Published:Updated:

உயிர்மெய் - 21

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

`எதுக்கு இவ்வளவு மெனக்கெடணும், எதுக்கு இவ்வளவு சமூக அங்கீகாரமும், சமூக அவமானமும் குழந்தைப்பேற்றை முன்வைத்து நடத்தப்படுது, காய்ச்சல், தலைவலி மாதிரி கஷாயமோ, மாத்திரையோ சாப்பிட்டு இதைக் கடந்துபோக முடியாதா என்ன?’ போன்ற கேள்விகளுடன் கருத்தரிப்புக்காகக் காத்திருப்போர் சிலர் யோசிப்பது  உண்டு. குறிப்பாகக்  குழந்தைப்பேற்றுக்கான காத்திருப்பின் உச்சத்தில், பல ஆண்களுக்கு வரும் கேள்விகள் இவை. `இப்பல்லாம் சரியாகக்கூட மாதவிடாய் படுறதுல்ல’ எனச் சொல்லிக்கொண்டு, காதோரத்து முடியும் நரைத்ததில், காதலின் ஓரத்துக் காமமும் சற்றுக் குறைந்ததில் சில பெண்களும் `போதும் இந்த மாத்திரை ஊசி அழிச்சாட்டியங்கள்’ என விலகி, அதன் வெறுமையைப் பழக ஆரம்பிப்பார்கள்.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சற்று சங்கடத்துடன் ஆனால், `பேசிப் பார்த்தால் என்ன?’ என்கிற யோசனையுடன் அவர்களிடம் மெதுவாகக் கேட்கப்படும் கேள்வி, `நீங்கள் ஏன் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கக் கூடாது?’ என்பதுதான். 

`அந்த டாக்டரை ஏன் நீங்கள் போய்ப் பார்க்கக் கூடாது?’ என்ற கேள்வியில் தொடரும் ஆர்வமும் அக்கறையும், இன்னும் தத்து எடுத்தல் விஷயத்தில் அவ்வளவு பெரிதாக  வரவில்லை. `குழந்தைக்காக அவ்வளவு மெனக்கெடும் அந்தத் தம்பதிக்கு, ஏன் இந்த விஷயத்தில் அப்படி ஒரு தயக்கம்’ என்பது இன்னமுமே புரியாத புதிர். இரண்டாவது, மூன்றாவது ஐ.வி.எஃப். முயற்சி பொய்க்கும்போது மட்டுமே தத்தெடுத்தல் குறித்த சிந்தனை பெரும்பாலான தம்பதிகளுக்கு வலுக்கிறது. `அமுக்கரா சாப்பிடலாமா... ஐ.யூ.ஐ. பண்ணலாமா?’ என வலியுடனும் கண்ணீருடனும் குழம்பி நிற்கும் பலருக்கும் உயிரணுவே இல்லாதபோதும், கருக்குழாய் முற்றிலுமாக அடைபட்ட போதும், கருமுட்டைகள் இல்லை என்கிறபோதும் குளிர்சாதன அறையில் உறைந்து காத்திருக்கும் உயிர் முட்டைகளை அல்லது உயிர் அணுக்களைத் தத்தெடுக்கத் தயாராகும் மனம், தாய்ப்பால் இல்லாமல், தாதி வளர்க்கும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சிசுக்களின் மீது சிந்தனை போவதில்லை.

உயிர்மெய் - 21

இந்தியாவில் மட்டும்தான் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற சந்தர்ப்பத்தில்  தத்தெடுத்தல் என்பது தொடங்குகிறது. பிற நாடுகளில் அப்படி இல்லை. கிட்டத்தட்ட இந்தியக் குழந்தைகளில் நான்கு சதவிகிதம் பேர் பெற்றோரின்றி அனாதைகளாக உள்ள இந்த நாட்டில் உண்மையில், அவர்களில்  0.3 சதவிகிதம் பேர் மட்டுமே  பெற்றோர்களைப் பறிகொடுத்த வர்கள். மீதி 99.7 சதவிகிதம் குழந்தைகள் தவறவிடப்பட்டவர்களாகவோ, புறக்கணிக்கப் பட்டவர்களாகவோதான் இன்றும் இருக்கிறார்கள் என்பது மிக மிக வலி தரும் செய்தி.

தத்தெடுக்கலாம் என்ற முடிவோடு அதற்கான அமைப்புகளைத் தொடர்புகொள்ளும்போது அதிலுள்ள சட்டச் சிக்கல்கள், காத்திருப்புகள் முன்பைவிட இப்போது சற்றுக் குறைந்திருப்பதற்கு அரசின்  `Central Adaption Resource Authority (CARA)’, எனும் இணையதளம் ஒரு காரணம். இப்போது, இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும், எந்த மூலையில் இருக்கும் குழந்தையையும் எளிதாக ஆன்லைன் மூலம் தத்து எடுத்துக்கொள்ள இயலும். இந்தப் புதிய வசதியை நிறைய பேர் வரவேற்றாலும், சிலர் `இதென்ன அமேசானில் நடக்கும் அம்மா வியாபாரமா?’ எனக் கொதித்து சண்டை கட்டவும் செய்கின்றனர். ஆனால், உண்மையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தன் அன்னைக்காக இந்த இணையதளத்தில் காத்திருக்கின்றனர். 7,500 தகுதி வாய்ந்த பெற்றோரும் காத்திருப்பதாக அந்த இணையதளம் சொல்கிறது. இறுக்கமான சட்டங்கள் இருப்பதாலோ அல்லது இன்னும் இறுக்கமான மனங்கள் இருப்பதாலோ, செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவ வணிகம் கொடிகட்டிப் பறப்பதாலோ 2000-ம் ஆண்டில் இருந்து தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. 2011-12-க்கு இடைப்பட்ட காலத்தில் 4,294 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கும்போது, கடந்த 2016-2017-க்கு இடைப்பட்ட காலத்தில் 3,600 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

பல ஆயிரம் கோடி சொத்துகளுக்காகவும், `எனக்கப்புறம் இவன்தான் நாட்டை ஆளும் வாரிசு’ என முரசு கொட்டவும் தத்தெடுப்பது, அப்புறம் அவனை/அவளைத் தூக்கி ஜெயிலில் வைப்பது எனும் ஆதிக்க வரலாறுகள் அன்றைய ரோமப் பேரரசு முதல் இன்றைய போயஸ் பேரரசு வரை நடப்பவைதான். ஆனால்,  அன்புக்காக, அன்னைக் காக ஏங்கும் குழந்தையையும் தாய்மைக்காக ஏங்கும் பெற்றோரையும் இணைக்கும் இந்தத் தத்தெடுப்பின் பாதை கொஞ்சம் கடினமானது. குழந்தைப்பேறில்லா தம்பதி என்றல்ல... தனி ஆண் மகன் அல்லது தனிப்பெண்ணும்கூட தத்தெடுக்கலாம்.  தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் குறைந்தபட்சம் 25 வருட இடைவெளி இருக்க வேண்டும். (முன்னர் அது 30 ஆக இருந்தது).

உயிர்மெய் - 21

`எனக்குக் குழந்தை இல்லை. ஒரு நல்ல குழந்தை கிடைச்சா சொல்லி அனுப்புங்க’ என தர்மாஸ்பத்திரியில், பதிவற்ற அனாதை இல்லங்களில் சொல்லிவைப்பது பெரும் தண்டனைக்குரிய குற்றம். ஆஸ்பத்திரியில் காணாமல்போகும் குழந்தைகளில் பெரும் பகுதி, இப்படியான விற்பனைக்கும், குழந்தைப் பிச்சைக்காரர்களை உருவாக்கவும்தான் என்று ஆய்வுகள் சொல்கின்றன. தத்தெடுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், இப்போது www.cara.nic.in எனும் இணையதளத்தின் மூலம் பதிவுசெய்து குழந்தையைத் தத்தெடுக்க முடியும்.  நீங்கள் தகுதியான பெற்றோரா எனச் சோதிக்க 6,000 ரூபாயும், குழந்தையின் பெயரில் ஒரு வைப்புத் தொகைக்காக 40,000 ரூபாய் மட்டும்தான் செலவு. உங்கள் வருமானச் சான்றிதழ், ஆதார் கார்டு, பேன் கார்டு முதலான  சின்னச் சின்னச் சான்றுகள் போதும். `எனக்கு நீலக் கருவிழியோட சிவப்புத் தோலுள்ள பெண் குழந்தை வேணும்’, `கிறிஸ்துவப் பையன் வேணும்’  என்றெல்லாம் ஆர்டர் செய்ய முடியாது. குழந்தையின் சாதி, மதப் பிறப்பு எல்லாம் முழுமையாக ரகசியமாகத்தான் எப்போதும் பாதுகாக்கப்படும். ஆனால், எந்த மாநிலக் குழந்தை வேண்டும் என்பதை நம்மால் தேர்வு செய்ய இயலும். மங்கோலிய முக ஜாடையுடன் உள்ள குழந்தைக்கு, `நான் எப்படி இந்த முகச் சாயலில்..?’ என  வளரும் பருவத்தில்  மனச்சங்கடம் வரக் கூடாது என்பதற்காக இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. பெற்றோருக்கு அப்படிப்பட்ட தேர்வுகள் இல்லாத பட்சத்தில் தமிழகப் பெற்றோர், மணிப்பூர் குழந்தையைத் தேர்வுசெய்ய இங்கே வசதி உண்டு. வெளிநாட்டில் வாழ்வோருக்குச் சட்ட இறுக்கங்கள் இன்னும் அதிகம். எந்தச் சூழலிலும் தத்தெடுக்கப்படும் குழந்தைகள் பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதற்குத்தான் இத்தனை சட்டங்கள். அதனாலேயே, `தனி ஆண் தத்தெடுக்கும்போது, ஒரு பெண் குழந்தையை ஒருபோதும் தத்தெடுக்க இயலாது’ என்கிறது சட்டம். மும்பையில் அப்படிப் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து, பின்னாளில் பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய கேவல வரலாறு நம் நாட்டில் நடந்தேறியிருக்கிறது.  தத்தெடுத்த பின்னரும் இரண்டு ஆண்டுகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள், குழந்தையையும் பெற்றோரையும் சோதிப்பதும் கண்காணிப்பதும் இதுபோன்ற பிரச்னைகளைத் தடுப்பதற்காகத்தான்.

`எங்க அக்கா பையனைத் தத்தெடுத்துக்கலாமா, ஒண்ணுவிட்ட பெரியப்பா பிள்ளையை?’ எனக் கேட்போருக்கு, அது சாத்தியமே.  ஆனால், அதை முறையாக, அரசு நீதிமன்றப் பதிவு மூலம் செய்ய வேண்டும்’ என்கிறது CARA-வின் அறிக்கை.  அம்மா, அப்பா அத்துடன் ஒருவேளை ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தை இருந்தால், அவர்கள் மூவரின் ஒப்புதல் மட்டும் குழந்தையைத் தத்தெடுக்கப் போதுமானது. ஆனால்,  இந்த விஷயத்தை வீட்டில் நடைமுறைப்படுத்தும்போது,  பெரும்பாலும் மனத்தடையாக இருப்பது முந்தைய தலைமுறைதான். `யார் வீட்டுப் பிள்ளையோ...என்ன சாதியோ?’ என விஷம் கக்கும் பாம்புகளாகப் பல நேரங்களில் வீட்டுப் பெரியோர்களும் ஒரு சில உறவுகளும் இருந்தால், அந்த விஷப் பாம்புகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க வேண்டியது தத்தெடுத்த பெற்றோரின் மிக முக்கிய, முதல் கடமை. எப்போதும் அவர்களுக்கு மகுடி ஊதிக்கொண்டே இருக்க முடியாத பட்சத்தில்  சாதி, இனம் பேசும் அந்தப் பாம்புகளை வண்டலூர் வன விலங்குக் காப்பகம் பக்கம் குடி வைப்பதில் அநேகமாகத் தவறில்லை. பிறந்தவுடன் சாதி, மத அடையாளம் அரசாலேயே அழிக்கப்படும் அந்தக் குழந்தைதான் உண்மையான இந்தியக் குழந்தை. எந்த மத அடையாளமும் இல்லாத கடவுளின் குழந்தை. `பயலாஜிகல் பேபி’ என மருத்துவத் துறை சொல்லும் பெற்றெடுத்த பிள்ளையைக் காட்டிலும், பிறப்பில் பெரும் உசத்தியைப் கொண்ட குழந்தை அவள்(ன்)தாம்.

உயிர்மெய் - 21

`ஏதாச்சும் நோய் இருந்துச்சுன்னா?’ இது பெரும்பாலான தத்தெடுப்போர் முதலில் கேட்கும் ஒரு சுயநலக் கேள்வி. தத்தெடுப்பதற்கு முன்னர் ஹெச்.ஐ.வி முதலான பல சோதனைகளைச் செய்த பின்னரே, அந்த மருத்துவ முடிவுகளைச் சொல்லித்தான், குழந்தையை முன் நிறுத்துகிறார்கள். சில வேளைகளில் நாமும் சோதித்துக்கொள்ளலாம் என்கிற செய்தியும் வருகிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித்யா எனும் வட நாட்டு இளைஞர், டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிப்புற்ற குழந்தையைத் தத்தெடுத்து, பல சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் தன் குழந்தையாகப் பதிவுசெய்தது நினைவிருக்கலாம். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவர் திருமணமே செய்துகொண்டார். தன் திருமணத்துக்கு உறவினரை அழைக்காமல், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறவற்ற அனாதை களை அழைத்து அசத்தியது மறக்க முடியாதது. அதற்குப் பிறகுதான் உலக அழகி சுஷ்மிதா சென் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, உண்மையான அழகியாக ஆச்சர்யப் படுத்தினார்.

தந்தை இறந்த சூழலில், இளம் வயதில் தத்தெடுக்கப்பட்டு, பின்னாளில் உலகை உலுக்கிய ஆளுமைகள் அநேகம் பேர். ரோமப் பேரரசன்  சீஸர் முதல் உலகின் உண்மையான பேரழகன், கறுப்பின மக்களின் காவல் தெய்வம் நெல்சன் மண்டேலா வரை உள்ள இந்தப் பட்டியலில்,  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் உண்டு. 40-45 வயது வரை தாமதித்துவிட்டு, `இனி எப்படி என்னால் மூணு மாதக் குழந்தையை வளர்க்க முடியும்?’ என மனம் முழுக்க ஆசையிருந்தும் தடுமாறும் பல தம்பதிகளை எனக்குத் தெரியும். `எல்லா குழந்தையும் நம் குழந்தைதான். எதற்கு நமக்கு தத்து?’ என 35 வயதில் பேசிவிட்டு, வயோதிகத்தில், `எனக்காக யாரும் இல்லை’ என்ற வெறுமையில் வருந்தும் முதியவரையும் எனக்குத் தெரியும். வலி மிகுந்த மருத்துவம், வணிகம் தலைவிரித்தாடும் செயற்கைக் கருத்தரிப்பு உதவிகள் இத்தனையையும் செய்து, பின்னாளில் இந்த மருத்துவத் தாலேயே ஏற்படும் சில பக்கவிளைவுகள் இவற்றை யெல்லாம்விட, `அம்மா... என்னை உங்ககூட கூட்டிட்டுப் போவீங்களா?’ எனக் கெஞ்சும் கண்களோடு தொட்டிலிலும் பள்ளியிலும் காத்திருக்கும் பிஞ்சுக்கைகளை ஒருமுறை பிடித்துப் பாருங்கள். அது மருத்துவரின் கைகளைவிட அன்பானது. அரவணைப்பது, உசத்தியானது!

- பிறப்போம்...

உயிர்மெய் - 21

சினிமாவில் காட்டுகிற மாதிரி பிறந்த பச்சிளம் குழந்தையை ஒருவராலும் தத்தெடுக்க முடியாது. `Child welfare committee under juvenile justice’ மூலமாக `இந்தக் குழந்தை தத்துக் கொடுக்கச் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றது’ என்கிற சான்று வேண்டும். அதற்கு இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும்.

2.
எப்போது குழந்தையிடம் அவர் தத்துக் குழந்தை (Adopted child) என்பதை அறிவிப்பது?

பெற்றோர்தான் முதலில் அந்தக் குழந்தைக்கு அதை அறிவிக்க வேண்டும். பிறர் சொல்லித் தெரியவருவது, உளவியல் ரீதியான வலியை அந்தக் குழந்தைக்கு ஏற்படுத்திவிடும். எவ்வளவு பக்குவமாக, அன்பாக இந்தச் செய்தியை எந்த வயதில் அறிவிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கான உளவியல் நுணுக்கங்களை, உளவியல் நிபுணர்களை அணுகிக் கேட்டுக் கொள்ளலாம்.

3. பின்னாளில் ஏதோ ஒரு சூழலில் உண்மையான பெற்றோர் வந்தால்..?

இந்தக் கேள்வி தத்தெடுப்போர் மனதுள் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. சட்டப்படி, குழந்தை தத்தெடுக்கப் பட்டுவிட்டால், எந்தச் சூழலிலும் உண்மையான பெற்றோருக்கு அந்த உரிமை கிடையாது.