Published:Updated:

சொல் அல்ல செயல் - 17

சொல் அல்ல செயல் - 17
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 17

அதிஷா - ஓவியங்கள்: ஹாசிப்கான்

‘`அவர் எல்லோரையும் கூப்பிட்டுக் கையைப் பிடிச்சிக்கிட்டுக் கண் கலங்குறார். ஏதேதோ சொல்ல ட்ரை பண்றாரு. அவரால சுத்தமா பேச முடியலை. தொண்டைல டியூப் மாட்டியிருக்கு, ஆனாலும் ஏதோ சொல்றார். என்னையும் கூப்பிடுவார்னு அவர் கண்ணையே பார்த்துக்கிட்டு நிக்கிறேன். ஆனா, அவர் என்னை மட்டும் பக்கத்துல கூப்பிடவே இல்லை. இவங்கள்லாம் அவருக்கு என்ன செஞ்சிருக்காங்க, நான்தானே எப்பவும் அவரைப் பார்த்துக்கிட்டேன். நான் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன்...’’ அர்விந்த் சொல்லும்போதே அவனுடைய கண்கள் சிவந்திருந்தன.  கரங்கள் நடுங்கின.  அவற்றை நான் பற்றிக்கொண்டேன். கைகள் குளிர்ந்தும் ஈரமாயும் இருந்தன. மருத்துவமனை வளாகத்தின் சோகமுகங்களுக்கும் மருந்து வாசனைகளுக்கும் நடுவே மரநிழலில் அமர்ந்திருந்தோம்.

அர்விந்த்தின் அப்பாவுக்கு உடல்நலமின்றி மரணத்துக்கு மிக மிக அருகில் இருந்தார். அது அவருக்கும் தெரிந்தே இருந்தது. எல்லோரையும்போலவே அவரும் அதற்கெனக் காத்திருந்தார்.

அர்விந்த் அலுவலகத்தில் என்னுடைய சீனியர். மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக சென்னைக்கே மாற்றினான். அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. மகனுடைய அன்புக்காகச் சென்னைக்கு வந்தார். 

சொல் அல்ல செயல் - 17

பெரிய மருத்துவமனை ஒன்றில் அர்விந்த்தின் தந்தை அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ச்சியான சிகிச்சைகள் அவரை உருமாற்றி வைத்திருந்தன.  கம்பீரமான மனிதர். அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். எந்தக் காரியத்தைச் செய்தாலும் கண்டிப்பான ஒழுங்கோடு செய்வார்.

மிலிட்ரி ஒழுங்கைக் கடைப்பிடித்தாலும், அதை மற்றவர்கள் மேல் திணிக்கிற குணம் அவருக்கு இருக்கவில்லை. மகனுக்கு எல்லா சுதந்திரங்களையும் வழங்கியிருந்தார். அர்விந்த் அலுவலகத்திலேயே ஒரு பெண்ணைக் காதலித்தபோது அவரே திருமணத்தை நடத்திவைத்தார்.  இருவருக்கும் இடையே மிகச்சிறிய சண்டைதான். அர்விந்த்தின் பிடிவாதத்தால் பெரிதாய் வளர்ந்து நின்றது. அதுதான் மரணப்படுக்கையில்கூட அர்விந்த்தின் முகம் பார்க்க மறுக்கிற அளவுக்கு அழைத்துச்சென்றது.

மரணப்படுக்கையிலும் விட்டுவிடாமல் பற்றிவைத்திருக்கிற வைராக்கியங்கள் அவமானத்தின் கத்திகளால் செதுக்கப்பட்டவை.

``பேங்க்ல லோன் போட்டு வீடு வாங்கினதை அவர் விரும்பலை. அவர் பழைய ஆள். பணம் சேர்த்துதான் வீடு வாங்கணும்னு வலியுறுத்திச் சொன்னார். வீடு வாங்கினப்புறம் ரொம்பப் பணக்கஷ்டம். நான் தப்பான டெசிசன் எடுத்துட்டேன்னு சொல்லிச் சொல்லித் திட்டிட்டே இருந்தார். `வீட்டை வித்திடு, கடனை அடைச்சிட்டு சேவிங்ஸ் பண்ணு’னு சொல்லிட்டே இருப்பார். ஒருநாள் நான் கோபப்பட்டு `என் வாழ்க்கையை என்னால பாத்துக்க முடியும். சும்மா நொச்சு நொச்சுனு பேசிட்டே இருக்காதீங்க, உங்களுக்கு இதெல்லாம் புரியாது’னு சொல்லிட்டேன்... அவ்ளோதான். அன்னிக்கு அவருக்கு அப்படி ஒரு கோபம் வந்திருச்சு.

சொல் அல்ல செயல் - 17


`உன் காசுல உட்கார்ந்து சாப்பிடறேன்னுதானே என்னை இப்படில்லாம் பேசுற. நான் ஊருக்கே போறேன்; ரேஷன் கடைல அரிசி குடுக்குறான், பென்ஷன் வருது, நான் பாட்டுக்கு ராஜா மாதிரி தனியாவே வாழ்ந்துக்குவேன். இனிமே உன் வீட்ல ஒருநாள்கூட இருக்க மாட்டேன்’னு துடியா துடிக்க, எனக்கு சுர்ருனு ஏறிடுச்சு.

 எதிர்ல நிக்கிறவர் என் அப்பா. என்மேல முப்பது வருஷமா அன்பு வெச்சிருக்கிற ஒருத்தர்னு நான் அந்த நேரத்துல பேசாம இருந்திருக்கணும்... ஆனால், நான் `அவ்ளோ மானம் ரோஷம் இருந்தா வெளியே போங்க, எதுக்கு இங்க உக்காந்து என் காசுல  திங்கிறீங்க’னு ஒரு வேகத்துல சொல்லிட்டேன். அவர் அதை எதிர்பார்க்கலை, நானே எதிர்பார்க்கலை.

அம்மாகூட என்மேல கோபப்பட்டு அடிச்சிருச்சு, அன்னைக்கே ஊருக்குக் கிளம்பின அப்பாவை, அம்மாதான் செத்துப்போயிருவேன்னு மிரட்டி இங்கேயே தங்க வெச்சுது. அம்மாதான் அப்பாவை சமாதானம் பண்ணிச்சு, ஆனா, அதுக்கப்புறம் அப்பா என்கிட்ட பேசவே இல்ல’’ மருத்துவமனைக்கு வெளியே இரண்டு பக்கமும் நீண்டிருந்த புல்வெளிக்கு நடுவே நடந்தபடி சொல்லிக்கொண்டிருந்தான் அர்விந்த்.

‘`எனக்கு ஈகோ; பிடிவாதம். நான் என்ன தப்பு செஞ்சேன், அவர்கிட்ட மன்னிப்பு கேக்கணுமான்னு இருந்துட்டேன். உடனே பேசிச் சரி செஞ்சிருக்கணும். அவர் வந்து பேசட்டும்னு இருந்துட்டேன். போனவாரம் என்னால தாங்கவே முடியலை, முழிச்சிதான் இருந்தார். பக்கத்துல போய் கட்டில்ல உக்காந்து காலைப் பிடிச்சிக்கிட்டேன். `அப்பா அப்பா’னு கூப்பிடுறேன். திரும்பியே பாக்கலை. அப்படியே அழுத்தமா உக்காந்திருக்கார். `அப்பா மன்னிச்சிருப்பா,  நான் உன் புள்ளைதானே உனக்கு  இருக்குற கோபத்துல பத்து பெர்சென்டாச்சும் எனக்கும் இருக்கும்தானே’னு புலம்புறேன். கண்ணு கலங்குது. பதிலே சொல்லாம படுத்திருக்கார்.

அதுக்கப்புறம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டுட்டேன் தெரியுமா? ஆனா, என் முகத்தைக் கூட பார்க்க மாட்டேங்குறார். பிடிவாதமா இருக்கார். செத்தாலும் என் முகத்துல முழிக்கக்கூடாதுனு. அப்படி என்ன வைராக்கியம் என் மேலனு தோணும்...’’ சொல்லிவிட்டு அர்விந்த் முகத்தை கர்சீப்பால் துடைத்துக்கொண்டான். ‘‘அவர் செத்துப்போகப் போறார்னுதான் நீ இப்போ மன்னிப்புக் கேட்கிறேன்னு நினைக்கிறார்டானு சொல்லிட்டு அம்மா அழுவுது’’ என்றான். அர்விந்த்தின் அப்பா  சில வாரங்களிலேயே இறந்துபோனார். கடைசிவரை பேசாமலே செத்துப்போனார்.

சொல் அல்ல செயல் - 17

அப்பா, அர்விந்த்துக்கு வாழ்நாளுக்குமான ஒரு தண்டனையைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார். அவர் இறந்து பல மாதங்கள் ஆகியும் அவனை அது விரட்டிக்கொண்டே இருந்தது. அதிலிருந்து மீண்டு வர, போராடிக்கொண்டிருந்தான்.

‘`என்னோட வைராக்கியமும் அவரோடதும் வேற வேற, அவர் அவமானப்பட்டவர். நான்தான் அவர்கிட்ட ஸாரி கேட்டிருக்கணும்டா... ஒரு  முறையாவது அஞ்சு நிமிஷம் ஒதுக்கி ஸாரி கேட்டிருக்கணும்.  உடனே கால்ல விழுந்திருக்கணும். அப்படி என்னடா வைராக்கியம் வேண்டிக் கெடக்கு எனக்கு? நான் என்ன பெரிய புடுங்கியா? அவர் வளர்த்த பையன்தானே. அப்படி என்ன அவர் தப்பா கேட்டுட்டார். பையன் கஷ்டப்படுறதைத் தாங்க முடியாம புலம்பியிருக்கார். எனக்குத் திமிருடா, அந்த மனுஷன் எங்கிட்ட பேசாம இருந்தா, என்ன இழந்திடப்போறோம்கிற திமிரு. அதனாலதானே நாம இறங்கிப் போறதில்ல...

ஒரே வீட்ல நான் ஒருபக்கம், அவர் ஒருபக்கம்னு முகத்தைக்கூடப் பார்த்துக்காம கிட்டத்தட்ட மூணு வருஷம் இருந்திருக்கோம். இந்த வீட்ல இருந்த ஒவ்வொரு நொடியும் அவருக்கு எவ்வளவு அவமானமா இருந்திருக்கும்’’ என்று கேன்டீனில்,  மீட்டிங் ரூமில், பக்கத்து சீட்டில், பார்க்கில் என அடுத்தடுத்த நாள்களில் புலம்பித் தீர்த்தான். சில நேரங்களில் நம்முடைய ஆற்றாமை அத்தனையையும் புலம்பித்தான் தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரே பிரச்னை, நாம் புலம்புவதைக் காதுகொடுத்துக் கேட்க அருகில் யாராவது இருக்க வேண்டும். கேட்க யாருமே இல்லாமல் போகும்போது நாமும் இல்லாமல் போய்விட நினைக்கிறோம்.

அர்விந்த் திரும்பத் திரும்ப அந்த ஐந்து நிமிடங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அந்த ஐந்து நிமிடங்கள் அர்விந்த்துக்குமேகூட வீட்டில் எத்தகைய மகிழ்ச்சியான சூழலை உருவாக்கியிருக்கும். ஒரே வீட்டில் எதிரிகளைப்போல வாழ வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அந்த ஐந்து நிமிடங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அர்விந்த் உணர்வதற்கு அவனுடைய அப்பா செத்துப்போக வேண்டியதாக இருந்தது.

அர்விந்த்தை அந்த ஐந்து நிமிடங்களை நோக்கிச் செல்லாமல் பார்த்துக்கொண்டது எது? அவனுடைய வெட்டி வைராக்கியம். அர்விந்த்துக்கு அப்பாவிடம் இருந்த அந்த வைராக்கியம், நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள்மீது ஏராளமாக உண்டு.

நம் வெட்டி வைராக்கியங்கள் அசிங்கமானவை. அது யார் நம்மீது அதிக அன்பையும் காதலையும் சினேகத்தையும் பாசத்தையும் ஆண்டாண்டுக் காலமாகக் கொட்டினார்களோ, அல்லது நமக்கு அன்பும் காதலும் இருந்ததோ அவர்கள் மீதுதான் வலிமையோடு வெளிப்படும். அந்த வெட்டி வைராக்கியம்தான் அவர்களை எப்போதும் நெருங்கவே விடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும். நாம் நம் வெட்டி வைராக்கியங்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம். அதன் சொல்படி கேட்டு நடக்கிறோம். மரணம் ஒன்றைத்தவிர வேறு எதுவுமே நம் வைராக்கியங்களை உடைக்க முடிவதில்லை.

நண்பனின் திருமணத்துக்காகப் பள்ளி நண்பர்கள் ஒட்டுமொத்தமாகக் கூடியிருந்தோம். அசோக்கும் அங்கே  வந்திருந்தான். பள்ளிக்காலத்தில் பல ஆண்டுகள் அவன் என்னுடைய மிக நெருக்கமான நண்பனாக இருந்தவன். அவனே பின்னாளில் நான் மிகவும் வெறுக்கிறவனாக மாறிப்போயிருந்தான். அவன் மீதான வெறுப்புக்குக் காரணம், கிரிக்கெட் போட்டி ஒன்றில் அவன் எனக்குத் தவறாக அவுட் கொடுத்துவிட்டான் என்பது மட்டும்தான். அன்றிலிருந்து அவனை வெறுக்க ஆரம்பித்திருந்தேன். அதற்குப் பிறகு அவன் எது செய்தாலும் அது தவறானதாக மோசமானதாகத் தெரிய ஆரம்பித்தது. அவனைப்பற்றி எல்லோரிடமும் மோசமாகப் பேசத்தொடங்கியிருந்தேன். பள்ளியிலும் அவனிடம் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு  நடந்த சந்திப்பு. எல்லோரும் ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டிருக்க, அசோக் மட்டும் என்னிடம் பேச முயற்சி செய்துகொண்டே இருந்தான். அவனிடம் பேசாமல் தவிர்த்துக்கொண்டே இருந்தேன். உள்ளுக்குள் பழைய பகை விழித்துக்கொண்டது. அவனாக வந்து பேசியபோதும்கூட ஒன்றிரண்டு சொற்களில் பதில் சொன்னேன். மனித மனம் அன்பைவிடவும், மௌனமாக உமிழ்கிற வெறுப்பை அத்தனை வேகமாகக் கண்டுபிடித்துவிடுகிறது.

சொல் அல்ல செயல் - 17

அன்றைய இரவு மொட்டைமாடியில் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசினான். ‘`ஏன்டா இப்படி இருக்க பைத்தியக்காரா, நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இத்தனை வருஷமா என் மேல வெறுப்பா இருக்க, சரி நான் பண்ணினது தப்புதான்டா சாமி. அதுக்காக உன்கிட்ட மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்டுக்கிறேன். போதுமா’’ என்று படபடவெனப் பேசினான். அவன் பேசப்பேச என்னுடைய பத்தாண்டுக் கால வெறுப்பும் கரையத் தொடங்கியதைக் கண்டேன். அவன்மீது திடீரென ஓர் அன்பு பெருக்கெடுப்பதை உணர்ந்தேன். எனது அகம்பாவமும் பிடிவாதமும் நிலைகுலைந்து சரிவதைப் பார்த்தேன். அவனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் கொடுக்காமல் கிளம்பிச்சென்றுவிட்டான்.

அவன் வரட்டும், அவன் மன்னிப்பு கேட்கட்டும் என இத்தனை ஆண்டுகளும் காத்திருந்திருக்கிறேன்; அல்பமான ஒரு காரணத்துக்காக. ஆனால், அவனோ அதையெல்லாம் மறந்து ஒரே நொடியில் அனைத்தையும் உடைத்துப் போட்டுவிட்டுச் சென்றான்; வெறும் ஐந்தே நிமிடங்களில். அவன் என்னிடம் பேச எந்தக் காரணமும் இருக்கவில்லை. இருந்தும் அசோக் ஏன் வந்து பேசினான்?

பிரிவுக்கான காரணம்கூட மறந்துபோயிருக்கும். அதன் சுவடுகள் எல்லாம் அழிந்துபோயிருக்கும். இருந்தும் முகத்தைத்  திருப்பிக்கொண்டு நடப்போம். ஒரு சிறிய மன்னிப்பு போதுமானதாயிருக்கும், ஒரு சின்னச் சரணடைதல் போதுமானதாயிருக்கும்.  ஆனால்,  நமக்கு மனிதர்களைவிட வைராக்கியங்கள் எப்போதும் பெரியதாகவே இருக்கின்றன. நம் மனசாட்சியைக்கூட இந்த வைராக்கியங்களே இயக்குகின்றன. ஆனால், அசோக் வைராக்கியங்களைவிட அன்பைத் தேர்ந்தெடுக்கிறவனாக இருந்தான்.

ப்ரீத்தியும் விக்னேஷும் காதலித்துக் கொண்டிருந்தனர். ப்ரீத்தி அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பொதுவெளியில் வைத்துக் காட்டிக்கொண்டிருப்பான். அது எங்கள் நண்பர்களுக்குப் பிடிக்காது. ஆனால், விக்னேஷ் அதையெல்லாம் ஒருவிதப் பெருமித உணர்வோடு வெளிப்படையாகச் செய்துகொண்டிருந்தான். ப்ரீத்தியும் எங்கள் நட்பு வட்டத்தில் இருந்தாள். விக்னேஷின் செய்கை பிடிக்காமல், நண்பர்களில் ஒருவன் ப்ரீத்தியிடம் `உன் மெசேஜ்லாம் அவன் காட்றான்’ எனச் சொல்லிவிட்டான். இருவருக்கும் பெரிய சண்டை வரப்போகிறது என நினைத்தோம். ஆனால், எங்கள் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக ப்ரீத்தி, விக்னேஷிடம் எங்களுடைய நட்பைத் துண்டித்துக்கொள்ளச் சொல்லிவிட்டாள். விக்னேஷ் எங்களிடமிருந்து விலகிவிட்டான்.

ப்ரீத்தியிடம் பேசியபோது, அவள் விக்னேஷின் செயலை ஒரு பொருட்டாகவும் நினைக்கவில்லை என்பது தெரிந்தது. அவளுக்கு விக்னேஷை விடவும் உலகில் வேறு எதுவுமே முக்கியமில்லை என்பதுபோலப் பேசினாள். ப்ரீத்தி, விக்னேஷிடம் அவன் செய்கைக்காகச் சண்டை போட்டிருக்கிறாள். அதற்காக, யாருக்காகவும் எதற்காகவும் அவனை விட்டுக்கொடுக்க அவள் தயாராக இல்லை. காதல்!

ஆனால், ப்ரீத்தியும் விக்னேஷும் சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும்கூட இல்லை. முடிந்தவரை இருவரும் மற்றவரைப் பொது இடங்களில் தவிர்க்கவும் தொடங்கினர். எங்களுக்கு இந்தத் திடீர் பிரிவு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

ப்ரீத்திக்கு விக்னேஷுக்கு முன்பே ஒருவரோடு காதல் இருந்தது. அது ப்ரேக்அப் ஆனதால்தான் விக்னேஷைக் காதலிக்கவே தொடங்கினாள். ஆனால், அதை விக்னேஷிடம் சொல்லவில்லை. தானாகவே விஷயம் கேள்விப்பட்டு விக்னேஷ் விசாரித்திருக்கிறான். ப்ரீத்தி ``அதுக்கென்னடா, நான் இப்போ எப்படி இருக்கேங்கிறதுதான் உனக்கு முக்கியம்’’ என்பதை மட்டுமே பதிலாகச் சொல்ல விக்னேஷுக்குக் கோபம் வந்துவிட்டது. ப்ரீத்தியை மோசமாகத் திட்டி அடித்துவிட்டான். அவன் அடித்ததில் ப்ரீத்தியின் மூக்குத்தி உடைந்து மூக்கு கிழிந்துவிட்டது. அவ்வளவுதான். இருவருக்குமான காதல் முடிந்துவிட்டது. இது நடந்தது 2007-ல். இன்னமும் ப்ரீத்தியும் விக்னேஷும் பேசிக்கொள்வதில்லை. விக்னேஷ் எத்தனையோ முயன்றும் ப்ரீத்தி இறங்கி வரவேயில்லை.

``ஏன் இன்னும் அவன்மேல கோபமாயிருக்கே. அவன் உன்கிட்ட பேசணும்னு நினைக்கிறான். அட்லீஸ்ட் ஒரு ஃப்ரெண்டாவாச்சும் அஞ்சு நிமிஷம் அவன்கிட்ட பேசு’’ என்று சமாதான முயற்சிகளில் நண்பர்கள் இறங்கினோம். ஆனால், ப்ரீத்தி உறுதியாக இருந்தாள். ``இது என்னோட சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்னை. நான் அவன்கிட்ட உண்மையாதான் இருந்தேன். நேர்மையா நடந்துகிட்டேன். இதை அவன்கிட்ட சொல்லலைங்கிறது நிச்சயம் தப்புதான். அதை அப்பவே பேசித் தீர்த்திருக்கலாம். ஆனா, அவன் பேசத்தயாரா இல்லை, தண்டிக்க வந்தான். அதை எப்படி ஏத்துக்க முடியும். இது தண்டிக்கக்கூடிய அளவுக்குப் பெரிய பிரச்னையா? அவனை என் வாழ்க்கையில இருந்து அழிச்சிட்டேன். அவ்ளோதான்’’ என்றாள் ப்ரீத்தி.

ப்ரீத்தியிடம் பேச எங்களிடம் எந்தப் பதிலும் இல்லை. விக்னேஷ் இப்போதும் புலம்பிக்கொண்டி ருக்கிறான். அவன் செய்த தவறுக்காக வருந்திக் கொண்டேதான் இருக்கிறான். ஆனால், ப்ரீத்தியின் வைராக்கியம் அத்தனை கடுமையானதாக இருந்தது. அது சுயமரியாதையால் நிறைந்திருந்தது.

அர்விந்த்தின் அப்பாவுக்கு இருந்ததும் இத்தகைய வைராக்கியம்தான். இத்தகைய வைராக்கியங்கள் தவிர்க்க முடியாதவை. அவை மிகப்பெரிய அவமானங்களின் வழி உருவாகிறவை. நம்முடைய சுயமரியாதையை விட்டுக்கொடுத்துவிட்டு எந்த உறவிலும் நம்மால் அரை நொடிகூட உண்மையாக இருக்கவே முடியாது என்று நம்புபவை. இத்தகைய வைராக்கியங்கள் நம்மைத் தற்கொலைகளை நோக்கித் தள்ளும் அல்லது ஒட்டுமொத்தமாக தொடர்புடையவர்களை விலக்கி வைத்துவிடும்.  ஆரம்பத்திலேயே சரிசெய்யத் தவறினால் உறவுகளை இழக்க நேரிடும். ஆனால், எல்லா வைராக்கியங்களும் அத்தனை வலிமையானவை அல்ல. பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வைராக்கியங்கள் எல்லாம், ஆற அமர சிந்தித்துப் பார்த்தால், சில்லறைக் காரணங்களுக்காகத்தான் இருக்கும்!

வீட்டில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் பேசிக்கொள்ளாமலேயே பல ஆண்டுகளாக வாழ்கிற எத்தனை அப்பா அம்மாக்களை, அப்பா மகள்களை, அண்ணன் தம்பிகளை, கணவன் மனைவிகளைக் கடந்திருப்போம். எத்தனை நண்பர்களை, காதலர்களைப் பார்த்திருப்போம். எல்லோருக்குமே தேவை ஆறுதலான ஐந்து நிமிடங்கள்தான். சின்னச் சின்னப் பிரச்னைகளுக்காகப் பகையோடு ஒதுங்கி இருப்பவர்களை ஒரு சின்னப் புன்முறுவல்கூடச் சேர்த்துவைத்துவிடும். ஐந்து நிமிட ஆறுதல்கூட அரை நூற்றாண்டு வெறுப்பைக் கரைத்துவிடும். ஆனால், நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா?

நாம் யாரிடமெல்லாம் இப்படி வெட்டி வைராக்கியத்தோடு இருக்கிறோம்? எதற்காகப் பேசாமல் இருக்கிறோம்? அவரோடு பேசாமல் இருக்கவும், சமாதான முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்கவும் நம்மைத் தடுத்து வைத்திருக்கிற காரணங்கள் என்னென்ன என்பதைப் பட்டியல் போட்டு எழுதிப் பார்க்கலாம். அதில் பாதிக்கும் மேல் காரணங்கள்கூட மறந்துபோயிருக்கும். மீதியெல்லாம் ஒரே ஒரு புன்முறுவலில், ஒரு நேர்ப்பேச்சில், அணுக்கமான பார்வையில் முடிந்துபோகக்கூடியவையாகத்தான் இருக்கும். ஆனால், நம்மிடம் இருக்கிறதா அந்த ஐந்து நிமிடங்கள்?

- கேள்வி கேட்கலாம்...