
மருத்துவர் கு.சிவராமன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி
முந்தைய நூற்றாண்டின் மிக உயர்ந்த கண்டுபிடிப்பு என்றால், அது `அலைபேசி’ எனலாம். `அலைபேசியின் வரவால் எச்சில் ஒட்டி அனுப்பிய இன்லேண்ட் கவர் தொலைந்த மாதிரி, இந்த டெஸ்ட் டியூப் குழந்தைப் பிறப்பில் முத்தம் ஒட்டிப் பிறந்த இயல்பு கருவாக்கமும் தொலைந்து போகுமோ?’ என யோசிக்கும் அளவுக்கு இந்தக் கண்டுபிடிப்பின் பயன் கன்னாபின்னாவென கூடிவருகிறது. `கடைசி பஸ் போயிருச்சுன்னா, ஆட்டோ பிடிச்சுக்கலாம்’ என இருந்த நம் கூட்டம் வீட்டில் கிளம்பிக்கொண்டிருக்ககும்போதே, அலைபேசி ஆப்பில் தனக்கான சொகுசு வண்டியைச் சகாய வாடகைக்குப் பதிவுசெய்கிறது. அதைப்போல, இங்கே ஒரு பெருங்கூட்டம் வியக்காமல், வியர்க்காமல், விறுவிறுக்காமல், கசங்காமல், காத்திருக்காமல், கொஞ்சமும் கலங்காமல் சோதனைக்குழாய் குழந்தைக்கும் ஆர்டர் செய்யத் தயாராவது கொஞ்சம் யோசிக்கவைக்கிறது. `முட்டையை அறுவடை செய்யும் நாள் வந்திருச்சு... வங்கியில் உள்ள விந்தை எடுத்துக்கலாமா? கொஞ்சம் எங்ககிட்ட ஸ்டாக் கருக்கள் குளிர்சாதனப்பெட்டியில் உறைஞ்சு இருக்கு. உள்ளே எடுத்து வெச்சுடலாமா?’ போன்ற உரையாடல்கள் உரக்கப் பேசப்படும் பொழுதுகள் இப்போது அதிகம்.

முதல் விஷயம் டெஸ்ட் டியூப் பேபி... நவீன மருத்துவ விஞ்ஞானத்தின் உச்சபட்சக் கண்டுபிடிப்பு இது என்பதை மறுப்பதற்கில்லை. அது துடைத்த கண்ணீரும் தெளித்த மகிழ்வும் நிச்சயம் பெரிதுதான். `இனி மரணம்தான்’ எனும் பொழுதுகளில், இறந்தவனின் கல்லீரலை எடுத்து, இறக்கும் தருவாயில் உள்ளவனின் சுருங்கிப்போன கல்லீரலில் ஒட்டி உயிர் தருவது, பல்லில் இருந்து திசு எடுத்துப் பார்வைத்திறன் பறிபோன கண்ணுக்கு மீண்டும் ஒளி தருவது, கால் நாளத்தை உருவி எடுத்து இதய நாடியில் சொருகி இதயப் பணியைச் சீராக்கியது மாதிரி நவீன மருத்துவத்தின் உச்சங்களில் ஒன்றுதான் டெஸ்ட் டியூப் குழந்தையும்கூட. அமிலமும் உப்பும் போட்டுக் கலக்கிக் காத்திருக்கும் 8-ம் வகுப்பு கெமிஸ்ட்ரி மாதிரியல்ல இந்த நிகழ்வு.

கொஞ்சம் சிக்கலான அறிவியல்தான். இங்கும் பாதியை மனிதனும், மீதியை இயற்கையும் முடிவு செய்கிறார்கள். நாற்றங்கால் உண்டாக்கி, நாள் பார்த்து நடவு செய்வது மாதிரி, நர்சரியில் போய்த் திசு வளர்ச்சியில் வளர்த்த கொய்யாக் கன்றைக் கொண்டுவந்து தோட்டத்தில் வைக்கிற மாதிரிதான் சோதனைக்குழாய் குழந்தையும். கருமுட்டை வரை ஆய்வகத்தில்; அதன் பின்னரே கர்ப்பப்பைக்குள் நடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இப்போதைய தொழில்நுட்பத்தில் முழுசாகப் பத்து மாதங்கள், கண்ணாடிக் குடுவைக்குள் வளர்க்கப்பட்டு, பத்தாவது மாதம் `ஹாய் மம்மி’ எனக் குதித்து பிள்ளை வெளியே வராது. உயிரணுவையும் சினைமுட்டையும் ஒன்றாக வைத்து, `ஒட்டிக்கோங்கோ ப்ளீஸ்’ என அத்தனை ஹார்மோன் ரசாயன சமாசாரங்களையும் பக்கத்தில் வைப்பது ஐவிஎஃப் (IVF) எனும் வழி. சினைமுட்டையை அறுவடை செய்துவந்து, உயிரணுவை முட்டைக்குள் சொருகி வைத்து, கருமுட்டை உருவாக்குவது இக்சி (ICSI) எனும் வழி. `சோதனைக்குழாய் குழந்தைகள்’ எனச் சுருக்கமாகச் சொல்வது இந்த இரண்டின் வழியே பிறக்கும் குழந்தைகளைத்தான். சோதனைக்குழாயில் பிறந்த பெண் குழந்தைக்கு, இன்றைக்கு இயல்பாகக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தாயிற்று. 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயனளிக்கும் பயிற்சிதான் இது.
இனி வரும் நாள்களில், `சார், ஆர்டர் பண்ணியிருந்தார்ல... அவர் ஆதார் கார்டையும் டி.என்.ஏ. கோடையும் செக் பண்ணிப் பார்த்துட்டு, அந்த எல்.கே.ஜி. சாஃப்ட்வேரையும் மறக்காமல் லோடு பண்ணி, அந்த மூணு வயசுப் பையனை டெலிவரி பண்ணிடுப்பா... நீங்க அப்படியே வீட்டில்போய் எட்டுமணி நேரம் அவங்க அம்மாகிட்ட சார்ஜ் போட்டிருங்க... அப்புறம் நீட், கேட் கோச்சிங் எல்லாம்கூட நாளைக்கே அனுப்பிடலாம்’ எனச் சொல்லும் அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வரக்கூடும்.

ஆனால், இப்போதைய தொழில்நுட்பம் வணிகப்படுத்தப்படுவதின் உச்சம்தான் சற்று பயமுறுத்தல் தருகிறது. `இரண்டு ஐவிஎஃப் பண்ணினால், மூணாவது ஐவிஎஃப் இலவசம்’, `குவா குவா கேட்கவில்லை என்றால் முழுப் பணமும் வாபஸ்’ எனச் சத்தமாகச் சொல்லும் அவர்கள், நுண்ணிய எழுத்துகளில், சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று மட்டும்தான் இன்னும் எழுதவில்லை. அந்த அளவுக்கு இந்தத் தொழில்நுட்பத்தில் வணிகம் தலைவிரித்தாடுகிறது. நிறைய நோய்களுக்கு, `விளம்பரப்படுத்தக் கூடாது’ என மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல் உள்ளது. ஆனால், ஆடித்தள்ளுபடி ரேஞ்சில், கண்ணீருடன் குத்தவைத்திருக்கும் பெண்ணின் வீட்டுக்கு போன் செய்து, `உங்க முட்டை இன்னும் எங்க ஆஸ்பத்திரி ஃபிரிட்ஜில் காத்திருக்கிறது. நீங்க ஏன் இன்னும் வரலை? இந்த முறை ஆஃபர்ல சிகிச்சை தரப்போறோம். 60 பெர்சென்ட் செலவுதான். வாங்க வாங்க... வந்து அள்ளிட்டுப் போங்க’ எனச் சொல்வதும்.
`மூணு முட்டை உங்களுது. இன்னும் வேற ஒருத்தரோட இரண்டு ஹெல்த்தியான நல்ல முட்டை இருக்கு. ஒண்ணா வைக்கலாம். எது கேட்ச் பண்ணுதோ பார்த்துக்கலாம். அப்பத்தான் சான்ஸ்கூட இருக்கும்’ போன்ற சம்பாஷணைகள் இங்கே கொஞ்சம் அதிகம். எதற்கெடுத்தாலும், `உலகத்தரமான சிகிச்சை’ என முரசு கொட்டும் மருத்துவ வணிகம், உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகளை மட்டும் வசதியாக விட்டுவிடுவது ஏன்? யாருக்கு ஐவிஎஃப், யாருக்கு இக்சி? என்பதற்கு மிகத் துல்லியமான வழிகாட்டுதல்கள் உள்ளன. உயிரணுக்கள் துளியும் இல்லை அல்லது முட்டையை உடைத்து உள்புகும் ஆற்றல் இல்லை அல்லது உயிரணுவையே விதைப்பையில் இருந்து ஊசியில் சேகரிக்க வேண்டும் போன்ற நேரங்களில் இக்சியோ, ஐவிஎஃப்போ அவசியம்தான். இன்னும் ஒன்றிரண்டு சினைமுட்டைகள்தான் இருக்கின்றன; அதுவும் தானாக வெடித்து வர வாய்ப்பே இல்லை; கருக்குழாய் பாதை இரு பக்கமும் அடைபட்டு நிற்கிறது; இதையெல்லாம் தாண்டி 6-7 முறை விந்தணுக்களை ஊசி மூலம் செலுத்திக் (ஐயூஐ) காத்திருந்த பின்னரும் பலனில்லை, இனி ஐவிஎஃப்தான் எனப் பன்னாட்டு நெறிமுறையும் நம் நாட்டு நெறிமுறையும் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், இங்கே பலரும் உயிரணுக் குறைச்சலைவிட உயிரை வாங்கும் மாமியாரின் வெந்நீர் வார்த்தைகளில்தான் ஐவிஎஃப்புக்குத் தயாராகிறார்கள். ``உன்கூடத்தான் அவளுக்கும் ஆச்சு; இப்போ பாரு... இரண்டாவது மகப்பேறுக்கு வந்தாச்சு. உனக்கு ஏன் இன்னும் புழு பூச்சி நிக்கலை... நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதானா?’ எனும் நச்சு அங்கலாய்ப்புக்களில், கருத்தரிப்புத் தாமதங்களுக்கான காரணங்கள் ஆராயப்படாமல், வளைகாப்பு நடத்த முடியாத வருத்தங்கள் மட்டுமே ஐவிஎஃப்பை, இக்சியை நிர்ணயம் செய்கின்றன.

அவசியமில்லாமலும், அவசரங்களினாலும், நெறியில்லாமலும் அரங்கேறும் இந்தத் தொழில்நுட்பத்தில் அநேகமாக முழுமையாகப் பாதிக்கப்படுவது என்னவோ எப்போதும்போல் பெண்ணே. முதலில் இது நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை அல்ல... இருவரில் யாரோ ஒருவருக்கு அல்லது இருவருக்கும் உள்ள இடர்பாட்டினால் தாமதிக்கும் கருத்தரிப்பை, தொழில்நுட்பங்கள் மூலம் சற்றுக் குறைக்கும் நிகழ்வு. இது, உடலுள் இயல்பாக நிகழும் ஒருமிப்பைத் தனியே நிகழ்த்தி, பின் கர்ப்பப்பைக்குள் பொதிந்து வைக்கும் நுணுக்கம் மட்டுமே. `வயது வேகமாகக் கடக்கிறது, முட்டைகளின் அளவு குறைகிறது. உயிரணு மிகக் குறைவு’ எனத் தெரிய வருகையில், முட்டையை அவள் சினைப்பைக்குள் வளர்க்க, வெளியிருந்து ஹார்மோன்கள் கொடுக்கப்படும்.
சரியான தேதியில் முட்டை முழுமையாக வளர்ச்சி பெற்றதும், அது தன் மேலுறையை விலக்கி வெடிக்க, பிறிதொரு ரசாயனம் பீய்ச்சப்படும். அதன் பின்னர் முட்டைகளை மெள்ள நேரடியாகக் கவர்ந்து எடுக்க ஏதுவாக மருந்துகள்; எடுத்த முட்டை வெளியே ஆய்வகத்தில், அவர்தம் கணவரிடம் அல்லது கொடையாளரிடம் இருந்து பெறப்பட்ட உயிரணுவோடு புணரவைத்து அல்லது ஊசி மூலம் உறவாடவைத்து கருமுட்டையாக்கு வார்கள். அந்தக் கருமுட்டைகளில் ஒன்றோ இரண்டோ சில நேரங்களில் இரண்டுக்கும் மேலோ, கர்ப்பப்பைக்குள் விடப்படும். பின்னர் இயல்பாகக் கருத்தரித்தால் எந்த ஹார்மோன் சுரக்குமோ, அதை ஊசி வழியே பெண்ணுக்குள் செலுத்துவார்கள். ஓரிரு வாரங்களில் உள்ளே விடப்பட்ட கருமுட்டை, கர்ப்பப்பையின் சுவர் பற்றி வளர ஆரம்பிக்கும். அந்தப் பெண் தான் செயற்கைக் கருத்தரிப்பினால் தாயாகிவிட்டோம் என்பதை உணர்ந்து ஹார்மோன்கள் சுரக்கும்வரை, அத்தனை பாதுகாப்பு ரசாயனங்களும் அவளுக்குள் கொட்டப்படும்.

ஒவ்வொரு ரசாயன ஹார்மோனும், உடம்பில் இயல்பாக மூளையில் இருந்தும் சினைப்பையில் இருந்தும் பிதுங்கி வர வேண்டிய மிக நுண்ணிய அளவிலானவை. எதிர்பார்ப்பின்படி, குழந்தைப்பேறு நிகழ்ந்துவிட்டால், கணவர் இனிப்பு கொடுக்கவும், மாமியார் சீர்வரிசை பேசவும், நாத்தனார் `செயற்கையாகக் கருத்தரிச்சாக்கூட பிள்ளை அப்படியே என் அண்ணன் ஜாடைதான்... அவன் அணுக்கள் வீரியம்தாம் போலிருக்கு’ எனச் சொல்லி நகர்ந்துவிடுவார்கள். பல நேரங்களில், அடுத்த பல ஆண்டுகளை மௌனமாக, சற்றுக் கூடுதல் எடையுடன், `மூட்டு வலிக்கிறதே எதனால்...இன்னும் மார்புக்காம்பில் திரவம் கசிகிறதே எதனால்... மார்பகம் பருத்து வலித்துக் கொல்கிறதே எதனால்... ஒருவேளை புற்றாகிவிடுமோ?’ என்ற பயத்துக்கு அநேகமாகக் கணவனிடம் இருந்து பதில் வராது. ``உனக்கு எப்பவுமே பயம்தான்’’ எனச் சொல்லி புன்னகைப்பதில்கூட, ஏளனம் ஒளிந்திருக்கிறதோ எனத் தோன்றும்.
சினைமுட்டையை எடுக்க, கருமுட்டையைப் பொதிய, முட்டையைக் கருப்பைக்குள் ஒட்டவைக்க எடுக்கும் அத்தனை மெனக்கெடல்களிலும், துளியூண்டுகூட அதன் பின்னான துயரங்களில் கடந்து செல்லும் வலி, காலம் முழுக்க அந்தப் பெண்ணுக்கு மட்டுமே பிரத்யேகமானது. இத்தனைக்கும் மருந்தாக அந்தக் குழந்தையின் சிரிப்பும் ஆர்ப்பரிக்கும் வளர்ச்சியும் இருந்துவிட்டால், மேற்சொன்ன வலிகளை அந்தப் பெண்ணால் கடந்துவிட முடியும். அதே சமயம் 70 சதவிகிதத்துக்கும் மேலாகத் தோல்வியில் முடியும் செயற்கைமுறைக் கருத்தரிப்பு முயற்சிக்குப் பின்னர் இந்த அத்தனை வலிகளையும் அவ்வளவு எளிதாகக் கடக்க முடியாது.
மொத்தத்தில், எப்படியாவது எனக்குக் குழந்தை வேண்டும். கடன்பட்டோ அல்லது என் வசதிக்கு இது ஒன்றும் பெரிதில்லை எனப் பெரிய தொகையைத் தூக்கி எறிந்தோ பெறும் இந்தச் செயற்கைக் கருத்தரிப்பில், சில நேரங்களில் மொத்தமுமே அவசியமின்றி, பெண்கள்மீது மௌனமாக நடத்தப்படும் வன்முறையாக மாறுவது வலியுடன் கூடிய உண்மை. மூலைக்கு மூலை பெருகிவரும் மையங்கள் இந்தச் சமூகச் சிக்கலை, காலகாலமாகப் பெண்மீது நடத்தப்படும் வன்முறை மாறாத சமூகத்தை, சற்று யோசித்துத் தன் வணிகப் பெருக்கத்துக்கான கூச்சலைப் போட வேண்டும். `இந்தச் செயற்கைக் கருத்தரிப்பு இப்போது அவசியமா? வேறு சாத்தியம் அறவே இல்லையா? இன்னும் சிலகாலம் இயல்பாகக் கருத்தரிக்க அத்தனை வழிகாட்டுதல்களையும் தெளிவாகச் சொல்லிக் காத்திருக்க அறிவுறுத்தலாமா அல்லது பிற மருத்துவத்துறையில் முயற்சிக்கலாமா? உயிரணுவை மூலிகை சிகிச்சையின்மூலம் உயர்த்தி, பின்னர் ஊசி மூலம் அவற்றைக் கர்ப்பப்பைக்குள் செலுத்த சாத்தியம் இல்லையா? அந்த சாக்லேட் நீர்க்கட்டியை மட்டும் நாம் ஊசியில் உறிஞ்சிக் கொள்ளலாமே... பிற முட்டையை இயல்பாக வெடிக்கவைக்க ஊட்ட உணவோ பிற துறை மருந்தோ எந்த அளவு சாத்தியம்?’ என்ற ஒருங்கிணைந்த பார்வை இந்தத் துறையில் மிக மிக அவசியம். அலோபதி, ஹோமியோபதி, நேச்சுரோபதி என எந்தப் பதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... ஒருங்கிணையும்போது, அங்கே வெங்கடாசலபதியும் அருள்புரியும் சாத்தியம் சற்றுக் கூடுதலே!
- பிறப்போம்...
எப்போது இக்சி / ஐவிஎஃப் முயற்சிக்கலாம்?
உயிரணுக்கள் துளியும் இல்லை அல்லது மிகக் குறைவு. முட்டையை உடைத்து உள்புகும் ஆற்றல் இல்லை அல்லது உயிரணுவையே விதைப்பையில் இருந்து ஊசியின் மூலம் சேகரிக்க வேண்டும் என்ற நேரங்களில் இக்சியோ / ஐவிஎஃப்போ அவசியப்படலாம். வயது அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இன்னும் ஒன்றிரண்டு சினை முட்டைகள்தான் இருக்கின்றன. அவையும் தானாக வெடித்து வர வாய்ப்பே இல்லை. கருக்குழாய் பாதை இரு பக்கமும் அடைபட்டு நிற்கிறது. இதையெல்லாம் தாண்டி 6-7 முறை விந்தணுக்களை ஊசி மூலம் செலுத்தி (ஐயூஐ) காத்திருந்த பின்னரும் பலனில்லை போன்ற நேரங்களில் ஐவிஎஃப் / இக்சி-க்கு முயற்சிக்கலாம்.