
அதிஷா
வீட்டுக்கடன் கொடுக்கிற வங்கிகளின் மார்க்கெட்டிங் ஆட்கள் எப்போதும் கையில் துண்டுப் பிரசுரங்களோடு பூங்காவில் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதுவும் அதிகாலை ஆறுமணிக்கே வந்து வாக்கிங் போகும் இளைஞர்களாகப் பார்த்துப் பார்த்துக் கொடுத்து, ‘‘லோ இன்ட்ரஸ்ட், ஈஸி ஈ.எம்.ஐ. சார்’’ என நயமாகப் பேசிப்பேசி வாடிக்கையாளர்களைக் கவிழ்க்கப் பார்ப்பார்கள்.
‘‘பாவம்ல இந்தப் பசங்க, காலங்காத்தால வந்து எவ்ளோ கஷ்டப்படுறாங்க’’ என அவர்களுக்காக வேதனைப்படுவார் ரேணுகா அம்மா. பார்க்கில் எல்லோருக்கும் நடைப்பயிற்சித்தோழி. யார் தனியாக நடந்தாலும் அவரோடு இணைந்துகொள்வார். ஆனால், ரேணுகா அம்மாவுக்குக் கடன் வாங்குகிறவர்களைக் கண்டாலே ஆகாது. யாராவது இளைஞர்கள் ஆர்வமாகக் கடன் விவரங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால், கூப்பிட்டு அட்வைஸ் பண்ணத்தொடங்கிவிடுவார்.
‘‘கடனை வசூல் பண்ணணும்னா, காலைல ஆறுமணிக்கு வாசல்ல போய் நில்லுன்னு ஊர்ல சொல்வாங்க, ஏன்னா, நம்ம ஊர்ல கடன்காரனைக் காலைல பார்க்கிறதையே விரும்ப மாட்டாங்க. எப்படிப்பட்ட கடனா இருந்தாலும் திருப்பிக் கொடுத்துடுவாங்க, ஆனா, இன்னைக்கு அப்படி இல்லப்பா, எல்லோரும் இஷ்டம்போல கடனை வாங்கிக் குவிக்கிறோம். நாம எவ்ளோ சம்பாதிச்சாலும் கடன் கொடுக்க ஆட்கள் காத்திருக்காங்க. எவ்வளவு கடனையும் திருப்பி அடைச்சிட முடியும்னு நினைக்கிறோம். கடன் பத்தின பயமோ பதற்றமோ நமக்கு இருக்கிறதே இல்ல.

அவசரத்துக்குக் கடன் அவசியம்தான். ஆனா, அடிப்படைக்கே கடன் வாங்குறது தப்பில்லையா? வாழ்க்கையில எதையோ போராடி சாதிச்சு கப்பு வாங்குற மாதிரி `ஹவுசிங் லோன் கிடைச்சிடுச்சு, கிரெடிட் கார்டு கிடைச்சிடுச்சு’னு பெருமையா பேசுறோம்.
அடுத்தவன்கிட்ட அஞ்சுபைசாகூட கடன் இல்லாம வாழறது எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு நமக்கெல்லாம் தெரியாமலே போயிடுச்சு. ஏன் தெரியுமா? நாம எல்லோருமே எப்பவும் கடனோடதான் இப்பல்லாம் வாழறோம்’’ என்று சொல்லிவிட்டுச் சிரிப்பார் ரேணுகா அம்மா. பள்ளியொன்றில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அறிவுரைகள் எப்போது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது? அதை யாரும் பெரிதாகக் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் அவர் சொல்வதை நிறுத்தியதே இல்லை.
‘‘உங்க பையனோ பொண்ணோ இல்லை கணவரோ நண்பரோ கடன் தொல்லையால பாதிக்கப்பட்டிருப்பாங்க. அதான் உங்களுக்கு இவ்வளவு விரக்தி’’ என்று நக்கலாகச் சொன்னேன்.
‘‘நான் என்ன இந்தியன் பாட்டியா? அப்படில்லாம் ஒரு ஃப்ளாஷ்பேக்கும் இல்லப்பா. கண்ணெதிர்க்க நம்ம புள்ளைக வழி தவறும்போது பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? கடன் வாங்குற எல்லோராலேயும் சரியா அடைச்சிட முடியாதுப்பா. அது ஆபத்தான வெஷம்னு புள்ளைகளுக்கு நாமதான் சொல்லித்தரணும். ஆனா, நாம அவங்களுக்கு அதைத்தான் அள்ளி அள்ளிக் கொடுக்கிறோம்’’ என்றார்.
நமக்கு ஏன் இப்போதெல்லாம் கடன் வாங்குவதில் தயக்கங்களே இருப்பதில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை நாம் இவ்வளவு அதிகமாகக் கடன் வாங்குகிறவர்களாக இருந்ததில்லை. அவசரங்களுக்கு மட்டுமே கடன்வாங்கிக்கொண்டிருந்தது நமக்கு முந்தைய தலைமுறை. ஆனால், இன்று நாம் கடன் வாங்குவதில் தயக்கமே காட்டுவதில்லையே... ஏன்?
ஒருபக்கம் நிறைய பொருள்களை கண்மூடித் தனமாக வாங்குகிறவர்களாவும், மோசமான நுகர்வோர்களாகவும் இருக்க, இன்னொருபக்கம் அதையெல்லாம் கடன் கொடுத்தாவது பெற்றுக்கொள்கிற மேனியாக்குகளாக எப்படி மாற்றப்பட்டோம்?
என்ன கேட்டாலும், மீண்டும் மீண்டும் ‘`அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்’’ என்று விரக்தியான முகத்துடன் சொல்லிக்கொண்டே இருந்தார் ராஜி. ஒரு மனிதரிடமிருந்து எத்தனை அதிகமான `ஒண்ணுமில்லை’கள் வெளி வருகிறதோ, அந்த அளவுக்கு அவர் விரக்தியில் இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
பல `ஒண்ணுமில்லை’களில்தானே எல்லாமே இருக்கிறது. பகிர்ந்துகொள்ள முடியாத கோபம், வலி,தோல்வி,அவமானம்,வேதனை எனத் தனக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொள்ள விரும்புகிற உணர்வுகளில் ஏதோவொன்றாக இருக்கக்கூடும்; நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒற்றை `ஒண்ணுமில்லை!’
சாஃப்ட்வேர்கள் விற்கிற அலுவலகம் அது. ஹவுஸ்கீப்பிங்கில் இருந்தார் ராஜி. எல்லோரிடமும் அவராகவே வந்து பேசி அறிமுகமானவர். அவர்தான் `ஒண்ணுமில்ல சார்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் வேறு வழியின்றிப் பேசினார்.

``எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு பெரிய ஸ்கூல் இருக்கு. பாப்பாவை அங்கதான் சேர்க்கணும்னு அவர் ஒரே பிடிவாதம். `அது பெரிய ஸ்கூல், அங்க நமக்கெல்லாம் கட்டுபடியாகாது. தேவையில்லாம செலவ இழுத்துக்காத’ன்னு சொன்னேன். கேட்கவே இல்ல... எங்கேயோ போய் வட்டிக்கிக் கடன் வாங்கிட்டுவந்து ஃபீஸ் கட்டிட்டார். எனக்கு செம்ம கோபம் வந்துடுச்சு. அந்த ஸ்கூல்ல ஃபீஸ் எவ்ளோ தெரியுமா... ப்ரீ கே.ஜி-க்கே ஒரு வருஷத்துக்கு அம்பதாயிரம். அதைத்தான் தாங்கிக்க முடியல. அவரால எப்படிக் கட்ட முடியும். அதைக் கேட்டதுக்கு அடிச்சுட்டார்’’ என்று சொல்லிவிட்டு விசும்பத்தொடங்கினார்.
‘`ஏம்மா, தன் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுக்கணும்னு நினைக்கிறார், நல்ல விஷயம்தானே. அடுத்த தலைமுறையாவது பெரிசா வரணும்னு ஆசைப்படுறார். இதுக்குப்போய் கோபப்படுவாங்களா’’ என்று ராஜியை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால், ராஜியின் பிரச்னை அதுவே அல்ல.
``எனக்குக்கூட ஆசை இருக்கு. பாப்பாவைப் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கணும்னு. ஆனா, இது தப்பு சார். ஒரு ப்ரீ கே.ஜி-க்கு எதுக்கு சார் இவ்ளோ காசு கொடுக்கணும்?’’ என்றபோதுதான் பிரச்னை புரிந்தது.
``ஒருத்தன் உங்களை ஏமாத்திக் கொள்ளை அடிக்கிறான்னு தெரியுது, ஆனாலும் நீங்களா போய் அவன்கிட்ட என்னைக் கொள்ளையடிச்சிக்கோன்னு போய் நிப்பீங்களா? அந்தப் பச்சக் குழந்தைக்கு அவங்க அப்படி என்ன ஐம்பதாயிரத்துக்குக் கத்துக் கொடுத்திடப் போறாங்க? நீங்க யூஸ் பண்ற இந்த கம்ப்யூட்டர் படிப்பா? ஏபிசிடிதானே சொல்லித்தரப் போறாங்க? நம்ம கண்ணெதிர்க்க ஏமாத்துறாங்க, இதைத் தட்டிக்கேட்க வேணாம். கடனை வாங்கிக் காசைக் கட்டி ஏமாறாம இருக்கலாம்லன்னு சொன்னேன், அதுக்குதான் இவ்வளவு சண்டையும்.
இந்த வருஷம் வட்டிக்கு வாங்கிக் கட்டிடலாம், அடுத்த வருஷம் என்ன பண்றது? இந்தக் கடனை அடைக்கவே ஒரு வருஷம் ஆகிடும். அப்புறம் மறுபடியும் கடன் வாங்கணும், அதைக் கட்டணும்... கேள்வியே கேட்காம கடனை வாங்கிக் காசு கொடுத்துட்டே இருக்கிறதாலதானே அவங்களும் வெட்கமே இல்லாம இஷ்டத்துக்குக் காசு வாங்கிட்டே இருக்காங்க.
என் பாப்பா படிக்கணும் சார். ஆனா, ஒருநாளும் கடன்காரியா படிக்கக் கூடாது. அது இன்னொருத்தர் கிட்ட கடன் வாங்க அஞ்சணும். உயிர்போற அவசரம்னா தவிர, மத்த நேரத்துல கடன் வாங்குறது தப்புன்னு நினைக்கணும். படிச்சு முடிக்கும்போது தலைக்குமேல கடன் இருந்தா, அது எப்படி சார் சுதந்திரமா இஷ்டப் பட்டதைச் செய்யும்?’’ என்றார்.
ராஜியின் கணவர் ஆறுமுகத்தால் நிச்சயமாக ராஜியின் கேள்விகளைப் புரிந்துகொள்ள முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படியே புரிந்திருந்தாலும் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருத்தியின் கேள்விகளுக்கெல்லாம் செவி சாய்க்க அந்த மனிதர் தயாராக இருந்திருக்க மாட்டார். என்னிடமே சொல்லி இருந்தாலும் `உனக்கு இதெல்லாம் புரியாதும்மா’ என்று சொல்லித்தான் நிராகரித்திருப்பேன்.
ராஜியின் கேள்விகள் முக்கியமானவை. உண்மையானவை. எளிய மனிதர்களின் கேள்விகள் எப்போதும் எளிமையாகவே இருப்பது இல்லை.

நம் குழந்தைகளுக்கு அடிப்படையான கல்வியைத் தர வேண்டிய அரசு அதைத் தர மறுக்கிறது. நாம் அதை எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால், நமக்குக் கடன் எளிதாகக் கிடைக்கிறது. எனவே, நாம் எளிதான வழியைத் தேர்ந்தெடுக்கிறோம். நம் கல்விக்காகக் கடன் வாங்குவதை எப்போதிருந்து பெருமையாக நினைக்கத் தொடங்கினோம்? அதுவும் அடிப்படைக் கல்விக்கும்கூட கடன் வாங்கத் தயங்குவதே இல்லை. தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் வெறுக்கிற மாதங்களில் ஒன்றாக ஜூன் மாதம் மாறியது எப்போதிருந்து?
``போராடலாம்தான். ஆனா, அதுவரைக்கும் புள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்க முடியுமா? காலேஜ்ல சேர்க்காம காத்திருக்க முடியுமா’’ என்று பிராக்டிகலாகக் கொந்தளிப்பார் கிருஷ்ணன். ‘`எனக்கு மட்டும் என்ன ஆசையா, பத்தாவதுதான் பையன் முடிச்சுருக்கான், அதுக்குள்ள ஆறு லட்சம் கடனாகிடுச்சு, அவன் தலையெடுத்துதான் அடைக் கணும்’’ என எதிர்காலத் திட்டத்தோடு வாழ்கிறார். பத்தாவது படித்து முடிப்பதற்கு முன்பே ஒரு சிறுவனின் தலையில் ஆறு லட்சம் கடனைச் சுமத்தி வைத்திருக் கிறோம் என்று அவரால் உணரவே முடியாது. அவருடைய பையன் கல்லூரி முடிப்பதற்குள் மேலும் ஆறு லட்சமாவது கடன் வாங்க வேண்டியிருக்கும்! அதையும் அவர் உணரப் போவதில்லை.
`கடன் வாங்கிக் கடன் வாங்கிப் படிக்கவைப்போம். பிறகு கடனை அடைக்கப் பிள்ளைகளை உழைக்க வைப்போம். பிறகு அவன் தன் மகனை-மகளைப் படிக்கவைக்க வாழவைக்கக் கடன் வாங்கு வான். அவனுடைய குழந்தைகள் மீண்டும் கடனை அடைக்க உழைக்க ஆரம்பிப் பார்கள்’ என நாம், நமக்கே தெரியாமல் ஒரு முட்டாள் தனமான வாழ்க்கைச் சுழலில் சிக்க ஆரம்பித்தி ருக்கிறோம். நம் பிள்ளை களையும் இந்தக் கடன்கார வாழ்க்கைக்குப் பழக்கப் படுத்துகிறோம்.
கடன் வாங்குவது என்பது சகஜமான செயல் என்பதைப் பள்ளியிலிருந்தே பழக்குகிறோம். சேமிப்பையும் முதலீட்டையும் பற்றி இங்கே எந்தப் பள்ளியிலும் யாருமே கற்றுத் தருவதில்லை. ஆனால், எப்படியெல்லாம் விதவிதமாகக் கடன் வாங்குவது என்பதைக் குழந்தைகளுக்குச் சிறுவயதில் இருந்தே நமக்கே தெரியாமல் கற்றுத்தருகிறோம். எல்லா பிரச்னைகளுக்கும் கடன் வாங்குவதுதான் எளிய தீர்வு என போதிக்கிறோம். எப்படிப் போலி ஆவணங்கள் கொடுத்துக் கடன் வாங்குவது என்பதும்கூட நமக்கு எப்படியோ அத்துப்படி ஆகிவிட்டது. அதைத்தான் இங்கே ஒவ்வொரு குழந்தையும் பார்த்துப் பார்த்து வளர்கிறார்கள்.
`கடன் வாங்குவது தவறான செயல் அல்ல. நாம் கட்ட முடிகிறதோ இல்லையோ வாங்கிக்கொண்டே இருக்கலாம். அப்படி ஏதாவது அவமானம் நேர்ந்தால், தற்கொலை செய்துகொண்டு செத்துப்போகலாம்.’ என்பதுதான் சமூகம் நம் குழந்தைகளுக்குச் சொல்லும் அன்றாடச் செய்தி.
நாம் கல்வி, மருத்துவம், சுகாதாரம் மாதிரியான விஷயங்களில் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்படுகிறோம். சீக்கிரமே பலன் கிடைத்துவிட வேண்டும் என்று அவசரப்படுகிறோம். அதை பணத்தால் மட்டும்தான் சாதித்துவிட முடியும் என நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் இன்று கல்விக்கொள்ளையில், மருத்துவக்கொள்ளையில் ஈடுபடுகிற அத்தனை நிறுவனங்களுக்குமான முதலீடாக மாறி இருக்கிறது. இந்த விஷயங்களுக்குக் கடன் கொடுக்க ஆர்வமாகக் காத்திருக்கின்றன.
வேறு எந்தத் தொழிலையும்விட வட்டித்தொழிலில் லாபம் அதிகம்தான் இல்லையா... அதிலும் கடனை எப்பாடுபட்டாவது திருப்பி அடைத்துவிடுகிற நேர்மைமிகு மிடில்கிளாஸ்கள் இந்த வங்கிகளுக்குக் கிடைத்த பெரிய வரங்கள்!

‘`20 வருஷத்துக்கு முன்னால அடிப்படை விஷயங்கள் இவ்வளவு காஸ்ட்லியா இல்லையே... எத்தனை பேர் பார்ட் டைம்ல போஸ்டர் ஒட்டி, ஹோட்டல்ல தட்டு கழுவி, கொரியர் போட்டு மேற்படிப்பு படிச்சுப் பெரிய இடங்களுக்கு முன்னேறி இருக்காங்க. இன்னைக்கு ஒரு பையனால போஸ்டர் ஓட்டியோ, ஹோட்டல்ல வேலை பார்த்தோ ஃபீஸ் கட்டி காலேஜ் படிக்க முடியுமா? இன்ஜினீயரிங் மட்டுமில்ல... எந்தப் படிப்பையுமே படிக்க முடியாது. சின்னச்சின்னதா காசு சேர்த்துவச்சு வீடுவாங்கிட முடியுமா? ஏன்? இந்த ஆட்டத்தோட போக்கை மாத்தினது யாரு? சொல்லப்போனா இன்னைக்கு இங்கே ஒவ்வொருத்தனும் படிச்சி முடிச்சு வெளியே வரும்போது லட்சக்கணக்குல கடன்காரனாதானே வெளியே வர்றான்? பத்து லட்சரூபா வீட்டுக்கு 20லட்சம் கடன்கட்றான்? எதுக்காக?’’ என்று கோபமாகத் திட்டுவார் ஆட்டோ ஓட்டும் ரகு.
இன்று இன்ஜினீயரிங் படித்து முடித்த பெரும்பாலான மாணவர்களின் தலையில் கல்விக்கடன் என்ற பெயரில் குறைந்தபட்சம் நான்கு லட்சம் என்கிற அளவுக்குக் கடன் சுமை இருக்கிறது. நிச்சயமாகக் கல்விக்கடன் எத்தனையோ ஏழை எளிய இளைஞர்களுக்கான கல்வியைக் கொடுத்திருக்கிறது. அப்படிக் கல்வி கற்று அடுத்த கட்டங்களுக்கு முன்னேறியவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியது. கடனை வாங்கிப் படித்து முடித்துவிட்டு அடுத்தது என்ன என்று புரிபடாமல் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்துகொண்டிருப்பவர்கள்தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள்.
கடன்வாங்கிக் கல்வியை விலைக்கு வாங்கும்போதே அது முதலீடாக மாறிவிடுகிறது. முதலீடாக மாறிவிட்ட ஒன்றிலிருந்து சீக்கிரமே லாபத்தை எதிர்பார்க்கத் தொடங்குகிறோம். லாபம் கிடைக்காதபோது நமக்குக் கோபம் வருகிறது. பதற்றமாகிறோம். ஒருபக்கம் கடன் கழுத்தை நெறிக்க இன்னொரு பக்கம் பிள்ளைகளைச் சம்பாதிக்க விரட்டுகிறோம். அது நடக்காதபோது அதை ஆத்திரமாக வெளிப்படுத்துகிறோம்.
கடன் வாங்குவது நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாக நினைக்கிறோம். வீட்டுப்பெரியவர்கள்கூட நாம் கொஞ்சமாக சம்பாதிக்கத்தொடங்கும்போதே `ஹவுஸிங் லோனைப்போட்டு ஒரு வீட்டை வாங்கு’ என வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். நண்பர்கள் `லோனுக்காவது ஒரு காரை வாங்கிக்கோ’ என வற்புறுத்துகிறார்கள்.
சாதாரண போனில் தொடங்கி மருத்துவமனை ஆபரேஷன்வரை உலகின் அத்தனை விஷயங்களும் நமக்குக் கடனுக்குக் கிடைக்கிறது. மளிகைக்கடை பாக்கிக்கே பதறிய ஒரு சமூகம், இப்போது கோடி ரூபாய் கடன்களுக்கெல்லாம் அஞ்சுவதே இல்லை. வாகனக் கடன், வீட்டுக் கடன் தொடங்கி கிரெடிட் கார்டு, பெர்சனல் லோன், மொபைல், ஃபர்னிச்சர் எனக் கடனை அடைக்க முடிகிறதோ இல்லையோ நிறையவே வாங்கத் தொடங்கி இருக்கிறோம். எப்படி நடந்தது இந்த மாற்றம்?
‘‘என்னோட தாத்தா பண்ணையில கூலியாளா இருந்தவரு, எங்கப்பாவும் அதே பண்ணையிலதான் கூலிக்கு இருந்தாரு. அப்பாவுக்குப் படிக்கணும்னு ஆசை. ஆனா, அது சாத்தியமில்லை. ஏன்னா, பண்ணை முதலாளி தாத்தாவுக்குக் கடன் கொடுத்துக்கிட்டே இருப்பாரு. அவரை மீறி தாத்தாவால எந்த முடிவையும் எடுக்கவே முடியாது. அப்பாவை ஸ்கூலுக்கு அனுப்பணும்னு சொன்னா, அதெல்லாம் வேண்டாம்னு சொல்லுவார் முதலாளி. அதனாலதான் அப்பா எப்பவும் சொல்லுவார், `ஒருத்தன் உனக்கு அளவுக்கதிகமா கடன் குடுத்துட்டே இருக்கான்னா அவன் உன்னை அடிமையா வெச்சிக்க நினைக்கிறான்னு அர்த்தம். அந்த வலையில மட்டும் விழுந்திடாத. கடன் இல்லாம இருக்கிறது பெரிய சுதந்திரம். அதை விட்டுக்கொடுத்துடாதே’ம்பார்.
நம்ம சமூகத்துல நமக்குக் கீழிருப்பவனை அடிமைப்படுத்துவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான ஆயுதங்களில் ஒண்ணு இந்தக் கடன்’’ என்று எப்போதும் சொல்லும் நண்பன் கர்ணாவுக்குக் கடன் என்பது கெட்டவார்த்தை. உயிர்போகும் அவசரம் என்றாலும் யாரிடமும் கடன் வாங்க மாட்டான்.
கடன்காரர்கள் எப்போதும் கடனை அடைக்கத்தான் ஓடிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் அதில்தான் நிறைந்திருக்கும். இன்று பெருந்திரளான மக்கள் அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். கடன்தான் நமக்கான கடிவாளங்கள். அதிகாரம் நம்மை இயக்குகிற மறைவான சக்தியாகக் கடன் மாறிவிட்டது. கடனாளிகள் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் எதையுமே எதிர்த்துக் கேள்வி கேட்கவே முடியாது. அப்படிப்பட்ட குடிமகன்களையே நம்மை ஆளும், ஆள நினைக்கும் அதிகாரம் விரும்புகிறது. அப்படிப்பட்ட பிரஜைகளையே அது உற்பத்திச் செய்ய விளைகிறது. அதைத்தான் நாம் வீட்டில் இருந்தே துவங்குகிறோம். கடனாளியின் மீது எத்தகைய அறமற்ற அநீதிகளையும் நிகழ்த்தலாம், அவன் கேள்வி கேட்க மாட்டான் என்பதுதான் அதிகாரம் போடும் வட்டிக்கணக்கு. அத்தகைய அடிமைகளைத்தான் நாம் நம் வீடுகளில் உற்பத்தி செய்கிறோமா?
- கேள்வி கேட்கலாம்...