விகடன் வரவேற்பறை
உயிர் நிலம் மேலாண்மை.பொன்னுச்சாமி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.
பக்கங்கள்: 540விலை:

530

இயற்கை உரங்கள், ஏர் உழவு, மாடுகள், வியர்வை சிந்தி உழைப்பு எனப் பாரம்பரிய விவசாயத்தை மேற்கொள்ளும் சம்சாரி பரமசிவம் - 'காலத் துக்கு ஒவ்வாதது அப்பாவின் விவசாய முறை’ என்று நவீன விவசாயத்தை நாடும் அவருடைய மகன் முருகேசன். இவர்கள் இருவருக்கும் இடையிலான முரண்கள்தான் நாவல். யதார்த்தவாத நாவலுக்கு இலக்கணமாக விளங்கும் இந்த நாவல், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்துவது இன் றைய காலகட்டத்தில் முக்கியமானது. பாத்திரங்களின் குரல்களை அழுத்தி நாவல் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஆசிரியரின் குரல், அலுப்பூட்டும் நீள நீளமான விவரணைகள், 16-ம் அத்தியாயத்தில் 'முருகேசன் பத்தாம் வகுப்பு ஃபெயில்’ என்று குறிப்பிட்டுவிட்டு, அதற்குப் பிறகு வரும் அத்தியாயங்களில் 'எட்டாம் வகுப்பு ஃபெயில்’ என்று குறிப்பிடும் தகவல் பிழை ஆகியவற்றைத்தவிர்த்து இருக்கலாம்!
என் எண்ணம் என் வண்ணம் இயக்கம்: ரா.பெ.சிவக்குமார்

எளிமையான, ஜாலியான காதல் கதை. ஒரு பெண் ணைச் சந்தித்ததையும், அவளுடன் காதலில் விழுந்ததையும் தமிங்கிலீஷில் காதலன் அஜய் பேசுவது அழகு. ''காதல் வளருதோ, இல்லையோ செடியாவது வளரும். என் ஐடியாவை எல்லா லவ்வர்ஸும் ஃபாலோ பண்ணா, சென்னை முழுக்க மரங்களா இருக்கும்!'' என்று செடி கொடுத்துக் காதல் சொல்வது ஜாலி மெசேஜ். க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசனை ரகம். அஜய்யின் நடிப்பும் காசிலிங்கம் சிவாவின் ஒளிப்பதிவும் சிவக்குமாரின் இயக்கமும் கூட்டணி அமைத்து ரசிக்கவைக்கின்றன!
சிறுவர் சினிமா! http://cfsindia.org/

குழந்தைகளுக்கு ஏற்ற சினிமாக்களை அறிமுகப்படுத்தும் தளம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உருவாகும் குழந்தை சினிமாக்கள், திரைத் திருவிழாக் களின் செய்திகள் எனக் குழந்தைகளைக் கவரும் பல விஷயங்கள் இங்கே உண்டு. குழந்தைகளுக்கான நம்முடைய படைப்பு களையும் இங்கே பதிவேற்றலாம்!
அப்பு ஆன் லைன் www.appusami.com

எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (எ) பாக்கி யம் ராமசாமியின் வலைப்பூ. இதுவரை இதழ்களில் நடமாடிக்கொண்டு இருந்த அப்பு சாமி-சீதா பாட்டி ஜோடி தற்போது வலைதளத்திலும் உலவுகிறார்கள். 'தீபாவளியைப் பழசுபடுத்துவது எப்படி?’, 'முடிஞ்சா வர்றோம்’ போன்ற கட்டுரைகளைப் படிக்கப் படிக்க... நினைத்து நினைத்துச் சிரிக்கவைப்பவை!
உருமி வெளியீடு: சோனி மியூஸிக்விலை:

69

இசையமைப்பாளர் திபக் தேவ் அறிமுகமாம். அசத்தி இருக்கிறார். 'வடக்க வடக்க’, 'கொண்டாடு கொண்டாடு’ பாடல்கள் உற்சாகக் கொண்டாட்டம் என்றால், 'யாரோ நீ யாரோ’ பாடல் சுக மெலடி. 'சின்னச் சின்ன மின்னல் மிதக்கிற’ பாடலின் ரிதமும் ஸ்ரேயா கோஷல் குரலும் வரிகளும் ஏகாந்தம். ரேஷ்மியின் வித்தியாசமான குரலில் ஒலிக்கும் 'ஆராரோ ஆராரோ’ நம்பிக்கைத் தாலாட்டில் 'எப்போதும் போராடு... இப் போது தூங்கு’ என்று வைரமுத்து உருகவைக்கிறார். 'ஃபேஸிங் தி எனிமி’ இசைக் கோவை போர்ச் சூழலைக் கண் முன் நிறுத்துகிறது. 'வடக்க வடக்க’ பாட்டின் ரீ-மிக்ஸும் 'யாரோ நீ யாரோ’ பாடலின் கரோக்கியும் எக்ஸ்ட்ரா போனஸ். வைரமுத்துவும் திபக் தேவும் இணைந்து படைத்த இசை விருந்து!