Published:Updated:

உயிர்மெய் - 17

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

``உன்னையெல்லாம் பெத்தாங்களா...  செஞ்சாங்களா?’’ என ஸ்கூலில் டீச்சர் கொஞ்சம் கோபத்தில் கேட்டால், இன்னும் கொஞ்ச காலத்தில், `யெஸ் டீச்சர்... குழாய் பாதி, கருப்பை மீதி கலந்து செய்த கலவை நான்’ என அவனோ, அவளோ பாடக்கூடும். கருத்தரிப்புக்கு ஏங்கும் பொழுதுகளில், சோதனைக்குழாய் குழந்தை என்பது மருத்துவ வரலாற்றின் மைல்கல் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால், இன்றைக்கு அதன் தேவை பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால், தவறு வாழ்விலா, சூழலிலா, அதன் வணிகத்திலா எனக் கடுமையாக யோசிக்க வைக்கிறது.

கல்யாணத்துக்கு முன்னர்வரை, `அதையும் தாண்டிப் புனிதமானது’ என்றிருந்த காதல், கல்யாணத்துக்குப் பிறகு மறந்துபோன மளிகைச் சாமான் மாதிரி சட்டைப்பையின் துண்டுச் சீட்டில் மட்டுமே ஒளிந்திருப்பது அதிகமாகிவிட்டது. புணர்ச்சிக்கு மட்டுமல்ல, புத்துயிர் உருவாக்கத்தின் ஒவ்வொரு நிலைக்கும் காதல் அத்தியாவசியமானது என ஏனோ கற்றுக்கொடுக்கப்படவில்லை. மூளைக்குள் பல்பு எரிவதில் தொடங்கி, `செம்புலப் பெயனீர்’போல கலப்பதில் இருந்து, சினைமுட்டைக்குள் சொருகி, உயிரணு தன் சைட்டோபிளாசத்தைக் கலந்து, ஓர் உயிர் உருவாகுவதுவரை மூளையில் சுரக்கும் காதல் ரசாயனங்களின் பணி பெரிதினும் பெரிது.

உயிர்மெய் - 17

200-க்கு 199.9 வாங்கிக் கல்லூரிக்குச் செல்லும் முதல் பெஞ்ச், `எந்திரன்’ வெர்ஷன் `2.0’-வும் சரி,``மச்சி, காம்பவுண்டு சுவர் கொஞ்சம் கட்டையா இருக்கிற மாதிரி ஒரு காலேஜ் சொல்லு’’ என விசாரிக்கும் கடைசி பெஞ்ச் நாயகர்களும் சரி... காதல் என்பது கல்யாணத்துக்கு முன்னர் எழுதும் கஷ்டமான, தமிழ்ப்பசங்க அநேகமாகத் தோற்றுப்போகும், சேட்டுப்பசங்களும் வெளியூர்காரனும் அள்ளிட்டுப்போகும் `நீட்’ எக்ஸாம் என்றே நினைக்கிறார்கள். இது ஆண்பாலுக்கு மட்டுமல்ல, பெண்பாலுக்கும் சாலப்பொருந்தும் சங்கதி. ஒருவழியாக முக்கி முனகி ப்ரொபோஸ் செய்து, பைக்கில் பின்னாடி உட்கார்ந்து முடி காற்றில் பறக்கப் பயணம்போன பத்து பதினைந்து நாள்களிலெல்லாம், காதலும் கொஞ்சம் கொஞ்சமாக முட்டி எலும்பு, முதுகு எலும்பு தேய்கிற மாதிரி தேயத் தொடங்குகிறது. கல்யாணம் ஆன ஐந்தாறு வருடங்களில் அநேகமாக `காதல் ஆர்த்தரைட்டிஸ்’ வந்துவிடுகிறது. என்ன... ஒரே பிரச்னை, வழக்கமான மூட்டு ஆர்த்தரைட்டிஸுக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம். காதலுக்கு அய்யோ பாவம். `தேய்ஞ்சிருச்சு மாத்திடலாம்’ என்றால், செருப்படிதான். ஒருவேளை அந்த ஐந்தாறு வருடங்களில் ஒரு விபத்தாகக் கரு உருவாகிவிட்டால், எதையோ சாதித்த சந்தோஷத்தில் இருவருமே ஆனந்தம் கொள்கின்றனர். அநேகமாக அந்தச் சந்தோஷம், `யார் டயப்பர் மாற்றுவது?’ என்கிற சண்டையின் போது தொடங்கி மொத்தமாக உடைந்துபோகும்.

நம்ம பிள்ளைகளுக்கு, கம்பஞ்சோற்றைவிட நூடுல்ஸ் பிடிக்கிற மாதிரி, பதநீரைவிட கோலாக்கள் பிடிக்கிற மாதிரி, காதலும் குறுக்குவழியில் மண்டைக்குள் குடித்தனம் வருவதுதான் இந்த மாதிரியான குறைந்தபட்ச ஆயுள்காலம் காதலுக்கு வருவதற்கும் முக்கியக் காரணம். கூழையோ, இளநீரையோ சுவைத்து ரசித்து, அதில் பிடித்தம் கிளர்ந்தெழுவது மாதிரி நூடுல்ஸ், கோலாக்களின் மீதான கிளர்ச்சித் தானாக உருவாகுவதில்லை. அதில் நடக்கும் ஜோடனைகளும், வணிகக் கூச்சலும் கிளர்ச்சியைக் குறுக்குவழியில் நம்முள் கிளப்புகின்றன; அதன் சுவை அறியாமல், தேவையை உணராமல். அதேதான் காதல் விஷயத்திலும். அப்பழுக்கற்ற எதிர்பார்ப்பில்லா அன்பால் அதன் படிநிலையாகக் காதல் பீறிட வேண்டும். ஆனால், அப்படிக் காதல் பலருக்குப் பீறிடுவதில்லை. இங்கே சினிமாக்களின் காமக்கூச்சல் காதல் என அடையாளப்படுத்தப் படுகிறது. பாலியல் கிளர்ச்சிக்கு வண்ண உறை சுற்றி, ரோஜா செருகிக் காதல் அடையாளம் சொல்லப்படுகிறது. விளைவு, டெஸ்ட் டியூபில் பேபி பிறப்பதுபோல், டெஸ்ட் டியூபில் மட்டுமே அநேக ரோமியோ ஜூலியட்டுக்கள் பிறக்கிறார்கள்.

உயிர்மெய் - 17

உளவியல்ரீதியாக ஒரு விஷயத்தை நவீன உலகம் அழகாக அடையாளம் கண்டிருக்கிறது. அநேகமாக அம்மாவின் அன்பைத் துளித்துளியாக அசைபோட்ட ஆண் வயதுக்கு வந்ததும், அவனது ஹைப்போதாலமஸ் பாலியல் கிளர்ச்சியைத் தொடங்கும் பொழுதுகளில், தான் ரசித்த, பரவசமூட்டிய பெண்ணின்பால் செலுத்தி, காதல் வசப்படுகிறான். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவன் மீசையும், அவள் கெண்டை விழியும் மட்டும் முடிவு செய்யவில்லை. மூளையின் Nucleus accumbens-ம், அதுகாறும் அவன் பெற்ற அன்பைக் கூட்டிக் கழித்துப்போட்டு  முடிவுசெய்கிறது. அது அன்பின் அட்டகாசமான பரிணாம வளர்ச்சி. அதேபோல், தன் மனதின் முதல் ஹீரோவான ஆணான அப்பாவின் வசீகரத்தையும் அன்பையும் தான் பருவ மடைந்த பின்னர் எதிர்கொள்ளும் சிலாகிக்க வைக்கும் ஆணில் மையல் கொள்கிறாள். மொத்தத்தில் அன்பின் வழியதுதான் உயிர்நிலை. அப்படி, ஓர் எதிர்பார்ப்பில்லாத தூய அன்பை இளம் வயதை ஒட்டி ருசிக்கும் ஒருத்தன் ஒருத்தியில் விளையும் காதல், அன்பின் அடுத்த சேப்டர்; புதிய தொடர் அல்ல.

இனக்கவர்ச்சியாகவோ, இனம், சாதி சனம் பார்த்து அம்மி மிதித்தோ அல்லது அவள்(ன்) அப்பனை மிதித்தோ, நடக்கும் திருமணங்களில் அன்புக்கும் காதலுக்கும் ஆயுள்காலம் காம விபத்துகளில் கருகிப்போகிறது. அதனாலேயே இங்கே பெருகிவரும் புதிய நோய் ஆணுக்கும் பெண்ணுக்குமான உளவியல் காமக்குறைவு நோய். Mental Impotency!

யாரைப் பார்த்துப் பரவசப்படுவது, யாரிடம் மையல் கொள்வது, யாரிடம் வாழ்நாள் முழுவதும் புதைந்துகொள்வது என்பதை மூளையின் பெரும் ரசாயனக் கூட்டம் முடிவுசெய்கிறது. காதலுக்கும், காமத்துக்கும், கருத்தரிப்புக்குமான காமப் பரிமாறலுக்கும் இந்த ரசாயனக் கூட்டத்தின் சரிவிகித, சம காம்போ பரிமாறல் தேவை. பார்த்தால்  பரவசம் ஏற்பட, டெஸ்டோஸ்டி ரோன் தேவை. அது கொஞ்சம் குறைவாக இருந்தால், அடுத்த இருக்கையில் காஜல் அகர்வால் இருந்தாலும், அவன் பட்டினத்தார் பாடல் பற்றியோ, திருநாவுக்கரசர் பதியம் பற்றியோதான் பேசுவான். பரவசத்துக்கு அடுத்த நிலைதான் காதல் தேர்வு.  `இவள்தான்... இவள் மட்டும்தான்’ என உற்சாகமாகத் திரிவதற்கு, அந்த முதல்நிலை பிடித்தலுக்கு அட்ரினலினும் கார்டிசாலும் அளவாகத் தேவை. ``மச்சான் அவ ஓகே சொல்லிட்டாடா’’ என உற்சாகமாக, பயங்கரப் படபடப்போடு சொல்லும் காதலின் முதல் கட்டத்தாருக்கு, `முகத்தில் வேண்டுமானால் எது வேண்டுமானாலும் வழியலாம். ஆனால், ரத்தத்தில் கொஞ்சம் கார்டிசால் அளவு கூடுதலாக வழியும்’ என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே அட்ரினலினும், கார்டிசாலும்தான் நாய் துரத்தும்போதும் ரத்தத்தில் அதிகம் சுரக்கும் என்பது இந்தக் கட்டுரைக்கான ஒரு டிஸ்க்ளெய்மர் செய்தி.

``ஏன் எப்பவும் இப்படி அன்னை தெரசா மாதிரி அன்பைக் காட்டுறே... எண்பத்தேழுலேயே எங்க அண்ணன் கமல் எப்படி முத்தம் கொடுத்தார் தெரியுமா?’’ எனத் தூபம் போட்டு, காதலில் விளையாடித் திளைக்க, டோப்பமின் ரசாயனம் தெளிக்க வேண்டும். `கட்டிப்பிடி வைத்தியம் முதல் கண்டபடி முத்தம்’ வரை காதலில் நிகழ, இந்த டோப்பமின் மிக முக்கியம். 80-களில் கல்யாணம்வரை `சத்தம் மூச்’ என டோப்பமினை டப்பாவில் அடைத்து, பூட்டி வைத்திருந்தனர் காதலர்கள். இப்போது டோப்பமின் பீறி வழிகிறது. இன்னொரு விஷயம், வயதான காலத்தில் இந்த டோப்பமின் குறைவில் மட்டுமே பார்க்கின்சோனிசம் (Parkinsonism) எனும் நடுக்க வியாதி வருகிறது. ``எனக்கு என் காதலியைப் பார்த்தாலே கொஞ்சம் நடுங்குகிறதே... டோப்பமின் குறைவா?’’ எனக் கேட்கிறீர்களா? நல்ல டாக்டரை உடனடியாகப் பார்க்கவும்.

உயிர்மெய் - 17

கடைசியாக, காதலில் நிலைகொள்வது, செரடோனின் சங்கதியால் மட்டும்தான். ``இவ்ளோ அழகா ஜூனியர்ஸ் வருவாங்கனு தெரிஞ்சிருந்தா, இப்படி கிளாஸ்மேட்டுகிட்ட சிக்கியிருக்க மாட்டேன்’’ என்றெல்லாம் உளறிக் கொட்டாமல், ஒரே காதலில் ஜீவ சமாதி அடையும் பல லட்சம் காதலர்களுக்கான கட்டிப்போடும் ஹார்மோன், செரடோனின்தான். அதன் சுரப்பில்தான் காதலுக்குப் பின்னர் அத்தனை அழகிகளும், அக்கா தங்கையாக மட்டுமே தெரிவர். கடைசியாக, திருமணத்துக்குப் பின்னர் கணவன் மனைவி பிணைப்பை உறுதிப்படுத்தும் ஹார்மோன் ஆக்ஸிடோசின். ஆங்கிலத்தில் இதனை `Cuddle hormone’ என்றே சொல்கின்றனர். ``என்னடி வசியம் வெச்சிருக்கே... அம்பது வயசானாலும் இப்படி வெக்கமே இல்லாம சுத்திச் சுத்தி வாரேனே?’’ என முதுமையிலும் காதலில்  மூச்சிரைக்க வைப்பது, இந்த ஆக்ஸிடோசின் எனும் சுரப்பினால்தான். அதிகம் அடிக்கடி புணரும் தம்பதியருக்கு இந்த ஆக்ஸிடோசின் அயிட்டம் கொஞ்சம் எப்பவும் மூளையில் தங்கியிருந்து, அவர்கள் காதல் வாழ்வைத்  தக்கவைத்துக் கொண்டே இருக்குமாம்.

மேலே சொன்ன அத்தனை ஹார்மோன்களும் குப்பியில் அடைத்தும் குத்தூசியிலும் வந்திருக்கின்றன. ஆனால், `அது குதூகலமாக மூளை சுரக்கும்போது வருவதுபோல செயலாற்றுமா?’ எனக் கேட்டால், சத்தியமாகத் தெரியாது.  `இந்திரன் தோட்டத்து முந்திரியே, மன்மத நாட்டுக்கு மந்திரியே... கெட்டன இரவுகள்...சுட்டன கனவுகள்...இமைகளும் சுமையடி இளமயிலே...’ எனும் வரிகளைக் கேட்டாலோ, `ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி, மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி, முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி...’  எனக் கண்ணதாசன் வரிகளைப் பாடினாலோ எல்லா ஹார்மோனும் எழுந்து நின்று சுரக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. `காஸ் தீட்டா, சைன் தீட்டாவை மொக்கையாக இருந்தாலும், படித்து மனனம் செய்யும் கூட்டம் இந்தக் காதல், காமம் தீர என்ன ஃபார்முலா எனப் படித்தே ஆக வேண்டும்.

நவீன விஞ்ஞானம் அத்தனை ஹார்மோன் களையும் புரதக்கற்றைகளாக அடையாளம் கண்டிருக்கிறது. அதன் இருப்பிடத்தை மூளையிலும், சினைப்பையிலும், விதைப்பையிலும் அதன் இண்டு இடுக்குகளின் நானோ துகள்களுக்கு நடுவே கண்டுபிடித்திருக் கிறது. உடலின் மாற்றத்தையும், உள்ளத்தின் குதூகலத்தையும் ரத்தத்தின் சுரப்பையும் கண்டறிந்த அவர்களால், வாழ்வின் சின்னச் சின்ன நுணுக்கங்கள் அந்த ரசாயனத்தின் சுரப்பையும் இருப்பையும் எப்படி ஆள்கின்றன என்பதை இன்னும்  முழுதாக அறிய முடியவில்லை. அதனாலேயே வாழ்வியலும் அதை ஒட்டிய மரபு அனுபவங்களும் புறந்தள்ளப் பட்டு, வேக வேகமாக நவீனக் குறுக்கீடுகள் காதலுக்கும் கரு உருவாக்கத்துக்கும் போதிக்கப் படுகின்றன.

``காலம் தாழ்த்தாதீர்கள்... 35 வயதைக் கடக்கிறீர்கள்...’’ எனும் ஒவ்வோர் அறிவுரைக்குப் பின்னரும் ஒளிந்திருப்பது  அறிவியல் மட்டுமல்ல, அறமற்ற வணிகமும்கூட. `குறைந்தபட்சம் ஐந்தாறு ஐ.யூ.ஐ. செய்தும் பலனளிக்காத பட்சத்தில் மட்டுமே இக்சியோ அல்லது ஐ.வி.எஃப்-வோ வேண்டும்’ என மருத்துவ நெறி சொன்னாலும், வழக்கத்தில் நேரடியாக ஐ.வி.எஃப்-புக்கான வணிகப் பரிந்துரைகள் மேலோங்குவதற்கு, மருத்துவமனைகளுக்கு இடையிலான  போட்டியும் லாபக்கணக்கும்கூட காரணம். இந்த அத்தனை கூச்சலையும், பதற்றத்தையும், அவசரங்களையும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, அவசியப்பட்டால் நவீனத்தின் சில உயிர்ச்சத்து மாத்திரைகளையும், கருத்தரிப்பை உசிதமாக்கும் உன்னத உணவு களையும் சில காலம் சரியாகச் சாப்பிட்டுவிட்டு அன்பையும் காதலையும் மட்டும் கன்னா பின்னாவெனக் கட்டுக்கடங்காமல் கொள்ளுங்கள். கருத்தரிப்பு சாத்தியமாகக்கூடும்.

காதலைப் பிரசவிக்கும்முன்னே சொன்ன டெஸ்டோஸ்டிரோனும், கார்டிசாலும், வாசோ பிரசினும் (Vasopressin) ஆக்ஸிடோசினும்தான் இன்னொரு வழியில் கருத்தரிப்பையும் நிகழ்த்துகின்றன. முத்தம் கேட்கத் தூண்டும் ஹார்மோன்தான் முட்டை வளர்ச்சிக்கு உதவுகிறது. கட்டிப்பிடிக்கத் தூண்டும் ஹார்மோன்தான் சினைமுட்டை வெடிக்க வழிவகுக்கிறது. மூளைக்குள் பல்பு எரியவைக்கும் ரசாயனம்தான் உயிரணுவை உசேன் போல்ட்டாக ஓடவைக்கிறது. காதலும் கருவாக்கமும் வாழ்க்கை நாணயத்தின் இரு பக்கங்கள். காதலை முன்னிறுத்தி, அந்த நாணயத்தைச் சுண்டி விளையாடுங்கள். கீழிறங்குகையில் கரு வந்து நிற்கும். ஒருவேளை மாறினால்கூட, காதலேதான் எப்போதும் வந்து நிற்கும்!

- பிறப்போம்...

உயிர்மெய் - 17

கீழ்க்கண்ட ஐந்தில் மூன்றைச் செய்தால், ஆக்ஸிடோசின் அளவளாவும்.

1. கட்டிப்பிடியுங்கள். கஷ்டப்பட்டாவது ரோஜா வாங்கித் தாருங்கள்.

2. வாட்ஸ்அப்பில் வசனம் எழுதாமல், அன்பாக ஒரு சொல் பேச அழையுங்கள்.

3. நடை, நீச்சல், உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி என எதையாவது தினமும் செய்யுங்கள்.

4. வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

5. இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் இரு காதுகளுக்கு வாடகைக்கு வையுங்கள். வைரமுத்துவை அடிக்கடி அங்கு வந்து போகச் சொல்லுங்கள். இசை, ஆக்ஸிடோசினை ஏராளமாகப் பெருக்கும்.

ட்ரினலின், கார்டிசால் எல்லாம் பரபரப்பான பரவசத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்கள். அதனால்தான் நாய் விரட்டினாலும் சரி, நாயகன் விரட்டினாலும் சரி... சுரக்கிறது. இந்த ஹார்மோன் இயல்பாகச் சுரக்க வழி, ஒரு சின்ன சர்ப்ரைஸ். ``வா... எல்லோருமா சேர்ந்துபோய் ஆடித்தள்ளுபடியில தீபாவளிக்குத் துணி எடுத்துக்கலாம்’’ எனக் கூட்டிப்போகும் புத்திசாலித்தனத்தை யாரும் மெச்சப் போவதில்லை. `நீ முதன்முதலா எனக்குக் கொடுத்த சாக்லேட் தாள் கலர்ல, நல்லியில, ஜூட் ஃபைபர் காட்டன்ல ஒரு சேலை பார்த்தேன். உன் ஞாபகம் வந்தது. வாங்கிட்டேன்டா’ எனச் சொல்லி, பின்னிரவில் ஒளித்துவைத்து எடுத்துக் கொடுங்கள். அட்ரினலின் அடிச்சுப் பறந்து சுரக்கும். அடுத்த எபிசோடில் பாப்பா பிறக்கும்.