Published:Updated:

சொல் அல்ல செயல் - 20

சொல் அல்ல செயல் - 20
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 20

அதிஷா

பார்வதியின் கணவன் நடுராத்திரியில் எங்கள் வீடுகளின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தான். ``மதியத்திலிருந்து பார்வதியைக் காணவில்லை’’ என்று அவன் பதற்றமாகச் சொன்னான். அவனோடு இணைந்துகொண்டு நாங்களும் தேடினோம். பார்வதி எங்குமே இல்லை.

அடுத்தநாள் காலையில் எதுவுமே நடக்காதது போல பார்வதி வீட்டுக்கு வந்தாள். யாரிடமும் எதுவுமே பேசவில்லை. எல்லோரும் பார்வதியிடம் பேசினர். அவள் எங்கே சென்றாள்? எதற்காக வெளியே போனாள்? இரவு எங்கிருந்தாள்? பார்வதியின் பெற்றோர் பேசினார்கள். மாமியாரும் மாமானரும் விசாரித்தனர். கணவன் மோசமான வார்த்தைகளைச் சொல்லி அவளுடைய தலைமயிரைப் பிடித்து இழுத்துக் காலால் எட்டி உதைத்து விசாரித்தான். `வாயத் திறக்கறாளா பாரு முண்ட...’ என்கிற பெண்களின் குரல்கள் கேட்டன. ஆனால், அத்தனை அடிகளுக்கும் பார்வதி அமைதியாகத்தான் இருந்தாள். அவள் எதற்காகவோ வைராக்கியமாக இருந்தாள்.

பார்வதி பள்ளித்தோழி. பள்ளிநாள்களில் அவள் எழுதிய ஒரே ஒரு காதல் கடிதம்தான் அவளுடைய வாழ்க்கையையே மாற்றியது. பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அந்தக் காதல் கடிதத்தை எழுதினாள். அது சக மாணவன் மீதான ஈர்ப்பினால் எழுதப்பட்டு இருந்தது. அந்த மாணவன் அந்தக் கடிதத்தை தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டான். அந்த நண்பர்கள் அதைப்பற்றிப் பள்ளி முழுக்கப் பேசத்தொடங்கினர். பள்ளியின் கழிப்பறைகளில் பார்வதியின் பெயர் ஆபாச வார்த்தைகளோடு எழுதப்பட்டது. பார்வதியின் காதல் கடித விவகாரம் தலைமை ஆசிரியர் வரைக்கும் சென்றது. பெற்றோர்கள் பள்ளிக்கு அழைக்கப் பட்டனர். எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

சொல் அல்ல செயல் - 20

அதற்குப்பிறகு, எப்போதும் பார்வதியால் பார்வதியாக வாழவே முடியவில்லை. அவள் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டாள். எல்லோரிடமும் இனித் திருந்திவிடுவேன் என்று மன்றாடினாள். யாரும் அதை நம்பவே இல்லை.பார்வதி 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டாள். அவளை நடமாடும் சிறைச்சாலை ஒன்றில் அவளுடைய பெற்றோர் அடைக்க முற்பட்டனர்.

பார்வதியின் புத்தகங்களை நள்ளிரவில் அவள் அம்மா புரட்டிப்பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்வதி பலமுறை பார்த்து வருந்தி அழுதிருக்கிறாள். இருபாலர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவளை, பெண்கள் பள்ளிக்கு மாற்றினர். அதற்காகவும் அழுதாள். பார்வதியின் தம்பிக்கு முழு நேரமும் அக்காவை வேவு பார்க்கும் ஒற்றன் வேலை கொடுக்கப்பட்டது. அவன் அதைச் சிரத்தையோடு செய்துகொண்டே இருந்தான். அதற்காகவும் அழுதாள்.

அவனுடைய தம்பி மட்டும் அல்ல, பார்வதியின் சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சின்னம்மா, அத்தை, மாமா என எல்லோரும் வேவு பார்க்கவும் அதைப்பற்றியே விவாதிக்கவும் தொடங்கினர். பார்வதியை வைத்துக்கொண்டே அவளுடைய கற்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து அவளைச்சுற்றி நடந்து கொண்டே யிருந்தன. பார்வதியின் தோழிகளின் வீட்டில் பத்து நிமிடம் அதிகமாக அமர்ந்திருந்தாலும்கூட அவளை அழைத்து அப்பாவும் உறவினர்களும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

‘`அப்பாகிட்ட நேத்து சொன்னேன், அப்பா...  நீங்க எல்லாரும் என்னை இப்படி ஃபாலோ பண்ணிட்டே இருக்கறது பிடிக்கலைனு.  `எல்லாம் உன்மேல இருக்கிற அன்புலதான். நீ நல்லா இருக்கணும். உன் எதிர்காலம் நல்லா இருக்கணும்னுதான்’னு சொன்னார்.

நான் செஞ்சது தப்புதான். அதுக்காகத் திரும்பத்திரும்ப நான் அதையே பண்ணிட்டு இருப்பேன்னு நினைச்சு இப்படிப் பண்றதைப் பார்த்தா, கோபமா வருது. இதுக்காகவே மறுபடியும் ஏதாச்சும் பண்ணணும்னு தோணுது’’ என்று ட்யூஷனில் ஒருநாள் கதறி அழுதாள்.

ட்யூஷனில் ஆண் நண்பர்களிடம் பேசுகிறாள் என்று யாரோ தகவல் கொடுக்க, அதற்காக வீட்டில் அடிவாங்கினாள். ட்யூஷனும் நிறுத்தப்பட்டது.

இந்தத் தொடர் கண்காணிப்பே அவளை இதற்கு எதிராக ஏதாவது பெரிய தவறைச் செய்ய வேண்டும் என்கிற ஆபத்தான மனநிலையை உருவாக்கத் தொடங்கியது. அதனாலேயே ஒரு முறை தன் நண்பர்களோடு சினிமாவுக்குச் சென்றாள். எங்கள் நண்பர்களில் ஒருவனை வேண்டுமென்றே காதலித்தாள். அவளது இந்த எதிர்நடவடிக்கைகளுக்கு உடனடியாகத் தண்டனை கிடைத்தது. அவசரமாக உறவுக்காரப் பையனோடு கல்யாணத்தை முடித்து வைத்தனர்.  அப்போது பார்வதிக்கு வயது வெறும் 17-தான்.

சொல் அல்ல செயல் - 20

பார்வதியின் கணவனுக்கு இந்தக் காதல் கடித விவகாரம் நன்றாகவே தெரியும். பெற்றோர் களைவிடவும் கணவனுடைய கண்காணிப்பு இன்னும் தீவிரமாக மாறியது. பார்வதி வீட்டைவிட்டு இறங்கவே முடியாது. அப்படியே இறங்கினாலும் யாரிடமும் பேசக் கூடாது. பேருந்தில் பயணிக்கும்போதுகூட இரண்டு பக்கங்களும் பார்க்காமல் தலையை இடது வலது திருப்பாமல் அமர்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் மூடவிதிகளை உருவாக்கினான். அந்த விதிகளை மீறும்போது அவள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது.

அடிக்கடி மொட்டைமாடியில் எப்போதும் தனிமையில் அமர்ந்திருந்தாள் என்பதற்காக ஒருநாள் வீட்டில் விசாரணை நடந்தது. உறவுக்காரர்கள் எல்லோரும் மாறி மாறிக் கேள்விகள் கேட்டுக் குடைந்திருக்கிறார்கள்.

அன்றைய தினம்தான் பார்வதி காணாமல் போனாள். இரவு வீட்டுக்குத் திரும்பவில்லை. அந்த இரவுதான் அவளுடைய உறவினர்கள் எங்கள் வீட்டுக்கதவுகளைத் தட்டினர். பார்வதி அடுத்தநாள் காலையில்தான் வந்தாள். அவளை அடித்துத் துன்புறுத்தியும் அவள் எங்கே சென்றாள், என்ன செய்தாள் என்பதைப்பற்றி வாயைத் திறக்கவேயில்லை.

அதேநாளில் அவள் தன் அறையில் தற்கொலை செய்துகொண்டாள். அந்த இரவில் பார்வதி என்ன செய்தாள், எங்கே சென்றாள் என்பது யாருக்குமே தெரியவில்லை. இனி தெரியப்போவதும் இல்லை. எல்லோரும் வெவ்வேறு கதைகளைச் சொன்னார்கள். அவளுடைய `கற்பு’ குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆனால், அந்த இரவில் பார்வதி தன்னைக் கண்காணித்துக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் ஏதோ ஒன்றை புரியவைக்க முயன்றிருக்கிறாள் என்பதை உணர்ந்துகொண்டோம்.

நம் உறவுகளில் அன்பின் பெயரால், பாதுகாப்பின் பெயரால், காதலின் பெயரால்தான் இங்கே எல்லா வகையான கண்காணிப்பின் அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன; திணிக்கப்படுகின்றன. இந்த அன்பின் சிறைகளில் மெஜாரிட்டியாக இருப்பவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான்.

நாம் நமக்குக் கீழே இருப்பவர்களைக் கண்காணிப்பதை நமது கடமையாகக் கருதுகிறோம். ஆனால், அது  தன் எல்லைகளைத் தாண்டி சக மனிதரின் அந்தரங்கமான உலகிற்குள் நுழைய முற்படும்போது என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பதை ஏனோ எப்போதும் சிந்திப்பதேயில்லை. சிறிய தவறுகளுக்காக வாழ்நாள் முழுமைக்குமான கண்காணிப்புகளை வழங்குகிறவர்களாக மாறி விடுகிறோம்.

நமக்குப் பிரியமானவர்களை வீடுகளில் கண்காணிக்கிறோம். காதலர்கள் ஒருவரையொருவர் கண்காணிக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளை களையும், வயதான பெற்றோர் களை வளர்ந்த பிள்ளை களும்கூட கண்காணிக் கிறார்கள். மகளின் வாட்ஸ்அப்கள் அப்பாக் களால் வேவு பார்க்கப் படுகின்றன. கணவனின் மெசேஞ்சர்கள் மனைவியால் துப்பறியப்படுகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களை, முதலாளிகள் தொழிலாளிகளை என நம் அந்தரங்கம் இன்று அந்தரங்கமாக இல்லை.  தன் அந்தரங்கத்தை மறைக்க முயல்கிறவர்கள் குற்றவாளியாகப் பார்க்கப்படுகின்றனர். தனிமனிதர்களின் அந்தரங்கம் மட்டும் இல்லை; அரசால், நிறுவனங்களால், கார்ப்பரேட்களால் குறிப்பிட்ட சில சமூகங்களும்கூட கண்காணிக்கப்படுகின்றன!

ஆனால், மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடமெல்லாம் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இந்த ப்ரைவஸி. அதை நாம் உணர்ந்திருக்கிறோமோ?

சொல் அல்ல செயல் - 20



இன்று நம் அந்தரங்கம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு  செல்போனுக்குள் வந்துவிட்டது. யாருமே தங்களது செல்போனை அடுத்தவர் எடுத்துப் பார்ப்பதை ரசிப்பதேயில்லை; அதையும் மீறி செல்போனை எடுத்து பார்க்கிறவர்களைத் தடுத்து நிறுத்தினால், நம்மிடம் ஏதோ தவறு இருக்கிறது, நாம் எதையோ மறைக்கிறோம் என குற்றஞ்சாட்டப்படுகிறோம். கண்காணிப்புக்கு ஒப்புக்கொள்ளாதவர்களும், தன் அந்தரங்கத்தைப் பாதுகாக்க நினைக்கிறவர்களும், அதை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் வைத்திருக்க நினைக்கிறவர்களும் இங்கே தீயவர்களாக முன்வைக்கப் படுவது இப்படித்தான். அவர்களிடம் ஏதோ ஓர் ஆபத்து இருக்கிறது என நாம் நம்புகிறோம்.

மனிதர்களை அடிமைகளாக மாற்ற, நம் விருப்பம்போல் ஆட்டிவைக்க அவர்களைச் சிறையில் அடைக்கவோ, துன்புறுத்தவோ, அவர்களை மிரட்டவோ எதுவுமே தேவை யில்லை. அவர்களைத் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருந்தாலே போதும். அவர்களாகவே அவர்களுடைய மூளைக்குள் ஒரு சிறையை உருவாக்கிக் கொள்வார்கள். இன்றைய அரசாங்கங்களும் நிறுவனங்களும் நம்மீது சுமத்துவது அதைத்தான்.

இந்தியா முழுக்க இருக்கிற சிறுபான்மையினர்மீதும்  மூன்றாம் பாலினத்தவர்கள்மீதும், தலித்துகள் மீதும் பொதுமக்களும்கூட சுமத்துவது இத்தகைய கண்காணிப்பு களைத்தான். இந்தியா முழுக்க இஸ்லாமியராக இருக்கிற ஒரே காரணத்துக்காக எத்தனை இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் அவசியமே இல்லாமல் கண்காணிக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். சேரிப் பகுதிகளில் வாழ்கிறார்கள் என்கிற காரணத்துக்காக சந்தேகப் பார்வையோடு கண்காணிப்புக்கு உள்ளாகும் இளைஞர்கள் இந்தியாவில் எத்தனை கோடிப் பேர்?

காஷ்மீரில் இருக்கிற அனந்த்நாக் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அதன் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை முழுக்க ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் ஒரு ராணுவ வீரர் நிறுத்தப்பட்டிருக்கிறார். அந்த ராணுவ வீரர்கள்மீது மக்களுக்கு மோசமான வெறுப்பு இருக்கிறது. யாராவது ராணுவ வீரன் இதயம் நின்றுபோய் அப்படிச் செத்து விழுந்தாலும் யாருமே அவனைக் கண்டுகொள்ளமாட்டார்கள். அந்த அளவுக்கு வெறுப்பு. இதைச் சொன்னது ராகேஷ் என்கிற தமிழ்நாட்டு ராணுவவீரர்தான். அவர் மிகுந்த சோர்வோடு நாள்முழுக்க நின்றாலும், ஊர் மக்கள் யாருமே அவரிடம் உரையாடுவதில்லை. ‘`நாங்க அவங்க பாதுகாப்புக்காகத்தான் நிற்கிறோம். ஆனா, அவங்க எங்களை எதிரி மாதிரி பார்க்கிறாங்க பாஸ்’’ என்று புலம்பினார்.

அதே ஊரில் இருந்த ஒரு பெரியம்மாவிடம் பேசும்போது வேறு மாதிரிப் பேசினார். ‘`உங்க வீட்டு வாசல்ல சம்பந்தமே இல்லாம ஒருத்தன் கையில துப்பாக்கியோட எந்நேரமும் நின்னுக்கிட்டிருந்தா, உங்களுக்கு என்ன குஷியாவா இருக்கும். யார் கேட்டா இவங்க பாதுகாப்பை? உங்க ஊர்ல இப்படித்தான் வீட்டுக்கு வீடு போலீஸ் ராணுவம்லாம் நிற்குதா மகனே... இவங்களை மனசுல வெச்சுதான் நாங்க எங்க வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கு.’’ என்று அந்தப் பெரியம்மா ஆதங்கமாகப் பேசினார். காஷ்மீர் முழுக்க இதே குரல்களைக் கேட்க முடிந்தது. குறிப்பாக இளைஞர்கள். அவர்களுக்கு ராணுவத்தின் கண்காணிப்பு என்பது எரிச்சலை உண்டாக்குகிறது. சுதந்திரமாக கிரிக்கெட்கூட ஆட முடியாத ஒரு தேசத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்.

``மற்றவர்களால் கண்காணிக்கப்படும்போது நாம் நாமாக இருப்பதில்லை. நம்முடைய அசைவுகளும் செயல்களும் நாம் எடுக்கும் முடிவுகளும்கூட மாற்றமடைகின்றன. நாம் நம்மைக் கண்காணிக்கிறவர்களுக்காகவே வாழத் தொடங்குகிறோம். அவர்களைப் பற்றியே சிந்திக்க ஆரம்பிக்கிறோம். அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். அவர்களைத் திருப்திபடுத்த முயல்கிறோம். இப்படிக் கண்காணிக்கப்படும்போதெல்லாம் நம்முடைய சுயம் நம்மைவிட்டு விலகிவிடுகிறது. சுயத்தை இழந்துவிட்டு வாழ்கிற யாராலும் பல நாள்களுக்கு அப்படியே இருக்க முடியாது. ஒருகட்டத்தில் நம் கண்காணிப்பாளர்களுக்கு எதிராக நாம் முழக்கங்களை எழுப்பும்போது நாம் தீவிரவாதிகளாக முன்னிறுத்தப்படுகிறோம். அல்லது தீவிரவாதிகளாகிவிடுகிறோம்’’ என்று கோபமாகப் பேசிய அப்பாஸ் என்கிற கல்லூரி மாணவனின் குரல் காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்தக் குரலைப்போல இருந்தது.

‘`கூகுள்ல எதையாவது தேடினா, நம்ம எல்லோருக்கும் ஒரே விஷயத்தை மட்டுமே அது காட்டாது தெரியுமா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விஷயங்களைத்தான் அது காட்டும்’’ என்று பெங்களூரு வெங்கட் சொல்லும்போது ஆச்சர்யமாக இருந்தது. அதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால், அது உண்மை. எல்லோருமே இதை முயன்று பார்க்கலாம்; கூகுள் ஆளுக்கேற்றபடி தன் முடிவுகளை மாற்றிக்காட்டுகிறது.

சொல் அல்ல செயல் - 20

`ஏன் கூகுள் அப்படிக் காட்டுகிறது? எதை வைத்து இவர்களுக்கு இதை இதைத்தான் காட்ட வேண்டும் எனத் தீர்மானிக்கிறது?’ என்று வெங்கட்டிடம் கேட்டேன். வெங்கட் ஒரு டெக்கீ. ஹேக்கிங் மாதிரியான விஷயங்களில் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர்.

‘`கூகுள் எப்போதும் நம்முடைய இணைய அசைவுகளைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது! நாம் என்ன பார்க்க வேண்டும்; எதைப் படிக்க வேண்டும் என்பதை கூகுள்தான் தீர்மானிக்கிறது. நீங்கள் புடலங்காய் பற்றியே நிறைய தேடிக்கொண்டிருந்தால், புடலங்காய் வியாபாரிகளின் விளம்பரங்களையும் முதல் பக்கத்தில் புகுத்திக்காட்டும். நீங்கள் எந்த இணையதளத்திற்குச் சென்றாலும் புடலங்காய் விளம்பரங்களாகப் போட்டுத்தாக்கும். எப்போதோ அமேசானிலேயோ ஃப்ளிப் கார்டிலேயோ நாம் தேடிய உள்ளாடைகளை நினைவில் வைத்துக்கொண்டு, இன்னொரு நாள் புதுமைப்பித்தன் சிறுகதைகளை ஏதோ தளத்தில் வாசிக்கும்போது சம்பந்தமில்லாமல் உள்ளாடை விளம்பரங்கள் வரும். இதைப்பற்றி யோசித்தது உண்டா?’’ வெங்கட் கேட்கக் கேட்க ஆச்சர்யமாக இருந்தது.

கூகுள் வளர்வது இப்படித்தான். நம்மை வேவுபார்த்து சேகரிக்கும் தகவல்களைக் கொண்டுதான் தங்களுடைய வணிகத்தை வளர்க்கிறது. கூகுளிடம் பல நூறுகோடி மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய மிகப்பெரிய தகவல் கிடங்கு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு மனிதகுலத்தின் வரலாற்றையே மாற்றி அமைக்க முடியும். மனிதர்களுடைய மனநிலைகளை ஆராய்ந்து விரும்பியபடி ஆட்டுவிக்க முடியும். கூகுள் மட்டுமல்ல; ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூகவலைதளங்களும்கூட நம்மைக் கண்காணிக்கின்றன. நாமாகவே அவர்களுடைய கேமராக்களுக்கு முன்னால் நின்று நடனமாடிக்கொண்டிருக்கிறோம். நம் அந்தரங்கமான விஷயங்களையும் அதில் அள்ளிக் குவிக்கிறோம்.

‘`நம்முடைய அந்தரங்கமான தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு தனியார் நிறுவனமே இவ்வளவு செய்ய முடிந்தால், பிறப்பு சான்றிதழ் தொடங்கி இறப்பு சான்றிதழ் வரை இணைத்துவிட்ட ஆதார் கார்டு தகவல்களை வைத்து அரசு நம்மை என்னவெல்லாம் செய்ய முடியும்? தன்னுடைய குடிமகன்களின் மீது என்ன மாதிரியான கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் செலுத்த முடியும்?’’ வெங்கட் தகவல் தொழில்நுட்பத்தின் அரசியலைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

``பெனாப்டிகான்னு ஒரு விஷயம் இருக்கு,  இன்னைக்குப் பல நிறுவனங்கள் அப்படிப்பட்ட அமைப்புலதான் உருவாக்கப்படுது. `பெனாப்டஸ்’ங்கற கிரேக்க வார்த்தையிலேர்ந்து உருவானது அது. கிரேக்க மித்தாலஜில பெனாப்டஸ்ங்கிறவன் நூறு கண்கள் கொண்டவன். சிறைச்சாலைகள் அப்படிப்பட்ட அமைப்புலதான் உலகம் முழுக்கக் கட்டப்படுது. அப்படித்தான் இன்னைக்கு நாம வேலை செய்ற அலுவலகங்கள் தொடங்கி நம்மை ஆளுற அரசாங்கங்கள் வரை மாறிட்டு வருது. நாம எல்லோருமே ஏதோ ஒரு பெனாப்டஸின் அடிமைகள்தான்’’ என்று கிறுக்குப் பிடிக்கிற அளவுக்குச் சொல்லிவிட்டுப்போனார் வெங்கட்.

இன்றைக்கு ஒட்டுமொத்தமாக ஒரு தேசமே மிகப்பெரிய அளவில் வெவ்வேறு கருவிகளின் பெயரால், திட்டங்களின் பெயரால் கண்காணிக்கப்படுகிறது. `இப்படிப் பெரிய அளவில் கோடிக்கணக்கான மக்களை ஒட்டுமொத்தமாகக் கண்காணிப்பதால், எனக்கு என்னங்க பிரச்னை வரப்போகுது. யாரெல்லாம் தப்பு செய்றாங்களோ, அவங்களுக்குத்தானே பிரச்னை. நான் ஒழுங்கா இருக்கேன். என்னை யாரும் எதுவுமே பண்ண முடியாது. மடியில கனமில்லை. வழியில பயமில்லை...’ என்று நாம் நினைக்கலாம்.

நான் நேர்மையானவன், உத்தமன் என்று நினைக்கிற எத்தனை பேரால் தங்களுக்கு நெருக்கமானவரிடம் தன்னுடைய எல்லா பாஸ்வேர்ட் களையும், மொபைலையும், சமூகவலைதள அக்கவுன்டுகளையும் கொடுக்க முடியும்?  இங்கே எல்லோருக்கும் ஓர் அந்தரங்கமான வாழ்க்கை இருக்கிறது. அது நம் உயிருக்கும் மேலானவர்களிடம்கூட வெளிப்படுத்த முடியாத இருள் நிறைந்த பக்கங்களைக் கொண்டவையாக இருக்கிறது.  அதில் நல்லது கெட்டது எல்லாமே கலந்துதான் இருக்கும். அதை எதற்காகவும் இங்கே யாரும் விட்டுத்தரமுடியாது. ஏன் தெரியுமா? தீர்ப்பெழுதும் கண்களற்ற ஓர் உலகில் வாழவே நம் எல்லோருக்கும் விருப்பம் இருக்கிறது. ஏன் என்றால்,  நம்மால் அங்குதான் விருப்பம்போல் செயல்பட முடியும்! இருந்தும் நாம் ஏன் நம் மீது திணிக்கப்படும் இந்தக்  கண்காணிப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்?

நம்மை எந்நேரமும் கண்காணிக்கும் அதிகாரத்தின் கண்கள் காத்திருப்பது நம் சாதனைகளுக்காக அல்ல... அவை காத்திருப்பது நம்முடைய தவறுகளுக் காக... அது தெரிந்தே இருந்தும் ஏன்  நாம் மௌனித்து இருக்கிறோம்?

எங்கெல்லாம் கண்காணிப்புகள் எல்லை மீறுகின்றனவோ, அங்கெல்லாம் படைப்பற்றால் சிதைக்கப்படும். மாற்றுச்சிந்தனைகள் தவிர்க்கப்படும். அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் குறைந்துபோவார்கள். போராட்டகுணம் அழியும். எப்போதும் தலைக்குமேல் நம்மை வேவு பார்க்கும் அந்த அதிகார அசரீரிக்காகவே வாழத்தொடங்குவோம். அத்தகைய சூழலையே நம்மை ஆள்பவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான், இங்கே பிறக்கிற ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும்கூட அடையாள அட்டைகள் திணிக்கப்படுகின்றன.

- கேள்வி கேட்கலாம்...