Published:Updated:

உயிர்மெய் - 19

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

ரு சின்னக் கரிசனத்தில்தான் அன்பு வளரும். ஒரு சின்ன மெனக்கெடலில்தான் நலம் வளரும். சின்னதாக இந்தக் கரிசனமும் மெனக்கெடலும் வளர, முதலில் விசாலமான புரிதல் மிக அவசியம். அதுவும் வணிகக் கூச்சலும் குழப்பமும் மருத்துவ உலகில்  நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகும் இந்தத் துரித உலகில், நலவாழ்வு குறித்த விசாலமான புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் மிக மிகக் கட்டாயம். குடும்ப டாக்டர் காணாமல் போய்விட்ட மருத்துவ உலகில், அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு ஆதார் கார்டு இருந்தால்தான் செத்துப்போகவே முடியும்; மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டு இருந்தால் மட்டும்தான் உயிர்வாழ முடியும் என்கிற சூழல். ஆனால், `ஓவியா ஏன் வெளியே போனாள்?’ என நடு இரவில் கதறக் கதற ஆலோசிக்கும் `பிக்-சர்வென்ட்’ குடும்பம், `ஒண்ணுக்கு ஏன் மஞ்சளாகப் போகுது?’ என யோசிப்பதே இல்லை. காய்ச்சல், தலைவலியிலிருந்து கருத்தரிப்பு நலம்வரை ஒவ்வொரு சாமானியனுக்கும் நலவாழ்வுப் புரிதல், அவன் என்ன படிப்பு படித்திருந்தாலும் ரொம்பவே அவசியம். நலம் என்பது எப்போதும் அடுக்குமாடி மருத்துவமனையின் அணுக்கத்திலோ, குவித்துவைத்துள்ள செல்வத்தின் இடுக்கு களிலோ இருப்பது அல்ல. சில நேரங்களில் அஞ்சறைப்பெட்டியின் கடுக்காய்ப் பொடியினுள்... சில நேரங்களில் ரோபோ கேமரா காட்டும் நானோ செல்லுக்குள்... சில நேரங்களில் உச்சி முத்தத்தோடு இறுக்கும் அரவணைப்பில்... என நலத்தின் பரப்பு விசாலமானது. இத்தனையையும் நாம் புரிந்து இருத்தலும், வாழ்வில் எப்போது எது தேவையோ அப்போது அதனைப் பொருத்தி நகர்தலும் மட்டுமே நம்முள் நலம் வளர்க்கும்.

காய்ச்சல், வைரஸால் வரும் என்பது நமக்குத் தெரியும். `கருத்தரிப்புத் தாமதப் பிரச்னை கள்கூட வைரஸால் வருமா?’ எனக் கேட்டால், `ஆமாம்’ என்கிறது மருத்துவ உலகம். ஆணுக்கு விந்தணுக்கள் குறைவில் அல்லது சுத்தமாக உயிரணுக்கள் இல்லாமல் போவதற்கு, பெண்ணுக்கு சினைமுட்டைகள் அற்றுப் போவதற்கு இளம் வயதில் அவர்களுக்கு வந்த `பொன்னுக்கு வீங்கி’ அம்மை நோய் காரணமாயிருக்கும். சற்றுக் குறைவாகவோ, சில நேரங்களில் 20-40 மில்லியன் இருக்கவேண்டிய உயிர் அணுக்களில், 1-2 மில்லியன் அணுக்கள்தாம் உள்ளன என்றாலும், எளிய மருத்துவ முறைகளில், சீரான உணவு அக்கறைகளில் ஆறு அல்லது ஏழு மாதங்களில் அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்திவிட முடியும். ஆனால், விதைப்பையில் `செர்டோலி செல்கள் முழுமையாகச் சிதைந்து விட்டன; அணுக்கள் சுத்தமாக இல்லை’ என்கிறபோது மருந்துகளால் பயன் கிடையாது. நிச்சயமாக ஐ.வி.எஃப். அல்லது இக்சி எனும் டெஸ்ட் டியூப் சிகிச்சைகளால் மட்டுமே சாத்தியமாகும்.

உயிர்மெய் - 19

சின்ன வயதில் அம்மை போட்டிருந்தால், தனியே படுக்க வைத்திருந்து, வேப்பிலை, மஞ்சளை வைத்து மேலுக்குப் பூசிவிட்டு, அந்த அம்மை வைரஸின் தீவிரத்தைக் குறைப்பது இந்நாளும் உள்ள வீட்டு வழக்கம். வேம்பிலும் மஞ்சளிலும் அந்த வைரஸுக்கு எதிரான ஆற்றல் உள்ளது என்பதைப் பின்னாளில் அறிந்தோம். அதே சமயம். இந்த அம்மை நோய் வரும் குழந்தையைக் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியதும் மிக அவசியம். அதுவும், கழுத்தைச் சுற்றி வீக்கம் தரும் பொன்னுக்கு வீங்கி, ஒருவேளை விதைப்பையில் வலி, வீக்கம் ஏற்படுத்தியிருந்தால், வீட்டு வைத்தியம் மட்டும் போதாது. மருத்துவமனைக்குச் சென்று அந்த வைரஸைப் படுவேகமாக விலக்க வேண்டும். `டாக்டர்கிட்ட போகக் கூடாது’ என எந்த அம்மனும் சொல்லாது. மடமையாக மருந்தைத் தவிர்த்தல், பின்னாளில் உயிரணுக்கள் உற்பத்தியை ஒட்டுமொத்தமாகச் சிதைத்துவிடும்.

அடுத்ததாக ஹெர்ப்பிஸ் (Herpes) கிருமி. அக்கி வரவழைக்கும் கிருமியின் வகை இது. நேரடியாக அல்லாமல், மறைமுகமாகக் கருத்தரிப்புக்குத் தாமதம் ஏற்படுத்தும் கிருமி. ஆணுறுப்பின் நுனியில் இருந்துகொண்டு கொப்பளங்களையும், கசிவையும், எரிச்சலையும் உண்டாக்கி  `எனக்கு உடலுறவு அவசியமா?’ என்ற சிந்தனையைக்கூட சமயத்தில் ஏற்படுத்தும். உடலுறவால் மட்டும் இந்தக் கிருமி உடலுக்குள் தொற்றுவதில்லை. இந்த வைரஸால் ஏற்கெனவே பாதிக்கப் பட்டோரை முத்தமிடுதலாலும், அவர்கள் லிப்ஸ்டிக், ஷேவிங் ரேசர், உணவுப் பாத்திரங்களைச் சரிவரக் கிருமி நீக்கம் செய்து சுத்தப்படுத்தாமல் பயன்படுத்துவதாலும் பரவக்கூடிய இயல்புடையது. இந்த வைரஸ், `HSV 1 & 2’ எனும் இரு பிரிவைக் கொண்டது. இந்த வைரஸ் உடம்புக்குள் இருந்தும் பலருக்கு ஆயுள்காலத்துக்கும் எந்தத் தொல்லையும் தராமல் இருக்கவும் கூடும். ஒரு சிலருக்கு அவ்வப்போது வாய்ப்புண்கள், ஆணுறுப்பு, பெண்ணுறுப்புக்களில், முத்து முத்தாகப் பருக்களை உருவாக்கி, சில நேரங்களில் தீவிர எரிச்சல், வலியைத் தரவும் கூடும். அவர்களுக்குத் தான் இப்படியான உளவியல் பிரச்னை.

உடலுறவு வழியாக அல்லாமல், கிருமி நீக்கம், தொற்று நீக்கம் செய்யப்படாத இன்னொருவர் பொருளைப் பயன்படுத்துவது மூலம்... அதாவது, பிறர் துவட்டும் துண்டை விபத்தாக, யதேச்சையாகப் பயன்படுத்தப்போய், இந்த ஹெர்ப்பிஸ் தொற்றைப் பெறும் நபருக்கு, திருமண வாழ்வில் குறிப்பாக, உடலுறவில் ஏற்படும் மனத்தடையும் மனஅழுத்தமும் சொல்லி மாளாதது. நம்மால், அவளுக்கு/அவருக்கு இந்த வைரஸ் போய்விடுமே என்கிற அச்சமும் வலியும் தினம் தினம் மனதில் வதைக்கும். இன்றளவில் இந்த வைரஸைக் குணப்படுத்த முடியாது. வாக்ஸினும் இல்லை. அதே சமயம் உடலுறவில் ஒருவரிடம் இருந்து பாதிப்பில்லாத அடுத்தவருக்கு இந்த வைரஸ் உள் நுழைந்தால்கூட இந்த வைரஸால், கருத்தரிக்கும் குழந்தைக்கும் எவ்விதப் பாதிப்பும் வராது. சில நேரங்களில் பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகம் இந்த வைரஸ் புண் இருக்கும்பட்சத்தில்,  சிசேரியன் வேண்டுமானால் தேவைப்படக்கூடும். தாய்க்கு வைரஸ் இருந்தால், குழந்தைக்குப் பிறப்பிலேயே அதன் எதிர்ப்பாற்றல் இருக்கும். சிசேரியன்கூடத் தேவையில்லை என இதற்கு மறுப்புச் சொல்வோரும் உண்டு. இருந்தபோதும், இந்த வைரஸ் பரிமாற்றம் புரிந்த பின்னர், பெரும் மனஅழுத்தமும் சில நேரங்களில் மணமுறிவும் ஏற்படுவது அதிகம். 

உயிர்மெய் - 19



இன்னொரு விஷயம், ரொம்ப நாளாக இந்த வைரஸால் கருத்தரிப்புக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றுதான் மருத்துவ உலகம் நம்பிவந்தது. கடந்த ஆண்டு நடந்த ஓர் ஆய்வில், `என்ன காரணத்தால் தாமதமாகிறது?’ என அறிய முடியாத (Unexplained delay in pregnancy) பெண்களின் கர்ப்பப்பை உட்சுவரைச் சோதித்த போது, இந்த வைரஸின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. `Human herpes virus (HHV 6) எனப் பெயரிடப்பட்ட இந்த வைரஸுக்கு எதிராக நம் உடல் நடத்தும் போராட்டத்தில் கருத்தரிப்புத் தாமதம் நிகழ்வதை உறுதிப் படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள். HHV வைரஸால், உடலுக்குள் பிரச்னை நிகழாமல் இருக்க, நம் உடல், சைட்டோகைன்களையும் (Cytokines), `நேச்சுரல் கில்லர் செல்கள்’ எனும் தற்காப்பு அணுக்களையும் அள்ளிவீச, வைரஸ் உடலுக்குள் வருவதைத் தடுக்கும் அதே சமயத்தில், கரு உருவாவதும் தடைபட்டுப் போகிறது. அதாவது அவர்கள் கருத்தரிக்கத்தான் செய்வார்கள். ஆனால், கருச்சிதைவை இந்த வைரஸுக்கு எதிரான அணுக்கள் ஏற்படுத்திவிடும்.

இத்தனை நாள் இந்த மாதிரியான வைரஸ்கள் உடலுக்குள் புகுந்துவிடாமல் தடுக்க, நம் பண்பாட்டுப் பழக்கமும்கூட பாதுகாப்பாக இருந்தது. காதலியே ஆனாலும், `முத்தம் முதல் மொத்தமும் அப்புறம்தான்’ என்றிருந்த மரபுப் பழக்கத்தை நவீனம் தெறிக்கவிட்டிருக்கிறது. `ஒரு முத்தம்கூடக் கொடுக்காமல், உன்னையெல்லாம்…அடச்சே!’ என சினிமா சாமிகளின் பக்தகோடிகள் பரவசமூட்டிப் பரவசமூட்டிக் காதலுக்கு சிவப்பு ரோசாவைத் தாண்டி `மார்னிங் பில் மாத்திரை’ தருவது இப்போது மரியாதை ஆகிவருகிறது. அப்புறம் கொஞ்சநாள் கழித்து, `கிளைமேட் சரியில்லை. டக்வொர்த் லூயிஸ் முடிவின்படி பிரேக்அப் ஆகிக்கலாம்’ எனக் காதல் கிரிக்கெட்டில் வெளியேறும் கூட்டம் இப்போது கணிசமாக அதிகம். அதில் கொஞ்சம் பேர், இது மாதிரி வைரஸ்களை, அகஸ்மாத்தாக நெருக்கமாக இருக்கையில் வாங்கி வரும்போது காலமெல்லாம் காதல் வேதனை கொடுக்கிறதோ இல்லையோ, இந்த வைரஸ் பிரச்னை கொடுக்கும்.

`வைரஸாகக் காதல் பரவுவது ஒருபக்கம்; காதலில் வைரஸ் பரவுவது இன்னொரு பக்கம்’. நாம் கொஞ்சம் உஷாராக உசுப்பேறாமல் இருந்தால், இரண்டு தொற்றுகளில் இருந்தும் தப்பித்து விடலாம். ஆனால், கொசுவின் முத்தத்தில் வரும் வைரஸை என்ன செய்வது என்றுதான் இன்றுவரை புரியவில்லை. `தெர்மோகோல் போட்டு ஏரியை மூட’ எடுத்த முயற்சி மாதிரி, கொசுவுக்கு மொத்தமாகக் கருத்தடை பண்ணுகிற முயற்சியும் நம் ஊரில் ஆராய்ச்சி அளவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்திய கலவரமூட்டும் வைரஸான `ஜிகா வைரஸ்’ உயிர் மெய் படிக்கையில், கொஞ்சம் உரசிவிட்டுப் போகவேண்டிய ஒன்று. கொசுக்களின் முத்தத்தால் வரும் இந்த ஜிகா வைரஸ், கருச்சிதைவு, கருத்தடையெல்லாம் தராது. ஆனால், கருத்தரித்த பெண்ணுக்கு வருகையில் தாயிடம் இருந்து குழந்தைக்குப் போகும் வாய்ப்பு மிக மிக அதிகம். நிறைய தீவிரம் மிக்க மருந்துகள், பாதிப்பு தரும் தொற்றுகளை எல்லாம் தாய், தன் குழந்தைக்குத் தராமல் காப்பாற்றும் பிரமிக்க வைக்கும் காப்பை வைத்திருக்கிறாள். ஆனால், ஹெச்ஐவி, ஜிகா மாதிரி வைரஸில் அது சாத்தியப் படவில்லை.

முன்காலம்போல் அல்லாமல் வெளிநாடு பயணம் என்பது இப்போது `மச்சி டீ சொல்லு... சாயந்திரம் துபாய்ல இருந்து வந்துருவேன்’ என்கிற ரேஞ்சுக்கு ஆகி வருவதில், போக்குவரத்தில், இந்தச் சீக்குவரத்தும் கூடி இருக்கிறது. `வீட்ல, சார் எங்கேயாவது போய் வந்தபின்பு இங்கிலீஷ் படம் மாதிரி வாரி அணைச்சு முத்தா கொடுத்தால், ஜிகா வந்துரும் வாய்ப்பும் இருக்கிறது என்பதால், உட்கார வெச்சு ஆபீஸ் வேலையைத் தவிர என்ன வெல்லாம் நடந்துச்சு?’ என விசாரணை செய்யச் சொல்லி உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால், நம் உலகப் பொது மறையில், நம் பிரின்ஸிபால் சார், `பிறன்மனை நோக்கா பேராண்மை’ என ஜிகா மட்டுமல்லாமல் எந்தச் சிக்கலுமே வராமல் இருக்க, 2,000 வருடங்களுக்கு முன்னரே வழி சொல்லியிருக்கிறார்.

அடுத்ததாக ரூபெல்லா (Rubella) வைரஸ். அடிக்கடி நடக்கும் கருச்சிதைவு, அதனால் குழந்தைப்பேறு தாமதிப்பதில் இந்த ரூபெல்லாவின் தேடல் நிறைய உண்டு. குழந்தைப் பருவத்தில் சின்ன, சிவந்த திட்டுத் திட்டான படையையும் காய்ச்சலையும் தரும் இந்த வைரஸ் தொற்று, ஒன்று முதல் மூன்று நாள் மட்டும் வரக்கூடிய வைரஸ். குழந்தைக்கு முகத்திலும் கழுத்திலும் முதலில் ஏற்பட்டு, அப்புறமாக உடல் முழுக்கப் பரவும் இந்தத் திட்டுக்களை வைத்து, `வந்திருப்பது ரூபெல்லா அக்காதான்’ என முடிவு செய்யலாம். இந்த வைரஸ் அநேகமாக ஒரு பிரச்னையும் செய்வதில்லை. ஆனால், பின்னாளில், கருத்தரித்த பெண்ணுக்கு இந்த வைரஸ் வருகையில் கருச்சிதைவையோ, அல்லது அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பிறப்பிலேயே `Congenital rubella syndrome’ எனும் சிக்கலையோ உருவாக்கிவிடும். உலக சுகாதார நிறுவனம் இந்த ரூபெல்லாவுக்கு எதிரான மிக அவசியமான தடுப்பூசியை வலியுறுத்துகிறது. இந்த வைரஸ் அநேகமாகப் பல வளர்ந்த நாடுகளில் இல்லாமல் போய்விட்டாலும், நம் ஊரில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.

`எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால், ஏனோ தாமதமாகிறது’ - எனும் காரணமறியா கருத்தரிப்புத் தாமதம் (Unexplained delay in pregnancy) இன்று கணிசமாகக் கூடிவருகிறது. அப்படிக் காரணம் தெரியாத இடத்தில் எழும் குழப்பத்தில், `எதுக்கு நீங்க லேட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க... எவ்வளவு நாளைக்கு மண்சோறு, மரத்துல தொட்டில் எல்லாம்... வாங்க, டெஸ்ட் டியூப் பேபியில் பெத்துக்கலாம்...’ என்ற அறைகூவல் அநியாயத்துக்கு ஊரெங்கும் உரக்கக் கேட்கிறது. `ஈ.எம்.ஐ. வசதி, 100 சதவிகிதம் மணி பேக் வசதி’ என மியூச்சுவல் ஃபண்ட், பாலிசி விற்பனை செய்வதுபோல விற்பனை கொடிகட்டுகிறது. `சினைமுட்டையே இல்லை; உயிரணுவே இல்லை’ என்ற சூழலிலும், `அதெல்லாம் பார்த்துக்கலாம்... நாங்க கொடுக்கிற பிளாட்டின பஸ்பத்துல, உள்ளே ஒட்டியிருக்கிற அணுவெல்லாம் பிச்சுக்கிட்டு வந்து அடுத்த ஆடியில தொட்டில் கட்டிடலாம். கொஞ்சம் செலவாகும்... அவ்வளவுதான்’ என்று மரபுக்கும் மருத்துவத்துக்கும் சம்பந்தமில்லாதவர்கள் போடும் கூச்சலும் இப்போது அதிகம். இந்த இரு கூச்சலையும் கடந்து, `எனக்கான சிகிச்சை எது?அதற்கான மெனக்கிடல் எது? எப்படி இந்தச் சிக்கலை வராமல் தவிர்ப்பது?’ என்பது ஏற்கெனவே வலியுடன் காத்திருக்கும் தம்பதிகள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்தச் சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் இருப்பவர்களும் யோசிக்க வேண்டிய விஷயம். 

- பிறப்போம்...

உயிர்மெய் - 19

`MMR’ எனும் முத்தடுப்பூசி மூலமாக, இந்த பொன்னுக்கு வீங்கி (Mumps), அம்மை (Measles), ரூபெல்லா (Rubella) மூன்றையும் தடுக்க இயலும் என உலக சுகாதார நிறுவனம் நிரூபித்திருக்கிறது. குழந்தைப்பருவத்தில் இந்தத் தடுப்பூசி, அவர்கள் உயிருக்கு மட்டுமல்ல பின்னாளில் அவர்களுக்குக் கருத்தரிப்புத் தொடர்பான பிரச்னை வராமல் இருக்கவும் அவசியம். குழந்தைப்பேறுக்குத் திட்டமிடுவதற்கு முன்னதாகவே இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். அதாவது, உடலுறவு வாழ்வியலுக்கு முன்னதாக. பின்னர் இதைப் போடுவதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை. `தடுப்பூசியே வேணாம்; அதனால் அதிகமா ஆய் வரும்; ஆட்டிசம் வரும்; அப்புறம் அமெரிக்கா வந்துவிடும்’ என்கிற மாற்று அறிவியல், மாற்று மருத்துவம் பேசும் பலரும் சொல்லும் சர்ச்சையைப் பலமான, பாரபட்சமில்லாத மருத்துவ ஆய்வுகள் முற்றிலுமாக மறுத்துவிட்டன. ஏங்கல்ஸும் மார்க்ஸும் சொல்வது மாதிரி, `ஆதிக்க உலகில், எல்லா அறிவியலுக்குள்ளும், காதலுக்குள்ளும், கலைக்குள்ளும், பண்பாட்டுக்குள்ளும், உணவுக்குள்ளும் பணம், வணிகம் எனும் அரக்கப்பிடி மெள்ள நுழையும்’ என்பது உண்மைதான். அங்கே நம் போராட்டம், அந்தப் பகிர்தலில்லா பணத்துக்கும், அறமில்லா வணிகத்துக்கும் எதிராக இருக்க வேண்டுமே தவிர, அறம்சார் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருக்கக் கூடாது. எம்எம்ஆர் தடுப்பூசி, காரணமில்லாத கருத்தரிப்புத் தாமதம் (Unexplained delay in pregnancy) நிகழாமல் இருக்கவும், கருச்சிதைவு (Miscarriage) நிகழாமல் இருக்கவும் மிக மிக அவசியம்.

உயிர்மெய் - 19

``ஒன்பது பொருத்தம் சரியா இருக்கு. மண்டபத்துக்குச் சொல்லிடலாம்’’ என்போர், முக்கியமாக மாப்பிள்ளை, பெண்ணுக்கு நலப்பொருத்தம் பார்ப்பதுகூட நல்லது. இரு மனமும் புரிந்துள்ள பொழுதில், அவர்கள் இருவருமே அது குறித்த ஆலோசனையைச் செய்ய வேண்டும். நேற்றைய தாய் மாமன், நாளைய நாத்தனார் எல்லாம் இருவரின் டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கிக் கருத்துச் சொல்ல ஆரம்பித்தால், அது கூகுள் டாக்டரைவிட கோரமான அனுகூலத்தைக் கொடுத்துவிடும். ஹெப்படைட்டிஸ் பி, ஹெர்ப்பிஸ், ஹெச்.ஐ.வி. முதலான வைரஸுகளுக்கான சாத்தியம் உள்ள வாழ்வியல் இருப்போருக்கு இந்தச் சோதனை முடிவுகள் திருமணத்துக்கு முந்தைய பொழுதில், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மாதிரி இருவரும் பரஸ்பரம் உண்மையாகப் பரிமாறிக்கொள்ள வேண்டிய சான்றுகள். `யதேச்சையாக நுழைந்த வைரஸைவிட, எங்கள் காதல் பலமானது’ என்ற முடிவோடு முன்னேறுகிறவர்களா? சபாஷ். பயம்கொள்ள வேண்டியதில்லை. மருத்துவ உலகம் உங்களுக்கு பல நம்பிக்கைகளைத் தரக் காத்திருக்கிறது.