Published:Updated:

சொல் அல்ல செயல் - 19

சொல் அல்ல செயல் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 19

அதிஷா - ஓவியங்கள்: ஹாசிப்கான்

கார்கில் செல்ல வேண்டும். எப்படிச் செல்வது? எங்கே பஸ் கிடைக்கும்? ஸ்ரீநகர் பேருந்துநிலையத்தில் இருந்த 45 பேரிடமும் மாறி மாறி விசாரித்துக்கொண்டிருந்தேன்.என்   அலைச்சலை தூரத்தில் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தார் அந்த இளம்பெண். பார்க்கத் தென்னிந்தியச் சாயலோடு இருந்தாலும், அவரிடம் சென்று பேசத் தயக்கமாக இருந்தது. குழப்பத்தோடு பேருந்து டீக்கடையில் நின்றுகொண்டிருந்த என்னிடம் வந்து அவராகவே ஆங்கிலத்தில் பேசினார். அந்தப் பெண்ணின் பெயர் நித்யா. பெங்களூருவைச் சேர்ந்தவர். அடுத்தநாள் காலையில் அவரும் கார்கில் செல்ல இருந்தார்.

பேருந்து எப்போது வரும்? எங்கிருந்து கிளம்பும்? எங்கே இறங்க வேண்டும்? என்ன கொண்டு செல்ல வேண்டும்?  அந்தப் பயணத்தின் ஆபத்துகள், அந்த நீண்ட சாலையின் அழகு, வழியில் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துகள் என அவர் எல்லா விபரங்களையும் அடுக்கிக்கொண்டே சென்றார்.
அவர் டூரிஸ்ட் கைடாக `அந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன், இந்த இடத்தைக் காட்டுகிறேன்’ என்று பணம் பறிக்கிறவராக இருக்கலாம்... அல்லது இப்படி வழி சொல்லி மயக்க பிஸ்கெட் கொடுத்துக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரியாககூட இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

``பயணங்களில் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். அதிலும் `நம்ம ஊர்க்காரங்கதானே’ என்கிற உணர்வுதான் பெரும்பாலும் ஆபத்தானது. ஊர்ப்பாசத்தோடு எளிதில் ஏமாற்றிவிட்டுப் போய்விடுவார்கள்’’ என்று தீவிரமாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தேன். நல்லவேளையாக நித்யா அப்படி இல்லை. அவர் ஒரு தீராப்பயணி. பயணங்களையே தன் வாழ்வாக மாற்றிக்கொண்டவர்.

சொல் அல்ல செயல் - 19

நித்யா கன்னடக்காரர். பயணம்தான் அவருடைய வாழ்க்கை. அதுதான் அவருடைய அடையாளம். தன் 29 வயதுக்குள்ளாகவே இந்தியாவின் 20 மாநிலங்களின் முக்கியப்பகுதிகள் அத்தனையையும் பார்த்துவிட்டவர். சில வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களும் செய்திருந்தார். எங்கு சுற்றினாலும் அவருக்கு லடாக்தான் புண்ணிய பூமி. ஆண்டு்க்கு ஒருமுறையாவது அங்கே வந்து செல்லாவிட்டால் அவரால் உயிர் வாழவே முடியாது. இதில் ஆச்சர்யமான விஷயம் ஒன்றுண்டு. நித்யா இப்படி இந்தியா முழுக்கப் பயணித்தது பயணித்துக்கொண்டிருப்பது... தன்னந்தனியாக!

ஸ்ரீநகரின் மையப்பகுதியில் இருக்கிறது பக்‌ஷி கால்பந்தாட்ட மைதானம். அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர் இதுவரை லடாக்குக்குப் பத்துமுறைக்கும் மேல் வந்திருப்பதைச் சொன்னார். பெங்களூருவில் பிரபலமான ஒரு ஐ.டி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு தன் நண்பர்களோடு லடாக்குக்குப் பயணமாகி வந்திருக்கிறார். வந்த இடத்தில்தான் லடாக்கின் மீதும் பயணங்களின் மீதும் காதல் பிறந்து பறப்பதற்கான சிறகுகளைக் கண்டுபிடித்தேன் என்று கவித்துவமாகச் சொன்னார். அதற்கு பிறகு ஒவ்வோர் ஆண்டும் நூறு நாள்களுக்கு மேல் பயணிப்பதாகச் சொன்னார். அவர் சொன்னதை எல்லாம் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

``என்னது வருஷதுக்கு நூறுநாள் லீவா, இந்நேரம் உங்க ஆபீஸ்ல உங்களை வேலையைவிட்டு அனுப்பியிருப்பாங்களே...’’ என்றேன். நித்யா சிரித்தார். அதற்கான பதிலை அடுத்தநாள் பேருந்துப்பயணத்தில் சொன்னார்.

கார்கில் நோக்கிப் போகும் பேருந்தில் நானும் நித்யாவும் இரண்டு பக்கங்களிலும் பனிமலைகள் சூழ, காதுகளுக்குள் ஊசிக்காற்று பாய சென்று கொண்டிருந்தோம். அவர் தன் வாழ்க்கையைப்பற்றிச் சொன்ன விபரங்களைக்  கேட்டுக்கொண்டே வந்தேன். அவரிடம் கேட்க ஒரே ஒரு கேள்விதான்  என்னிடம் இருந்தது.

``வேலைக்குப் போயிட்டே எப்படி இவ்வளவு ட்ராவல் பண்ண முடியும்?’’

``அனேகமா நான்கூட என் முதல் பயணத்துல இதே கேள்வியை இதே மாதிரி ஒருத்தர்கிட்ட கேட்டிருக்கேன். அவர் ஒரு அமெரிக்கன். நான் கேட்கவும் அவர் யோசித்துவிட்டு , `ஒரு பயணத்துக்கு எது முக்கியம்’னு கேட்டார்.  லீவ், பணம், ப்ளானிங் அது இதுனு என்னென்னவோ சொன்னேன். அவர் சிரிச்சிட்டே சொன்னார். `இது எதையும்விட முக்கியம் நம்முடைய விருப்பங்கள் மேல நமக்கு ஒரு மரியாதை இருக்கணும். அந்த மரியாதை இருந்தாலே அதை எப்பாடுபட்டாவது நிறைவேத்திக்குவோம். அதைப் போராடியாச்சும் அடைஞ்சுடுவீங்க’ன்னார்!’’

சொல் அல்ல செயல் - 19



‘`பாஸ்... விளையாடாதீங்க, அதெல்லாம் எங்ககிட்டயும் இருக்கு.  ஒரு வருஷத்துக்கு நூறுநாள் லீவ் எந்த ஊர்ல கொடுப்பாங்க. இப்படி ஜாலியா ஊர் சுத்தக் காசுக்கு என்ன பண்றது, கடன்காரன் ஆகிடுவேன். வீட்டை யார் பார்த்துக்கிறது, குடும்பத்தை என்ன செய்றது?’’ என்றேன்.

“நிறைய பயணிக்கணும்னு நினைக்கிற எல்லோருக்குமே இந்த அச்சம் இருக்கு. ஆனா சரியா திட்டமிட்டா சாத்தியம்தான். எப்படின்னா... ஒரு வருஷத்துக்கு 52 வாரம். எனக்கு சனி, ஞாயிறு லீவ். ஸோ... 52 வாரத்துல மொத்தம் 104 நாள் லீவ். பொது விடுமுறை, சிக் லீவ், அந்த லீவ் இந்த லீவ்னு ஒரு 20 நாள் கூடுதலாக் கிடைக்கும். ஒட்டுமொத்தமா வருஷத்துல 120-135 நாள் விடுமுறை கிடைக்கும். இதுல வீட்டுக்கு, பக்கத்து வீட்டுக்கு, சொந்தக்காரங்க, ஃப்ரெண்ட்ஸுக்குன்னு 25-ஐ மொத்தமா கொடுத்துட்டாகூட மீதி நாள்கள் உங்க கைலதான் இருக்கும். அந்த மீதி நாள்களையும் வருஷ ஆரம்பத்துலேயே ப்ளான் பண்ணி  எங்கே போகப்போறேன்னு ஃபிக்ஸ் பண்ணிக்கணும். அதுக்கேத்த மாதிரி முன்னாடியே ஃப்ளைட் டிக்கெட், பஸ் டிக்கெட் எல்லாம் புக் பண்ணினா, நிறைய டிஸ்கவுன்ட் கிடைக்கும்.

இதுபோக, தங்குறதுக்கு சீப்பான இடங்களை முன்னாடியே தேடிக் கண்டுபிடிக்கணும். சிக்கனமாப் போக வர்றதுக்கான செலவுகளை ப்ளான் பண்ணிக்கிட்டா போதும். ஆரம்பத்துல விளையாட்டா பயணங்களைப் பற்றி இணையத்துல நிறையக் கட்டுரைகள் எழுத ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல பத்திரிகைகள்ல கட்டுரைகள் கேட்க ஆரம்பிச்சாங்க. கட்டுரை கொடுத்தா, காசு கிடைக்கும். அதைப் பயணத்துக்குப் பயன்படுத்துவேன்; போட்டோஸ் எடுப்பேன்; அதையும் அவங்களுக்குக் கொடுத்து காசு வாங்கிப்பேன்.’’

நித்யா மூச்சுவிடாமல் ஆக்ரோஷமான ஆடிட்டர்போல கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்க, குளிரில்கூட விறைக்காத என் மூளை, வியப்பில் விறைத்துக்கொண்டிருந்தது.

‘`நாம் எல்லோருக்கும் நிறைய ஆசைகள் உண்டு. வெவ்வேறு விதமான கனவுகள் உண்டு.ஆனால்,அதையெல்லாம் நிறைவேத்திக்க முடியாம நம்மைத் தடுக்கிறது  `இல்லைகள்’தான். என்கிட்ட நேரம் இல்லை, காசு இல்லை, வசதி இல்லை, சுதந்திரம் இல்லை, அது இல்லை இது இல்லை... நாம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான காரணங்களை விட அதை செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைத்தான் தேடுகிறவர்களாக இருக்கிறோம்!

இதை எனக்குச் சொல்லிக்கொடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஆண்டர்சன் வர வேண்டியிருந்தது. பயணிக்கணும்ங்கிறது என்னோட சின்ன வயசு ஆர்வம். அதை நான் என் 25-வது வயசுல நிறைவேற்ற ட்ரை பண்ணப்போ, என்னோட வேலையும் சூழலும் அனுமதிக்கலை. ஆனால், அதுக்காக அப்படியே சும்மா உட்கார்ந்திருந்தா, இப்பவும் அஞ்சு வருஷத்துக்கு முன்னால ட்ராவல் பண்ண முடியலையேனு ஏங்கி ஏங்கிச் சோர்ந்துபோன நித்யாவாவேதான் இருந்திருப்பேன். இந்த அனுபவங்கள் கிடைச்சிருக்குமா?’’ என்றார்.

அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் நித்யா தன் ஐ.டி கம்பெனி வேலையை விட்டுவிட்டார். முழு நேரமும் பயணம்தான். அதையே தொழிலாகவும் மாற்றிக்கொண்டார். சுற்றுலா கூட்டிச்செல்லும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் நிறைய பேரை ஊர்ச் சுற்ற அழைத்துச் செல்கிறார். கூடவே நேஷனல் ஜியோகிராபி, பி.பி.சி. தொடங்கி பல ஊடகங்களில் பயணக்கட்டுரைகள் எழுதுகிறார்.

நித்யாவுக்கு நல்ல வேலை இருந்தது. அதையே பார்த்துக்கொண்டு வசதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் தனக்கு விருப்பமான ஒன்றை நோக்கி நகர்ந்து சென்றார். அதற்கு ஏராளமான மனத்தடைகள் இருந்தன. அதையும் மீறி அவர் இன்று வந்து சேர்ந்திருக்கிற இலக்குக்கு காரணம் அவர் கடந்துவந்த இல்லைகள்தான். நம்மைத் தடுத்து வைத்திருக்கும் அதே ஏராளமான இல்லைகள் எனும் செக்போஸ்ட்டுகள்தான்!

நித்யாவை சந்தித்தப் பிறகு நானும் கூட அவரைப்போலவே பெரிய பயணியாகி விடுவேன் என்றே நினைத்தேன். அவருடைய சொற்கள் அவ்வளவு ஊக்கமூட்டுவதாகவே இருந்தன. ஆனால் அப்படி எல்லாம் எதுவுமே நடந்துவிடவில்லை.

சொல் அல்ல செயல் - 19

``நித்யாவுக்குக் கல்யாணம் ஆகலை. கமிட்மென்ட்கள் இல்லை. அவருக்குக் கடன் தொல்லைகள் இல்லை. அவருக்கு வாரம் இரண்டு நாள் லீவ். நமக்கெல்லாம் ஒருநாள்தான்! இவ்வளவு செலவழித்துப் பயணம் செய்ய முடியுமா? கடன்களை யார் கட்டுவது? காசுக்கு எங்கே போவது? லீவ் போட்டால் சம்பளம் போகுமே? தனியாக எப்படிப் பயணிப்பது? எங்காவது தொலைந்துபோய்விட்டால் என்னாவது?’’ இப்படிப் பல கேள்விகள்தான் எனக்குள் எழுந்தன. ஏனென்றால் நாம் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம். நிறைய ஊர் சுற்றும் ஆசை எல்லோருக்குமே உண்டு. ஆனாலும் ஏன் அது எல்லாருக்குமே சாத்தியப்படுவதில்லை. 

நம்மிடம் நிறைய விதங்களில் வடிவங்களில் இந்த இல்லைகள் உண்டு. அவற்றை உருவாக்குவதும் வளர்ப்பதும் நாம்தான். அதுதான் நம்மைத் தடுத்து நிறுத்துகிற அரூப நிழல்களாக விளங்குகின்றன. அதிலிருந்து எப்போதும் மீள்வதைப்பற்றிச் சிந்திப்பதே இல்லை. நாம் எளிய மனிதர்கள், நமக்கு வாய்த்த வாழ்க்கை இதுதான் என நமக்கு நாமே சாக்கு போக்குகளைச் சொல்லி நம் விருப்பங்களைத் தள்ளிப் போடவே நம்மை வீடுகளில் பழக்கியிருக்கிறார்கள். சமூகமும் அதைத்தான் திரும்பத்திரும்ப நமக்கு வலியுறுத்துகிறது.

‘`உடம்பைக் குறைக்கணும் பாஸு, காலைல வாக்கிங் போகணும்னு நினைச்சிட்டே இருப்பேன், ஜிம்முல சேரணும்னு தோணிட்டே இருக்கும். ஆனா டைம் இல்லை என்ன செய்ய...’’ என்ற வசனத்தைத் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் சொல்லியிருப்பார்கள். ஆனால் எல்லோரிடமும் இந்த இல்லைகள் கட்டாயம் இருக்கும். ‘`எங்கே பாஸ். நைட் தூங்கவே லேட் ஆகிடுது. காலைல பாப்பாவை ஸ்கூல்ல விடணும். ஆபீஸ் கிளம்பணும். ஈவ்னிங் ட்ராஃபிக்ல வீட்டுக்குவந்து எப்படா படுப்போம்னு  இருக்கு’’  என்று அலுத்துக்கொண்டே இருக்கிற எத்தனை பேரைப் பார்த்திருப்போம். நமக்குத் தொப்பையைக் குறைக்க வேண்டும். ஆனால், உட்கார்ந்த இடத்திலேயே குறைய வேண்டும்!

ஒவ்வொரு புத்தகச்சந்தையிலும் பல பத்தாயிரங்களுக்கு நூல்களை வாங்கி வாங்கிக் குவித்துவைத்துவிட்டு எதையுமே படிக்காமல் கடக்கிற நமக்கு அதையெல்லாம் படிக்காமல் அழகுக்கு அடுக்கிவைத்திருப்போம்.  காரணம் நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதைவிட படிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்தான் நம்மிடம் ஏராளமாயிருக்கும். ‘`வீட்ல படிக்கிறதுக்கேற்ற சூழல் இல்லை. டி.வி ஓடிட்டே இருக்கு. குழந்தைகள் பேசிட்டே இருக்காங்க. லைப்ரரி போக டைம் இல்லை. ஆனா, நிறைய படிக்கணும். எப்படின்னுதான் தெரியலை.’’ என்போம்.

``எப்படியாச்சும் கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல கலந்துக்கணும்னு நினைப்பேன். ஆனா, எல்லாம் கூடி வராது...’’,  ``பிரெஞ்ச் கத்துக்கணும்னு மூணு வருஷமா ப்ளான் பண்றேன்... 15 நாள் கோர்ஸ்தான்... ஆனா, டைம் இல்லை’’, ``ஒரு ராயல் என்ஃபீல்ட் வாங்கிட்டு இந்தியா முழுக்கச் சுற்றி வரணும்னு இருபது வருஷத்துக்கு முன்னால ஆசைப்பட்டேன் இன்னமும் ஆசைதான் படறேன்’’, ``நீச்சல் கத்துக்கிட்டு தினமும் ஸ்விம்மிங் போகணும்னு ஆசை, ஆனா, அந்த டிரெஸ்ல ஆண்கள் இருக்கிற இடத்துல எப்படிங்க’’, ‘`கராத்தே கத்துக்க ஆசை, ஆனா, வீட்ல ஒத்துக்க மாட்டங்க’’, ``காலேஜ்ல செம்மையா டான்ஸ் ஆடுவேன். இப்பல்லாம் ப்ச்... முடியறதில்லை. பார்ட் டைம்ல சால்சா கத்துக்கணும்னு ஆசை இருக்கு... ஏனோ போக முடியாமத் தள்ளிப்போய்ட்டே இருக்கு’’,  ``குழந்தைகளோட அதிகமா நேரம் செலவழிக்கணும்னு ஆசை... மனைவியோடு பத்து நிமிஷம் தனிமையில காதலோட பேசணும்னு தோணும். நேரம் இல்லை...’’

விதவிதமாக எவ்வளவு புலம்புகிறோம். எத்தனை கோணங்களில் கதறுகிறோம். ஆனால், ஏன் நம்மால் முடிவதில்லை?

பள்ளியில் படிக்கும்போது படிப்புக்கு வெளியே எதையுமே செய்ய அனுமதிக்காத சமூகம் நம்முடையது. படிக்கும்போது இங்கே ஒவ்வொரு மாணவரும் படிப்பை மட்டும்தான் செய்ய வேண்டும். அதே மனநிலை வேலைக்குச் செல்லும்போதும் தொடர்கிறது. சமூகமே ஒப்புக் கொண்டாலும் வேலைக்குச் செல்லும்போது வேலைக்கு வெளியே புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதோ அல்லது ஆர்வமாகப் பயிற்சி செய்வதையோ நாம் விரும்புவதில்லை.

திருமணத்துக்கு முன்புவரை ஏராளமாகக் கதை, கவிதைகளை வாசித்தும் எழுதியும் கொண்டிருந்தவர் சுமதி. ஆனால், திருமணத்துக்குப் பிறகு எல்லாம் நின்றுவிட்டது. திருமணமான புதிதில் மாமியாருக்காகப் பயந்து எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தியவர். பிறகு குழந்தைகள் பிறக்கவும் அவர்களை வளர்ப்பதாக எழுதுவதைத் தவிர்த்தார். பிறகு சோம்பேறித்தனம். எழுத்து முழுமையாக நின்றுபோனது. இப்போது இருபது ப்ளஸ் ஆண்டுகள் ஓடிவிட்டன. வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது. மீண்டும் எழுத முயற்சி செய்திருக்கிறார். அவர் சமீபத்தில் எழுதிய சில கவிதைகளையும் கதைகளையும் அனுப்பி யிருந்தார்.எல்லாமே மிகப் பழமையானவையாக இருந்தன. அவருடைய வாசிப்பும் எழுத்தும் பல ஆண்டுகள் பின் தங்கியிருந்தது. அவரிடம் அதைச் சொல்லத் தயங்கினேன். ஆனால், அவராகவே புரிந்துகொண்டார்.
 
‘`எனக்கு எழுத்துதான் உயிர். கல்லூரியில் படிக்கும்போது சுஜாதா மாதிரி பெரிய எழுத்தாளர் ஆகணும்னு ஆசை இருந்தது. ஆனா, அதுக்காக நான் எதையுமே செய்யலை. என் ஆர்வத்தை நான் பல வருஷங்களுக்குக் கை விட்டுட்டேன். இப்போ அந்த ஆர்வம் இருக்கு. ஆனா, நான் பின் தங்கிட்டேன். இருபத்தைந்து வயசுல இருந்த துள்ளலும் இளமைத்துடிப்பும் இப்போ இல்லை. எதை எழுதினாலும் புலம்பலாத்தான் கொட்டுது. மனசு முழுக்க புலம்பல்கள்தான் நிறைஞ்சிருக்கு. அப்பவே எப்பாடுபட்டாவது வாசிக்கிறதையும் எழுதுறதையும் நான் தொடர்ந்திருக்கணும். அதுக்காக என் கணவன்கிட்ட சண்டை போட்டிருக்கணும். அதற்கான நேரத்தை நானே உருவாக்கியிருக்கணும். ஆனா, உருவாக்கலை.’’ என்று சுமதி வருத்தமாகப் பேசினார். சுமதி உருவாக்கிக்கொண்ட தடைகள் எல்லாமே நம்மைப்போலவே அவராகவே உருவாக்கிக் கொண்டவை. அவராகவேதான் அதைத் தாண்டிவர மறுத்திருக்கிறார்.

வடசென்னையில் இருக்கிறது அந்தப் பிரியாணிக்கடை. நண்பன் ஒருவனோடு அடிக்கடிச் செல்வது உண்டு. அந்தக் கடைக்கு ஆரம்பத்தில் சென்றபோது அதைக் கவனிக்கவில்லை. கடையின் உள்ளே ஒரு டி.வி ஒன்று உச்சியில் வைக்கப் பட்டிருக்கும். எந்நேரமும் அதில் செய்தி சேனல்தான் ஓடிக்கொண்டே இருக்கும். அதுவும் பங்குச்சந்தை குறித்த தகவல்களைச் சொல்கிற ஆங்கிலச் செய்தி சேனல். அதையெல்லாம் அரைவிநாடிக்கு மேல் பார்த்ததேயில்லை.

கல்லாவில் அமர்ந்திருக்கிற பாயிடம் ‘`இன்னா பாய் ஷேர் மார்க்கெட்டா?’’ என்று நக்கலாகக் கேட்டான் நண்பன். பாய், பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு பிரியாணி அண்டாவில் பீஸ் தேடி எடுத்துப் போட்டுக்கொண்டிருந்த பையனைச் சுட்டிக்காட்டினார். அது அவனுக்காகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. எங்களுக்கு அதிர்ச்சி.

அப்படித்தானே கற்றுக்கொண்டிருக்கிறோம். பிரியாணிக் கடையில் பொட்டலம் போடுகிற பையனுக்கு அறிவு இருக்காது. அவனுக்கு எதுவுமே தெரியாது. அந்தப் பையன் ரஹ்மான். பாயின் உறவினர். வேலூரிலிருந்து இங்கே பிழைக்க வந்தவன். பிரியாணி பொட்டலம் கட்டுகிற கேப்பில், காதில் மாட்டிக்கொண்டிருக்கிற இயர் போனில் ‘`நீ அதை வித்துடாத ஹோல்ட் பண்ணு... சாயங்காலம் பார்த்துக்கலாம்... அதைத் தூக்கிடு... அதை வெச்சுக்கோ’’ என்று சொல்லிக் கொண்டிருந்தான் பையன். பிரியாணி தொண்டையைத் தாண்டி இறங்க மறுத்து நின்றது. நாங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

‘`அண்ணா, பாய் இன்னும் எப்படியும் ஒரு பத்து வருஷத்துக்காச்சும் இந்தக் கடையை நடத்துவாரு. இப்படியே பிரியாணி பொட்டலமே போட்டுட்டே இருந்துக்கலாம். அவர் புள்ள மாதிரி பார்த்துப்பாரு. ஆனா, எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும். தனியாக் கடை போடணும்னாகூட காசு வேணும்ல... படிப்பும் பெரிசாக் கிடையாது. அதான் ஷேர் மார்க்கெட் கத்துக்கிறேன்.

இந்த ஏரியால இந்திக்கார பங்க நிறையபேர் ஷேர் மார்க்கெட்ல கில்லிங்க, அவங்களோடப் பேசிப்பேசித்தான் தெரிஞ்சிகிட்டேன். தினமும் லைப்ரரி போய் எல்லா பேப்பரும் படிச்சுடுவேன். சின்னதா சேமிப்புல இருந்து நூறு இருநூறுரூபாயவச்சு டிரேடிங் பண்ணுவேன். ஃப்ரெண்ட்ஸுக்கு ஹெல்ப் பண்ணுவேன். ஆனா, இன்னும் முழுசா ரெடி ஆகலை. இன்னும் ரெண்டு வருஷத்துல கம்ப்ளீட்டா ரெடி ஆகிடுவேன். ஏன்னா இது சூதாட்டம் இல்லை. சயின்ஸ்ணா. நிறைய கத்துக்கணும். இங்கிலீஷ்தான் படிக்க புரிஞ்சிக்கக் கஷ்டமாயிருக்கு, அதுக்கு க்ளாஸ் போகப்போறேன். இப்போதைக்கு கைல காசில்லை, இருக்கிற கொஞ்சம் காசை வெச்சுக் கத்துக்கிறேன்.’’ என்றான் பையன். அவனுக்கு வயது அனேகமாக அப்போது இருபதுதான் இருக்கும்.

ரஹ்மான் எங்களைப்போல இல்லை. உடல் உழைப்பை கொட்டிக்கொண்டிருந்தான். வியர்வை வழிய கொதிக்கும் பிரியாணி அண்டாவுக்கு எதிரே அவனும் சேர்ந்து வெந்துகொண்டிருந்தான். அதிகாலை நான்குமணிக்கே எழுந்து கறிவாங்கி வந்து, பிரியாணிக்கு தேவையான பொருள்களை தயார் செய்கிற வேலை அவனுக்கு இருந்தது. மாலையிலும் நள்ளிரவு வரை கடையில் வேலை இருக்கும். அவனுக்கு கிடைக்கிற சொற்பமான ஓய்வு நேரத்தில் அவன் தனக்கு விருப்பமான, தேவையான ஒன்றைக்கற்றுக்கொள்ளத் தொடங்கி இருந்தான். ஓய்வெடுக்கவே நேரமில்லை, கையில் காசு இல்லை, ஆங்கிலம் தெரியாது என அவனிடமும் இதையெல்லாம் தள்ளிப்போடவோ செய்யாமல் இருக்கவோ ஆயிரம் காரணங்களுண்டு! இருந்தும் எது ரஹ்மானை தன் ஆர்வங்களை நோக்கித்தூண்டியது. எது நம்மை தடுத்து வைத்திருக்கிறது?

இல்லைகள்தான் நமக்கான போராட்டங்களை தள்ளிப்போடவும் தவிர்க்கவும் செய்யக் கூடியவையாக இருக்கின்றன. நமக்கான எளிய உரிமைகளைக்கூட முன்வந்து கேட்கவும் கூட முடியாதவர்களாக நம்மை மாற்றி வைத்திருக்கின்றன. தன் கனவுகளைப்பற்றிக் கவலையே படாத கணவனிடம் தனக்கான விஷயங்களைக் கேட்டுப்பெறுகிற அல்லது துணிந்து செய்கிற மனைவியாக வாழ யாரும் தயாராக இருப்பதில்லை. அலுவலகத்தில் தன் தகுதிக்கும் குறைவான வேலையும் ஊதியமும் கொடுக்கப்படும்போதும் `நமக்குத் தகுதி இல்லைபோல’ என நினைத்துக் கொண்டு கடக்கிறோம். தன் குடும்பச் சூழல், தோல்வி பயம், எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே ஒரே நிறுவனத்தில் தேங்கிக்கிடந்தாலும் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்திக்க முடியாதவர்களாக நம்மை மாற்றுவதும் இந்த இல்லைகள்தான்.

ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் வருகிறது என்றால், `அதை ஏன் அடைய முடியாது? அது ஏன் நமக்குக் கிடைக்காது?’ என்று சிந்திக்கிற முரட்டுத்தனமான எதிர்ப்பு மனநிலைதான் ஆபத்தானது. நாம் ஐந்தில் கற்றது அது! நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பது அதைத்தான். மாறாக அந்த ஆர்வத்தை, கனவை எப்படி அடைவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் அதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் அதற்கான நேரத்தை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்தக் கதவுகளின் சாவி எது என்கிற தேடல்தான் நமக்கு அவசியமானது. அந்தச் சாவிகளை உருவாக்க வேண்டியவர்களும் நாம்தான்!

- கேள்வி கேட்கலாம்...