Published:Updated:

உயிர்மெய் - 18

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

டந்த வாரம், நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் நடந்ததாக வெளியான ஒரு செய்தி அதிகம் உலுக்கிவிட்டது. ஓர் அரசு மருத்துவமனையில் அவசியமே இல்லாமல், அறுத்து எறியப்பட்ட கர்ப்பப்பைகள் குறித்த செய்தி அது. கர்நாடகாவின், மாண்டியா மாவட்டத்தில்  2005-2012-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஒரே மருத்துவர் 2,478 கர்ப்பப்பை  நீக்க அறுவைசிகிச்சைகளை, தான் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் செய்திருக்கிறாராம். எவ்வித முகாந்திரமும் இல்லாமல், ஸ்கேன், பயாப்ஸி உள்ளிட்ட அறுவைசிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தும் எந்த அடிப்படைச் சோதனையும் செய்யாமல், பக்கத்திலேயே இருக்கும் மகளிர் மருத்துவரைக்கூட ஆலோசிக்காமல், அந்த மருத்துவர் கர்ப்பப்பைகளை அறுத்து எறிந்திருக்கிறார். நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணையில், ``ரொம்ப வலியில் கஷ்டப்பட்டாங்க. அதான் 10,000, 20,000 ரூபாய்னு வாங்கிட்டு விடுதலை கொடுத்தேன்” என்று சொன்னாராம் அந்த மருத்துவர். இப்போது அங்கிருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அவரைத் தூக்கி உள்ளே போடச் சொல்லியிருக்கிறது.`அவர் கர்நாடகாவின் சிறையில் சகல வசதிகளோடு இருக்கிறாரா?’ என்பதை ரூபா மேடத்திடம்தான் ஒரு போன் போட்டுக் கேட்க வேண்டும்.

``ஆபரேஷன் செய்ற அளவுக்கு அப்படி என்ன வலி... மாதவிடாய் வலிக்கெல்லாம் ஆபரேஷனா? டி.வி-யில் சர்க்கஸ், ஜிம்னாஸியம்லாம் அந்த நேரத்தில் செய்ற மாதிரி காட்டுறானே!” என எல்லோரையும் கேட்டுவிட முடியாது. மாதவிடாய் சமயத்து வலி சில நேரங்களில் சாதாரண வெந்தயத்தில் சரியாகும். சில நேரங்களில் பழுத்து வெந்த ஈயக்கம்பியை வயிற்றில் செருகியது போன்ற வயிற்றுவலியைத் தோற்றுவிக்கும். மூன்று நான்கு நாள்கள் அந்த வலியைக் கடந்து செல்வதற்குள், கடும் சோர்வையும், வலியையும், மனச்சுமையையும், சில நேரத்தில் அதீத ரத்தப்போக்கையும் தந்து படுத்தி எடுத்துவிடும். இந்த நிகழ்வைத் தமிழ் மருத்துவம் `பெரும்பாடு’ என்றும், நவீன மருத்துவம்  `Dysmenorrhoea’ என்றும் சொல்கின்றன. 

உயிர்மெய் - 18

சாதாரணமாக லேசான வலியுடன் மாதா மாதம் அது கடந்து போகாமல், இப்படித் தீவிர  வலி வர, `அடினோமையோசிஸ்’ (Adenomyosis) அல்லது `எண்டோமெட்ரியோசிஸ்’ (Endometriosis)  எனும் ஒரு கர்ப்பப்பை நோய் காரணமாக இருக்கலாம். கர்ப்பப்பைக்கு உள்ளே இருக்க வேண்டிய சவ்வான எண்டோமெட்ரியம்,  கர்ப்பப்பைச் சதைக்குள்ளும், வெளிப்புறத்திலும், சினைப்பையைச் சூழ்ந்தும் இருப்பதுதான் இந்த நோய்க்குக் காரணம். இன்னும் புரியும்படியாகச் சொல்லவேண்டுமென்றால், குழந்தை பிறந்த பின்னர் வெளியே குழந்தை அமைதியாகப் படுத்து உறங்க, அம்மா வீட்டில் ஒரு தூளி (தொட்டில்) கட்டுவாள். அதேபோல,  பூப்பெய்திய நாள் முதல், பின்னாளில் தான் கருத்தரித்து வளர்க்கப்போகும் குழந்தை, பத்து மாதங்கள் அமைதியாகவும், குட்டிக்கரணம் போட்டும், ஆடிப்பாடியும் தூங்க, அவள் தன் குருதியைச் சேர்த்துத் தடவி, கர்ப்பப்பைக்குள் கட்டும் தூளிதான் எண்டோமெட்ரியப் படலம். அந்தத் தொட்டிலில்தான் கருத்தரித்த கணத்தில் இருந்து  கருமுட்டை, தாயோடு தொப்புள்கொடியின் மூலம் ஒட்டி வளரும். இந்த அளவுக்கு முக்கியமான கர்ப்பப்பையின் உட்சுவரான படலம், ஏதோ ஒரு காரணத்தால் கட்டற்ற குறுக்கும் நெடுக்குமாக, உள்ளே வெளியே எனச் சீர்கெட்டு கட்டப்படுவதைத்தான் `எண்டோமெட்ரியோசிஸ்’ என்பார்கள். `இன்னும் புரியலையே’ எனச் சந்தேகம் வந்ததென்றால், டாக்டர் கூகுளைப் போய்க் கேட்காமல், உங்கள் குடும்ப டாக்டர் கோகுலையோ, கோகிலாவையோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் ஒருவேளை நெர்வஸாகி, “நீங்க ஒரு தபா நீட் எழுதி, பாஸ் பண்ணி, டாக்டர் ஆகித்தான் முழுசா தெரிஞ்சுக்கணும்” எனக் கடிந்து சொல்லக்கூடும். புரிந்துகொள்ளவும் புரியும்படிச் சொல்லவும் அவ்வளவு கஷ்டமான, கடவுள் போட்ட சிலபஸ் அது.

`எப்போ ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் கண் சிமிட்டி, சாக்லேட் கொடுக்கலாம்?’ எனக் காத்திருக்கும்பொழுதில், ``உன் சினைப்பையில் இருப்பது சாதாரண நீர்க்கட்டி இல்லை. அது சாக்லேட் சிஸ்ட் (Chocolate Cyst)’’ எனச் சொல்கிறார்கள்.  `இவ்வளவு வலிக்கு `சாக்லேட்’ என இனிக்கிற பெயர் வைக்கிற ஒரே கூட்டம் நீங்கதான்’ என மருத்துவரைக் கடிந்துகொள்ளும் அந்தப் பெண்ணுக்குத் தெரியாது, அல்ட்ரா சவுண்ட் படத்தில் முட்டைகள் கோத்து அடுக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டிய  சினைப்பையில் குருதி தேங்கியிருக்கும் அந்தக் கட்டி, `எண்டோமெட்ரியோசிஸ் கட்டி’ என்று.

அதீத ரத்தப்போக்கைக் கொடுத்து, அதனால் ரத்தச்சோகையையும் (அனீமியா) கொசுறாகப் பெறும் இந்த எண்டோமெட்ரியோசிஸில் இன்னும் வருத்தப்படக்கூடிய விஷயம், இதற்கு  தற்காலிக வலி நிவாரணியைத் தாண்டி, நவீன மருத்துவத்தில் மருத்துவத் தீர்வு அநேகமாக இல்லை. அறுவைசிகிச்சை செய்து நீக்கிவிடுவது அல்லது  ஹார்மோன் அடங்கிய மருத்துவக் குப்பியைக் கர்ப்பப்பைக்குள்ளேயே செருகிவைப்பதுதான், தற்போதைய சாத்தியங்கள். இந்த இரண்டுமே குழந்தைப்பேற்றுக்குத் தடைபோடக்கூடியவை. 

நாற்பது வயதில் இந்தப் பிரச்னை வந்தால், இரண்டு  குழந்தைகளுடன் இருக்கும் அவள், மேலே சொன்ன இரு சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து, தொந்தரவில் இருந்து விடுபடலாம்தான். குழந்தைக்காக ஏங்கி உருகும் பெண்ணுக்கு இந்த முடிவு சாத்தியம் அல்ல. ஒவ்வொரு முறை வலி வரும்போதும்,  ``என் அழகுச் செல்லம் உறங்கி, கிறங்கி இருக்கப்போகும் தொட்டில் இந்தக் கர்ப்பப்பை.  அவள் ஆடிப்பாடி, தூங்கித் திளைத்து வளரப் போகும் இல்லம். ஏம்ப்பா இப்படிப் பாடாப் படுத்துறே?’’ என அந்த வலியில், ஒரு கண்ணில் குழந்தைக்காகவும் இன்னொரு கண்ணில் கர்ப்பப்பைக்காகவும் கண்ணீருடன் அவள் காத்திருப்பாள்.

ஒவ்வொருமுறை ஏற்படுகிற வலி மட்டும் அவளுக்குப் பிரச்னை அல்ல. மாதவிடாய் தொடங்கி,  சில நேரங்களில் 15-20  நாள்களுக்குத் தொடரும் ரத்தப்போக்கில், இரவில் அன்போடு உச்சிமுகர வரும் கணவனிடம் ``இன்னும் முடியலைங்க...  வந்துக்கிட்டுதாங்க  இருக்கு...’’ என அவன் மார்பில் புதைந்து `அதற்கு அடுத்த கட்டம் சாத்தியமில்லை’ என விளக்குவதன் கொடுமையில் ஒவ்வொரு நாளும் மனம் உடைந்துபோகும். பற்றாக்குறைக்கு, ``இன்றைக்கு டி 20 ஆயிடுச்சே... சேர்ந்தீங்களா?’’ எனக் கேட்கும் டாக்டரையும், டாக்டராகவே நினைத்துப் பேசித் திரியும் வீட்டின் சில பழைய ஜந்து பந்துக்களையும் மண்டையில் டி20 கடைசி ஓவரில் விளாசுவதுபோல விளாச வேண்டும் எனத் தோன்றும். `எப்போ வருவாரோ..?’ என இறைக்குக் காத்திருப்பது இன்பம். `எப்போ முடியுமோ?’ என இந்தச் சிறைக்கு வருந்தியிருப்பதன் வேதனை அவர்கள் யாருக்கும் தெரிவதில்லை என உரக்கக் கத்த வேண்டும்போலத் தோன்றும். ``இப்பதானே முடிஞ்சுது... அதுக்குள்ளேயா?” என அடுத்த வாரக் காலையில் எண்டோமெட்ரியோசிஸ் வலியுடன் கதறும் பெண்கள் இங்கே அதிகமாவதற்குக் காரணம் சரியாக, துல்லியமாகத் தெரியவில்லை.

உயிர்மெய் - 18

`எண்டோமெட்ரியோசிஸின் சின்னத்தம்பி’ என அடினோமையோசிஸைச் சொல்லலாம். முதலாமவன், கர்ப்பப்பைக்கு வெளியே சேட்டை செய்பவன் என்றால், இரண்டாமவன், கர்ப்பப்பையின் சதைக்கு ஊடாகவே வளர்ந்து சேட்டை செய்பவன். தாமரை மொட்டில், வாழைப்பூவில், இதழ் இதழாக  இருப்பதுபோல், கர்ப்பப்பையின் சுவரும் மூன்று இதழ்களாக  இருக்கும். அப்படியான இதழ்களுக்கு இடையில் வாழைப்பூவில்  மகரந்தக்குழல்கள் இருப்பதுபோல், அடினோமையோசிஸ் அமைந்திருக்கும். மாதவிடாயின்போது, கர்ப்பப்பையின் மெல்லிய சுருக்கத்தில் உயிர்போகும் வலியை இந்த வளர்ச்சிதான் கொடுக்கும். 

இரண்டிலும், வயிற்றுக்குள்ளே சதைகளைப் பிடித்து இழுக்கும்படியான அந்த வலிக்கு, அடிக்கடி உட்கொள்ளும் வலி மாத்திரைகள் வயிற்றைப் புண்ணாக்கிவிட்டு, அதன் பின்னர் வயிற்றுப்புண்ணோடு வாந்தி உணர்வையும், பல உணவுகளைச் சாப்பிட முடியாத சூழலையும் கொடுக்கும். சரியான உணவுத் தேர்வு இல்லாமையால் அது சிலபல பலவீனங்களைத் தரும். எல்லாவற்றையும் தாண்டி, இப்படியான பிசைந்து பிழியும் வலியில் கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்துக்குப் போகும் பெண்கள் இதில் அதிகம் பேர். எடுத்தெறிந்து பேசத் தூண்டும் கோபமும், ``கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா? எங்கனாச்சும் எல்லாரும் தொலைஞ்சு போங்களேன்...’’ எனக் கத்தவிடும் மன அழுத்தமும் இந்த வலியின் மோசமான அம்சங்கள். போதுமான அளவுக்குச் சமைத்து வைப்பது மட்டுமல்ல... போதுமான அளவுக்கு நாப்கின் இருக்கிறதா என வாங்கி வைப்பதும்கூட இந்தக் காலகட்டத்தில் அவளுக்கு மருந்துகளைத் தாண்டிய அனுசரணைகள்.

இவ்வளவு வலிதரக்கூடிய எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னை முதலில் கருத்தரிப்புக்கு நேரடியாகத் தடை கொடுக்கும் விஷயமல்ல. ஆனாலும், மிக அதிகமாகச் சோதனைக்குழாய் குழந்தைகள், எண்டோமெட்ரியோசிஸ் பெண்களுக்குத்தான் அறிவுறுத்தப்படுகிறது. ``கருமுட்டை நல்லா அழகா, அளவா வளருது. சினைக்குழாயில் அடைப்போ, தடையோ இல்லை. அவரின் உயிரணுக்களும் ஏராளம். ஒரே பிரச்னை இந்த எண்டோமெட்ரியப் படலம்’’ என வருத்தத்துடன் நிற்கும் பெண்ணுக்கு, நல்ல வளர்ச்சியுற்ற முட்டை, சினைக்குழாய்க்குள் கவ்வப்படுகிறதா எனத் தெரியவில்லை. அப்படியே  உள்ளே வந்தாலும், கருத்தரித்து அம்மாவின் கர்ப்பப்பையில் ஒழுங்காக ஒட்டி வளருமா என்பதும் தெரியாது. `இதெல்லாம் நடக்குமா நடக்காதா... இன்னும் எவ்வளவு மாதங்களாகும்... அத்தனை ஆண்டுகள் ஒழுங்கான முட்டைகள் இருக்குமா?’ எனப் பல கேள்விகளை மருத்துவர் விதைக்க, அந்தப் பெண்ணுக்கு வியர்க்க ஆரம்பிக்கிறது. `ஃப்ரிட்ஜில் உள்ள முட்டை ராத்திரி எல்லோருக்கும் ஆம்லெட் போட போதுமா?’ என்பதைத் தாண்டி, அநேகமாக  முட்டை மேட்டரில், ஆண்கள் பல பேர் முட்டை கேஸ்தான். கருத்தரிக்கத் தாமதித்து நிற்கும் பெண்களுக்கு இந்த `முட்டை’ என்ற சொல்லே கண்ணீரை முட்டவைக்கும் வார்த்தை.

அறிவியலின் எல்லா நுணுக்கங்களையும் சூட்சுமங்களையும் புரிந்துகொள்வது மனிதனுக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும், தொடர்ச்சியான அறிவியலின் ஆய்வுக்கண்கள் பல முடிச்சுகளை அவிழ்த்திருக்கின்றன. அவிழ்க்க இயலாத இடியாப்பச் சிக்கல்கள் இருக்கும்போது, மொத்தமாக, முழுமையாக அதை அணுகுவது மட்டும்தான் புத்திசாலித்தனம். `கடைசி ஓவர்... இன்னும் இரண்டு பால்தான் இருக்கு’ என்றால், சிக்ஸருக்குத்தான் முயற்சி செய்ய வேண்டும். சைடில் தட்டிவிட்டுவிட்டு, ஒரு ரன் எடுத்தால் பிரயோசனமில்லை.ஆம்... எண்டோமெட்ரியோசிஸில், தொடர்ச்சியான கவித்துவமான காதலிலும், `கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ என நம் சங்ககால செக்ஸாலஜிஸ்ட் தாத்தா ஐயன் வள்ளுவர் சொன்ன காமத்திலும் கூடி மகிழ்வதில் எல்லாவற்றையும் தாண்டி இயல்பாகக் கருத்தரிக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. `அப்படிக் கருத்தரிக்கும் கணத்தில் உருவாவது ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி மட்டுமல்ல... இத்தனை காலம் ஆட்டிப்படைத்து, அழவைத்த இந்த எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னைக்கும் இதனாலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படவும் வாய்ப்பு உண்டு’ என்கிறது நவீன மருத்துவம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல... இரண்டு மகிழ்ச்சி.  நோயையும்  வெல்லலாம்... தாலாட்டும் பாடலாம்!

- பிறப்போம்...

உயிர்மெய் - 18

ப்படிப் பார்த்தாலும், எண்டோமெட்ரியோசிஸும் அடினோமையோசிஸும் தேவையற்ற வளர்ச்சி. எந்த ஒரு தேவையற்ற வளர்ச்சியையும் நிறுத்த, அதைச் சுருக்க உணவில் தேவையான சுவை துவர்ப்பு.

துவர்ப்புச் சுவை அநேக உணவுகளில் கிடையாது. கொஞ்சம் தேடிப்பிடிக்க வேண்டும். வாழைப்பூ, வாழைத்தண்டு, சுண்டைக்காய், பெரிய நெல்லி, மாதுளை, சில பிஞ்சுக்காய்கறிகளில் துவர்ப்புச் சுவை உண்டு. உணவில் இதைச் சேர்க்கச் சேர்க்க அதீத ரத்தப்போக்கு குறையும். இரும்புச்சத்தும் கிடைக்கும். வாழைப்பூவை பொரியல் செய்ய வலியுறுத்தினால், பக்கவிளைவாக `டைவர்ஸ்’ வரக்கூடும். அதை அமேசானில் ஆர்டர் பண்ணினாலும் கிடைக்காது. கொஞ்சம் கஷ்டமான காரியம் என்பதால், கணவனின் காதலோடுகூடிய உதவி, வாழைப்பூ பொரியல் செய்யக் கட்டாயம் தேவை.

உயிர்மெய் - 18

``சரி... இந்தக் கருத்தரிப்புப் பிரச்னை நமக்கு மட்டும்தானா? ஆடு, மாடு, கோழிக்கெல்லாம் கிடையாதா?’’ எனக் கால்நடைத்துறை கைனகாலஜிஸ்ட் ஒருவரிடம் பேசினேன். ``எங்க பேஷன்ட் யாருக்கும் தண்ணி, தம்மு எதுவும் கிடையாது. அதனால், அநேகமாக யாருக்கும் அவ்வளவாக இந்தப் பிரச்னை கிடையாது’’ என ஒரு போடு போட்டார். ``சரி. அங்கே லேடீஸுங்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி உண்டா?’’ எனக் கேட்டபோது, ``உண்டு. ஆனால், அநேகமாக எக்ஸாட்டிக் அனிமல்ஸ் (Exotic Animals) அதாவது, ஜெர்ஸி மாதிரி வெளிநாட்டு மாட்டுக்குத்தான் சினைப்பை நீர்க்கட்டி வியாதி உண்டு. உள்ளூர் மாட்டுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி எல்லாம் இல்லை. அதுவும் நம் எருமைக்கு இந்தப் பிரச்னை வர்றதே இல்லை. எல்லாம் வெளிநாட்டுப் பிராணிக்குத்தான்’’ என்றார். அநேகமாக எல்லா மாடுகளும் ஊசியில்தான் சினை பிடிக்கின்றன. ``ஆடு வகையெல்லாம் எப்படி?’’ எனக் கேட்டேன். ``இப்போதைக்கு அங்கும் உயிரணுக்கள், கருமுட்டை எல்லாம் கச்சிதம். விவசாயம் சார்ந்த சிக்கல் இருப்பதால், சரியான வைக்கோல், தாவர உணவு கிடைக்காமல், ஊட்டம் குறைவதால் மட்டும் கொஞ்சம் பிரச்னையே ஒழிய, இன்னும் அதிகமாக அவர்களுக்கு  ஐவிஃப், இக்சி கிளினிக் வரலை. முக்கியமாக டாஸ்மாக்குக்கு அவை போறதில்லை. அதனால்தான்” என்றார்.