Published:Updated:

சொல் அல்ல செயல் - 21

சொல் அல்ல செயல் - 21
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 21

அதிஷா - ஓவியங்கள்: ராஜ்குமார் ஸதபதி, பிரேம் டாவின்ஸி

திகாலை ஐந்து மணிக்கே டீக்கடைக்கு வந்துவிடுவார் தண்டபாணி. அச்சடித்ததுபோல நெற்றியில் செவ்வக வடிவில் திருநீர் வைத்திருப்பார். அருகில் நெருங்கினால், ஜவ்வாது வாசனை மணமணக்கும். அவர் கடக்கும்போது கண்ணை மூடிக்கொண்டால், அருகில் ஒரு பஞ்சாமிர்த பாட்டில் நகர்வதைப்போல இருக்கும்.அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர் என்பதைப் பார்த்தாலே புரிந்துவிடும். யாரிடமும் பேச மாட்டார். அமைதியாக ஒருமணி நேரம் டீக்கடையில் நின்றுகொண்டு எதிரில் உயர்ந்து நிற்கும் கட்டடத்தைத் தியானிப்பவர்போல பார்த்துக்கொண்டிருப்பார்.

அன்றைய தினமும் அவர் வந்திருந்தார். புகை பிடித்தபடி நின்றவர், அதைக் கீழே போட்டு அணைக்க முற்பட்டார். திடீரென்று அப்படியே கீழே சரிந்து விழுந்துவிட்டார். அருகில் யாருமே இல்லை. டீக்கடைக்காரரும் நானும்தான் தூக்கி உட்கார வைத்தோம். தன் கையில் வைத்திருந்த சிறிய லெதர் பேகில் இருந்து சில சாக்லேட்டுகளை எடுத்துச் சாப்பிட்டார். ‘`பரவால்ல... பரவால்ல...’’ என்றார். தானாகவே எழுந்து நிற்க முயன்றார்; முடியவில்லை. கழண்டு விழுந்த செருப்பைக்கூட காலில் நுழைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறினார்.

சொல் அல்ல செயல் - 21

‘`சார் உட்காருங்க... கொஞ்சம் நேரம் பொறுத்துப் போகலாம்’’ என்று தடுத்து நிறுத்தினேன். இப்போது ஓரளவு விடிந்திருந்தது. ஆனால், அவர் `இல்லை நான் போகணும்’ என இரண்டு அடி நடக்க முயல்வதும் பிறகு தடுமாறி விழப் போவதுமாக இருந்தார். எத்தனையோ தடுத்தும் அவர் விடாப்பிடியாக ‘`இல்ல நான் கிளம்பணும்...போகணும்’’ என்று கோபமாக எழுந்து கிளம்ப எத்தனித்தார். என்ன அவசரமோ என்று நினைத்தேன். ``சரி நானே விட்டுடறேன்’’ என்று அழைத்தேன். அருகில் நண்பருடைய வீடு இருப்பதாகச் சொல்லி அங்கே சென்றார். 

நண்பரிடம் விஷயத்தைச் சொல்ல, நண்பரோ கேலியாகச் சிரித்தார். ‘`டேய் நீ திருந்தவே மாட்டியா?’’ என்று திட்டினார். தண்டபாணி முகத்தைக் குழந்தைபோல வைத்துக் கொண்டிருந்தார்.

தண்டபாணி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்குப் பிழைப்புக்காக வந்தவர். வேலைத்தேடி தெருத்தெருவாக அலைந்தபோது, டீக்கடைக்கு எதிரில் இருந்த `அந்த’ பாரம்பர்யமான ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். அது அசைவ உணவுகள் விற்கிற கடை. அங்கே சர்வராக வேலைக்குச் சேர்ந்து, பிறகு சில ஆண்டுகளிலேயே கேஷியராகப் பதவி உயர்வு பெற்று, 30 ஆண்டுகள் கல்லாவிலேயே அமர்ந்திருந்தார்.

``முப்பது வருஷமா நான்தான் தினமும் காலைல கடையைத் திறப்பேன். நாலு மணிக்கே எழுந்து நல்லா குளிச்சித் துன்னூர் பூசிக்கிட்டு வந்துடுவேன். முதலாளிக்கு அப்படி இருந்தாதான் புடிக்கும். எதுக்குமே லீவ் போட மாட்டேன். லீவ் போட்டாலும்கூட மனசு கடையிலேயேதான் இருக்கும். கடையைப் பத்தியேதான் யோசிச்சிக்கிட்டிருக்கும். கடைக்கு முன்னால அண்டாவை வெச்சுப் பூஜைபோட்டுத் திறந்து, வரவு செலவுக் கணக்குல இருந்து சம்பளக் கணக்கு, கலெக்‌ஷன் அது இதுனு ஏகப்பட்ட வேலை இருக்கும். ராத்திரி பகலா அங்கேயேதான் கெடப்பேன். பொண்டாட்டி புள்ளைகளோட இருந்ததைவிட கடையில இருந்ததுதான் அதிகம்’’ என்றார். அவரைத்தான் சமீபத்தில் இனி வேலைக்கு வர வேண்டாம் என செட்டில்மென்ட் கொடுத்து அனுப்பி இருந்தார்கள்.

நவீன மாற்றங்களுக்குச் சிக்காமல் தன்னுடைய பாரம்பர்யத்தோடுதான் பல ஆண்டுகளாக இருந்தது அந்தக் கடை. முதலாளிக்குப் பிறகு அவருடைய மகள் பொறுப்பேற்றுக்கொண்டபோது எல்லாமே தலைகீழானது. கடையில் நடந்த மாற்றங்களில் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். துரத்திவிட்டாலும் கடை மேலிருந்த பாசத்தினால் அவர் தினமும் காலையில் எழுந்து கடைக்கு முன்னால்வந்து நின்றுவிட்டு வெளிச்சம் வந்து யாரும் கவனிக்கும் முன் வீட்டுக்குச்செல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார்.

சொல் அல்ல செயல் - 21


‘`முப்பது வருஷம் வேலை பார்த்திருக்கேன்பா, எவ்வளவு விசுவாசமா இருந்திருக்கேன் தெரியுமா... அப்போ முப்பது வருஷ விசுவாசத்துக்கு என்னப்பா பதில்?’’ என்று உணர்ச்சிவசப்பட்டு அழாத குறையாகச் சொன்னார் தண்டபாணி. அவருடைய நண்பர் அதையெல்லாம் புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தார். ‘`இவன் ஒரு லூசுங்க... கடை கை மாறினதும், போதும்னு கிளம்பியிருக்கலாம்ல... கூடவே இருந்துட்டு அந்தப் பொண்ணுகிட்ட அதைச் செய்யாத இதைச் செய்யாதேன்னு சொல்லிட்டு இருந்திருக்கான். அது கோபப்பட்டு நீங்க கிளம்புங்கன்னு சொல்லிடுச்சு’’ என்றார் நண்பர்.

‘`கடையில எலும்புரசம்தான் அடையாளம். அது ஏழைகளுக்காகவே முதலாளி செஞ்சுக்கிட்டிருந்த விஷயம். முதலாளிப் பொண்ணு அதை வேண்டாம்னு சொல்லிடுச்சு... கிரில் பார்பிக்யூனு என்னென்னவோ வெளிநாட்டு விஷயமா வெச்சுது... வடநாட்டுப் பசங்களையா வேலைக்குக் கூட்டிட்டு வந்தது. அவனுங்களுக்கு பாஷையும் தெரியல ஒண்ணும் தெரியல... கஸ்டமர்கிட்ட என்ன சொல்லி எப்படி விப்பானுங்கன்னு கேட்டேன். கடை முழுக்க ஏ.சி போட்டுக் கண்ணாடி வெச்சு ஏழைபாழைங்க நுழையவே முடியாத எடமா மாத்திடுச்சு. எதுவுமே மனசுக்கு ஒப்பலை.டோர் டெலிவரிலாம் இங்க பழக்கமே இல்ல. அதைக் கொண்டுவந்தாங்க. எனக்கு சுத்தமா பிடிக்கலை’’ என்று தன் கண்ணெதிரே நிகழ்ந்த மாற்றங்களை அடுக்க ஆரம்பித்தார்.

‘`என்ன இருந்தாலும் முப்பது வருஷம் ரத்தம் சிந்தி உழைச்சி உருவாக்கின கடையை அப்படிச் சுளுவுல விட்டுக்கொடுத்துட முடியுமா...’’ என்றார் தண்டபாணி. அவர் பதற்றமாகப் பேசினார். ஆனால், இப்போது எல்லாம் முடிந்து விட்டது. கடைக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.அவர் வெளியேற்றப்பட்டு விட்டார்.

‘`முதலாளி மகள்கிட்ட போய் சொன்னேன். ஏம்மா நான் இங்கே முப்பது வருஷமா வீடு வாசலுக்குப் போகாம நாயா உழைச்சிருக்கேன். என்னைப் பத்தி நான் யோசிச்சதே இல்ல... நான் கூட்டிட்டு வந்து சர்வரா சேர்த்த பசங்கள்லாம் தனியா கடைபோட்டுப் பெரியாளா ஆகும்போதுகூட நான் கடைக்கு விசுவாசமா இங்கேயேதான் இருந்தேன். எனக்கு எப்பவுமே தனியாக் கடை போடணும்னு தோணவே இல்லை. இங்கே எத்தனையோ பிரச்னை வந்திருக்கு. முதலாளி கடையை மூடலாம்னு நினைச்சப்பகூட நான் போகலை. புதுசா எதையுமே கத்துக்கல. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்தக் கடையும் இந்தக் கணக்கு வழக்குகளும்தான்னு சொன்னேன். அந்தப் பொண்ணு கேட்குது `அதுக்கு நாங்க என்ன சார் பண்றது... நீங்கதானே கத்துக்கிட்டிருக்கணும். ஒரு கேஷியருக்கு கம்ப்யூட்டர் தெரியாட்டி எப்படி? நாங்களா உங்களை இப்படி இருக்கச் சொன்னோம். உங்களுக்கு வசதியா இருந்ததுன்னு நீங்க இருந்தீங்க. அப்பா உங்களை நல்லா வெச்சிருந்தார். நல்லா சம்பளம் குடுத்தார். அதனால இருந்தீங்க’னு சொல்லுது. எனக்கு எப்படி இருந்திருக்கும். அன்னைக்கு முடிவு பண்ணினேன். இனிமே இந்தக் கடையில கால் வைக்கக் கூடாதுன்னு. அப்படியே வெளியே வந்துட்டேன்’’ என்றவர் கண்கலங்கினார். 

‘`ஆனாலும் மனசு கேட்கலப்பா... காலையில நாலு மணியானா, அலாரம் வெச்சாப்புல முழிப்பு வந்துடும். குளிச்சிட்டு நேரா வந்துடுவேன். கடை திறக்கிறவரை அதைப் பார்த்துக்கிட்டே நிப்பேன். ஒரு வயசுக்கு மேல நமக்கு நினைவுகள்தான் மகிழ்ச்சி தருது...  எங்கேயும் வேலைக்குப் போகப் பிடிக்கல. என் பையன் தனியா ஹோட்டல் வெச்சுத் தரேன்னு சொன்னான். என்னமோ மனசுக்கு கேட்கல... இருக்கிறவரை இப்படியே இருந்துப்பேன்’’ என்றார். தண்டபாணி சாருக்காக வருந்துவதா அல்லது கோபப்படுவதா என்பது புரியாமல் இருந்தேன். தண்டபாணியின் நண்பர் சிக்கல்களை அவிழ்த்தார்.

``முதலாளிங்க எல்லாருமே கடையை எப்படி டெவலப் பண்றது... கடையில புதுசா என்ன விஷயங்கள் சேர்க்கலாம், எப்படி வாடிக்கை யாளர்களைக் கொண்டு வரலாம்னு யோசிச்சிக் கிட்டே இருப்பாங்க. நான் முதலாளியா இருந்தாலும் அதைத்தானே பண்ணுவேன். அப்பதானய்யா லாபம் கிடைக்கும். ஆனா, என்னை மாதிரி உன்னை மாதிரி வேலை செய்றவங்களுக்குத் தன்னைப் பற்றி அப்படி எல்லாம் நினைப்பே இருக்காது. ஆனா, அதுதானப்பா ரொம்ப முக்கியம். முதலாளிக்கு எப்படி கடை முதலீடோ, நமக்கு நாமதானே முதலீடு. நமக்கு வருமானம் ஈட்டித்தர்ற நம்மளையும் அடிக்கடி அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்ல... நம்மையும் புதுசு புதுசா விஷயங்கள் சேர்த்து டெவலப் பண்ணிக்கணும்ல... அப்பதானே நம்ம மதிப்பு ஏறும். ஆனா, நாம அதைப் பண்ண மாட்டோம். கேட்டா விசுவாசம் அர்ப்பணிப்பு அது இதுனு கப்சா விடுறது’’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் நண்பர். அவரே தொடர்ந்தார்.

``முதலாளிகள் எல்லோரும் மோசமானவர்கள். அவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டு தொழிலாளி வர்க்கம் ஓங்குகன்னு கம்யூனிசம் பேசத்தேவையில்லை. முதலாளிகளுடைய நோக்கம் லாபம்தான். அதற்காக அவர்கள் தங்களை முன்னேற்றிக்கொள்கிறார்கள். அந்தப் பயணத்தில் அதற்கேற்ற திறமைகள் இல்லாத ஒருவர் பாரமாக இருந்தால், இறக்கிவைத்துவிட்டு நகரத்தான் நாமே முடிவெடுப்பார்கள்!’’ என்றார்.

தண்டபாணியின் சோகக்கதை அவருக்கு காமெடியாகத் தெரிந்தது, இந்த ப்ராக்டிக்கலான பார்வையால்தானோ என்று நினைத்தேன்.

சொல் அல்ல செயல் - 21

இன்றைய ஐ.டி நிறுவனப் பணியாளர்கள் எல்லோருமே இதை அன்றாடம் எதிர்கொள் கிறார்கள். ஐ.டி மட்டும் அல்ல; எந்தத் துறையாக இருந்தாலும் பணியாளர்கள் தொடர்ச்சியாக அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமாக மாறிவிட்டது. காலமாற்றத்திற்கு ஏற்ப நம்மை நாமே அப்டேட் செய்துகொள்ள மறுத்தால் அல்லது மறந்தால், நாம் பின்தங்கிவிடுவோம் அல்லது விரட்டி அடிக்கப்படுவோம் என்பதே யதார்த்தம். விசுவாசம் என்பதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. பத்தாண்டுகள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பது முட்டாள்தனமாக பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் கண்மூடித்தனமாக நிறுவனங்களுக்கு விசுவாசமாக இருக்கிற நாம்... நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் விசுவாசமாக இருக்கிறோமா?

சரண்யாவுக்கும் ஜான்சனுக்கும் எப்போதிருந்து பிரச்னை தொடங்கியது என்பது தெரிய வேயில்லை. அது ஒரு தவறான எமோஜியால் நடந்தது என்று எல்லோரும் பேசிக் கொண்டனர். அது எமோஜி அல்ல; ஃபேஸ்புக் லைக் என்று சிலர் சொல்லிக்கொண்டனர். நம் எமோஷன் களைக் குட்டிக்குட்டி எமோஜிகள் தீர்மானிக்கும் காலத்தில் இதெல்லாம் சகஜம்தானே. ஆனால், இதெல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்திருந்தோம். அப்படி எல்லாம் அது தீர்ந்துவிடவில்லை. ஜான்சனுக்கு சரண்யாவின் அளவுக்கதிகமான அன்புகூட எரிச்சலை உண்டு பண்ணியிருக்கலாம். ஜான்சன், எப்போதும் தன்னை முதுகில் சுமந்தபடியே திரிய வேண்டும் என்று சரண்யா எதிர்பார்த்ததுகூடப் பிரிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். நண்பர்கள் வெவ்வேறுவிதமாகப் பேசிக்கொண்டோம்.

இருவருமே எங்கள் நட்புவட்டத்தில் இருந்தவர்கள்தான். காதல் தோல்வி ஜான்சனை எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அவன் உற்சாகமாகவே இருந்தான். சரண்யாதான் ரொம்பவும் நொந்துபோய் இருந்தாள். தற்கொலைக்கு மிக அருகில் இருந்தாள்.

சரண்யா தைரியமான பெண். நிறையவே கவிதைகள் எழுதக்கூடியவள். யாரிடமும் எளிதில் நட்பாகிவிடுவாள். எத்தனை பெரிய பிரச்னைகளையும் தனியாகவே எதிர்கொள்வாள். சரண்யா காதலிக்கத் தொடங்கிய நாள்கள் நன்றாக நினைவிலிருக்கிறது. ஜான்சன்தான் இனி எல்லாம் என முடிவெடுத்த நாளில் அவள் எங்களிடமிருந்து பிரியத்தொடங்கினாள். கவிதைகள் எழுதுவதை நிறுத்தினாள். பயணமும் காபிக் கடைகளுமாக கழிந்த ஜான்சனின் உலகத்திற்குள் அவள் நுழைந்தாள். அவனுக்காகப் பயணங்கள் செல்ல ஆரம்பித்தாள். அவனுக்குப் பிடிக்கும் விஷயங்களைத் தனக்குப் பிடித்தவையாக மாற்றிக்கொண்டாள்.

ஜான்சனுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ, அவர்களெல்லாம் சரண்யாவுக்கும் ஜென்மப் பகையாளிகளாக மாறினர். ஜான்சனுக்கு சரண்யாவின் ஆண் நண்பர்களைப் பிடிக்காது. அதனால், சரண்யாவுக்கு நாங்களும் பிடிக்காமல் போனோம். அவளுடைய இந்த நடத்தை ஆரம்பத்தில் எரிச்சலைக் கொடுத்தாலும் போகப்போக எல்லாமே காதலுக்காக எனப் புரிந்துகொண்டு நாங்கள் விலகிக்கொண்டோம்.

அப்படிப்பட்ட இருவரும் பிரிந்தபோது, சும்மா இருக்க முடியுமா? இத்தனை நெருக்கமான காதலர்களோ நண்பர்களோ நம் கண்ணெதிரே பிரிந்து செல்வதை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. எப்பாடுபட்டாவது பழையபடி ஓர் உதயத்தைப் பார்த்துவிட முயன்று விடுகிறோம்.

ஜான்சன் உறுதியாக இருந்தான். ``இது வேண்டாம்’’ என்றான். சரண்யா அவனை நினைத்து நினைத்து அழுதுகொண்டிருந்தாள். நாள்கள் செல்லச் செல்லப் பிரிவு மேலும் உறுதியானது. ஜான்சன் முற்றிலுமாக விலகி விட்டிருந்தான். அதைச் சரண்யாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஓடிக்கொண்டிருக்கும் டேபிள் ஃபேனில் விரல்களை நுழைத்து, சுண்டு விரல் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். காதலுக்கு முந்தைய சரண்யாவின் தைரியத்தையும் அவளுடைய பேச்சையும் கேட்டவர்கள் அவள் இப்படியெல்லாம் கிறுக்குத்தனமாகச் செய்வாள் என்று நினைத்தும்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சரண்யாவின் தோழிகள்கூடி அவளிடம் பேசினர். அவள் ஜான்சன் மீது கடுமையான கோபத்தில் இருந்தாள். ``அஞ்சு வருஷமா எனக்கு ஜான்சனைத் தவிர வேற உலகமே கிடையாது. அவனாலதான் என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்ட இருந்தும் விலகினேன். கவிதைகள் எழுதுறதை விட்டேன். அவனுக்காக எத்தனையோ விஷயங்களை இழந்திருக்கேன். அவன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும், அவன் இஷ்டப்பட்ட மாதிரி எல்லாம் இருக்கணும்னுதான் எப்பவும் நினைச்சிக்கிட்டே இருந்துருக்கேன். அவன் விலகிட்டான். இப்போ என்கிட்ட எதுவுமே இல்ல. தனியா இருக்கேன். எதுவுமே செய்ய முடியலை. இரண்டு காலையும் கையையும் வெட்டிப் போட்டுட்ட மாதிரி விழுந்து கிடக்கறேன்’’ என்றாள்.

‘`அஞ்சு வருஷமா நான் எதையுமே கத்துக்கல, எனக்குனு யாருமே இல்ல, என்னைச் சுற்றி எல்லாமே வேகவேகமா மாறினப்போ, நான் அதையெல்லாம் கவனிக்காம அவனை மட்டுமே கவனிச்சிக்கிட்டு இருந்துட்டேன். நேத்து அவனுக்கு போன் பண்ணி இதையெல்லாம் சொல்லி அழுதேன். ப்ளீஸ் எனக்கு உன்னைத்தவிர எதுவுமே தெரியாதுன்னு அழுதேன். நான் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு அவன் என்ன சொன்னான் தெரியுமா?’’ பேச முடியாமல் திணறினாள் சரண்யா. தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு பேசினாள்.

ஜான்சன் சொன்னது இதைத்தான். `` உன்னை யாரு அப்படி இருக்கச் சொன்னது... நானா அப்படி இருக்கச் சொன்னேன். நீயா அப்படி இருந்துட்டு இப்போவந்து உனக்காக உனக்காகன்னா... தப்பு உன்மேலதான். நான் அப்படியா இருந்தேன். நான் என் ஃப்ரெண்ட் ஸோடதானே இருந்தேன். நான் என்னோட கரியரைக் கவனிச்சிட்டுதானே இருந்தேன். நான் என்னோட வாழ்க்கையை வாழ்ந்துட்டுதானே இருந்தேன். உன்னை யார் என் வாழ்க்கையை வாழச் சொன்னது? நான் சொன்னேனா?’’ இதைச் சொல்லும்போதே சரண்யா தன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குள் தாங்க முடியாத வேதனை உள்ளுக்குள் உருவாகத் தொடங்கியிருந்தது. கருணைக்காக மண்டியிட்டு நிற்கிறவனின் மார்பில் எட்டி உதைத்தால் உண்டாகும் வேதனை அது.

``அவன் சொல்லச் சொல்ல அப்படியே கழுத்தை அறுத்துகிட்டுச் செத்துடலாம்னு  அவ்வளவு ஆத்திரமா இருந்தது. பைத்தியம் பிடிக்கிற மாதிரி மண்டைக்குள்ள ஒரு வலி. பக்கத்துல ஃபேன்தான் இருந்தது. அப்படியே விரலை உள்ள விட்டுட்டேன்’’ என்றாள். சரண்யாவின் முகம் அச்சத்தைக் கொடுத்தது. அவளுடைய காதல் பழிவாங்கும் உணர்வாக எந்த நேரத்திலும் மாறிவிடுகிற எல்லைகளில் இருந்தது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் ஆணோ பெண்ணோ சரியாகக் கண்காணிக்கப் பட்டு உரிய ஆறுதலும் வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை என்றால், அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.

சரண்யாவின் இடத்தில் ஜான்சன் இருந்திருந்தால், ‘`நானா அப்படி இருக்கச் சொன்னேன்’’ என்கிற பதிலுக்கு, வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்கும். மோசமாக நடந்துகொண்டிருப்பான். பெரும்பாலான ஆண்கள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். பெண்கள் அப்படி இருப்பதில்லை.அவர்கள் தங்களையே தண்டித்துக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்.

சொல் அல்ல செயல் - 21

இந்த ‘`நானா  உன்னை  அப்படி  இருக்கச் சொன்னேன்’’களை நாமும்கூட பல முறை கேட்டிருப்போம். அப்பாவிடமிருந்து மகன்கள், கணவனிடமிருந்து மனைவிகள்,உயர் அதிகாரிகளிடம் இருந்து தொழிலாளிகள் என இதை வாழ்வில் ஒருமுறையாவது கடக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நாம் உயிருக்கு உயிராக விசுவாசித்தவர்கள் ஒருநாள் நம்மை இப்படிக் கைவிடும்போது உண்டாகும் வேதனை மிகப்பெரியது. ஆனால் நிஜமாகவே தண்டபாணியின் முதலாளியைப்போல, ஜான்சனைப்போல `பைத்தியமாக இரு’ என யாருமே நம்மிடம் சொல்வதில்லை என்பதுதான் யதார்த்தம் இல்லையா? இருந்தாலும் ஏன் அப்படி இருக்கிறோம்?

நேசமோ, காதலோ, அன்போ எல்லாமே ஒப்புக்கொடுத்தல்தான். ஆனால், இந்த விசுவாசம் தன்னையே மறக்கடிக்கிற அளவுக்கு வளர்வதுதான் பிரச்னை. தன்னிலை மறந்த பக்தியோ, பற்றோ, விசுவாசமோ, அபிமானமோ  எல்லோருக்குமே ஆபத்துதான்! அது நடிகர்கள் மீதானதாக இருந்தாலும் சரி... அல்லது ஆளும் தலைவர்கள் மீதாக இருந்தாலும் சரி!

முழுமையாக நம்மை ஒரு விஷயத்திடம் அல்லது ஒரு மனிதரிடம் அல்லது ஓர் அமைப்பிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு ‘தன்னை மறந்து’ அடிமையாக இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்கிறவர்களாக நாம் இருக்கிறோமா?

விசுவாசமாக இருப்பதற்கும் அடிமையாக இருப்பதற்கும் நடுவில் ஒரு கோடு இருக்கிறது. பல நேரங்களில் நாம் விசுவாசமாக இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு அடிமையாகவே ஆண்டுக்கணக்கில் இருந்திருப்போம். அடிமையாக இருப்பது என்பது ஒரு மனிதனிடமோ, அரசிடமோ, அதிகாரத்திடமோ நம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு நம்மை அந்த அமைப்போ, மனிதரோ, அரசோ எப்படியும் எதிர்காலத்தில் காப்பாற்றிவிடும் எனக் காத்திருப்பது.  ஆனால் விசுவாசமாக இருப்பது என்பது அவர்கள் கொடுக்கிற சம்பளத்துக்கோ, அன்புக்கோ, காதலுக்கோ நேர்மையாக இருப்பதே தவிர, எந்நேரமும் அவர்களுடைய காலைக்கட்டிக்கொண்டு வாலாட்டிக் கொண்டிருப்பது அல்ல!

அடிமைகள் ஒருபோதும் தங்களைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. அவர்களுக்கு எப்போதும் எஜமானர்களின் சாட்டைகளைப்  பற்றித்தான் கவலை! இந்தச் சாட்டைகளுக்கு அன்பு, சகோதரத்துவம், தாய்மை, காதல் எனப் பல பெயர்கள் உண்டு.

பள்ளிகளில் பாடம் கற்றுக்கொடுத்து விடுவார்கள். அதுவே போதும் அதற்கு வெளியே எதையுமே குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்கிற மனநிலை எல்லாம் உருவாவது இந்த ஒப்புக்கொடுத்தலில் இருந்துதான் இல்லையா? அதே குணம்தான் அரசின்மீதும் விழுகிறது. ஒட்டுப்போட்டு ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிடுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதாக நினைத்துக் கொள்கிறோம்.  ஊழலை அரசு ஒழித்துக்கொள்ளும், தண்ணீர் பிரச்னையை அரசு கவனித்துக் கொள்ளும், சுற்றுச்சூழல் பிரச்னையை அரசு பார்த்துக்கொள்ளும், கண்ணெதிரே ஓர் ஏரி ஆக்ரமிக்கப்பட்டு சூறையாடப்பட்டாலும் அதை அதிகாரம் நடவடிக்கை எடுக்கும் என எல்லாவற்றையும் அரசின் கையில் கொடுத்துவிட்டு... எதுவுமே நடக்காதபோது புலம்புபவர்களாக நம்மை மாற்றுவது இந்த விசுவாசி மனநிலைதான்.

அதனால்தான், இந்த விஷயங்களில் எல்லாம் எனக்குப் பங்கில்லை, அந்த விஷயங்களின் வளர்ச்சியிலோ வீழ்ச்சியிலோ எனக்குத் தொடர்பில்லை என அரசியலில் இருந்தே விலகி நிற்கிறோமா? அப்படித்தான் நிற்கிறோம் என்றால், நாம் விசுவாசமாக இருப்பது யாருக்கு?

- கேள்வி கேட்கலாம்...