல்லோரும் விலகி விலகிப்போறாங்க!’’ அவர் சொல்லச் சொல்ல நிறுத்திக்கொண்டார். சில நிமிட மௌனத்துக்குப் பிறகு பேசினார். ``இவங்கள்லாம் நம்மளைச் சுற்றி இருக்காங்க. நாம ஒண்ணும் மூழ்கிட மாட்டோம்கிற நம்பிக்கைலதான்டா வாழறேன்.’’ என்றார்.
அவர் சொல்லிக்கொண்டிருக்க நானும் குற்றவுணர்வில் நெளிந்துகொண்டிருந்தேன். அவர் சொன்னதை எல்லாம் அவருக்கே நான் செய்திருந்தேன். அவர் போனில் அழைக்கும்போது அச்சமாக இருக்கும்; காசு கேட்பாரோ என்று. அவருக்கு வருமானமில்லை, காசு கொடுத்தால் திரும்ப வராது என்கிற கணக்குகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே சில்லறையாகக் கொஞ்சம் பணம் வாங்கியிருந்தார். அதையும் திருப்பித்தரவில்லை. அதனாலேயே அவர் போன் அடித்தால் `ஐ யம் இன் மீட்டிங்’ என மெசேஜ் அனுப்புவேன். சில நேரங்களில் அலுவலகத்திற்கே வந்துவிடுவார். நான் அலுவலகத்தில் இல்லை என்று பொய் சொல்லி அனுப்பி வைப்பேன். காரணம் அச்சம். திரும்பக் கொடுக்கக் கூடியவனுக்குத்தான் உதவுவது என்கிற மனநிலை. அவரின் கைகளைப் பற்றிக்கொண்டேன். எதுவுமே பேசவில்லை. அவர் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.

உதவி கேட்டு வருகிறவனை உதாசீனப் படுத்துவதைவிட பெரிய வன்முறை எதுவுமே இருக்கமுடியாது. ஒரு புன்னகைக்காகக்கூட ஒருவன் நம்மைத்தேடி வரலாம். ஒரு சிறிய ஆறுதலுக்காகவும்கூட நம்மை போனில் அழைக்கலாம். ஆனால், நமக்கு எல்லாமே கணக்குகளாக மாறிவிட்டன. உன்னதமான உறவுகளை விடவும் இந்தக் கணக்குகள்தான் சக மனிதனின் மீதான அன்பை நிர்ணயிக்கின்றன. தோல்விகளால் உடைந்துபோன மனிதர்களிடம் நமக்குக் கொடுக்க வெற்றிகள் நிச்சயம் இருக்காது. ஆனால், தோல்விகளின் வலிகளை மறக்கடிக்கச் செய்யும் மருந்துகள் இருக்கலாம். அதைத்தேடிக்கூட அவர்கள் வரக்கூடும். அவர்களுடைய வெறுமை சூழ்ந்த மனத்தை நம்முடைய புன்னகை நிரப்பலாம். நாளை நாமும்கூட எப்போதாவது வீழும்போது சக மனிதர்களிடம் சரணடைய நேரிடலாம். அந்த நேரத்தில் மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் நமக்கு எண்ணற்ற எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால், அப்படித்தான் நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்கிறோமா?
- கேள்வி கேட்கலாம்...